சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்

5. சைவ வைணவ நூல்களிலுஞ் சாதிவேற்றுமை இல்லை

இனிச், சைவ வைணவ ஆசிரியர்கள் அருளிச்செய்த நூல்களிலாயினும் பிறப்பளவிற் சாதிவேற்றுமை சொல்லப்பட் டிருக்கின்றதோவென ஆராய்ந்தாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டுதல் இறைவனது திருவருளைப் பெறவொட்டாமல் தடைசெய்து அங்ஙனம் அது பாராட்டுவாரை அறியாமை யிலுஞ் செருக்கிலும் ஆழ்த்தி அவர்களைத் தீராப் பெருந்துன்பச் சுழலிற் படுப்பித்து வருத்துமென்றும், சாதி வேற்றுமையினை அறவே தொலைத்து இறைவன்பால் அன்புமிக்க அடியார் எவராயிருப்பினும் அவர்பால் ஏதொரு குற்றமும் ஆராயாது அவர்க்குத் தொண்டுபூண்டு ஒழுகுதலே இம்மை மறுமை யிரண்டிலுந் திருவருட் பேரின்பத்தைத் தருமென்றும் அவ்வுண்மை நூல்களுள் வற்புறுத்துச் சொல்லப்பட்டிருக் கின்றனவே யல்லாமற், சாதிபற்றிய உயர்வு தாழ்வுகள் ஒரு தினைத்தனை யேனும் அவற்றின்கட் சொல்லப்படவில்லை. இவ் வுண்மை யினையும் அவ்வாசிரியன்மார் நிலவிய கால அடைவின் படியே அவர்தம் திருமொழிகளினும் வரலாறுகளினும் இருத்தெடுத்து விளக்கிக் காட்டுதும்.

சைவ வைணவ ஆசிரியர் எல்லாரினும் முற்பட்ட காலத்தவரும், பாண்டிய வேந்தனுக்கு அமைச்சராயிருந்து, பின் திருப்பெருந்துறையிலே சிவபெருமான் தமது திருவுருவத் தோடும் நேரே எழுந்தருளி ஆட்கொள்ளப் பெற்றவருமான அந்தணர் குடிப்பிறந்த மாணிக்கவாசகப் பெருமான்,

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டுபேதைகுணம் பிறருருவம் யான்எனதென் உரைமாய்த்துக்கோதில்அமுது ஆனானைக் குலாவுதில்லைகண்டேனே

(திருவாசகம், கண்டபத்து,5)

என்று அருளிச்செய்திருக்குந் திருப்பாட்டாற், சாதி குலம் பிறப்பு என்பவைகள் மக்களை மேல் நிலைக்குச் செல்ல வொட்டாமல், அவர்களைத் தற்செருக்கால் மயங்கச்சுழற்றி ஆழ்த்தி மடிவிக்கும் மீளா நீர்ப்பெருஞ் சழிகளாதலை அறிகின்றனம் அல்லமோ?

இனிப், பௌத்தசமய காலத்திலிருந்து அதனை ஒடுக்கிய மாணிக்க வாசகர்க்குப் பின், சமணசமயகாலத் திருந்தவரும், சமணமதம் புகுந்து பின் சிவபெருமான் தந்த சூலைநோயால் மீண்டுஞ் சைவசமயம் புகுந்தவரும், சமண அரசனாகிய மகேந்திரவர்மன் தம்மைக் கருங்கல்லிற் பிணைத்துக் கடலில் வீழ்த்தவும் சிவபிரான் திருவருளால் அக்கல்லையே புணையாகக்கொண்டு கரையேறி அவ்வரசனையும் சைவனாக்கு வித்தவரும், சைவ வேளாண்குடியிற் பிறந்தவருமான திருநாவுக்கரசுநாயனார்,

சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்கோத்திரமுங் குலமுங் கொண்டு என்செய்வீர்பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே (திருமாற்பேறு)

என்றருளிச் செய்து வெறுங் குலங்கோத்திரங்களால் இறைவன் திருவருளை யெய்துதல் ஆகாதெனவும், மெய்யன் புடைமையே அதனைப் பயக்குமெனவும் அறிவுறுத்தியதோடு, முக்கோலும் புற்கட்டும் எடுத்துத் தோற்பூணூலும் பூண்டு ‘யான் பார்ப்பனன் என்று தன்னைப் பெருமை பாராட்டுதலால் ஒருவன் ஏதும் பயன்பெறான், நுண் உணர்வால் வரும் மெய்யன்பே ஒருவற்கு மெய்ப்பயன் தருவதா மென்பது போதரக்,

கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்தோலும் பூண்டு துயரம்உற்று என்பயன்?
நீலமா மயிலாடு துறையனேநூலும் வேண்டுமோ நுண்உணர்ந் தோர்கட்கே (திருமயிலாடு துறை)

என நன்கெடுத்து அருளிச்செய்தமை காண்க. பார்ப்பனரையே பிறப்பளவில் உயர்ந்தவராகக் கொள்ளாத அப்பருக்கு, வேளாளரைப் பிறப்பளவில் உயர்த்துதல் சிறிதும் உடன்பாடாகாதன்றோ?

இனித், திருநாவுக்கரசு நாயனார்பாற் கரைகடந்த மெய்யன்பு பூண்டு, அவ் அன்பின் பெருக்கால் தம் புதல்வர்க் கெல்லாம் திருநாவுக்கரசு நாயனாரது திருபெயரையே வைத்து அழைத்தும், தாம் அறத்திற்காக வழிநடையில் அமைத்த அழகிய தண்ணீர்ப்பந்தருக்கும் அப்பெயரையே சூட்டியும் ஒழுகிய அந்தணரான அப்பூதியடிகள், திருநாவுக் கரசு நாயனார் தமதில்லத்திற்கு எழுந்தருளக்காண்டலும் தம்ம வருடன் சென்று அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு அருகிருந்து உணவுகொண்ட அன்பின் திறங்க ளெல்லாம் அன்பின் வழிப்படும் நல்லார்க்கு நினையுந்தோறும் அகம்நெகிழ்ந் துருகச்செய்யும் இயல்பின வாமன்றோ?

இனி, உலக இயல்பினையுந் தன்னியல்பினையுங் கடவுளியல்பினையும் உணரல் இயலாத மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த காலத்திலேயே அம்மையப்பர் வடிவாய்த் தமது கண்ணெதிரே தோன்றிய முழுமுதற் கடவுளைக் கண்டு, அதனால் ஞானப்பால் ஊட்டப்பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்து, கண்டோரெல்லாம் இதனை யொப்பதொரு புதுமை யாண்டுங் கண்டிலேம் என வியந்து வணங்கத், தமது சிறுகுதலைவாய் திறந்து அம்மையப்பரை எண்ணிறந்த திருப்பதிகங்களாற் பாடிக், கடவுள் இல்லை யென்று நாத்திகம் பேசித் தமது அருளொழுக்கத்துக்கே மாறாக எண்ணிறந்த சிவனடியார்களைத் தீயிட்டுக் கொளுத்தத் துணிந்த சமணர்களை ஒடுக்கி, அவர்க்கும் பிறர்க்கும் எதிரிலே சிவபெருமான் உளன் என்பதைப் பல புதுமைகளால் விளங்கக் காட்டிய அந்தணரான திருஞானசம்பந்தப் பிள்ளையார்,

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்குஇங்கே என்று அருள்புரியும் எம்பெருமான்

(திருப்பிரமபுரம்)

என்றருளிய திருப்பாட்டால் தன் அடியார் உயர்ந்த குடியிற் பிறந்தாரேனும் இழிந்தகுடியிற் பிறந்தாரேனும் அவர் எந்தநிலையில் உள்ளாரேனும் அவர்தம் அன்பின் பெருக்கையே பாராட்டி இறைவன் அவர்க்கு அருள் புரிவானென விளக்கினரல்லரோ? இன்னும் அவல்,

குலவராகக் குலம் இலருமாகக் குணம் புகழுங்கால்உலகின் நல்லகதி பெறுவர் (திருப்புகலூர்)

எனவும்,

நலம் இலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்றகுலம் இலராக குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்

(திருவாலவாய்)

எனவும், அடியார் எக்குடிப் பிறப்பினராயினும் அவரது குடிப்பிறப்பு நோக்காது அவரைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க. இங்ஙனம் அவர் தாம் மொழிந்த சொல்லளவில், அமையாது, தாம் மொழிந்தபடியே அன்பின்மிக்க அடியார்பால் ஏதும் சாதிவேற்றுமை பாராட்டாது அதனைத் தமது செய்கையிலுங் காட்டி யொழுகினார். பாணச்சாதியிற் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையும் எப்போதும் தம்முடனேயே வைத்திருந்ததோடு, பார்ப்பனரான திருநீலநக்க ரென்னும் மற்றொரு சிவனடியார் திருமாளிகைக்கு எழுந்தருளிய போது அவரோடு ஒருங்கிருந்து திருவமுது கொண்டு, இரவில் திருநீலநக்கரது மிகவுந் தூயதான் வேள்விமேடையிலே யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவி யார்க்கும் இருக்கை அமைத்தனர்கள். அவ்விருவரும் அம்மேடையிற் சென்றவுடனே, அங்கே வேள்விக் குண்டத்தில் இடஞ்சுழித்து எரிந்த சிவத் தீயானது இவர்களின் வரவால் மிகமகிழ்ந்து வலஞ்சுழித் தெழுந்து எரிந்ததெனச் சேக்கிழார் அடிகள் அருளிச் செய்திருக்கின்றார். பாணரென்பவர் பறைச்சாதியிற் சிறிது மேலானவரென்று எண்ணப் பட்டவர்; இவ்வியல்பினரான பாணரை நம் திருஞான சம்பந்தப் பெருமானும் திருநீலநக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும், அவ்வருமையைத் தீவடிவாயிருந்த நம் ஆண்டவன் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ!

நான்காம் ஆசிரியரும் ஆதிசைவப் பார்ப்பனருமான சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையின்கண் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் என அடியார் களின் பிறப்பை நோக்காமல் அவர்கள் எல்லாரையும் வணங்கினார்.

இனிச், சிவபெருமான் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்கே தனது அருளை வழங்கியது யாண்டும் இல்லை. அன்பினாற் சிறந்தவர்கள் எப்பிறப்பினராகப் பிறராற் கருதப்படினும், அதனைத் தான் சிறிதும் பாராதே அவர்களுக்கே தனது பேர் அருளை வழங்கி வந்திருக்கின்றான். இதற்குப், பெரிய புராணத்தின்கட் போந்த பல்வகைப் பிறப்பினரான அடியார்கள் எல்லாரும் அவனது திருவருளைப் பெற்றமையே பெருஞ் சான்றாம். மேலும், பிறப்பினால் தம்மை உயர்ந் தோராகக் கருதிச் செருக்கடைவோர் குறும்பை வேரோடும் அறுத்து அவரை மாய்க்க வேண்டுமென்பதே எல்லாம்வல்ல அவ்வாண்டவன் திருவுளக்குறிப்பாமென்பது, உண்மை வரலாறுகள் பலவற்றாலும் நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக் கின்றது. திருவம்பர் மாகாளத்திற் சோமாசிமாற நாயனார் தாம் செய்த வேள்வியில் இடும் அவிசைச் சிவபெருமான் நேரே வந்து ஏற்றுக்கொண்டருளல் வேண்டுமென்று தவங்கிடந்து இரந்த போது, அவ் வேள்விக் குண்டத்தைச் சூழத் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதிச் செருக்குற்றிருந்த பார்ப்பனர் அத்தனைபேர்க்கும் தனது அருளை வழங்க இசையானாய், நம்பெருமான் சண்டாளப் பறையன் உருத்தாங்கி அவ் வேள்விக் குண்டத்திற்கு எழுந் தருளினான்; அதுகண்ட ஏனைப் பார்ப்பனர் எல்லாரும் ‘தூய வேள்விக்களத்திற்குப் பறையன் வந்தான் என்று சொல்லி ஓடிப்போக, அன்பினாற் பெரிய சோமாசிமாற ராகிய உண்மைப் பார்ப்பனர் உடனிருந்த சுந்தர மூர்த்தி நாயனாரால் அறிவுதெளிந்து அங்கு எழுந்தருளின நம்பெருமானுக்கு அவிசைத்தந்து பெரும்பேறு பெற்றனர். இன்னுந், திருஞானசம்பந்தப் பெருமானாலும் திருநாவுக் கரசுநாயனா ராலும் தம்முடைய திருப்பதிகங்களிலே வியந்து பாராட்டப் பெற்றவரும் சமணர்கள் சொல்லிய பழித்துரை பொறாமல், அவர்கள் எல்லாரும் நாணமும் அச்சமும் எய்தத், திருவாரூர்ச் சிவபிரான் திருககோயிலிலே தண்ணீரால் விளக்கு எரித்தவரும் ஆன நமிநந்தியடிகள், ஒருகால் பங்குனித் திருவிழாவில் எழுந்தருளிய ஆண்டவன் திருவுருவினைப் பெருங்கூட்டத்திற் சென்று கண்டு வணங்கிப், பின்னர்த் தம்மனைக்கு ஏகினார். ஏகினவர், தாம் பார்ப்பன குலத்திற் பிறந்தமையால் ஏனை இழிகுலத்தார் கலந்த கூட்டத்திற் சென்று வணங்கினது, தமக்குத் தீட்டு உண்டாக்கிற்றென்று நினைந்து, தமது மனையின் உள்ளே புகாமற், புறத்தே திண்ணையில் ஒதுங்கியிருந்து, தாம் தலைமுழுகி உள்நுழைந்து பூசை யாற்றுதற்காகத் தண்ணீர் கொணரும்படி தம் மனைவியார்க்குக் கற்பித்தார். மனைவியார் அவரது தலைமுழுக்குக்கு வேண்டுவன ஒழுங்குபடுத்தச் செல்ல, அவர் சிறிது கண்உறங்கினார். அப்போது அவரது கனவிற்றோன்றிய சிவபிரான், திருவாரூரில் உள்ளவர்க ளெல்லாரும் நம் அடியார் கூட்டத்திற் சேர்ந்தவ ரென்பது அறிந்திலையோ! அவரை இழிகுலத்தாராக நீ கருதியது என்னை! எனக்கூறி மறைந்தருளினர். அதுகண்டு உடனே விழித்தெழுந்த நமிநந்தியடிகள் தாம் செய்த பிழையினை நினைந்து வருந்தித், தலைமுழுகாமலே தமது இல்லத்தினுட் புகுந்து சிவபிரானுக்குப் பூசையாற்றி உணவு கொண்டு துயின்றார். மறுநாள் அவர் திருவாரூரில் இறைவனை வணங்கச் சென்றுழி, அவ்வூரில் உள்ளார் அனைவரும் முதலிற் சிவபிரான் வடிவினைராய்த் திகழ்ந்து பின்னர்த் தத்தம் பழைய வடிவத்தோடுந் தோன்றக் கண்டு, அவர் அன்றுமுதற் சாதிவேற்றுமையினை ஒழித்து இனிது வாழ்ந்தார். இவ்வாறே நிகழ்ந்த வரலாறுகள் அளவிறந்தன. அவற்றைப் பெரியபுராணம் முதலான உண்மை நூல்களுட்கண்டு தெளிக.

இனி, வைணவ சமயத்துள்ளும், சாதிவேற்றுமையானது திருமாலின் திருவடிகளை அடையவொட்டாமற் றடுக்கும் பெருந்தடையா தலைக் காட்டும் வரலாறுகள் பல இருக்கின்றன. அவற்றுட் சில மட்டும் இங்கே எடுத்துக் காட்டுதும், திருமாலுக்குத் தொண்டுசெய்து அவரைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான திருப்பாணாழ்வார் என்பவர், பறையரில் இசைபாடும் வகுப்பிற்சேர்ந்த பாணர் குடியிற் பிறந்தவர் ஆவர். இவர் திருமால் திருவடிக்கண் அன்புமீதூரப் பெற்றமையால், நாடோறுங் கையில் யாழ்ஏந்தி வந்து, தமது கலத்தின் இழிபால் தாம் திருவரங்கப் பெருமாள் கோயிலின் உள்ளே புகக்கூடாதது பற்றிக், காவிரித் தென்னாற்றின் தென்கரையில் திருமுகத்துறையில் தொலைவில் நின்றபடியே இறைவனைப் பாடிப்பாடி நெஞ்சம் நெக்குருகுவார். இவர் இங்ஙனம் புறத்தே எட்டநின்று தொழுது உருகுதலைக்கண்டு மனம்பொறாத திருவரங்கப் பெருமாள், லோகசாரங்க முனிவர் என்னும் அந்தணர்க்குக் கனவிலே தோன்றி, நம்பால் மெய்யன்பு பூண்டொழுகும் பாண்பெருமாளை நீர் நெகிழ நினைத்துப் போகவேண்டாம்; அவரை நுமது தோளில் ஏற்றிக்கொண்டு நம் பக்கலில் அழைத்துவரல் வேண்டும் என்று கட்டளையிட்டு மறைத்தருளினார். லோகசாரங்கர் உடனே விழித்தெழுந்து இறைவனது பேரருளை நினைந்து வியந்து, விடியற்காலையில் திருமுகத்துறையிலே நீராடி, அங்குவந்து நின்று இறைவனைப் பாடாநின்ற திருப்பாணாழ்வார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப், பெருமாள் செய்த கட்டளையை அவர்க்குத் தெரிவித்து, அவரைத் தமது தோளின்மேல் ஏற்றிக்கொண்டு, திருக்கோயிலின் உள்ளே சென்று, அவரை அரங்கப்பெருமாள் எதிரிலேவிட்டார். என்னும் இவ்வரலாற்றினால், அன்பினால் மிக்கவர் பிறப்பினால் இழிந்தவராயினும், பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதப்படுவோரும் அவரை வணங்கி அவர்க்குத் தொண்டு செயற்பால ரென்பதே இறைவனது திருவுளக்குறிப்பாதல் பெறப்படு கின்றதன்றோ?

இன்னுந், திருமழிசையாழ்வார் தாம் தாயின் கருப்பை யினின்றும் வெளிப்பட்ட காலத்திலேயே தாய்தந்தையராற் காட்டிலே தனியே விடப்பட்டு, அக் காட்டிற் பிரம்பு அறுக்கச் சென்ற திருவாளன் என்பனாற் கண்டெடுக்கப்பட்டு, அவனாலும் அவன்றன் மனைவியாலும் வளர்க்கப்பட்டவர்; அவர் இன்ன குலத்தினரென்று பிறப்பு அறியப்படா மலிருந்தும், அவர் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பின் மிகுதியால் உயர்ந்தோராகப் பாராட்டப் படுகின்றன ரல்லரோ? இன்னும், வைணவசமயத்தவராற் பெரிது கொண்டாடப்படுந் திருமங்கையாழ்வார் மிலேச்ச குலத்திற் பிறந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் கல்வியிற்சிறந்த பாவாணராதலோடு, திருமால் திருவடிக்கட் பேரன்பு பூண்டொழுகினவர். நாலாயிரப்பிரபந்தத்தில் இவர் பாடிய செந்தமிழ்ச்சுவைப் பாடல்களே மிகுந்துள்ளன. இவர் குலத்தினாற் றாழ்ந்தோரா யிருந்தும், தமது கல்விப் பெருக்கானும் பேரன்பானும் இவர் மிக உயர்த்துப் பாராட்டப்படுகின்றனரல்லரோ? இன்னும், முதலாழ்வார்களாகிய பொய்கை, பேய், பூதம் என்பவரின் குலங்கள் இன்னவை யென்பது புலப்படாதிருந்தும், அம்மூவரும் ஏனையெல்லாரினுஞ் சிறந்தோராக வழுத்தப்படுதலைக் காண்டுமல்லமோ? இன்னும், வைணவர்களால் நம்மாழ்வார் எனச் சிறந்தெடுத்துக் கொண்டாடப்படுஞ் சடகோபர் வேளாளகுலத்திற் பிறந்தவராயிருந்தும், அவர்தங் கல்விப் பெருமையினையுந் தவவொழுக்கத்தினையும் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பினையும் நோக்கிப், பார்ப்பன குலத்திற் பிறந்தவராகிய மதுரகவி யாழ்வார் அவர்க்கு மாணாக்கராகி அவர்க்குத் தொண்டுசெய் தொழுகின ரல்லரோ? இன்னும் இங்ஙனமே பிறப்பிழிபு சிறிதுங் கருதாமல், அன்பின் மிகுதிபற்றி உயர்ந்தோராகப் பாராட்டி வணங்கப் பட்ட வைணவப் பெரியார்கள் பற்பலர் உளர். இங்ஙனம் அன்பராயினார் எவராயினும் அவரை மகிழ்ந்து ஏற்கும் தம் ஆண்டவன் திருவுளக்குறிப்பை இனிது உணர்ந்த அவன் அடியார்கள் அவ் அன்பர்களின் பிறப்பை ஒரு சிறிதும் நோக்காது அவர்களின் அன்புக்கே மகிழ்ந்து அவர்களுடன் ஏதும் வேற்றுமையின்றி அளவளாவி இன்புற்றார்கள்.

இனிச், சிவவேடத்தைக் கண்டு பிறரை அடியார்கள் வணங்கினாலும சிவவேடமுடையார் தாமேவந்து சொல்லுகிறபடி யெல்லாம் அடியார் நடவார் என்று போலிச்சைவர் சிலர் பொய்யுரை புகல்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் தம்முடைய பகைவன் சிவவேடந் தாங்கி வந்தவுடன் அவனை வணங்கியதும், அப்பகைவன் தம்மைக் கத்தியாற் குத்திய அரவங்கேட்டுத் தத்தன் என்னுங் காவலாளன் அவனைப் பிடித்துக்கொள்ள ஓடிவந்தபோது, நிறைத்தசெங் குருதிசோர வீழ்கின்றார் நீண்ட கையால், தறைப்படுமளவில் தத்தா நமர் எனத் தடுத்து அவனைப் பிறர் கொல்லாமற் கொண்டு போய்விடு என்று கூறியதும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! ஏனாதிநாத நாயனார் தம் பகைவனைப் போரிற் பலகால் தோல்விபெறச் செய்தமை யால், அவன் இவரை வேறுவகையால் வெல்லல் ஏலாதென்று உணர்ந்து தன் நெற்றியில் திருநீறிட்டு அதனைத் தெரியாமல் மறைத்துவந்து இவரைப் போருக்கு அழைக்க, இவரும் அவனுடன் சென்று போர்புரிந்து அவனை வெட்டப் புகுந்த பொழுதில், அவன் தன் முகமறைப்பை விலக்கித் திருநீறிட்ட நெற்றியைக்காட்ட, உடனே அவர் அவனைச் சிவனடி யாராக நினைத்து வெட்டாமல் விட்டுத் தம்மை அவன் வெட்டும்படி நின்றார் என்பதையும் இன்னும் இவை போன்ற பலவற்றையும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! இவ் வுண்மைகளை இனிது விளக்கிய,

மண்ணாளும் மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும்வைய கத்தார் பாராதே வணங்கிடுவ ரஞ்சிஎண்ணாளும் இறையமலன் திருவேடந் திருநீறிட்டார்கள் குணங்குணக்கே டெனுமிரண்டும் எண்ணார், விண்ணாளத் தீவினையை வீட்டியிட விழைந்தார்விரும்பிஅவர் அடிபணிவர் விமலனுரை விலங்கல் ஒண்ணாதே யெனக்கருதி ஒருப்பட்டே அமலன்ஒப்பரிய புரிவாழ்வு மற்றையருக்குண்டோ

எனவும்,

தேடிய மாடுநீடு செல்வமுந் தில்லைமன்றுள்ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்என்றுநாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோதுகூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்

எனவும்,

வெண்ணீறும், வேடமும் பூசையும் மெய்யென்றான் பொய் யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே

எனவும்,

எவரேனுந் தாமாக இலாடத் திட்டதிருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கிஉவராதே அவரவரைக் கண்ட போதேயுகந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கிஇவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லிஇரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளேகன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

எனவும் போந்த திருவுரைகளையும் போலிச்சைவர் உணரார் கொல்லோ!

இங்ஙனம் வேடத்தைக் கண்ட அளவானே வேற்றுமை பாராது அவர் களோடு அளவளாவுதல் வேண்டுமென அறிவுநூல்கள் கட்டளையிடுமானால், அவ்வேடத்தோடு கல்வியும் நல்லியல்பும் நல்லொழுக்கமும், மெய்யறிவும், சிவநேயமும் உடையாரை எவ்வளவு கொண்டாடி அவரோடு அளவளாவி அன்புபாராட்டல்வேண்டும்! இவற்றை யெல்லாம் ஒருசிறிதும் நோக்காது வெறுஞ் சோற்றுக்கே அழுது தீவினையை ஈட்டும் போலிச்சைவர் வேறு என்கடவர் என்க.

இவை தம்மையெல்லாந் தெரிதற்குரிய பெருங்கல்வி போலிச் சைவர்மாட் டில்லையாயினும், பள்ளிக்கூடச் சிறுவர் நாடோறும் ஓதிவரும்,

சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதிவழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கி லுள்ளபடி.

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்நெல்லினுட் பிறந்த பதராகும்மே.

என்னும் பிற்காலத்து அரிய அறநூலின் அறிவுரை களையேனும் அவர் தெரியப்பெறாதது பெரிதும் வருந்தத்தக்க தொன்றாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!