முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி

சீமான் வீட்டு சீக்காளி

“அய்யோ! அந்த உயிர் போனால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். என் மனைவிக்கு ஏற்கனவே இருதயக் கோளாறு! இப்படி ஒரு அதிர்ச்சி ஏற்பட்டால் அவள் இருதயம் ‘பொசுக்’ என்று நின்றாலும் நின்றுவிடும். ‘குவின் மேரீ’ சில் படித்துக் கொண்டிருக்கிறாளே என் குமாரி; அவளுக்கு எந்த வழியில் என்னால் சமாதானம் சொல்ல முடியும்? செய்தி கேள்விப்பட்டு அவள் ஓடோடி யும் வருவாள். இந்த வருஷம் படிப்பு-பரிட்சை எல்லாம் பாழ்! பாழ்! பாழே தான்!”

-இப்படி வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே ‘கோ’வென அழுது கண்ணீரைக் கொட்டினார் சீமான் செங்கமலம் பிள்ளை!

அவரது மனைவி மரகதம், ஆடாமல் அசையாமல் மரம் போல் நின்று கொண்டிருந்தாள். மரங்களின் இலைகளில் தங்கிய மழைத்துளிகள் காற்றின் அசைவில் ‘சொட சொட’வெனக் கொட்டுவது போல் அவளது விழிகள் நீரைப் பொழிந்து கொண்டிருந்தன.

வேலைக்காரப் பொன்னனுக்குக் காலும் ஓடவில்லை; கையும் ஓடவில்லை. அண்டை அயல் வீட்டாரிடமெல்லாம் சீமான் வீட்டில் ஏற்பட்டுள்ள குமுறலை எடுத்துக் கூறி பெரும்படை திரட்டி வந்து விட்டான்.

தெருவாரும், ஊராரும், முக்கிய பிரமுகர்களும் சீமான் வீட்டுக்கு அவசர அவசரமாக ஓடி வந்தார்கள்.

செங்கமலம் பிள்ளையின் முகவிசாரத்தைக் கண்டு அவரோடு பேசவே நாவெழாதவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சந்தடியின்றி உட்கார்ந்து நிலைமைகளைக் கவனித்தனர்.

“டெலிபோன்” மணி அடித்தது. பொன்னன் ஓடிப் போய்ப் பேசினான்.

“அலோ! அலோ! என்னாங்க?…

‘டிரங்காலு’ங்களா?- ,மெட்ரா’சிலேருந்தா?… கொஞ்சம் இருங்க!”

“எஜமான்! எஜமான்! ‘டிரங்காலு’ங்க…” பட்டணத்திலேயிருந்து…

செங்கமலம் பிள்ளை மெதுவாக எழுந்து சென்று பேசத் தொடங்கினார்.

“ஹலோ!…ஹலோ!…நான் தான் செங்கமலம் பிள்ளை பேசுறேன்…ஓ! லலிதாவா? என்னம்மா? … அப்படித் தான் இருக்கு!…கொஞ்சம் ‘சீரியஸ்’ தான்! காலையிலே சொன்னேனே; அதே மாதிரி தான் இப்பவும் ‘கண்டிஷன்’; டாக்டர்கள் ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு சொல்ராங்க! நீ வீணா கவலைப்படாதேம்மா!… எப்படியும் பிழைக்க வைக்கிறது எங்க பொறுப்பு-என்னம்மா நீ…சின்னக் குழந்தை மாதிரி அழுகிறே?… அய்யய்யே என்ன… போனி’லேயா அழுவுறது?… (தானும் அழுது கொண்டே) அதெல்லாம் கடவுள் கை விடமாட்டாரம்மா!… நீ கவலைப்படாம இரு…மணிக்கு ஒரு தடவை நிலைமையை நான் உனக்கு சொல்லிகிட்டே இருக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி!…அதிலே ஒரு கண்ணை இழக்க நான் சம்மதிப்பேனா? … அழாதே லலிதா! … ‘எக்ஸ்டன்ஷன் ப்ளீஸ்’… அபாயக் கட்டம் தாண்டி நாளைக்கே உனக்கு நல்ல சேதி அனுப்புறேன். எல்லாம் நல்லாவே முடியும்.

அடுத்த மாதம் கல்யாணத்தை சந்தோஷமா நடத்தலாம்…உன் கல்யாணம் கண்டிப்பா அடுத்த மாசம் முடியும்ணு ஜோஸ்யர் சொல்லியிருக்கும்போது… அதுக்குள்ளே நம்ப வீட்டிலே எப்படி துக்கச் செய்தி ஏற்பட முடியும்?…பயப்படாதே…! சரி… அப்புறம் பேசுறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ‘போன்’ பண்ணு! எஸ்! எஸ்! ம்-வச்சுடு!”

சென்னையிலுள்ள மகளுக்கு ஆறுதல் கூறிய செங்கமலம் பிள்ளை, தனக்கு ஆறுதல் கூற வல்லார் யாருமின்றி, டாக்டரின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டே நின்றார்.

டாக்டரை அழைக்கப் போன இரண்டு ‘கார்’களில் ஒரு ‘காரி’ல் டாக்டர் வந்து இறங்கினார். இன்னொரு ‘காரி’ல் இருந்த ‘செதாஸ் கோப்’பை எடுத்து மாட்டிக் கொண்டு டாக்டர் பரபரப்புடன் உள்ளே நுழைந்தார். அன்று காலையிலிருந்து டாக்டர் அங்கு வருவது இது ஐந்தாவது தடவை! அப்படி வந்தும் செங்கமலம் பிள்ளைக்குத் திருப்தி இல்லை!

“டாக்டர் சார்! நீங்கள் இங்கேயே தங்கியிருங்களேன்; எங்களுக்கு ரொம்ப பயமாயிருக்கிறது!” என்று சீமான் கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டார்.

“பயப்படாதிங்க!…நான் தான் ஒரு நாளைக்கு பத்து தடவை வர்ரேனே; பக்கத்திலேயே ‘நர்சு’ வேற இருக்கிறா…பிறகென்ன பயம்?” என்று சமாதானம் கூறியவாறு உள்ளே நுழைந்தார்.

அறைக்குள்ளேயிருந்த நர்சு டாக்டருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றாள். செங்கமலம் பிள்ளையும் டாக்டரைத் தொடர்ந்து உள்ளே செல்ல முயன்றார். ஆனால் நர்சு, பிள்ளையை உள்ளே வர வேண்டாமென்று ஒரு புன்னகையை வீசித் தடுத்து விட்டாள்.

எப்போது டாக்டர் வெளியே வருவார்; என்ன செய்தி சொல்லுவார்- என எதிர்பார்த்தவாறு செங்கமலம் பிள்ளையும், மரகதமும், மற்றவர்களும் ஆவலை முகத்தில் தேக்கி நின்று கொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்து எந்தவிதமான தகவலும் வெளியே வரவில்லை. ஒரே அமைதி; ஆழ்ந்த அமைதி!

திடீரென நர்ஸ் கலகலவென வாய் விட்டுச் சிரித்த சப்தம் வெளியே எதிரொலித்தது. ‘ஒரு வேளை அது அழுகையோ? அய்யோ மோசம் போனோமோ?” என ஒருக்கணம் நினைத்துப் பிறகு தானே சமாதானம் செய்து கொண்டார் செங்கமலம் பிள்ளை.

“மனசு நெருப்பா எரியுது! இப்ப என்ன சிரிப்பு வேண்டியிருக்கு! இந்த டாக்டர்களே இப்படித்தான்; கல் நெஞ்சக்காரர்கள்!”

முணுமுணுத்துக் கொண்டே உலவினார் சிந்தை நொந்திருந்த அந்த சீமான்!

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு டாக்டர் வெளியே வந்தார். “கொஞ்சம் சீரியஸ் தான்! சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல்தான் சொல்ல முடியும். அதுவரையில் அபாயக் கட்டம் தான்! ஒரு முக்கியமான ஊசி மருந்து எழுதித் தர்ரேன்…அதை வாங்கி வைக்கச் சொல்லுங்க நாலு மணிக்கு வந்து அந்த ஊசியைப் போட்டா கொஞ்சம் குணம் தெரியலாம். கடைசி முயற்சிகளை செய்து பார்த்து விடுவோம்!” என்று கூறி, மருந்தையும் எழுதிக் கொடுத்து விட்டு காரில் போய் ஏறிக் கொண்டார் டாக்டர்.

கண்ணீர் வழிந்தோட டாக்டருக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு திண்ணையில் நின்றவாறு ஆகாயத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் சீமான்.

அவரது கவனத்தைத் திடீரெனத் திருப்பும் வகையில் தெருவில் ஒரு பெருங்கூச்சல்; நாலைந்து பேர் சீமான் வீட்டை நோக்கி ஓடிவந்தனர். தலைவிரிகோலமாக! அதில் ஒருத்தி நாற்பது வயது மாது! அவள் சீமானை நோக்கிக் கதறினாள்:

“அய்யோ எஜமான்! என் மகள் புடைவையில் நெருப்பு பிடிச்சி உடம்பெல்லாம் வெந்து போச்சு! புழுவாத் துடிக்கிறா. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். வழி செய்யுங்க, சாமி!”

அந்தத் தாய் தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுதாள்.

“கொஞ்சம் காரு கொடுத்தா போதும் எஜமான்! உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுகிட்டுப் போனா உயிர் பிழைச்சுக்குவா!” என்று அலறினான் அந்தப் பெண்ணின் தகப்பன்.

‘காராவது–சனியனாவது!….. இங்க மனுஷன் படுறபாடு தெரியலே?….. வேதனையிலே துடிச்சுக் கிட்டிருக்கிறேன் ……நேரம் தெரியாமல் வந்து உயிரை வாங்காதிங்க போங்க!” என்று கடிந்துரைத்து விட்டு சீமான், தன் வீட்டுக்குள்ளே நுழைந்து, இரும்புப் பெட்டியைத் திறந்து, ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துப் பொன்னன் கையிலே தந்து, “இதை வைத்துக் கொண்டு காரிலே போய் மருந்துக் கடையில் டாக்டர். எழுதிக் கொடுத்த ஊசி மருந்தை வாங்கி வா, சீக்கிரம்!”… என்று விரட்டினார். பொன்னனும் காரில் புறப்பட்டான். சீமான் உதவியை நாடி வந்த அந்தத் தெரு ஏழைக் குடும்பத்தினர் தங்கள் கண்ணீரால் தாங்கள் பெற்றெடுத்த பெண்ணின் உடலைக் குளிப்பாட்டி நெருப்பால் ஏற்பட்ட எரிச்சலைத் தீர்க்கலாம் என எண்ணியோ என்னவோ வீட் டுக்குத் திரும்பினர்.

அவள் பெயர் செல்லி! செல்லம்மா என்பது இட்ட பெயர்-“செல்லி” சுவையோடு அழைக்கும் சுருக்கமான பெயர்! அவள் தான் அந்த வீட்டுக்கே ஒளி விளக்கு! அவளது எதிர்காலத்தைப் பூரணப் பொலி வுள்ளதாக ஆக்கவே அந்தப் பெற்றோர்கள் தங்கள் மூச்சை உடலில் நிறுத்திக் கொண்டிருந்தார்கள் என்று கூறலாம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம்- அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு பெரும் புயல்!

அடுப்பில் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த செல்லியின் சேலையில் தீ பற்றியது. நெருப்புக்குத் தேவையான அழுக்கும் எண்ணையும் செல்லியின் புடவையில் ஏராளமாக இருந்ததால் நெருப்பு வேகமாகப் பரவியது. ஆகவே செல்லியின் உடம்பு வெந்துபோயிற்று. நிற்க முடியாமல், உட்கார முடியாமல், படுக்க முடியாமல் எதுவும் செய்ய முடியாமல் அங்குமிங்கும் ஓடியாடிக் கூச்சலிட்டவாறு துடித்தாள். சாவின் மடியில் மட்டுமே தான் அந்த எரிச்சலை அடக்கக் கூடிய குளிர்ச்சியெனும் மாமருந்து இருக்கிறது! ஆனால் அந்த மடியில் தங்கள் மகளைக் கிடத்த ஏழைப் பெற்றோர்கள் விரும்பவில்லை. எப்படி விரும்ப முடியும்? தங்கள் உடலே தீப்பட்டது போல் துடித்தனர். சீமானிடம் கெஞ்சினர். ‘கார்’ கிடைக்கவில்லை. கடவுள் தலையில் பாரத்தைப் போட்டு வாழைக் குருத்துக்களை வெட்டிப் போட்டு அதில் செல்லியைப் படுக்க வைத்துத் தங்களால் இயன்ற சிகிச்சைகளைத் தொடங்கினர்.

மணி நான்கு அடித்தது!

குறிப்பிட்டபடி டாக்டர், சீமான் வீட்டுக்குள்ளே நுழைந்தார். வாங்கப்பட்ட ஊசி மருந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. டாக்டர் உள்ளே போனார்.

நர்சு, முறைப்படி எதிர் கொண்டழைத்தாள். உள்ளிருந்து என்ன செய்தி வருமோ எனக் காதையும் கண்ணையும் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர் சீமான் குடும்பத்தினர், பத்து நிமிடத்திற்கெல்லாம் டாக்டர் வெளியே வந்தார்.

“உடனே போய் லேடி டாக்டர்’ ஜான்சியை அழைத்து வாருங்கள்!” என்று கூறிவிட்டு மறுபடியும் உள்ளே போனார்.

உள்ளேயிருந்து முனகல் ஒலி தொடர்ந்து கேட்டது!

ஆ! அய்யோ!…… அம்மா!…….

அது யாருடைய குரல்?

சீமான் உன்னிப்பாகக் கவனித்தார்!

அது அந்த நர்சினுடைய குரல் தான்!

அவள் ஏன் முனக வேண்டும்?

சீமான் வியப்பிலாழ்ந்தார்.

லேடி டாக்டர் ஜான்சியும் வந்து சேர்ந்தாள்.

அவள் அறையில் நுழைந்து சில நிமிஷங்களில் டாக்டர் வெளியே வந்தார்.

சீமான், “என்ன சமாச்சாரம்?” என்று ஆவலோடு கேட்டார்.

டாக்டர் பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார். முனகல் ஒலி அதிகமாயிற்று!

வானம் இருண்டது! பயங்கர இடிகள்! மின்னல்கள்! பெருமழை! பேய்க்காற்று! எல்லாம் சிறிது நேரத்தில்!

அறைக்குள்ளே முனகல் நின்றது! திடுமென ஒரு புதிய குரல்!

”குவா! குவா!”

லேடி டாக்டர் ஜான்சி வெளியே வந்தாள்!

“சுகப்பிரசவம் தான்!” என்றாள்.

“யாருக்கு? என்ன விஷயம்?”__சீமான் துடிப்போடு கேட்டார்.

”யாருக்குமில்லை! இங்கே டூடியில் இருக்கும் நர்சுக் குத்தான்”-என்றார் சிரித்துக் கொண்டே டாக்டர்.

“நல்லவேளையாய்ப் போச்சு! நர்சுக்குப் பிரசவம் பார்க்க என் வீடு தானா கிடைச்சுது?….. டாக்டர் சார்! நீங்க வந்த வேலையைப் பாருங்க!… மணி ஐந்தாகப் போகுது! அபாயக் கட்டம் நீங்கியதா இல்லையா?”

“இதோ…… இன்னும் சில நிமிஷங்களில் தெரிந்து விடும்…… சரியா ஐந்து மணிக்குப் பிரக்ஞை வந்து கண்ணை விழித்தாகணும்–வாயைத் திறந்தாகணும்!”

டாக்டர் தைரியமாகச் சொன்னார். எல்லோரும் கடிகாரத்தின் முட்கள் நகருவதையே கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

டாண்! டாண்!! டாண்!!! டாண்!!! டாண்!!! மணி’ ஐந்து அடித்தது!

டாக்டர் உள்ளே போனார்!

ஒரே அமைதி!

திடீரென ஒரு உறுமல் சப்தம்!

தொடர்ந்து “வள்! வள்!” என்ற குரைப்பு!

‘ஆ என் செல்லி பிழைத்துக் கொண்டது!” எனக் கத்தியவாறு உள்ளே ஓடினார் சீமான். சீமான் வீட்டு “செல்லி” பிழைத்துக் கொண்டது!

ஆனால்… தெருவிலே ஒரு பாடை போகிறது! அதில்,

பாட்டாளியின் மகள் செல்லி பவனி போய்க் கொண்டிருக்கிறாள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *