
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்
3. மிருதிகளிற் சாதிப்பிரிவும் ஒழுக்கம் பற்றியதே
இனி, ஆபதம்பர், கௌதமர், வசிஷ்டர், போதாயநர், மநு முதலாயினார் தருமசாத்திரங்களும் மிருதிநூல்களும் ஆக்கிய காலந்தொட்டே நால்வேறு சாதிவகுப்பும், அவ்வவர்க் குரிய தொழில்களும் வரையறுத்து உரைக்கப் பட்டன. அவ்வாறு அவை வகுத்து உரைக்கப்பட்ட விடத்தும் உயர்ந்த தொழில்களைச் செய்வோரே உயர்ந்த சாதியாராகவும், இழிந்த தொழில்களாக அவர்களாற் கருதப்பட்டவைகளைச் செய்வோரே இழிந்த சாதியாராகவும் வைக்கப்பட்டன ரல்லாமற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை மேற்கூறிய தரும சூத்திரங்கள் மிருதி நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்பட வில்லை. உயர்ந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடித்துச் செய்தற் குரியோர், அவற்றினின்றும் வழுவுவராயின் அவர் இழிந்த சாதி யினராகவே அவற்றுள் ஐயந்திரிபுக்கு இடனின்றிச் சொல்லப்பட் டிருக்கின்றனர். வாசிஷ்ட தரும சூத்திரம்,
பிராமணனாவது க்ஷத்திரியனாவது கற்கள், உப்பு, சணல், பட்டு, சணற்றுணி, தோல் முதலியவைகளை விற்றல் ஆகாது; சாயம் ஏற்றிய புடைவைகளும் விற்றல் கூடாது; சமையற் செய்த வுணவும், பூக்கள் பழங்கள் கிழங்குகள் மண் பண்டங்கள் உணவுக்கு நறுமணச்சுவை ஏற்றும் பொருள்கள் முதலியனவும், தண்ணீர் பூண்டுகளிலிருந்து இறக்கிய சாறு முதலியனவும் விற்றல் கூடாது; சோமப் பூண்டு படைக்கலங்கள் நச்சுப்பண்டங்களும் விற்றல் ஆகாது; இறைச்சியாவது பாலாவது அவற்றால் அமைக்கப் பட்ட உணவாவது, தகரம் செம்மெழுகு ஈயம் முதலியன வாவது விற்றல் கூடாது (2,24-27) எனவும், வேதத்தை ஓதாதவரும் அதனைப் பிறர்க்குக் கற்பியாதவரும் அழல் ஓம்பாதவர்களும் ஆன பிராமணர்கள் சூத்திரை ஒத்தவரா கின்றனர்; வேத உணர்ச்சி யில்லாதவனைப் பிராமணன் என்று அழைத்தல் ஆகாது; வியாபாரஞ்செய்து பிழைப்ப வனையும், நாடகம் ஆடுவோனையும், சூத்திரர்க்கு ஏவல் செய்வோனையும் கள்வனைப் போற் பிறர்பொருளைக் கவர்வோனையும், மருத்துவஞ் செய்து பிழைப்போனையும் அங்ஙனமே பிராமணன் என்று கூறுதல் ஆகாது; தமக்குரிய தூய கடமைகளைச் செய்யாமலும், வேதம் அறியாமலும் ஐயம் ஏற்றுப் பிழைக்கும் பார்ப்பனர்கள் இருக்கும் ஊரை அரசன் ஒறுத்தல் (தண்டித்தல்) வேண்டும்; ஏனெனில் அத்தகைய ஊர் கொள்ளைக்காரருக்கு உண்டிகொடுக் கின்றது. தம்முடைய புனிதக் கடன்களை நிறைவேற்றாமலும், வேதத்தை அறியாமலும், பிராமணன் என்னுஞ் சாதிப்பெயர் ஒன்றை மட்டுங் கொண்டு பிழைப்பைத் தேடும் பிராமணர் பல்லாயிரம்பேர் ஒருங்குகூடினாலும், அவர்கள் அறங்கூறும் அவையத்தார் ஆகமாட்டார்கள் (3, 1-5) எனவும் வற்புறுத்துரைக்கின்றது. இதற்கு இசையவே கௌதம தருமசூத்திரமும் (7, 8-21), மநு மிருதியும் (12, 114) புகலாநிற்கின்றன.
நால்வகைச் சாதிகளும் அவற்றிற்குரிய கடமைகளும் வரையறுத்துப் பார்ப்பனரை வரைகடந்து உயர்த்தி, ஏனை மூவரையும் அவருட் கடைப்பட்ட சூத்திரரையும் இழித்துப், பெருந் தொகையினரான இந்துமக்களை இழிந்த சூத்திர வகுப்பிற் சேர்த்து, அவர்களைக் கல்வியிலும் நாகரிகத்திலும் தலையெடுக்க வொட்டாமல் நசுக்கிப், பன்றி நாய் கழுதை முதலான விலங்கினங்களிலும் அவர்களைத் தாழ்த்தி, நினைப்பினும் நெஞ்சம் நடுங்குங் கொடுந் தண்டனைகளை (ஒறுத்தல்களை)ச் சிறிதும் இரக்கமும் ஈர நெஞ்சமும் இன்றி அச் சூத்திரர்க்கு மட்டுமே ஏற்படுத்திச், சாதிப்பிரிவுகளுக்கு அழுத்தமான அடிப்படைகோலிய தருமசூத்திரங்கள் மிருதிகளுங்கூடப் பிறப்பளவில் ஒருவனைப் பிராமணனாகக் கூறுதற்கு ஒருப்படாதிருக்கத், தாம் அந்தண அரச வணிக வகுப்புகளுக்கு உரியவர்களாயிருந்தும் அவ்வுண்மையை அறிந்துகொள்ளுதற்கு ஏற்ற கல்வியறிவும் ஆராய்ச்சி யுணர்வும் இன்றிக், கிறிதுவர் ‘அஞ்ஞானி என்றழைத்தால் அதன் இழந்த பொருளை யறியாமல் அதனைத் தனக்குரிய உயர்ந்த பட்டப்பெயராகக் கருதித் தன்னைத்தானே ‘அஞ்ஞானி என்று சொல்லிக்கொள்ளும் புலையனைப் போலத், தம்மைப் பார்ப்பனர் ‘சூத்திரர்’ என்றழைத்தால் அச்சொல்லின் இழிந்தபொருளை யறியாமல் தாமுந் தம்மைச் ‘சூத்திரர்’ எனவுஞ் ‘சற்சூத்திரர்’ எனவுஞ் சொல்லிக் கொள்ளும் போலிச்சைவர்கள் மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவர் ஆதல் யாங்ஙனம்? நால்வகை மக்கட்பிரிவினரில் மிக உயர்ந்தோராகக் கருதப்பட்ட பார்ப்பனருக்கே பிறப்பளவில் உயர்ச்சி கைகூடாதாயின், அந் நால்வகை யினரிலுங் கடைப்பட்ட சூத்திர வகுப்பினராகத் தம்மைத்தாமே ஒப்புக்கொண்ட போலிச் சைவர்கள் மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவராதல் யாங்ஙனம்? மனுமிருதி எட்டாம் அத்தியாயத்தில் (413 – 415).
ஒரு சூத்திரன் விலைக்கு வாங்கப்பட்டாலும் விலைக்கு வாங்கப் படாவிட்டாலும், அவனை அடிமைவேலை செய்யும்படி ஒரு பார்ப்பனன் கட்டாயப்படுத்தலாம்; ஏனென்றால், அவன் பார்ப்பனனுக்கு அடிமையா யிருக்கும் படி கடவுளாற் படைக்கப்பட்டான்.
தன் தலைவனால் விடுவிக்கப்படினும் ஒரு சூத்திரன் தன் அடிமைத் தன்மையினின்றும் விடுவிக்கப்பட்டவன் அல்லன்; அஃது அவனுக்கு இயற்கையாய் இருப்பதனால், அவனை அதனினின்றும் யார்தாம் விடுவிக்கக்கூடும்?
சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப் பட்டவன், தன் அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ் செய்பவன், தன் வீட்டில் தன் வேசிக்குப் பிறந்தவன், விலைக்கு வாங்கப்பட்டவன், பிறராற் கொடுக்கப்பட்டவன், தன் முன்னோர் காலந்தொட்டுத் தனக்கு அடிமைப் பொருளாய் வருபவன், குற்றத்திற்காக அடிமைப்படுத்தப்பட்டவன் எனச் சூத்திரர் எழுவகைப்படுவர். என்று சூத்திரர் இன்னா ரென்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது. தம்மைச் சூத்திரர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் போலிச் சைவர்கள், மேலே மனு சொல்லிய எழுவகைச் சூத்திரரில் எந்த வகையிற் சேர்ந்தவர்களோ அதனை அவர்களே எடுத்துச் சொல்லக் கடவர். அவ்வேழுவகையில் அவர்கள் எதிற்சேர்ந்தவரா யிருந்தாலும் இருக்கட்டும் அவர்கள் தம்மைச் சூத்திரர் என்று தாமே ஒப்புக்கொண்ட மட்டில் அவர்கள் பார்ப்பனர் வீட்டுக் கடைவாயிலிற் காத்திருந்து அடிமை வேலை செய்யும் ஊழியக்காரரே யாவரல்லாமல், உயர்ந்த சாதியாராதல் யாங்ஙனம்?
அற்றன், ‘யாங்கள் கொலைபுலைதவிர்ந்து சிவவழிபாடு இயற்றி உழவும் வாணிகமும் நடாத்திச் செல்வாழ்க்கை யுடையேமாய் இருத்தலின் எம்மை மற்றைச் சூத்திர வகுப்பார் எல்லாரோடும் சேர்த்தல் ஆகாது, யாம் சூத்திரரிற் சிறந்த சற்சூத்திரரே ஆவேம்எனின்; மேலெடுத்துக்காட்டிய மனு முதலான பழைய மிருதி நூல்களிற் சூத்திரரில் ஒருவகையே சொல்லப்பட்டிருக்கின்ற தல்லாமற், சற்சூத்திரர் என்னும் மற்றொருவகை அவற்றுள் யாண்டும் சொல்லப்படவில்லை; சூத்திரர் என்போர் பார்ப்பனர் அரசர் வணிகர் என்னும் ஏனை மூன்று வகுப்பினர்க்கும் அடிமைகளாய் ஊழியம் ஒன்றே செய்தற்குரிய ரல்லாமல், உழவு வாணிகம் நடாத்திச் செல்வந் தொகுக்கவாவது, கல்வி கற்கவாவது, சிவவழிபாடு இயற்றவாவது உரிமை வாய்ந்தவர்கள் அல்லர். ஆதலாற் ‘சற்சூத்திரர் என்னுஞ் சொல்வழக்குப் பழைய வடமொழி மிருதி நூல்களுக்கு முற்றும் மாறாவதொன்றா மென்று உணர்ந்துகொள்க.
அற்றேற், ‘சற்சூத்திரர்’ என்னும் பெயரும் அவர்க்குரிய கடமைகளும் சிவாகமங்களிற் சொல்லப்பட்டிருக் கின்றனவே யெனின்; ‘சிவாகமங்கள்’ என்னும்பெயரால் இப்போது நடைபெறும் சில வடமொழி நூல்கள், கோயிலில் வழிபாடு ஆற்றும் முறைகளையுங் கோயில் அமைக்கும் வகைகளையுந் தெரித்தற்பொருட்டு இருநூறு முந்நூறு ஆண்டுகளாகக் கோயிற் குருக்கண்மார்களால் எழுதிவைக்கப்பட்டன வாகும். கோயில் வழிபாடுகளும் கோயிற்குருக்கண்மார் பிழைப்பும் செல்வர்களாயுள்ள சைவவேளாளர்களின் பொருளுதவியைக் கொண்டே நடைபெற வேண்டியிருத்தலின், அவர்களைச் சூத்திரவகுப்பா ரெல்லாரோடும் பொதுவாகச் சேர்த்துக் கூறுதற்கு, அஞ்சியே, அந்நூல்களை எழுதிய அக் குருக்கண்மார்கள் அவர்களைச் சிறிது உயர்த்திவைத்தற்காகச் ‘சற்சூத்திரர்’ என்னுஞ் சொல்லைப் புதிதாகப் படைத்து அவற்றுள் நுழைப்பாராயினர். சிவபிரான் றிருக்கோயிற் குருக்கண் மார்கள் உண்மையிற் சைவவேளாள மரபினைச் சேர்ந்தவர் களாயிருந்தும், தம்மை அம்மரபிற் குரியவர்களாகச் சொல்லிக் கொள்வது இழிவென நினைந்து, வடக்கிருந்துவந்து குடியேறிய ஆரியப் பார்ப்பன இனத்தில் தம்மையும் மெல்ல மெல்லச் சேர்த்துக்கொள்வான் விழைந்து, தம்மவரான சைவவேளாளரைச் சூத்திரரெனவுந் தம்மைப் பிராமணர் எனவும் வேறுபகுத்து, அங்ஙனம் பகுப்பினுந் தமது பிழைப்புக்குப் பலவகையில் உதவியாளராய் நிற்கும் சைவவேளாளரை ஆரியப்பார்ப்பனர் செய்தவாறு போல் தாமும் முழுச் சூத்திரவகுப்பிற் சேர்த்துவிடுதற்கு இயலாமல், அவர்களைச் சிறிது உயர்த்திச் ‘சற்சூத்திரர் என்னும் ஒரு புதுப்பெயரைப் படைத்து அதனைத் தாம் சிவாகமப் பெயரால் இயற்றிய அந்நூல்களில் எழுதிவைப்பாராயினர். ‘சற்சூத்திரர்’ என்னும் இப் பெயர்வழக்கு, எல்லாரும் ஒப்புக் கொண்ட பழைய வடநூல்களில் எங்குங் காணப் படாமையின் இதனை ஆரியப்பார்ப்பனர் எவரும் தழுவிக் கூறுகின்றிலர்; இன்னோரன்ன புதுவழக்குகள் விரவிக் காணப்படும் இவ்வாகம நூல்களைப் பற்றிய குறிப்பும் பழைய வட நூல்களில் எங்குங் காணப்படாமையின், வடநூல் ஆராய்ச்சியுடையார் எவரும் இவ்வாகம நூல்களை எங்கும் மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுகின்றிலர். அற்றேல், வேதாந்த சூத்திரத்திற்குச் சைவ பாடியம் எழுதிய நீலகண்ட சிவாசாரியார் யாம் வேத சிவாகமங்களுக்கு வேற்றுமை காண்கின்றிலம் எனத் தமதுரையுள் உரைத்த தென்னை யெனின்; அவராற் குறிப்பிடப்பட்ட சிவாகமங்கள் என்பன வடமொழி யிலுள்ள உபநிடதங்களைப்போற் கடவுள் உயிர் மலம் (பதிபசுபாசம்) என்னும் முத்திறப் பொருளியல்புகள் தெரித்து வீடுபேறு பயக்கும் உணர்வினைத் தோற்றுவிக்கும் வடமொழி தென்மொழி அறிவுநூல்களேயாம். தமிழ் மொழிக்கண் உள்ள திருமந்திரம் அப் பெற்றித்தான தொரு விழுமிய சிவாகம நூலாகும். இத் திருமந்திரம் போன்ற சிவாகம நூல்கள் பல தமிழிலும் வடமொழியிலும் அக் காலத்திருந்தமையின் அவை தம்மையே நீலகண்ட சிவாசாரியார் தமது பாடியவுரையிற் குறிப்பாராயினரென்க. பண்டைநாளிலிருந்த தமிழ் வடமொழிச் சிவாகம நூல்களைப் பற்றிய ஆராய்ச்சியினை எமது மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலுள் விரித்துக்காட்டி யிருக்கின்றே மாகலின் அதனை அங்கே கண்டுகொள்க; ஈண்டுரைப்பிற் பெருகும்.
இனி, இத் தென்றமிழ்நாட்டிலுள்ள சைவ வேளாளர்கள் உண்மையில் ஆரியப்பார்ப்பனர்க்கு மேலான வழக்க ஒழுக்கங்களையுடைய உயர்ந்த சாதியாராயிருந்தும், தமக்கு உரிய அருள் ஒழுக்கத்தையும் கல்விப்பயிற்சியையும் ஆராய்ச்சியுணர் வினையும் அறவே கைவிட்டு, இங்கே பிழைக்க வந்த அவ்ஆரியப் பார்ப்பனர் கட்டிச் சொல்லிய பொய்க் கதைகளிற் சிக்குண்டு, தமக்குள்ள செல்வத்தை யெல்லாம் அவர்கட்கும் அவர்கள் காட்டிய உலகப் பொய்ம்மாய இன்பங்கட்கும் அளவின்றிச் செலவிட்டுத், தமக்குப் பலவகையான பயன்படுங் கைத்தொழில்களைச் செய்து கொடுத்துத் தம்மைச் செல்வத்திற் புரளவைத்த பதினெண் தொழில்புரியும் அருமைத் தமிழ்மக்களை யெல்லாந் தம்மினுந் தாழ்ந்தசாதியாராக இழிபுபடுத்தித், தம்மை அவரெல்லாரினும் உயர்ந்த சாதியாராகக் கருதி இறுமாந்து, அவ்வாரியப் பார்ப்பனரை மட்டுந் தம்மினும் மேலான சாதியாராகப் பிழைபட நினைந்து சைவ வேளாளர்கள் தம் முன்னோரது அருள் ஒழுக்கத்திற்கு முற்றும் மாறாக நடக்கப்புகுந்த காலந்தொட்டே இழிந்த சூத்திரராயினார் கண்டீர்! தமக்கு உதவிசெய்யுந் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமைகளைச் செய்தமையா லன்றோ சைவ வேளாளராகிய தாமும் ஆரியப் பார்ப்பனரால் இழிபு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரராயினார்!
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்
என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படாதன்றோ!
பதினெண்வகைத் தொழில்களைச் செய்து தருவாரான கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பார், பாகர், பறையர் என்போர் தத்தந் தொழில்களைச் செவ்வனே செய்து தருத லாலன்றோ வேளாளரும் அரசரும் அந்தணரும் இனிதுயிர் வாழ்கின்றனர். உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத இக் கைத்தொழில்களைச் செய்து தந்து நாம் துன்பமின்றி இன்பமாய் நன்குவாழ உதவிபுரியும் அருந்தமிழ் மக்களாகிய நம் உடன்பிறப்பினரையும் அவர் இயற்றும் அத் தொழில்களையும் இழிபுபடுத்தி நினைத்தலுங் கூறுதலுந் தெய்வத்திற்கு அடுக்குமா? இவர்கள் தாந்தாஞ் செய்யுந் தொழில்களைச் செய்யாது கைவிட்டு வறிதேயிருந்தால், தம்மைச் சைவ வேளாளர் என்றும், க்ஷத்திரிய ரென்றும் பிராமண ரென்றுஞ் சொல்லி இறுமாந்து திரிவோர்தம் இறுமாப்பு எவ்வாறாகும்! இவர் தம் சாதியுயர்வெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோமன்றோ! இருக்குவேத காலத்தில் ஒரு குடும்பத்தாரிலேயே பற்பல தொழில்களைச் செய்வாரிருந் தனரென்பது நன்கு காட்டப்பட்டிருக்கின்றது. இருக்குவேத ஒன்பதாம் மண்டிலத்தில் (112, 3) யான் பாடல்களைச் செய்கின்றேன், என் தந்தையோ ஒரு மருத்துவன், என்தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றாள். செல்வத்தைப் பெறுதற் பொருட்டாகப் பல்வேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப் போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம். எனப் போந்த பாட்டினால் ஒரு குடும்பத்தினரே பல தொழில்களைச் செய்து உயிர்வாழ்ந்தமை பெறப்படுதல் காண்க. இவ்வாறு பண்டை நாளில் ஒரு குடும்பத்தினரே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பற்பல தொழில்களைச் செய்து தம்முள் ஏதும் வேற்றுமையின்றி நன்கு உயிர்வாழ்ந்து வந்தமைபோல, இப்போதும் பயன்படும் பற்பல அரியபெரிய கைத்தொழில்களைச் செய்துவரும் வகுப்பினர் பற்பலரும் அங்ஙனமே தம்முள் உயர்வுதாழ்வு காணாது ஒருமித்து அளவளாவி உயிர்வாழப் பழகுவராயின் நம் இந்தியநாடும் இந்திய மக்களும் எவ்வளவு சிறந்த நிலையை அடைகுவர்! வெள்ளைக்கார நன்மக்கள் தாந்தாம் வேண்டிய பல்வேறு பயன்படுந் தொழில்களைச் செவ்வையாகச் செய்துகொண்டு, அத்தொழில்களையாவது அத் தொழில்களைச் செய்யுந் தம் மினத்தவரையாவது ஒரு சிறிதும் இழிபாக நினையாது, எல்லாரையும் ஒத்த இயல்பினராகவே கருதி உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேறுபாடின்றி ஒருங்கு அளவளாவி ஒரு குடும்பத்தாரைப் போல் வாழ்ந்துவருதலாலன்றோ, அவர்கள் கல்வியிலுஞ் செல்வத்திலும் நுண்ணுணர்விலும் ஆற்றலிலும் இன்பத்திலும் மேம்பட்டு இவ்வுலகின்கண் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிப், பெரும்பாலும் ஏனையோரை யெல்லாந் தங்கீழ்ப்படுத்துத், தாம் அவர்க்கு மேலாய்த் தேவரைப்போல் விழுமியராய் வாழ்கின்றனர்! மற்று, நம் இந்தியமக்களோ தம்முட் பல்வேறு பயன்படுதொழில்கள் செய்வாரையும் அவர் செய்யும் அத்தொழில்களையுந் தாந்தாமே இழிபுபடுத்திக் கொண்டு, அதனால் ஒருவர்க்கொருவர் அன்பும் ஒற்றுமையும் இன்றிப், பொறாமையும் சூதும் வஞ்சமும் மிக்க அழுக்கு நெஞ்சினராய்க், கல்வியும் அறிவும் ஆற்றலும் இன்பமும் அற்றுக், கவலையும் வறுமையுந் துன்பமும் மிகுந்து, பொய்க் கதைக்கும் அறியாமைக்கும் அடிமைகளாகி, அதனால் இவ்வுலக வாழ்க்கையை நரகவாழ்ககையாக்கி அலகை களைப்போற் காலங்கழிக்கின்றனர்! ஐயோ! நம் இந்திய மக்கள் நல்லறிவும் ஒற்றுமையும் பெற்று முன்னேற்றம் எய்தும் நாள் எந்நாளோ! அறிகிலம். அதுகிடக்க.
மேற்கூறியனவெல்லாம் ஒக்கும்; சைவவேளாளர் சூத்திரர் அல்லராயின் அவரைப் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மற்றை மூவகையில் எதன்கண் அடக்குதல் வேண்டும் எனின்; அம்மூவரினும் அவர்க்கு மேற்பட்ட நிலையினும் வைகிய பழைய சைவ வேளாளரை அம்மூவகுப்பில் மட்டும் அடக்குதல் பொருந்தாது. பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால்வகைப்பிரிவும் பெயரும் ஆரியக் குருமார் எழுதிய தரும சூத்திரங்களினும் மிருதிநூல்களினும் மிகுதியாய்க் காணப் படினும், அவை ஆரியர்க்கே உரியனஅல்ல. இவ் இந்திய நாட்டுக்குப் புறம்பே இருந்த காலத்தும் அதன்பின் இதற்குட் புகுந்து முதன்முதற் குடியேறிய காலத்தும் ஆரியர்க்குள் அத்தகைய தொரு பிரிவு இருந்தது உண்மையாயின், அவர்கள் அக் காலங்களிற் பாடிய இருக்குவேதப் பாட்டுகளில் அந்நாற்சாதிப் பிரிவு சொல்லப்பட்டிருத்தல் வேண்டும்; மற்று அஃது அவ் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களில் ஓரிடத்தாயினும் ஓர் எட்டுணையேனும் சொல்லப்படாமை யினை மேலே விளக்கிக்காட்டினே மாகலானும், ஆரியருள் ஒவ்வொரு குடும்பத்தாரும் பற்பல தொழில்களைச் செய்து தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உயிர்வாழ்ந்தமையினைச் சற்று முன்னே குறித்தேமாக லானும் அவர்கள் இவ் விந்தியநாட்டுட் புகுந்து வைகிய நெடுங்காலம் வரையில் அந்நாற்சாதிப் பிரிவினை அறியாரா யிருத்தமை நன்கு பெறப்படும். அவர்கள் வருதற்குமுன்னரே வடக்கே இமயமலை வரையிற் பரவியிருந்த தமிழ் மக்களோடு, இதனுட்புகுந்த அவ்வாரியர் இதன்கண் இருப்பிடம் பெறுதற்பொருட்டு நெடுகப் போராடிக் கொண்டிருந்த காலம்வரையில் தம்மை ‘வெண்ணிறமுடைய ஆரியர்’ எனவும், தம்மை எதிர்த்துத் தடைசெய்த தமிழர்களைக் ‘கருநிறமுடைய தாசர்கள்’ எனவும் இருவகைப்படுத்தே ஓதிவந்தனர். இங்ஙனம் இருவகை நிறவேறுபாடுபற்றி வந்தமையினாலேயே முதன் முதற் சாதியானது ‘வர்ணம்’ என்னும் பெயரால் வழங்கப்பட்டது. வர்ணம் என்னும் பெயரால் முதன்முதல் உண்டான சாதியானது இந்திய நாட்டுக்கும் புறம்பேயிருந்து வந்த வெண்ணிறத்தினரான ஆரியரையும், இவ்விந்தியநாட்டுக்குள் முன்னரே யிருந்த தமிழரிற் கருநிறமுடைய அவர்தம் ஏவலாளரையுங் குறிப்பதொன்றாய் இருந்தது.
இங்கே நினைவிற் பதிக்கற்பாலது ஒன்று உளது; தமிழர் எல்லாருங் கரியநிறத்தினர் அல்லர். அவருள் நூல் ஓதும் அந்தணரும், அரசவகுப்பாரும், உழுவித்துண்ணும் சைவ வேளாளக் குடியினரும் வெயிற் படாமற் கோயில்களிலும் அரண்மனைகளிலும் மாளிகை வீடுகளிலும் உறைந்து வருபவர்களாதலின் அவர்களிற்பலர் பொன்னிறத் தினராயும் மற்றும்பலர் செந்நிறத்தினராயும் இன்னும்பலர் பழுப்பு நிறத்தினராயும் வேறுபலர் மாந்துளிர் நிறத்தினராயும் உளர்; இவரல்லாத உழுதுண் வேளாண் குடியினரும், மற்றைக் கைத்தொழில்புரியும் பதினெண் குடிமக்களும், அரசனது படையிற் போர்த்தொழில் பயிலும் மறவரும் கடுமுயற்சி யுடையவர்களாய்ப் பெரும்பாலும் வெயிலில் நிற்றலின் இவர்கள் மட்டுமே கருநிறமுடையராயிருக் கின்றனர். இந்தியநாடு பகலவன் செல்லும் சூடுமிகுந்த நடுக்கோட்டின் (Equator) அருகில் இருத்தலால் வெயில் வெப்பம் மிகுதியும் உடையதாயிருக்கின்றது; எவ்வளவு அழகிய நிறமுடைய ராயினும் அவர் சிலநாட்கள் வெயிலில்நின்று உழைப்பராயின் தமது நிறம் மாறிக் கருநிறமுடையராதலை நங் கண்ணெதிரே இன்றுங் காணலாம்; மற்று, இந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடநாடுகள் நடுக்கோட்டுக்குப் பெரிதும் விலகியிருத்தலால், அவை வெயில்வெப்ப மின்றிக் குளிர்மிகுந்தனவாயிருக் கின்றன; அதனால், அந்நாடுகளில் உறைவோர் எவ்வளவு உழைப்பான தொழில்களைப் பகல் வெளிச்சத்தினின்று எத்தனை நாட்கள் செய்வாராயினுந் தமதுநிறம் சிறிதும் மாறுதலின்றி வெண்மையாகவே இருப்பர். தமிழரில் உழைப்பாளிகள் கரியநிறத்தினரா யிருப்பினும் அவர்களிற் பெரும்பாலார் திருத்தமான உறுப்புகள் வாய்ந்து அழகியராகவே இருக்கின்றனர். வெள்ளைக்காரரிற் பலர் வெண்ணிறத்தினராயிருப்பினும், திருத்தமான உறுப்புகள் வாயாமையின் அழகு இலராயும் இருக்கின்றனர். ஆகையாற், கரியநிறம் பற்றித் தமிழரிற் கைத்தொழில்புரிவாரை அழகிலரென இகழ்ந்துரைத்தல் அமையாது. யாங்கூறிய இவ்வுண்மை நுண்ணிய ஆராய்ச்சிவல்ல கால்ட்வெல் ஆசிரியராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது. அதுநிற்க.
இந்திய நாட்டுட் புகுந்து தமிழரொடு நெடுங்காலம் போராடியும் அவரை முறியடித்தல் இயலாமை கண்ட ஆரியர் பிறகு அவருடன் நட்புக்கொண்டு அவ்வழியால் வடநாட்டிற் பல இடங்களினுங் குடியேறி வைகுவாராயினர். இந்திய நாட்டுக்கு வரும்முன் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு, அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்வளர்ந்த நிலங்களைத் தேடித்திரிந்தபடியாகவே இருந்தனர். இவ்விந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடபால் நிலங்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருத்தலானும், ஆறு திங்களில் இரண்டரைத் திங்கள் வரையிற் பகலவன் வெளிச்சம் இன்றி எங்கும் இருளாயும் மற்றை மூன்றரைத் திங்கள் சிறுவெளிச்சமாயும் அவையிருத்த லானும் அங்கே உழவுதொழில் நடைபெறுதல் இயலாது. ஆதலால், அவ்வடபால் நிலங்களிலிருந்த ஆரியர் ஆடு மாடுகள் வளர்த்து அவற்றாற் பெறப்படும் பால்தயிர் நெய்யையும் அவற்றின் இறைச்சியையும் அயின்றே பெரும் பாலும் உயிர்வாழ்ந்து வந்தனர். பண்டை நாளில் வடபகால் இருந்த ஆரியரின் உயிர்வாழ்க்கை இத்தன்மைத்தாதல் அவர்கள் அஞ்ஞான்றுபாடிய மிகப் பழைய இருக்கு வேதப்பதிகம் ஒன்றால் (1, 42) நன்கு புலனாகின்றது. அப்பதிகத்தை இங்கே மொழிபெயர்த்து உரைக்கின்றாம்;
ஓ பூஷனே, எங்கள் வழிகளைச் சுருங்கப்பண்ணுக,
வழியிலுள்ள இடையூறுகளை அப்புறப்படுத்துக;
வானிற்பிறந்தோய், எமக்குமுன்னே எம்மை அணுகிச்செல்க.
பூஷனே, எமது வழியினின்றும் ஓநாயை, நன்மையற்ற கெட்டஓநாயைத் துரத்துக:
அஃது எம்மைத் துன்புறுத்துதற்குப் பதுங்கியிருக்கின்றது.
நாங்கள் செல்லும் வழிப் பக்கமாய்க் கொள்ளைக்காரன் கள்ளநெஞ்சத்தோடும் ஒளிந்திருக்கின்றான்:
அவனைப் பாட்டையினின்றும் எட்டத்துரத்திக்கொண்டுசெல்க.
இரட்டைநா உடைய அப் பொல்லாதவன் எவனாயிருப்பினும்,
அவனிடமுள்ள கொள்ளிக்கட்டையை நின் அடிகளினால் மிதித்துத் தேய்த்துவிடுக.
அறிவான்மிக்க பூஷனே, புதுமைகளைச் செய்வோய், பழையஎம்முன்னோர்க்கு உதவிபுரிந்த நின்துணையை எமக்கும் இப்போது உரியதாக நின்னை நாடுகின்றோம்.
ஆகையாற், செல்வமெல்லாவற்றிற்கும் தலைவ,
பொன்னிறமானகத்தியை நன்கு சுழற்றுவோய்,
செல்வத்தைப் பெறுதல் எளிதாகுமாறு செய்க.
எம்மைப் பின்றொடர்வோர்க்கு முன்னதாக எம்மைக் கடத்திநடத்துக, எமது வழியை இனியதாக்குக, அதனை மிதிப்பதற்கு நேர்த்தியாக்குக:
ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத் தேடுக.
புற்கள் செழுமையா யிருக்கும் புல் நிலங்களுக்கு எம்மைச்செலுத்துக: எமதுவழியில் முன்நேரத்திலேயே வெப்பத்தைவிடாதே:
ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக.
எமக்கு நீ அருளுடையாய் இரு, எம்மை நிறையப்பண்ணு,
எமக்குஉணவினைத்தா, எமக்கு உயிர்ப்பு ஏற்று.
ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக.
பூஷனை யாம்குற்றமாகச்சொல்லுதற்கு ஏதும்இலம்; அவனைஎம்புகழுரைகளாற் பெருமைப்படுத்துகின்றோம்: செல்வத்தின்பொருட்டு வலிமையிற்சிறந்த அவனை யாம்நாடுகின்றோம்.
இந்தப் பதிகமானது, ஆரியர்கள் இமயமலைக்கு வடக்கே மிகவும் எட்டியுள்ள இடங்களில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்த நிரம்பப் பழைய காலத்தே பாடப்பட்ட தொன்றாகக் காணப் படுகின்றது. அவர்கள் அப்போது ‘பூஷன்’ என்னும் பெயரால் வணங்கியது விடியற்கால ஒளித்தோற்றமே யல்லாற் பிறிதில்லை. இரண்டரைத் திங்கள் வரையில் இருளிற் கிடந்து மாழ்கிய ஆரியர்கள் அவற்றின் கழிவிற் கதிரவன் வெளிச்சந் தோன்றக் கண்ட வளவானே பெருங்களிப்புற்று அத்தோற்றத்தைத் தெய்வ வடிவாக நினைந்து வணங்கியது இயற்கையே யாம். இங்ஙனமே ‘உஷாக்கள்,’ ‘அசுவிநிகள்’ என்னும் பெயர்களால் அவர்கள் வணங்கிய தெய்வங்களும் அவ்விடியற் காலத்திற் காணப்படும் ஒளிவிளக்க மாறுதல் களேயாம். இமயமலைக்கு மிக வடக்கேயுள்ள அந்நாடுகளில் ஏறக்குறைய ஒன்றரைத் திங்கள் வரையில் விடியற்கால ஒளி மிகுந்து கொண்டே செல்லுவ தன்றிக் கதிரவன் காணப் பட்டான்; இவ்வாறு ஒன்றரைத் திங்கள் வரையில் விடியற் காலமாகவே இருக்கும் அந்நாடுகளில் அவ்வொளியின் காட்சி மிகஅழகியதாய் வியக்கத்தக்கதாகவே யிருக்கின்றது; அவ்வொன்றரைத் திங்களும் சென்றபிறகுதான் பகலவன் கட்புலனாக அங்கே தோன்றுவன்; ஆதலால், அந் நாடுகளில் அஞ்ஞான்றிருந்த ஆரியர்கள் அவ்வொன்றரைத் திங்கள்வரையிற் பலவேறு மாறுதல்களோடு தோன்றும் அவ்விடியற்காலக் காட்சிகளைப் பலவேறு தெய்வங்களின் வடிவாகவைத்து வணங்கலாயினர். இந்திய நாட்டிற்கு வருமுன் ஆரியர் வணங்கிய தெய்வங்கள் மேற்காட்டிய ‘பூஷன், ‘உஷாக்கள், ‘அசுவினிகள், ‘ஏழு ஆதித்தியர்கள் என்பவை களாகவே இருத்தல் வேண்டும். இத்தெய்வங்கண் மேல் அவர்கள் பாடிய பாட்டுகளும் மிகப் பழையனவாகவே இருத்தல் வேண்டும்.
இவ்வாறு இந்தியநாட்டுக்குப் புறம்பே உறைந்த காலத்தில் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு அவற்றைக் கொண்டே பிழைப்பவர்களாய், அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்நிலங்களைத் தேடித் திரிபவர்களாய் இருந்தமையின் அவர்கட்கு அந்நாளில் உழவுதொழில் இன்னதென்றே தெரியாது. மற்று, அவர்கட்குமுன் இவ்விந்தியநாட்டின்கண் இமயமலைச் சாரல் வரையிற் பரவியிருந்த தமிழர்களோ ஆரியர்களைப்போல் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கையில் இல்லாமல், நாகரிகத்திற் சிறந்து தாந்தாம் சென்ற இடங்களில் ஆறுகளும் ஏரிகளும் உள்ள பக்கங்களில் நிலையாகக் குடியேறி உழவுதொழிலைச் செய்து, அதனாற் செல்வம்பெருக்கி நாடுநகரங்கள் அமைத்துத், தமக்குள் அரசர்களை ஏற்படுத்தி வறுமையின்றி இனிது உயிர்வாழ்ந்தவர்களாவர். இங்ஙனஞ் செல்வத்தாற் சிறந்த நாகரிகவாழ்க்கை யுடையவர்களுக்குள்ளேதான் பலவகைத் தொழிற் பிரிவுகளும், அத்தொழில்களைச் செய்யும் மக்கட் பிரிவுகளும் உண்டாகுமேயல்லாமல், நிலையான இருப்பிடம் ஏதும் இன்றி இன்றைக்கு ஓரிடத்தும் நாளைக்கு ஓரிடத்துமாக அலைந்துதிரியும் மக்கள்பால் அத்தகைய தொழில்களும் பிரிவுகளும் உண்டாக மாட்டா.



