
நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்
நாலு பழங்கள்
இந்த ராஜகுமாரிக்குத் திருமணம் ஆகவேண்டும் அழகான அரச குமாரர்கள் பலர் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள முயன்றார்கள். “வெறும் அழகு மட்டும் இருந்தால் போதாது. புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். அவர்களுடைய புத்திசாலித் தனத்தைத் தெரிந்துகொள்ள நான் ஒரு சோதனை வைப்பேன். அதில் யார் தேறுகிறார்களோ அவரையே கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்று அவள் சொன்னாள்.
“எப்படி நீ சோதனை பண்ணுவாய்?” என்று அவள் தந்தையாகிய அரசன் கேட்டான்.
“எனக்கு நாலு பழம் வேண்டும். அந்தப் பழங்கள் இப்படி இருக்க வேண்டுமென்று சொல்லுவேன். அவற்றை யார் கொண்டு வந்து தருகிறாரோ, அவரையே நான் மணப்பேன்” என்று அவள் சொன்னாள்.
“என்ன பழம்?” என்று அரசன் கேட்டான்.
“நாலு வகையான பழங்களை நான் சொல்லு கிறேன். அவற்றைக் கேட்டுக்கொண்டு ஒரு வாரத்தில் கொண்டுவந்து கொடுத்தால் அவரைக் கெட்டிக் காரர் என்று தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வேன்” என்று அவள் சொன்னாள்.
ஒரு நாள் ராஜசபை கூடியது. தனக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்க அரசகுமாரி அந்தக் கூட்டத்தைக் கூட்டினாள். பல தேசத்து அரசகுமாரர் களும் வந்திருந்தார்கள். அரசனும் அரசியும் அவர்களுடைய குருவும் வேறு பல பெரிய மனிதர்களும் சபையில் கூடியிருந்தார்கள்.
அரசன் தன் புதல்வியைப் பார்த்து, “உனக்கு எந்த வகையான பழங்கள் வேண்டுமென்பதைச் சொல். இங்கே வந்திருக்கும் அரச குமாரர்கள் இன் னும் ஒரு வாரத்தில் அந்தப் பழங்களைக் கொண்டு வந்து கொடுக்க முயலுவார்கள். யார் முதலில் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவரையே நீ திருமணம் செய்து கொள்ளலாம்” என்றான்.
உடனே அந்த அரசகுமாரி தன் கருத்தை வெளியிட்டாள்.”எனக்கு வேண்டிய பழங்கள் நாலு, ஒரு பழம் பழமானாலும் காயாகவே இருக்கும். பூப் பூத்தால் அது உதிர்ந்து காய் உண்டாகிக் கனி வருவது தான் இயல்பு. ஆனால் காய் காய்த்தாலும் பழம் பழுத்தாலும் பூ இருக்கும் பழம் ஒன்று வேண்டும். அது இரண்டாவது. மூன்றாவது, பூ மலர்ந்தால் அழகாக இருக்கும். அது காயாகிப் பழுத்தால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள். அதைக் கண்டு அஞ்சுவார்கள். அது மூன்றாவது பழம். பழத்தைத் தின்று அதிலுள்ள கொட்டையை உமிழ்ந்து விடுவது வழக்கம். ஆனால் ஒரு பழம் தின்றாலும் கொட்டைக்குப் பழுது வராது. அது நாலாவது பழம். இந்த நான்கு பழங்களையும் யார் கொண்டு வந்து தருகிறார்களோ, அவர்களுக்கே நான் மாலையிடுவேன்” என்று அரச குமாரி கூறி முடித்தாள்.
சபையில் உள்ள சிலர், “ஏதோ பைத்தியக்காரத் தனமாக இந்தப் பெண் உளறுகிறது. இதைக் கேட் டுக் கொண்டு அரசனும் இந்தச் சபையைக் கூட்டி அந்த உளறலைக் கேட்கும்படி செய்தானே!” என்று பேசிக் கொண்டார்கள்.
வந்திருந்த அரச குமாரர்களில் பலர், “இந்தப் பெண் சொல்லும் பழங்களை நாம் தேடவும் வேண் டாம். இவளைக் கல்யாணம் செய்து கொள்ளவும் வேண்டாம்” என்று சொல்லிப் போய்விட்டார்கள்.
அடுத்தவாரம் வந்தது. மறுபடியும் சபை கூடியது.இப்பொழுது பெரும் கூட்டம் கூடியது. அரச குமாரி கேட்ட அதிசயமான பழங்களை யார் கொண்டு வரப் போகிறார்கள் என்று பார்ப்பதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள்.
அரசனும், அரசியும், குருநாதரும் சபையில் வந்து அமர்ந்தார்கள். அரசகுமாரியும் சபைக்கு வந்தாள். முன்னால் சபை கூடியபோது வந்திருந்த அரசகுமா ரர்களில் பலர் வரவில்லை. சில பேர்களே வந்திருந்தார் கள். அவர்களும் வேடிக்கை பார்க்க வந்தார்களே ஒழிய, அரசகுமாரி சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை.
அப்பொழுது அரசன், “என் பெண் சொன்ன பழங்களை யாராவது கொண்டு வந்திருக்கிறார்களா?” என்று கேட்டான்.
சபையில் அமைதி நிலவியது. எந்த அரச குமாரன் எந்தப் பழங்களைக் கொண்டு வந்திருக் கிறான் என்று தெரிந்து கொள்வதற்கு, வந்திருந்த எல்லோரும் ஆவலாக இருந்தார்கள்.
அப்பொழுது ஓர் அரச குமாரன் எழுந்தான். “நான் அரசகுமாரி சொன்ன நான்கு பழங்களையும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.
எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அரச குமாரி எழுந்தாள்; பழமானாலும் காயாகவே இருக்கும் பழம் எது? என்று கேட்டாள்.
உடனே அந்த அரசகுமாரன் பழுத்து முதிர்ந்து உதிர்ந்த தேங்காய் ஒன்றை எடுத்து வைத்தான்.
“இது நன்றாகப் பழுத்து உதிர்ந்துவிட்டது. என்றாலும் இதைத் தேங்காய் என்றுதானே சொல்லு கிறார்கள்? ஆகையால் பழுத்தாலும் காயாக இருப் பது இது” என்று சொன்னான்.
அரச குமாரியின் முகம் மலர்ந்தது. மற்றவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தார்கள், அடுத்தபடி என்ன வரப்போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருந் தார்கள். அரசகுமாரி, “பழம் பழுத்தாலும் பூ இருக்கும் பழம் எது?” என்று கேட்டாள்.
உடனே அந்த அரச குமாரன் ஒரு வாழைக் குலையை மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்து வந்தான். அந்தக் குலையின் நுனியில் வாழைப் பூ, தொங்கியது. “இதோ பாருங்கள்; பழமும் இருக்கிறது; பூவும் இருக்கிறது” என்று காட்டினான். அரச குமாரிக்கு மகிழ்ச்சி அதிகமாயிற்று.
அடுத்த சோதனையை அரசகுமாரி சொன்னாள். “பூ மலர்ந்தால் அழகாக இருக்கும். ஆனால் காயாகிப் பழுத்தால் அதை யாரும் விரும்பமாட்டர்கள் என்றேன். அந்தப் பழம் என்ன?” என்று கேட்டாள்.
அந்த அரசகுமாரன் ஒரு நெருஞ்சிச் செடியைக் கொத்தோடு எடுத்துக் காட்டினான். அதில் இலையும், பூவும், முள்ளும் இருந்தன. “இதோ பாருங்கள்; இந்தப் பூ மஞ்சளாக அழகாக இருக்கிறது. ஆனால் இந்தப்பூ காய்த்துப் பழமானால் முள்ளாகி விடுகிறது. இதை யார் விரும்புவார்கள்?’ என்று கேட்டான். சபையில் இருந்தவர்கள் குதூகலத்தால் ஆரவாரம் செய்தார்கள்.
இனி நான்காவது சோதனை ஒன்றுதான் பாக்கியிருந்தது. எல்லோருடைய ஆவலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.
‘கொட்டையை உமிழ வேண்டிய அவசியம் இல்லாமல் தின்னும் பழம் எது?” என்று அரசகுமாரி கேட்டாள்.
“இதோ இது தான்” என்று அரசகுமாரன் ஒரு முந்திரிப் பழத்தை எடுத்து வைத்தான். அதில் பழத்துக்கு முன்னாலே கொட்டை ஒட்டிக்கொண்டு இருந்தது.”இந்தப் பழத்தைத் தனியே எடுத்துத் தின்று விடலாமே! விதைக்கு ஒன்றும் நேராதே!” என்று அரசகுமாரன் சொல்லிச் சிரித்தான்.
நான்கு சோதனைகளிலும் வென்ற அரச குமாரனிடம் அரசன் எழுந்து சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டுவந்து தன் அருகே உள்ள ஆசனத்தில் அமர்த்தினான். அங்கேயே அரசகுமாரி அவன் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டாள்.
அதன் பிறகு ஒரு நல்ல நாளில் இருவருக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது.



