சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்

4. தொல்காப்பியத்திற் சாதிப்பிரிவு தொழில்பற்றியது

இனித், தமிழர்களின் நாகரிக முதிர்ச்சிக்கு அடிப் படையாய் இருந்தது உழவுதொழிலேயாகும். அவ்வுழவு தொழிலை முதன்முதற் கண்டறிந்தவர்கள் ‘வேளாளர்கள்’ எனப்படுவர். மனுமிருதி (10, 83) போதாயன தருமசாத்திரம் (1, 10, 30) முதலான ஆரியர்தம் ஒழுக்க நூல்கள் உழவுதொழிலை மிக இழித்துப் பேசுதல்கொண்டு, அத்தொழில் ஆரியர்க்குச் சிறிதும் உரியதல்லாமை நன்கு உணரப்படும். மற்றுத் தமிழ்வேதமாகிய திருக்குறளோ உழவுதொழிலை ஏனை எல்லாத் தொழில்களினுஞ் சிறந்ததாகவைத்து உயர்த்திப் பேசுதலின் அதனை முதன்முதற் கண்டறிந்தவர்கள் தமிழரேயாதலும்,

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லதுஇல்லென
மொழிப பிறவகை நிகழ்ச்சி

எனத் தமிழ்ப் பண்டை மறையாகிய தொல்காப்பியம் (மரபியல், 80) அதனை வேளாளர்க்கே வரைசெய்து உணர்த்தலின் அத்தொழில் தமிழருள்ளும் வேளாளர்க்கே சிறப்பாக உரித்தாதலும் நன்குபுலனாம்.

உழவு தொழிலுக்கு ஏற்றஇடங்கள் யாறு ஏரி முதலான நீர்நிலை களையடுத்த வளவிய நிலங்களேயாகும்; இவ்வளவிய நிலங்களையே மருத நிலமெனப் பண்டைத் தமிழ்நூல்கள் புகலாநிற்கும். இந் நிலங்களில் நெல் கோதுமை முதலான நன்செய்ப் பயிர்களையும் துவரை உழுந்து முதலான புன்செய்ப் பயிர்களையும் விளைத்து, வேளாளர் அவ்வாற்றாற் செல்வ முடையரானமையின், தமது செல்வத்தை உழவுதொழில் அறியாத ஏனையோர் கவர்ந்து கொண்டு செல்லாமைப் பொருட்டுத், தமக்குள் ஒரு தலைவனையும் அவனுக்கு உதவியாக ஒரு படையினையும் அமைத்துவைக்க, அங்ஙனம் அவர் வைத்த தலைவனே நாட் செல்லச்செல்ல அரசன் ஆயினன். இங்ஙனம் வேளாண் குடியினர் நிலை பெற்ற மருதநிலத்தின் கண்ணேயே அரச வாழ்க்கையும், அரசன் அரண்மனையும், நகரமும் உண்டானமை,

உழிஞை தானே மருதத்துப்புறனே (புறத்திணை இயல், 9)

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தானும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும் உணர்ந்து கொள்க. இவ்வாறு வளப்பம் மலிந்த மருதநிலங்கள், பகலவன் செல்லும் வெப்பம் மிகுந்த நடுக்கோட்டைச் சார்ந்துள்ள இந்திய நாடும், வட ஆப்பிரிக்காவும், நடுஅமெரிக்காவுமே யாகுமென்றும், இந்நாடுகளில் உணவுப் பண்டங்கள் ஏராளமாய் விளைந்தமையின் இவற்றின் கண் இருந்தமக்கள் மிகப் பல்கி நாடுநகரங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து திகழ்ந்தனரென்றும், நடுக்கோட்டுக்குப் பெரிதும் எட்டி யுள்ள வடதேயங்களில் உறைந்தோர்க்கு உழவுதொழில் செய்தலும் உணவுப் பொருள்களை மிகுதியாய் விளைத்தலும் ஏலாமையின் அவர்கள் நாகரிகம் இலராயே இருந்தன ரென்றும் இவ்வியல்பு களை நன்கு ஆய்ந்த ஆங்கில ஆசிரியர்களும் இவற் றினுண்மையை இனிது எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

ஏராளமான பொருளுடையவரே அவற்றைக் காத்தற்கு ஓர் அரசனையும் அவற்கு உதவியாகப் படைகளையும் அமைத்தல் வேண்டும்; பொருள் இல்லாதவர்க்குக் காக்க வேண்டும் ஏதும் இல்லாமையின் அவர்கட்கு அரசனும் இலன், படைகளும் இல. ஆதலால், இந்திய நாட்டுக்கு வரும்முன் இடம் இடமாய் அலைந்து திரிந்த ஆரியர்களுக்கு அரசனும் இலன், படைகளும் இல. தமிழரிற் சிறந்த வேளாளரோ உழவு தொழிலாற் பெருஞ்செல்வராயிருந் தமையின் அச்செல்வத்தைக் காத்தற்பொருட்டு அரசனையும் படைகளையும் அமைக்க வேண்டுவது அவர்க்கு இன்றியமை யாததாயிற்று என்க.

இனி, நாகரிகத்திற் சிறந்த வேளாளர் கல்வியறிவிலும் கடவுள் வழிபாட்டிலும் உறைத்து நின்றமையின், தாம் சென்ற இடங்கடோறும் சிவபிரானுக்குப் பெரிய பெரிய திருக்கோயில்கள் கட்டுவித்து, அவற்றின்கண் இறைவனுக்குத் தொண்டு புரிதற்காகத் தம்மவருள் ஒரு பகுதியாரைப் பிரித்து அத்தொழிலில் அவர்களை நிலைபெறுவித்து அவர்தம் வாழ்க்கைக்கு வேண்டும் படித்தரங்களையும் ஏற்படுத்தி வைத்தனர். இங்ஙனம் வகுத்துவைக்கப்பட்ட வேளாள அந்தணர்களே இக்காலத்தில் ‘ஆதிசைவர், ‘நம்பியார், ‘பட்டர் என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றனர். மணச்சடங்குகள் பிணச்சடங்குகள் இயற்றுதற்கும் இவர் களுள்ளேயே ‘சைவக் குருக்களும்’ வகுத்துவைக்கப்பட்டனர். தமக்குட் கல்வியறிவிற் சிறந்தோரையும் தவம்புரியும் ஒழுக்கத் தோரையும் தமக்குக் குருவராக மேல்நிறுத்தி அவர்கட்கு ஆண்டாண்டு திருமடங்கள் அமைப்பித்து, அவர்பாற் சென்று நூலறிவுங் கடவுளுணர்ச்சியும் பெற்றுவரலாயினர். இம்முத்திறத்தவரும் வேளாளரில் அந்தணரும் நூலோதும் பார்ப்பனரும் சமய ஆசிரியரும் ஆவர். இம்முத்திறத்தினரிற் கோயிற் றொண்டுபுரியும் அந்தணரும், சடங்குகள் செய்வித்து நூலோதும் பார்ப்பனக் குருக்களும் மெல்ல மெல்ல வடமொழிச் சொற்களையுங் குறியீடுகளையும் எடுத்தாண்டு கொண்டு ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்ந்துகொண்டனர், இன்னுஞ் சேர்ந்து வருகின்றனர். இத் தமிழ்நாட்டின்கண் இப்போது ‘பார்ப்பனர்’ என்று வழங்கப்படுவார் எல்லாரும் ஆரியப்பார்ப்பனர் அல்லர். வடக்கிருந்து வந்து இங்கே குடியேறிய ஆரியப்பார்ப்பனர் மிகச்சிலரேயாவர். இங்கிருந்த வேளாளப் பார்ப்பனரே நாளடைவில் தம்மை ஆரியப் பார்பனராகத் திரித்துக் கொண்டனர். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பார்ப்பனர் எவரும் ஆரியத்தோடு இனமான வடநாட்டு மொழிகளுள் எதனாலும் தம் மனைவிமக்களோடு பேசக்காணாமை யானும், தொன்றுதொட்டு அவர்கள் தமிழ் மொழியிலும், தமிழோடு இனமான மலையாளம் தெலுங்கு கன்னடம் முதலான மொழிகளிலுமே உரையாடக் காண்ட லானும், வடநாட்டிலுள்ள ஆரியப் பார்ப்பனரைப் போல் ஊன் உண்ணக் காணாமையானும் நூல் அளவிற் சிறிது வடமொழி ஓதுதல் பற்றி இவர்களை ஆரியப்பார்ப்பன ரென்றல் அமையாது; இவ் விந்தியநாட்டின்கட் காணப்படும் துலுக்கர் கிறித்துவரிற் பெரும்பாலார் இந்துமக்களிலிருந்தே திரிபடைந்த வராதல்போல, இந்நாட்டின்கண் உள்ள பார்ப்பனரிற் பெரும்பாலாரும் சில நூற்றாண்டுகளுக்குமுன் வேளாளக் குருக்களாய் இருந்தவர்களேயாவர். இதற்கு அறிகுறியாக, வேளாளர்க்குரிய ‘பிள்ளை’ என்னும் பட்டப்பெயர் திருச்செந்தூர் முதலான இடங்களில் உள்ள பார்ப்பனர்க்கு இன்றுகாறும் வழங்கிவருகின்றதென்றும், அப் பட்டப்பெயரை அவர்கள் மெல்லமெல்ல மாற்றி வருகின்றன ரென்றுங் கேள்வியுறுகின்றோம். இன்னும், ஆழ்வார்கள் பாடிய செந்தமிழ்ப் பாடல்களுக்கு உரை எழுதிய பார்ப்பனராகிய ‘பெரியவாச்சான்பிள்ளை’ என்பவர் ‘பிள்ளைப்பட்டம்’ பூண்டிருத்தலும் இதற்கொரு சான்றாம்.

இனி, இவ்வேளாளருள் அரசர்களுங், குறுநில மன்னர் களும், அவரின் கீழ் அமைச்சராயும் படைத்தலைவராயும் இருந்தோரும், இவர் தமக்கெல்லாம் உறவினராய் உழவு தொழிலை நடப்பித்துச் செல்வராய் வாழ்ந்தோரும் எல்லாம் ஒரு தொகுதியாய் அரசமரபினராயினர். உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியும் அவன்மகன் கரிகாற்பெரு வளத்தானும் போல்வார் வேளாளரிற் பெருவேந்தராய்ப் பழையநாளில் இத்தென்றமிழ் நாட்டில் அரசுபுரிந்தோர் ஆவர்; வேள்பாரி, வேள்எவ்வி, இருங்கோவேன் முதலாயினார் வேளாளரிற் குறுநில மன்னராவர்; சேக்கிழார் போல்வார் அரசர் பால் அமைச்சராயிருந்த வேளாளர் ஆவர்; கோட்புலிநாயனார் போல்வார் அரசருக்குப் படைத் தலைவராய் இருந்தவேளாளர் ஆவர்; சோழன்கரிகாற் பெருவளத்தானுக்குப் பெண் கொடுத்த நாங்கூர் வேள் போல்வார் அரசர்க்கு உறவினராய் உழவுதொழில் நடப்பித்துக் கொண்டு வாழ்ந்த வேளாளர் ஆவர் என்க.

இனி, உழவுதொழிலாற் பெற்ற பல பண்டங்களையும் ஓரிடத்திற்றொகுத்துப் பலரும் எளிதிற் பெறுமாறு விற்று வாணிகம் நடாத்தினோரே வேளாளருள் வணிகராயினர். இவ்வணிக வேளாளர் செட்டிப் பட்டம் பெற்றிருத்தலும், இவர்கள் மேற்கூறிய உழுவித்துண்ணும் வேளாளரோடு ஒருங்கிருந்து உணவெடுத்தலும் அவரோடு பெண் கொண்டு கொடுத்து உறவுகலத்தலும் இன்றுகாறும் நடைபெற்று வருகின்றனர்.

இனி, உழுதுண் வேளாளரும், குற்றேவல் செய்வாரும் பல கைத் தொழில் புரியும் பதினெண்மரும் மேற்காட்டிய மூவகையினரைப் போற் செல்வராய் இல்லாமையினாலும், நாள்முழுதுந் தொழில்கள் பல இயற்றுதலாற் கல்விகற்க ஒழிவுநேரம் பெறாமையினாலும், உயர்ந்த உணவுப் பண்டங்களை மேலோர் மூவர்க்கும் ஒப்படைத்து விட்டுத் தாம் விலைகுறைந்த வரகின்கூழ், இலைக்கறி, மீன் முதலான சிற்றுயிர்களின் ஊன் என்பவற்றை உணவாகக்கொண்டு உயிர் வாழ்ந்தமையினாலுங் கீழோர் ஆயினர்.

இவ்வாறு இயற்கைத் தொழின்முறையால் மருதநில மாந்தரே அந்தணர், அரசர், வணிகர், அடியோர், வினைவலர் என்னும் ஐம்பெரும் பிரிவினராயினர். இவ் ஐவகையினரில் அடியோரும் வினைவலரும் ஒருவகையில் அடக்கப்பட்டுக் ‘கீழோர்’ எனவும், ‘இழிந்தோர்’ எனவும் வழங்கப்படுவா ராயினர். இவர் தம்முள் உழுவித்துண் வேளாளர் அரசர் வகுப்பினும், உழுதுண்வேளாளர் அடியோர் வினைவலர் பாங்கினும் அடங்காநிற்பர். பதினெண்டொழில புரிவாரைத் தவிர, ஏனை அந்தணரும் அரசரும் உழுவித்துண் வேளாளரும் வணிகரும் உழுதுண்வேளாளரும் எல்லாம், முதன்முதல் வேளாண்மைத் தொழிலைக் கண்டறிந்த வேளாளரினின்றும் பிரிந்தோரேயாவர் என்பதனை மேலே விளக்கினாம்; வேளாண்மைத் தொழிலை முன்னறியாத தமிழ் மக்கள் அதனை முன்னறிந்த அவ்வேளாளர் ஏவிய பற்பல கைத்தொழில்களைச் செய்துவந்தமையின், அத்தொழில்கள் பதினெண்வகையவாய்ப் பகுக்கப்பட்டு அவற்றைச் செய்யும் பதினெண் வகுப்பாரும் வேளாளர் அல்லாத பிறவகுப்பில் ஒரு தொகைப்படுத்து வைக்கப்படுவாராயினர். தொழில் பற்றிய இவ் வகுப்புமுறை செந்தமிழ்த் தொல்லாசிரியரான தொல்காப்பியனார்,

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

என்றோதிய வாகைத் திணைச் சூத்திரத்தால், நன்கறியப்படும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்வார் பார்ப்பனராவரென்பதூஉம்; ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்வார் அரசராவ ரென்பதூஉம், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுதொழில்களைச் செய்வார் வணிகர் வேளாளர் என்னும் இருபாலாரும் ஆவரென்ப தூஉம் இனிது பெறப்படுதல் காண்க. வணிகரையும் வேளாளரையும் ஏனோர் என்னுஞ் சொல்லால் ஒன்றாய் அடக்கி அவ்விருவர்க்கும பொதுப் பட ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வ்ணிகம், நிரையோம்பல் என்னும் ஆறு தொழில்களையும் ஆசிரியர் தொல்காப்பியனார் வெளிப்படையாய் ஓதியிருக்க, இத் தொல்லாசிரியர்க்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு பிற்பட்ட வடமொழிப் பார்ப்பனரால் எழுதிவைக்கப்பட்ட வடமொழி மிருதி நூலின் நால்வகைச் சாதியுட் கடைப்பட்ட சூத்திரச் சாதியில் வேளாளரைப் பிழைபட அடக்குவான் புகுந்த இளம் பூரணர், நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர் உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி முதலிய ஆறுமே வேளார்க்கு உரியவாகக் கூறினார். வடமொழி மிருதி நூல்களிற் சூத்திரர் என்னும் வகையில் வைக்கப் பட்டவர்கள்: சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொள்ளப் பட்டவர்களும், தமது அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ் செய்பவர்களும், வேசிக்குப் பிறந்தவர்களும், விலைக்கு வாங்கப்பட்டவர்களும், பிறராற் கொடுக்கப்பட்டவர்களும், முன்னோர் காலந் தொட்டு தமக்கு அடிமைகளாய் வருபவர்களும் குற்றத்திற்காக அடிமைப் படுத்தப்பட்டவர்களுமே ஆவ ரென்பதனை மேலெடுத்துக் காட்டினமாகலின், அந்தணராயும் அரசராயும் வாணிகம் உழவு நடாத்துவோராயும் பண்டு தொட்டுச் சீருஞ் சிறப்பும் உடையராய்த் தமிழ்நாட்டின்கண் வாழ்ந்துவரும் வேளாளரைச் சூத்திரவகுப்பிற் சேர்த்தல் பெரியதோர் இழுக்காதலை வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் விரித்து விளக்கினாம்; அதனை அங்கே கண்டுகொள்க. வாணிகம் நடாத்துவாரை ‘வைசியர்’ என்னும் வட சொல்லால் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினாற் போல, வேளாளரைச் ‘சூத்திரர்’ என்னும் வட சொல்லால் அங்ஙனமே அவர்யாண்டுங் கூறாமையின், அவரைச் சூத்திரராகக் கொண்டு உரைகூறிய உரைகாரரின் உரை ஆசிரியர் கருத்துக்குமாறான பிழையுரை யாமென விடுக்க. மேலும் சூத்திரர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே மிருதி நூல்களிற் கூறப்பட்டிருக்க, உழவும் நிரையோம் புதலும் ஆகிய தொழில்கள் வைசியர்க்கு மட்டுமே அவற்றுள் வரையறுத் துரைக்கப் பட்டிருத்தலானும், வேதநூற் கல்வியும் வேள்வி வேட்டலும் வைசியர்க்கும் உரியவாதல் மநுமிருதியிற் பெறப்பட்டலானும், தமிழ்நாட்டிலுள்ள வேளாளர்கள் பண்டுதொட்டு நூல் ஓதியும் சிவவேள்விகள் வேட்டும் உழவு வாணிகம் நடாத்தியும் ஆன்நிரையோம்பியும் ஈகையிற் சிறந்தும் வாழ்ந்துவரக் காண்டுமேயல்லாமல் ஏனையோர்க்குக் குற்றேவற்றொழில் புரிந்துவரக் காணாமை யானும் வேளாளரைச் சூத்திர ரெனக்கொண்டு அவர்க்கு அறிவுநூற்கல்வியினை மறுத்த உரைகாரருரை போலியுரையா மெனவிடுக்க. மேலும், விருந்தோம்புதற்றொழில் அந்தணர் அரசர் வணிகர் முதலான எல்லா வகுப்பினர்க்கும் பொதுமையில் உரியதாகவும், அதனை வேளாளர்க்கு மட்டும் வரைப்படுத்திக் கூறியதூஉம் பொருந்தாவுரையாம் என்பது. ஆசிரியர் தொல்காப்பியனார் வணிகரையும் வேளாளரையும் ஏனோர் என்னும் ஒருசொல்லால் அடக்கி, அவ் விருவர்க்கும் இருமூன்று தொழில்களைப் பொதுப்பட ஓதினாரல்லது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் தனித்தனி வெவ்வேறு ஆறு தொழில்களை ஓதிற்றில ராகலின், அவர் கருத்துக்கு மாறாக வணிகர்க்கு ஒருவகையான ஆறு தொழில்களையும் வேளாளர்க்கு மற்றொருவகையான ஆறுதொழில்களையுந் தாமே புதியவாய்க் கற்பித்துக் கொண்டுரைத்த இளம்பூரணர் நச்சினார்க் கினியர் உரைகள் சான்றோராற் கொள்ளற்பாலன அல்லவென்று உணர்க.

வணிகரும் வேளாளரும் ஒரு வகுப்பினரேயென்பது ஆசிரியர்க்குக் கருத்தாயின், வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என வைசியரை ஒருபாலாகவும், வேளாண் மாந்தர்க் குழு தூண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி என வேளாளரை மற்றொரு பாலாகவும் வைத்து அவர் வேறுபடுத்து ஓதியதென்னையெனின்; சூத்திரர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே கூறி, ஏனை வைசியர்க்கு வாணிகமும் உழவுமாகிய தொழில்களை வரையறுத்துக் கூறுதற்கண், ஆபதம்பம், போதாயநம், மநுமுதலான வடநூலாசிரியர் எல்லாரும் ஒருங்கொத்து ஒருமுகமாய் நிற்றலின், வைசியருள்ளேயே வாணிகம் நடாத்துவோரை ஒரு பாலாகவும் உழவு நடாத்துவோரை மற்றொரு பாலாகவும் வைத்து ஆசிரியன் அங்ஙனம் சூத்திரஞ் செய்திட்டான் என்பது. ஏனைத் தொழில்கள் போலாது, வாணிகம் உழவு என்னும் இரண்டும் உலகியல் நடத்தற்கு இன்றியமையாது வேண்டப் படும் இருபெருந் தொழில்களாய்த் தலைசிறந்து நிற்றலின், அவ்விருவேறு தொழில்களைப் புரியும் வைசியரை வணிகரெனவும் வேளாளரெனவும் இருவகைப்படுத்து ஓதியது, அறிவுநூல் வழக்கோடு உலகியலறிவும் ஒருங்குவாய்த்து அகன்ற ஆசிரியன் தொல்காப்பியனது பேரறிவு மாட்சியின் பெற்றி தெரிப்ப தொன்றா மென்க. இவ்வாறு ஆசிரியன் வேளாளரை வைசிய வகுப்பின்பாற் படுத்தலொன்றின் மட்டும் அமையாது, அவரை அரச வகுப்பின் பாலும் படுக்குங் கருத்தின னென்பது,

வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே

என்னுஞ் சூத்திரத்தில், அவர் அரசராற் படைத்தலைவராஞ் சிறப்பும் மாலை சூட்டப்படும் மாட்சியும் பெறுதல் கூறுதலானும்,

வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுங்தாரும்
ஆரமுந் தேரும் வாளும்மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரியடு

என்னுஞ் சூத்திரத்தில் வேளாளர் குறுநில மன்னராய் அரசாளுதற்கு உரிமையுடையராதல் கூறுதலானும் பெறுதும் என்பது. மற்று, அடியோருள்ளும் வினை வல்லோருள்ளுங் குறுநிலமன்னராவார் உளரேனும், அவர் வேளாளரைப் போற் படைத்தலைமையுங் கண்ணியும் வில் வேல் கழல் தார் ஆரம் தேர் வாள் முதலியனவும் வேந்தராற் பெறுதற்கு உரிய சிறப்பு உடையரல்லரென்பது,

அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை என்று ஆசிரியன் ஓதிய வாற்றால் தெளியப்படும். எனவே, வணிகரையும் வேளாளரையும் ஏனோர் எனவும், அவரிற் கீழோரான அடியோர் வினைவலரை இழிந்தோர் எனவும் ஆசிரியன் யாண்டும் உரைப்பக் காண்டலின், வேளாளரை இழிந்த சூத்திரவகுப்பின்பாற் படுத்தல் ஆசிரியன் கருத்துக்கு முற்றும் மாறாமென்றும், அதனால் உரைகாரரின் உரைகள் கொள்ளற்பாலன அல்லவென்றும் மறுக்க. அற்றேல், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பகுப் பினரினும் வேறாக ‘இழிந்தோர் எனப்படுதற்குரிய அடியோரையும் வினைவலரையும் ஆசிரியன் மரபியலின் ஓதிற்றிலனாலெனின்; பொருளதிகாரத்தின் முதற் கண்ணதாகிய ‘அகத்திணையியலில்,

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்கடிவரை
இலபுறத்து என்மனார் புலவர்

என ஆசிரியன் முன்னரே அவர் தம்மை ஓதிப்போந் தானாகலிற், பின்னும் அவரை ‘மரபிய லிற் கிளந்துகூறாது ‘இழிந்தோர் என்னும் பொதுச்சொல்லாற் கூறினானென்க. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலத்துள்ளும் பொதுமக்கள் ஆவாருந் தலைமக்களாவாரும் அடியோர் வினைவலர் ஆவாரும் உளர் என்பதனை ஆசிரியன்,

பெயரும் வினையும் என்று ஆயிருவகையதிணைதொறும்
மரீஇய திணைநிலைப் பெயரே

எனவும்,

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்ஆவயின் வரூஉங் கிழவரும் உளவே

எனவும்,

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலைஆனா வகைய திணைநிலப் பெயரே

எனவும்,

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்

எனவும் ஓதியவாற்றால் தெளிந்துகொள்க. இங்ஙனம் உரைப்பவே, குறிஞ்சிநிலத்துப் பொது மக்கள் பெயர்: குறவர், குறத்தியர், கானவர், வேட்டுவர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மலையன், கொடிச்சி ஆம் என்பதூஉம், முல்லை நிலத்துப் பொதுமக்கள் பெயர்: ஆயர், ஆய்ச்சியர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: அண்ணல், மனைவி ஆம் என்பதூஉம், பாலைநிலத்துப் பொதுமக்கள் பெயர்: எயினர், எயிற்றியர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மீளி, விடலை ஆம் என்பதூஉம், மருத நிலத்துப் பொதுமக்கள் பெயர்: உழவர், உழத்தியர்; அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மகிழ்நன், ஊரன், மனையோள் ஆம் என்பதூஉம், நெய்தல்நிலத்துப் பொதுமக்கள் பெயர்: நுளையர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர், அவருள் தலைமைபெற்றோர் பெயர்: சேர்ப்பன், துறைவன் ஆம் என்பதூஉம், அவ்வந் நிலத்துத் தலைவர் ஏவிய செய்வார் அடியோரும் வினைவலரும் ஆவரென்பதூஉம் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர்கூறிய உரைகளால் நன்கு பெறப்படும். எனவே, ஒவ்வொரு நிலத்தின் கண்ணும் பொதுமக்களாவாருந் தலைமக்களாவாரும் ஏவிய செய்வாரும் உளர் என மக்களை ஆசிரியன் முத்திறப்படுத்து ஓதினமை இனிது விளங்காநிற்கும். இங்ஙனமாக எல்லா நிலத்தின் கண்ணும் இம்மூவகை வேறுபாடும் உளவேனும், இவை மருத நிலமாந்தர்க்குட் சிறந்து தோன்றுமாப்போல், ஏனை நிலத்துள்ளாரிற் சிறந்து தோன்றுவதன்று; ஏனென்றால், மருதநிலம் ஒன்றுமே உழவு தொழிலுக்கு ஏற்றதாய்ப் பல்வகை உணவுப் பண்டங்களையும் விளைத்துக்கொடுத்து, அவ்வாற் றால் தன்னகத்துள்ள மாந்தரை வளம்பெறச் செய்து, அவருள் அறிவானும் உயர்ந்த ஒழுக்கத்தானும் செல்வத்தானும் மிக்காரை உயர்த்தி, அத்தகைய நலங்கள் இலராய் அந்நலங் களை யுடையாரைச் சார்ந்து அவர் ஏவியசெய்து பிழைக்கும் இயல்புடையாரைத் தாழ்த்தி, அவ்வாறுயர்ந்தாரை உயர்ந்த சாதியாரெனவும் தாழ்ந்தாரைத் தாழ்ந்த சாதியாரெனவும் வேற்றுமை விளங்கித் தோன்றப் பண்ணுந் திறத்தது ஆகலின் என்க. மருதநிலம் ஒழிந்த மற்றைநிலங்களில் உள்ளார்க்குள் இத்தகைய வேறுபாடு மிகுந்து காணப்படாமை இஞ்ஞான்றும் நாம் கண்கூடாய்க் காணலாம். குறிஞ்சிநிலத் துள்ள வேட்டுவரும், முல்லைநிலத் துள்ள ஆயரும், பாலைநிலத்துள்ள எயினரும், நெய்தல்நிலத் துள்ள செம்படவரும் தத்தம் வாழ்க்கைக் குரிய வேட்ட மாடுதல், நெய் பால் தயிர் விற்றல், ஆறலைத்தல், மீன்பிடித்து விற்றல் முதலான ஒரோவொரு தொழிலையே செய்து செல்வமிலராய் வயிறு வளர்த்தலானும், இவர்தந் தொழிற்குத் துணையாக வேண்டப்படும் பிற தொழில்கள் இன்மையானும், இம்மக்களுட் சாதிவேற்றுமை இலதாயிற்று; மற்று, மருதநிலத்து மாந்தர் செய்யும் உழவு தொழிலுக்கோ பலவேறு கைத்தொழில்களின் உதவி வேண்டியிருத்தலானும், அவ் வுழவுதொழில் உகலத்தில் நடைபெறும் நாகரிக நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பிறப்பித்து அவற்றிற்கெல்லாம் அடிப் படையாய் நிற்றலானும், அதனையுடைய மாந்தர்தமக் குள்ளேதான் எல்லா வகையான வேறுபாடுகளுங் கிளைப்ப ஆயின என்றறிதல் வேண்டும்.

ஆகவே, சாதி வேற்றுமை முதன்முதல் உண்டானது, உழவு தொழிலைச் செவ்வனே யறிந்து அதனைத் திறம்பட நடத்தி நாகரிக முற்ற தமிழ்மக்கட்குள்ளேதா னென்பது பெரிதும் நினைவிற் தமிழ் மக்கள் நிலையும், இந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து வந்து இதன்கண் இருக்க இடம் பெற்ற ஆரியமக்களின் நிலையும் ஒத்த இயல்பினவாய் நாகரிகம் அற்றனவாய் இருந்ததனைத் தமிழ்ப் பண்டை நூலாகிய தொல்காப்பியத்தானும், வடமொழிப் பண்டை நூலாகிய இருக்குவேதத்தானும் நன்கறிகின்றே மாகலின், சாதிவேற்றுமை யினை முதற்கண் உண்டாக்கினவர்கள் மருதநிலம் அல்லாத மற்றைநிலத் தமிழ்மக்களும் அல்லர், புறம்பேயிருந்து வந்த ஆரியமக்களும் அல்லர். உழவு தொழிலையறிந்து நடத்திய தமிழ வேளாளர்களே தாம் சென்ற சென்ற இடங்கடோறுஞ் சாதி வேற்றுமையினை உண்டாக்கினர். வேளாளர் மலிந்த இத் தென்றமிழ்நாட்டின் கட் சாதி வேற்றுமையின் கொடுமை காணப்படுமாறு போல், வடநாட்டின்கட் சாதிவேற்றுமை அத்துணைக் கொடுமையாகக் காணப்படுகின்றிலது. வடநாட்டின்கண் ஒரேயறையிற் பார்ப்பனரும் பார்ப்பனர் அல்லாத பிறரும் ஒருவரை யொருவர் காண அருகிருந்து உணவுகொள்ளுதலை, அங்கே செல்வார் எவரும் இன்றைக்குங் காணலாம். வடநாட்டி லுள்ள சிவபிரான் திருக்கோயில்களிலுந் திருமால் திருக்கோயில்களிலும் இந்துமக்கள் எல்லாரும் ஏதொரு வேற்றுமையும் இன்றி இறைவன் திருவுருவத்தின் கிட்டச் சென்று, எல்லாரும் அத்திருவுருவத்தினைத் தொட்டுத் திருமுழுக்குச் செய்வித்தும் மலர்கள் தூவியும் வணங்குதலை நாடோறுங் காணலாம். ஆனால், இத்தென்னாட்டிலோ உணவெடுக்கும் இடங்களில் ஒருவரை யொருவர் பாராமல் இனம் இனமாய்ப் பிரிந்து அதனை விழுங்குதலும், உறவு கலக்குங்கால் ஒருவர் மற்றொருவரின் சாதி இழிபுகளைச் சொல்லிக் கலாம் இடுதலும், திருக்கோயிலினுள் இந்துமக்க ளுள்ளேயே இன்ன சாதியார் செல்லாமை இன்னவர் செல்லலாகாதென்றும் உள்ளே செல்வாருள்ளும் இன்னவர் திருவுருவத்தின் அருகிற்செல்லலாம் இன்னவர் அருகிற் செல்லலாகாதென்றும் இடும் கூக்குரலுமே எங்கும் நிரம்பி, ஒன்றோடொன்று ஓயாமற் சண்டையிடும் ஓநாயும் புலியுங் கரடியுஞ் சிங்கமும் நிறைந்த பாழ்ங்காடாக இந்நாட்டினை ஆக்கிவிட்டன ! இக்கொடிய சாதிவேற்றுமை என்னும் என்புருக்கிநோய் தென்னாட்டவர்க்கே உரித்தாவதாய், அவர்களது பெருங்கூட்டமாகிய உடம்பை அவர்களறியாமலே தின்று, அவர்கள் இருந்த சுவடுதானுந் தெரியாதொழியும் படி, அவர்களை வேரொடு அழித்துப் பாழாக்கிக், கூற்றுவனுக்குப் பெருவிருந்து ஆற்றும் பெற்றியதாய் ஆங்காங்குப் பெரிதும் பரவி வருகின்றது. இச் சாதி வேற்றுமை யாகிய கொடுநோயை ‘மனு மிருதி’ என்னும் அழகிய பாழ்ங்குழியினின்றுந் தோற்றுவித்து, அதனை இந்து மக்கட்குழாம் என்னும் உடம்பினுள் நுழையவிட்டவனும் மனு என்னும் ஒரு தமிழவேளாள அரசனே ஆவன். திராவிடதேயத்தின்கண் உள்ள மலையநாட்டில் ஓடும் கிருதமாலை என்னும் ஆற்றங்கரையி லிருந்து தவம் புரிந்த மனு ஒரு திராவிட மன்னனே (த்ராவிடேச்வர:) ஆவன் என்று பழைய மற்சபுராணமும் (1, 12, – 13), பாகவதபுராணமும் (8, 24, 7, 13) தெளித்துரைத்தல் காண்க.

அற்றேற், பண்டைநாளிற் கொல்லாமை புலால் உண்ணாமையாகிய அருளொழுக்கத்தில் தலைசிறந்து நின்ற வேளாளர்கள், தமது அருளொழுக்கத்திற்கு மாறாவதும் இறுமாப்புக்கு இடமாவதுமான இச் சாதிவேற்றுமையினை எங்ஙனம் உண்டாக்கினார்களெனின்; அதனையும் சிறிது விளக்கிக்காட்டுதும். உழவுதொழிலைத் தெரிவதற்கு முன் தமிழ்மக்கள் எல்லாரும் மலைகளினும் மலைக்காடுகளினும் உறைந்துகொண்டு, மான் மரை கடம்பை வரையாடு முதலான விலங்கினங்களை வேட்டம் ஆடி, அவற்றின் இறைச்சியை யுண்டு உயிர்வாழ்ந்தவர்களே யாவர். அவர்கள் மிகப் பழையதாகிய அக்காலத்தில் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டமாடிப், பிழைத்தமையினாலேதான், தாம் அந்நாளில் வணங்கிய முதற்றெய்வமாகிய முருகப்பிரானை வேட்டுவ வடிவில் மலைமேல் வைத்து வழிபட்டும், வேடன் மகளாகிய வள்ளிநாச்சியாரை அவற்கு மனைக்கிழத்தியாக மணம் புணர்த்தி வணங்கியும் வருகின்றார்கள்; வடநாட்டிற் சென்ற அக்காலத்துத் தமிழ்மக்களுந் தமது தென்னாட்டுத் தமிழ் இனத்தவரைப் போலவே அந்நாளில் வேட்டமாடி உயிர் வாழ்ந்து வந்தமையால், தாம் அஞ்ஞான்று வணங்கிய சிவபிரானுக்குங் கையில் வில்லுங் கணையும் உளவாக வேட்டுரு கற்பித்து அவனையும் மலைமேல் வைத்து வணங்கியதோடு, மலையரையன் பொற்பாவை உமைப்பிராட்டியாரையும் அவற்கு மணமகளாகப் புணர்த்தி வழிபடலாயினார். இவ்வாற்றாற் பண்டைத் தமிழ்மக்களெல்லார்க்கும் பண்டை முதற்பெருந்தெய்வம் முருகப்பிரானும் சிவபெருமானுமே யாவர் என்பதூஉங் கடைப்பிடித் துணர்ந்து கொள்க. திருமுருகாற்றுப்படை என்னும் பழைய தனிச்செந்தமிழ்ப் பாட்டில் முருகனுக்கு ஆட்டிறைச்சி வைத்துப் படைத்தமை சொல்லப்பட்டிருத்தலின், முன்நாளிலிருந்த தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கையில் இறைச்சி தின்று வாழ்ந்தவராதல் நன்கு பெறப்படும்.

இனி, அவருள் அறிவான்மிக்கோர் சிலர் மலையைவிட்டுக் கீழ் இறங்கி ஆறும் ஏரியும் வாய்ந்த வளவிய வெளிநிலங் களில் வந்து வைகி, நிலத்தை உழுதுதிருத்தி, நெல் கோதுமை பதினெண் கூலங்கள் முதலியன வித்திவிளைத்தும், வாழை மா பலா தெங்கு முதலியவற்றைப் பயிர்செய்தும், அவற்றின் பயன்களாற் சுவை முதிர்ந்த உணவுகளை ஆக்கி உட்கொள்ளக் கற்றுக்கொண்டபின், தம்மைப்போல் இன்பதுன்ப உணர்ச்சி யுடைய உயிர்களைப் பதைபதைக்கக் கொன்று, அவற்றின் ஊனை உண்டல் பெருந்தீவினையாமென நினைந்து, அதனை அறவே கைவிட்டார்கள். அங்ஙனம் ஊணுணவைக் கைவிட்ட பின், உயிர்க்கொலையையும் அதனால்வரும் இறைச்சியையும் அதனை உண்பாரையுங் காண அருவருப்புற்றனர்; அவரோடு அளவளாவுதற்கும் அஞ்சினர். ஆகவே, மருதநிலத்திற் குடியேறிய தமிழருள் ஊன்உண்ணாதார் ஒரு பிரிவினராகவும், ஊன் உண்பார் மற்றொரு பிரிவினராகவும் பிரிந்தனர். இங்ஙனம் முதலில் இரண்டுபிரிவுகளே உண்டாயின. புலால் அருந்தாதார் புலால் அருந்துவோரைத் தம்மிற் றாழ்ந்தவராக நினைந்து அவரை அருவருத்து விலக்குதல்போலப், புலால் உணவு கொள்வோர் அது கொள்ளாதாரை அருவருத்து விலக்குதற்கு ஏது இன்மையினாலே, புலான்மறுத்த தமிழர் உயர்ந் தோராயும், அவரால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏனைத் தமிழர் தாழ்ந்தோராயுங் கருதப்படலாயினர். எனவே, முதன்முதல் மருதநிலத்துத் தமிழ்மக்களுள் உண்டான சாதி இரண்டேயா மென்பதூஉம், அவர் புலான் மறுத்தோரும் அது மறாதோருமேயாவர் என்பதூஉம், இப்பிரிவுக்கு ஏதுவா யிருந்தது கொல்லாமை புலா லுண்ணாமை யாகிய அருளொழுக்கமேயா மென்பதூஉம் எளிதின் விளங்காநிற்கும்.

இனி, இங்ஙனம் பிரிந்த இருதிறத்தார்க்குள்ளும் இன்னும் பல பிரிவுகள் உண்டாவதற்கு ஏதுவாயின: தூய்மையுங் கல்வியறிவுங் கடவுள் வழிபாடுமேயாகும். இவற்றுள், தூய்மையாவது அகந்தூய்மை புறந்தூய்மை என இருவகைப் படும்; இவை தம்முள அகந்தூய்மை என்பது பொய்கூறாது மெய்யேபேசுதல், பிறர்க்குள்ள உயர்ச்சிகண்டு பொறாமை கொள்ளாதிருத்தல், கண்ட கண்ட பொருள் களையெல்லாம் பெற அவாவுறாதிருத்தல், பிறர்பாற் குற்றங்கண்ட வழியெல்லாம் சினவாதிருத்தல், பிறர்மேல் தீயசொற்களைச் சொல்லா தொழுகுதல் முதலியவற்றால் மனம் மாசியின்றி யிருப்பதாகும். இனிப், புறந்தூய்மை என்பது தன் உடம்பும், தான் உடுக்கும் உடையும், தான் இருக்கும், இடமும், தான் புழங்குங் கருவிகள் ஏனங்கள் பண்டங்கள் முதலியனவும், அழுக்கில்லாமலுந் தீ நாற்றம் வீசாமலுந் துப்புரவாய் இருக்க வைத்தல். இங்ஙனம் அகம் புறம் இரண்டுந் தூயவாய் இருக்கும்படி வைத்தலும், உலகநூல் அறிவுநூல்களை எந்நேரமும் ஓதுதலும், கடவுளை இடையிடையே வழிபடுதலும் முற்றும் வழுவாமற் செய்தல் அரசராயிருந்து குடிகளைப் பாதுகாப்பார்க்கும், பதினெண் டொழில் புரிவாரைத் தத்தந் தொழில்களில் ஏவி உழவு தொழிலை நடப்பிப்பார்க்கும், பல நாடுகளிலுள்ள பண்டங்களை ஒருங்கு தொகுப்பித்துங் காலினுங் கலத்தினுஞ் சென்று அயல்நாடுகளில் அவற்றை விலைப் படுத்தியும் வாணிகம் புரிவார்க்கும் இயலாமையின், அகம் புறந் தூய்மையினும் கல்வி கடவுள் வழிபாட்டினும் வழுவாது நிற்கவல்ல வேளாளர் மட்டுமே, ‘அந்தணர்’ என்னும் பெயர்க்கு உரியராய் உழுவித்துண்பாரையும் பாதுகாத்து, உலகினை ஓம்பி அகம் புறந் தூய்மை கல்வி கடவுள்வழிபாடு என்னும் இவற்றில் அந்தணர்க்கு அடுத்தபடியில் வழுவாது நிற்க வல்லராகலின், அரசர், ஏனை வணிகர் வேளாளரிற் சிறந்த சாதியாராயினர். வணிகரும் வேளாளரும் ஏனைப் பதினெண்டொழில் புரிவாரைவிட மேற்கூறிய அருளொழுக் கத்தினும், தூய்மை கல்வி கடவுள் வழிபாட்டினும் மேம்பட்டிருத்தலின், அவரும் அப் பதினெண்மரினுஞ் சிறந்த சாதியாராக வைத்துப் பாராட்டப் பட்டு வருகின்றனர்.

இனிப், புலால் உண்ணும் பதினெண்டொழிலாள ருள்ளும் அகந்தூய்மை புறந்தூய்மையில் இயன்றமட்டும் வழுவாது நிற்போருங், கல்வியுங் கடவுள்வழிபாடும் வாய்ந் தோருமே உயர்ந்த சாதியாராகக் கருதப்பட்டு வருகின்றனர். புலால் உணவு கொள்ளுதலில் உழுதுண் வேளாளரும் இடையரும் அகம்படியரும் கள்வரும் மறவரும் ஒருங்கொப்ப ராயினும், அகம் புறந்தூய்மையினுங் கல்வி கடவுள் வழிபாட்டினும் உழுதுண் வேளாளரும் இடையரும் ஏனை யோரிற் சிறந்துநிற்றலின், அவர்கள் அகம்படியர் கள்வர் மறவரினும் உயர்ந்த சாதியாராகக் கருதப்படுகின்றனர். தூய்மை கல்வி கடவுள்வழிபாடு இல்லாமை யோடு, கள்ளுண்டும் விலங்குகளில் மிகத் தூயனவும் பெரிது பயன்படுவனவுமாய ஆவினையும் எருதினையும் உணவாகக் கொண்டும் நிரம்பவுந் தீய ஒழுக்கத்தினரா யிருத்தலின், பள்ளரும் பறையரும், அகம்படியர் கள்வர் மறவரினும் இழிந்தசாதியா ராயினர்.

இனி, இவ்வாறு பல்வேறுவகையினராய்ப் பிரிந்த சாதியாருள்ளும் மகளிரது ஒழுக்கத்தால் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிளவு பட்ட சிறுச்சிறு வகுப்பாரும் பற்பலர். கொண்டானைவிட்டுப் பிறன் தோள்தோய்ந்த மகளிரும் அவரைச் சேர்ந்தாரும் ஒரு சாதியினுள்ளேயே இழிந்தவகுப்பினர் ஆயினர். முதலில் ஒரு கூட்டத்தினராய் இருந்த மருதநிலத் தமிழ்மக்களே பின்னர் நாட்செல்லச் செல்ல இங்ஙனமெல்லாம் பற்பல கூறுகளாய்ப் பகுக்கப் படுதற்கு ஏதுவாய் இருந்தவைகள்: கொல்லாமை புலால் உண்ணாமை யும், அகந்தூய்மை புறந்தூய்மை கல்வி கடவுள் வழிபாடும், மகளிர் ஒழுக்கமுமேயா மென்பதனைக் கடைப்பிடித்து உணர்ந்துகொள்க.

இங்ஙனம், பிறவுயிர்க்குத் துன்பம் பயவாத தூய உணவையும், தன் உடம்பும் உயிரும் தூயவாதற்கு ஏற்ற முறைகளையும், இன்ப வேட்கையை நெறிதவறாமல் நுகருதற்குரிய வகைகளையுங் கைப்பற்றி யொழுகும் வரையில், அங்ஙனங் கைப்பற்றி யொழுகுவார் எக்குடிப் பிறந்தோராயினும் அவர் உயர்ந்தோராகப் பாராட்டப்படுதற் குரிய விழுப்பம் வாய்ந்தோராதலைச், செந்தமிழ்த்தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார் தமது காலத்திருந்த மருதநில மாந்தரையும் பிறநிலத்தாரையும் அவ்வவர் தொழின்முறைபற்றிப் பகுத்து ஓதியவாறு பற்றி இவ்வியலில் இதுகாறும் விளக்கிக் காட்டினாம். தூயவுணவானுந் தூய செயலானும் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிரித்துப் பாராட்டப்பட்டோர் தத்தம் ஒழுக்கங்களின் வழுவியவழி உயர்ந்த சாதியாராகப் பாராட்டப்படவில்லை என்பதற்குத், தொல்காப்பியனார்க்குப் பின் பண்டைத் தெய்வ ஆசிரியராய்த் தோன்றிய திருவள்ளுவ நாயனார் இரண்டாயிர ஆண்டு களுக்கு முன்னரே,

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் (14, 3, 4)

என்று அருளிச்செய்த திருக்குறட் பாக்களே (14, 3, 4) சான்றாம். திருக்குறளுக்குச் சிறிது பிற்பட்ட காலத்தாகிய நாலடியாரும்,

நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்சொல்லள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின்ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி ஆள்வினைஎன்றிவற்றின் ஆகுங் குலம்(195)

என்று உயர்ந்த செயல்களே உயர்குல அடையாளமாகக் கருதப்பட்டமை யினை வற்புறுத்து உரைத்தல் காண்க.

இன்னும், ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில், உயர்ந்த ஒழுக்கத்தால் உயர்குலத்தவராக நன்கு மதிக்கப் பட்ட மருதநிலத்து வேளாண் குடித்தலைவர், குறிஞ்சிநிலத்தின்கண் உள்ள குறவர் குடித்தலைவரின் பெண்மக்களை மணந்துகொண்டனர். இது தொல்காப்பியங், களவியலில்,

ஒத்த கிழவனுங் கிழவியுங் காண்பமிக்கோ
னாயினுங் கடிவரை இன்றே (2)

என்று அவர் அருளிச்செய்தவாற்றால் நன்கறியக் கிடக்கின்றது. அங்ஙனங் குறிஞ்சி நிலத் தலைமகளிரை மணந்துகொண்ட வேளாண்டலைவர் அவரது இல்லத்தில் விருந்தினராய்ச் சென்றவழி அவர் தந்த உணவினை அயின்று மகிழ்ந்தமையும் ஆசிரியர் தொல்காப்பியனார்,

புகாஅக் காலைப் புக்கு எதிர்ப் பட்டுழிப்பகாஅ
விருந்தின் பகுதிக் கண்ணும்(களவியல், 16)

என்று (களவியல், 16) ஓதியவாற்றாற் பெறப்படும். ‘புகாக்காலை’ என்பது உணவுகொள்ளுங்காலம். இவ் வியல்புகள் எல்லாம் அச் சூத்திரங்களுக்கு நச்சினார்க் கினியர் உரைத்த உரையுள் எடுத்துக்காட்டப்பட்ட பழம் பாட்டுகளில் தெளியக்காணலாம். காணவே, பண்டைக் காலத்தில் ஒழுக்கத் தால் எத்துணை உயர்ந்த குடிப்பிறப்பினரா யிருந்தாரும், தம்மிற் றாழ்ந்த குடிப் பிறப்பினரில் மேம்பட்டு வருவாரைச் சிறிதும் ஒதுக்கிவையாது, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்து, அவரைத் தம் மினத்திற் சேர்த்துக் கொண்டு இனிது வாழ்ந்துவந்தமை நன்கு புலனாகாநிற்கும். மருதநிலத்து வேளாண்டலைவன் குறிஞ்சி நிலத்து வேட்டுவப் பெண்ணை மணம் புரிந்துகொண்ட வழக்கம் முற்காலத்தில் இருந்ததனை மாணிக்கவாசகப் பெருமான்,

தெங்கம் பழங் கமுகின் குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர் நாட்டினைநீ, உமைகூர்பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமிஎந் தேமொழியே

என்று திருச்சிற்றம்பலக்கோவையாரில் (100) அருளிச் செய்திருத்தல் கொண்டு உணர்க. இதுபோலவே, நெய்தல் நிலத்துப் பரதவர்குடிப் பெண்ணை வேளாண்டலைவன் மணந்துகொண்டமைக்குச் சந்தநு மன்னன் மச்ச கந்தியை மணந்தமையும் (மாபாரதம்), சிவபிரான் பெயர்பூண்ட ஒரு பாண்டிய மன்னன் ஒரு செம்படவப் பெண்ணை மணந்தமையுமே (நம்பியார் திருவிளையாடற் புராணம்) சான்றாம். இங்ஙனமே முல்லை நிலத்து ஆயர்தலைவன் மகளை மருதநிலத்தலைவன் மணந்தமுறை,

படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண்இடையார் மெலிவுங்கண் டண்டர்கள் ஈர்முல்லைவேலிஎம்மூர்விடையார் மருப்புத் திருத்திவிட்டார் வியன்றென்புலியூர்உடையார் கடவி வருவதுபோலும் உருவினதே (136)

போந்த திருச்சிற்றம்பலக்கோவையார் திருப்பாட்டானும், அருச்சுனன் ஆயர் தலைவனான கண்ணன் தங்கை சுபத்திரையை மணந்த வரலாற்றானும் அறியப்படும். இவ்வாறு இழிந்த ஒழுக்கமுடைய இழிந்த சாதியார்க் குள்ளும் உயர்ந்த ஒழுக்கமும் இயல்பும் உடையராய் வருவாரைப் பண்டை வேளாளர் தம்மினத்திற் சேர்த்துக் கொண்டு வாழ்ந்த வரலாறுகளை உற்று ஆராயுங்கால், அவ்வவர்பாற் காணப் படும் உயர்ந்த இயல்புகள் பற்றியே சாதியுயர்பு உண்டாய தல்லாமற் பிறப்பளவில் அஃது உண்டாகவில்லை யென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்குவிளங்கும். உயர்ந்த செயலும் இயல்பும் வாய்ந்த குடிமக்களில் இழிந்த செயலும் இயல்பும் உடையார் தோன்றுவராயின் அவரை இழிந்தோ ரென்றும், இழிந்தசெயலும் இயல்புமுடைய குடியில் உயர்ந்த செயலும் இயல்பும் உடையார் தோன்றின அவரை உயர்ந்தோ ரென்றும் நம் தமிழ்மக்கள் கொண்டாரென்பதற்கு,

ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும் (44, 3)

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றார் அனைத்திலர் பாடு (41, 9)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர் (41, 10)

என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமையே சான்றாம். பண்டைக் காலத்திருந்த தமிழ் வேந்தர்களுங், கல்வியிலும் பிறநலங்களிலும் உயர்ந் தோரையே உயர்ந்தோரெனக் கொண்டு பாராட்டின ரல்லாமற், பிறப்பளவில் எவரையும் உயர்ந்தோரெனக் கொண்டில ரென்பதற்கு, ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே,
பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளுஞ்சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்,

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்மூத்தோன் வருக என்னாது அவருள்அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்,
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளுங்கீழ்ப்பால் ஒருவன் கற்பின்மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே

என்று ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய செய்யுளே சான்றாம்.

இவ்வாறாக, உயர்ந்தோர் தாழ்ந்தோராதலும், தாழ்ந்தோர் உயர்ந் தோராதலும் அவ்வவர்பாற் காணப்படும் இழிந்த இயல்பு செயல்கள், உயர்ந்த இயல்பு செயல்கள் பற்றியே யல்லாமல், வெறும் பிறப்பளவில் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று கூறுதற்கு வேறு ஏதோர் அடையாளமும் உண்மைபற்றியன்றாம். ஏனெனிற், பிறப்பளவில் நோக்கினால், மக்கள் எனப்படுவார் எல்லாரும் புலால்நாற்றம் வீசும் ஊனுடம்பு வாய்ந்தவர் களாகவே யிருக்கின்றனர்; அவர்க்குள்ள அவ்வூனுடம்புதானும் ஒன்பது வாயில்களிலுங் கசியும் மிக அருவருப்பான மலம் நிறைந்ததா யிருக்கின்றது; அவ் வுடம்பிற் புண் உண்டானாற் சீழும் செந்நீரும் வடிகின்றன, புழுக்கள் நெளிகின்றன, பார்ப்பாருடம்பும் இவ்வியல்பினவே, அரசர் வேளாளர் உடம்பும் இவ்வியல்பினவே, பறையர் உடம்பும் இவ்வியல் பினவே; சிலகாலம் உயிரோடிருக்கையிலும் இவ்வுடம்பு திரைத்து மூத்து வலிவுகுன்றிப்போகின்றது; அவ்வுயிர் போனபின் அவ் வுடம்பு மண்ணிற் புதைக்கப்பட்டு மண்ணாய் விடுகின்றது, அல்லது நெருப்பிலிட்டு நீறாக்கப் படுகின்றது. இவ்வியற்கை எல்லாருடம்புகட்கும் பொதுவாயிருத்தலால், ஆசிரியர் திருவள்ளுவர், பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும் என்று அருளிச் செய்தார். ஆகையால், வெற்றுடம்பை மட்டுங் கண்டு இது பார்ப்பாருடையது, இது மன்னருடையது, இது வேளாளருடையது, இது பறையருடையது என்று கூறுதல் இயலாது. மேல் உடுத்த உடைகளையும், பூணூல் உச்சிக் குடுமிகளையும் களைந்துவிட்டால் இவர் பார்ப்பனரென்று அறிதல் ஏலாது; இங்ஙனமே அரசர் வேளாளர் பறையர் முதலானோர் தாந்தாம் வேற்றுமை தோன்ற அணிந்திருக்கும் அடையாளப் பொருள்களை அகற்றிவிட்டால் அவர்களை இன்னாரென்றறிந்து கொள்ளுதல் எவர்க்கும் ஏலாது. இவ்வாறு மக்களுள் இவர் இன்ன சாதியார் இவர் இன்ன சாதியார் அல்லர் என்று இனம் பிரித்துகாட்டல் இயற்கையில் இயலாமைபற்றியே, அஃகி அகன்ற செந்தமிழ்த் தொல்லா சிரியராகிய தொல் காப்பியனார் ‘சாதி என்னுஞ்சொல்லை மக்கட்பிரிவினர்க்கு இட்டு வழங்காமல், தம்முன் இனம் இனமாக இயற்கை யிலேயே வேற்றுமைகாட்டும் சிற்றுயிர்ப் பிரிவுகளுக்கு அச்சொல்லை இட்டு வழங்கினார். அவர்,

நீர் வாழ்சாதியுள் அறுபிறப்பு உரிய

என்று மரபியற் சூத்திரத்தில் (42) சாதி என்னுஞ்சொல்லை மீனின் இனங்களைக் குறித்தற்குக் கருவியாகக் கொண்டமை காண்க. நீர்வாழ் மீன்களில் இவை ஆண்பால் இவை பெண்பாலென்று பகுத்தறிதற்கு ஏற்ற உறுப்பு அடையாளங்கள் உடையன உளவென்றும், அவற்றுள் ஆணுறுப்பு உடைய வாய்ப் ‘போத்து என வழங்கப்படுதற்கு ஏற்றவை ஆறு சாதியாமென்றும் ஆசிரியர் அச் சூத்திரத்தால் அறிய வைத்தார். ஆணுறுப்புடைய ஆறுசாதி மீன்களாவன: சுறாவும் முதலையும் இடங்கரும் கராமும் வராலும் வாளையுமென இவை என்று அதற்கு உரைகாரர் கூறியதூ உங்காண்க. எனவே, தத்தம் உடம்பின் அமைப்பால் இவை சுறா, இவை முதலை, இவை வரால், இவை வாளை எனப் பகுத்துணர்தற்குரிய இயற்கை வேற்றுமையுடைய சிற்றுயிர் களின் இனங்களே ‘சாதி’ எனப் பெயர்பெறுதற்கு இயைந்தனவாம் என்பதூஉம், இங்ஙனம் இயற்கையிற் பிரித்துணர்தற்கு ஏலா மக்கட்பிரிவினர் அப்பெயர் பெறுதற்கு ஏலாரென்பதூஉம், அதனால் மக்களுட் ‘சாதி இல்லை யென்பதூஉம்’ தெய்வப் பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தாதல் பெறப்பட்டமை காண்க. இவ்வாற்றால், உயர்ந்த செயல்கள் உடையாரை உயர்ந்தோ ரென்றலும், இழிந்த செயல்கள் உடையாரை இழிந்தோ ரென்றலுமே செந்தமிழ்மறை வகுத்த தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார்க்கும், அவரது மரபு பிழையாமல் வந்த தெய்வத் திருவள்ளுவனார்க்கும், அவ்விருவரது மந்திரமொழி பேணிவந்த ஏனைத் தமிழாசிரியர் எல்லார்க்கும் ஒத்த கருத்தாதல் வெள்ளி டைமலைபோல் விளங்காநிற்கும் என்பது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!