முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி

நரியூர் நந்தியப்பன்

பெருமை மிகுந்த நந்தியப்பருக்கு, நந்தியூர் பஞ்சாயத்துக்கார நரியப்பன் மிக்க வணக்கம். தங்களின் புனிதக்கரம் வரைந்த பொன்மடல் கிடைக்கப் பெற்றுப் புளகாங்கிதமுற்றேன். தங்களின் முடிவு; அரசியல் படைத்த அனைவராலும் போற்றத் தக்கதே யாகும். தாங்களோ; கோடி சூரியப் பிரகாசமுள்ள வைர வைடூரியங்களைக் கூடத் துச்சமென மதிக்கத் தக்க குபேர சம்பத்து வாய்க்கப் பெற்றவர்கள். தங்களுக்கு வீசப்படும் ஆலவட்டம் ஒன்றின் விலை; இங்குள்ள நாட்டாண்மைக்காரர் வைத்துள்ள காரின் விலைக்குச் சமானமாகும். தரணி வாழ் மக்கள் எல்லாம்; தங்களின் தர்பார் மண்டபத்துக் கோலாகலக் காட்சி காணத்தவங்கிடப்பர். எரிகின்ற ஒளிவிளக்கோ; வானின்று வீழ்ந்துவிட்ட விண்மீனின் கூட்டமோ என வியக்கத்தக்க அளவில் எங்கு நோக்கினும் தங்கள் நகரில் தகத்தகாயம் காணலாம்.

காலத்தின் கோலம்; இத்தனை இருந்தும் இருக்க வேண்டிய அந்தஸ்து இல்லாமல் பறிக்கப்பட்டுவிட்டது. அதனால் என்ன, காரிருளில் சூரியன்தான் மறைவ துண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம்போமோ? காலத்தின் சுழற்சியால்; கடவுள்போல் தங்களைக் கருதிடும் மக்களின் பேருள்ளத்திலிருந்து தங்களை யார் தான் அகற்ற முடியும்?

நரியூரின் நாயகரே! நான் பலமுறை எண்ணியதுண்டு; நரியூரில் தங்கள் பரிபாலனத்தின் கீழ் ஒரு குடிமகனாய் இருந்திட வேண்டுமென்று! அதற்குத் தெய்வானு கூலம் எனக்குச் சித்திக்கவில்லை. இன்றோ தாங்கள் நந்தியூர் வந்திறங்கி விட்டீர்கள். நந்தியூரின் சிறப்புக்களையும், இங்கு பரிபாலனம் புரியும் நாட்டாண்மைக்காரர்களின் பெருமைகளையும் தாங்கள் உணர்ந்தே யிருப் பீர்கள். இந்த ஊரில் நான் எத்தனை பஞ்சாயத்துக்களை மிக்க திறம்பட நடத்தியிருக்கிறேன் என்ற பட்டியலையும் இந்த மடலுடன் அனுப்பியுள்ளேன். நாட்டாண்மைக் காரர்களுக்கும் ஊர்ப்பொதுமக்களுக்கும் ஏற்படுகின்ற வழக்கைத் தவிர; மற்ற எல்லா வழக்குகளிலும் நடு நிலைமையான நல்ல தீர்ப்புகளையே நான் வழங்கியிருக் கிறேன். நாட்டாண்மைக்காரர்கள் பக்கம் நான் நின்று; நியாயத்தை எதிர்த்திட வேண்டிய பல கட்டங்கள் எனக்கு விலக்க முடியாதவைகளாகிவிட்டன. இனி; தாங்கள் வேறு தற்காலிக ஒப்பக்காரர் பதவியை எனக்கு வழங்கிவிட்டால் என்பாடு மிகச் சிரமத்திற்குரியதாகி விடும். பழைய காலத்து நாடகங்களில் முன் மாதகி; பின் கர்ணகி என்று ஒரே ஆளே இரண்டு வேடங்களைப் போட்டுக் கொள்வாள். அது; ஆண்கள், பெண் வேடங் களைப் போட்டுக் கொள்ளும் காலம்! இயற்கையான அழகு இருக்காது! எல்லாம் செயற்கையான அழகு!

அமைக்க வேண்டியதை அமைத்து மறைக்க வேண்டியதை மறைத்து—அரிதாரம் பூசிக்கொண்டு அரங்கில் வந்து தோன்றுவார்கள். அஃதே போல்தான் என் இரு பதவிகளுமே இயற்கைக்கு விரோதமான போலியாகி விடக் கூடும். நாடகத்து மாதவியும் கண்ணகியும் இரு வேறு பண்புகளைக் கொண்டவர்களாக-ஒருவரையொருவர் பகைத்துப் பழிப்பவர்களாக இருப்பர். அதைப் போலத்தான் என் பஞ்சாயத்தார் வேலை. ஒப்பக்காரர் ஒப்பமளிக்கும் பல விஷயங்களைப் பகைத்துப் பழிப்பதாயிருக்கும். இரண்டு பதவியும் மாறி மாறி எனக்குச் சடுகுடுபோல் சுழன்று வந்து கொண்டிருக்குமேயானால்; என் முடிவை நானே எதிர்த்துத் தீர்ப்பு வழங்கவேண்டிய நிலைமைகள் உருவாகும்.

பிரபூ! தாங்கள் ‘பராசக்தி’ என்ற ஒரு படம் பார்த்திருக்க மாட்டீர்கள். அதில் ஒரு சுவையான சம்பவம்! குணசேகரன் என்ற பைத்தியக்காரன்; ஒரு சுமைதாங்கிக் கல்லின் அருகே இருந்து கொண்டு சில விஷயம் பொதிந்த வேடிக்கைச் சேட்டைகளைச் செய்வான்.

“மந்திரி! நமது மாநகர்தன்னில் மக்கள் எல்லாம் சுகமா?” என்று ராஜா போல நினைத்துக் கொண்டு கேட்பான். அதற்கு பதில் கூற மந்திரி வேண்டுமே! அவனே கீழே வந்து நின்று மந்திரியாகவும் நடித்து; “மகாராஜா! மக்கள் எல்லாம் பட்டினி கிடந்து சாகிறார்கள்!” என்று பதில் சொல்வான்.

நான் பஞ்சாயத்தார் பதவியையும் ஒப்பக்காரர் பதவியையும் வகிப்பது அது போன்ற பைத்தியக்காரக் கூத்தாகத்தான் இருக்கும். ஆனால்; தங்கள் முடங்கல் கண்ட பிறகு நான் ஒரு முடிவு செய்து கொண்டேன். ஏற்கனவே; சரிபாதி நாட்டாண்மைக்காரர் பக்கம் இருந்தேன். இப்போது முழுக்க முழுக்க நாட்டாண்மைக் காரர் பக்கம் வந்து விடுவது என்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

தங்கள் கௌரவத்திற்கும்-அந்தஸ்துக்கும்-இந்த ஒப்பக்காரர் பதவி; பொன் வைத்த இடத்தில் பூ வைத்தது போல! எனக்கோ ; இது பொன் பூ! புகழ்ப் பூ! நாட் டாண்மைக்காரர் எழுதியதைத் தாங்கள் படிப்பதென்பது தங்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றுதான். நான் அதனைத் தங்களுக்காகச் செய்கிற தியாகமாகக் கருதாமல்; எனக்கு வந்த பெருவாய்ப்பாகக் கருதித்தான் ஏற்றுக் கொள்கிறேன். மடலில் தாங்கள் உறுதியளித் துள்ளபடி; ஒப்பக்காரர் பதவியில் ஒரு வாரமும் ஊர். சுற்றுவது ஒன்பது வாரமும் என்ற முறையைக் கடைப் பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அப்படிச் செய்வீர்களேயானால்; நானும் என் பந்து மித்திரர்களுடன் பல்வேறு ஷேத்திரங்களைச் சுற்றிப் பார்த்து பகவத் அனுக்கிரகத்தைத் தங்களுக்கும் சேர்த்துப் பெறுவதற்கு அனுகூலமாயிருக்கும். இறுதியாக ஒன்று; இது தேவையற்ற பதவியென்று தாங்களும் கருதுவதாகத் தெரிகிறது. இந்த நந்தியூரில் தேவையற்ற பதவி, இது மட்டுந்தானா? எத்தனையோ உண்டு! பத்தோடு பதினொன்றாக இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே; என்னைப் போன்றவர்கள் அனுபவிக்க வேண் டாமா?

தங்கள் நன்றியுள்ள
நரியப்பன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *