முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி

காசா லேசா

தொகுதியைச் சுற்றிப் பார்த்து வந்த களைப்பில் லஞ்சய்யா, வீட்டின் முகப்பில் உள்ள சாய்வு நாற்காலியில் சற்றுக் கண்ணயர்ந்தார். எப்படியோ தப்பித் தவறி மக்களின் ஓட்டுக்களைப் பெற்று அதுவும் எதிரிக்கும் தனக்கும் சரி சமமாகப் போய்விடவே திருவுளச் சீட்டின் மூலம் அந்தத் தொகுதியின் பிரதிநிதியானவர் அவர். அவருக்கென்று எந்தத் தொழிலும் கிடையாது. பாட்டன் பூட்டன் தாய் தந்தை வைத்துவிட்டுப் போனதாக ஒரு அங்குல பூமியும் கிடையாது. ஒரு வேலையும் தெரியாது. தேர்தலில் வெற்றி பெற்ற ஓரிரு ஆண்டுகளிலேயே பெரிய வீடொன்றும் பத்து ஏக்கர் நிலமும் அவருக்குச் சொந்தமாகி விட்டது. எப்படியென்று கேட்காதீர்கள். பெயருக்கேற்ற தொழில் மூலம் அவர் பெற்ற பயன் அது. அவர் இப்படியெல்லாம் பெரிய மனிதராக வேண்டு மென்று தானே ஆண்டவன் திருவுளச் சீட்டின் மூலம் அவரைத் தேர்ந்தெடுத்து மக்களுக்காக அனுதினமும் உழைக்க வைத்தான். அடடா! என்ன உழைப்பு. என்ன உழைப்பு! அன்று கூடக் காலை முதல் மாலை வரையில் தொகுதியைச் சுற்றியதில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத காரணத்தால் தான் அயர்ந்து போய் நாற்காலியில் கட்டையைப் போட்டுவிட்டார். தூக்கம் வரு வதும் கலைவதுமாக இருந்தது. எதிர்பார்த்தவைகள் எதுவும் கைக்கு வராததால் தூக்கம் அவரோடு ‘கண்ணா மூச்சி’ விளையாடிக் கொண்டிருந்தது.

“அந்த செவத்தானுக்குக் கலெக்டர் ஆபிசில் உரத்துக்கும் உழவு மாட்டுக்கும் கடன் சிபாரிசு செய்தோம். வரவேண்டியது வரவில்லை. அந்தப்பயல் ஆளையே காணோம். அந்த டாக்டர் சிரஞ்சீவிக்கு ஏறாத படியெல் லாம் ஏறி ‘டிரான்ஸ்பர்’ வாங்கிக் கொடுத்தோம். கவனிப்பதாகச் சொன்னவர்; நாலுநாளாய்க் கண்ணிலே படவில்லை. நேற்றைக்கு முழிச்ச முகம் சுத்த மோசம். எவனாவது பை கனத்தவன் சிபாரிசுக்கு வந்தால் நம்ப பாடு யோகம் !வத்தலும் தொத்தலும் வந்தால் என்ன செய் வது ; மரப்படி மாட்டில் பால் கறப்பது போல் கறக்க வேண்டியிருக்கிறது. அட! அந்த எழவு கூட இன்னைக்கு எதுவும் கிடைக்கலியே!”

நினைவு அலைகள், அவர் இமைகளை அசைத்து அசைத்துத் தூங்க முடியாமல் தவிக்க விட்டன. கண்களை லேசாக மூடிக் கொண்டு, விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு உணர்வில் தன்னையும் மீறிய சில கற்பனை நிகழ்ச்சிகளுக்கு அவரையுமறியாமல் மிஸ்டர் லஞ்சய்யா தள்ளப்பட்டார்.

அவர் குழந்தையாக இருக்கும்போதே, கையில் காலணா காசு வைத்து அழுத்தினால் தான் தாய்ப்பாலே குடிப்பார் என்று பக்கத்து வீட்டுப் பாட்டிகள் இப்போது கூட வேடிக்கையாகச் சொல்லுவார்கள். அது உண்மையோ இல்லையோ; அவர் படிக்கும்போது; “இது தான் பரிட்சைக்கு வருகிற கேள்வி!” என்று சொல்லி கேள்வி ஒரு ரூபாய் வீதம் விற்றுவிடுவார் என்பதை அவரது நம்பிக்கையான நண்பர்கள் சத்தியம் செய்து சொல்கிறார்கள். அந்தக் கேள்விகள் வருமா என்பது சந்தேகந்தான்!

அப்படிப்பட்ட ஆற்றலாளர் கற்பனைத் தேரில் சஞ்சரிப்பது எப்படியிருக்கும்?

மிஸ்டர் லஞ்சய்யா திடீரென்று ஒரு விமானத்தில் பறக்கிறார். அது அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், பிரான்சு போன்ற தேசங்களின் மேலே பறக்கிறது. அந்த நாட்டு மக்கள் எல்லாம் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, விமானம் இறங்குவதை எதிர்நோக்குகிறார்கள். விமானத்திலிருந்தவாறே ஒலிபெருக்கியின் மூலம் லஞ்சய்யா பேசுகிறார். அதை அந்தந்த நாட்டு மக்களும் கேட்கிறார்கள்.

“ஓ…என் நண்பர்களே! என் பாதம் உங்கள் நாட்டில் படுவதென்றால் சாமான்யமல்ல; என் குடும்பத்தார் நடத்தும் கம்பெனிகளுக்கு நீங்கள் ஏஜண்டு உரிமை தரவேண்டும். என் புதல்வர்களின் தொழில் வளர எல்லா உதவிகளும் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் வாக்களித்தால் தான் நான் உங்கள் நாட்டு விமான நிலையத் தில் கால்வைப்பேன், என்ன சொல்கிறீர்கள்; பதவியைத் துஷ்பிரயோகம் செய்யாத என் பண்பைப் பாராட்டி என் சிபார்சுகளை மதிக்கிறீர்களா?”

இந்த கண்யமிக்க உரைகேட்டு அனைவரும் கரகோஷம் செய்கிறார்கள். பறந்து கொண்டிருக்கும் விமானத்தை நோக்கி அந்நிய நாட்டு ஆடம்பரப் பொருள்கள் வீசப்படுகின்றன. ஏஜண்டு அங்கீகாரங்கள் பாய்ந்து வருகின்றன. அதன்பிறகு லஞ்சய்யா விமானத்தை விட்டுக் கீழே இறங்குகிறார். அய்யோ யாவம்; விமானம் ஆகாயத்திலிருக்கும் போதே கதவைத். திறந்து கொண்டு இறங்கி விடுகிறார்……விழுகிறார்; தலை கீழாக விழுகிறார்; கண்ணை உருட்டிப் பார்க்கிறார். அவர் எதிரே மக்கள் வெள்ளம். அதன் நடுவே அமைக் கப்பட்டுள்ள ஒரு அலங்காரமான மேடை! அந்த மேடை யில் ஒரு வாட்டசாட்டமான கருத்த உருவம் படைத்த கம்பீரமான மனிதர்! “ஜனநாயகமே எனது உயிர்-எனது மூச்சு-எனது பேச்சு” என்று வீராவேசமாகப் பேசுகிறார்.

அந்தப் பேச்சை அங்கேயே சில விசைக் கருவிகளின் மூலம் ஒரு பெரிய ஸ்டுடியோ அதிபர் கிராமபோன் ரிக்கார்டுகளாக ஆக்கி, அடுப்பில் தோசை திருப்பிப் போடுவது போலப் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலே “விர்” என்ற அலறல் ஒலி கேட்டு அனைவருமே தலையைத் தூக்கிப் பார்க்கிறார்கள் “அய்யோ! என் ஆருயிர் நண்பருக்கா இந்தக் கதி” என்று துடித்துபோய் சோஷலிச சொற்பொழிவாளர் ஒரு குதி குதித்துக் கீழே விழப்போன லஞ்சய்யாவை அலக்காகத் தூக்கிக் கொண்டார்; அந்த அற்புதமான ‘ஸ்டண்ட்’ காட்சியைப் பார்த்த மக்கள் வெள்ளம் “வாழ்க ஜனநாயக” சோஷலிசம் என்று கூவிற்று! அந்தப் பேரொலி மேடையை நடுங்க வைத்து, பூமியைக் கிடுகிடுக்க வைத்து, வானத்தில் பல கீறல்களை உருவாக்கி,ஏழெட்டு நட்சத்திரங்களையும் உதிர வைத்தது. சினிமா நட்சத்திரங்களையல்ல! அவர்கள் ஏற்கனவே அந்த மேடையில் உதிர்ந்திருந்தார்கள். உலகப் பிரளயம் போல் எழுந்த அந்த ஜனநாயக சோஷலிச முழக்கத்தினூடே கங்கையும் காவிரியும் கரைபுரண்டு ஒன்றாயின. இந்துமாக்கடல் எது;அரபிக்கடல் எது; வங்கக் கடல் எது; என்ற வித்யாசமே தெரியவில்லை. ஒரே நீர்க்காடு! மரம் மட்டைகள், புல்பூண்டுகள், உயிர் இனங்கள் எதுவுமே மேலே தெரியவில்லை. தண்ணீருக்குள் மீன்கள் மட்டும் இருந்திருக்கக் கூடும். அந்த நீர் மட்டத்தின் மேலே ஒரே ஒரு ஆலிலை மிதந்து கொண்டிருக்கிறது. அந்த இலையில் ஒரு ஒல்லியான நீண்ட உருவம்; ஒட்டிப்போன கன்னங்கள்; தலையில் ஒரு வெள்ளைக் குல்லாய்; அதன் வாய் மட்டும் “ஊழலை ஒழிக்கவே இந்த ஊழி வெள்ளத்தை உரு வாக்கினேன்’ என முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு பெரிய வாளை மீன் அந்த ஆலிலையை நோக்கி வருகிறது. என்ன ஆச்சரியம்? அந்த மீனுக்குத் தலைமட்டும் மிஸ்டர் லஞ்சய்யாவினுடையது! வால் எல்லாம் மீனைப் போலத்தான்! “லபக்”!ஆலிலையும் அதற்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த ஆளும் சேர்ந்து வாளை மீனின் வயிற்றுக்குள் போய்விடுகிறார்கள். இலையையும் ஆளையும் விழுங்கிய மாத்திரத்தில் உலகில் பெரும் மாறுதல்! எல்லாம் பழையபடி ஆகிவிடுகின்றன. மிஸ்டர் லஞ்சய்யா எங்கேயோ ஒரு நகரத்தின் ஜெனரல் ஆஸ்பத்திரி வாசலில் நின்று கொண்டிருக்கிறார். ஏன்? யாராவது அவரது உறவினர் உடல் நலமில்லையா? அப்படியொன்று மில்லை; உள்ளே வருகிறவர் போகிறவர்களுக்கு அவர் தான் கதவு திறந்துவிட்டு அனுமதி வழங்க வேண்டும். உள்ளே வருகிறவர்கள்? அந்தக் கேட்டுக்கு வெளியே இருந்து மிஸ்டர் லஞ்சய்யாவைப் பார்த்து ஏதோ கெஞ்சுகிறார்கள். லஞ்சய்யா, அவர்கள் மீது சீறி விழுகிறார். பிறகு அவர்கள் தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டும்; முந்தானையிலுள்ள முடிச்சுக்களை அவிழ்த்தும் அவரிடம் எதை எதையோ கொடுக்கிறார்கள். அவைகளை வாங்கும் போது லஞ்சய்யாவின் விழிகள் அவரைச் சுற்றி வட்ட மிடுகின்றன. பிறகு கதவு திறக்கப்படுகிறது. உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நோயாளிகளைப் பார்க்க அவர்களது உறவினர்கள், பிரவேசக் கட்டணம் செலுத்திவிட்ட பெருமகிழ்ச்சியோடு குறிப்பிட்ட “வார்டு”களை நோக்கி ஓடுகிறார்கள். அங்கு எத்தனையோ நல்ல முகங்கள் டாக்டர்களாகத் தொண்டு செய்கின்றன. அங்கே ஒரு முகம்…… ஆம் அதே முகம்……. ஆஸ்பத்திரியில் வாசலில் நின்று கொண்டிருந்த முகம், அந்த பிரசவ வார்டின் பிரதான டாக்டராக உலவிக் கொண்டிருக்கிறது! டாக்டர் லஞ்சய்யாவின் முன்னால் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி கண்ணெல்லாம் புண்ணாக நின்றுகொண்டு, “அய்யா! அய்யா! அவஸ்தை தாங்க முடியலே அய்யா! எப்படியாவது இப்பவே அட்மிட் பண்ணிடுங்க, அய்யா!” என்று கெஞ்சுகிறாள்.

“சீ! நான்சென்ஸ்! கெட் அவுட்!” டாக்டர் லஞ்சய்யா எரிந்து விழுந்தபடி அப்பால் சென்று அதே ஆத்திரத்தின் தொடர்ச்சி கெடாமல் குழந்தை பெற்ற தாய்க்குப் போட வேண்டிய ஊசியைக் குழந்தைக்குப் போடுகிறார். அதற்குள், யாரோ ஒரு ‘பேஷண்ட்’ பத்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்ட, அதை வாங்கும் ஆவலில் அந்தக் குழந்தை இறுதி மூச்சு விட்டதையும் கவனிக்காமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வெளித் தாழ் வாரத்திற்கு வருகிறார்.

அங்கே, முதலில் அட்மிஷனுக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்த அந்த நிறைமாதக்காரி, தரையில் மல்லாந்து படுத்துக் கிடக்கிறாள். அந்தக் காட்சியைக் கண்டு டாக்டர் லஞ்சய்யாவுக்கு ஒரே எரிச்சல்! “விதியற்ற நாய்கள்; இதுகளுக்கு ஏன் பிள்ளையும் குட்டியும்-அட் மிஷனுக்கு ஒரு பத்து ரூபாய் எனக்குப் ‘பாக்கெட் மணி’ கொடுக்க முடியவில்லை; பிரசவத்துக்குக் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி கேட்கிறதோ? நல்ல தார் போட்ட ரோட்டில், வைக்கோலைப்போட்டுப் பிள்ளை பெறுவது தானே!” என மனதுக்குள் திட்டியவாறே, “டே! யாரப்பா அங்கே? இந்தப் பொம்பிளை இங்கே ஏன் படுத்திருக்கிறாள்? எழுப்பி விரட்டு” என்று அங்கு நின்ற ஒருவனிடம் கோபமாக விரட்டுகிறார்.

“அவளை எழுப்ப முடியாதுடா பாவி!” அவள் எம லோகம் போய் விட்டாள்!” என்று பதில் சொன்னவாறே அந்த ஆள் டாக்டரின் மீது புலி போலப் பாய்ந்து விடுகிறான். டாக்டர் லஞ்சய்யாவின் முகத்தில் மாறி மாறிக் குத்துக்கள் “டொமீல்! டொமீல்!” என்று விழுகின்றன.

லஞ்சய்யா கீழே சாய்கிறார்…பரம பாதகா! அக்கிரமக் காரா! சண்டாளா! அரசாங்க தர்ம ஆஸ்பத்திரியில் உன்னைப் போலவும் சில பெருச்சாளிகள்? எத்தனை தாய்களையடா வயிற்றுக் குழந்தையோடு இப்படிக் கொன்றிருக்கிறாய்? புனிதமான இந்த வேலைக்கு உன்னைப்போன்ற புரையோடிப் போன நெஞ்சங்கள் வரலாமா? பாவி!” என்று கத்தியவாறு அந்தச் செத்தவளின் கணவன், கீழே விழுந்த டாக்டர் லஞ்சய்யாவை மிதி மிதி என்று மிதிக்கிறான். அவரது சட்டைப் பையிலிருந்த ‘மணிப்பர்ஸ்’ வெளியே பிதுங்கி, அதற்குள்ளிருந்த பத்து ரூபாய் நோட் டுக்கள் காற்றில் பறக்கின்றன. மிதிபட்டுக் கொண் டிருந்த டாக்டர் லஞ்சய்யா, மாயமாக மறைந்து விடு கிறார். “டே! உன்னை அரஸ்ட் செய்திருக்கிறேன்!” என்ற அதிகாரக் குரல் கேட்டு அந்தக் கர்ப்பிணியின் கணவன் தன் நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்க்கிறான். மிஸ்டர் லஞ்சய்யா, சப்-இன்ஸ்பெக்டர் உருவத்தில் கைத் துப்பாக்கியைக் காட்டி அவனை மிரட்டுகிறார்… காற்றில் பறந்து கொண்டிருந்த பத்து ரூபாய் நோட்டுக்களை அவரது கைகள் ஒன்றாகச் சேர்த்து, யாருக்கும் தெரியாமல் கால் சட்டைப் பைக்குள் திணித்துக் கொள்கின்றன. அதே கைகளால் கர்ப்பிணியின் கணவன் கழுத்தில் ஒரு குத்து விடுகிறார். அவன் சாகத் துணிந்து விட்டவன். இனி என்ன இருக்கிறது; வாழ்க்கையில்? அவளும் போய் விட்டாள்-நல்ல வேளை வயிற்றுக்குள் இருப்பதை வெளியே காட்டாமலே போய்விட்டாள். ஆகவே அவ னுக்கு எந்தத் தடையும் சாவதற்குக் குறுக்கே இல்லை. அதனால் தைரியமாகப் பேசினான்.

“பொது மக்களின் நண்பர்களாக-ஏழைகளின் தோழர்களாக நேர்மையின் உருவங்களாக-நீதியின் நிழல்களாக எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறேன்-அந்த அணியில் இப்படியும் ஒரு பிறவியா?” என்று ஆவேசம் கொப்பளிக்கக் கேள்விக் கணை எழுப்புகிறான். அதற்கு இன்ஸ்பெக்டர் லஞ்சய்யா வெகு மென்மையான பதில் ஒன்றை மிக பவ்யமாகக் கூறுகிறார். “அவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாத போலீஸ் அதிகாரிகள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற முதுமொழியைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவன் நான்; அதனால் நீயும் தப்பலாம்; ஐம்பது இருந்தால் எடு!”

உடனே ஒரு பூகம்ப அதிர்ச்சி- எரிமலையின் தீக் குழம்பு நாலா பக்கங்களிலும் சிதறுகிறது-புயல் காற்று; விஷத்தைக் கக்குகிறது-ஆஸ்பத்திரியின் கட்டிடங்கள் தூள்! தூள் ! ஒரே நெருப்புத் தாண்டவம்! ஊரே எரிகிறது! உலகமே எரிகிறது! சிறிது நேரத்தில் அமைதி!

சந்திர மண்டலத்தை நோக்கி ஒரு ராக்கெட் போகிறது. ஏதோ ஒரு புதிய பொருள் வருகிறதே என்று சந்திரமண்டலத்து மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார் கள். ‘ராக்கெட்’டிலிருந்து மிஸ்டர் லஞ்சய்யா இறங்குகிறார். அந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு வரவேற்கிறார்கள். சந்திர மண்டலம் முழுவதும் மிஸ்டர் லஞ்சய்யாவின் வெற்றிகரமான சுற்றுப்பயணம். ஏராளமான பரிசுகள் குவிகின்றன. தங்கமும் வைரமும் மூட்டை மூட்டையாக அளிக்கப்படுகின்றன. ‘இவைகளையெல்லாம் எடுத்துப் போய் நிலவுலகம் செழிக்கச் செலவு செய்க!” என்று சந்திர மண்டலத்து மக்கள், பிரிவுபசார விழாவின் போது பேசுகிறார்கள்; மிஸ்டர் லஞ்சய்யாவின் முகத்தில் அசடு வழிகிறது. “நிலவுலகமா? என் பிள்ளை குட்டிகள், சொந்தக்காரர்கள் செலவுக்கே இவை போதாதே!” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்.

ராக்கெட் பூமியை நோக்கி வருகிறது. அவரை அனுப்பி வைக்க அரும்பாடுபட்டவர்கள், அவரைச் சூழ்ந்து மாலை மரியாதைகளைச் செய்து சந்திர மண்டலத்து அதிசயங்களைப் பற்றி ஆவலோடு கேட்கிறார்கள். “அதிசயங்களைச் ‘சொல்வதென்றால் அவ்வளவு சாதாரணமா? ஐம்பதாயிரம் ரூபாய் தரவேண்டும்” என்று அறிக்கை மூலம் கண்டிப்பாகத் தெரிவித்து விடுகிறார்-அவர் வெளியிட்ட அறிக்கை எழுத்துக்கு எழுத்து மாறாமல் வந்திருக்கிறதா என்று பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டே வீட்டுமுன் பகுதியில் உள்ள சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவர்; தன்னை அறிந்தும் அறியாத அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார். அப்போது “கவர்ன்மெண்ட் டிரான்ஸ்போர்ட் பஸ்”ஸில் ஏறிக் கொண்டு மிக வேகமாக வந்த எமதர்மன், மிஸ்டர் லஞ்சய்யா வீட்டு வாசல் வந்ததும் ‘ஸ்டாப்’ என்று கத்திக் கொண்டு, பஸ் நிற்பதற்குள்ளாகவே கீழே குதித்து லஞ்சய்யாவின் வீட்டின் முன் பகுதியில் நுழைந்து விடுகிறான். அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டதாக ஒரு கணத்தில் உணர்ந்த மிஸ்டர் லஞ்சய்யா, “யார் அது?” என்று அதட்டுகிறார். அதன்பிறகு கீழ்க்கண்ட உரையாடல் நடந்து முடிகிறது.

“நான் தான் எமதர்மன்!”

“எருமை வாகனம் எங்கே?”

“அரசாங்க இலாகாக்களுக்கு இரவல் கொடுத்திருக்கிறேன்”

“அவர்களது ஆமை வாகனம் என்ன ஆயிற்று?”

“அது ரிப்பேரில் இருக்கிறது!”

“நத்தை வாகனம் கூடவா?”

“அதைத்தான் நகரசபைகளுக்கான நிர்வாகத்திற்கு அனுப்பி விட்டார்களே!”

“ஓகோ! இலாக்காக்களுக்கு எருமையும் நத்தையையும் வைத்துக் கொண்டு தெருவில் மனிதர்கள் மீது மோத மட்டும், மான் வாகனம்; முயல் வாகனங்களை வைத்திருக்கிறார்களோ?”

“அது கிடக்கட்டும்; வா போவோம்!”

“எங்கே?”

“இன்னுமா தெரியவில்லை. நீ செத்து விட்டாய்! யம லோகம் போகலாம் வா;”

“யம லோகமா? அங்கே பஞ்சாயத்து யூனியன்; முனிசிபாலிடி; கார்ப்பரேஷன்; சட்டசபை; மேல்சபை பார்லிமெண்ட், ராஜ்ய சபா முதலியவைகள் உண்டா? கட்சிகள் உண்டா? தேர்தல்கள் உண்டா?”

“ஒரு சனியனும் இல்லை. ஒரே அமைதியான உலகம்.”

“சே! சே! அமைதியான இடமே எனக்குப் பிடிக் காது! என் காரியம் நடக்க அமளி துமளி அதிகம் இருக்க வேண்டும்; அதனால் நான் உன்னுடன் வருவதற்கில்லை”.

“அய்யய்யோ; மிஸ்டர் லஞ்சய்யா நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. பிறகு நான் கடமையிலிருந்து தவறி விட்டேன் என்ற களங்கம் வந்து சேரும்”

“ஓய்; எமதர்மா! உமக்கு அந்தக் களங்கம் வராமல் இருக்க ஒரே வழி என்ன தெரியுமா? நான் உம்முடன் வந்து விட்டால்; என் குழந்தை குட்டிகளுக்கு யார் பாது காப்பு? என்னமோ, எந்தத் தொழிலும் இல்லாத நான் ஒரு வேலையும் அறியாத நான்; திருவுளச் சீட்டின் மூலம் மிகப்பாடுபட்டு இந்த லட்ச ரூபாய் வீட்டையும், ஐம்பதாயிரம் ரூபாய் நிலத்தையும் சேர்த்துவைத்திருக்கிறேன். அது என் சந்ததிக்குப் போதுமா? அதனால் ஒரு நிபந்தனை ; நான் உன்னோடு வருவதாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய்க்கு இப்போதே “செக்” தரவேண்டும்.

இதைக் கேட்டு எமதர்மனுக்குத் தலை கிறுகிறுத்தது; ‘சாவதற்கும் லஞ்சமா?” என்று முணுமுணுக்கிறான்.

நான் அடுத்த ஜென்மம் பிறப்பதாயிருந்தால் அதற்கும் கேட்பேன் தெரியுமா தோழா!”

“தயவு செய்து; நீ அடுத்த பிறவி எடுக்க வேண்டாம்; அதற்கும் சேர்த்து இப்போதே கேட்டுவிடு; கொஞ்சம் “கன்சஷன்” கொடு!”

“பரவாயில்லை; பத்து லட்சமாகக் கொடுத்துடு”

“உடனே எமன்; அங்குள்ள ‘டெலிபோன்’ மூலம்; குபேரா பாங்கிற்குப் போன் செய்து, தகவல் கேட்கிறான் அங்கு எமன் பெயரால் எட்டு லட்சம் தான் இருப்பதாகப் பதில் வருகிறது. எமன் ஆழ்ந்து சிந்திக்கிறான். அவனுக்கு ஒரு முடிவு தோன்றுகிறது. இவனைக் காசாலே தான் சாக அடிக்கவேண்டும்” என்று புரிந்து கொண்டே; ஒரு செக்கை எடுத்து ஏதோ எழுதுகிறான். பிறகு அந்தச் செக்கை நீட்டி;

“இந்தா! காசாலேசா! காசாலே; நீ; சா!” என்றவாறு மிஸ்டர் லஞ்சய்யாவிடம் நெருங்குகிறான். மிஸ்டர் லஞ்சய்யா, “செக்கைப் பார்க்கிறார்; ஐம்பது லட்சம்”.

“ஆ! ஐம்பது லட்சம்!” மிஸ்டர் லஞ்சய்யா வாயைப் பிளக்கிறார்; பிறகு வாயை மூடவே இல்லை; எமன் அவரை ஏமாற்றி அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

”என்னங்க; உங்களைத்தானே அந்தக் காண்ட்ராக்ட்காரன் இன்னைக்கு வந்து கண்டுக்கிறேன்னு சொன்னோனே; வந்தானா?”என்று ஆவலுடன் கேட்டுக்கொண்டு வந்த மிஸ்டர் லஞ்சய்யாவின் மனைவி, கணவனின் தலை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, கீழே மூர்ச்சித்து விழுகிறாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *