
கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி
சோதனை!
ஏ! இந்திரனே ! எதிரிகளை ஒழிக்க வரம்தருவாய்!”
” அக்கினியே! சூத்திரர்களை சுட்டுச் சாம்பலாக்க எழுந்தருள்வாய்!’
அன்றொரு நாள் மாற்றாராம் திராவிடரை மாய்க்க, அழிக்க-ஒழிக்க, ஆரியம் போட்ட மனு!
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் இன்ன பிறவற்றில் காணக்கிடைக்கும் கண் கண்ட வாசகங்கள் மேலே தீட்டப்பட்டவை!
அதே விண்ணப்பத்தை ‘இந்து’ சட்ட மூலம், ‘மத நடுநிலைமை’ மூலம் ஆங்கிலேயன் ஆண்ட காலத்திலே பெற்றுத் தன்னைக் காத்து வந்தது ஆரியம்.
அதே விண்ணப்பத்தை இன்று ‘வகுப்புத் துவேஷம்’ என்ற போர்வையில் பெற்று வருகிறது; மேலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!
திராவிடர் தனியாக ஒரு படை அமைத்து அதற்குப் பயிற்சி அளித்து- சதிக்கூடங்கள், அமைத்துக் கொள்ளா விட்டாலுங்கூட பலாத்காரத்திலிறங்கி பயங்கரச் செயல் புரியாவிட்டாலுங் கூட-பகுத்தறிவுப் பிரச்சாரம் புயலெனச் சுற்றிச் சுழன்று செய்து வருவதைக் கண்டு, அவ்வப்போது அடக்குமுறைக் கணைகள் – 144 தடையுத்தரவுகள் – வாய்ப் பூட்டுக்கள் எழுதும் நூல்களுக்குத் தடை-பறிமுதல் – ஆசிரியர் மீது வழக்கு-நாடகங்களை நடிக்காதே-என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து….கணைகள் பல தொடுத்த வண் ணமே தான் உள்ளனர், இன்றைய காங்கிரஸ் சர்க்கார்!
ஆகாயத்தில் சின்னஞ்சிறார் கிளப்புகிற ‘வெத்து வேட்டு,’ இவையெனக் கூறினாலும் கொண்டாலும்…. இவை திராவிடர்க்கு ஒரு எச்சரிக்கை வெடி என்பதை நாம் மறைக்க விரும்பவில்லை !
சட்ட விரோத பாணங்களால் – திராவிடரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவது என்ற நமது இலட்சியப் பாதை தடைபடுத்தப்படா விட்டாலும், ஆரியம் அதையும் துவங்கும் என எதிர் பார்க்கலாம் !
ஏனெனில் அதன் சுட்டுவிரல் அசைவிலே சுழலுகிற ஆட்சிதானே இங்கு நடக்கிறது?
“ஆரிய மாயை அகல வேண்டும், வேறென்ன வேண்டும்” என்ற பண் பாடியதற்காகக் கிடைக்கும் பரிசு ! இவையா?
தாங்க முடியாத அல்லல்களைத் தரைமட்டமாக்கத் தணியாத ஆர்வங்கொண்டு….திராவிடரே! தரணியாண்டோம் – தாழ்ந்தோம்
இன்று…. இனி வாழ்வோம்
வாழ்ந்தே தீருவோம் என்று எக்காளமிட்ட இளைஞர் களுக்கு இதுவா வெகுமதி!
சரிந்து போகும் சமுதாயமே ! சதிகாரர்களின் கோட்டை யாகிறதே, உன் நாடு !
சழக்கர்கள் உன் இன உணர்ச்சியை வேட்டை யாடுகிறார்களே!
சாய்ந்து போகாதே! நில்! நிமிர்ந்து நில் ! எனச் சங்கம் முழங்கிய இளஞ் சிங்கங்களுக்கு இதுதானா சன்மானம்?
இந்தக் கேள்விகளைக் கேட்டு திராவிடத்தைச் சுற்றியுள்ள கடல்கள் கொந்தளிக்கின்றன !
தென்றல் காற்று கூடச் சூடேறி வீசுகிறது !…….. நிலவின் ஒளிகூட நெருப்பாகிக் கொட்டுகிறது! மூச்சு -பேச்சு-அனைத்தினிலுமே கனல் தெறிக்கிறது!
ஆளவந்தார்-ஆட்சிப் பீடத்திலே அமர்ந்துள்ளோர் உணர்ந்து பார்ப்பரா? ஆரியத்தின் பேச்சை, தூண்டு தலைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோம்; அடக்கு முறைக் கணைகள் தொடுத்து விட்டோம் என்பதை ஆலோசிப்பரா?
சூது ஏதுமறியாச் சூரர்களின் பணி மனைகளில் சோதனை!
அமைதியை ஆயுதமாகக் கொண்ட அன்புப்படை முகாம்களில் ஆராய்ச்சி !
பகுத்தறிவுத் தொண்டு செய்யும் பலாத்காரமற்ற பகுத்தறிவு வாதிகட்கு வாய்ப்பூட்டு !
உள்ளதை உரைத்திடும் நூல்கள் பறிமுதல்!
நாட்டு நடப்பைக் காட்டும் நல்லறிவு நாடகங் கட்குத் தடை!
தலைவர் ஆணையைத் தலைமேற்கொண்டு, வாளெடுக் கும் கையிருந்தும், துப்பாக்கி பிடிக்கத் துணிவிருந் தும், நினைத்த மாத்திரத்தில் ஆயிரமாயிரம் அணிவகுப் புகளை நிர்மூலமாக்கும் ஆண்மையுள்ள சந்ததியில் பிறந்திருந்தும்…. பொறுமை ! பொறுமையை ஆபரண மாகக் கொண்டுள்ள தோழர்கள் வீடுகளில் போலீஸ் தர்பார் !
சோதனை ஆராய்ச்சி ! நடைபெற வேண்டிய இடங்கள் சூழ்ச்சியறியா திராவிடர் நிலையங்களா? இல்லை!…. இல்லை!!……..
வாய்ப்பூட்டு-பறிமுதல்! தடை-தர்பார் நடத்தப்பட வேண்டிய இடங்கள் இன எழுச்சிக்குப் பாடு படும் பகுத்தறிவுச் சிங்கங்களிடமா ? அல்லவே அல்ல!
அதோ! ஆரியத்தின் உள்ளம்! அந்த அநியாய உள் ளத்தைச் சோதனையிடுங்கள்! ஆராய்ச்சி செய்யுங்கள்!
அங்கே அகப்படும்-அகப்பட்டே தீரும், மக்களை பற்பல வகுப்புகளாகப் பிளக்கும் மதக் கோடரிகள்!
அங்கே கிடைக்கும் – கிடைத்தே தீரும், தீரத் திராவிடரின் மேல் எறியப்படும் வஞ்சக ஈட்டிகள்!
அதற்கெல்லாம் வாய்ப்பூட்டு போடுங்கள்! அவற்றை யெல்லாம் பறிமுதல் செய்யுங்கள்!
அதுமட்டுமா? அங்கே காண்பீர்கள். சமுதாயத்தை மோதவிட்டு….சந்தர்ப்பபேத மேற்படுத்தி வைத்து……. சந்தோஷ மடைவதற்காகத் தயாரித்து இருக்கும் சதிக் கடிதங்கள்!
அதற்குத் தடை விதியுங்கள் – அங்கே நடந்தால் கூடத் தவறாகாதே- தர்பார்!
ஆட்சியாளரின் கவனம் செல்ல வேண்டிய சதிக் கிடங்கு அது-ஆரியம்- ஆரிய உள்ளம் !
பொச்சரிப்பும் பொறாமையும் நிரம்பியிருக்கும் வெடி மருந்துச்சாலை அது !
போலீசார் புகமுடியாத இடம் !.. உருத் தெரியாது,உட்பகை, உற்றார் உறவினரிடையே உண்டாக்கும் தத்துவம் ஓங்கியுள்ள இடம் !
சமயம் – சன்மார்க்கத்தின் பேரால் சாதி வெறி கிளப்பும் இடம் – அங்கே! அங்கே! ஆரியக் கோட்டையில்!
செங்கோலேந்தியவர்களின் சிந்தனை – சீற்றம் செல்ல வேண்டிய இடம்!
செந்தமிழைக் காக்க- தமிழரின் தன்மானத்தைப் பாதுகாக்க – பகுத்தறிவு பரவ-பசி-பிணி-பட்டினி – உயர்வு – தாழ்வு இல்லாத ‘திரு இடம்’ அமைக்க- சோதனை ! சோதனை நடத்துக, அங்கே! அவசியமாக ! ஏன், அவசரமாகவுங்கூட!
சோதனை! வாழ்விலே சோதனை ! வெற்றிக்குச் சோதனை! வீரரே மருண்டிட வேண்டாம்-மயங்கவும் வேண்டாம்! திராவிடம் வெல்க !



