
நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்
என்ன தண்டணை கொடுப்பதா?
அந்த அரசனுடைய மனைவிக்கு ஒரு தம்பி இருந்தான். அவளுக்கு அவனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்று ஆசை. அரசனுக்கு மிகவும் வயசான மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்; புத்திசாலி; உலக அநுபவம் மிக்கவர்.
“எவ்வளவு நாளைக்கு இந்தக்கிழட்டு மந்திரியை வைத்துக் கொண்டிருப்பீர்கள்? அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு என் தம்பியை மந்திரியாக்குங்கள்” என்று அரசி நச்சரித்து வந்தாள்.
ஒரு நாள் அரசன் அவளிடம்,”உன் தம்பியை மந்திரி ஆக்குவதில் எனக்கு ஒரு தடையும் இல்லை. ஆனாலும்: அவனுடைய திறமையை ஒருவாறு பரிசோதனை செய்த பிறகு மந்திரி ஆக்கலாம். இல்லா விட்டால், ‘தன் மைத்துனனை மந்திரியாக்கி விட்டான்’ என்று என்னை உலகம் பழிக்கும்” என்றான்.
“அப்படியே செய்யுங்கள். என் தம்பி அறிவில் மட்டமானவனா? அவன் நன்றாகப் படித்திருக்கிறான். அவனைச் சோதனை செய்து பாருங்கள். அப்போது தான் உங்களுக்கு அவன் அருமை தெரியும்” என்று அரசி சொன்னாள்.
சோதனை செய்ய ஒப்புக்கொண்டாளே என்று அரசன் மகிழ்ந்தான். எவ்வாறு சோதனை செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். தன்னுடைய யோசனையை அரசியிடமும் சொன் னான், அவளும் அப்படியே செய்யலாம் என்று ஒப்புக் கொண்டாள்.
ஒருநாள் அரசன் தன் மைத்துனனை வரச்சொன்னான். அரச சபையில் சில முதியவர்களையும், அந்த முதிய மந்திரியையும் வந்து இருக்கச் சொன்னான், அரசியும் உடன் இருந்தாள். அவளுடைய தம்பி அன்று மிக நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்தான்.வாட்ட சாட்டமான அவனைக் கண்டு அரசியின் உள்ளம் பூரித்தது. அவன் நிச்சயமாக மந்திரியாகப் போகிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டாயிற்று.
அரசன், “சோதனையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான். அரசி, “ஆகா, ஆரம்பிக்கலாம்” என்றாள்.
அரசன் தன் மைத்துனனைப் பார்த்துப் பேசினான்.”நேற்று இரவு நான் படுத்துக் கொண்டிருந்த போது ஒரு பயல் வந்தான்.என் மார்பில் உதைத்தான். என் மேல் எச்சில் உமிழ்ந்தான். என் காதைப் பிடித்துத் திருகினான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று கேட்டான்.
அரசியின் தம்பி, “இராத்திரி நடந்ததை இவ்வளவு நேரம் கழித்துச் சொல்கிறீர்களே! அப்பொழுதே உதைத்த அவன் காலை வெட்டியிருக்க வேண்டாமா? துப்பிய அவன் வாயைக் கிழித்துப் போட்டிருக்கலாமே! அவனுடைய கையைத் துண் டித்து விட்டல்லவா மறு காரியம் பார்த்திருக்க வேண்டும்?” என்று படபடப்பாகப் பேசினான்.
அவன் பேச்சைக் கேட்ட போது அரசன் சிரித்துக் கொண்டான். அரசிக்கோ கோபத்தால் கண்கள் சிவந்தன. அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அரசன் அவளைக் கையமர்த்திச் சும்மா இருக்கச் சொன்னான்.
பிறகு தன் மந்திரியாகிய முதியவரைப் பார்த்து அரசன், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.
“உங்களை உதைத்த காலுக்குத் தண்டையும் கொலுசும் பண்ணிப் போடுங்கள். காதைத் திருகிய கைக்குத் தங்கக்காப்புப் போடுங்கள். உமிழ்ந்த வாயில் கல்கண்டு கொடுங்கள்” என்று அந்த மந்திரி சொன்னார்.
அரசியின் முகம் மலர்ந்தது.
“ஏன் அப்படிச் சொல்கிறீகள்? இவள் தம்பி அவனைத் தண்டிக்கும்படி அல்லவா சொல்கிறான்?” என்று அரசன் கேட்டான்.
“அரசே, உங்களை இரவில் அவ்வளவு தைரியமாக வந்து உதைப்பதற்கும் உமிழ்வதற்கும் வேறு யாருக்கு முடியும்? அரண்மனையில் கட்டுக்காவல் இருக்கும் போது கொடியவன் யாராவது வர முடியுமா?அப்படி ஒருவன் வந்தால் நீங்கள் உடனே எல்லாரையும் எழுப்பிக் கட்டி உதைக்கச் சொல்ல மாட்டீர்களா?” என்று மந்திரி கேட்டார்.
“அப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவனுக்குத் தண்டை கொலுசு போட வேண்டும் என்று சொல்கிறீர்களே! ஏன்?” என்று அரசன் கேட்டான்.
“உங்கள் குழந்தைக்கு அப்படித்தானே செய்ய வேண்டும்? அவன்தானே அப்படியெல்லாம் செய்தான்? அப்படிச் செய்ததனால் உங்களுக்கும் அரசிக் கும் எவ்வளவு சந்தோஷம் உண்டாகியிருக்கும்!” என்றார் மந்திரி.
சரியாகச் சொன்னீர்கள்!” என்று அரசியே மகிழ்ச்சியுடன் சொன்னாள். அதோடு, “இந்த முரடனை என் தம்பி என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இவனுக்கு மந்திரிப் பதவி ஒரு கேடா?” என்று உணர்ச்சியுடன் இரைந்தாள்,
அந்த மைத்துனன் தலையைக் குனிந்து கொண்டான்.
“இவனுக்கு உலக அநுபவம் போதாது, இவனை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்?” என்று மந்திரி சமாதானம் செய்து வைத்தார்.
அதற்குப் பின் அரசி தன் தம்பியைப் பற்றிய பேச்சையே எடுக்கிறதில்லை.



