சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்

6. உலக வழக்கிலும் சாதி இல்லை

இவைதாம் போலிச்சைவர் தெரியப்பெறாரேனும் உலகவாழ்க்கையாவது தெரிந்து அவர் நலம் அடைய லாகாதா? அந்தோ! போலிச்சைவர் அறியாமை இருந்தவா றென்னை! போலிச்சைவர் ஒருவர் கரவும் பொறாமையும் மன அழுக்கும் உடையவராகிப் பொய்பேசியும் பிறரை இகழ்ந்து உரையாடியும் பிறர் பொருளைக் கவர்ந்தும் வர, அவரைக்கண்டு ‘ஏ! இழிகுலத்தாய் என் இங்ஙனமெல்லாம் தீது செய்கின்றாய்? என்று வினவினால், அதற்கு அப் போலிச்சைவர் நானா இழிகுலத்தேன்? நான் என் தகப்பனுக்கேயன்றோ பிறந்தேன். நான் தேவாரம் ஓதவில்லையா? நான் தகப்பன் பெயர் தெரியாதவர்களிற் சேர்ந்தவனா? நான் திருவாவடுதுறை தருமபுர ஆதீனங்களில் எல்லாரோடுமிருந்து வயிறு நிறைய நன்றாய்ச் சோறுதின்று கறுத்துத் தடித்துப் பருத்திருக்க வில்லையா? பாருங்கள்!’ என்று தமதுடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்டினால் அவர் சொற்களை உலகத்தார் ஏற்றுக்கொள்வார்களோ? அடே பேதாய்! இவற்றை யார் உன்னைக் கேட்டார்? நீ உன் தகப்பனுக்கே பிறந்தாய் என்பது உனக்கு எப்படித் தெரியும்? பெண் களுடைய திறமையும் சூழ்ச்சியும் உனக் கெங்ஙனந் தெரியும்? முற்றத்துறந்த பட்டினத்துப் பிள்ளையார்,

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன் கையையெடுத்தப்புறந் தன்னில் அசையாமல் முன்வைத் தயல்வளவில்ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளைஎப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி யேகம்பனே.

என்று அருளிச்செய்ததை அறியாயோ? பெண்களுடைய பேச்சை நம்பி நான் என் தகப்பனுக்கே பிறந்தேன் என்றும், பிறர் தகப்பன் பெயர் தெரியாதவர் என்றும் இகழ்ந்து பேசாதே. மறைவிலே பிறனுக்குக் கருக்கொண்டு பெற்ற பிள்ளைகளை மாதர்கள் தங்கணவன் பெயரால் வளர்த்து விடும் நிகழ்ச்சிகள் எண்ணிறந்தன. மிகவும் மறைவாய் நடந்த அவைகளைத் தெரிந்த சிலர் அவைகளைச் சில ஏதுக்கள் பற்றி வெளிவிடாமையால் அவை மறைபொருளாகவே நின்றுவிடுகின்றன. உன் இழிந்த தன்மைகளையும் செய்கை களையும் பார்த்தால், நீ உண்மையான சைவனுக்குப் பிறந்தாய் அல்லை என்பது எமக்குத் தோன்றுகின்றது. நீ யாருக்குப் பிறந்தால் எமக்காவதென்னை? நீ தேவாரம் ஓதி என்செய? திருவாசகம் படித்து என்செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்றில்லையே. ஆதீனங்களில் உடனிருந்து சோறு தின்னுவதை ஒரு பெருமையாகப் பேசிக்கொள்ளு கின்றாய். நாங்கள் கேள்விப்பட்ட மட்டில் இப்போது சைவமடாதீனங்கள் பலவற்றில் உள்ளவர்கள் துறவிகள் என்று பெயர்மட்டும் உடையவர்களாக இருக்கின்றார்களே அல்லாமல், அவர்கள் உலக வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்ட வர்களினும் மிக இழிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், அளவிறந்த அறப்பொருள்களை வைத்துக்கொண்டு அவற்றை நல்வழியிற் பயன்படுத்தாமல் தீய வழிகளில் அவற்றை வாரிவாரி இறைக்கின்றார்கள் என்றும் கேள்வி யுறுகின்றோம். அப்படி யிருந்தால் அவர்களோடு உடனிருந்து சோறுதின்னுவதில் உனக்கு யாது பெருமை வந்துவிட்டது? அவ்வாதீனங்களுக்கு உண்மை யறிவுடையோர்கள் செல்வ தில்லை யென்றுங் கேள்விப்படுகிறோம். சோற்றையும் பணத்தையும் விரும்பினவர்கள் அங்கே சென்று அவர்களுக்கு இனிக்கப் பேசிக் காலங் கழிக்கின்றார்களாம். பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பவரைப் பற்றிப் பெருமை பேசிக் கொள்ளுகின்றாய். அப்படியானால் பிறவற்றைக் கிட்டே சிறிதும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னுஞ் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லல் வேண்டும்? உன் அறிவு ஆ! எவ்வளவு உயர்ந்தது! அது நிற்கட்டும். நீ உனக்குள்ள தீய தன்மை தீய செயல்களினின்றும் விலகி நல்வழியில் நடவாவிட்டால் நீ இழிபிறப்பினன் ஆதல் திண்ணம் என்று உலகத்தார் கூறுவார்க ளன்றோ?

அதனைக்கேட்டும் அறிவு விளங்காமல், வேளாளர், தொண்டை மண்டில முதலிமார், கார்காத்தார், சோழியார், ஓதுவார், குருக்கள் முதலாயினாரல்லரோ உயர்ந்த சாதியார்? அவர்கள் மட்டும் அன்றோ ஒன்று கூடியிருந்து சோறு திண்ணல் வேண்டும்? இழிந்த சாதியாரான இடையர், வடுகர், கள்வர், மறவர், அகம்படியர், கைக்கோளர், நாட்டுக் கோட்டைச் செட்டிமார் முதலாயினோர் வேளாளருடனிருந்து உண்ணுவது கூடாதன்றோ? இழிந்த சாதியார் மேற்கூறிய உயர்ந்த சாதியாரோடு சேர்ந்து உண்ணாமையால், சைவகுலத்திற் பிறந்தவனாகிய நான் எவ்வளவு கெட்ட ஒழுக்கமுடையவனா யிருந்தாலும் நான் உயர்ந்தவனே என்று அப் போலிச்சைவர் கூறினால் அதனைக் கேட்ட உலகத்தார், சோழியர், கார்காத்தார் முதலான வேளாளர் உள்ளபடியே இரக்க நெஞ்சமும், கல்வியும், நல்லொழுக்கமும், சிவபிரான் மாட்டும் அடியார் மாட்டும் மெய்யன்பும் உடையவர்களாயிருந்தால் அவர்களை உயர்ந்தோர் என்று சொல்வதில் தடையில்லை; அத்தகைய உண்மை வேளாளர் மற்றைச் சாதியாரை இழிவாக நினையாமல் எல்லாரிடத்தும் இரக்கமும் அன்பும் உடையவர்களாகி, மற்றைச் சாதியாரில் உயிர்களைக் கொன்று அவற்றின் இறைச்சி உண்பவர்களைக் கண்டால் ‘நீங்கள் கொலையாலும் புலால் உண்ணுதலாலுமே இழிவடைந்தீர்கள். அவற்றை அறவே ஒழித்து எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பாராட்டுவீர்களானால் நீங்கள் சிவபெருமான் திருவருளைப் பெறுதல் திண்ணம். நீங்களும் நம்முடனே கலந்து உறவாடலாம்’ என்று பலகாலும் எடுத்துச்சொல்லி அவர்களைத் திருத்தி, அங்ஙனம் திருந்தினவர்களைத் தம்மோடு உடன்வைத்து உண்டு அளவளாவி வாழ்வார்கள்; அருளொழுக்கத்தைப் பரவச்செய்து சிவபிரான் திருவடித் தொண்டை விளக்குங் கலைஞரையும் தவப்பெரியாரையுங் கண்டால் அவரிடத்து அன்பினால் அகங்குழையப் பெற்றவராகி அவர்க்க அடிமை பூண்டு ஒழுகுவர். இத்தகைய உண்மைச் சைவர்களாலே நாடெங்கும் அருள் ஒழுக்கமும் சிவத்தொண்டும மிகும்; உயர்ந்த வொழுக்கமுடைய உயர்ந்த சாதியாரோடு ஒன்றுசேர்ந்து அளவளாவலாம் என்ற எண்ணத்தால், கொலைத் தொழிலையும் புலாலுணவையும் பிறர் எல்லாரும் அறவே ஒழித்து மேம்படுவார்கள்.

இங்ஙனம் செய்வதைவிடுத்து ‘ஏ பேதாய், பிறர் எவ்வளவுதான் நல்லொழுக்க முள்ளவர்களாய்த் திருந்தினாலும், நான் எவ்வளவுதான் கெட்ட ஒழுக்க முள்ளவனானாலும், நான் சைவகுலத்திற் பிறந்தவனாகையால் அவர்களோடிருந்து சோறுண்ணமாட்டேன்’ என்கின்றாய். இழிந்த இயற்கை இழிந்த செய்கையால் இழிந்த பிறப்படைந்த உன்னுடனிருந்து சோறுண்டால் நல்லொழுக்கத்தில் திருந்திய அவர்களுக்கும் இழிவேயாகு மல்லது உயர்வு ஏது? ஆகையால், சோறா சோறென்று சோற்றையே கட்டிக்கொண்டு அழும் போலிச் சைவனான உன்னை, அருளொழுக்கத்திற் சிறந்த உண்மைச் சைவர்கள் தம்முடன் சேர்க்க கூசுவர் அல்லரோ? சில காலத்துள் அழிந்துபோவதாகிய உடம்பையும் அவ்வுடம்புக்கு இடும் சோற்றையுமே பெரியனவாக எண்ணி அறியாமை யால் மிகவும் இறுமாப்படைந்து பிதற்றும் நீயும் உன்னை யொத்த சிலருங் கூறும் பொருந்தாச் சொற்கள் நாம் சிறிதுங் கருத்தில்வைக்கத் தக்கனவல்ல, என்று சொல்லாமற் போவார்களோ?

இங்ஙனம் உலகத்தார் கூறும் உலகவாழ்க்கையும் போலிச் சைவர்கள் உணராமல் தம்மையுயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் செருக்குற்று உரைக்கின்றார்கள்! இவர் பிறப்பினாலேயே தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வாரானால், அவ்வாறு சொல்வதனால் இவருக்கு இழிவே உண்டாகு மல்லாமல் உயர்வுண்டாதற்குச் சிறிதும் இடம் இல்லை. ஏனென்றாற், பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத்தவிர மற்ற எல்லாரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றார்கள். ஊன் உண்பவரும் உண்ணாதவரும் ஆகிய எல்லாரையும் அவர்கள் ஒரேவகையாகத்தான் நடத்துகின்றார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினனாய்ச் சென்றால் அவனுக்குப் பிராமணர் தாம் உண்டு மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இடுகின்றார்கள்; ஊண் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இடுகின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவராயிருந்தால் தம்போற் பிறப்பினாலுயர்ந்த பிராமணருடனிருந்து உண்கின்றது தானே? பிறப்பினாலே தான் சாதியென்று சொல்லும் போலிச் சைவர் தம்மைச் சூத்திரர் என்று தாமே ஒப்புக்கொள்வ தனால் அவர் அச் சூத்திரவகுப்பினின்று தப்ப வகையில்லை; அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனுமுதலிய மிருதி நூல்களின்படி பிராமணர் கடைவாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியைத் தாம் தலையாற்செய்து அவர் இடும் எச்சிற்சோற்றை உண்டு ஊழியக்காரராய்க் காலங்கழிக்க வேண்டுமேயல்லாமற், பட்டை பட்டையாய்த் திருநீறு பூசிக்கொண்டு, பகட்டான காசித் துப்பட்டா பொன்கட்டின உருத்திராக்கமாலை எல்லாம் அணிந்துகொண்டு, தம்மினும் பிறப்பினால் உயர்ந்த பிராமணருக் கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும், நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்ல முன்வந்த போலிச்சைவர் தம் புன்மொழியால் அருளொழுக் கத்தினும் சிவத்தொண்டினும் அடியார்பால் அன்பினுஞ் சிறந்து விளங்கும் உண்மைச் சைவ வேளாளரையும் பிறரையும் இழிந்த சூத்திரராக்கி விட்டாரே! அந்தோ! உண்மைச் சைவர்களாகிய அன்பர்களே, பிறப்பினாலேதான் சாதியென்று உரைக்கும் போலிச்சைவர் புன்மொழிகளைக் கேட்டு மயங்கிவிடாதீர்கள்! பிறப்பினாலே தான் சாதி யென்னும் அவர் சொற்களைக் கேட்டு நம்பிவிடுவீர் களானால், நீங்கள் எல்லீரும் இழிந்த சூத்திரராகக் கொள்ளப் படுவீர்கள்; ஊன் உண்கின்றவர்களுககும் ஊன் உண்ணாமல் அருளொழுக்கத்தில் நிற்கின்ற உங்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும். யாம் வட மொழி வேதம் தமிழ்மறை முதலியவற்றையும் உலக வழக்கையும் மேற்கோளாகக் கொண்டு அருள் ஒழுக்கத்தினாலேதான் சாதி உயர்வுண்டு என்று சொல்லுவனவற்றை நம்புவீர் களானால், நீங்கள் மிக உயர்ந்த சாதியாராக அறிவுடையோர் எல்லாராலும் நன்கு பாராட்டப் படுதல் திண்ணம். அறிவுடையார் பாராட்டு தலையே சீராட்டாகக் கொண்மின்கள்; அறிவில்லார் பாராட்டை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்; அறிவில்லார் ஆயிரவர் பாராட்டுதலினும் அறிவுடையார் ஒருவர் பாராட்டுதலே உயர்ந்ததாகுமென்று உணர்மின்கள்!

அங்ஙனமாயின் இழியாக்குலத்திற் பிறந்தோம், குலம் பொல்லேன் என்று சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனார் குலத்தின் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக் கூறியது என்னையெனின்; ‘அருள் ஒழுக்கத்தில் மிகுந்து சிவபிரானிடத்தும் அடியாரிடத்தும் அன்பு மிக்க குலத்திற் பிறந்தோம்’ என்றும், ‘அவ் வொழுக்கங்கள் இல்லாத குலத்திற் பிறந்தோம்’ என்றும் பொருள் கூறுதலே ஆசிரியர் நாயனார் கருத்தா மென்று துணிக. இவ்வுண்மை யுணராது பிறப்பினாலேயே குலப்பெருமை சொல்லுவாரின் அறியாமையைச் சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள், கோத்திரமுங் குலமுங்கொண் டென்செல்வீர் என்று நாயனாரே திருவாய்மலர்ந்தருளிய திருப்பாட்டால் உணர்ந்து தெளிக. பிறப்பினாற் சைவரென்று தம்மை உயர்த்துச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் அருளும் இரக்கமும் சிவபிரானிடத்து மெய்யன்பும் அடியார் பணியும் இல்லாராய்ச், செருக்குமிகுந்து, பொய்யும் புனைசுருட்டும் கள்ளமும் பொறாமையும் நிரம்பிப், பிறரைக் கொல்லாமற் கொல்லுவதிற் கருத்தூன்றி அலைகின்றார்கள்; இத் தன்மை யோரை உயர்ந்தகுலத்தவர் என்று கூற அறிவுடையோர்க்கு நா எழுமா? உலகத்தாரும் அறிவுடையாரும் ஒருவன் பிறப்பை நோக்காது ‘அவன் நல்லியல்பு உள்ளவனா? என்றன்றோ வினாவு கின்றார்கள். ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் தாம் ‘குடிமை என்னும் இயலில் உயர்குலம் இழிகுலம்’ என்றன ஒழுக்கத்தாற் சிறந்தகுலம் ஒழுக்கத்தாற் றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடை மலைபோல் விளங்க உரைத்தாராகவும், ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகியாரும் ‘நான்கு வருணத்திலும் உயர்குலமும் தாழ்குலமும்’ உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றை அறியும் அறிவு மதுகை சிறிதுமில்லாத போலிச்சைவர் குலம் பிறப்பினாலேதான் உளது என்று நாயனாருஞ் சொன்ன ரெனத் தமக்குத் தோன்றி யவாறெல்லாம் பிதற்றுவர்; அவர் பிதற்றுரையின் பொய்ம்மையை யாம் மேலே எடுத்துக் காட்டிய ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும். என்னும் நாயனாரது அருமைத் திருக்குறளால் தெளிந்துணர்க. தாய்தந்தையரும் அவருக்கு நெருங்கிய உறவினரும் நல்லியல்பு நற்செய்கையிற் சிறந்து விளங்குப வராயின், அவர் கூட்டத்தை நற்குடி என்றும், அந்நற்குடியிற் பிறந்த பிள்ளையினிடத்து அந் நல்லியல்பு நற்செய்கைகள் அமையப்பெறும் என்றுங் கூறுதலே நாயனார்க்குக் கருத்தாதல் தக்கார் தகவிலரென்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும் என்னும் அவர் திருமொழியால் நன்கு துணியப்படும். ஒழுக்கத்தினாலேதான் குலத்தினுயர்வு பெறப்படும் என்று தமதுநூல் முழுதும் வற்புறுத்திச் சொல்லும் திருவள்ளுவ நாயனாரையும் தமது புல்லறிவுக்குத் துணைகொண்டு சேர்க்கப்பார்க்கும் போலிச்சைவர் தம் கருத்து நிறைவேற வேறு எதுதான் செய்யமாட்டார்! அது நிற்க.

அங்ஙனம் ஒழுக்கத்தினாலேயே உயர்வு பெறப்படல் வேண்டுமாயின், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் சிவத்தொண்டில் தாம் மிக முதிர்ச்சியுடையராயிருந்தும் தமது குலத்தின் இழிவு நோக்கித் தில்லைக்கோயிலுட் புகாமற் புறத்தே ஒதுங்கி நின்றதும், சிவபெருமான் அவரை உட்புகுவித்தல் வேண்டி தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு தீவளர்ப்பித்து அதன்கண் நந்தனாரை முழுகுவித்துத் தேவவடிவாக எழச்செய்து பின்னர் உள்ளே ஏற்றுக் கொண்டதும் என்னை யென்றாற்; பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று; மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதரு மோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால் தயிர் நீர் சாணாகம் என்னும் ஐந்தினைக் கொடுப்பதாய் உள்ள ஆவினை அச்சாதியார் கொன்று அவற்றின் இறைச்சியை யுண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்; இங்ஙனம் மிகக் கொடிதான புலை யொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடைய லாயிற்று; இங்ஙனம் இது தாழ்வடையலானதும் ஒழுக்கத் தாழ்வினாலேதான். மற்றச் சாதியாரெல்லாம் ஒன்றுகூடி உறையும் நாடு நகரங்களுக்குப் புறத்தே விலக்கமாகப் பறைச்சேரி அமைக்கப்பட்டிருத்தலும் இந்த ஏதுவினாலே தான். இத்தன்மையதான அறிவில்லாப் புலைச்சாதியில் நந்தனார் பிறந்தமையினாலே இவரது பெருமையைப் பிறர் அறியார் என்றெண்ணி அதனை அறிவிக்கும் பொருட்டே சிவபெருமான் அங்ஙனஞ் செய்தனரென் றுணர்க.

அல்லதூஉம், சிவத்தொண்டின் மேன்மையை அறிவித்தற்கும், சிவ நேயம் உண்டானாற் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை உலகத்திலுள்ள எல்லார்க்குந் தெளிவித்தற்குமே சிவபெருமான் நந்தனாரை நெருப்பில் முழுகுவித்து எழச்செய்தார் என்க. அவ்வாறானால், ஊன் உண்ணும் மற்றைச் சாதியாரும் ஊனைவிட்டுச் சிவநேயத்தில் மேம்படுவராயின் அவரைச் சைவர்கள் ஏற்றுக் கொள்ளுமுன், சிவபெருமான் அவர் பெருமையை அங்ஙனமே ஓர் அருஞ்செயலால் அறிவித்தல்வேண்டு மெனின்; சிவநேயத்திற் சிறந்த அடியார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை ஒருகாலத்து ஓரிடத்து ஓர் அரிய நிகழ்ச்சியால் தெளியச்செய்தால், அதனைப் பிற்காலத்து வருவோர் ஏற்றுப் பின்னர் அடியார் பணிசெய்து நடத்தல் வேண்டுமே யல்லாமல் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமைசெய்து காட்டினால்தான் இவரை அடியார் என்று ஏற்போம் என்றல் அறிவில்லா விழலர் கூற்றாய் முடியும்; திருஞானசம்பந்தப் பெருமான் சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதனை வெப்புநோய் நீக்கியும் அனலில் ஏடெழுதி யிட்டும் புனலில் ஏடெழுதிவிட்டும் பற்பல செயற்கரிய செய்கைகளால் இனிது விளக்கி யருளினார்; அதுபோலவே, இப்போது சைவசமயமே மெய்ச்சமயம் என்று நாட்ட வருகிறவர்களும் அங்ஙனமே செயற்கரியது செய்து காட்டினால்தான் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுவாருண்டோ? இல்லையே. அங்ஙனமே, சிவநேயம் உடையார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாமென்பதை நந்தனாரைக்கொண்டு ஒரு புதுமையாற் சிவபெருமான் ஒருமுறை விளக்கிக் காட்டினால், அவ்வாறே பலமுறையும் விளக்கல் வேண்டுமென்று அறிவுடையோர் கூறார். அகத்தேயுள்ள சிவநேயம் என்கின்ற சிவநெருப்பினால் சிவனடியாருடம்பு தூய்மையுடைய ஒளியுடம்பாகும் என்பதனையே, நந்தனார் புறத்தே நெருப்பிற் குளித்த அரிய நிகழ்ச்சி விளக்குவதாகும். சிவநேயம் உடையார்க்கு அகக்கருவி புறக்கருவிக ளெல்லாம் சிவவுருவாய் விளங்குமாகலின் அவரைப் பிறப்பு நோக்காது சிவமாகவே கொண்டு வழிபடல் வேண்டு மென்னும் உண்மையை உணர்த்துதற் கன்றோ திருநாவுக்கரசு நாயனார்,

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்துதரணியொடு வானாளத் தருவரேனும்மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்மாதேவர்க்கே காந்த ரல்லராகில்அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங்கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே.

என்று அருளிச்செய்தனர். இங்ஙனமே, யச்சண்டாளசிவ இதிவாசம் என்னும் முண்ட கோபநிடத உரையானது எவன் ஒருவன் சிவ என்னும் மொழியைச் சொல்லுகின்றானோ அவன் சண்டாள குடும்பத்திற் பிறந்தவனாயிருந்தாலும் அவனோடு பேசுக, அவனோடு இருக்க, அவனோடு அருகிருந்து உண்ணுக என்று கூறுகின்றது. இங்ஙனமே,

புலையரே யெனினும் ஈசன் பொலன்கழ லடியிற் புந்திநிலையரே லவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றுந்தலையரே யெனினும்ஈசன் றாமரைத்தாளின் நேசம்இலரெனில் இயற்றும்பூசைப் பலந்தருவாரே யாரோ?

என்று சிவதருமோத்தரமும்,

எள்ளற் படுகீழ் மக்களெனும் இழிந்தகுலத்தோ ரானாலும்வள்ளற் பரமன் றிருநீறு மணியுமணிந்த மாண்பினரையுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டுசிவனெனவேகொள்ளத்தகைய அறிவினரே பிறவிக்கடலிற் குளியாதார்.

என்று பிரமோத்தர காண்டத்தும் சொல்லப்பட்டிருத்தல் காண்க.

இவைபோலுந் திருவுரைகளுக் கெல்லாம் வழிசெல்லத் தெரியாத போலிச்சைவர் அன்பினாற் செய்வனவற்றிற்கு முறையும் விலக்கும் இல்லை; மற்றை உலக வழக்கத்திற்கோ சாதிவேற்றுமை பாராட்டியே வரல்வேண்டும் என்கின்றார். உலக வழக்கிலும் ஒருவனை அவன் பிறப்பு நோக்காது அவன் கல்வியறிவினையும் நல்லியல்பு நற்செய்கைகளையுமே பாராட்டி அவனைப் பலவகையாலும் பெருமைப்படுத்தி உயர்ந்த நிலைகளையும் வரிசைகளையும் அளிக்கின்றார்கள் என்பதனை மேலே விளக்கிக்காட்டினாம். ஆதலால், அன்பு நெறிக்குத்தான் சாதி வேற்றுமை இல்லை, உலகநெறிக்குச் சாதிவேற்றுமை உண்டு என்னும் போலிச்சைவர் கூற்றுப் பொய்க்கூற்றேயாம் என்க. அங்ஙனமன்று பிறப்பினாற் றாழ்ந்தவனுக்குக் கல்வியும் நல்லியல்பு நற்செய்கைகளும் பற்றி உயர்ந்த நிலைகளும் வரிசைகளும் அளித்தும் அறிவுடையோர் கூடிய அவைகளில் முன் அமரச்செய்தும் அவனைப் பெரிது பாராட்டினாலும், உயர்ந்த சாதியார் அவனோடு அருகிருந்து உண்பதில்லையேயெனின்; போலிச் சைவர் தாம் அப் பெரியவனோடு அருகிருந்து உண்ணோம் என்று தமது அறியாமையாற் செருக்குற்றுப் பேசுவார்களே யல்லாமல், உண்மைச் சைவர் அப்பெரியானோடு அளவளாவி யிருந்து கண்டு நல்வினையும் மகிழ்ச்சியும் எய்துவர்; அறிவுவடிவாய் விளங்குங் கற்றோர் கழகங்களில் தலைமையோ டிருந்து அறிவுரை நிகழ்த்துங்கால் அப்பெரியோன் காற்கீழிருந்து அதனைக் கேட்டும், அவன் உயர்ந்த நிலையில் அமர்ந்திருக்குங்கால் அவனெதிரே கைகட்டி வாய்புதைத்து நின்று அவன் ஏவிய பணிசெய்தும், தமது தாழ்மைக்காட்டி வந்த போலிச்சைவர் சிலர் சோறு தின்னும்போது மட்டும் தாம் அவனோடிருந்து உண்பதில்லை என வெறுஞ்சோற்றுப் பேச்சைப்பேசித் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ளும் பதரான பேதைமைச் செய்கையைக் கண்டு அறிவுடையோர் நகையாடாமல் இரார். சாப்பாட்டு ராமசாமிகளான போலிச்சைவருக்குச் சோற்றைத் தவிர வேறு யாது தெரியப் போகின்றது! ஒருவரிடத்துள்ள அறிவின் அருமையும் நல்லியல்பு நல்லொழுக்கங்களின் பெருமையுஞ் சோற்றாட் களுக்கு எங்ஙனந் தெரியும்? அவர்களுக்குச் சோறுதான் தெய்வம்; ஊனுங் குருதியும் சீழுஞ் சளியும் நீரும் மலமும் வழியும் புழுப்பாண்டமான தமது உடம்பின் பிறப்புத்தான் அவர்களுக்குத் தேவப்பிறப்பு!

கடவுள் அன்பிற் சிறந்தவர்களுக்கும் அறிவுமிக்க துறவிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை இல்லையென்று போலிச்சைவர் மொழிந்தால், தெய்வமில்லை யென்னும் நாத்திகர்களுக்கும் அறிவிலிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை வேண்டுமென்பது பெறப்படும். போலிச் சைவர் சாதி வேற்றுமையைப் பாராட்டிக்கொண்டு அறியாமைச் சேற்றிலும் நாத்திகப் படுகுழியிலுமே கிடக்கவேண்டு மென்று விரும்பினாரானால், அவர் அப்படியே கிடக்கட்டும். தமது புல்லறிவை உண்மைச் சைவர்களிடங் காட்டி அவர்களையுந் தாங்கிடக்கும் படுகுழியில் வீழ்த்த முயல் வராயின், அவரது புல்லிய செய்கையைக்கண்டு அறிவுடையார் வருந்தா திருப்பரோ? எமக்கு அன்பும் வேண்டாம் அறிவும்வேண்டாம் நல்லியல்பு நற் செய்கைகளும் வேண்டாம், அவற்றிற் சிறந்த நல்லோரிணக்கமும் வேண்டாம், எமக்குச் சோறு ஒன்றுதான் முதன்மையானது, அதுமட்டுந்தான் எமக்கு வேண்டியது என்று போலிச்சைவர் சொல்வரானால், அவ்வளவு அறியாமையிலும் ஆணவத்திலும் அமிழ்ந்திக் கிடக்கும் அவர் இன்னும் பலகோடி பிறவிகள் எடுத்தா லன்றித் திருந்தமாட்டார்; ஆகையால், அத்தன்மை யோரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதல் உண்மைச் சைவர்க்குப் பெருந்தீவினையாய் முடியுமாதலால் அவர்களை இவர்கள் சேராமல் ஒழுகுதலே செயற்பாவர்.

இன்னும், பிறப்பினாலேதான் சாதியுயர்வு பெறப்படு மென்று போலிச்சைவர் கூறுவரானால், சைவ வேளாளர் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோர் என்று கூறிக்கொள்வது போலவே, மற்றைச் சாதியாரும் தம்மைத் தாம் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்கின்றார்கள். ராஜபுத்திரர் என்னுஞ் சாதியார் தாம் ஊன் உண்பவராயிருந்தாலும் பார்ப்பனர் முதலான எந்தச்சாதியார் வீட்டிலும் தாம் சாப்பிடு வதில்லாமையால் தாமே எல்லாச் சாதியாரினும் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்கின்றார். கம்மாளர் தாமே பார்ப்பனர் என்று மேற்கோள்கள் பல காட்டித் தம்மை உயர்த்திக் கொள்கின்றார். வன்னியர் தாமே ‘க்ஷத்திரியர்’ என்று மேற்கோள்களோடு நூல்கள் எழுதித் தம்மை உயர்த்திக் கொள்வதோடு, வேளாளர் முதலான மற்றவரை எல்லாம் தாழ்ந்த சூத்திரவகுப்பினர் எனவுஞ் சொல்லி வருகின்றார். சான்றார் தாமே ‘க்ஷத்திரியர்’ என்று இதழ்களினும் நூல்களினும் எழுதிவருகின்றார். இடையர் தம்மைக் ‘கோவைசியர் எனவும், கோமுட்டிகள் வாணிகர் முதலாயினார் தம்மைத் ‘தனவைசியர்’ எனவுஞ் சொல்லி வருகின்றனர். வேளாளரில் ஒருவரும் தமது சாதியாரை ‘வைசியர்’ என எழுதியிருக்கின்றார். நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும் தம்மைத் தன வைசியரென்று எழுதி வருகின்றார். பறையர் வகுப்பிற் கல்வியிற் றேர்ந்தவர்கள் தம்மைப் பார்ப்பனரினும் மேலானவர் என்று சொல்வதோடு, பார்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில்லாமற் கீழ்ச்சாதியானான். என மேற்கோள்களுங் காட்டுகின்றார்கள்; இப் பறையரிற் கல்வியினுஞ் செல்வத்தினும் உயர்ந்த செல்வர்களின் கடைவாயிலிற் காத்திருந்து அவர் இடுவனவற்றைப் பெற்று மகிழ்ந்து வரும் வேளாளப் புலவர்கள் எத்தனைபெயர்! போலிச்சைவர் எத்தனை பெயர்! அவர்கள்மேற் பாட்டுகள் பாடினவர்களும், பாடுகிறவர்களும் எத்தனை பெயர்! இவ்வாறெல்லாம் அவர்கள் வீசி எறிவன வற்றைக் குனிந்து பொறுக்கியுண்டு நன்றி மறந்து அச்செல்வர்களைப் பறையரென இகழ்ந்துரைப்பது எவ்வளவு பேதைமை! சைவசமயத்திற் சார்ந்த பறையரையுஞ் சான்றாரையுங் கோயிற் கோபுரவாயில்களினும் நெருங்க விடாத போலிச்சைவர் முதலாயினார், புறச் சமயத்தினராய் எல்லா வகையான ஊனும் உண்ணும் கிறித்துவ மகமதிய அதிகாரிகள் வந்தால் அவர்கள்முன் பல்லை இளித்துக்காட்டி அவர்களைக் கோயிலினுள்ளே அழைத்துச் செல்வது என்னை! இங்ஙனமே இன்னும் போலிச்சைவர் முதலாயினார் மற்றையோரிடத்துக் கள்ளமாய் நடக்கும் படிற்றொழுக்கத்தை விரிக்கப்புகுந்தால் இது மிகவிரியும். எனவே, உலகவழக்கில் நிகழும் உண்மை நிகழ்ச்சிகளை உற்று ஆராய்ந்து பார்த்தால், மறைவாகவும் வெளிப்படையாகவும் ஒரு வகுப்பாருடன் மற்றொரு வகுப்பார் கலந்துவிடுதல் இயல்பாகப் பண்டு தொட்டு நிகழ்ந்து வருதலை நன்கு அறியலாம். ஒரு வகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்துவிடுதல் இஞ்ஞான்று எங்கும் நிகழ்தல் போலவே, பண்டை நாளிலிருந்த நம்முன்னோரிலும் ஒருவகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்து வந்தமை பழைய நூல்களில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. சதபதபிராமணத்தில் (3,2, 1, 40) இந்தப் பார்ப்பனர் இப்போதுதான் தூயனாக்கப்பட்டான்; இதற்குமுன் இவன் இன்னபிறப்பினனென்பது திண்ணமாய்த் தெரியாது. ஏனென்றால் ‘அரக்கர்கள் மாதர்களைப் பின்றொடர்ந்து செல்கின்றார்கள்; ஆதலால், அரக்கர்களே மாதர்களின் உள்ளே வித்தை நுழைக்கின்றார்கள் என்பது நுவலப்பட்டிருக்கின்றது. இன்னும், அந்நூலில் (2, 5, 2, 20), வேள்வி வேட்கும் வேள்வியாசிரியன் மனைவிக்குக் காமக் கணவர் பலர் உளரென்றும், அதனால் அவன் ‘வருணப் பிரகாசம்’ என்னம் அவியைக் கொடுக்கும் நேரத்தில் தன் மனையாளை வேள்விக் களத்திற்குக்கொணர்ந்து ‘இப்போது எந்தக் கணவனோடு கூடியிருக்கின்றனை? எனக்கேட்டு, அவனது வாய்ப்பிறப்பை யறிந்து உண்மை தெரிந்த பின், அவளுடனிருந்து அவ் அவியைக் கொடுக்கும்வகை நன்கெடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்ஙனமே மகாபாரதம், ஆதி பருவத்தில் (122, 4719) மாதர்கள் தம் கணவரை விட்டுப் போய்த் தம்மால் விரும்பப்பட்டோருடன் கூடியிருத்தல் குற்றமாகக் கருதப்படவில்லை என்பது கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் அதன் வனபர்வத்தில் (12480), ஒரு மலைப்பாம்பிற்குந் தருமபுத்திரனுக்கும் இடை நிகழ்ந்த உரையாட்டில், அம் மலைப்பாம்பு ஒருவனது செய்கையைக் கொண்டே அவனைப் பார்ப்பனன் என்று உறுதிப்படுத்தல் வேண்டுமென்றால், செய்கையானது தெரியும் வரையிற் பிறப்புப் பயனற்றதாகின்றது என்று தருமபுத்திரனை நோக்கிக் கூற, அவன், எல்லாச் சாதிகளும் ஒன்றோடொன்று கலப்புற்று நிற்கும் இப்போதுள்ள நிலைமையிற், பிறப்பு இன்னதென்று பிரித்துக்காண்டல் இயலாததேயாகும்; எல்லாவகையான ஆண்மக்களும் எல்லாவகையான பெண்மக்களோடுங் கூடித் தொடர்பாகப் பிள்ளைகளைப் பெறுகின்றார்கள். பேச்சும், பிள்ளைப் பெறும் வகையும், பிறப்பும், இறப்பும் எல்லா மக்களுள்ளும் ஒரு தன்மையவாகவே காணப்படுகின்றன. ஆதலால், உண்மையை உற்றுணரும் நுண்ணறிவினோர் உயர்ந்த ஒழுக்கமே முதன்மையாக வேண்டற்பாலதென அறிகின்றார்கள். எனவிடை புகலுமாற்றால், தருமபுத்திரன் இருந்த இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரேயே ஒரு சாதிமக்கள் மற்றொரு சாதி மக்களொடு கலப்புற்று நின்றமை தெற்றென அறியப்படுதலால், அவர் வழியில் வந்தோரான நம்மனோருள் எவரையுங் கலப்பில்லாத் தனி இனத்தவரெனக் கூறுதல் தினைத்தனையும் ஆகாமை காண்க. இவ்வாறே, சாதிக் கலப்பால் வெளிப்படையாக உண்டான பல்வேறு சாதிகளை மனு முதலியோரும் வகுத்துரைக்கின்றனர். ஒரு பார்ப்பனனக்கு ஒரு வைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் அம்பட்டன் எனப்படுவான்; ஒரு சூத்திரப்பெண்ணி னிடத்தே பிறந்தவன் ‘நிஷாதன்’ அல்லது ‘பாரசவன்’ எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு சூத்திரப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘உக்ரன்’ எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணிடத்தே பிறந்தவன் ‘சூதன்’ எனப்படுவான். ஒரு வைசியனுக்கு ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘மாகதன்’ எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘வைதேகன்’ எனவும் பெயர்பெறுவான். ஒரு சூத்திரனுக்கு ஒரு வைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘ஆயோகவன்’ எனவும், ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘க்ஷத்திரி’ எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘சண்டாளன்’ எனவும் பெயர்பெறுவான். என்றற் றொடாக்கத் தனவாக இன்னும் பற்பல கலப்புச் சாதியார் களையும் மனுமிருதி பத்தாம் இயலில் ஆறாஞ் செய்யுளிலிருந்து முப்பத்தொன்பதாஞ் செய்யுள்காறும் விரித்துரைத்தல் காண்க. இங்ஙனமே கௌதமர், வசிட்டர், போதாயனர் இயற்றிய தருமநூல்களுங் கலப்புச் சாதிகளை விரிவா யெடுத்துக் கூறுதல் கண்டுகொள்க. இவ்வாறு பண்டைக் காலந்தொட்டே மக்கள் ஒருவரோடு ஒருவர் பலவாறு கலந்து வருதலால், அம்முன்னோர் கால்வழியில் வந்தோரான நம்மனோரில் எவருந் தம்மைக் கலப்பில்லாத் தனிப்பிறவி யாகச் சொல்லிக்கொள்ளுதலினும் பெரும் பேதைமை பிறிதில்லை. காமமுங், காதலும், பசியும், பொருண்மேல் அவாவும் உள்ளவரையில் மக்களுள் எவருங் கலப்பில்லாத் தனியராய் இருந்து உயிர்வாழ்தல் இயலாது. இக்காமம் முதலியவற்றின் கொந்தளிப்புகளைத் தணிக்கும் பொருட்டு அறிவுடையோர் எத்தனையோ நூல்களை எழுதிவைத்தும், எத்தனையோ சாதிக் கட்டுப்பாடுகளைச் செய்துவைத்தும், அவையெல்லாம் அவற்றின் எழுச்சிக்குமுன் பஞ்சாய்ப் பறந்துபோகின்றன. ஆகவே, மக்கட்பிறவி யென்கின்ற பேராற்றிலே இயல்பாக அமைந்த பெருஞ் சுழல்களாகிய காமங் காதல் பசி பொருட்பற்று என்னும் இவைகளைச் சாதிக்கட்டுப்பாடு என்னும் வைக்கோற் றிரணைகொண்டு தடுத்தல் சிறிதும் இயலாதாகையாற், சொல்லளவாயுள்ள அச் சாதிக்கட்டுப்பாடுகளைத் தொலைத்து, அறிவுமிக்க உயர்ந்த முறைகளால் அவற்றின் மும்முரத்தைத் தணித்தலே விரைவிற் செயற்பாலதாகும் என்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!