கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி

பலியை நிறுத்துங்கள்!

பக்தர் குழாம் நிறைந்திருந்தது. ஆண்டவன் சந்நிதியில் !

பயபக்தியோடு வணங்கினார்கள்! கன்னத்திலடித்துக் கொண்டனர்!

அர்ச்சனை செய்தனர்! அபிஷேகம் நடந்தது!

ஆனால் ஒருவராவது, “முரட்டுத்தனம் நிறைந்த ஆணின் எலும்பிலிருந்து மேன்மையான பெண்ணை ஆண்டவன் படைத்தார்” என்று பைபிலில் கூறியிருப் பதைப்போல, கரடும் முரடும் நிறைந்த ஒரு துண்டுக் கல்லைக் கடவுளாக்கிய சிற்பியைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!

கும்பல் கலைந்தது; ஆனால் அந்தப் பக்தர் மட்டும் ஆடிக்கொண் டிருந்தார்.

தன்னை மறந்து, உலகை மறந்து, ஆண்டவன் ஒருவரை மட்டும் நினைத்து ஆனந்தக் கூத்தாடிக்கொண் டிருந்தார்!

அவருடைய பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தை, சற்று தூரத்தில் நின்று தன் அப்பாவின் வினோதமான அந்த ஆட்டத்தை வேடிக்கையாகப் பார்த்துக்கொண் டிருந்தது!

கள்ளங்கபடமில்லாத முகம்! சிறு அளவில் திறந்து, ‘பல்லில்லாத என்னைப் பார்’ எனக் காட்டும் செவ் விதழ்கள்!

வெள்ளைக் கண்ணாடிக் குண்டில் அளந்து வட்ட மிட்டு கருப்பு மை தீட்டியதைப் போன்ற கண்கள்!

சோற்றில் மோரை ஊற்றும்போது ஓடிவிடாத படி, குழி அமைத்துக் காப்பதைப்போல, பொங்கும் அழகு வழிந்து ஓடிவிடாமல் இரு பக்கங்களிலும் குழிகள் அமைத்து ஏந்திப் பிடிக்கும் கன்னங்கள்!

தன் அப்பா ஆசையோடு தூக்கி உடலை உறுத்தாமல், அணைத்து முத்தந் தருவார் என்றெழுந்து, ஆசையோடு ஆடிக்கொண் டிருந்த அப்பாவை, பக்தரை நெருங்கிற்று! நெருங்கி, கால்களைத் தொட்டது!

மறுவிநாடி ஒடிந்த எலும்புகள். அறுந்த நரம்புகள், சிதறித் தெறித்த செவ்விதழ்கள், தோல், சதை, இரத்தக் குட்டையின் மத்தியிலே ஒரு சிறு மாமிசத் தீவு!

அன்பின் சின்னத்தைப் பலி வாங்கிய பக்தி என்ற அந்தப் பலி பீடம் செயலற்று நின்ற அந்தச் சிலையைப் பார்த்து ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்தது!

பக்த கோராகும்பர் கதை தான் மேலே தீட்டி யுள்ளது!

அது காட்டுமிராண்டிக் காலம், புராணக் கதை, என்றெல்லாம் எண்ணி, ஒதுக்கிவிடலாம்!

ஆனால் நவயுகத்தில், நாகரிகத்தில் சிறந்திருக்கும் இந்தக் காலத்தில், உயிர்ப்பலி, ஓரளவு நின்றுவிட்டது ஆனால் வாழ்வு பலியிடப்படுகிறது!

அன்னை பாரத மாதாவின், சன்னிதானத்தில் பக்தர் கூட்டம் நிறைந்திருக்கிறது!

உடல் வணங்கி, மனம் உருகி, வணங்குகின்றனர்!

ஆனால் தேசீயத்தின் பேரால், வ.உ. சிதம்பரத்தின் வழிவந்த திருப்பூர்க்குமரன் சந்ததியாரான, திராவிட மக்கள் வாழ்க்கை பலியிடப்படுகிறது.

நவீன கோரா கும்பர்கள்! அவர்களுக்குப் பக்தி என்னும் போதையை ஏற்றும் புரோகிதர்கள், அந்தப் பலியைப் போற்றிப் புகழும் ஏடுகள் எண்ணற்றவையாக மலிந்து கிடக்கின்றன!

வகுப்புத்துவேஷம் என்ற தற்காப்பை அமைத்துக் கொண்டு சிலர் கட்டுப்பாடாக வேலை செய்து வருகின்றனர்.

பத்திரிகை பலமும், ஒரு சில பணக்காரர்களின் பக்கத்துணை தமக்கு இருக்கிறது, என்ற அகங்காரத்தால், மக்களை, உயிரும் உணர்ச்சியுமில்லாத சூதாட்டக் காய்களாக மதித்து இஷ்டம் போல் நகர்த்தி வைக்கின்றனர்.

அரசியல் நிர்ணய சபையிலிருந்து சென்னை சட்ட சபை வரை, தீர்மானங்கள், சூழ்ச்சிகள், இவைகளில் தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகின்றனர், ஒரு குறிப்பிட்ட வகுப்பார்.

முன்பொருநாள் தோழியர் துர்க்காபாய், கல்விச் சாலைகளில், வகுப்பு வேற்றுமை பாராட்டலாமா? எனக் கேட்டார், தேசீயத்தின் பேரில்தான்!

அம்மையாரைப் பாராட்டுகிறோம் !

சரஸ்வதி பொது உடமையாக இருக்கவேண்டும் என்பதை யாரும் எதிர்க்கக்கூடாதுதான் ஆனால் அம்மன் (சரஸ்வதி-படிப்பு) சந்நிதி பொது உடமை யாக இருக்க வேண்டும் என்பதில் அம்மையார் காட்டும் அக்கரை ஆண்டவன் சந்நிதிக்கும் ஏன் காட்டப்படக் கூடாது!

ஆறுகால படையலும், ஒரு வகுப்பார் உணவுக்கும், நித்தியப்பட்டினி மற்றொரு வகுப்பாருக்கும், நிரந்தரமாக இருந்து வருகிறதே !

அதை எதிர்க்க -மாற்ற, அம்மையாருக்கு, ஏன் மனம் வரவில்லை !

அவர்கள் இனப்பண்பின்படி, அர்ஜுனன், தான் மணந்த திரௌபதியை பங்கிட்டுக் கொடுத்தான் என்பது மட்டுமல்ல, தன்னையும் பலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான் என்பதை நினைவுபடுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்!

இப்போது ஒரு கூச்சல் எழும்பியுள்ளது: வட மொழிக்கு ஆக்கந் தேடும் வேலை !

ஒரு மொழி தேவையா? அல்லவா என்பதல்ல, பிரச்சினை.

அந்த மொழியைக் கற்க எத்தனை பேர் ஆசைப் படுகிறார்கள்?

ஆசைப்படுகிறவர்கள் எல்லாம் ஒரே வகுப்பாராக இருப்பானேன்?

உலகுக்கே, ஒரு பெருமொழியாக, கலைச் சொற்கள் நிறைந்த ஆங்கிலத்தையே, விலக்கி வைக்க வேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்படும் போது, இம்மொழிக்கு மட்டும் அக்கரை காட்டப் படுவானேன் ?

இறந்த மனிதர்களை, மதிப்பதுபோல, வழக்கமற்ற மொழியையும் மதிக்கிறோம்; ஆனால் புதைக்கப்படாமல் வெளியே, விட்டிருந்தால், துர்நாற்ற மெடுத்து விடும் என்று, நம் மக்களை எச்சரிக்கிறோம்!

பசியால் துடிப்பவனுக்கு, உணவு பரிமாறும் போது, சமத்துவத்தின் பேரால், அஜீரணத்தால் கஷ்டப்படுவோனுக்கும், அதில் பங்கு தரவேண்டும் என்று நினைப்பதில், அறிவுமில்லை; அர்த்தமுமில்லை!

நிலைமை தாழ்ந்த மக்களைக் கைதூக்கி விடுவதில் எல்லோரும் அக்கறை காட்டவேண்டும்; முக்கியமாக மந்திரிமார் கவனிக்க வேண்டும்.

நிலத்தை உழுது, வாணிபஞ் செய்து, இயந்திர சாலைகளில் இரவும் பகலும் உழைத்து நாட்டின் பொருள் வளர்ச்சியை, அதிகரித்துக்கொண்டே இருப் பவர்கள், இந்நாட்டின் பூர்வகுடிகளான, திராவிடர்கள் தான்! அவர்கள் உழைப்பின் பலன்தான் இன்று ஊராள்வோரின் ஊதியம் !

அவர்களின், நிலை தவறி வாழ்வதைத் திருத்த முயற்சிக்காமல் இருந்தால், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை, செய்ந் நன்றி கொன்ற மகற்கு’ என்ற குறள் ஒன்றையே எடுத்துக்காட்டு வதைத் தவிர வேறு வழியில்லை!

அரசாங்க மாளிகையிலே, ‘பார்ப்பனர் ஒழிக’ என்ற கோஷங் கிளம்பிற்று, என்று கேட்டவுடன், திராவிட இன மக்களின் இதயத் துடிப்பின் எதிரொலி, அங்கு மிருக்கிறது என அறிகிறோம்!

ஆனால் அதுவல்ல, நாம் கோருவது; பார்ப்பனர் ஒழிய வேண்டாம், இருக்கட்டும்!

பார்ப்பனர்கள் இருக்கட்டும்; நம்மிடம் இருக்கட்டும், நம்மைப் போலவே!

ஜாதி ஆசாரங்களிலே, ஆண்டவன் காரியங் களிலே, திருவிழாக்களிலே, நம் பண்டிகைகளிலே, முக்கியமாக இந்து சட்டத்திலே, ஆரிய ஆதிக்கம். வட மொழிச் செல்வாக்கு மறைய வேண்டும், அழிக்கப்பட வேண்டும்!

வெறுங் கூச்சலோடு மட்டும் அதை நிறுத்தி விடக் கூடாது; செயலாற்ற வேண்டும்!

இதைத்தான் நாம் இத்தனை ஆண்டுகளாகக் கூறி வருகிறோம்; நாடெங்கும், எடுத்துச் சொல்லியும் வருகிறோம்.

தேசீயத் தோழர்களும் இதனை உணரவேண்டும். வாரீர் தொண்டாற்ற எனத் தேசீயத் தோழர்களையும், தலைவர்களையும் அழைக்கிறோம், அன்பின் காரணமாக.

தேசீயம் என்ற பலி பீடத்தில் இன வளர்ச்சியைப் பலியிடாதீர்கள்.

அது பாதகமானது மட்டுமல்ல; பிற்காலத்தில் காட்டுமிராண்டித்தனம் என்று பழிக்கப்படக் கூடியதும் கூட!

பலியை நிறுத்துங்கள்/ இனப்பலியை நிறுத்துங்கள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *