
நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்
வீமனுக்கு இட்ட வேலை
தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகா தேவன் என்ற ஐந்து பேர்களும் பாண்டு என்ற அரசனின் புதல்வர்கள். அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்று சொல்வார்கள். தருமர் அறத்தையே எண்ணி வாழ்கிறவர். வீமன் மிக்க பலசாலி. அர்ச்சுனன் வில்வித்தையில் சிறந்தவன். நகுலன் குதிரைகளை ஓட்டுவதில் வல்லவன். சகாதேவன் பெரிய ஞானி.
இந்தப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யும்படி நேர்ந்தது. அந்தக் காலத்தில் ஒரு நாள் துர்வாச முனிவர் அவர்களிடம் வந்தார். “தர்மராஜாவே, நான் காட்டில் தவம் செய்கிறேன். எனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய யாராவது இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். என்மனம் அறிந்து வேலை செய்யும் ஓருவன் வேண்டும்” என்று தர்மரைப் பார்த்துச் சொன்னார்.
தர்மர், “நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம். எங்களுக்குள் யாரைத் தாங்கள் விரும்பினாலும் வருகிறோம்” என்றார்.
துர்வாசர் வீமன் பலசாலியாக இருப்பதைப் பார்த்து அவனையே அழைத்துக்கொண்டு சென்றார். வீமனும் நல்ல காரியம் செய்ய வாய்ப்புக் கிடைத் தது என்று அவருடன் போனான்.
“முனிவர் பெருமானே, நான் எந்த விதமான பணிகளைச் செய்யவேண்டும்?” என்று வீமன் கேட் டான்
“நான் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். அதற்குப் பல்குச்சி கொண்டு வந்து தர பிறகு நீராடவேண்டும். அதற்கு மலையடி வாரத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும். ஜபதபங்கள் முடித்த பிறகு நான் உண்ணுவதற்குப் பழங்களைப் பறித்துக்கொண்டுவந்து தரவேண்டும்” என்றார்.
“தங்களுக்குப் பணிவிடை செய்வது என் பாக்கியம்” என்று சொல்லி வீமன் முனிவரை வணங்கினான்.
முதல் நாள் காலையில் அவன் ஒரு கட்டுப் பல் குச்சியை ஒடித்துக் கொண்டு வந்து முனிவரிடம் கொடுத்தான். அதைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்து போனார். பெரிய பெரிய குடங்கள் நிறையத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான். முனிவர் என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு நீராடினார். தவம் செய்ய அமர்ந்தார். அவர் கண் விழித்தபோது தம் முன் ஒரு பெரிய குவியலாகப் பழங்கள் இருப்பதைக்கண்டார். அவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.வயிறார அந்தப் பழங்களை உண்டார்.
நான்கு நாட்கள் இப்படியே வீமன் செய்துவந்தான். ஒரு நாள் இரவு, நான் கொஞ்சம் வெளியில் போய்வருகிறேன். ஒரு நாள் வரமாட்டேன். நாளைக்கு வேண்டியவற்றை யெல்லாம் இன்றே கொண்டுவந்து வைத்து விடுகிறேன்’ என்று சொல்லி விடைபெற்றான். தன்னுடைய சகோதரர்களைப் பார்க்கப் போவான் என்று அவர் நினைத்தார்.
சொன்னபடியே இரண்டாவது நாள் வீமன் வந்தான். முனிவர் காலையில், ‘பல்குச்சி வேண்டும் என்றார்.
“இங்கே வாருங்கள்’ என்று வீமன் முனிவரை அழைத்துக் கொண்டு சென்றான். என்ன ஆச்சரியம்! ஆசிரமத்துக்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் ஒரு பக்கம் கருவேல மரங்கள், மற்றொரு பக்கம் பலவகையான பழமரங்கள்.
“இது என்ன, புதிய படைப்பாக இருக்கிறதே! இவையெல்லாம் இங்கே எப்படி வந்தன?” என்று ஆச்சரியத்துடன் முனிவர் வீமனை வினவினார்.
முனிபுங்கவரே, மலையருவியிலிருந்து ஒரு கால்வாயையே பறித்துத் தங்கள் ஆசிரமத்தின் வழியே போகும்படி செய்திருக்கிறேன். இதன் கரையில் இதோ பாருங்கள், கருவேல மரங்கள். தங்களுக்கு வேண்டிய படி குச்சியை ஒடித்துப் பல் துலக்கலாம். இந்தக் கால் வாயில் மனம்போல அமிழ்ந்து நீராடலாம். அதோடு பழ மரங்களை மண்ணோடு பேர்த்து வந்து நட்டிருக்கிறேன். ஜபதபம் முடிந்த பிறகு வேண்டிய பழங்களைப் பறித்து உண்ணலாம். நான் செய்ய வேண்டிய வேலை வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்; செய்கிறேன்” என்று சொல்லி கை கட்டி நின்றான் வீமன்.
அடேயப்பா! நீ அசகாய சூரன் அப்பா! உனக்கு வேலை கொடுக்க நம்மால் முடியாது. எனக்கு வேண்டி யவற்றையெல்லாம் ஒவ்வொரு நாளும் தேடி அலையாமல், ஆசிரமத்துக்கு அருகிலே கிடைக்கும்படி செய்துவிட்டாய். நீ தீர்க்காயுளுடன் வாழவேண்டும். இப்போதைக்கு உனக்குக் கொடுக்கும் வேலை என் னிடம் இல்லை. நீ சௌக்கியமாகப் போய்வா” என்று முனிவர் சொல்லி அவனை வழியனுப்பினார்.
“எப்போதும் எந்த வேலையும் நான் செய்யக் காத்திருக்கிறேன்” என்று சொல்லி அவன் புறப்பட்டு விட்டான்.



