கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி

விழலுக்கு நீர் இறைத்து…

“அடாடா! என்ன அழகு!……. சிற்பியின் சிந்தனையையும் சிதறடிக்கும் எழில் மண்டபம். அதிலிருந்து வண்ண விசித்திரங்கள்…. அப்பப்ப! கண்ணைப் பறித்துக்கொண்டு போயின!

அங்கே கிடந்த ஒரு மரகதக் கட்டிலில் தங்கச் சிலையோவென அவள் இருந்தாள்!

அவள் குளிர்ந்த பார்வையை முந்திக்கொண்டு, வெடித்த பானையோவென அரும்புப் பற்கள் தெரிய, குறுஞ் சிரிப்புடன் ‘மதனனே, வா!’ என்று குயில் குரலுடன், வீணையொலி யோவென, நெஞ்சம் கொள்ளை போக….அவள் அழைத்த அந்தப் பாங்கு அந்தக் கடைக் கண் பார்வை .. அப்படியே என்னைச் சொக்க வைத்தது!

மதுவுண்ட மனிதனான தப்பா, என் நிலை!….என் உள்ளத்திலே ஒரே உற்சாகம், துடிதுடிப்பு…. என் கால்கள் பரபரவென அடி எடுத்து வைத்தன!

கிட்ட நெருங்கி, கண்ணாடிக் கன்னத்தை என் கையால் தொட்டு..?’ என்று ஒருவர் கூற, பக்கத்திலிருப்பவர் சுவாரஸ்யம் கொப்பளிக்க, முப்பத்திரண்டு பல்லும் தெரிய, “பின் என்ன?” என்று கேட்கும் பொழுது; பரிதாபத்துடன் சோகரசம் கலக்க, குரல் கம்ம, வேதனை விம்ம, “பின் என்ன! திடீரென விழித் துக் கொண்டேன்!” என்று மங்கையையும் மாளிகையை யும் வர்ணித்தவர் பதில் கூறுகிற ‘பரிதாபத்திற்குரிய நிலையை ஒத்துவிட்டது, இன்றைய காங்கிரஸ் தோழர் களின் நிலை……..

“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்” என்ற பாட்டை ஆத்திரத்துடனும், “அச்சமில்லை” என்ற அடியை ஆங்காரமும், ஓங்காரமும் நிறைந்த குரலில், எழுப்பி, முழக்கிய காங்கிரஸ் நண்பர்களின்… உண்மைத் தொண்டர்களின்….’வீரசுருதி’ நாலரைக் கட்டையிலிருந்து, அரைக்கட்டையாகக் குறைந்துவிட்டது! குறைந்து போய்க் கொண்டு மிருக்கிறது!

காரணம்?

“அன்னிய ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு இரை யாகாதே!” ஆங்கிலப் பிடியை அகற்ற ஓடிவா!” “பதவிப்பேய் பிடித்தலையும் சகோதரத் துரோகி ஒழிக!” என்றெல்லாம் சுதந்திரம் என்ற ஒரே நோக்கமுடன் பெருங்குரல் எழுப்பிய காங்கிரஸ் நண்பர்கள் நிலை, கனவிலே கட்டிளம் பெண்ணைக் கண்டு, அவள் மேனி மினுக்கு, ஒய்யாரக் கொண்டை, உள்ளங்கவர் உருவம் ஆகியவைகளில் லயித்துக் கிடந்துவிட்டு, கண்ணை விழித்துப் பார்க்கும்போது, எதுவுமே இல்லாததைக் கண்டு திகைக்கும் மனிதனை யொத்து இருக்கிறது!

எண்ணினர், தங்களிடம் ‘சுயராஜ்யம் வந்ததும் “சுகராஜ்யம்’ வந்துவிடும் என்று தலைவர்கள் கூறிய பொழுது, உண்மையில் நாமும், நாடும் எந்தவிதமான, கேடுபாடின்றி, எப்பொழுதும் சுகமுடன் வாழலா மென்று! ஆனால்….. !

வாழ்க்கையின் தொல்லைகளோ, பசி, பசி என்ற பதறலோ பறந்துவிடவில்லை. அதுமட்டுமல்ல! சுதந்திரம் வந்ததாகக் கூறியபின் எங்கும் பட்டினி, பசி, துன்பம், இல்லாமை, ஏழ்மை, பரிதவிப்பு இன்ன பிற இன்னல்களைக் காணும்பொழுது உள்ளபடியே நல்வாழ்வைக் கனவு கண்ட நண்பர்களின் உள்ளத்தின் ஒரு மூலையிலே “இதற்குத்தானா இத்தனை பாடு பட்டோம்?” என்ற எண்ணம் உதிப்பதில் ஆச்சரியமில்லை. இருக்கவும் முடியாது!

அத்துடன் இலட்சிய புருஷர்கள் தியாக வீரர்கள், நாட்டிற்காக உடல், பொருள், ஆவியையும் தத்தம் செய்பவர்கள் அடங்கிய ஏழைகள் இன்னலை ஒழிப்பதே கடமையாகக் கொண்ட நாட்டில், சாதி பேதம், சண்டாளத்தனம் இல்லாது செய்வதென்பதே, இலட்சியமெனக் கூறிய காங்கிரஸ் ஓட்டை வண்டி யாக, உளுத்துப்போன உத்திரமாக இருப்பதைக் காண உள்ளபடியே அவர்கள் வருந்தத்தான் செய்வார்கள்.

“நாடாள வந்தோம், மக்களின் வாழ்வை நல்வாழ்வுப்படுத்த வந்தோம்” என்ற எண்ணம் நெஞ்சிலே இருப்பதற்குப் பதில் பதவி வெறியும், அதற்காக எல்லாவற்றையும் தத்தம் செய்து விட்டாவது பதவி மேடையைப் பெறவேண்டும் என்ற பேராசையுமே காங்கிரஸ் தலைவர்கள் என்று கூறப்படுவோரின் வாழ்க்கை இலட்சியமாகி விட்டது!

பிரகாசம் வீழ்ச்சிப்படலம் தொடங்கி, ஓமந்தூரார் ஆட்சிப் படலத்தை முடிவு கட்டும் முயற்சிப் படலம் வரையில், ஓரிரு ஆண்டுகளுக்குள் ஒரே கட்சிக்குள் பிளவுகள் – அதுமட்டுமல்ல, பெரிய பெரிய தகராறுகள், சண்டைகள் வளருமளவுக்கு, காங்கிரஸ் புராணத் தின் படலங்கள் ரசாபாசமாகி விட்டன!

“ஸ்ரீ வைத்தியநாத ஐயர் போன்றவர்கள் வகுப்பு உணர்ச்சியினாலும், வேறு சிலர் மந்திரிப் பதவி மோகத் தினாலும்………. என்று சாட்சாத் சொக்கலிங்கம், ‘தினசரி ஆசிரியர் அவர்கள் தீட்ட, சட்டசபையை நடாத்திச் செல்வோரைத் தேர்ந்தெடுக்கும் முறையை, ‘வருடாந்திர ஏலம்’ என்று ‘பாரத தேவி’ பரிகரிசப் பாட்டாகப் பாட, நாட்டிலுள்ளோர் நல்ல நாடகத் தைக் காணும்பொழுது, “அடுத்த கட்டம் என்ன ?” என்று ஆவல் ததும்புவதுபோல்-சர்க்கஸ் வித்தையில் கூடையை மூடியவுடன் மாங்காய் முளைத்ததா? என்ன மாங்காய்?” என்பதை அறியக் குனிந்து குனிந்து பார்க்கும் ஆசையுள்ளவனைப் போல ‘இன்று என்ன செய்தி?’ ‘யாரப்பா மந்திரியாம்’ என்று கேட்கும்— இல்லை, வேடிக்கை நிகழ்ச்சியாக எண்ணும்-அளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சீர்கெட்ட நிலையை, சந்தி சிரிக்கும் நிலையை, தலைவர்களென்போரின் பதவி வேட்டையில் காணும்பொழுது ‘இலட்சியம்’ என்று கூறிக்கொண்டு உழைத்து உழைத்து அலுத்த காங்கிரஸ் தொண்டரின் உள்ளம் கஷ்டப்படத்தான் செய்யும். ‘விழலுக்காக நீர் இறைத்தோம்’ என்றும் வேதனைப்படத்தான் செய்யும்,

கட்சியின் அமைப்பே, முதலாளித்தத்துவச் சாக் கடையின் மூடியாக, ஏகாதிபத்தியத்தின் முரசாக இருக்கும்பொழுது, ‘சந்தி சிரிக்கும் கட்டங்கள்’ ஏற்படத்தானே செய்யும் ?

“ஒரு கட்சி அரசியல் ஆதிபத்தியம் பெறும் பொழுது, அக்கட்சியின் அடிப்பீடம் சரியில்லாவிட் டால் முதலாளிகளால், சுயநலமிகளால் சூழப்பட்டு அவர்கட்கே அடிமையாகிவிடும்.” என்ற மார்க்ஸ் சித்தாந்தம் புரிந்த நாம், இந்த ‘சந்திசிரிக்கும் கட் டத்தை’ எதிர்பார்த்தவர்கள்தான்!

இதைக் காணும்பொழுது தலை தாழ்ந்து, சுருதி குறைந்து, வேதனைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் ‘காங்கிரஸ் பக்தி’யை ஒருபுறம் ஒதுக்கிச் சிந்தனைக்கு வேலை கொடுப்பார்களேயானால், காங்கிரஸ் பண மூட்டைகளின் சல்லாபக் கருவியாக, வடபாதி மங்கலம், நாடி முத்துக்களின் வாட்டந்தீர்க்கும் பூஞ் சோலையாக, வைத்தியநாத அய்யர்களின் வம்பு மட மாக இருப்பது நன்கு தெரியவரும்.

அப்போது உண்மையாகவே, அவர்கள் இதயங்கள் “விழலுக்கு நீரிறைத்து ஓயமாட்டோம்” என்ற வார்த்தைகளை வேதனை கீதமாக்கத் தொடங்கும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *