நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

குழந்தையும்  திருடர்களும்

குழந்தைக்கு அம்மா பாடம் சொல்லிக் கொடுத் தாள். சின்னச் சின்ன வாக்கியங்களாக அதற்குச் சொல்லிக்கொடுத்து அதை ஒப்புவிக்கச் சொன்னாள். நாம் அடிக்கடி காணும் பொருள்களையெல்லாம் காட்டி, அவற்றின் பெயர்களை வாக்கியங்களில் வைத்து, அந்த வாக்கியங்களைச் சொல்லிக் கொடுத் தாள். குழந்தை அந்த வாக்கியங்களை அப்படியே ஒப்புவித்தது. அதன் குரல் கணீர் என்று இருந்தது.

“அதோ பார்: தென்ன மரம் எவ்வளவு உயரமாக இருக்கிறது! தென்ன மரம் நிற்கிறது என்று சொல் பார்க்கலாம்” என்று அம்மா சொல்லிக் கொடுத்தாள்.

குழந்தை, “தென்ன மரம் நிற்கிறது, தென்ன மரம் நிற்கிறது” என்று உருப் போட்டது.

‘பெருச்சாளி பார்த்திருக்கிறாயோ? அது சுவரை யெல்லாம் குழி பறிக்கும். குடு குடு என்று ஓடும்” என்றாள் அம்மா.

“பெருச்சாளி என்றால் என்ன அம்மா?” என்று கேட்டது குழந்தை.

“எலி பார்த்திருக்கிறாய் அல்லவா? அது மாதிரி தான் இருக்கும். ஆனால் மிகவும் பெரிசாக இருக் கும்” என்றாள் தாய்.

‘இவ்வளவு பெரிசாக இருக்குமா?” என்று குழந்தை தன் கையை விரித்துக் காட்டியது.

“ஆமாம், அவ்வளவு பெரிசாகத்தான் இருக் கும்” என்றாள் அம்மா.

‘ஆந்தை தெரியுமா?”

“தெரியாது.”

“அது ஒரு பட்சி. கண் உருண்டையாக இருக் கும். கொட்டக் கொட்ட விழிக்கும்.”

“ஆந்தை முழியன் என்று பக்கத்து வீட்டுப் பையனை யாரோ சொன்னார்கள்; கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; ஆந்தைக்கு விழி பெரியது. அது விழித்தால் பயமாக இருக்கும்.”

ஆந்தை விழிக்கிறது’ என்று சொல்லிப் பார்த் துக் கொண்டது, குழந்தை.

”நரி பார்த்திருக்கிறாயோ?” அம்மாவின் கேள்வி இது.

“இல்லையே!”

“நாய் மாதிரிதான் இருக்கும். ஆனால் வால் புஸு புஸு என்று இருக்கும். நாயை விட வேகமாக ஓடும்.

“இங்கே நரி இருக்கிறதோ?”

“இங்கேயெல்லாம் இருக்காது. காட்டில்தான் இருக்கும்.”

“ஓ! நரி ஓடும்; வேகமாக ஓடும்; இல்லையா?”

‘ஆமாம்.’

“நரி ஓடுகிறது” என்று குழந்தை சொல்லிப் பார்த்தது.

அதோடு அம்மா அன்று சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டாள்.

குழந்தை அம்மா சொல்லிக் கொடுத்த நான்கு விஷயங்களைத் திருப்பித் திருப்பி யோசித்து அந்த நாலு பிராணிகளையும் பற்றியே சொல்லிக் கொண்டி ருந்தது.”தென்னமரம் நிற்கிறது. பெருச்சாளி சுவரைப் பறிக்கிறது. ஆந்தை விழிக்கிறது. நரி ஓடுகிறது” என்று மனப் பாடம் செய்து கொண்டது.

இரவு வந்து விட்டது. ஆறு மணிக்கே சாப்பிட்டு விட்டுக் குழந்தை படுத்து உறங்கி விட்டது. ஆனால் பாதி ராத்திரியில் அதற்கு விழிப்புக் கொடுத்து விட்டது. தான் அறிந்த விஷயங்களைச் சொல்லிப் பார்க்கவேண்டும் என்று அதற்குத் தோன்றியது. பாடம் படிப்பது போல அந்த வாக்கி யங்களைச் சொல்ல ஆரம்பித்தது.

அப்போது அந்த வீட்டில் திருடுவதற்கு இரண்டு திருடர்கள் வந்தார்கள். சுவரில் கன்னம் போட்டு உள்ளே புகுந்து திருடுவதாக எண்ணி வந்திருந்தார்கள்.

அப்போது குழந்தை சற்றுப் பலமாக, “தென்ன மரம் நிற்கிறது” என்றது. அந்த வார்த்தைகள் திருடர்களின் காதில் விழுந்தது

”யாரோ விழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் போய் விடலாம்” என்று ஒரு திருடன் சொன் னான்.

“போடா பைத்தியக்காரா! இவ்வளவு தூரம் வந்து விட்டுச் சும்மா போவதா? ஏதோ குழந்தை தூக்கத்தில் உளறுகிறது. அதைக் கேட்டுப் பயப்பட லாமா?” என்றான் மற்றொருவன்.

உடனே கன்னக்கோலை எடுத்துச் சுவரைத் துளை போட்டுப் பறிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது குழந்தை, “பெருச்சாளி பறிக்கிறது” என்றது. அதைக் கேட்டுத் தைரியம் சொன்ன திருடனுக்கே சந்தேகம் வந்து விட்டது. உற்றுக் கவனித்தான்.

இப்போது குழந்தை, “ஆந்தை விழிக்கிறது” என்றது. அந்தத் திருடனுக்கு உண்மையில் பயம் தோன்றியது. ‘நாம் செய்கிறதை அந்தக் குழந்தை கவனித்து விட்டுத்தான் சொல்கிறது’ என்று நினைத்தான்.

மறுபடியும் குழந்தை, “ஆந்தை கொட்டக் கொட்ட விழிக்கிறது” என்று சொல்லியது.

“ஓ! நாம் ஏமாந்து விட்டோம். யாரோ குழந்தைக் குரலில் பேசுகிறார்கள். நம்மைக் கண்டு கொண்டிருக்க வேண்டும்” என்று எண்ணித் திருடர் கள் ஓடத் தொடங்கினார்கள்.

அப்போது அந்தக் குழந்தை,”நரி ஓடுகிறது” என்று சொன்னது அவர்கள் காதில் விழுந்தது.

“சந்தேகமே இல்லை. நாம் இங்கே இருக்கக் கூடாது.ஒடிப் போகத்தான் வேண்டும்” என்று எண்ணி அவர்கள் ஓடி விட்டார்கள்.”நரி வேகமாக ஓடுகிறது” என்று மறுபடியும் அந்தக் குழந்தை சொன்னது, திருடர்களுக்குப் பொருத்தமாக இருந்தது.

அந்தத் திருடர்களால் அந்த வீட்டில் திருட முடியாமல் போயிற்று.

(ஒரு நாடோடிக் கதையைத் தழுவியது.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *