கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி

வீரமுழக்கஞ் செய்திடுவீர்!

இந்திய அரசியல் உலகிலே – குறிப்பாக ஆட்சிப் பீடத்திலுள்ளவர் உலவும் வட்டாரங்களிலே, பலம் பொருந்திய ‘மத்திய சர்க்கார்!’ தேவை என்ற குரல் சிலகாலமாகக் கிளம்புகிறது!

“மாகாணஉணர்ச்சி, பேதத்தை, பிளவை, வேற்றுமையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக் கொள்கை.”

அந்தக் கொள்கை இந்தியாவில் பரவினால், இந்திய சமுதாயம், பலம் பொருந்திய அமைப்பாக இல்லாமல் சின்னாபின்னமாகச் சிதறிவிட வழிவகை செய்துவிடும்.

ஆகவே, தேச பக்தர்களே! தியாகிகளே! பாரத் மாதாவின் புத்திரர்களே! மாகாண உணர்ச்சியை வளர்க்காதீர்கள்! வளர்த்தாலும் தடைப்படுத்துங்கள்!

இந்த விதத்திலே, அரசியல் பண்டிதர், இந்தியா வின் முதல்வர் என்றெல்லாம் போற்றப்படும், பண்டித ஜவஹர்லால் அவர்கள் கோவையிலே, டில்லியிலே பேசினார் !

அன்பர் ஆச்சாரியாரோ, அந்த உணர்ச்சி இப் போது வேண்டாம் என்று இதோபதேசம் புரிகிறார்.

ஆகஸ்டில் சுதந்திர சூரியன் உதித்தான்! ஆண்டு களும் அனேகம் ஆகிவிடவில்லை! அதற்குள் இந்தப் பிரிவினை மனப்பான்மை கூடாதுதான் என்று விரிந்த மனப்பான்மையினர் ( ! ) விவேக (!) சிந்தாமணி படிக்கின்றனர்!

பொருளாதார நிலை சரிந்துவிடும் போலிருக்கிறது. எங்குப் பார்த்தாலும், பசி! பட்டினி! பஞ்சம் என்ற கூக்குரலே! வேதனை விம்மல்களே !!

எல்லாருக்கும் உணவு, உடை வேண்டுமானால், மாகாண உணர்ச்சியை விட்டு, பலமிக்க மத்ய சர்க்கா ருக்கு பாடுபடுங்கள் என்பதாகச் ‘சமத்துவத் தமிழன், கெட்டிக்கார நிதிமந்திரி’ என்றெல்லாம் வசிஷ்டர் வாயால் ரிஷி(!) பட்டம் பெற்ற சண்முகம் செட்டியார் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்!

ஏன் இவ்வளவு பேரும் அதிக அக்கரை கொண்டு மத்ய சர்க்காரைக் காப்பாற்றக் கச்சையை வரிந்து கட்டுகின்றனர்?

என்ன காரணத்தால், பாரத மாதாவைக் கிழக்கிலும், மேற்கிலும் பறிகொடுத்த பிறகும், பாரதமாதா. சேவை செய்கின்றனர்?

சுதந்திரம் வந்தது! வந்த சுதந்திரம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்படுகிறது?

மத்யசர்க்காருக்கும் மாகாண சர்க்காருக்கும் உள்ள ஒத்துழைப்பு எவ்வளவு தூரம் உரம்பெற் றிருக்கிறது, என்று யோசித்தால் நமக்கு ஓரளவுக்கு உண்மை புரியாமலில்லை!

ஆந்திர மாகாணம் வேண்டுமென்ற கிளர்ச்சி!கர்னா டகம் கேட்கிறார்கள்! கேரளமும், தமிழ் நாடும் அப்படியே!

பீஹாரின் சில பகுதிகளை வங்காளம் கோருகிறது! பம்பாயில் சில பகுதிகளை, மகாராஷ்டிர மாக்கவேண்டு மென்ற கோரிக்கை நல்ல முறையில் வளர்ந்து வரு கிறது!

அஸ்ஸாம் மாகாண மக்கள் மத்ய சர்க்காரிடம் அதிருப்தி கொள்கின்றனர்! மாற்றாந்தாய்க் கொடு மையைவிட மகா கொடுமை புரிகிறது, மத்ய சர்க்கார் என்று அங்கலாய்க்கின்றனர்!

இந்த நிலைமையில் தான், மாகாணப் பிரிவினை உணர்ச்சி ஓங்கியுள்ள நேரத்தில்தான், நாம் ஒன்றிய திராவிடம் கேட்கிறோம்! திராவிட நாட்டு அமைப்பைப் பற்றிப் பேசுகிறோம்; அங்கங்கள் எவை என்று கூறு கிறோம்!

நாம் கேட்கும் திராவிட நாட்டுப் பிரிவினைக்கும், மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சிக்கும் மகத்தான வேறு பாடு உண்டு !

நமது கொள்கைக்கு ஆதரவாகவே, பல பேராசிரியர்கள், பல அரசியல் வாதிகள், பொருளாதார வல்லு நர்கள், தென்னிந்திய பெடரேஷன் அவசியத்தைப் பற்றி வலியுறுத்துகின்றனர்.

பெயர் மாற்றமே ஒழிய கருத்து ஒன்றுதான்

இன்றைய நிலையில் தென்னிந்தியா பெடரேஷன், அதாவது திராவிடம் தனி நாடு அமைப்பது சாத்தி யமே! சாத்திய மட்டுமல்ல, அவசியமுங்கூட.

அப்போதுதான் தென்னிந்தியாவிலுள்ளபல அரிய பெரிய சாதனங்கள், தென்னிந்தியர்க்கே, திராவிட ருக்கே, பயன்பட வழியுண்டு, வகையுமுண்டு.

மூலப் பொருள்கள் பல முடங்கிக் கிடக்கின்றன ! ஆறுகள், வாய்க்கால்கள், பண்படுத்தப்படாமல், மின் சார வகைக்கு ஏற்ற வழியில் திருத்தப்படாமல் இருக்கின்றன. உணவுப் பொருள் விருத்தியும் தேங்கி விட்டது.

இவை யெல்லாம், வீணாக, கவனிப்பாரற்று, மத்ய சர்க்காரின் மாற்றாந்தாயின் கவனிப்பில் வாடும் நமது செல்வத்தை வளர்க்க, வளமாக்க திராவிடத் தனி நாடு (தென்னிந்திய பெடரேஷன்) தேவை! அவசரமும், அவசியமுமாகத் தேவை!

நாம் திராவிடம் கேட்கும் இந்த நேரத்தில் மொழி வாரி மாகாணப் பிரிவினை பற்றிப் பேசப்படுகிறது, ஆளவந்தாரால்!

மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால் அந்த முயற்சியால் என்ன நிரந்தரமான பலன் காணப்போகிறோம் என்பதுதான் பிரச்சினை!

மொழிவாரி மாகாணங்கள் அமைந்து விட்டால், ஓரளவிற்கு பிரிவினை உணர்ச்சியை மட்டுப்படுத்தி விடலாம் என்பதாக, அரசியல் சூதாடிகள் எண்ணலாம்; எண்ணி பலம்பொருந்திய மத்திய சர்க்காரை அமைத்து விடலாம் என்பதாகப் பெருமிதமும் அடையலாம்!

இந்த நிலையில் இன்னொரு திடீர்த் தாக்குதல் கிளம்புகிறது ஐக்யமாகாணத்திலிருந்து.

“மாகாண நிதி விஷயங்களில் மத்ய சர்க்கார் அளவு கடந்த ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால், மாகாணங்களுக்கு, வேண்டிய அளவிற்கு, தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அளவிற்குக் கூட நிதி கிடைக்கவில்லை. பசையுள்ள பல வரிகளை, மாகாணங்களில் மத்திய சர்க்கார் வசூலித்துவிடும் வகையில் இந்திய அரசியல் தீட்டப்பட்டுள்ளது; இது நீதியாகாது; முறையுமாகாது; எல்லா மாகாணங்களும் ஒருங்கு கூடி ஆவன செய்ய முற்பட வேண்டும்” என்ற செய்திதான் அந்தத் திடீர்த் தாக்குதல்!

ஐக்கிய மாகாண அரசாங்கம் எல்லா மாகாணங் களையும், உதவிக்கழைத்திருக்கும் நிலையை நன்கு தெரிவித்திருக்கிறது!

உள்ளபடியே, இந்தச் செய்தி பலம் பொருந்திய, மத்ய சர்க்கார் கோரும் பிரகஸ்பதிகளுக்குப் பயத்தைக் கூட கொடுத்திருக்கலாம்! ஏனெனின், மாகாணங்கள் ஒன்றி, மத்ய சர்க்காரை மிரட்டினால், பிறகு பலம் பொருந்தியதாகவோ, எதேச்சாதிகாரமாகவோ, இருக்க முடியாது.

அதுமட்டுமல்ல, பலமற்ற ஐக்கிய இந்தியாவாக இருந்தால் தேசீய மொழியாக-ராஷ்டிர பாஷையாக- ஹிந்தி பாஷையோ, ஹிந்துஸ்தானியையோ, கொண்டு வர முடியாது. ஏன்?

நிதி விஷயமாக எதிர்க்கத் துணிந்துவிட்ட மாகாணங்கள், மொழிபற்றியும் தகராறு கிளப்பலாம் என்ற எண்ணமும் ஏற்படலாம்!

மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஓர் வித அதிருப்தியும் வளர்ந்து வருவதையும் காணலாம் மத்ய அரசாங்கத்தினர்மீது!

மத்ய சர்க்கார் பம்பாய் மாகாணப் பிரமுகர்களுடன் கூடிக் குலாவுவதும், அரசாங்க உத்தியோகங் கள் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட அநீதியையும் நாம் அறிகிறோம்!

மத்ய சர்க்காருக்கும், மாகாண சர்க்காருக்கும் தவிர்க்க முடியாத பிளவு ஏற்பட்டு விடுவதையும் காண்கிறோம்; ஏற்படாத இடங்களிலும், பிளவு ஆரம்பிப்பதையும் காண்கிறோம்!

இவ்வாறு பல வழிகளிலும், மத்தியிலுள்ளவர்கள் தங்களைப் பலப்படுத்த முயற்சிப்பதும், மாகாணங்கள் தங்கள் தங்கள் உரிமைகளைப் பெறப் பாடுபடுவதையும் காணும் நமக்கு-தென்னாட்டுத் திராவிடர்களுக்கு நமது நாடு தனி நாடாக வேண்டும் என்பதில் கருத்து வேற் றுமை இருக்கக்கூடாது; இருந்தாலும் அதை அழித்து விட வேண்டும்!

நமது கிளர்ச்சியை, போராட்டத்தை அவமதிப்பவர்கள்,ஒன்று நம்மைப் பற்றி நன்கு அறியாதவர்க ளாக இருக்க வேண்டும். அல்லது அறிந்தும் குறும்புத் தனத்தில் இறங்கியவர்களாக இருக்க வேண்டும்.

பாக்கிஸ்தானில், பட்டாணிஸ்தான் வேண்டு மென முழக்கமிட்ட கபார்கானை ஆதரித்தவர்கள்; கீழ் வங்காளத்தில் வங்காள மொழி அரசியல் மொழியாக வேண்டும் என்பதை அழுத்தந் திருத்தமாகக் கூறிய தேசீயத் தோழர்கள், நமது கோரிக்கையை எதிர்க்கும் காரண மென்ன?

அவர்களது ஜொலிக்கும் வாழ்வு மங்கிவிடுமென்ற மன மருட்சியா?

அவர்களது எதேச்சாதிகாரம் குறைந்து விடும். குறைக்கப்பட்டு விடுமென்ற ஏக்கமா? துக்கமா?

அவர்களது அதிகார போதை, தெளிந்துவிடும், தெளிந்துதான் ஆகும்,ஆகவேண்டுமே என்ற அச்சமா? ஆயாசமா?

அல்லது என்றைக்குமே பொருளாதார முறை யிலும், மற்றெல்லா வகையிலும் செழுமையாக வாழ வசதியுள்ள தென்னிந்தியாவை – திராவிடத்தை – வட நாட்டுக்கு அடிமையாகவே, வடநாட்டின் சுரண்டல் காடாகவே வைத்திருக்க வேண்டுமென்ற ஏகாதிபத்திய மனப்பான்மையா?

ஏன்? அவர்கள் நமது வாழ்வு பூப்பதை மறுக்க வேண்டும்?

ஏன் நமது வாழ்க்கை வளம்பெறும் மார்க்கத்தைத் தடைசெய்ய வேண்டும்?

இந்திய பூபாகத்தை அடிமை கொண்டு, அதிகார வெறியில் ஆண்ட வெள்ளையனை விரட்டியதாகப் பெருமை பேசும் அன்பர்கள் அறிய வேண்டாமா?

ஆதிக்கமோ, ஆணவமோ, போலீசோ, பட்டாளங் களோ, பத்திரிகை பலமோ, நிரந்தரமானதல்ல, என் பதை அறிந்தும், ஏன் இந்தப் பிடிவாதம்?

ஆணவக்காரனின் பிடிவாதத்தை நொறுக்க, நமது மாகாணம் (திராவிட நாடு) பூரண சுதந்திரத்துடன் வாழ, தேவையில்லாத இந்தி நுழையாமலிருக்க, நமது செல்வத்தை நாம் அனுபவிக்க, பிர்லாவோ, பஜாஜோ, டாடாவோ, டால்மியாவோ தேசீயப் போர்வையில் வளர்க்கும் வடநாட்டு இரும்பு முதலாளித் தத்துவத்தை முறியடித்து, சமத்துவ வழி வகுக்க, இன்பத் திராவிடம் பெற, ‘நாமார்க்குங் குடியல்லோம்’ ‘திராவிடநாடு திராவிடர்க்கே!’ என்று வீர முழக்கஞ் செய்யுங்கள்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *