
முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி
பெற்ற பிள்ளையை விற்ற தாய்
மணப்பந்தலில் மந்திரமோதிய வரதாச்சாரியார் “சந்தான விருத்தி” வாழ்த்துக்கூறத் தவறவில்லை. நெருப்பில் நெய்யை மொண்டுமொண்டு ஊற்றிக்கொண்டு ‘புத்திர சந்தானம் பிராப்தி’ என்பதைச் சமஸ்கிருதத்தில்தான் சொன்னார். மறந்தும் தமிழில் சொல்லிவிடவில்லை. ஆசீர்வாதம் பலந் தான். ஆனால் ஜெமீன்தார் வீட்டில் சந்தானத்தைத்தான் காணவில்லை. வருடங்கள் ஒன்றா? இரண்டா?… ஒன்பது வருடங்கள்!
சீமாட்டி சண்பகவல்லியின் கணவன் சேத் பவனத்து ஜெமீன்தார். அவருக்கு இவள் சிரிக்கும் செண்பகம். இவளுக்கு அவர் புதையல். வசந்தமும் தென்றலும் வாழ ஒப்பந்தம் செய்து கொண்டு பூச்சோலையில் புகுந்ததுபோல அவர்கள் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டனர். சோலை யில் சூறாவளி வீசும் என்பதை அவர்கள் நினைக்கவே இல்லை. செண்பகவல்லி அழகி என்பதற்காக
மட்டுமல்ல……..அவள் அதிர்ஷ்டக்காரி, அழியா மாங்கல்யம் உடையவள் என்றும் ஜாதகம் பார்த்த வரதாச்சாரியார் கூறவே திருமணம் வெகு விரைவாய் நடந்தது.
“என்ன ஜெமீன் தார்வாள்? உங்களுக்கு என்ன குறைச்சல். எல்லாம் நிறைய இருக்கு. ஒரு புத்ர பாக்யம் மட்டும் பகவான் அனுக்ரகம் பண்ணிட்டா?……. வரதாச்சாரியார் ஜெமீன்தாரைப் பார்க்கும் போதெல்லாம் பாடும் பல்லவி இது!”
“குழலினிது யாழ் இனிது என்பார் தம்மக்கள் மழலை மொழி கேளாதார்”
சேத்பவனத்துச் சிவன் கோயில் ஸ்தல வரலாறு ‘சிருஷ்டி’த்த செல்லையா பண்டிதர் ஜெமீன் தாரின் பண உதவியை மறக்கவில்லை என்பதற்காக அவரைக் காணும்போது ஒப்புவிக்கும் திருக்குறளிது
“காளியம்மன் கோயில் கரகம்…காப்புக் கட்டி யாச்சு உதவணும்! அம்மாளுக்குச் செஞ்சாதான்….. குழந்தை பிறக்கும். வம்சம் விருத்திக்கு வரும்”
உற்சவ யாசகக்காரன் ஜெமீன்தாரிடம் வசூல் நோட்டீசை நீட்டும்போது…. மறைமுகமாகக் கூறும் பயமுறுத்தல் இது!
“சாமி! ஏழைக்கு உதவுங்க. உங்க குழந்தை குட்டியெல்லாம் க்ஷேமமாயிருக்கும்”
பிச்சைக்காரனின் வாழ்த்து வீட்டு வாயிலில்! ‘குருட்டுப் பயல்’ என்று ஜெமீன்தார் முணுமுணுக்க இது ஒரு வாய்ப்பு.
“உனக்குக் கிடைச்ச இடம் பொன்னான இடம் தங்கம் மாதிரி மாப்பிள்ளை. எல்லாம் இருந்தும் காலாகாலத்திலே, ஒரு குஞ்சு குளுவானைக் கொடுக்க மாட்டேங்கிறானே பாழாப்போற கடவுளே!’
செண்பகவல்லியின் தாயார் கடவுளை அர்ச்சித்தாள் இப்படி.
“ஒன்பது வருஷமாச்சு ஒன்னையுங் காணுமே செண்பு”
தோழியின் கிண்டல் இவ்விதமாக!
“நம் பெயர் சொல்ல ஒரு குழந்தையை ஆண்டவன் அருளமாட்டானா?”
“வம்சம் நம்மோடு தீர்ந்தது! நானும் என்னென்னமோ தர்மம் செய்துட்டேன் உம்; கடவுள் நினைப்பு எப்படியோ?” ஜெமீன்தாரும் செண்பக வல்லியும் உதிர்த்த சோகத் தொகுப்பு.
கன்யாகுமரியில் கடலாடி காசி விஸ்வேசரைப் பணிந்து, காவி கட்டிய ஆசாமிகளின் காலில் விழுந்து,பிள்ளைவரம் கேட்டுப் பார்த்தாகி விட்டது. வரந்தேடி அலுத்த பிறகு வள்ளல் என்ற பட்டந்தான்மிச்சம். ஜெமீன்தாருக்கு வயது ஏற ஏற வருத்தமும் ஏறிக்கொண்டே போயிற்று.
அரிய பெரிய ஜெமீன், அழகான பங்களாக்கள் அருமையான மோட்டார், அடிமைக்காரர்.
“இந்த அந்தஸ்துகளை அனுபவிக்கத் தனக்கென்று ஒரு குழந்தை இல்லையே”- இதை நினைப்பார். அடிக்கடி என்று சொல்ல முடியாது- அன் றாடம் அந்தப்புரத்தில் இந்த ஏக்கம் எதிரொலித்தது.
ஒருநாள் வரதாச்சாரியார்-ஜெமீன்தார் சந்திப்பு! அதன் விளைவு?
அலங்காரமான பந்தல்கள்…. எங்கும் அக்கினி குண்டங்கள்… அவற்றைச் சுற்றி அந்தணர்கள் நெருப்பில் நெய்க் குடங்கள்…. ‘நமகா’ மந்திரத்தின் எதிரொலிகள்….
ஒரே பக்தி வெள்ளம்.
முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கந்தர்வர் கின்னரர், கிம்புருடர் etc etc” புரோகிதர் நாவில் நர்த்தனமாட! பீதாம் பரம், பட்டுச்சேலை, பசுமாடு இவைகளைச் சீமாட்டி வழங்க, பாரியாள் சமேதராய் பிராமணோத்த மர்கள் வாங்கிச் சென்றனர். காட்சி ரம்மியந்தான். தானம் பலன்தான். செலவு அதிகம் தான், ஆனால் புத்திர காமேஷ்டியாகத்தின் பலனும் ‘பூஜிய’மாகி விடவேண்டுமா? ஜெமீன்தார் சோகத்தில் மிதந்தார்.
ஒருநாள் மாரியம்மன் கோயில் பூசாரி மருத முத்து–ஜெமீன்தார் பேட்டி நடந்தது. அதன் விளைவு.. குலதெய்வமான மகமாயிக்குப் பொன் குத்துவிளக்கும்…. புதுமாதிரியான வைர நகைகளும் உபயம் செய்தார்.
ஜெமீன்தாருக்கு ஆண்டவன் சக்தியிலும் அவ நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது.
“உண்டு இல்லை…. என்று பார்த்து விடுவது ஜெமீன்தார்வாள். ஆண்டவன் செயல் அலாதியா இருக்கட்டும்னா அதுக்காக நாம் சும்மா இருந்தா காரியம் நடக்குமா?”
“என்னய்யா செய்ய?”
“எனக்கு ஒன்னு பட்றது”
“என்ன படுகிறது?”
“தசரதன் புத்திர காமேஷ்டி யாகத்திலே என்ன நடந்தது தெரியுமோன்னோ?”
“என்ன நடப்பது… தசரதன் பத்தினிகள் யாரோ ரிஷிகளிடம்…….
“சே….சே….அந்த ராமாயணம் இல்லேன்னா !- “வால்மீகி ராமாயணத்திலே அப்படித்தானே இருக்கிறதாம்”
“வால்மீகியாவது நம்ப தமிழாள் கம்பர் பாடிய ராமாயணப்படி பாருங்கோன்னா!”
“அதை.. மனுஷன் படிப்பானா அய்யா!” ‘ஏன்னா?”
“அந்தத் தமிழ் நமக்குப் புரியாது”
”நான் சொல்றேன் கேளுங்கோ! அக்கினியிலே தேவர்க்கள் கிளம்பி… அவிர்ப்பாகத்தை தசரதனிடம் கொடுக்க அவன் அதை மனைவிகளி டம் கொடுக்க… அவர்கள் வயிற்றில் கரு உற்பத்தி யாயிற்று.”
“அவிர்ப்பாகமா?… நம்ப புத்திரகாமேஷ்டி யாகத்திலே அப்படி ஒன்றும் நடக்கவில்லையே!’
“அப்படிக் கேளுங்கோ. அவிர்ப்பாகத்து ரகசியம் யாருக்குந் தெரியாது. ஆண்டவன் தயவில்லாமலே அதைத் தயாரிக்க ஓர் அருமையான முறை இருக்கு”
“என்ன சாமி சொல்கிறீர்”
“அவிர்ப்பாகம் செய்யும் முறை என்னிடம் அகப்பட்டுவிட்டதுன்னேன்:”
“அப்படியா? ஆச்சரியம்!”
“ஆச்சரியந்தான். காரியம் வெற்றி! கைமேல் பலன்”
“உண்மையாகவா?”
“அவிர்ப்பாகத்தை நானே தயாரிக்கத் துணிந்துவிட்டேன்”
“நீரா”
“நீராவது நெருப்பாவது! பாருமே என் திறமையை! … ஜெமீன்தார்வாள்!”
“ஜெமீன்தார்வாள்! அவிர்ப்பாகம் என்பது ஓர் அருமையான தெய்விக லேகியம். அருள் நிறைந்த திவ்யப் பிரசாதம். ஆண்டவன் கருணாகடாக்ஷம் பரிபூரணமாக அதில் கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகிவிடுகிறது”.
“அதை ஏன் இதுவரை செய்யவில்லை?”
“காலம் வரவேண்டாமா?… தசரதனுக்குக் காலம் வந்துதானே ஸ்ரீராமர் கருவில் வந்தார். ஜெமீன் தார்வாள் ! நம்ப நல்ல காலம் பாருங்கோ…. நேற்று நம்ப வீட்டுப் பரணை எல்லாம் சுத்தப் படுத்தினேன். அதிலே ஒரு பழைய சுவடி அகப் பட்டதுன்னா……. அதிலே இருக்கு அவிர்ப்பாக ரகசியம்”
“செய்யும் முறை?’
“சாமான்யமில்லேன்னா, ரொம்ப சிரமம்.” “பணந்தானே செலவாகும்!”
“பணங்கிடக்கட்டும்; மனுஷன் படவேண்டிய கஷ்டம் அவ்வளவு இருக்கும். மூளைக்கு வேலை. மூலிகை தேடற வேலை ….. எல்லாம் தேவ மூலிகை கள்!”
“கஷ்டத்துக்குத் தக்க சம்மானம் கொடுத்தால் போகிறது”
“நல்லாச் சொன்னேள். எனக்கு ஒரு பைசா வேண்டாம். உங்களுக்கு ஒரு குழந்தை அவதரிச்சா …. எனக்குக் கோடி பவுன் கிடைச்ச மாதிரி….!” மூலிகைகள் மட்டும் போதுமாக்கும்” “போதாது….போதாது….பத்தரை மாற்றுத் தங்கம் பாதி…. பச்சிலைச் சாறு பாதி. பத்துநாள் சூரியப் பிரகாசத்தில் வைத்துப் பக்குவப்படுத்த வேண்டும்”
“பணம்… எவ்வளவு ஆனாலும் சரி…. எனக்கு வேண்டியது….”
“எல்லாம்… ஜெயமா முடியும் பாருங்கோ பலன் கைமேல்”
ஜெமீன்தாரிடம் வரதாச்சாரியார் அவிர்ப்பாகம் தயாரிப்பதற்காக இரண்டாயிர ரூபாய் பெற்றுக்கொண்டு புறப்பட்டார். “ஆனால்… ரகசியம்…. உங்க மனைவிக்குக் கூடத் தெரியக்கூடாது. விஷயம் வெளியானால்…. மருந்தின் சக்தி போய்விடும்” என்ற எச்சரிக்கையையும் ஜெமீன்தார் மனத்தில் கோத்து விட்டுப் போனார்.
ஜெமீன்தார் முகத்தில் வெற்றி ரேகைகள்… சிரிப்பு வெடித்துச் சிதறியது.
“குழந்தைக்கு இந்தச் சட்டையை மாட்டு.ஏய்! டிரைவர்- தம்பியைக் காரில் வைத்து ஊர் சுற்றி வாடா. ஓய் பத்தரே! குழந்தைக்கு இந்தச் சங்கிலி நன்றாயில்லை. கிருஷ்ணபகவான் போட்டிருந்த மாதிரி ஒரு வைரமாலை செய்து கொடு. அப்படியே இருக்கணும். அசல்மாதிரி. ஆமாம், சொல்லிவிட் டேன். செண்பகம் சிரிக்கிறான் பார் குழந்தை. என் கண்ணுப்பயலே ஒரு கட்டி முத்தம் கொடு. வெள்ளியிலே உனக்கு ஒரு மோட்டார். தங்கத்திலே குதிரை. வைரத்திலே சின்ன சைக்கிள் போதுமா? போதாதா? சரி…… ரத்தினத்தில்
ஒரு தொட்டில். என் கண்ணுக்குட்டி……. சிரிக்காதே… செண்பகம் நம் அய்யரின் அவிர்ப்பாகத்தின் மகிமையே மகிமை…”
“என்ன புலம்புகிறீர்கள்” என்று அலறியடித் துக்கொண்டு எழுந்தாள் பக்கத்தில் படுத்திருந்த செண்பகவல்லி.
“ஒன்றுமில்லை” என்று கண்ணைக் கசக்கினார், கனவில் சொக்கியிருந்த ஜெமீன்தார். அதே இரவு மாரியம்மன் கோயில் பக்கம் பயங்கரமான இருள், பணக்காரன் நெஞ்சம்போல !-வானம் கருப்பு மழை பொழிவது போன்ற காட்சி. இடையிடையே மின்னலின் வைர வெட்டுக்கள் சில தீக்கோடுகள் கிழிக்கின்றன. அந்தத் திடீர் வெளிச்சத்தில்…. ஓர் உருவம் அசைவது தெரிகிறது. கைகால்கள் இரண்டிரண்டு தான் ! அதனால் அது மாரியின் உலவல் அல்ல. உருவம் கோயில் கதவண்டைவந்து நிற்கிறது. கதவு திறக்கப்படுகிறது. உருவம் கர்ப்பக் கிரகத்தில் நுழைகிறது. ஜெமீன்தார் செய்துவைத்த பொன் விளக்கின் ஒளியில் – அந்த உருவம், பூசாரி மருத முத்துதான் என்று கண்டுபிடிக்க முடிகிறது.
விளக்கு அணைகிறது.
மறுநாள் காலை ஜெமீன்தார் எழுகிறார். மாரியம்மன் கோயிலில் திருட்டு என்ற செய்தி அவர் காதில் விழுகிறது. மூவாயிர ரூபாய் பெறுமான சொத்து களவு; அன்று மாலை சேத்பவனத்தில் சிகப்புத் தொப்பிக்காரர் படை குவிகிறது. மாரியம்மன் வாக்கு மூலம் கொடுக்க வரவில்லை. அது தெரிந்ததுதானே. பூசாரி இந்தக் காரியத்தில் துணிவாகப் புகுந்தார்.
“கள்ளனைக் கண்டுபிடிக்காமல் ஜெமீன்தார் விடமாட்டார்… முக்கியமான ஓர் ஆளிடம் சந்தேகமாய்… பூசாரியைக்கூட ஜெமீன்தார் சந்தேகப்படுகிறாராம்”-இது ஊர் வதந்தி.
“பூசாரி ! ஜெமீன் தாரண்டே சொல்லிவிட்டேன் நீதான் வழி சொல்லணும்”
“என்ன சாமி.. பெரிய காரியம். என்கிட்டே ஒரு மருந்து இருக்கு…. அதைச் சாப்பிட்டால் மலடி கூடப் பிள்ளை பெறுவாள். ஆனால் ஆம்பளைதான் அதைச் சாப்பிடணும்”
“பேஷா ! …… ஜெமீன் தாரையே …… சாப்பிடச் சால்றேன். மருதமுத்தூ.. கண்டிப்பா பிள்ளை பிறக்குமா?”
“ஏழை மருந்தாச்சேன்னு… எளக்காரமா நினைக்காதீங்க….”
“இந்தா இருபது ரூபாய்…வச்சுக்க!… மருந்து பலன் அளிச்சா…ஆயிரம் ஆயிரமா நான் வாங்கித் தரேன்”
“மருந்து பலன் அளிச்சா…நான் பொழைச்ச மாதிரி…என்னமோ மகமாயி இருக்கா”
“ஆனா…மருதமுத்து… மருந்து நீ கொடுத்ததா…. ஜெமீன் தாருகிட்டே சொல்லி விடாதே”
“நான்….யாருகிட்டேயும் சொல்ற விஷயமில் லீங்க இது! நீங்களே…. பேரு வாங்குங்க”
வரதாச்சாரியார் பூசாரி வீட்டைவிட்டுப் போன பிறகு … மருதமுத்து ஒரு பெருமூச்சோடு உட்கார்ந்து ஒரு தடவை சிரித்தான். அந்தச் சிரிப்புத்தான் சேத்பவனத்தையே அழவைத்த அகோரச் சிரிப்பு.
வரதாச்சாரியார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பாலில் கலந்து ரகசியமாகச் சாப்பிட்டுவிட்டு வாசனை வராமல் வாயைக் கழுவி, தாம்பூலந் தரித்து, வரதாச்சாரி சொன்னபடி அந்தப்புரத்தை நோக்கி கடந்தார் ஜெமீன்தார்.
அன்றிரவு ஜெமீன் தாருக்கு ஒரே ஆனந்தம். செண்பகம் என்றுமில்லாத இன்பமொழிகளை யெல்லாம் கேட்டு ரசித்தாள். பசும்பாலை அவளிடம் தீட்டுவதும், அவள் அதரங்களில் பால் கிண்ணம் படுவதற்குள் அதைத் திரும்ப எடுத்து அவளை ஏமாற்றுவதும் அவளை அப்படியே தூக்கி மஞ்சத்தில் எறிவதும் இப்படி ஒரே வேடிக்கை. இரவு மணி பன்னிரெண்டு அடித்தது.
“செண்பகம்!… நமக்குப் பிள்ளை பிறந்தால் என்ன பெயரிடுவது?”
சீமாட்டி சிரித்தாள்.
“என்ன சிரிக்கிறாய்?” மீண்டும் அவள் சிரித் தாள் “சிரிப்பு வந்தது சிரித்தேன்.” சீமாட்டியின் சிரிப்பு அடங்கவில்லை. ஜெமீன்தார் அவளை அணைத்துத் தூக்கிக்கொண்டார்.
“என்…. கற்கண்டே !… பால்க்கடலே !… பொற் கொடியே!…” அவர் வாய் குளறிற்று; இப்படி நவயுக வர்ணனை உதிர்த்தார். செண்பகத்தைத் தூக்கிக்கொண்டு ஓடினார்… அவ்வளவுதான். இருவரும் தரையில் சாய்ந்தனர். சீமாட்டி பரபரப்பாக எழுந்தாள். ஜெமீன்தார் முகத்தைச் சிரித் துக்கொண்டே தூக்கினாள். அவர் வாய் இரத்த அருவியாகக் காட்சி அளித்தது.
வரதாச்சாரி தயாரிப்பதாகச் சொல்லி.. மருத முத்துவிடம் வாங்கிக்கொடுத்த “பிள்ளை வரமருந்து” தன் வேலையை முடித்துக்கொண்டது. குண்டடி பட்ட சிங்கம்போல… ஜெமீன்தார் ஒருமுறை வாய் திறந்தார்…பிறகு திறக்கவே யில்லை.
விடிந்தது.
சேத்பவனம் அழுதது. பூசாரி மருதமுத்து சிரித்தான். ஜெமீன்தார் திடீரென இறந்த காரணம் யாருக்குந் தெரியாது. திருட்டு வழக்கில்தான் மாட்டிக்கொள்ளாமலிருக்க மருதமுத்து செய்து தந்த மருந்தின் வேலை யென்பதும் தெரியாது! வரதாச்சாரி தன் பெண்ணுக்குக் கொடுத்த வரதக்ஷணை ரூபாய் இரண்டாயிரமும் அவிர்ப்பாகம் செய்து தருவதாக ஜெமீன்தாரிடம் வாங்கிய பணம் என்மதும் மருதமுத்துக்குத் தெரியாது.
பூசுரருக்குப் புன் சிரிப்பு…! பூசாரிக்குப் பெருஞ் சிரிப்பு…!
ஜெமீன்தாரின் உடலைத் தின்று சுடலையில் கிளம்பும் புகைப்படலம்….காற்றோடு கலந்து ‘பிள்ளையோ பிள்ளை’ எனக் கீழ்ஸ்தாயில் ஒலித்தது போலிருந்தது.
2
வரதாச்சாரி தந்த வரப்பிரசாத மகிமையால் சேத்பவனத்துச் சீமாட்டியின் சிங்கார வாழ்வு அஸ்தமித்தது. ஆனால் இருட்டிலும் நிலவு உண்டே அதுதான் குழந்தை கோகிலா.
பிரேமா கோகிலாவை விற்பனை செய்ய வரும் போது நடந்தது இது…
பிள்ளையில்லாக் குறையால் வாடிய சேத்பவனத்து ஜெமீன்தார்- பிள்ளையைக் காப்பாற்றும் வகையறியாது வதங்கிய பிரேமா- இவர்கள் படைப்பின் அவலட்சணத்திற்கு அடையாளங்கள்.
பிரேமா… ‘பிள்ளையோ பிள்ளை’ என்று கூவினாள்- மார்க்கெட்டில் ‘கீரையோ கீரை’ என்று கூவுகிற மெட்டில் பிரேமா மனித மார்க்கெட் உண்டாக்கினாள். ஆனால் அவள் குழந்தையை விற்பதற்காக அங்கு வரவில்லை. சீமாட்டியின் பங்களாவில் ஒரு வேலைக்காரி பதவியில் அமர எண்ணினாள். குழந்தையை வளர்க்க அவளுக்கு அந்த வழி ஒன்றுதான் இருந்தது. ஆனால் சீமாட்டியின் கருணை எல்லை மீறி விட்டது. அவள் குழந்தை தனக்கே வேண்டுமென்று கேட்டாள். ‘அவள் குழந்தையிடம் காட்டிய ஆசை பிரேமாவின் வாழ்வைக் கத்தரித்துக் கொள்ளத் தூண்டிற்று.
உண்மையிலேயே சீமாட்டி யின் நினைப்பு அதுவல்ல. எண்ணியபடியே எதுவும் நடக்காது என்பர் வேதாந்த விற்பன்னர். நடப்ப தெல்லாம் ஆண்டவன் செயல் என்றாள் பிரேமா. பிரேமாவின் சாரமில்லா ஜீவியம் அந்தப் பாவியின் செயல்தானா என்று கேட்கத்தான் தூண்டும். பிரேமா மட்டும் கடைசியில் ஆண்டவன் தலையில் பாரத்தைப் போடவில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை அவளாகத் தேடிக்கொண்டது என்பதை உணர்ந்தாள்; உணர்ந்தபின் தான் சேத்ப வனத்தை நாடிவந்தாள்.
சீமாட்டி பிரேமாவை வேலைக்காரியாக ஏற்றுக் கொண்டிருந்தால் குழந்தை கோகிலாவுக்காகவாவது பிரேமா உயிரைப் பிடித்துக்கொண்டிருப் பாள். தன்னுடைய வேலையைச் சீமாட்டி வலுவில் ஏற்றுக்கொண்டபோது-அவளுக்கு ஏன் வாழும் ஆசை !
அதன் காரணமாகத்தான் சீமாட்டி அளித்த 50 வெண்பொற்காசுகளைப் பிரேமா பெற்றுக்கொள்ளவில்லை. பிரேமா சீமாட்டியிடம் விடை பெற்றுக் கொள்ளும்பொழுது மட்டும் கோகிலாவை மூன்று முறை பார்த்தாள். அதற்குமேல் அவள் பார்க்க விரும்பவில்லை. அவள் கண்களில் நீர் இல்லை. தொண்டைக்குழி மாத்திரம் விம்மிற்று. எரிமலை தனது கடைசி நெருப்புக் குழம்பை வாரி இறைக்கும் போதுகூட அவ்வளவு ஜுவாலை இருக்காது
பிரேமாவின் பெரு மூச்சிலே இருந்ததுபோல. உலகத்தைக் கவிழ்க்கக் கங்கணங் கட்டிக்கொண்ட ஒரு பூகம்பத்தைப்போல அவளது இதயங் குலுங்கிற்று.
பிரேமாவுக்கும் குழந்தை கோகிலாவுக்கும் நடுவிலே ஒரு மெல்லிய மின்சாரக் கம்பி ஓடிற்று. பிரேமா சில விநாடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
குழந்தை கோகிலா பேசுவது போலிருந்தது. ஏதோ கதை சொல்வதுபோல் தெரிந்தது. பிரேமா அந்தக் கதையைக் கேட்டாள். அவள் மட்டும்தான் அந்தக் கதையைக் கேட்க முடியும். மூன்று மாதக் குழந்தை சொன்ன வரலாற்றிலே சற்று லயித்தாள்! கோகிலாவின் கொவ்வை இதழ்கள் அசைந்தன கதை ஆரம்பமாயிற்று.
பிரேமாவுக்கு வயது 15! நல்ல அழகி என்று ஊரார் சொல்லுவார்கள். அவளும் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் சிறிது கர்வமடைவது வழக்கம்.
“பிரேமா! ஆமாம் பிரேமாதான்! மிருதுவான பேச்சுக் காரியே ஒழியப் பாகுமொழி பேசி, பழி வாங்கும் பத்திரகாளியல்ல! பிரேமையைக் கீதமாக மாற்றிப் பேசுகிறாள். இன்பத்தைப் பூசியிருக்கும் இரண்டு இதழ்கள் ! ஒளியை மொண்டு நிற்கும் கண்கள் ! வாழ்வில் ஜீவநாடியே பிரேமா என்ற வார்த்தைதான்- எண்ணங்களை அசைக்கும் தென்றல்
காற்றுத்தான் பிரேமா என்ற பெயர்! கன்னங்களில் மின்னும் ‘கவின்’ இதயத்தைக் குத்தும் ஈட்டியாக ஏன் அமையவேண்டும்? “பூங்காற்றே! பொற்கொடியே!” என்றெல்லாம் கண்ணபிரான் வருணித்தான். கண்ணபிரான் ஓர் எழுத்தாளன். வைதிக வரதாச்சாரியாரின் மகன்! வரதாச்சாரி மாடிவீட்டில் வாழும் மகிபர்! அதோடு ஞானாசிரியர்? அவரது மகன் கண்ணபிரான் எழுத்தாளர் பட்டம் பெற்றதில் அதிசயமென்ன இருக்கிறது?
பிரேமாவைப்பற்றி எழுத்தாளர் கண்ணபிரான் தீட்டிய வர்ணனை இரவல் சரக்கு! யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது! இன்றைய பல எழுத்தாளர்கள் கைக்கொள்ளும் முறையைத்தான் கண்ணபிரானும் அனுஷ்டித்தான். ஆனால் அவனது திருட்டுத்தொழில் பிறப்பாலும் பணத்தாலும் செல்வாக்காலும் மறைக்கப்பட்டிருந்த காலம் அது!
பிரேமாவுக்குக் கண்ணபிரான்மேல் அளவு கடந்த மோகம், கண்ணபிரானும் பிரேமாவும் காதலராக வாழத் திட்டம் தயாரித்தனர்.
பிரேமா ஏழைதான்! ஆனால் வரதாச்சாரியாரின் மருமகளாகப் போகிறோமே என்ற துணிவு மட்டும் உண்டு. அவள் தன் ஓட்டை வீட்டில் உட் கார்ந்திருக்கும்பொழுது கண்ணபிரானுடன் மேல் மாடியில் உலாவுவதாக நினைத்துக் கொள்வாள். பிரேமா ஒரு குடியானவப் பெண்-கண்ணபிரான் பழுத்த வைதிகரின் பிள்ளை! இருவருக்கும் நடுவிலே ஜாதி ! ‘சாதிச் சனியன் ‘ என்ற கட்டுரை எழுதியிருந்தான் கண்ணபிரான். அவன் பிரேமாவை ஏமாற்றமாட்டான் என்பதற்கு அந்தக் கட்டுரைச் சாட்சி. சாதித் திமிருக்கு இடங்கொடுக்க மாட்டேன் என்று கண்ணபிரான் எழுதிய கடிதங்கள் பல! “பிராமணன் என்கிற உயர்ஜாதி கர்வம் என்னி டமில்லை பிரேமா! நாம் இருவரும் காதல் என்ற ஜோதியால் புனிதமாக்கப்பட்டுவிட்டோம். காதலுக்காக உயிர் கொடுத்தத் தியாகச் சொரூபிகளின் அடிச்சுவடுகளே நமது பூஜைக்குரியன.
விதி நம் மைப் பிணைத்துவிட்டது. அது நம்மைப் பிரிக்க முடியாது. பிரிக்கவும் துணியாது” என்றெல்லாம் கூறினான். பிரேமா காதல் பாதையில் கால்வைத்து விட்டாள். கண்ணபிரான் விஷயத்தில் வரதாச்சாரி தலையிடவில்லை. பிரேமாவின் தாயார் ஒரு தள்ளாத கிழவியானலும் பிரேமாவைப் பலமுறை எச்சரித்தாள்.
கண்ணபிரான் அய்யங்கார் – அவனுக்கும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவனை நம்பிக் கெட்டுப் போகாதே பிரேமா என்று அடிக்கடி சொல்லிவந்தாள்.
“எல்லாம் விதிப்படி நடந்துதான் தீரும். தயவுசெய்து என்னைத் தடுக்கவேண்டாம் ” எனக் கேட்டுக் கொண்டாள் பிரேமா. கனியைக் கசக்கும் என்று சொல்வது போலவும் – அமிர்தத்தை விஷம் என்று கூறுவது போலவும் இருந்தது கிழவியின் பேச்சு பிரேமாவுக்கு.
பிரேமாவின் எண்ணக் கோட்டைகள் உச்சியை முட்டுமளவு உயர்ந்தன. அடிக்குடி சந்திப்புகள், கொஞ்சு மொழிகள், கோலாகலங்கள் இவைகளுக்கு குறைவேயில்லை.
“பிரேமா! உன்னை நான் மனப்பூர்வமாக நம்பியிருக்கிறேன். ஆனால் இலவு காத்தக் கிளியாக ஆகிவிடுவேனோ என்னவோ?”
“ஏன் கண்ணா! அவ்வளவு பயம்? எனக்கு முன் முந்திக்கொள்ளப் பார்க்கிறீர்களா?”
‘இல்லை பிரேமா எதிர்த்த வீட்டுக் கமலாவின் விஷயத்திலிருந்து பெண்களிடம் பழகுவதிலேயே எனக்குப் பெரிய பயம் ஏற்பட்டுவிட்டது”
“எதிர்த்த வீட்டுக் கமலாவைப் பற்றியக் கதை ருசிகரமானதுதான் கமலாவையே மணப்பதாகச் சாந்தாராம் உறுதி செய்துகொண்டிருந்தான்.அவளும் அப்படித்தான் சொன்னாள். ஆனால் அவள் மாலையிட்டது மனோகரனுக்கு ” இதுதான் கதையின் முக்கியக் கட்டம். இதைத்தான் கண்ண பிரான் பிரேமாவிடம் இடித்துக் காட்டினான்.
பிரேமா கண்ணபிரானின் ஆலிங்கனத்தி லேயே மெய் மறந்து விடுவாள். அதையே சொர்க்க மென்று நினைப்பாள். காதலின் வலிவுதான் என்னே ! கேவலம் ஒரு குடியானவன் வீட்டுப் பெண்ணை உயர்குடிப் பிறந்த வரதாச்சாரியாரின் மகன் மணந்துகொள்வதாகச் சத்தியம் செய்வதென்றால் காதல் தெய்விகம் பொருந்தியது என்று சொல்லக்கூடாது ?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்வாள்.
காதல் வளர்ந்தது; கொழுந்துவிட்டெரிந்தது; அரும்பின் முனைப்பிடிப்புகள் விலகின ; மலர் மணம் சிந்திற்று; மகரந்தம் உதிர்ந்தன. பொன் பொடிகள் தூவிய புத்தம் புதிய இதழ்கள் விரிந்தன.
தள்ளாத வயதில் காலத்தோடு போராடிக் கொண்டிருந்த தாயின் போராட்டத்திற்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. அவள் காலம் முடிவடைந்தது. “புத்திசாலித்தனமாக நடந்துகொள் பிரேமா !” என்று மரணத் தறுவாயிலும் அவள் கூற மறக்க வில்லை. ‘விதிப்படி நடக்கும் அம்மா’ என்று பிரேமாவும் பதில் சொல்லத் தயங்க வில்லை.
பிரேமாவின் வாழ்வில் தனிமையென்பது ஒரு கசப்பான மருந்தாயிற்று. எத்தனை நாளைக்குத் தான் கள்ளக் காதலர்களாக இருக்கமுடியும் ? அவள் திருமணத்திற்குத் திட்டம் போட்டாள். கண்ணபிரானிடம் ஒருநாள் அதைக் கூறியும் விட்டாள்.
“திருமணம் செய்துகொண்டால்தானா நாம் வாழ முடியும்? இப்பொழுது நம்மிடமிருந்து இன்பம் விலகியா நிற்கிறது!” என்று கண்ணபிரான் பதில் சொன்னான்.
பிரேமாவின் முகம் மாறிற்று! ஆவலின் அஸ்திவாரம் ஆட்டம் கொடுத்தது போல் தெரிந்தது. நிலைமையைச் சமாளித்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் அவளது கன்னத்தை ஒருசிறு தட்டுத் தட்டினான் கண்ணபிரான். கொதிக்கும் நெருப்பில் குளிர் நீர் ஊற்றியது போல் இருந்தது அவளுக்கு.
”எழுத்தாளரே! காதலில் ஜீவனைக் காணும் கவிஞரே! பிரேமா என்ற சொல்லில் பிரணவ மந்திரம் பொதிந்து கிடப்பதாக வர்ணித்த புலவரே! மலை யுச்சியிலிருந்து மளாரெனக் குதித்து விட்டீரே!” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் பிரேமா.
உண்மையாகவே கிண்டல் உள்ளக் கிளர்ச்சியாக மாறிவிட்டது.
பிரேமாவுக்கும் கண்ணபிரானுக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முன் குழந்தை பிறந்த கட்டம் வந்தது. பிரேமா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் பிரேமாவுக்கு இன்னும் திரு மணமாகவில்லை.
பிரேமாவுக்கும் கண்ணபிரானுக்கும் திருமண மாகவில்லையே தவிர-கண்ணபிரானுக்கும் மீனாட்சிக்கும் விவாக சுபமுகூர்த்தம் முடிந்துவிட்டது.
தேசீய எழுத்தாளர் ஸ்ரீமான் கண்ணபிரான் அவர்களுக்கும் மயிலை பெரியபண்ணை ரங்கநாத அய்யங்கார் மகள் மீனாட்சியம்மாளுக்கும் மணமான செய்தி போட்டோக்களோடு வெளிவந்தது.
இந்த முகூர்த்தம் முடிவதற்குள் பிரேமா தனது காதலனுக்கு ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதினாள். வரதாச்சாரியார் மகன் வரதக்ஷணைப் பிரச்சினையில் நாட்டம் செலுத்தினான். மீனாட்சியின் புகைப்படத்தில் மனத்தைப் பறிகொடுத்தான். அவளைப்பற்றிச் சொல்லோவியம் தீட்ட அயல்நாட்டுக் கவிதைகளில் ஏதாவது வர்ணனை கிடைக்குமோ என்று தேடிக்கொண்டிருந்தான். பிரேமாவின் கடிதங்கள் – அவளது
கதறல்கள் கேட்பாரற்றுப் போயின. பிறந்த சிசுவைத் தூக் கிக்கொண்டு பிரேமா வெளிக் கிளம்பினாள். அப் பொழுதுதான் அவளது மாஜி மாமனார் வரதாச்சாரி விதி விளையாடுகிறது என்று கூறினார். தேச பக்தர் தெய்வசிகாமணி சுதந்திரமில்லாக் கோளாறு என்று
சொன்னார். பொதுவுடைமைப் பொம்மு ராயர் பொருளாதார ஸ்தம்பனம் எனப் புகன்றார்.
பிரேமாவுக்கு இரங்குபவர் யாருமில்லை. “திமிர் கொண்ட சிறுக்கி அய்யங்கார் மகனைக் கெடுத்தது மில்லாமல் குழந்தையை வேறு தூக்கிக்கொண்டு யார் குடி கெடுக்கவோ அலைகிறாள்” என்று ஊர் உளறிற்று.
கண்ணபிரான் செய்த விபசாரம் வெளிவர வில்லை. ஆண்மையால் அது மறைக்கப்பட்டு விட்டது. அதற்கு ஜாதித்திரையும் விடப்பட்டது. எதிர்த்த வீட்டுக் கமலா சாந்தாராமை ஏமாற்றி வேறொருவனை மணந்தது விபசாரம் என்று கூறப் படவில்லை. காரணம் கமலா வீட்டுத்தயவு பலருக்கு வேண்டியிருந்தது.
பிரேமா ஒரு திக்கற்ற ஏழை! அவள் மட்டும் விபசாரியாக்கப்பட்டு விட்டாள். விபசாரத்திற்கு விளக்கந்தர அவள் கையிலே ஒரு குழந்தை. ஆனால் கழுத்திலே தாலி இல்லை.
கமலா சாந்தாராமின் ஆசைக்குரியவளாக, அணைப்புக்குரியவளாக இருந்தது தெரியாத்தனம்! பிரேமா கண்ணபிரானை நெஞ்சாரக் காதலித்தது மட்டும் விபசாரத்தனம்! கண்ணபிரான் பிரேமாவை ஏமாற்றியது ஜாதிப்பெருமை-சமூகப்பாதுகாப்பு. சாந்தாராம் கமலாவைக் காதலித்தது மட்டும் சண்டாளத்தனம் -இது ஊரார் தீர்மானம். ஏன்? உலகமே அப்படித்தானே. இங்கே நல்ல தீர்ப்பு ஏது?
மளிகைக் கடையில் சாமான் வாங்கும் சாதாரணப் பேர்வழி கொஞ்சம் உளுந்தை எடுத்துத் தன் கூடையில் போட்டுக் கொண்டால் அது திருட்டு. கூடைக்காரன் முக்கால் மணங்கை முழு மணங்காக அளந்தால் அது வியாபாரத் தந்திரம்!
சாதாரண மனிதன் பொய் சொன்னால் அது பஞ்சமா பாதகம். வக்கீல் சொன்னால் திறமை! குடிசையில் வாழும் குப்பன் குடித்துவிட்டு ஆடினால் அவனுக்குக் குடிகாரப்பட்டம். அதே காரியத்தை பெரிய மனிதர்கள் என்று பேசப்படுவோர் செய்தால் அது ‘எஞ்சாய்மெண்ட்’.
சாதாரண மனிதன் தன் மனைவியைப் பிறருக்குத்தானம் செய்தால் அது மானமற்ற காரியம்!’ அதே வேலையை இயற்பகை நாயனார் செய்தால் அது பக்திப்பிரவாகம்.
பாஞ்சாலியைப் பத்தினி என்று சொல்லும் உலகந்தானே இது. இந்த உலகத்திலே பிரேமாவுக்கு மட்டும் எங்கிருந்து நல்ல தீர்ப்பு வந்து குதிக்கும்?
கமலா காதலனை ஏமாற்றினாள். கண்ணபிரான் பிரேமாவை ஏமாற்றினான். இதில் நடு நிலைமைத் தீர்ப்புக் கூற இந்தப் பாழும் சமுதாயம் சம்மதிக்கவில்லை. குழந்தையை வளர்த்தாக வேண்டுமே? இந்தக் கவலை பிரேமாவைக் எப்பிக்கொண்டது.
குழந்தையின் கண்ணொளியில் பிரேமா கண்ணபிரானைக் காண்பாள்: கண்ணீர் பெருக்குவாள். ‘ஜாதித் திமிர்’ என்று முணுமுணுப்பாள். மாண்ட தாயாரின் உபதேசம் நினைவுக்கு வரும். விதி! விதி என்று பலமுறை கூறுவாள்.
எங்கேயோ ஒருஊர்க் கடைத்தெருவில் பிரேமா குழந்தையுடன் செல்கிறாள். கடைத்தெருவில் தொங்கிய விளம்பரம் அவள் கவனத்தை இழுத்தது. அதன் விளைவாக “நாகரிக நாடகக் கம்பெனியில்” சேர்ந்தாள். அவளுக்கு இயற்கையாக அமைந்த சங்கீத ஞானம் பக்கபலமாக இருந்தது.
உலகைப்பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளாத பிரேமா-விதியை நம்பி வாழ்ந்த பிரேமா அய்யர் குலத்தை அமரர் குலமாகக் கருதியிருந்த பிரேமா – வெளுத்ததெல்லாம் பாலென எண்ணி விடும் பிரேமா -தற்கால நாடக உலகில் விபசாரக் கலையை வளர்க்கும் விஷ ஊற்றுக்கள் இருப்பதை எப்படி அறிவாள்.
இரண்டு மாதங்கள் நகர்ந்தன. பிரேமாவின் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாயிற்று. வேஷம் போட்டுக்கொள்ளும் பகுதி… புகழ் பரவும் பகுதி -மாலைகள் விழும் பகுதி என் முறையில் வாழ்க்கை ஏடுகள் புரண்டன. நாடக விளம்பரங்களில் ‘பிரேமாபாயின்’ பெயர் ஸ்பெஷல் வர்ணங்களால் எழுதப்பட்டன.
“பிரேமா இன்று உன் நடிப்பு பலே ஜோர்” “ஆமாம் அப்படித்தான் சொன்னார்கள்.”
“நீ இன்னும் முற்போக்கடைய வேண்டுமென் பது என் ஆசை.”
“இல்லை என் குழந்தையைக் காப்பாற்றும் அளவில் என் வாழ்க்கை இருந்தால் போதும்,”
“குழந்தையைக் காப்பாற்றுவதை மட்டும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்வது எவ்வளவு முட்டாள் தனம் என்பது உனக்குத் தெரியவில் லையா?”
“வேறு நான் வாழ்வதற்கு இந்த உலகில் எந்த ஆதாரமும் இல்லை.”
“உன் விதவைத் துயரைத்தீர்த்துவிதவிதமான இன்பங்களை உன் முன் அடுக்கிவைக்கக் காத்துக் கொண்டிருப்பவனை முருங்கை மிலார் என்று நீ கருதுகிறாயா?”
“அப்படிக்கூறக் கருதவில்லை. நஞ்சை நாக்கில் தடவும் நயவஞ்சகனாகக் கருதுகிறேன்.”
“பிரமா இதோ பார் நான் இந்தக் கம்பெனியின் சொந்தக்காரன்.”
“சார்! தெரியும் தயவு செய்து என்னைத் தொடதீர்கள்.”
ஒரு நாள் இரவு பிரேமாவுக்கும் பிரேமாவுக்கும் உரிமையாளருக்கும் இந்த சச்சரவு!
கம்பெனி உரிமையாளர் வெற்றி பெறவில்லை யென்று பிரேமா நெஞ்சார ஒத்துக்கொள்ள மாட்டாள். நளாயினி நாடகத்திலே நல்ல பெயர் வாங்கிய அன்றுதான் இந்த நாடகமும் நடந்தது.
சொந்தக்காரரிலிருந்து ராஜபார்ட், காமிக் நடிகன், சீன் இழுப்பவன் வரையிலே பிரேமாவின் காற்று வீசும் பக்கத்தில் வாலைக் குழைத்து நின்றனர். பிரேமா விரும்பியிருந்தால் நாடகராணியாய் மாறியிருக்கலாம்.
சினிமா மோகினியாகத் தோன்றியிருக்கலாம், எத்தனையோ கண்ணபிரான்களைக் கடைக்கண்ணுக்கு இரையாக்கி இருக்கலாம். ஆனால் அவளது வாழ்வு ஒரே ஒரு தேவையின் மேல்தான் தொங்கிக்கொண்டிருந்தது. கோகிலா! ஆம் அவள் குழந்தை! அதற்காக அந்தப் பைத்தியம் உயிர் வாழ்ந்தாள். ஆனால் அவளைச் சுவைக்க ஒரு எறும்புப் பட்டாளம் அணி வகுக்க ஆரம்பித்தது.ஒரு நாள் திடீரெனக் கம்பெனியை விட்டு பிரேமா மறைந்து விட்டாள்.
எங்கெங்கோ சுற்றினாள் – என்னென்னமோ எண்ணினாள். பசி! பசி! இந்தக் கொடுமையை அவளாவது பொறுத்துக்கொள்ள முடியும், அந்தச் சிசு என்ன செய்யும்? குழந்தைக்குப்போது மான பால் அவளிடம் இருந்தால்தானே! குழந்தை வீர் வீர் என அலறும் அவளும் அதோடு சேர்ந்து கொள்வாள். குழந்தை தாயின் முகத்தைப் பார்க்கும். பிரேமா மகளின் முகத்தைப் பார்ப்பாள். இந்த இருவர் முகங்களையும் பார்க்க மமில்லை. “அந்தப்பாவி கண்ணபிரான்” என்று நினைக்கத் துவங்குவாள் தள்ளாத கிழத்தாய், நான் சொன்னதைக் கேட்டாயோ பிரேமா?” என்று புலம்புவதுபோல் இருக்கும். பிரபஞ்சம் தன்னை பார்த்து
அலட்சிமாகச் சிரிக்கிறது என்று எண்ணிக்கொள்வாள். விதி என்ற ஒரு பேய் எதிரே நின்று, கைகொட்டிச் சிரித்து என்னை நம்பி ஏமாந்தாயா என்று ஏளனம் செய்வது போல் தெரியும், கண்களை மூடித்திறப்பாள்! இரண்டு சிவசமுத்திர நீர்வீழ்ச்சிகள் அவள் கன்னங்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும். மறுபடியும் சிசுவை நோக்குவாள் உலர்ந்த உதடுகளை அசைத்த வண்ணம். அது தாயின் மேலாடையை நகர்த்தும். பின்னர் அவள் முகத்தைப் பார்க்கும். பிரேமாவின் முகத்தில் வழியும் கண்ணீர் பாலாக இருக்கக்கூடாதா என்று கேட்பதுபோலிருக்கும். அந்தப் பேதைக் குழந்தையின் சோகப் பார்வை !
நாட்கள் ஒன்று, இரண்டு, மூன்று நாள்? பிரேமாவுக்குச் சேத்பவனத்து சீமாட்டியின் பேட்டி கிடைத்தது. வேலைக்காரி பதவிக்கு விண்ணப்பம் போட்டாள். ஆனால் சீமாட்டி, குழந்தை தனக்கே வேண்டுமென்றாள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று ! பிரேமாவின் ஆசை தீர்ந்தது. பெரிய பாரம் நீங்கிற்று.
பிள்ளையோ பிள்ளை வியாபாரம் வெற்றிகர மாகத்தான் முடிந்தது.
ஆனால் அவள் வாழ்வு ????



