
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்
“சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்,
பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் ளருளும் மாற்பேறரே.”
– திருநாவுக்கரசு சுவாமிகள்
1. பழைய வேதத்தில் சாதி இல்லை
சைவசமயமானது அருள் ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும் அவன் அடியார் மாட்டும் ஏனையெல்லா உயிர்கள் மாட்டும் அன்புபூண்டொழுகும் ஒழுக்கத்தையும் அறிவுறுத்துவதென்று உணரும் நல்வினை இல்லாத போலிச் சைவர் சிலர் சாதிவேற்றுமையே தாம் சைவசமயத்தாற் பெறும் மெய்யுணர்வாகும் என்று மயங்கி உணர்ந்து, அம் மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்து விளக்கிவரும் தவ வொழுக்கமுடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமை யாலும் இழிந்ததன்மையாலும் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இகழ்ந்து பேசுதலுஞ் செய்கின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்கற் பாலரே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற்பால ரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ம் மொழிகளையும் அறிவுடையார் ஒரு பொருட்டாக எண்ணாராகலின் அவர் கூறும் பழிச் சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மட்டும் ஒரு சிறிது எடுத்துக்காட்டி மறுத்தல் அவர் கூறியவற்றைக் கண்டு ஆராய்ச்சி யுணர்வில்லாதார் மயங்காமைப் பொருட்டேயாம்.
சாதிவேற்றுமை பழையகாலந்தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை.
சாதிவேற்றுமை பழமையாக உள்ளதென்றே கொண்டாலும், அதனைத் தழுவியொழுகல் வேண்டுமென்பது பகுத்தறிவில்லார் கூற்றாம். பழையனவெல்லாம் நல்லன வாதலும் இல்லை, புதியனவெல்லாம் தீயனவாதலும் இல்லை; பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவசித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய அடிகள் தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா என்று அறிவுறுத்தருளினமையுங் காண்க.
இஞ் ஞான்றுள்ள பல்வகை மக்கட்பிரிவினரும் தத்தமக்குப் பண்டுதொட்டே உரிய கடமைகளிலாவது பிறழாமல் வாழ்கின்றனரோ வென்றால் அதுவுமில்லை. பார்ப்பனரிற் பெரும்பாலார் தமக்கு உரிய நூல் ஓதுதல், வேள்விவேட்டல், பிறர்கொடுக்கும் பொருளை யேற்று வயிறுவளர்த்தல் முதலான தொழில்களை அறவே கைவிட்டு ஆங்கில நூல்களைக் கற்றுத், தம்மால் மிலேச்சராகக் கருதப்பட்ட வெள்ளைக்காரரின் கீழ் அலுவல்களில் அமர்ந்து, அவர்கள் ஏவிய பற்பல தொழில்களையும் செய்துவருகிறார்கள் அல்லரோ? இங்ஙனமாகத் தமக்குரிய தொழில்களைக் கைவிட்டு, அரசரின்கீழ் அலுவல் பார்ப்போர் பார்ப்பனர் ஆகமாட்டார் என்று மனுமிருதி (3, 4) வற்புறுத்திக் கூறியும், அரசரின்கீழ் ஊழியம் செய்வதே இப்போது அவர்கட்கு இயற்கையாய் விட்டதன்றோ? கடல்கடந்து வேற்றுநாடு களுக்குப் போதல் பார்ப்பனர் களுக்கு விலக்கப்பட்டிருந்தும் (மனு, 3, 158), அவர்களிற் பலர் கடல்கடந்து சென்று ஆங்கிலங் கற்றும், பொருள் தேடியுந் திரும்பிவந்து தம்மினத்தவரோடு உறவுகலந்து பார்ப்பனரிற் சிறந்தோராகக் கருதப்படுதலை நாம் காண்கின்றனம் அல்லமோ? உணவு சிற்றுண்டி விற்றலாலும், இசைபாடு தலாலும், சோதிடஞ் சொல்லுதலாலும், சம்பளம் பெற்றுக் கொண்டு பிறர்க்குக் கல்வி கற்பித்தலாலும் உயிர் பிழைப் போர் பார்ப்பனர் ஆகமாட்டார், அவர் மிக இழிந்தோரே யாவர் என்று மனமிருதி (3, 152, 155, 156, 162) நன்கு வலியுறுத்திச் சொல்லியும், இப்போது இத்தகைய தொழில் களைச் செய்து வயிறு வளர்த்தலே அவர்கட்கு இயற்கையாய் வந்து விட்டதன்றோ? இன்னும் ஆவின் (பசுமாட்டின்) இறைச்சியைத் தின்று உயிர்வாழ்தல் பண்டைக்காலத்திருந்த பார்ப்பனர்க்கு வழக்க மாயிருந்த தென்று ‘தைத்திரீய சங்கிதை, 7, 1, 4 விளக்கமாகச் சொல்லியும், அதற்கு ஒப்ப இன்று காறும் வடநாட்டின்கண் உள்ள பார்ப்பனர்கள் மீன் மறி முதலியவற்றின் ஊனை வெளிப்படையாகத்தின்று உயிர் வாழாநிற்பவும், தென்னாட்டிற் புகுந்து குடியேறிய பார்ப்பனர் மட்டும் இங்குள்ள சைவ வேளாளர்களின் புலால் உண்ணா அருளொழுக்கத்தைக் கண்டு தாமும் தமது பழைய புலைத்தொழிலைக் கைவிட்டுப், புலால் உண்ணாப் புதிய நடையைக் கைக்கொண்டு ஒழுகுதல் எல்லாரும் அறிந்த தொன்றன்றோ? இவ்வாறு பார்ப்பனர்கள் தமக்கு உரிய பழைய வழக்க ஒழுக்கங்களைக் கைவிட்டு, இக்காலத்துக்கு ஏற்ற வழக்க ஒழுக்கங்களையும் நடையுடை சாயல்களையும் கைப்பற்றி உயிர் வாழ்தல் போலவே, மற்றை வகுப்பினருந் தத்தமக்குரிய பழைய தொழில்களையும் முறைகளையுங் கை விட்டுப் புதிய தொழில் களையும் முறைகளையும் கைப்பற்றி நடந்து வருகிறார்கள். உழுதுண்ணும் வேளாளரிற் பலர் அவ்வுழுதொழிலைவிடுத்துப், பற்பல கைத்தொழில்களிற் புகுந்திருக்கிறார்கள். உழுவித் துண்ணும் வேளாளரிற் பலர் தேவார திருவாசகம் ஓதல், தமிழ் நூல்கள் கற்றல் கற்பித்தல், சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றல், திருக்கோயிற்றொண்டு புரிதல், அரசரின் கீழ் அமைச்சராயும் பிறராயும் அலுவல் பார்த்தல், அயல்நாடுகளிலும் தம் நாடுகளிலும் உள்ள பண்டங்களைக் கொண்டுவிற்றல், கற்றோர்க்கும் இரவலர்க்கும் வேண்டிய உதவிகளைச் செய்தல், தமிழையும் சைவத்தையும் வளர்த்தல் முதலான தமக்குரிய விழுமிய செயல்களைக் கைந்நெகிழவிட்டுக், கல்வியறிவும் சிவநேயமும் இலராய், அவையில்லாமையால் அரசர்க்கும் உலகினர்க்கும் பயன் படாராய்த், தம் வயிறு வளர்த்தற்கு எத்துணை இழிதொழி லாயினும் அதனைப் புரிதற்குப் பின்னிடை யாராய்த், தம்மை யோம்புதலிலும் தம்மை வீணே உயர்த்தி இறுமாத்தலிலுங் கருத்து மிகுந்து பிறரது நன்மையைப் பொருட்படுத்தாமற், காலம் வாய்த்தபோது பிறர் உடைமைகளைக் கவர்ந்து அவர்க்குத் தீமைசெய்வதிலும், அரசமன்றங்களில் அழிவழக்காடு வதிலும் முனைத்து நிற்கின்றனரல்லரோ? என்றாலும், இவர்களுட் சிலர் இக்காலத்திற்கு வேண்டும் பயனுள்ள முறைகளையும் ஒழுகலாறுகளையுந் தழுவி, ஆங்கிலத்தோடு தமிழ்கற்றும், ஆங்காங்கு அரசியற் றொழிலை மேற்கொண்டும், சாதி வேற்றுமைகளை ஒழித்தும், திரை கடலோடிச் செல்வத்தினைத் தொகுத்தும் வருகின்றன ரென்பதூஉம் மறுக்கற்பாலதன்று. ஆயினும், இவ்வுழுவித் துண்ணும் வேளாளர் தமக்குரிய பண்டை நற்பெருங் கடமை களை முற்றுஞ் செலுத்துகின்றிலர்; அவற்றிற் பெரும்பாலும் வழுவியே நிற்கின்றனர். மேலும், இந்நாட்டவர் களுள் ஆண்பாலார் தமக்கு வழக்கமாயுள்ளபடியே உடையுடுத்தாது, மேல்நாட்டவரைப்போற் காற்சட்டை மேற்சட்டை யிட்டும், தலையிற் குல்லா தொப்பி கவித்தும், அடிகளுக்குச் சப்பாத்து மாட்டியும் பலவகையால் தமது பழைய முறையை மாற்றி வருகின்றனரல்லரோ? பெண்பாலார் தம் காதுகளைத் தொளைத்து அவற்றை மூக்குச்சளிபோல் தொங்கவளர்த்து அவற்றிற் சுமை மிகுந்த பொன்னுருக்களை யிடும் பழைய அழகற்ற முறையை மாற்றி, அவற்றிற் சிறுதுளையிட்டுச் சிவப்பு வைரம் முதலியவற்றாற் சமைத்த அழகிய தோடுகளை அழகுறப் பொருத்தி எழில்மிகுந்து உலவக்காண்கின்றனம் அல்லமோ? பெண்பாலார் தமது மார்பை மூடாமல் திறப்பாக விடுதலும், மார்பின்மேல் துணியிடுவார்கூட இரவிக்கை யிடாது உலவுதலுமே நன்முறையென்று சொல்லிவந்தவர்க ளெல்லாம், பார்க்க அருவருப்பான அந்த முறையை யொழித்து மார்பைப் புடைவையால் நன்கு மறைத்தும் இரவிக்கை யணிந்தும் வரக் காண்கின்றோமே. இன்னும், பத்தாண்டுகளுக்குமுன் காலையிற் பழைய சோறும் மோரும் உண்டு நன்கு வளர்ந்தவர் களெல்லாம், இப்போது விடியும் நேரத்திலேயே காப்பித் தண்ணீரும் உரொட்டியும் உண்ணக் கற்றுக்கொண்டனரே. இங்ஙன மெல்லாம் நமது நாட்டவர் வாழ்க்கையிற் புதிது புகுந்திருக்கும் மாறுதல்களையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால், இவ்வேடு இடங்கொள்ளாது. இம்மாறுதல்களில் நல்லனவும் உண்டு, தீயனவும் உண்டு, இவையெல்லாம் பழையகாலத்தில் இருந்தவைகள் அல்ல; புதிது வந்தவைகளே.
இவ்வாறு மக்களுடைய நாகரிக வளர்ச்சிக்கும் அறிவின் மேன்மைக்கும் ஏற்பக் காலந்தோறும் பழைய ஏற்பாடுகள் அழிந்து போதலும் புதிய ஏற்பாடுகள் புகுந்து பொருந்து தலும் இயற்கையாம். இது பற்றியன்றோ பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே என்னும் ஆன்றோர் மொழியும் எழுந்தது.
ஆகவே, சாதி வேற்றுமை பழையகாலந்தொட்டு இருத்தல் பற்றியே அதனை விடாது கைப்பற்றி யொழுகல் வேண்டு மென்பது சிறிதும் பொருத்தமில்லாத போலி யுரையாம்.
இனிச் சாதி வேற்றுமை பழமைதொட்டே உள்ள தென்பதும் ஆராய்ச்சி அறிவில்லார் கூற்றாம். மிகப் பழைய நூலாகிய இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிங் களினும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. இருக்கு வேதம் முதல் ஒன்பது மண்டிலங்களினும் ‘பிராமணன்’ என்னுஞ் சொல் ‘வேள்வி வேட்கும் முனிவனையும்,’ ‘பதிகங்கள் பாடும் புலவனையுங் குறிக்கின்றதே’ யல்லாமற், பிற்காலத்தில் வழக்கும் பார்ப்பன வகுப்பினனைக் குறிக்கவில்லை. ஏனை மூன்று வகுப்பினரின் பெயர்களான க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களுங்கூட அவ்வொன்பது மண்டிலங்களினுங் காணப் படவில்லை. இதனால், அவ்வொன்பது மண்டிலங்களும் எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லாரும் ஒரே வகுப்பின ராயிருந்தனரே யல்லாமல், நால்வேறு வகுப்பினராய்ப் பிரிந்திலரென்பது புலனாகின்றதன்றோ? மக்கள் முதன் முதல் மலைகளிலுங் கடலோரங்களிலும் உயிர்வாழ்ந்தன ரென்றும், அக்காலங்களில் அவர்கட்கு வீடுகள் இல்லை யென்றும், அத்தகைய கிருத ஊழியிற் சாதிவேற்றுமை சிறிதுமே இல்லை யென்றும் வாயு புராணமும் (8, 53, 62) புகலா நிற்கின்றது. எனவே, இறைவனாற் படைக்கப்பட்ட பண்டைக்காலத்தே மக்களுள் ஏதொரு வேற்றுமையும், உயர்வு தாழ்வுகாட்டும் ஏதொருபிரிவும் இருந்ததில்லை யென்பதும் புலனாம்.
இனி, அவ்விருக்குவேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களுக்குப்பின், பத்தாம் மண்டிலம் எழுதப்பட்ட காலத்திலே தான் முதன் முதல் நால்வகை மக்கட்பிரிவு தோன்றுவ தாயிற்று. அங்ஙனந் தோன்றியவிடத்தும், மக்களுள் இவ் வகுப்பினர் உயர்ந்தோர், இவ் வகுப்பினர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு தோன்றிற்றில்லை. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நால்வகைத் தொழில்களைச் செய்வோர் நால்வேறு வகுப்பினராகச் சொல்லப் பட்டன ராயினும், அந்நால்வகுப்பினரும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் புதல்வர்களே யாவர் என்பதுங் கூடவே வைத்துத் தெளித்துரைக்கப்பட்டது. யாங்ஙனமெனிற் காட்டுதும்: இருக்கு வேதத்தின் இறுதிக்கண்ணதாகிய பத்தாம் மண்டிலத்தில் உள்ள புருடசூத்த மந்திரமானது (12), பிராமணன் அவனது வாய் ஆயினன்; ராஜந்யன் அவனுடைய தோள்கள் ஆயினன்; வைசியன் எனப்பட்டோன் அவனுடைய தொடைகள் ஆயினான்; சூத்திரன் அவனுடைய அடிகளிற் றோன்றினன் என்று ஓதுமாற்றால், நால்வகைப்படுத்துச் சொல்லப்பட்ட மக்கள் அனைவரும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளினின்றே தோன்றின ரென்னும் உண்மை இனிது புலப்படாநிற்கும். அற்றேற், பார்ப்பனன் இறைவனது மேலுறுப்பாகிய வாயிலிருந்தும், மற்றையோர் மற்றைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடி என்பவற்றிலிருந்தும் தோன்றினர் என அம்மந்திரம் உரைத்தது என்னையெனின்; அந் நால்வகை வகுப்பினரின் தொழில் வேறுபாடுகளை அறிவித்தற்கு அஃது அங்ஙனம் உருவகவகையாற் கூறினதே யன்றி, அவர்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தற்கு அங்ஙனங் கூறிற்றில்லை. நூல் ஓதுதல் வாயின்தொழில் ஆதலால், ஓதுதற்றொழிலையே தமக்குச் சிறப்பாகக் கொண்ட பார்ப்பனர் இறைவனது வாயினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; விலங்குகளாலும் பகைவர்களாலுங் குடிமக்களுக்குத் தீங்குநேராமல் வில்லுங் கணையும் பிடித்து வேட்டமாடுதலும் போர்புரிதலுங் தோள்களின் தொழில் களாதலால் அத் தொழில்களைச் செய்யும் ராஜந்யர் இறைவனுடைய தோள்களினின்றும் பிறந்தவராகச் சொல்லப் பட்டார்; ஓரிடத்துண்டாகிய பண்டங்களை விலைகொண்டு பிறிதோரிடத்திற் சேர்ப்பித்தும், பிற இடங்களில் உண்டாகிய பண்டங்களை ஓரிடத்திற் கொணர்ந்து தொகுப் பித்தும் விற்று மக்கள் எல்லாரும் வேண்டும் பொருள்களை அவர்கள் எளிதிற்பெறத் திரட்டித்தந்து பெரிது பயன்படுங் கொண்டுவிற்றற் றொழிலைச் செய்தல் கால்களினால் ஆகுந் தொழிலாகலின் அதனைப் புரியும் வைசியர் இறைவனுடைய தொடைகளினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; இனி இம்மூவகைத் தொழில்புரிவாரும் ஏவிய பிறதொழில் களை விரைந்துசென்று முடித்து அவர்க்கு மிகவும் பயன்படுங் குற்றேவற்றொழிலைச் செய்தல் பெரும்பாலுங் காலடி களினால் ஆகற்பாலதாகலின் அதனைச் செய்யும் சூத்திரர் இறைவனுடைய திருவடிகளி னின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டனர். ஆகவே, இப்பகுப்புகள் தொழில்பற்றி வந்தனவேயல்லாமல் வேறல்ல வென்பது சொல்லாமே இனிது விளங்கும். அற்றன்று, இறைவனதுவாய் மேலுறுப்பும், அவன்றன் அடி கீழுறுப்பும், ஏனைத் தோளுந் தொடையும் இடைப்பட்ட உறுப்புக்களு மாகலின், அம்முறையே மேலுறுப்புக்களிற் றோன்றிய பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மூவகுப்பினரும் மேலோரெனவும், கீழ் உறுப்பிற்றோன்றிய சூத்திரர் கீழோரெனவுங் கொள்ளுதலே பொருத்தமுடைத்தெனின்; இக்கூற்றும் பகுத்துணர்ச்சி இன்மையால் நிகழ்வதொன்றாம்; என்னை? எவ்வகைப் பட்ட உயிரும் உடம்போடு கூடிப் பிறத்தல் என்பது, தந்தை தாயைமருவ வெளிப்படும் பாற்றுளியானது தாயின் வயிற்றுள்ளே கருப்பையிற்புகுந்து தங்கிக் கருவாய்ச் சமைந்து கை கால் முதலான எல்லா உறுப்புகளும் பொருந்திப் படிப்படியே வளர்ந்து முற்றிப், பின் அக்கருப்பையை விட்டகன்று வெளிப்படுதலாகவே எங்கும் எக்காலத்தும் நிகழ்ந்து வருதலைக் கண்டுங் கேட்டும் அறிந்தும் வருகின்றோமாகலானும், இவ்வாறு எங்கும் மாறாமல் நிகழ அமைத்த இறைவனது அமைப்புக்குமாறாக வாயிற் பிறத்தலும் தோள் தொடை அடி என்னும் உறுப்புக்களிற் பிறத்தலும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் நிகழக்காணோ மாகலானும் என்பது. அங்ஙனமன்று, மக்களுக்குத்தான் மகவுகளை வயிற்றில் அமைத்துப் பிறக்கவைத்தனனே யல்லாமல், எல்லாம்வல்ல இறைவன் தன்னினின்று மக்களைத் தோற்றுவித்தற்கு அத்தகைய அமைப்பை வேண்டுவான் அல்லன்; அவன் தனது உறுப்பில் எந்த இடத்தினின்றும் அவரைத் தோற்றுவிக்க வல்லன் எனின்; அங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன் மக்களைத் தோற்றுவித்தற்கு அவனது நினைவொன்றே போதுமாயிருக்க, வாய் தோள் தொடை அடி முதலிய உறுப்புக்களும் அதற்கு வேண்டுமோ எனக் கூறிமறுக்க. மேலும், இறைவன் தன்னுறுப்புக்களினின்று மக்களைப் படைத்ததனை அம்மக்களுள் ஒருபாலாராகிய கற்றவர் கண்டறிவதெங்ஙனம்? எவரும் தாய்வயிற்றினின்று பிறக்கின்ற ஞான்று தாம் அங்ஙனம் பிறத்தலை அறிந்த வரல்லர். தாம் பிறந்து வளர்ந்து அறிவுடைய ரானபின், குழவிகள் தாய்வயிற்றினின்றும் பிறத்தலைப் பலகாலுங் கண்டுவைத்தே தாமும் அங்ஙனம் பிறந்திருத்தல் வேண்டுமென எல்லாரும் உய்த்துணர்கின்றார். இம்முறை யோடு ஒப்ப, முழுமுதற் கடவுளும் இப்போது எவ்விடத்தாயினும் தம்முடைய வாய் தோள் தொடை அடி முதலான உறுப்புகளிலிருந்து பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பாரைத் தோற்றுவிக்க நாம் காணினன்றோ, முதன்முதல் அவர் அந் நாற்பிரிவினரையும் படைத்த காலத்தில் அவர்களை அங்ஙனமே தோற்றுவித்திருப்பாரென உணரலாம். அவ்வாறு கடவுள் தம்முடைய நால்வேறு உறுப்புக் களினின்று நால்வேறு வகுப்பினரைத் தோற்றுவித்தல் எங்கும் நிகழக்காணாமை யானும், இயங்கும் உயிர்கள் அத்தனையும் தாய்தந்தையரின் சேர்க்கையாற் றாயின் கருப்பையினின்றே தோன்றக் காண்டலானும், இவ்வாறு நடைபெறும் உயிர்களின் பிறப்பு உலகம் உண்டான காலமுதற் பிறழாமல் நிகழ்ந்துவருதல் முன்னுள்ள உண்மையறிவினர் தொன்றுதொட்டு வரன் முறையாக எழுதிவைத்திருக்கும் உண்மை நூல்களால் அறியக் கிடத்தலானும், தாய்தந்தையரின் சேர்க்கையினால் தாயின் கருப்பையினின்றே பார்ப்பனர் அரசர் வணிகர் அடியோர் என்னும் எல்லாமக்களும் பிறத்தலைக் கண்கூடாக யாவருங் கண்டுவருதலானும், இம்முறையையே தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே அருளிச் செய்திருத்தலானும், இங்ஙனம் பிறவியெடுக்கும் அமைப்புக் கடவுள் வகுத்ததேயல்லாமற் பிறரெவரும் வகுத்த தல்லாமையானும், தான் வகுத்த இவ்வமைப்புக்கு மாறாக இறைவன் வேறொருவாற்றால் மக்களைத் தோற்றுவித்தா னென்றால் பிறழா இயற்கையனாகிய அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காதலானும், மற்று அவ்வாறு மாறான தோற்றங் கூறுதல் எல்லார்க்கும் புலனாய் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கும் பண்டுதொட்டு உண்மையறிவினர் கூறிவரும் எல்லா உண்மையுரைக்கும் முற்றும் முரணாய் முடிதலானும் அங்ஙனங் கடவுள் வாய் முதலான உறுப்புக்களினின்றே நால்வகை மக்கட்பிரிவினரையுந் தோற்றுவித்தானென வரை யறைகடந்து பேசுதல் பெரிதும் ஏதமாமெனக் கூறிவிடுக்க. அதனால், அந்நால்வகை மக்கட்குரிய நால்வேறு தொழில்களை உணர்த்துதற்கே உருவக வகையால் இறைவன்றன் வாய் முதலிய உறுப்புகளினின்று அந் நால்வருந் தோன்றினாரென அப் புருடசூத்தவுரை மொழியலாயிற்றென அதற்குப் பொருந்து மாறு பற்றிப் பொருளுரைத்துக் கொள்க.
அங்ஙனமாயின், மேல்கீழ் என்னும் உயர்வுதாழ்வுகளை உணர்த்துதற்கே, அஃது அங்ஙனம் உருவக வகையால் மேலுறுப்பாகிய வாயினின்று பார்ப்பனரும் ஏனைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடிகளினின்று ஏனை யோருந் தோன்றினர் எனக் கூறிற் றென்றாற் படும் இழுக்கென்னையெனிற்; புலால் நாற்றம் வீசும் மக்களின் உடம்புகள் வினைகளை நுகருதற்பொருட்டு மாயையில் அமைத்துக் கொடுக்கப்பட்டனவாகலின், இவ்வுடம்புகளிற் பொருந்திய மேலுறுப்புகளை உயர்ந்தனவென்றும், மலக் கழிவுகளுக்கு இடமான கீழ் உறுப்புகளைத் தாழ்ந்தன வென்றுங் கூறுதல் ஒக்கும். மற்று எல்லாம் வல்ல இறைவனது திருவுருவமோ அங்ஙனம் பிறரொருவரால் மாயையினின்று ஆக்கப்படுவது அல்லாமையினாலும், அவன் தன் அன்பர்க்குப் புலப்பட்டுத்தோன்றி அருள்செய்தற்கு நினைந்தவளவானே அஃது அவ்வருள்நினைவிற் றோன்றி மின்னொளியினும் மிக்க பேரொளியும் நுண்மையுந் தூய்மையும் வாய்ந்ததாய் மறைவதொன்றாகலானும், அப்பெற்றித்தாகிய அவனது தூய அருளுடம்பில் ஓர் உறுப்பினை உயர்ந்ததென்றலும் மற்றை ஓர் உறுப்பினைத் தாழ்ந்ததென்றலும் ஒருவாற்றானும் ஒவ்வா. பைம்பொன்னினாற் சமைக்கப்பட்ட ஒருபாவை மேல்கீழ் இடமெங்குஞ் சுடர்விடு பொன்வடிவாயே விளங் குதல்போலவும், தூய கன்னற்பாகினால் வார்த்தமைக்கப் பட்ட ஒரு பாவையின் உடம்பெங்குந் தித்திக்கும் இயல் பிற்றாகவே இருத்தல் போலவும் இறைவனது உடம்பு முழுதும் ஒரே தூய்மைத்தாய் விளங்குமல்லாமல், அது தன்னிலே உயர்வு தாழ்வுகள் உடைத்தாய் இருப்பதன்றென உணர்ந்து கொள்க. ஆகவே, இறைவனது மேலுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றிப் பார்ப்பனரை மேலோர் என்றலும், கீழுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றி ஏனை மூவரைக் கீழோர் என்றலும் சிறிதும் ஒவ்வா, அந்நால்வரும் இறைவனுடைய நால்வேறு உறுப்புகளிற் றோன்றினார் என்றது, அந் நால்வகுப்பார்க்குந் தனித்தனியே சிறப்பாக உரிய நால்வகைத் தொழில்களை உணர்த்தியபடியாம்; இதுவே அப் புருடசூத்த உரையின் உண்மைப் பொருளென்று கடைப்பிடிக்க. மேலும், இந் நால்வகுப்பினரும் இறைவன் ஒருவனிடத்தே நின்று தோன்றினவரென்பது அதனுள் விளக்கமாகச் சொல்லப் பட்டிருத்தலின், அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறந்த மக்களேயாவ ரென்பதும், அதனால் அவர்தமக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் சிறிதும் ஏலாதென்பதும் கருத்திற் பதிக்கற்பாலனவாகும். இந்நால்வகை மக்கட்பிரிவினரின் பெயரை அவ்வவர் தொழில் வேறுபாடு பற்றி எடுத்தோதும் பதிகம் இப்புருட சூத்த மந்திரத்தைத் தவிர வேறேதும் இருக்குவேதத்தில் எங்குங் காணப்படாமை யானும், ஒன்பதாஞ் செய்யுளில் இருக்கு எசுர் சாமம் என்னும் மூன்றுவேதங்களின் பெயரை எடுத்துச் சொல்லும் இப்புருட சூத்தம் அம்மூன்று வேதங்களுந் தோன்றிய பின்னன்றி முன்னிருந்தது ஆகாமையானும், நால்வேறு மக்கட் பாகுபாடும் அதனையெடுத்துக் கூறும் புருடசூத்தமும் இருக்கு எசுர் சாமம் என்னும் மூன்று வேதங்களும் இயற்றப் பட்ட காலத்தில் இருந்தன அல்ல என்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இனி, மாபாரதப் போரில் முனைந்து நின்ற குருகுல பாஞ்சால அரசர்களையும், அவர் வழியில்வந்த ஜனகன், அஜாதசத்துரு, ஜனமே ஜயபரிக்ஷித், இவற்கு ஆசிரியனாகிய வைசம்பாயனன் முதலியோரையும் எடுத்தோதும் கிருஷ்ண சுக்லயஜுர் வேதமும் அதனோடு ஒரு காலத்ததாகிய சாமவேதமும் அம் மாபாரதப் போர் நிகழ்ந்ததற்குப்பின் ஆக்கப்பட்டனவாதல் தெளிப்படும். இவ்விரண்டு வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தை யடுத்தே, அவ் வேதங்களுக்கு விளக்கஉரைகளாய் எழுந்த ‘பிராமணங்களும், அவற்றை யடுத்தே வேள்வி வேட்டலை மறுத்து முழுமுதற்கடவுளின் மெய்ம்மையைப் புலப்படுத்தவும் பன்னிரண்டு பழைய ‘உபநிடதங்களும் ஆக்கப்பட்டன. இவைகளுண்டான காலத்திலுங்கூடப், பிறப்பளவில் சாதிவேறுபடு சொல்லப் படவில்லை. சுக்கிலயசுர்வேதத்தின் முப்பதாம் இயலிற் பலவேறு தொழில்களைச்செய்யும் பலவேறு மக்கட் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே எடுத்துரைக்கப்பட்டிருக் கின்றன; இங்ஙனமே தைத்திரீய பிராமணத்திலுஞ் சொல்லப் பட்டிருக்கின்றன; ஆனால், அவற்றுட் சாதிவேறுபாடுகளும், அவற்றின் உயர்பு இழிபுகளும் பேசப்படவில்லை. அதற்கு ஒருசான்று எடுத்துக் காட்டுதும்: முன்னொருகால் சரசுவதி யாற்றங்கரையிலே இருடிகள் ஒருவேள்வி வேட்கலாயினர். அப்போது ‘இல்லூஷை’ என்னும் ஓர் அடிமைப் பெண்ணின் புதல்வரான ‘கவஷா’ என்பவர் அவ்வேள்விக்கு வந்திருந்தனர். அவர்கள் அவரை ஓர் அடிமையின் பிள்ளை என்பதுபற்றி இகழ்ந்து, அவ்வேள்விக்களத்தினின்றுந் துரத்த, அவர் சென்ற இடத்திற்கே அவ் யாற்று நீர் செல்லுமாறு கடவுள் அருள்செய்தனர்; அதனை யுணர்ந்த இருடிகள் அவரை யிகழ்ந்த தமது அறியாமைக்கு வருந்திப் பின்னர் அவரை ஒரு சிறந்த இருடியாக ஏற்று வணங்கினர்; என்று ஐதரேயபிரா மணம் (2, 19) புகலுகின்றது. இக் ‘கவஷா என்பவரே இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டிலத்திற் பல பதிகங்களை இயற்றி யிருக்கின்றனர். இவ்வாற்றாற் பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலும் சாதி வேற்றுமை நிலைபெறவில்லை யென்பது புலனாகின்றதன்றோ?
இன்னும், பல வேள்விகளைச் செய்து முடித்தவனும், அவ்வேள்விகளில் முனிவரர்க்கும் பிறர்க்கும் ஏராளமான நன்கொடை வழங்கினவனும், விசுவாமித்திர முனிவரைப் பாதுகாத்தவனும், இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்திற் பாராட்டப்பட்டவனுமான ‘பைஜவனன்’ என்பான் ஒரு சூத்திரனே என்று மாபாரதம் சாந்திபர்வம் (2304 -ஆம் செய்யுளிலிருந்து) நுவல்கின்றது.
இன்னும், இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய முனிவரர் பலரும் அரச வகுப்பினையும் வணிக வகுப்பினையுஞ் சேர்ந்தோர் ஆவரென்று மற்சபுராணத்தின் 132-ஆம் இயல் வகுத்துரைக்கின்றது. இருக்குவேதத்தின் மூன்றாம் மண்டிலத்தை ஆக்கிய விசுவாமித்திரரும், மற்றை மண்டிலங் களிற் பதிகங்கள் பலவற்றை ஆக்கிய வைவசுவதமனு, இடன், புரூரவர் முதலாயினாரும் அரசவகுப்பினரே ஆவர்; பலந்தர், வந்தியர், சங்கீர்த்தி முதலியோர் வைசிய வகுப்பினராவர். இருக்குவேதத்தின், முதல் மண்டிலத்துள்ள 100 ஆம் பதிகத்தை இயற்றிய ரிஜ்ராசுவர், அம்பரீஷர், சகதேவர், பயமாநர், சுராதர் முதலான இருடிகள் ஐவரும் விருஷாகிர் அரசன் புதல்வராவர் என்று இருக்குவேதத்தின் அநுக்கிர மணிகையே புகல்கின்றது. இங்ஙனமே, அவ்விருக்கு வேதத்தின் 6 வது மண்டிலத்திலுள்ள 15-ஆம் பதிகத்தை ஆக்கிய அம்பரீடர் மகனான சிந்துத்வீபரும், அதன் 75- ஆம் பதிகத்தை இயற்றிய பிரியமேதர் மகனான சிந்துக்ஷித்தரும், அதன் 179-ஆம் பதிகத்தைப்பாடிய உசீநரரின் மகன் சிபியும், காசிமன்னன் திவோதாசன் மகன் பிரதர்த்தனரும், அதன் 98- ஆம் பதிகத்தைப் புகன்ற சந்தநுவின் மகன் தேவாபியும் எல்லாம் அரச இனத்தைச் சேர்ந்தோரே யாவர். இவ்வாறே இன்னும் பலர் உளர்.
மேற்சொல்லிய இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய க்ஷத்திரிய வைசியர் என்பார் தமிழ வேளாள வகுப்பினரே யாவர். யாங்ஙன மெனிற் கூறுதும்: மேற்காட்டிய ரிஜ்ராசுவர் முதலான அரச முனிவர் ஐவரும் சேர்ந்தியற்றிய பதிகத்தின் 12 ஆம் செய்யுளில் ‘சோமன்’ என்னுங் கடவுள் ஐந்து இனத்தாரைக் காப்பவராகச் சொல்லப்படுகின்றனர். இச் ‘சோமன் என்னுஞ் சொல் ‘ச உமா’ என்னும் இருமொழிப் புணர்ச்சியாற்றோன்றி உமையோடு கூடினவர் என்று பொருள்படும் என அதர்வசிர உபநிடத உரையிலே விளக்கப்பட்டிருத்தலின், அச்சொல் சிவபிரான் மேற்றாதலும், ‘சோமநாதம்’ என்னும் வடநாட்டுச் சிவபிரான் திருக்கோயில் அப் பெயர்பெற்றிருத்தலின் அஃது அதற்குப் பின்னும் ஒருசான்றாதலும் நன்கு விளங்கும். இனிச் சிவபிரானாற் காக்கப்படும் ஐவகை இனத்தினர் ஆவார் துருவாசர்களும் யதுக்களும் அணுக்களும் துருகியர்களும் பூருக்களும் என ஐவர் ஆவரென்று கிரிபித் என்னும் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார். இவ் வைவகை இனத்தினரும் தமிழ் மக்கட் பிரிவினரே யாவரென்று ராகொசின் என்னும் வரலாற்று நூலாசிரியர் தாம் ஆழ்ந்தாராய்ந் தெழுதிய வேத இந்தியா என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றார். வடக்கிருந்து வந்து இந்திய நாட்டுள் நுழைந்த ஆரிய மக்களை எதிர்த்த பத்து அரசர்களுக்குத் தலைவராய் நின்றோர் பூருக்களும், அவர்க்குத் துணைவராய் அஞ்சா நெஞ்சினராய் நிலவிய பரதர்களும் ஆவர். இத் தமிழ அரசர் பதின்மருட் சிவர் (சைவர்) விஷாநியர் (வைஷ்ணவர்) என்பார் இருவரும் சேர்த்துச்சொல்லப்படுகின்றனர். ஆகவே, அத்துணைப் பழைய காலத்திலேயே தமிழருட் சிவபிரானை வணங்குஞ் சைவரும், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவரும் வலியராயிருந்து ஆரியரை எதிர்த்து நின்றமை புலனாகும். பழைய தமிழ்மக்களுட் போர் வலிமையில் மிகச் சிறந்துநின்ற பரதர் தம் குடியிற்றோன்றிய அரசர்களே இவ் இந்தியநாடு முழுமையும் ஆண்டுவந்தனர்; அதுபற்றியே, அவர்களின் செங்கோல் நீழலில் வந்து வைகிய ஆரியமக்கள் இவ் இந்தியநாட்டைப் ‘பாரதவர்ஷம் என்று அழைப்பாராயினர். குமரிநாடு கடல்கொண்டபின் அங்கிருந்த தமிழர்களே வடநாடுவரையிற் சென்று ஆங்காங்குக் குடியேறிப் பத்துவகை அரசியலை நாட்டினார்கள். அவர்களுள் வடமதுரையில் அரசாண்ட யதுகுலத்த வர்களே பின்னர்க் கண்ணனைத் தலைவனாய்க் கொண்டு துவாரகையில் வந்து குடியேறினர். அவ் யதுகுலத்தவரில் ஒரு பகுதியாரே பெயர்த்துந் தமிழ்நாட்டிற் போந்து எருமையூரிற் குடியேறினர். எருமையூரிற் குடியேறிய யதுகுலத்தவராகிய வேளிர்க்குத் தலைவனே புறநானூற்றிற் கூறப்படும் இருங்கோவேள் என்னும் மன்னன் ஆவன். இவ்வாறு இவர்போற் றமிழ்நாட்டினும் பிறநாடுகளினும் அந்நாளிற் பரவியிருந்த வேளாள மன்னர்கள் வரலாறுகளை உரைக்கப்புகின் இது மிக விரியும். இத்தமிழ் வேளாள அரசர்களையே பழைய வடமொழி வேதங்களும் உபநிடதங் களும் ‘ராஜந்யர், ‘க்ஷத்திரியர் என்னும் பெயர்களாற் குறிப்பவாயின என்பதற்கு, மனு திராவிடர்களை ‘க்ஷத்திரியர் என்று கூறுதலே (10, 43, 44) சான்றாம். தமிழ வேளாளரில் உழவுதொழில் செய்தாரும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றாருமே வட நூல்களில் ‘வைசியர் என்று நுவலப்படுவாராயினர். இவ்வாறு காட்டப் பட்ட க்ஷத்திரியரும் வைசியருமாகிய தமிழ வேளாளரே தொன்று தொட்டுச் சிவபிரானை வணங்கி வருபவராய் இருத்தலின், அம்மக்கட் பிரிவினர் ஐவரையுங் காப்பவர் ‘சோமன் என்னும் சிவபிரானாக இருக்குவேதம் புகலுவ தாயிற்றென்க. எனவே, இருக்குவேதத்திற் பலப்பல பதிகங்கள் இயற்றிய க்ஷத்திரிய வைசியர்கள் அனைவரும் தமிழ வேளாளர்களே யாதலைத் தெற்றென உணர்ந்து கொள்க.
இவ்வாறு க்ஷத்திரிய வைசியராகிய வேளாளர்களும், இவர் தமக்குக் குற்றேவற்றொழில் புரிவாரான சூத்திரரும், மற்றை ஆரியரும் கலந்து வேதங்களையும் பிராமணங் களையும் பன்னிரண்டு உபநிடதங்களையும் ஆக்கிவைத்த காலத்திற், பிறப்பளவில் தமக்குள் உயர்வுதாழ்வுகாணாது, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நால்வேறு தொழில் களையுஞ் செய்துகொண்டு உண்ணல் கலத்தல்களில் ஏதொரு வேறு பாடுமின்றி ஒருமித்து வாழ்ந்தனராகலின், அக் காலத்திற் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கொள்ளும் சாதிவேற்றுமை சிறிதுமில்லையென்று தெளிக. இதனாலன் றோ வாயு புராணமும் (8, 890 – 193) தீயவனுக்கு, மனத் தூய்மை இழந் தவனுக்கு வேதங்களும், அவற்றின் சடங்கு களும் வேள்விகளும் பட்டினிகிடத்தலும் தென்புலத்தார் கடனிறுத்தல் முதலான வினைகளும் பயனைத் தருகின்றில; அகத்தே இழிந்த இயற்கையுடையவனா யிருப்போன் புறத்தே எத்துணை முயற்சியோடு சடங்குகளைச் செய்தா னாயினும், அவை சிறிதும் பயன்படா. ஒருவன் அழுக்கு நெஞ்சத்தோடு தனக்குள்ள பொருள் முழுதுங் கொடுத்தா னேனும், அதனால் நன்மை எய்தமாட்டான்; ஆதலால், நல்ல தன்மையே உயர்ச்சிக்கு ஏதுவாகும். என்று கூறுவதாயிற்று.
இனி, மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டதாகிய புருட சூத்தத்திலும், அதற்கும் பிற்பட்டதாகிய பிருகதாரணியக உபநிடத்திலும் (1, 4, 15) நால்வகைச் சாதிப்பெயர் காணப் படினும், முன்னையதில் அந் நாற்சாதியினரும் ஒரு முழுமுதற் கடவுளின் பிள்ளைகளாதலும், பின்னையதில் அந் நாற்சாதி யினரிடத்தும் இறைவன் நிறைந்து விளங்குதலும் நன்கு வற்புறுத்து உரைக்கப்படுதலின், இந் நூல்கள் தோன்றிய காலத்தில் நால்வகைச்சாதிகள் இருந்தமை பெறப்படினும், அவருள் உயர்வு தாழ்வுகள் இருந்தமை புலனாகவில்லை.
பிராமணங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வேத காலத்தில் பூணூல் அணியும் வழக்கங் காணப்படாமையால், அதுபற்றி யுண்டான சாதிவேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபதபிராமணத்திலும் (2, 4, 2), கௌஷீதகி உபநிடதத்திலுமே (2, 7) பூணூல் அணியுங்குறிப்பு முதன்முதற் காணப்படுகின்றது. இவ்விரண்டிலுங் கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்குங் காலைப் பொழுதிலும், வேள்விவேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் வழக்கம் நன்கு தெரித்தோதப் பட்டமையால், இந் நூல்கள் உண்டான காலத்திலும் சாதிவேற்றுமையின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லை யென்பதும், இறைவனை வழிபடுந் தொழிலிற் புகுந்திருப்போர் அத்தொழிலிற் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போதற்கு ஓர் அடையாளமாகவே அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்திருந்தனரென்பதும் இனிது விளங்கும். மற்று இக்காலத்திலோ இறைவனை வணங்காமல், உலகியற் றொழில்களையே அல்லும் பகலும் புரிந்து தமது வயிற்றுக்கும் தம்மைச் சேர்ந்தாரது வயிற்றுக்குமே பாடுபட்டு உழன்று தீவினைகளை ஈட்டுவோர் எந்நேரமும் அப்பூணூலை அணிந்துகொண்டு தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி இறுமாந்து ஐயகோ! மேன்மேற் றீவினைகளைப் பெருக்கி வருகின்றனரே! அது கிடக்க.



