
கப்பலோட்டிய தமிழன்
ம. பொ. சிவஞானம்
சிதம்பரனாருக்கு நினைவுச் சின்னங்கள்
வ. உ. சிதம்பரனார் தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் அரசியலிலிருந்து விலகி யிருந்த காரணத்தால் மக்கள் அப் பெரியாரை மறந்தனர். அவர் மறைந்த மூன்று ஆண்டுகள் வரை அவரது நினைவு நாளைக் கொண்டாடக் கூட தமிழகத்து அரசியல் வாதிகள் நினைத்தார்களில்லை. ஆனால், இந்த நிலைமை நெடுநாள் நீடித்திருக்கவில்லை. ‘நன்றி மறப்பது நன்றன்று’, ‘எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு’ என்ற வள்ளுவர் கட்டளைப்படி சென்னை மக்கள் சிதம்பரனார் செய்த சேவைக்கு நன்றி செலுத்தும் பொருட்டு சிலை எடுத்துப் போற்றலாயினர்.
1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியார் ராயப்பேட்டை காங்கிரஸ் மண்டபத்தில் சிதம்பரனாருக்கு அழகிய முக உருவச் சிலையொன்று அமைத்து வைத்தனர். திரு. எஸ். சத்தியமூர்த்தி தலைமையின் கீழ் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில்,
“சிதம்பரனார் தூய தமிழர். தமிழருக்குரிய ஆண்மையும், ஆற்றலும் ஒரு வடிவமெடுத்து கண்ணுக்குத் தோன்றுமானால், அது சிதம்பரம் பிள்ளையைப் போலத்தான் தோன்றும். நான் இங்கிலாந்தில் இருந்த போதும், அதற்குப் பின் னர் கொஞ்ச நாள் வரையிலும் அரசியலில் புரட்சிக்காரனாவே இருந்தேன். அதற்குக் காரணம் சிதம்பரம் பிள்ளை நடத்திய தூத்துக்குடிப் புரட்சியேயாகும். எனவே சிதம்பரனார் எனது முதல் அரசியல் குரு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். சிதம்பரனார் நம் கண்ணிலிருந்து மறைந்தாலும் அவரது ஆவி நம்மைச் சுற்றி உலவுகின்றது. நாம் நடத்தும் சுதந்தரப் போரில் சிதம்பரனார் ஆவி வடிவில் வந்து நின்று நமக்குத் துணை புரிகிறார் என்று நான் திடமாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். விழாவிற்கு, சேலம் திரு.சி. விஜயராகவாச்சாரியார் அனுப்பியிருந்த செய்தியில்,
“சிதம்பரம் பிள்ளையை நான் நன்கறிவேன். மாசு மறுவற்ற தேச பக்தர். கள்ளமற்ற நெஞ்சுடையார். அவரது வீரப் புரட்சியை இப்போது நினைத்தாலுங் கூட எனக்கு உணர்ச்சி மேலிடுகிறது. அப்பெரியார் தமிழ் நாட்டார் சிலை எடுத் துப் போற்றுவதற்கு தகுதியுடைய வீரராவார்’ என்று குறிப்பிட்டிருந்தார். சிதம்பரனார் அரசியலிலிருந்த காலத்தில் அவரோடு கைகோர்த்து நின்று கடமையைச் செய்த பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு ஒருமிக்க வந்திருந்தனர்.
நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, சுவாமி சுத்தானந்த பாரதியார் போன்ற புலவர் பெருமக்களும் தங்கள் கவிதைகளைச் சிதம்பரனாரின் விழாவுக்குக் காணிக்கைகளாக அனுப்பியிருந்தனர்.
சுதந்தர இந்தியாவிலும், மக்கள் வீரச் சிதம்பரனாரை மறந்து விடவில்லை. “ஜலப்பிரபா” என்ற கப்பலைக் கடலில் மிதக்க விட்ட போது, இந்தியத் துணைப் பிரதமர் சர்தார் பட்டேல், அடிமை இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பலோட்டிய வ. உ. சியின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார்.
மற்றும், தூத்துக்குடிக்கும் சிங்களத்திற்குமாக போக்குவரத்து செய்ய தாங்கள் வாங்கிய முதற் கப்பலுக்கு “வி.ஓ. சிதம்பரம்” என்று பெயர் வைத்தனர் தென் பாண்டி வணிகர்கள். 9-2-49ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, ‘வீரர் வ.உ.சி. புகழ்வாழ்க!’ என்று ஐம்பதாயிரம் மக்கள் செய்த ஆரவாரத்திற்கிடையே தூத்துக்குடி கடலில் அக்கப்பலை மிதக்க விட்டார். அடிமை இந்தியாவில் கப்பலோட்டியதற்காக சிதம்பரனாருக்கு கடுந்தண்டனை விதித்தனர் ஆட்சியாளர். சுதந்தர இந்தியாவிலோ கவர்னர் ஜெனரல் “வி. ஓ, சிதம்பரம்” என்ற பெயர் தாங்கிய கப்பலை தூத்துக்குடி கடலிலே மிதக்க விட்டு வ.உ.சியின் புகழை வாயாரப் பேசினார். ஆம்; சிதம்பரனார் கண்ட கனவு பலித்தது.
வ.உ.சி. துவக்கி வைத்த சுதந்தரப் போர் வெற்றி பெற்று விட்டது. அவர் வெளியேற்ற விரும்பிய வெள்ளையர் கூட்டம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டது விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழ் மக்க ளாகிய நாம் தலைவர் சிதம்பரனாருக்கு அளிக்கும் காணிக்கை என்ன? செம்பொற் சிலையா? பளிங்கு மண்டபமா? வாணிகக் கப்பலா ? இல்லை; இல்லை அவை என்றேனும் ஒரு நாள் அழியக் கூடியனவே. சிதம்பரனாரின் நினைவாக நாம் உருவாக்கும் சின்னம் அழியாத புதிய தமிழகம். ஆம்; குமரி முதல் வேங்கடம் வரையுள்ள புதிய தமிழகம். தமிழர்களே! அந்தப் புதிய தமிழகத்தை உருவாக்கப் பாடுபடுங்கள் ; சிதம்பரனாரின் ஆண்மைமிக்க வரலாறு நமக்கு வழிகாட்டும்; அவரது ஆவி நமக்கு ஆசி கூறும்.
வாழ்க தமிழினம் !
வாழ்க தமிழகம்!
வாழ்க வ.உ.சி. நாமம்!



