முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி

நந்தியூர் நரியப்பன்

அன்புள்ள நரியப்பருக்கு,

நந்தியப்பன் வணக்கம். நந்தியூர் நண்பர்கள் அனைவரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வருகின்ற போட்டியிலும் நந்தியூரார் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற வேண்டுமென்று சாமுண்டீஸ்வரியை பிரார்த்திக்கிறேன். என்ன இருந்தாலும் எனது நரியூர் மக்களுக்கு நந்தியூரார் மீது வருத்தம் இல்லாமல் இல்லை. அவர்களது அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவனாக, அவர்கள் வணங்கும் இரண்டாவது கடவுளாகப் பூஜிக்கப்பட்டவன் நான். நரியூரை ஒளியூராக மாற்றி நானிலமெங்கணும் தனித்ததோர் கீர்த்தியை அந்த ஊருக்குப் பெற்றுத் தந்தவன் என்ற முறையில் என்னிடம் அபாரபக்தியை எனது ஊர் மக்கள் செலுத்தி வந்தனர். இன்றைக்கும் செலுத்தி வருகின்றனர், உலகிலேயுள்ள ஒப்பற்ற சோலைகளில் ஒன்று நரியூரில் இருப்பதும், ஒளி சிந்தும் ஒய்யார மாளிகை ஒன்றுக்கு நான் உரியவனாக இருப்பதும் தாங்கள் அறியாததல்ல! கள்ளங்கபடமற்ற எனது ஊர் மக்களின் அன்புக்கும், பாசத்திற்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன் என்பதையும் தங்களிடம் பலமுறை நான் கண்கலங்கக் கூறியிருக்கிறேன். என்னை மிக மேலான கௌரவமிக்க-அந்தஸ்து நிறைந்த ராஜீய மரியாதை மிகுந்த—இடத்திலே வைத்து வணங்கு வதைத் தாங்கள் பெற்றுள்ள பாக்கியம் என்று இன்றைக்கும் எனது ஊர் மக்கள் கருதிக் கொண்டிருப்பதை உலகறியும்.

என்ன செய்வது; சூழ்ந்தடித்த விடுதலைப் புயலின் விளைவாக எழுந்த தேசீய எழுச்சியும்; அதற்குப் பிறகு வீசத் தொடங்கிய சுதந்திரத் தென்றலும்; எங்கள் நரியூரை மட்டும் விட்டுவிடுமா என்ன? இப்போதுள்ளவர்கள் கையில் அன்றைய நிலைமைகள் இருந்திருக்குமேயானால் எனக்குரிய ஆடம்பரந் ததும்பும் ராஜாங்க அந் தஸ்துக்கள் பறிக்கப்படாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் அன்றிருந்த இரும்பு மனிதர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர் விழியசைப்பதற்கு முன், நான் விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்க வேண்டியவைகள் அனைத்தையும் விட்டுக் கொடுத்து விட்டேன். ஒரேயடியாக என் உள்ளத்தைப் புண் படுத்தக் கூடாது என்பதற்காகவோ என்னவோ; எனக் குரிய இடத்திலேயே என்னை அமர வைத்து, அதன் மூலம், என்பால் பக்தி கொண்ட நரியூர் பிரஜைகளுக்குச் சிறிது மன ஆறுதலையும் சில ஆண்டுக்காலம் வழங்கி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்களுக்கு வந்த நெருக்கடி, என் இருப்பிடத்தை நரியூரிலிருந்து மாற்றி உங்கள் நந்தி யூருக்கு வருமாறு வலியுறுத்திக் கூறிவிட்டார்கள்.

இடமாற்றத்தோடு இருந்தால் கூட ஏற்றுக் கொள்வதில் எனக்கு இவ்வளவு சங்கடம் வந்திருக்காது. நந்தியூரில் நடைபெறும் நாட்டாண்மைக்காரர்களின் நிர்வாகத்திற்கு நான் ஒப்பம் அளிப்பவராகவும், மேற் பார்வையாளராகவும் இருக்க வேண்டுமாம். இந்தப் பதவியையே நந்தியூர் மக்கள் விரும்பவில்லையென்றும். இது ஆட்டுக்குத் தாடி போல ஒரு தேவையற்ற பதவி யென்று அவர்கள் வெறுக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்ட பிறகு, நானே அந்தப் பதவிக்கு வருவதை எவ்வளவு தர்மசங்கடமாகக் கருதுவேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்கப்பூண் போட்ட கைத்தடியை வாங்கிக் கொண்டு தடிக்கம்பு ஒன்றைக் கையிலே கொடுத்தது போல் ஆகிவிட்டது என் கதை! அந்தத் தடிக்கம்பாவது பாம்பு அடிக்க உதவுமா என்றால் நிச்சயம் உதவாது; உங்கள் நந்தியூரில் என் மீது திணிக்கப்பட்டுள்ள பதவிக்கு என்ன தான் வேலை? ஆற்ற வேண்டிய பணி என்ன? வெறும் ”ஒப்பக்காரர்” வேலை தான்!

நாட்டாண்மைக்காரர்கள், தங்களது குமாஸ்தாக்களைக் கொண்டு எழுதிக் கொடுப்பதை எழுந்து நின்று ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் படிக்க வேண்டும். நான் படித்ததைப் பற்றி பிரமுகர்கள் பலர் நல்லது கெட்டதை எடுத்து விமர்சிப்பார்கள். எங்கள் நரியூரில் என் கருத்துக்களை யாரும் விமர்சித்ததே இல்லை. இப்பொழுது வந்துள்ள வேதனை; என் கருத்துக்களை அலசி ஆராய்ந்து விருப்பும் வெறுப்பும் தெரிவிக்கிறார்கள். அதிலேயே இரண்டாவது வேதனை; அந்த விமர்சிக்கப்படுகிற கருத்துக்களாவது என் கருத்துக்களா என்றால், அதுவுமில்லை. நாட்டாண்மைக்காரர்களின் சொந்தக் கருத்துக்கள்! அவர்கள் செய்கிற தவறுகளுக்கு, எதிர்த்து வரும் கணை களைத் தாங்கிக் கொள்ளும் கேடயமாக நான் பயன் படுத்தப்படுகிறேன்.

அப்படி பழக்கப்பட்டவனா நான்? விடிந்து எழுந்தால் விதவிதமான உல்லாச விளையாட்டுக்கள்-மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு-ஆடாது அசையாது அமைதி வாழ்க்கை- ஆண்டவனின் சிந்தனை-இப்படி யொரு மனோகரமான அடிப்படையில் குழந்தை முதல் வளர்ந்துவிட்ட எனக்கு, நான் சொல்வதே வேதம் என்று நவில்வதற்கு நரியூர் மக்கள் காத்திருக்கும்போது, நந்தியூர் பாதுகாப்புக் கேடயமாக நாட்டாண்மைக்காரர்களின் விளங்கும் பதவி எதற்காக?

பல லட்சமல்லவா வருமானம் என்பீர்கள்! லட்சங்களைக் காணாதவனா நான்? மகிஷாசூரியின் மகத்துவத்தால் மாணிக்கமும், வைடூரியமும், மரகதமும், கோமேதக மும், தங்கமும், வைரமும், பச்சையும், பவளமும், நான் படுத்துப் புரளும் பஞ்சணையின் கால்களில் மட்டுமல்ல; கால்கள் மிதிக்கும் பாதைகளிலும் பதிக்கப்பட் டுள்ளன என் அரண்மனையில்!

என்னமோ; ஒரு சூழ்நிலை இந்த ‘ஒப்பக்காரர்’ பதவிக்கு ஒப்புக் கொள்ள நேரிட்டுவிட்டது. ஏற்றுக் கொள்ளும்போதே; எனது எண்ணம்… நாடாறுமாதம் காடாறுமாதம் என்று விக்கிரமாதித்த மகாராஜன் ஆண்டான் என்பார்களே; அதுபோல நானும் இந்த ஒப்பக்காரப் பதவியில் ஒரு வாரம் இருந்தால் ஒன்பது வாரம் வேறு யாரையாவது உட்கார வைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். அப்படி வேறு யாரை உட்காரவைப்பது என யோசிக்கும் போது தங்கள் நினைவுதான் எனக்கு வந்தது. ஒப்பக் காரர் பதவியில் உட்காருவதற்குத் தகுதி படைத்த இன்னொரு ஆள்; உள்ளூர்ப் பஞ்சாயத்துக்காரர்தான் என்றும் நந்தியூரில் ஒருமுறை இருக்கிறதல்லவா? அந்த முறைப் படித் தங்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்க முடிவு செய்துவிட்டேன். ஒப்பக்காரருக்கு எப்போதாவது தவிர்க்க முடியாத அளவுக்குத் தடங்கல் ஏற்பட்டாலும்; உடல் நலிவு ஏற்பட்டாலும்; அல்லது காலமாகிவிட்டாலும் அப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில்தான் பஞ்சாயத்துக்காரர் அந்தப் பதவியில் சிலநாள் அமர்ந்திருப்பது வழக்கம்.

ஆனால்; நான் அந்த வழக்கத்தை மாற்றி; தங்களையே ஒப்பக்காரர் என்று ஊரார் சொல்லுமளவுக்குச் செய்துவிட்டு; எனது பழைய பட்டத்தை, மக்கள் மறைந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளப் போகிறேன். தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இந்த விஷயத்தில் என்னை யாரும் குறை சொல்ல முடியாது. நந்தியூர் நாட்டாண்மைக் காரர்களுக்கு இந்த ‘விக்கிரமாதித்த முறை’ பிடிக்காமல் இருக்குமேயானால்; அவர்கள் புத்திசாலித்தனமாக ஒப்பக் காரர் பதவியையே ஒழித்துக் கட்டிவிட்டு நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம்.

அதற்கு அவர்களுக்கு விருப்ப மில்லையென்றால் நான் சத்தியமாகச் சொல்லுகிறேன்; அந்த நாட்டாண்மைக்காரர்கள் எழுதிக் கொடுப்பதை ஊரார் முன்னே படித்துக் காட்டுவதற்கு நானல்ல ஆள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளட்டும். இந்த என் முடிவு, தங்களுக்கு எல்லையற்ற பூரிப்பை அளிக்கு மேயானால் நான் புன்னகை புரிவேன்.

அன்புள்ள,
நந்தியப்பன்,

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *