
கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி
கொலைக்களம்!
இலட்சக் கணக்கான வீரர்களைப் பிணங்களாக்கி விட்டு – பச்சிளங் குழந்தைகள், பருவ மங்கையர் உயிர்களைப் பதை பதைக்கக் குடித்துவிட்டு-கோடிக்கணக்கான தாய்மார்கள் கோவெனக் கதற, அந்தக் குமுறல் கண்டு குறுஞ் சிரிப்புச் சிரித்துவிட்டு, விதவைகளை அதிகமாக்கி, அவர்கள் வேதனை கண்டு விலா நோக நகைத்து……முசோலினியின் இரும்பு நெஞ்சத்தைக் கீறி ருசி பார்த்து, ஹிட்லரின் வாழ்வை முடித்து, கோயரிங்குக்கு விஷக்கோப்பை யளித்து, அவன் சதையை விருந்தாக்கிக் கொண்டு, ஹிரோஷிமாவை வெறி நாக்குகளால் சுரண்டிச் சுவைத்து, இரத்தச் சேற்றிலே……. எலும்புகளைச் சொருகி விளையாடிய யுத்தப…… அமைதி யென்னும் திரை மறைவில் அதிக நாள் இருக்க முடியாமல், ‘இதோ, வந்தேன் வந்தேன்’ எனக் கோர கீதம் இசைக்கிறது.
மீண்டும் போரா? என உலகம் திடுக்கிடுகிறது. இந்தப் போரில் ஏற்பட்ட காயம் காய்வதற்குள்ளாகவா மீண்டும் ஒரு போர்? மண்டைப்புண் ஆறுவதற்கு முன் மற்றொரு போரா? சீரழிந்த வாழ்வு செப்பனிடப் படுவதற்குமுன் போர் முரசா?
‘ஆமாம், போர்தான்,என்கிறார் ட்ரூமன்! அவரது பேச்சிலே அலட்சியம் சிந்துகிறது. மக்களின் வாழ்வு மாய்க்கப் படுவதைக் கண்டு மனக்கவலைப் படாத முதலாளித்துவ மரபு அவர் ! ‘உம்’ என்றால் உலகத்தையே உலுக்கி விடத்தக்க, அணுகுண்டு தம்மிட மிருக்கிற தென்ற தருக்கு மிக்கோர் நாட்டுத் தலைவர்!
அணுகுண்டுக்குப் பதில் குண்டு எம்மிடமும் உண்டு என முரசொலிக்கிறது, ரஷ்யா!
ஆயுதச் சாலைகளை நிரப்பும் விஷயத்தில் அக்கரை செலுத்துகின்ற நாடுகள் போர் முகாம்களை அமைப்பது பற்றித் திட்டம் தீட்டுகின்ற நாடுகள்……. வரும் யுத்த காண்டத்தில் நடுநிலைமையா?… நடுக்க நிலைமையா?….. என்று தீர்மானித்துக் கொள்ளாத நாடுகள்….. இதுதான் இன்றைய உலகம் !
அமெரிக்க டாங்கிகள் ரஷ்யாவுக்குச் செல்கின்றன.. அதைத் தடுக்க அவசர நடவடிக்கை என்ற செய்திகளைக் காணும் பொழுதும், அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பில் அதிக மும்மரமாக ஈடுபட்டு முப்பது முதல் ஐந்நூறு அணுகுண்டுகள் வரை தயாரிக்க மூலப் பொருள்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டுச் சொல்லும் பொழுதும், அணுசக்தி சம்பந்தமாகச் சர்வ தேசக் கட்டுப்பாடு ஏற்படுவதை, அமெரிக்காவும் பிரிட்டனும் தடுக்கின்றன என்று ரஷ்யப் பிரதிநிதி கிராமிகோ கண்டித்துப் பேசியதோடு, அமெரிக்காவின் போக்கைக் கவனித்தால் உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என்று குறிப்பிட்டதையும் கூர்ந்து பார்க்கும் பொழுதும், கொரியாவில் சோவியத் மண்டலத்திலுள்ள சோவியத்- யு. எஸ். எல்லை நெடுக அகழிவெட்டி நிலையங்கள் அமைப்பதைக் கேள்விப்படும் பொழுதும், மால்டாவில் பெரிய அமெரிக்கக் கடற் படைத்தளமும், விமானத் தளமும் அமைக்க, அத் தீவை பிரிட்டன் அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதை நியூயார்க், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் நியூஸ்’ (United States News) என்ற பத்திரிகை கூறும் பொழுதும், யுத்தத்தைவிட அடிமை வாழ்வு மிக மோசம், எனத் தொழிலாளர் தோளில் நின்று கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், விடுதலை விருத்தம் பாடும் பொழுதும், ஏற்கனவே உள்ள விமான பாதுகாப்புத் தளங்களை அழித்துவிட வேண்டா மென்றும், அவைகளை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்ளும் படிக்கும் டேனிஷ் சர்க்கார், உத்தரவு பிறப்பித்து, இராணுவத்தினரின் ஓய்வையும் ரத்து செய்து விட்ட அபாய அறிவிப்புச் சங்கநாதம் நம் காதில் விழும் பொழுதும், போர் மிக விரைவில் வந்துகொண் டிருக்கிறது என நம்பத்தான் வேண்டும்.
இந்தப் போர் முனையில் அமெரிக்காவும், பிரிட்டனும் தோளோடு தோள் சேர்ந்து, ரஷ்யாவைத் தொலைத்துவிடக் கங்கணம் கட்டும்.
ஹிட்லரிடம் எறிந்த ஈட்டியை இரத்தம் காய்வதற்குள் ரஷ்யா கையில் எடுக்க நேரிடும்.
நாசீசத்தை ஒழிக்க அன்று சேர்ந்து நின்ற பிரிட்டன் – அமெரிக்கா-ரஷ்யா ஆகிய மூன்று நாடு களும், இன்று பிரிந்து நின்று அமைதிக்குச்சமாதி கட்ட மீசையை முறுக்குகின்றன.
இம்சையை ஒழிக்க உபதேசித்த இயேசுநாதரின் பக்த கோடிகள் இரத்தக் கடலில் நீச்சல் விளையாட்டு நடத்த விரும்புகிறார்கள்!
சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கு, நமக் கெல்லாம் உயிரின் வாதை…….என்ற அளவிலே, பாதுகாப்பில் பத்திரமாக அமர்ந்துகொண்டு……… ‘படையெடுப்போம், பாரினை யழிப்போம்’ என வீர உரையாற்றுகின்றார்கள் தலைவர்கள்.
சன்மார்க்க மதம் – சமரச சற்குண வழிகாட்டி- சர்வதேச சங்கம். இத்தனையு மிருந்தும் சமர்!
வெட்கமும் வேதனையும் கலந்த நிலைமை!
இந்தச் சங்கடத்தை முளையிலேயே கிள்ளவேண்டுமானால், ஸ்டாலின், ட்ரூமன், ஆட்லி சந்திப்பு நடை பெற வேண்டும். அல்லது ட்ரூமன் ஜனாதிபதி பீடத்திலிருந்து இறக்கப்பட வேண்டும். ஜார்ஜ் மார்ஷல் அமெரிக்க ராஜாங்கத்திலிருந்து வெளி யேற்றப்பட வேண்டும் என்கின்ற யோசனைகளைப் பலர் எச்சரித்துக் கூறுகிறார்கள்.
இரத்தவெறி பிடித்தலைபவர், இந்த யோசனை களுக்குச் செவி மடுக்கவே மாட்டார்கள்!
போர்! போர்! போர் வரத்தான் போகிறது!
எரிமலை குமுறுகிறது ! இன்னும் சற்று நேரத்தில்
நெருப்புக் குழம்பு வாரி வாரி இறைக்கப்படும் !
அப்போது இந்தியாவின் நிலை என்ன?
‘பாக்கிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயங்கமாட்டோம்’ என்று பண்டித நேரு கூறுவது மட்டும் நம்மைப் பரவசப்படுத்தி விடாது.
இந்துஸ்தான் ஆட்சி போகும் போக்கைப் பார்த்தால், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை அணைத்துக் கொண்டு….. பலமில்லா விட்டாலும், ரஷ்யாவைப் பரிகாச மொழிகளால் எதிர்க்கும் நிலைமை ஏற்படலாம் என எண்ண வேண்டி யிருக்கிறது!
இந்துஸ்தான் சிறு குழந்தை, அவர்கள் அகராதிப் படி! தவழும் பருவங்கூட வரவில்லை! அதிலும் பல ஹீனமான சிசு!
சிசுஹத்தி செய்துவிட வேண்டாம் என்று எச் சரிக்கிறோம்; ஆட்சியாளர் திட்டம் திராவிடத்தையும் பாதிக்கும் என்ற கவலையோடு!



