நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

பசித்த முனிவர்

ஒரு காட்டில் ஒரு முனிவர் ஒரு மரத்தடியில் தவம் பண்ணிக் கொண்டிருந்தார். கண்கள் மூடிய படியே அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மூன்று மாதம் அப்படித் தவம் செய்வார். மூன்று மாதம் முடிந்த பிறகு அவர் கண்ணைத் திறப்பார். அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு பெரிய பழம் விழும். நீராடி விட்டு வந்து அதை உண்டு ஓரளவு பசியைப் போக்கிக் கொள்வார்.

அடுத்த நாளிலிருந்து மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்ய உட்கார்ந்து விடுவார். மறுபடியும் மூன்று மாதம் கழித்துக் கண்ணைத் திறப்பார். அப்பொழுதும் அந்த மரத்திலிருந்து ஒரு பழம் விழும். அதை உண்பார். இப்படியே ஒவ்வொரு மூன்று மாதமும் நடந்து வந்தது.

இந்த முறை அவர் கண் விழிக்க வேண்டிய நாள் வந்தது.அடுத்த நாள் அவர் கண்விழித்துப் பழத்தை உண்ண வேண்டும். கண் விழிக்க வேண்டிய தற்கு முதல் நாள் அங்கே ஒரு வேடன் வந்தான். மரத்தில் இருக்கும் பழத்தைப் பார்த்தான். அவன் நாக்கில் நீர் ஊறியது. அந்த மரத்தின் மேல் ஏறி அந்தப் பழத்தைப் பறித்துத் தின்றுவிட்டு வந்த வழியே போனான்.

மறுநாள் முனிவர் கண்ணைத் திறந்தார். அண்ணாந்து மரத்தைப் பார்த்தார். அங்கே பழம் இல்லை. அவருக்கு அதிகப் பசியாக இருந்தது. யாரோ அதைப் பறித்துத் தின்றிருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார். பசியோடு அவருக்குக் கோபமும் வந்தது. அந்தப் பழத்தைத் தின்றவனுக்குக் கடுமையான வயிற்றுவலி உண்டாகட்டும்” என்று சாபம் இட்டார். நீராடி விட்டு வந்து வேறு பழமுள்ள மரத்தைத் தேடிச் சென்று அதிலிருந்த பழத்தைத் தின்று பசியாறினார். ஆனாலும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வழக்கப்படி தாம் அமர்ந்திருந்த மரத்தின் அடிக்கு வந்து கண்ணை மூடித் தவம் செய்ய ஆரம்பித்தார்.

பழத்தைத் தின்ற வேடன் அந்தக் காட்டில் வேறு ஓரிடத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தான். முனிவர் இட்ட சாபத்தால் அவனுக்குப் பொறுக்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது. துடித்துப் போனான். ஏதேதோ பச்சிலையைத் தின்று பார்த்தான். வயிற்றுவலி அடங்கவே இல்லை.மரத்தடியில் முனிவர் இருந்ததை அவன் பார்த்திருக்கிறான். அவரிடம் போனால் அவர் தன் வயிற்றுவலியைத் தம் முடைய தவவலிமையினால் தீர்க்கக்கூடும்

என்று எண்ணி வயிற்றைப் பிடித்துக்கொண்டே அங்கே போனான்.

முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். நல்ல வேளையாக மறுநாள் அவர் கண் விழித்தார். அப்போது அந்த வேடன் அவர் காலில் விழுந்து, “முனிவர் பெருமானே, வயிற்றுவலியால் மிகவும் சங்கடப்படுகிறேன். தாங்கள் இதைத் தீர்த்து அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.

முனிவர், “நீ இதற்கு முன் இங்கே வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

”வந்திருக்கிறேன். இந்த மரத்தில் இருந்த பழத்தைத் தின்றேன். அதிலிருத்து வயிற்றுவலி பிடித்துக் கொண்டது” என்று அழுது கொண்டே சொன்னான்,

“அந்தப் பழம் எனக்காக இருப்பது. மூன்று மாசத்துக்கு ஒருதரம் நான் தவம் கலைந்து அந்தப் பழத்தை உண்டு பசி ஆறுவேன். போன முறை அந்தப் பழத்தைக் காணவில்லை. அதனால் பழத்தை உண்டவனுக்கு வயிற்று வலி உண்டாகட்டும் என்று சாபம் இட்டேன். என் சாபம் பலித்து விட்டது” என்று முனிவர் சொன்னார்.

“சுவாமி! என்னை மன்னிக்க வேண்டும். நான் தெரியாமல் செய்து விட்டேன். இந்த வயிற்று வலியை நீங்கள் தீர்த்து வைத்தால் நான் உங்க ளுக்குக் காவலாக இருப்பேன். வேறு யாரும் இந்தப் பழத்தைத் தொடாதபடி பார்த்துக் கொள்வேன், ஐயோ! வயிற்றுவலி தாங்க முடியவில்லையே! சுவாமி! எப்படியாவது இதைப் போக்கி விடுங்கள்” என்று வேடன் மறுபடியும் காலில் விழுந்து கெஞ்சினான்.

”உன் வயிற்றுவலியை நான் போக்கிவிடுகிறேன். ஆனால் அதற்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். நான் சொல்கிற நிபந்தனையின்படி நீ நடந்து வர வேண்டும்” என்று முனிவர் கூறிய போது, “சுவாமி! நீங்கள் எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.எப்படியாவது என் வயிற்றுவலியைத் தீர்த்தருள வேண்டும். இனிமேல் தான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்” என்று வேடன் கதறினான்.

”நான் சொல்கிற நிபந்தனை இதுதான்.நீ இனி மேல் எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது. பழம், காய், கிழங்கு, சோறு இவைகளையே சாப்பிட வேண்டும். எந்தப் பிராணியையும் அடித்துத் தின்னக் கூடாது. இப்படிச் சத்தியம் செய்து தருவாயா?” இப்படி முனிவர் கேட்டார்.

“இதோ, இப்போதே சத்தியம் செய்து தருகிறேன். என் தலைமேல் ஆணையாக, நான் எந்தப் பிராணியையும் கொல்ல மாட்டேன்; மாமிசத்தைத் தின்னவும் மாட்டேன்” என்று வேடன் சத்தியம் செய்து கொடுத்தான்.

அதைக் கேட்ட முனிவர் அவனைப் பக்கத்தில் வரச் செய்து சுவாமியின் திருநாமத்தைச் சொல்லித் தம்மிடம் இருந்த விபூதியை எடுத்து அவன் வயிற்றின் மேல் தடவினார். என்ன ஆச்சரியம்! அவன் வயிற்று வலி நின்று விட்டது.

வேடன் மறுபடியும் விழுந்து முனிவரை வணங் கினான்.

முனிவர் அவனுக்கு ஆசி கூறி அனுப்பினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *