
நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்
நாக மாணிக்கம்
கண்ணனுக்கு மலை ஏறுவதென்றால் மிகவும் பிடிக்கும். அவன் ஊருக்கு அருகில் ஒரு மலை இருந்தது. அதில் ஏறிப் பார்க்கவேண்டும் என்று அவ னுக்கு ஆசைதான். ஆனால் மலையின் சாரலில் உள்ள காடுகளில் சிங்கம், புலி முதலிய மிருகங்கள் இருந் தன். அதனால் அவன் அதன்மேல் ஏறப் பயப்பட்டான்.
அந்த மலையின் மேல் ஓர் ஆலமரம் இருக்கிற தென்றும், அதில் பல நாகப் பாம்புகள் இருக்கின் றன என்றும், அதன் உச்சியில் ஒரு நாக மாணிக்கம் இருக்கிறதென்றும் மக்கள் சொல்லிக் கொண்டார்கள்.
அந்த ஊர் அரசனுக்கும் இந்தச் செய்தி தெரிய வந்தது. அவனுக்கு அழகான பெண் ஒருத்தி இருந் தாள். அவளுக்குத் திருமணம் ஆக வேண்டும். “மலையின் மேல் உள்ள நாக மாணிக்கத்தை யார் கொண்டு வந்து தருகிறார்களோ, அவனுக்கு என் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று அரசன் பறை அறையச் செய்து தெரிவித்தான். அந்த அழகான அரசகுமாரியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அரச குமாரர் கள் பலர் ஆசைப்பட்டார்கள். அரசன் போட்ட நிபந்தனையை நிறைவேற்றினால்தானே அவள் கிடைப்பாள்? சில பேர் அந்த மலையின் மேல் ஏறிக் காட்டை அடைந்ததும், அங்கே இருந்த சிங்கம், புலியைக் கண்டு பயந்து திரும்பி விட்டார்கள்.
தன் பெண்ணுக்குச் சிறந்த வீரனாகிய ஒருவன் கணவனாகக் கிடைக்கவில்லையே என்று அரசன் வருந்தினான். கண்ணன் அந்த மலையில் ஏற முடியவில்லையே என்று எண்ணி வருந்தினான்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். எந்தச் சாமியாரைக் கண்டாலும் அவரை வணங்கி ஆசி பெறுவது கண்ணன் வழக்கம். ஆகவே அந்தச் சாமியாரைக் கண்டதும் அவன் வணங்கினான். பழங்களை வாங்கிக்கொண்டு வந்து தந்தான். அவனுடைய நல்ல குணத்தைக் கண்ட சாமியார். மனம் மகிழ்ந்து, “தம்பி,உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்” என்றார்.
“சாமி, இந்த மலையின்மேல் ஏறி உச்சியில் ஆலமரத்தில் உள்ள நாகமாணிக்கத்தை எடுத்து வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் மலையிலுள்ள காடுகளில் புலியும், சிங்கமும், வேறு மிருகங்களும் இருக்கின்றன. ஆலமரத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றனவாம். அவைகளை யெல்லாம் தாண்டிக்கொண்டு போய் அந்த நாக மாணிக்கத்தை எப்படி எடுப்பது? தாங்கள் ஏதாவது வழி சொல்லித்தந்தால் அப்படியே செய்வேன்’ என்று கண்ணன் சாமியாரிடம் வேண்டிக் கொண் டான்.
சாமியார் சிறிது திருநீறு அளித்து அதைப் பூசிக் கொள்ளச் சொன்னார். பிறகு ஒரு தடியையும் நீளமான கயிறு ஒன்றையும் அவனிடம் கொடுத்தார். ‘இந்தத் தடியினால் காட்டு மிருகங்களை அடித்துக் கொன்று விடலாம். இந்தக் கயிற்றில் சுருக்குப் போட்டுச் சிறிய மிருகங்களையும் பாம்புகளையும் கொன்று விடலாம்” என்று சொன்னார், கண்ணன் அந்த இரண்டையும் வாங்கிக் கொண்டான்,
சாமியார் சொன்ன தைரியத்தின்மேல் அவன் அந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு மலையின் மேல் ஏறலானான். காட்டுக்கு வந்தவுடன் ஒரு சிங்கம் கனைத்துக் கொண்டு வந்தது. கண்ணன் பயப்படாமல் சாமியாரை நினைத்துக்கொண்டு தன் கையில் இருந்த தடியினால் அதை அடித்தான். அது அங்கேயே உயிரற்று விழுந்து விட்டது. பிறகு “உர் என்று ஒரு புலி சீறிக்கொண்டு வந்தது. சிங்கத்தைக் கொன்றதனால் தைரியம் அடைந்த கண்ணன் அதை யும் தடியால் அடித்தான். அதுவும் இறந்தது. அப்பால் ஓர் ஓநாய் வந்தது. கண்ணன் கயிற்றில் சுருக்குப் போட்டு அதன் கழுத்தில் வீசி இழுத்தான். சுருக்கு இறுகி ஓநாய் வாயைப் பிளந்துகொண்டு பிணமாக விழுந்தது. அடுத்தபடி ஒரு கரடி வந்தது. அதைத் தடியால் அடித்து விழப்பண்ணினான். யானை வந்தது. அதையும் அடித்தான். இவ்வாறு எதிர்ப் பட்ட மிருகங்களையெல்லாம் அடித்து விழச்செய்து காட்டைக் கடந்து மலையின்மேல் ஏறினான்.
மலை உச்சியை அடைந்து அங்கே இருந்த ஆலமரத்தைப் பார்த்தான். அதில் பெரிய பெரிய நாகப் பாம்புகள் தொங்கிக்கொண்டிருந்தன. கண்ணனைக் கண்டவுடன் அவை புஸ், புஸ் என்று சீறின. கண்ணன் பயப்படவில்லை. சிலவற்றைத் தடியால் அடித்துக் கொன்றான். சிலவற்றைக் கயிற்றால் சுருக்குப் போட்டுப் பிணமாக்கினான். பாம்புகளைக் கொல்வதில் நெடு நேரம் கழிந்தது. அதனால் அவனுக்குக் களைப்பாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அருகில் மா மரம், ஆப்பிள் மரம் எல்லாம் இருந்தன. அங்கே ஒரு குளம் கூட இருந்தது. அந்தக் குளத்தில் இறங்கி நீராடினான்.உடம்பிலே தெம்பு உண்டாயிற்று. மரத்தின் மேல் ஏறிப் பழங்களைப் பறித்துத் தின்றான். இப்போது அவனுக்குப் பசி தீர்ந்தது. உற்சாகம் உண்டாயிற்று.
பிறகு மெல்ல அந்த ஆலமரத்தில் ஏறினான். பொந்தில் ஏதாவது பாம்பு இருக்குமோ என்று ஜாக்கிரதையாகக் கவனித்தபடியே ஏறினான். சின்னப் பாம்புகள் ஒன்று இரண்டு இருந்தன. பெரிய பெரிய மிருகங்களையும், பாம்புகளையும் அடித்துக் கொன்றவனுக்கு அவை எம்மாத்திரம்? அவற்றையும் அடித்து எறிந்துவிட்டு ஆலமரத்தின் உச்சிக்கே ஏறினான்.
ஆ! அங்கே அந்த நாகமாணிக்கம் பள பளவென்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. உச்சிக் கிளையில் இலைக் கொத்துக்கு நடுவில் சிறிய அக்கினிக் குஞ்சு போல அது மின்னிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை எடுத்துத் துடைத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டான்.
மெல்ல மரத்தை விட்டு இறங்கி, தான் வந்த காட்டையும் தாண்டி, அடிவாரத்துக்கு வந்தான். தன் வீட்டுக்குச் சென்று நாகமாணிக்கத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினான். மிகவும் களைப்பாக இருந்ததனால் அன்று படுத்து நன்றாகத் தூங்கினான்.
விடிந்ததும் எழுந்து நீராடிவிட்டு நாகமாணிக்கத்தை எடுத்துக் கொண்டு அரசனிடம் போய் அதைக் காட்டினான். அழகாகவும், பலசாலியாகவும். இருந்த கண்ணனைக் கண்டான் அரசன். அவன் செய்த வீரச் செயலை மெச்சி அந்த நாக மாணிக்கத்தை வாங்கிக்கொண்டான். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்.
கண்ணன் நாக மாணிக்கத்தைக் கொண்டு வந்து விட்டான் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. அவனைப் பார்க்க எல்லாரும் வந்து கூடினார்கள்.
அரசன் தன் மகளைக் கண்ணனுக்கு மிகவும் விமரிசையாகக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். அந்த நாகமாணிக்கத்தைத் தன் பெண்ணுக்கே சீதனமாகக் கொடுத்தான்.
கண்ணனுக்கு மாணிக்கம் போன்ற அரசகுமாரி கிடைத்தாள்; அவன் வீரச்செயல் செய்து எடுத்து வந்த நாகமாணிக்கமும் கிடைத்தது.



