சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்

7. சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள்

இனி, மக்களுக்குப் பெருந்தீங்கு பயப்பனவாகிய சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள் தெரிதல் வேண்டு மாயின், முன் நாளில் அவ் வேற்றுமைகளைக் கிளறி விட்ட மூலங்களை அறிந்தே அவ்வாறு செய்தல் வேண்டும். ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய்வந்தால் அதனை நீக்கலுறுவோன், அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி, அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவான் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்துபோம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங் களையும் நன்கு ஆராய்ந்துகண்டு, பின்னரவ் வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாது செயற்பாலதாகும். அற்றேல், அம் மூலங்கள் யாவையோவெனிற் கூறுதும்:

மேலே நான்காம் இயலில், உழவுதொழிலையறிந்த வேளாளர்கள் அத்தொழிலாற் பல உணவுப்பண்டங்களைப் பெருக்கி, அதற்குமுன் தாம் உண்டுவந்த இறைச்சியுணவை விட்டுச் சைவவுணவே கொள்ளத் தலைப்படமையினையும், அதுமுதல் தம்மில் ஊன்உணவு கொள்வாரான ஏனையோரைத் தம்மின் இழிந்தோராக விலக்கிவைத்துத் தாம் அவரின் உயர்ந்தோரானமையினையும், அங்ஙனஞ் சைவரான தம்முள்ளுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் அகந் தூய்மை புறந்தூய்மையிலும் மேம்பட்டு நின்றோர் ‘அந்தணர், ‘பார்ப்பனர் என மேற்குலத்தவர் ஆனமையினையும், அந்நெறியில் இயன்றமட்டும் நின்று குடிகளைப் பாதுகாத்தலிலும், செல்வம் பெருக்கி உழவுதொழிலை நடப்பித்தலிலும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றலிலும் நின்றோர் ‘அரசர், ‘வணிகர் என வேறிரண்டு இனங்களாய்ப் பிரிந்தமையினையும், இம் முத்திறத்தார்க்கும் இன்றியமையாத பதினெண் டொழில் களையும் ஏவற்றொழிலையும் புரிந்தோர் ‘அடியோர், ‘வினைவலர் என்னுஞ் சூத்திரரானமையினையும், இந் நாற்பெரும் பிரிவினரிலுந் தத்தம் மகளிரது ஒழுக்கத்தால் மேலும் பற்பல பிரிவுகள் உண்டானமையினையும் விரித்து விளக்கிப்போந்தாம். எனவே, இத்தென்றமிழ் நாட்டின்கட் சாதிவேற்றுமைகளைப் பிறப்பித்தற்கு அடிப்படை மூலங்களாய் நின்றவை: ஊன் உண்ணாமை, கல்வி, கடவுள் வழிபாடு, அகந்தூய்மை, புறந்தூய்மை, மகளிரது ஒழுக்கம் என்பவை களேயாமென்பது நன்கு புலனாகின்ற தன்றோ? சாதி வேற்றுமைகளைப் பல்குவித்தற்கு ஏதுவாய் நின்ற இம் மூலங்களைக் கொண்டே சாதிவேற்றுமைகளை ஒழித்தற்கு வழிதேடல் வேண்டுமென்று உணர்ந்துகொள்க. அஃது யாங்ஙனமெனின், அடைவே விளக்கிக்காட்டுதும்.

முதலாவது புலால்உண்ணா ஒழுக்கமே தன்னைக் கைக்கொண்டு ஒழுகிய மக்களை உயர்ந்த சாதியாராக ஆக்கினமையாற், புலால் உண்ணாதவர் எவராயிருப்பினும் அவரை ‘அந்தணர், ‘பார்ப்பனர், ‘சைவவேளாளர் என்று கூறுதல்வேண்டும். அங்ஙனம் புலால் உண்ணா ஒழுக்கத்தைக் கைக்கொண்டோரை, அவர் பிறந்த இழிகுலப் பெயரால் அழைத்தலும், முன்னரே சைவராய் உள்ளார் அவரைத் தம்முடன் சேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் அவரை அவ்வழிகுலத்திலேயே இருக்கவிடுதலும் பெருந் தீவினையாம். எங்ஙனமெனில், ஊன் உண்பார் ஒருவர் அவ்வூன் உணவு கொள்ளும் பெருந்தீவினைப் படுகுழியி னின்றும் மேலேறுவராயின், ஊன்உண்ணா மேல் நிலையில் நிற்போர் அவரைக் கைகொடுத்துத் தூக்கித் தம்மோடு உடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்; அவ்வாறு செய்யின் அங்ஙனஞ் சேர்த்துக்கொள்ளப்பட்டோர் கொல்லா அறத்தில் வழுவாது நிற்பர்; அதனால் எத்தனையோ மீன்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலிய உயிர்கள் உயிர் பிழைக்கும்! அவ்வாறு அம் மேலோர் அவரை மேலே தூக்கி விடாமல் அப்பாழ்ங் குழியிலேயே அவரை மீண்டும் விழ அழுத்துவராயின், மேல்நிலைக்கு வருவோரைக் கெடுத்த பெருந் தீவினைக்கும், ஊன் உண்பார் கூட்டத்தில் மீண்டுஞ் சேர்ப்பிக்கப்பட்ட அவர் மீண்டும் மீன் முதலான உயிர்களின் இறைச்சியை உணவு கொள்ளவேண்டி வருதலால் அதனால் உண்டாகும் அவ்வுயிர்களின் கொலை வினைக்கும் அம்மேலோர் உள்ளாகிச் சிறிது காலத்தில் தாமுந் தம்மினத்தவரும் இப்பிறவியிலேனும் அல்லது வரும்பிறவி யிலேனும் புலையராவர். அற்றன்று, யாங்கள் பண்டு தொட்டுப் புலால் உண்ணாக் கொல்லா அறத்தில் வழுவாது நிற்றலாற், புதிதாகப் புலால் உணவு நீக்கி வருவாரை எம்முடன் சேர்த்தல் ஆகாது என்று உரைப்பராயின், அவருரை அருளொழுக்கத்திற்கு மாறான தீவினை உரையேயாகும். உயிர்க் கொலையும், அதனால் வரும் ஊனுணவும் நீக்கி அருளொழுக்கத்தைக் கைக்கொண்டவர், அங்ஙனமே கொலைபுலை நீக்கிவருவாரைத் தம்முடன் சேர்த்து, ஊன்உண்ணார் தொகையைப் பெருக்கிவந்தா லன்றி உலகிற் கொல்லா அறம் பரவமாட்டாது; கொல்லா அறம் பரவாத வரையில், எண்ணிறந்த உயிர்கள் கொல்லப்படுதலால் வருந்து வினை சைவரையுஞ் சாராது ஒழியாது. ஊனின் பொருட்டுத் தாம் உயிர்களைக் கொல்லாவிடினும், அதற்காகக் கொல்வாரைத் தடைசெய்யாமலுங், கொலைபுலை தவிர்ந்து வருவாரைத் தம்முடன் சேராமலும் விடுதலாற், கொலை புலை மேன்மேற் பெருகுதற்குத் தாமும் ஏதுவாயிருத்தல் பற்றிச், சைவர்களுக்கும் அக் கொலைத் தீவினையிற் பெரும்பங்கு உண்டு. சைவராகிய தம்மைக் கொடியார் சிலர் கொல்லவருகையில், அங்ஙனங் கொல்லவருவாரைப் பிறர் விலக்காதிருந்தால் அச் சைவரது நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும்! விலக்காதிருந்தாரை அச்சைவர் குற்றஞ் சொல்லா திருப்பரோ! அங்ஙனமே உயிர்க்கொலையை விலக்காத சைவர்க்கும் பெருந்தீவினையிற் பங்கு உண்டென்று அறிந்து கொள்க. உயிர்க்கொலையைத் தடைசெய்யாமையால் வருந் தீவினை பெரிதாயினாற்போலவே, அதனைத் தடைசெய்து கொலை புலை தவிர்ந்தாரைத் தம்முடன் சேர்த்துக் கொள்வதாற் சைவர்க்கு வரும் நன்மையும் அளப்பிலதாகும்; புதிய சைவர்களைத் தம்முடன் சேர்த்தலாற் சைவர்களின் தொகை மேன்மேற்பெருகும்; இறைவனாற் படைக்கப்பட்ட எண்ணிறந்த சிற்றுயிர்கள் கத்தியால் வெட்டப்பட்டுத் துடிதுடிக்கும் பெருந்துன்பத்தினின்று தப்பிப்பிழைக்கும்; நாடெங்கும் அருளொழுக்கம் பரவும்; அது பரவவே, பொய்யும், புனைசுருட்டும், ஒருவர் மற்றொருவர்க்குத் தீங்கிழைக்கும் எண்ணிறந்த பொல்லாவழிகளுந் தொலையும். இங்ஙன மெல்லாங், கொலை புலை தவிர்ந்துவருவாரைச் சைவர்கள் தம்முடன் சேர்த்துக்கொள்வதாற் போதரும் நன்மைகளைச் சொல்லப்புகுந்தால், அவை அளவிலவாய் விரியும். அங்ஙனமே, புதிது சைவராவாரைச் சேர்த்துக் கொள்ளாமையாற் கிளைக்குந் தீங்குகளுஞ் சொல்லுக்கு அடங்கா. ஆகையால், நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (திருமந்திரம், 95) என்று சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலநாயனார் அருளிச்செய்திருக்கும் விழுமிய அறவுரையைக் கடைப்பிடித் தொழுகவேண்டிய வரான சைவர்கள், தாம் கைக்கொண்ட சீரிய சைவ வொழுக்கத்தைப் பிறருங் கடைப் பிடிக்குமாறு செய்து, அங்ஙனம் அதனைப் புதிது கடைப்பிடித்தாரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதலே இன்றியமையாது செயற் பாலதாம்; அவ்வாறு செய்யாராயின் தம் ஆசிரியர் கற்பித்த சொல்வழி நடவாத பெருங் குற்றத்திற்கு ஆளாகிச், சைவ வொழுக்கத்திற்கு இன்றியமையாத அருளிரக்கம் இல்லாமையின் தங்குலமும் வரவர மாய்ந்து ஒழியப் பெறுவர்.

தமது சைவ ஒழுக்கத்தைப் பரப்புதலிற் கருத்தில்லா மலும், புதிது சைவவொழுக்கம் பூண்டாரையும் பிறரையுந் தம்மாட்டு அணுகவிடாமலுந் தமது ஊனுடம்பின் பிறப்பையே மேலதாகக் கருதி இறுமாந்தொழுகும் போலிச்சைவ வகுப்பினரின் குடும்பங்கள் கால்வழியின்றி நாளுக்குநாட் குன்றி மாய்ந்து போதலைப் பல இடங்களில் எம் கண்ணெதிரே கண்டு வருகின்றேம், அவ்வகுப்பினரிற் பற்பலர் அதனைச் சொல்லக்கேட்டும் வருகின்றோம். இதற்கு ஏது என்னென்றால், தம்போன்ற ஏனை மக்களின் நன்மையைக் கருதாமையும், புது இரத்தக் கலப்பு இன்மையு மேயாம். ஒவ்வொரு போலிச் சைவவகுப்பினரும் நாங்கள் முப்பது வீட்டுக்காரர்கள்; எங்களுக்குள்ளேதான் உண்ணல் கலத்தல்களைச் செய்கின்றோம்; இந்த முப்பது வீடுகளைத் தாண்டி வேறொரு வீட்டிற் கையைக் கூட நனைக்க மாட்டோம் என்று மிகுந்த தலையெடுப்போடும் பேசுகின்றார்கள். இப்படித் தம்மிற் சிலர்க்குள் மட்டும் உண்ணல் கலத்தல்களைச் செய்வதால், தமக்காவது பிறர்க்காவது இவர்கள் செய்த நன்மையாது? அதனால் இவர்கள் தேவர்களாய் விட்டார்களா? அல்லது இவர்களின் உடம்பு எவர்க்கும் இல்லாத பொன்னுடம்பு ஆய்விட்டதா? அல்லது அறிவிற் பெரியவராகிக் கடவுளை நேரே கண்டு விட்டார்களா? அப்படியொன்றும் இல்லையே. மற்றை எல்லாரையும் போல்ச் சிலநேரங்களில் மற்றை யோரைவிடப் போலிச்சைவர்கள் மிக இழிந்த செயல்களையுஞ் செய்யக் காண்கின்றோமே. தம்மைச் சைவரெனக் கருதி இறுமாப் போரில் எத்தனை பேர் பொதுமகளிர் வீட்டிற் புலைத் தொழில் செய்து கிடக்கின்றனர்! எத்தனைபேர் சீமைச் சாராயமும் வறுத்த ஆட்டிறைச்சியுங் கோழி முட்டையும் மறைவில் உட்கொள்கின்றனர்! எத்தனைபேர் சூதாட்டத்திற்கு காலங் கழிக்கின்றனர்! எத்தனைபேர் பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்க மன்றிப் படுபொய் பேசி அழிவழாக்காடு கின்றனர்! எத்தனை பேர் தமக்கு ஆகாதவர்களை ஆள்விட்டு அடித்துக் கொல்கின்றனர்! எத்தனைபேர் நோய்வாய்ப் பட்டுப் புழுத்த அழுகி நாறிக் கிடக்கின்றனர்! எத்தனை பேர் கல்வியறிவு சிறிதும் இல்லாதவர்களாய் அறியாமைச் சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கின்றனர்! எத்தனை பேர் கடவுள் இல்லையென நாத்திகம் பேசி நாத்தழும்பேறி நிற்கின்றனர்! எத்தனை பேர் எசக்கி, மாரி, வீரன், கறுப்பன் முதலான பேய்களை வணங்கி அவற்றிற்கு எண்ணிறந்த ஆடு, கோழிகளை வெட்டுகின்றனர்! இங்ஙனமே இன்னும் போலிச் சைவர்களின் இடையே நடைபெறும் அடாத செயல்களையெல்லாம் எடுத்துரைக்கப்படின் இவ்வேடு இடங்காணாது. இத்தகையயோரான போலிச்சைவர் தம்மைத்தாமே உயர்ந்த சாதியாராகச் சொல்லிக்கொண்டு தம்மில் இறுமாப்புற்றுத், தாந்தாமே கூடிக்களித்தால், அதனைக் கண்ட உயர்ந்த அறிவினர் அவரையும் அவர் சொல்லையும் ஒருபொருட்டாக மதிப்பரோ! ‘சைவர் என்னுஞ் சொல்லுக்கு ஏற்பத் தாம் அருளொழுக்கத்திலும், சிவநேயத்திலும், அடியார் பணியிலுந் தலைசிறந்து நிற்பதோடு, தம்மோடொத்த ஏனை மக்களையுந் தமது அருளொழுக்கத் திற்றிருப்பி அவரோடு அளவளாவி, அவ்வாற்றாற் சைவவொழுக்கத்தை எங்கும் பரவச் செய்யினன்றோ, அறிவான்மிக்க ஆன்றோர் அவரை உண்மைச் சைவரென உயர்த்துப் பாராட்டுவர்!’

மேலும், முப்பது நாற்பது நூறு இருநூறு வீட்டுக் காரர்களுக்குள்ளே தான் யாங்கள் உண்ணல் கலத்தல்களைச் செய்வோம் எனத் தருக்கிப் பேசி அவ்வாறு நடந்துவரும் போலிச்சைவரின் குடும்பத்தாருடம்புகளிற் பழைய இரத்தமே வரவர வலிவிழந்து ஓடிவருதலால், அவர்கட்குப் பிள்ளைப்பேறு வாயாமற் போகின்றது; பிள்ளைப்பேறு வாய்ப்பினும் உயர்ந்த அறிவும், திட்பமான மனமும், முறுக்கான யாக்கையும், சிறந்த தன்மையும் வாய்ந்த பிள்ளைகளைப் பெறுதல் அவர்களுள் அரிதினும் அரிதாய்ப் போகின்றது. புதுநீர் வரத்தின்றிப் பழைய கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து, நோய்ப் புழுக்களை யுண்டாக்கி யார்க்கும் பயன்படாமல், வரவர வற்றிவறண்டு முடிவில் நீரற்றுப் போதல் போல, அகலஉள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது, தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடங்கொடாத போலிச்சைவக் குடும்பத்தினருந் தமது வலிவிழந்த பழைய இரத்தங்கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு போகத் தாமும் இருந்த இடந் தெரியாமற் சிலகாலத்தில் மாய்ந்து போகின்றனர்.

பார்மின்கள்! நம் இந்தியநாட்டவர் அல்லாத வெள்ளைக்காரருள்ளும் அவரோடொத்தார் பிறருள்ளும் இத்தகைய பொல்லாப் போலிச் சாதிக் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? இல்லையே; அவை இல்லாமையின், அவர்கள் தம்மில் ஆண்மக்களும் பெண்மக்களும் தத்தம் இயற்கைக்கு இசைந்தாருடன் இனிதுகூடி வாழ இடந்தந்து, அவ்வாற்றால் அறிவிலும் ஆண்மையிலுஞ் சிறந்த மக்களை அளவின்றிப் பெற்று, உலகமெங்குந் தாமாகவே பரவி, எல்லா நலங்களும் எய்தி, அந்நலங்கள் இல்லாத நம் நாட்டவர்களைத் தம் அடிக்கீழ்ப்படுத்து, நம்மனோர் தம்மைச் சார்ந்து அண்டிப் பிழைக்க நம்மை ஆண்டு நமக்கு உதவியும் புரிந்து வருகின்றனர். இவ்வாறிருக்க, அளவிறந்த சாதிக் கட்டுப்பாடுகளுடைய நம்மனோர், அச் சாதிக்கட்டுப் பாடுகளாற் பெற்ற பயன் ஏதேனும் உண்டா? ஏதுமேயில்லை.

அவற்றால் உயர்ந்த பயன்கள் உண்டாகாவிடினும் விடுக; தீமைகளேனும் விளையாமலிருக்கின்றனவா வென்றால் அப்படியுமில்லை; அவை நன்மையைத் தராதமட்டில் அமையாமல், அடுத்தடுத்துப் பல தீமைகளையும் விளை விக்கின்றன! தம்மை உயர்ந்தசாதியாராக நினைப்பவர்கள் தம்மோடொத்த மக்களை எவ்வளவு இழிவாக நினைத்து இறுமாக்கின்றார்கள்! இழிந்தோராக ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பத்தை அடைந்தாலும் அவர்களை உயர்ந்த சாதியார் என்போர் கண்ணெடுத்தும் பார்க்கின்றார் களில்லையே! தாழ்ந்த சாதியாரிடத்தில் எல்லாவகையான ஏவற்றொழிலை யும் வாங்கிக்கொண்டு அவ்வாற்றால் மிக்க செல்வமுடையராய் வாழ் கின்றவர்கள், அவ்வேழை ஏவலர் ஒருநாளைக்கு ஒருவேளை கூழ்உணவு கூடக் கிடையாமற் களைத்துக் கிடக்க, அவர்கட்கு ஒருபிடிசோறாவது கொடுக் கின்றார்களா, இல்லையே! இழிந்த சாதியார் கடுவெயிலில் நாள் முழுதும் நின்று கை எரியக் கால் ஓய முதுகுநோவ வெட்டியெடுத்துத் தந்த கிணற்று நீரைத் தமது வீட்டு நிழலிலிருந்து வெட்டிவேர் இட்டு மணம் ஊட்டிப் பருகுகின்ற மேற்சாதியார், அக் கீழ்ச்சாதியார்கள் வெயிலால் நாவறண்டு உடல்தளர்ந்து ஒரு குடங்கை நீராவது முகந்து குடிக்கலாம் என்று அக்கிணற் றண்டை வந்தால் அவர்களை எவ்வளவு வன்னெஞ்சத்தோடுந் துரத்துகின்றனர்!

மேற்சாதியாரென்போராவது தமக்குள் அன்பும் ஒற்றுமையும் பூண்டு ஒழுகுகின்றார்களாவென்றால் அப்படியும் இல்லை. அவர்கள்ளும் பற்பல சாதி வேற்றுமைகள்! ஒருசிறு வகுப்பினர் மற்றொரு சிறுவகுப்பினரைத் தம்மிற் றாழ்ந்தவர் எனக் கருதி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் இறுமாக்கின்றனர்! எந்நேரமுஞ் சாதியுயர்வு தாழ்வுகளைப் பற்றியே பேசுகின்றனரல்லாமல், வேறு உயர்ந்த பொருள் களைப்பற்றி எட்டுணையும் பேசுகின்றிவர். இன்னகாலத்தில் அழியும் என்று அறியப்படாத ஊடனும்பின் பிறப்பையே எந்நேரமும் நினைந்து அறியாமையில் மாழ்க்கிடக்கும் இப் பேதைமக்கட்கு உயர்ந்த நோக்கங்களும் உயர்ந்த பொருள் களைப்பற்றிய பேச்சுக்களும் எங்கே யிருந்து எப்படிவரும்? இவ் இந்துமக்களைப்போல ஒற்றுமை கெட்ட நெல்லிக்காய் மூட்டைகளை இந்நிலவுலகத்தில் வேறெங்குங் காண்டல் இயலாது. தமக்குள் ஒருவரை யொருவர் தாழ்வாக நினைந்து, போலி மேலோர் போலிக் கீழோரைக் கொடுமையாக நடத்துதலுக்குத் தண்டனையாக வன்றோ, எல்லார்க்குந் தந்தையான கடவுள் நம் இந்து மக்களைச் சென்ற எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக அயல் நாட்டவர் படையெடுப்பிற் படுத்துத் துன்புறுத்தியும், அவரது ஆட்சியின் கீழ் வைத்துத் திருத்தியும் வருகின்றது. தன் புதல்வர்களுள் எளியாரை வலியார் கொடுமைப் படுத்துதல் கண்டு, பேர்இரக்க முடையனாகிய இறைவன், நம் இந்துமக்களை அயலவரால் எவ்வளவோ திருத்தி வந்தும், நம்மவர்கட்கு இன்னும் நல்லுணர்வும் அன்பும் ஒற்றுமையும் வந்த பாடில்லையே! எழுநூறு ஆண்டுகளுக்கு முற்றொட்டுத் துலுக்கர்கள் படையெடுத்துவந்து நம்மனோரைச் சின்ன பின்னமாய் வெட்டி வீழ்த்தியும், பொருள்களைச் சூறையாடியும், பெண்மக்களைக் கற்பழித்தும், ஊர்களைக் கொளுத்தியும், திருக்கோயில்களை இடித்தும் வருத்தி வந்தக்கால் நம்மனோர் தம் சாதிவேற்றுமைகள் எங்கிருந்தன? அவை எல்லாம் பஞ்சாய்ப் பறந்தொழிந்தனவல்லவோ? ‘தைமூர் அமீர்’ என்னுந் துலுக்க மன்னன் கிபி 1398 இல் வடநாட்டிற் படையெடுத்து வந்த ஞான்று ‘துலம்பா’ என்னும் ஊரிலிருந்த நம் இந்துக் குடிமக்களைச் சின்னபின்னமாய் வெட்டி வீழ்த்தி, எஞ்சினோரை அடிமைப்படுத்தினான்! பின்னும் ஒருகால் நம்மனோரில் நூறாயிரம் பேரைக் குருதியொழுகக் கொன்றான்; டில்லி நகரை ஐந்துநாள் வரையிற் கொள்ளையிட்டான்; அப்போது எண்ணிறந்த நம் பெண்மக்களைச் சிறை பிடித்தான். அக் காலம்முதல் நம்மனோரில் எத்தனை கோடி பேர் துலுக்கராயினர்! எத்தனை யாயிரம்பேர் வறுமைப்பட்டுக் கீழ்ச்சாதியாரா யினர்! அடித்தவனுக்கு ஆமுடையாள், பிடித்தவனுக்குப் பெண்டாட்டி என்றபடி நம் பெண்மக்களில் எத்தனை யாயிரம்பேர் துலுக்கர் கையிற் சிக்கிமீண்டவர்கள்! அத்துலுக்க அரசர்களால்நேர்ந்த குழப்பங்களின் இடையே, நம் இந்து அரசர்களும், அவர்களின் கீழ்த் தலைமை செலுத்தினவர்களும், ஏனைச் செல்வர்களும், ஆள்வலிமை படைத்தவர்களும் செய்துவந்த தகுதியற்ற கொடுஞ் செயல்களுஞ் சொல்லுக்கு அடங்கா; அவர்களால் துன்புற்றுத் தமது நிறை சிதைந்த நம் இந்துப் பெண்மக்களும் எண்ணிறந்தவர்கள்! அறம் வழுவாத நம் ஆங்கிலவேந்தரின் ஆட்சி இந்நாட்டில் நிலைபெற்றபின்னரன்றோ, நாமும் நம் பெண்மக்களும் அச்சமின்றி இனிது வாழ இடம்பெற்றோம். இந்தச் சீரிய அரசியலிலுங் கூட, ஒதுங்கியுள்ள நாட்டுப் புறங்களில் இடம் பொருள் ஏவல்களால் வலியராய் உள்ளார் தம்மைச் சூழ்ந்திருக்குங் குடிமக்கட்குப் பெருந் தீங்குகள் செய்து வருகின்றார்கள்; அத் தீயார் இருக்கும் இடங்களிற் கற்புடைய மகளிரும் இருப்பரோ என்பது ஐயுறற் பாலதாகவே யிருக்கின்றது. சில ஆண்டுகளுக்குமுன் மலையாள நாட்டில் நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சிகள் இன்னும் நமது நினைவைவிட்டு நீங்கிற்றில, அங்குள்ள நம்பூரிப் பார்ப்பனரும் நாயர்களும் நீள இழைத்து வந்த சாதி வேற்றுமைக் கொடுமைகளைப் பொறுக்க ஏலாமையாலன்றோ, அங்குள்ள துலுக்கர்கள் அவர்களை உயிரோடு வைத்துத் தோலுரித்தும், அவர்களின் மகளிரைச் சிறைபிடித்துச் சென்றும், அவர்களின் இல்லங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அவர்கள் தொழுங் கோயில்களை இடித்துப் பாழாக்கியும் நினைப்பினும் நெஞ்சம்நடுங்கும் வகையா லெல்லாம் அவர்களைத் துன்புறுத்தினார்கள்! அங்குள்ள நம்பூரிகளும் நாயர்களும் தம்மோடொத்த மக்களான ‘தீயர், ‘ஈழுவர், ‘புலையர் முதலியோரைக் கொடுமைப்படுத்தாமல் அன்பாக நடத்தியிருந்தாற், பெருந்தொகையினரான அவர்களெல்லாரும் ஒருங்குசேர்ந்து, சிறுதொகையினரான நம்பூரிகளையும் நாயர்களையும் பாதுகாத்துத், துலுக்கர்களை எளிதில் அடக்கியிருப்பரன்றோ! நம் ஆங்கில அரசினர் தம் படைகளை விடுத்து அத் துலுக்கர்களை அடக்கியிரா விட்டால், நம்பூரி நாயர்களின் சாதிக்கட்டுப்பாடுகளெல்லாந் துகளாய்ப் பிறந்து, மலையாளம் முற்றுந் துலுக்கநாடாய்ப் போயிருக்கு மன்றோ? இவ்விந்திய நாடெங்கும் பார்ப்பன ராலும் போலிச்சைவர்களாலும் வேரூன்றி நிற்கும் சாதி வேற்றுமையால், எல்லா மக்களும் எண்ணியடங்காப் பற்பல பிரிவினராகி ஒற்றுமைகெட்டு, ஒருவரிடத்தொருவர் அன்பிலராய்த், தம்மைத்தாமே பெரியராகநினைந்து இறுமாந்து நடக்கின்றனர்; இவர்களைத் துலுக்கர்கள் மற்றொருமுறை எதிர்க்க நேரம் வாய்க்குமானால், இந்துக்கள் அனைவரும் வேரோடு மாய்க்கப்படுதல் திண்ணமாய் முடியும். சில கிழமைகளுக்குமுன் கல்கத்தாவில் நடந்த ‘இந்து முலீம் கலகமே இதற்கொரு சான்றாம். அரசியல் நெறிவழுகுவாத நம் ஆங்கில துரைத்தனத்தார் இக் கலகத்தை உடனே அடக்காதிருந்தால், இக்கலகம் எவ்வளவு அஞ்சத்தக்கதாய் முடிந்திருக்கும். சாதிவேற்றுமை என்னும் பெரும் புயற்காற்றாற் சின்ன பின்னப் படுத்தப்பட்டுச் சிதறிக் கிடக்கும் நம் இந்துமக்களில், தலைவரெனத் தம்மைக் கூறிக்கொள்வோர் இந் நிலைமைகளைச் சிறிதாயினும் ஆராய்ந்துபாராமல், நம் ஆங்கில அரசை இந்நாட்டி னின்றுந் துரத்தப் பார்க் கின்றார்களே!

மாதவர் நோன்பும் மடவார் கற்புங்காவலன்
காவல் இன்றித் தங்கா

என்று நம் பழைய ஆன்றோராகிய இளங்கோ வடிகள் ‘சிலப்பதிகாரத்தில் அருளிச்செய்திருக்கும் அறவுரையை அவர்கள் அறியார் கொல்லோ! ஆங்கில அரசினர் இந்நாட்டைவிட்டு அகலும் அன்றைக்கே இது பிணக் காடாம் என்பதை அவர்கள் உணரார்கொல்லோ! நம் இந்துக்களுக்கு எல்லாவகையானுந் தீராப் பெரும் பகைவராய்த், தம்முள் ஒற்றுமையும் அதனால் வலிமையும் தமக்கு உதவிபுரியுந் துலுக்க அரசர்களும் நன்கு வாய்க்கப் பெற்றாராய், இவ்விந்து நாடெங்கணும் பெருந்தொகை யினராய்க் குடிகொண்டிருக்குந் துலுக்கர்களைப் பார்த்தாயினும் நம்மவர்கள் சாதிவேற்றுமை யினை யொழித்துத் தமக்குள் ஒற்றுமை எய்தலாகாதா! ஓர் எழுநூறு ஆண்டுகளாக இவ்விந்தியநாடெங்கும் நிகழ்ந்துவரும் மாறுதல்களை நடுவுநிலைமையோடு நின்று ஆராய்ந்து காண்பவர்களுக்கு, இங்குள்ள எந்தச் சாதியாரேனும் பிறசாதிக் கலப்பின்றித் தனிச்சாதியாராய் வாழ்ந்திருக்கலாம் என்று ஐயமின்றிச் சொல்வதற்குச் சிறிதும் இடம் இல்லாமையாலும், வெவ்வேறினமாய் நிற்கும் மக்கள் ஒன்று கலத்தலாற் பிறக்கும் பிள்ளைகள் அறிவு மிகுதியும் உடல் வலிமையும் பெற்று உலகிற்குப் பெரிதும் பயன்படுதலை நாளுங் காண்கின்றோ மாகலிற் சாதிக்கலப்பு மிகவும் வேண்டற் பாலதாய்த் தோன்றலாலும், இம்மை மறுமைப் பயன்களை விழையும் உண்மைச் சைவர்கள் பிறசாதியாரிலிருந்து புலாலுண்ணாப் புனிதராய் வருவாரைத் தம்மொடு சேர்த்து வலிமையிலும் அறிவிலுந் தொகையிலும் அருளொழுக்கத்திலும் மிகுந்து நலம்பெறக் கடவராக!

இனி, மற்றைத் தாழ்ந்த வகுப்பினரிற் கொலைபுலை தவிர்ந்தாரை உண்மைச் சைவர்கள் தம்மினத்திற் சேர்த்துக் கொள்வது ஒன்றின் மட்டும் அமையாது, கல்வியில் மிக்காரையுங், கடவுள் வழிபாட்டிற் சிறந்தாரையும், அகந் தூய்மை புறந்தூய்மை வாய்ந்தாரையும் பிறப்பிழிபு நோக்காது தம்மொடுசேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டும். எல்லா மக்களிடத்தும் எல்லா நலங்களும் அமைதல் அரிதாகையால், எவ்வெவரிடத்து எவ்வெந் நலங்கள் காணப்படுகின்றனவோ, அவ்வந் நலங்கள் பற்றியே அவ்வவரைப் பாராட்டுதல் வேண்டும்; அவரிடத்திற் காணப்படாத நலங்களுக்காக அவரைக் குறைசொல்லல் ஆகாது. சில நலங்கள் உடையராய் வேறு சில நலங்கள் இலராயினாரையுந் தம்மொடு சேர்த்து அளவளாவிவரின், அவர் உண்மைச் சைவரின் சேர்க்கையால் வரவர எல்லா நலங்களும் நிரம்பப்பெறுவர். தமக்குள்ளேயே சைவ வொழுக்கத்தின் வழுவிப் புலாலுணவு கொண்டுங் குடித்தும் பரத்தையரை மருவியும் ஏமாற்றங்கள் செய்தும் வருவார் பலர் இருக்க, உண்மைச் சைவர்கள் அவர்களை நீக்க மாட்டாமற் சிறப்புநாட்களில் அவர்களோடு உடனிருந்து உண்டும், அவர்கள்பாற் பெண்கொண்டு கொடுத்தும் அளவளாவி வாழவில்லையா? அங்ஙனமே மற்றைத் தாழ்ந்த வகுப்பாரிலுந் திருந்தத்தக்காராய்ச், சில நலங்களேனும் உடையார் இருந்தால், அவர்களை உண்மைச் சைவர்கள் தம்மினத்தில் உடனே சேர்த்தல் இயலாதாயினும், அவர்களோடு முதலில் நெருங்கிப் பழகவேண்டு மளவுக்குப் பழகி, அப் பழக்கத்தால் அவர்கள் முற்றுந் திருந்தக்காணின், பின்னர் அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளல் இன்றியமையாததாகும்.

பிற சாதியார்கள் கல்வியுங் கடவுள்வழிபாடுந் தூய்மையும் இலராதல்பற்றி, அவரை விலக்கிவைத்து, அவர்கள் திருந்துதற்குரிய வழிவகைகளைச் செய்யாமல் நம்மவர் இன்னும் பராமுகமாயிருப்பரானால், அவர் களெல்லாருங் கிறிதுவர், துலுக்கர், பௌத்தர் முதலான பிறசமயத்தவரால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம் இந்து சமயப் பகைவராகிச், சில நூற்றாண்டுகளில் இவ்விந்திய நாடெங்கும் நிறைந்து, நம்மனோரும் நம் சைவவைணவ சமயங்களும் இருந்தவிடமுந் தெரியாமல் வேரோடு அற்றுப்போகச் செய்குவர். நம்மனோர் செய்த கொடிய சாதிக்கட்டுப்பாடுகளின் துன்பம் பொறுக்கமாட்டாமை யாலன்றோ, கணக்கிறந்த நம் இந்துமக்கள் கிறிதுவ ராய்விட்டனர்! நம்மனோரில் நாளொன்றுக்கு முந்நூறுபேர் விழுக்காடு கிறிதுவராய் விடுகின்றார்களென்று, அதனை ஆராய்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேம். நாளொன்றுக்கு முந்நூறுபேர் கிறிஸ்துவராய்விட்டால், ஒரு திங்களுக்கு ஒன்பதினாயிரம் ஆகச் சில நூற்றாண்டுகளில் இந்தியநாடு முழுதுங் கிறிஸ்துவராலேயே நிரப்பப்படும். கிறிஸ்துவர்கள் தங்களது சமயத்தைப் பரப்பும்பொருட்டு ஒவ்வொருநாளும் எண்ணிறந்த நூல்களைப் பரப்பி வருகின்றார்கள்; தம்மிற் கற்றவராயுள்ள குருமார்களுக்கு மிகுந்த சம்பளங்கள் கொடுத்து, அவர்களை ஆயிரக் கணக்காகப் பலப்பல இடங்களுக்கும் போக்கித், தம்முடைய சமயக் கோட்பாடுகளை எல்லார்க்கும் எடுத்துச்சொல்லி, விரும்பினோரைத் தமது சமயத்தில் ஏற்றுக்கொள்கின் றார்கள். நம்மனோராற் சிறிதேனும் பாராட்டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏழையெளிய சாதியார்கள் இருக்கும் இடங்கள் எங்குங் கிறிஸ்துவக் குருக்கள்மார் போய் ஆங்காங்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பித்து, அவர்கட்கு ஊண்கொடுத்து உடைகொடுத்துக் கல்வியறிவு புகட்டி, அவர்கள் துப்புரவாயிருக்கக் கற்பித்து, அவர்களைச் சிறந்த அலுவல்களிலும் அமரச் செய்து இங்ஙனமெல்லாம் அவர்கட்குப் பற்பல நன்மைகளைப் புரிந்துவருதலால், அந்நன்மைகளைப் பெற்று உயரும் அவ்வெளிய சாதியார்கள் அக் குருமார்கள்பால் மிக்க நன்றியறி வுடையவர்களாய்த், தமக்கு ஏதோர் உதவியுஞ் செய்யாமல் தம்பால் எல்லா உதவிகளும் பெற்றுக் கொண்டு தம்மைப் பட்டினியிலும் பசியிலும் மிகத் தாழ்ந்தநிலையிலுங் கிடக்கவிட்டுத் தம்மை மீளாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் நம்மனோரையும் நம்முடைய சைவவைணவ சமயங்களையும் நீங்கி அக்கிறிஸ்துவக் குருக்கள்மார் காட்டும் கிறிஸ்துவசமயம் புகுகின்றார்கள். எளிய சாதியார்கட்கு உதவிபுரிவார் இல்லாத காலங்களிலே, மேற்சாதியாரெனக் கூறிக் கொள்ளும் “ஓ இரக்கமற்ற கொடிய இந்துமக்களே, நீங்கள் அவர்களை ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங் களினுங் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரைவயிற்றுக் கூழுணவுகூடக் கிடையாமற் செய்தும், அவர்களில் ஆண் மக்களாயினார் கோவணத்திற்குமேல் ஒருசிறு கந்தைத்துணி கூட உடுக்க விடாமலும், அவர்களிற் பெண்மக்களாயினார் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங்கூட மனம்பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாயிருக்கக் கல்வியறிவுதானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள் பால் எல்லாவகையான வேலை களையும் வாங்கிவந்தீர்கள்! நுங்களுடைய ஈரமற்ற வன்னெஞ்சத்தையும் இரக்கமற்ற கொடுஞ்செயல்களையுங் கண்டன்றோ, அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கிலநன் மக்களையும் அவர் வழியே கிறிஸ்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள்புரிந்தான்! அவர்கள் வராதிருந்தால் பல கோடிக் கணக்காயுள்ள அத் தாழ்த்தப்பட்ட பழந் தமிழ் மக்களின் நிலைமை இன்னும் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளாகி யிருக்கும்!” இவ்வாறு எல்லா இரக்கமும் வாய்ந்த இறைவனால் ஏவப்பட்டு ஆங்கில அரசுங் கிறிஸ்துவக் குருமாரும் இங்குவந்து அவ் வேழைமக்கட்கும் பிறர்க்கும் எல்லாவகை யான நலங்களும் புரிந்துவருவதைப் பார்த்தும், ஐயோ! இந்துமக்களே, ஓ போலிச்சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்தபாடில்லையே! நுங்களை நுங்கள் கால்வழியற்றுப்போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதிவேற்றுமை இருப்ப துணராது, அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை! ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ்வோனுக்கும் நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக்கொத் தளத்தை வெடிக்கச்செய்து அவனையும், அவ்வூரிலுள்ளா ரனைவரையுஞ் சிறிது நேரத்திற் படுசாம்பராக்கி விடுதல் போலப், பாழுஞ் சாதிவேற்றுமையால் இனி யுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒருசிறு கலகமானது நுங்களையும் நுங்களிறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடு களையும் எளிதில் மாய்த்தொழிக்குமேயென அஞ்சு கின்றோம்! வெள்ளம் வருவதற்கு முன்னரே அணைகோலிவைத்தல் அறிவுடையார் செயலாதல்போலப், பெருந் தீமைக்கு ஏதுவான கலகம் வருதற்குமுன்னமே அதனை வருவிக்குஞ் சாதிவேற்றுமை யினைத் தொலைத்துவிடுமின்கள்!

ஆடு மாடு குதிரைகளைப்போலச் சைவவுணவு மட்டுங் கொள்ளுதலால் நீங்கள் நுங்களைச் ‘சைவர் எனச் சொல்லிக்கொள்ளுகின்றீர்கள்; நீங்களேனும் மருத்துவர் சொல்லைக் கேட்டுச் சிலகாலங்களில் ஊனுணவையும் உட்கொள்வீர்கள்; ஆனால், ஆடு மாடு குதிரைகளோ எக்காலத்தும் ஊனுவுகொள்ளா; கடவுள் இல்லையென நாத்திகம் பேசும் சமணர்கள் கொல்லா அறத்தில் நுங்களை விடப் பன்மடங்கு சிறந்தவர்கள் ஊன் உண்ணாமையே சைவம் என நுவலுவீர்களாயின், ஆடு மாடு குதிரை களையும் சமணரையுமன்றோ நுங்களைவிடச் சிறந்த சைவராகச் சொல்லுதல் வேண்டும்? அற்றன்று, நாங்கள் சிவபெருமானை வழிபடுகின்றோம், தேவார திருவாசகங்கள் ஓதுகின்றோம், திருநீறும் சிவமணியும் அணிகின்றோம், ஐந்தெழுத்து மந்திரம் உருவேற்றுகின்றோம், அடியார் திருத்தொண்டின் பெருமை களையும் ‘சிவஞானபோதம்’ முதலான சைவசித்தாந்தத் தனிப்பெரு நூல்களையும் பயின்றறிகின்றோம்; இவைகளே சைவராகிய எமக்குச் சிறப்படையாளங்கள் என்று உரைப்பீர் களாயின், இவ் வடையாளங்கள் உடையவர் நுங்களில் எத்தனைபேர் உளர்? பதினாயிரவரில் ஒருவரேனும் உளரா? துணிந்து சொல்வீர் களா? சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதற்குரிய இலக்கணங்களை நுங்களில் நன்கு உணர்ந்தவர் எவ்வளவு பேர்? தேவார திருவாசகங்களுக்குப் பொருளும் அவற்றைப் பிழையற ஓதுதலுந் தெரிந்தோர் எவ்வளவினர்? திருநீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்பவற்றின் உண்மையை யாராய்ந்தறிந்தோர் எத்தனைபேர்? ‘பெரிய புராணம், ‘சிவஞானபோதம் என்பவற்றின் பெயர்களையேனுந் தெரிந்தோர் நுங்களில் ஆயிரத்தில் ஒருவரேனும் உளரா? உண்மைச் சைவர்க்குரிய இவ் வடையாளங்களுள் ஒரு சில தாமும் வாய்க்கப்பெறாதார் வெறும் பெயரளவில் தம்மைச் சைவரென இறுமாப்புடன் சொல்லிக்கொள்ளா நிற்கையில், மற்றைச் சாதியாரிலிருந்து இவ் வடையாளங்கள் எல்லாம் முற்றும் உடையராய் வரும் புனிதரை உண்மைச் சைவர் எனக்கொண்டு அவருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்தலாற் போதருங் குற்றம் என்னை? பிறசாதியாரிற் சைவநலங்கள் சிலவற்றோடு பெருஞ்செல்வமும் உடையார் இருந்தால், அவருடன் ஏதொரு வேற்றுமையும் பாராமல் உண்ணல் கலத்தல்களைச் செய்யும் சைவர்களைப் பாராதார் யார்? பிற சாதியார்களிற் செல்வம் மிகுந்தோர் எத்தனையோ பெயர் தஞ்சாதியை விடுத்துச் சைவ குலத்தில் எளிதாகப் புகுந்து கலந்துவிடுகின்றனர். பணம் பந்தியிலே குலங் குப்பையிலே என்னும் பழமொழியும் இவ்வாறு நேருஞ் சாதிக்கலப்புகளையே உணர்த்தாநிற்கின்றது. சைவகுலத்தில் மட்டுமே இத்தகைய கலப்புகள் நேர்கின்றனவென்று நினைத்தல் வேண்டாம். எல்லாச் சாதியாரிலும் இவை போன்ற கலப்புகள் நிகழ்ந்துகொண்டே போகின்றன. இப்போது எல்லாக் குலத்தினரிலும் மேற்பட்ட குலத்தினராகக் கருதப்படும் பார்ப்பனருங்கூடத், தம்மினும் மிகத் தாழ்நதவராகக் கருதப்படுஞ் சாதியாரிற் செல்வமுங் கல்வியும் முதலான நலங்களுடையார் விரும்பினால் அவர்கட்குத் தம் பெண் மக்களை மனைவியராக வாழ்க்கைப்படுத்துகின்றனர்; அவர்கள் பாற் பெண்மக்களிருந்தால் அவர்களைத் தாமும் மணம் முடித்துக் கொள்கின்றனர். இங்ஙனமெல்லாம் பிறசாதியாரிற் செல்வம் மிக்கார்பால் ஒருவகையாகவும், செல்வங் குறைந்தார்பாற், பிறிதொரு வகையாகவும் நடக்கும் போலிச் சைவரின் வஞ்சவொழுக்கந் தீயினுங் கொடியதா மென்க.

இன்னும், பிறசாதியாரிற் றாழ்ந்தகுலத்தவராகத் தம்மாற் கருதப்பட்ட வகுப்பினர் சிலரைத் தென்னாட்டுத் திருக்கோயில் களினுள் நுழையவிடாத போலிச்சைவரின் புல்லிய செய்கை யால், எத்துணைப் பெருந்தீங்குகள் நிகழவிருக்கின்றனவோ என்பதை நினைக்க எம்நெஞ்சம் நடுங்குகின்றது! இத்தடையால் இதுவரையில் நிகழ்ந்த தீமைகட்கே அளவில்லை. எல்லா மக்களையுந் தோற்றுவித்த இறைவனாகிய தம் அப்பன் அமர்ந்திருக்கும் பொது இடமாகிய கோயிலிற் சென்று மக்கள் எல்லாரும் மனங் கரைந்து வணங்கவேண்டியவரா யிருக்க, அப்பொது இடத்திலும் பொல்லாத சாதிவேற்றுமையை நுழைத்து, இறைவன் படைத்த மக்களுட் பெரும்பாலாரைத் தாழ்ந்த சாதியாராக்கி, அவர்களைக் கோயிலினுள் நுழையவிடாத கொடுஞ்செய்கை யினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் நுழையவிடாத கொடுஞ்செய்கையினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் புகுந்து தம்மை வணங்கலாகாதென்று கடவுள் தடைசெய்திருக் கின்றாரா? அப்படியொன்று மில்லை யென்பதும், சாதி இறுமாப்புக் கொண்டோர்க்குக் கடவுள் அருள்புரியாமல், தாழ்த்தப் பட்ட சாதியார்க்கே அவர் மிகுதியும் அருள்புரிந்திருக் கின்றா ரென்பதும் உண்மை வரலாறுகள் பலவற்றால் மேலே விளக்கிக்காட்டின மன்றோ? அல்லது கடவுளை நேரேகண்டு அவனதருளைப் பெற்ற உண்மையடியார் களாவது தாழ்த்தப்பட்ட சாதியார்களை உள்ளே விடுதலாகாதென்று விலக்கியிருக்கின்றார்களா? அப்படியும் இல்லையே. அவர்கள், ஈழக் குலச்சான்றாராகிய ஏனாதி நாயனாரையும், பறைக் குடியினரான நந்தனாரையும், பாணர் குடியினரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், வண்ணார் குடிப்பிறந்த திருக்குறிப்புத் தொண்டரையும், எண்ணெய் விற்கும் வாணிகர் குடிப்பிறந்த கலியனாரையும் வணங்கி அவர்களைக் கோயிலினுள் நுழைய இடங்கொடுத்த மட்டில் அமையாது, அவர்களையெல்லாம் ஏனை நாயன்மார் திருவுருவங்களோடு உடன் வைத்து, அறுபத்து மூவராக ஒவ்வொரு சிவபிரான் திருக்கோயில்களிலும் ஒவ்வொரு நாளும் வழிபாடுசெய்து வருகவெனவுங் கட்டளையிட் டிருக்கின்றன ரல்லரோ? அக் கட்டளைப்படியே அந் நாயன் மார்கட்கு நாள் வழிபாடும் ஆண்டுவிழாவும் ஒவ்வொரு திருக்கோயில்களினுந் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருதலைப் போலிச் சைவர்கள் பார்த்ததில்லையா? இழிந்த சாதியாராகக் கருதப்பட்ட நாயன்மார்கள் சிவபிரானோடு ஒப்பக் கோயில்கடோறும் வைத்து வணங்கப்பட்டு வருகையில், அந்நாயன்மார் மரபிற் பிறக்குந் தவம்உடைய சான்றார், பறையர், செம்படவர், வண்ணார், எண்ணெய் வாணிகர் என்போரைத் தென்னாட்டுச் சிவபிரான் திருக்கோயில்களில் நுழையவிடாத போலிச் சைவரின் புல்லறிவினுந் தலையெடுப்பின் கொடியவை வேறுண்டோ கூறுமின்கள்! இவர்களுடைய இக் கொடுமைக்கு அஞ்சி யன்றோ திருநெல்வேலி மாகாணத் திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியாரில் எண்ணிறந்தோர் கிறிஸ்துமதம் புகுந்தனர்! இன்னும் புகுகின்றனர்! இவ்வாறு சைவசமயத்திற் பிறந்த மக்களெல்லாரும் நாளுக்குநாட் கிறிஸ்துவராய்விட்டாற் பிறகு சிவபிரான் கோயில்களை வணங்க வருவார்தாம் யார்? இதுதானும் உணர்ந்து பார்க்குஞ் சிறியதோர் அறிவுதானும் இன்றிச், சைவசமயத்தவராய் இருக்கும் வரையில் தாழ்த்தப் பட்ட சாதியாரை முன்னேற வொட்டாமற் பலவகையால் ஈரநெஞ்சமின்றித் துன்புறுத்தித் தாமே, அவர்களைக் கிறிஸ்துவமதம் புகுமாறுசெய்துவிட்டு, அவர்கள் கிறிஸ்துவம் மதம் புகுந்து மேல்நிலைக்கு வந்த பின், அவர்கள்முன் அடக்கஒடுக்க வணக்கத்தோடு சென்று, பல்லை இளித்துக் காட்டியுங் கெஞ்சியமுகத்தோடு தலைகுனிந்து நின்றும், அவர்கற்பாற் பல உதவிகளைப் பெறும் போலிச்சைவரின் செயல் பெரிதும் அருவருக்கத்தக்கதா யிருக்கின்றதன்றோ? எல்லாச் சாதியினரையுங் கோயிலினுள் விடுத்து, அவருட் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்பு பூண்டு ஒழுகினார்க்கு, அக் கோயில்களினுள்ளேயே திருவுருவங்கள் சமைத்து நிறுத்தி அவரை வழிபட்டுவரும் வழக்கந் தொன்றுதொட்டு நடைபெற்று வராநிற்பவும், அச்சிறந்த வழக்கத்திற்கு மாறாகப் போலிச் சைவர்கள் தாழ்ந்த வகுப்பினரைக் கோயில் களினுள்ளே விடுவதில்லையெனப் புதியதொரு போலி வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அப்போலி வழக்கத்தின் துணையால் ஆங்கில அரசரைத் தமக்குத் துணை கூட்டி வைத்துத், தாழ்ந்த சாதியாரைக் கோயிலினுள்ளே நுழைய விடாமல், அம்முயற்சியில் மட்டும் விடாப்பிடியாய் நிற்கின்றார்களே! நம் நாட்டவரும், நம் சமயத்தவரும், நம்முடைய வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளையுஞ் செய்து வருபவருமான பறையர், சான்றார், ஏகாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோர்க்குக் கொடுமை செய்வதாகிய தீயவழியில்தானா இப் போலிச் சைவர்ளுக்கு இத்துணை முயற்சியும் விடாப்பிடியும் இருத்தல்வேண்டும்! தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் போலிச் சைவர்கள் இவ்வா றெல்லாம் மிக வருந்தி அவர்களின் அக்கொடுஞ்செயலை அருவருத்துப்பேசாநிற்ப, அப்போலிகள் எவருடைய மதிப்பைப் பெறல்வேண்டியோ அவ் வேழைகளை இங்ஙனமெல்லாங் கொடுமைப்படுத்து கின்றனர்? அறிவுடையோர் விரும்பாததைச் செய்தலின், அப்போலிகட்கு இம்மையில் இகழ்ச்சியே யல்லாமற் புகழ்ச்சியில்லை. இறைவன் திருவுள்ளத்திற்கு ஆகாததைச் செய்தலின் அவர்கட்கு மறுமையிலும் பாவமேயல்லாற் புண்ணியமும் இல்லை. இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலுந் தமக்கத் தீமையேதரும் இக்கொடுஞ் செயலைப் போலிச்சைவர் உடனேநீக்கி, அனைவரையுஞ் சாதி வேற்றுமை பாராமற் கோயிலினுட் போகவிட்டு, அறிவுடை யோர் நன்கு மதிப்பையும் இறைவனது அருளையும் பெறக்கடவராக!

இவர்கள் அவ்வாறு செய்யாதொழியின் நம் அருளாளரான ஆங்கில அரசரே அனைவருந் திருக்கோயிலினுட் புக விடைதரும்நாள் விரைவில்வரும். அப்போது இப்போலிச் சைவர்கள் தம்மால் ஆவதொன்றுமின்றிச் செயலற்று எல்லாராலும் இழிக்கப்பட்டு நிற்பர். பாருங்கள்! மலையாளத் திலுள்ள வைக்கத்தில் தாழ்ந்த சாதியாரைத் தெருவிற் செல்லவிடோமென்று அங்குள்ள போலி மேற்சாதியார் எவ்வளவு விடாப்பிடியாய் நின்றனர்! மலையாள அரசர் வாளா இருக்கும் வரையில், அப்போலி மேலோர் எவ்வளவு இறுமாப்புடன் அறிவுடையோர் சொல்லைக் கேளாமல் ஏழைவகுப்பினரைத் துரத்தித் தலைவிரித்தாடினர்! ஆனால், இப்போது மலையாள அரசை ஏற்ற அருள் அரசியர் தமது திருவுளமிரங்கித் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாருந் தமது நாட்டின் கண் உள்ள தெருக்களெல்லாவற்றிலுந் தடையின்றிச் செல்லலாம் என்று கட்டளை பிறப்பித்த பின்னர் அம்மேற் சாதிப் போலிகள் தம் செயல் அவிந்து இப்போது எவ்வளவு இழிக்கத்தக்க நிலையி லிருக்கின்றனர்! இத்தகைய நிலை வருதற்கு முன்னமே அவர்கள் தாமாகவே எல்லாரையுந் தாமிருக்குந் தெருக்களிற் செல்லவிட்டிருப்பர்களானால், அவர்களது நற்செயலை உலகம் எவ்வளவு புகழ்ந்து கொண்டாடியிருக்கும்! திருநெல்வேலியிலுள்ள சைவரும் பார்ப்பனரும் இப்போதே எல்லாவகுப்பினரையும் உயர்வு தாழ்வு கருதாது திருக்கோயில் களினுட் செல்லவிடுகுவ ராயின், அவர்களது அவ்விரக்கச் செயலை உலகம் மீக்கூறிக் கொண்டாடும். அவர்கள் அங்ஙனஞ் செய்யாது தமது கொடுஞ்செயலிற் காழ்ப்பேறி நிற்பராயின், ஆங்கில அரசினரே திருவுளமிரங்கி எல்லா வகுப்பினருங்கோயிலின் உட்செல்லக் கட்டளையிடும் போது அப்போலிச்சைவரும் பிறருந் தம்மாற் செய்யலாவ தின்றி இழிபுற்று எல்லாரானும் ஏளனஞ் செய்யப்பட்டு மாழ்கி நிற்பரென்க.

இனி, இச்சாதிவேற்றுமைக்கட்டுப்பாடுகளால் நம் தமிழ்மாதர்கள் ஆளாகி வருந் துன்பங்கள் மிகக் கொடியன வாயிருத்தலால், அவற்றை ஒழித்தற்கும் எல்லாரும விரைவில் முயலல் வேண்டும். ‘நமக்குப்படிப்பும் வேண்டாம், பணமும் வேண்டாம், அழகும் வேண்டாம், நல்லாசாதியானாய் மட்டும் இருந்தாற்போதும், அவன் ஏழையாயிருந்தாலுங் கல்வியில்லாத வனாயிருந்தாலுங் கிழவனாயிருந்தாலுங் குற்றமில்லை என்று சொல்லி அழகிய அறிவுள்ள நல்ல இளம்பெண்ணை ஒரு மடையனுக்காவது அல்லது ஒரு கிழவனுக்காவது கட்டி விடுகின்றனர்! ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் அறிவுண்டு, இன்ப துன்பங்கள் உண்டு, விருப்பு வெறுப்புக்கள் உண்டு, பசி காமங்கள் உண்டு என்பதை நம்மனோர் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கின்றார்களில்லை. மகளிரை அறிவும் உணர்வும் அற்ற இயந்திரங்களாகவே நினைக்கின்றனர். உள்ளநாள் உள்ளமட்டும் ஆடவர்தமக்குக் குற்றேவல்செய்து வயிறுகழுவி அவர்க்கு இன்பந்தந்து தாம் துன்பத்தில் வைகும் எளிய விலங்குகளாகவே மாதர்கள் நடத்தப்படுகின்றனர். இசையாதவனுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஓர் ஏழைச் சிறுமி அவனாற் படுந்துன்பங்களைப் பொறுக்கமாட்டாமல் அவனைவிட்டு நீங்குவளாயின், அவளுக்குச் சிறிதும் இரங்காமல் அவள்மேற் பழிகூறுவாரே எங்கும் உளர்! ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப் படுத்தப்பட்டவள் சில நாட்களில் அவன் இறந்துபோக அழுதகண்ணுஞ் சிந்திய மூக்குமாய் உயிரற்ற பிணம்போற் காலங்கழிக்கும்படி தன் வாழ்நாள் முழுதுங் கட்டாயப்படுத்தப் படுகின்றாள்; அவள் அக் கடுங்கட்டுப்பாட்டிற் சிறிது பிசகுவளாயினும் அவட்கு வரும் பழிச்சொல்லுந் துன்பமும் அளவிடப்படா! இவ்வாறு நம்பெண் மணிகளைத் துன்புறுத்தும் ஆடவர்கள் தாமாவது பிசகுபடாது நடக்கின்றார்களா? எனில், அதுவுமில்லை. ஒரு கெட்டவன் எத்தனைமுறை வேண்டுமானாலுந் தான் சாகுமட்டும் மகளிர் பலரை மணந்துகொள்ளலாம்; வேசிவீட்டிலேயே குடியாயிருக்கலாம்; தனக்குள்ள பொருளை யெல்லாங் குடிக்குங் கூத்துக்குஞ் சூதுக்கும் வம்புவழக்குக்கும் செலவழித்துவிட்டுத், தம் மனைவி மக்களைச் சோற்றுக்குந் துணிக்கும் அலைந்து திரியவிடலாம்; தான் எழுபது ஆண்டு ஆனாலும் பதினைந்தாண்டுள்ள ஒரு சிறுமியை மணந்து கொள்ளலாம். இவைகளைக் கேட்பாரில்லை. ஆனால், இவனுக்குப் பிணைக்கப்பட்ட ஏழைச்சிறுமியோ இக்கொடிய சாதிக்கிழவனை விட்டு விலகுவளாயின், அவள் உடனே கற்பொழுக்கத்தில் வழுவியவள் ஆய்விடுவளாம்! ஐயகோ! அவனுக்குத் தாலியறுத்த அவள் பிறகு வேறொருவனை மணந்து கொள்ளலாகாதாம்! அது சாதிக்குறைவாம்! பெண்மக்களை ஈ எறும்பு கொசுகுபோல் நசுக்கும் இத்தனை சாதிக் கொடுமைகள் ஓர்ஆலிலை மூக்குப்போலிருக்கும் இச்சிறிய தென்னாட்டி லன்றி, ஆலிலைபோற் பரந்த வேறெந்த நாட்டிலுங் காணப் படுவதில்லை. மற்றை நாடுகளில் உள்ள பெண்பாலார் ஆண்பாலாரோடொப்ப எல்லா உரிமைகளும் பெற்று இனிது வாழ்ந்துவருதலால், அவர்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அறிவிலும் அழகிலும் ஆண்மையிலும் பிற நலங்கிளிலுஞ் சிறந்து உலகிற் பயன் பட்டு வாழ்கின்றனர். துன்பத்தில் உழலும் நம் இந்துமாதர் களின் வயிற்றிற் பிறக்கும் பிள்கைளோ அறிவில்லா மடையராய் அழகில்லா முசுக்களாய் அவற்றிற்கேற்ற தீய தன்மையுந் தீய செயலுமுடையராய்த் துன்பவாழ்விற்பட்டு விரைவில் உயிர்மாளுகின்றனர்! இவ்வளாவுஞ் சாதி வேற்றுமையால் விளைந்த துவினையாகும்! ஒரு பெண்ணுக்கு ஏற்ற இளைஞன் எந்த மரபிற் பிறந்தவனா யிருந்தாலும், அவள் அவனை விரும்புவாளாயின் அவனுக்கே அவளை வாழ்க்கைப்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் மகளிர்க்குக் கற்பொழுக்கம் நிலைபெறும். ஏலாதவன் ஒருவனுக்குப் பிணைக்கப்பட்டவள் தனக்கேற்றவனைக் காண நெருங்கால் அவனை விரும்பாது இராள். இஃது எல்லா மக்களிடத்தும் மாற்றமுடியாத இயற்கையாக இறைவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றுந்துறந்த முனிவர்களும், மக்களினுஞ் சிறந்த தேவர்களும் இவ்வியற்கையைக் கடக்கமாட்டாது. தத்தளித்தனரென்றால், எளிய மக்கட் பிறப்பினரான ஏழை இளம்பெண்களைக் குற்றஞ் சொல்லுதல் அடுக்குமோ! ஓர் இளைஞன் தனக்கு இசையாதவளைத், தனக்குமேல் ஆண்டின் மூத்த ஒரு கிழவியை மணக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அவன் உள்ளம் எப்படிக் கொதிக்கும்! அவன் அவ்வேற்பாட்டுக்கு இணங்கி நடப்பனா? அப்படித்தானே ஏழை யிளம் பெண்கள் மனமும் இருக்கும்! ஆதலாற் பெண்மக்களை அவர் தமக்கு ஏறற ஆண்மக்களோடு மணஞ் செய்வித்தலே உடனே செயற்பாலது. சாதிக் கட்டுப்பாடுகளால் மகளிர் ஒழுக்கப் பிழைபடுதலும், அதனாற் பல தீங்குகள் விளைதலும் நாளுக்குநாட் பெருகுகின்றன! ஒரு சிறு சாதிக்குள்ளேயே நல்ல மணவாளன் கிடைத்த லரிது; ஒருவன் இருந்தாற் பெண்களைப் பெற்றோரிற் செல்வராய் உள்ளோர் போட்டி போட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான தொகைகளைக் கொடுத்து அவனை விலைக்கு வாங்கி விடுகின்றார்கள்! அங்ஙனம் விலைக்கு வாங்கப்பட்ட மணமகன் மேலுமேலுந் தன் மனைவியின் வழியே பொருள் பறிக்கும் பேரவாவுடையனாய்ப் போதலின், அவன்தன் மனையாளை இடையறாது துன்புறுத்துகின்றான். அதனால் அவ்விருவர்க் குள்ளும் உயர்ந்த காதலன்பு இல்லாதாகின்றது. கொழுநனும் மனைவியும் அன்பிலரானால் இல்வாழ்க்கை வெறும் பாழாகின்றது. இனிப் பொருள் கொடுத்து மணமகனைப் பெற வழி இலாதவரோ தமது சாதியைக் கடந்து தாண்ட மாட்டாராய் இசையாதவனுக்குங் கிழவனுக்கும் பெண்ணைக் கொடுத்துத் துன்புறுகின்றனர்! தன் கழுத்திற்குக் கயிறு தானேயிட்டுக் கொண்டதுபோல உண்மையில் இல்லாத சாதிவேற்றுமையினைத் தாமாகவே வகுத்துக்கொண்டு இவர்கள் இங்ஙனமெல்லாந் துன்புறு வதேன்! நல்லராய்த் தூயராய் இருப்பார் எக்குடிப் பிறந்தவராயிருப்பினும் அவர்க்கு மகளைக் கொடுத்தலும் அவர்பால் மகட்கோடலும் எல்லாருந் துணிந்து செய்குவ ராயின், மனைவிக்கேற்ற கணவனும், கணவர்கேற்ற மனைவியும் வாய்ப்பர். அதனால், இல்லற வாழ்க்கை உயர்ந்த தூய இன்பவாழ்க்கையாம். இப்போதுள்ள துன்பங்களும், மணமக்களை விலைகொடுத்து வாங்குதலும் ஒழியும். மகளிரது கற்பொழுக்கமும் எவருஞ் சொல்ல வேண்டாமலே இனிது நிலைபெறும்.

இனிப், பிறசாதியாரிலிருந்து தூயராய் வருவார் கடைப்பிடியாய்ச் செயற்பாலதும் ஒன்றுண்டு. இழிந்தகுடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்கு உரிய பெயராற்கூறித் தம்மைத்தாமே தாழ்வு படுத்திக் கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வழிதேடவேண்டுமே யல்லாமற், பிறர் தம்மை உயர்த்துவார் என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில், நம்மனோர் சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுகவிடும் பன்னாடையைப் போல்வர்; உயர்ந்தார் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல், அவர்பால் உள்ள உயர்ந்த நலங்கைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால், இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பையுரையாது, தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவுங் கூறி யொழுகுதல் வேண்டும்; தம்மோடு உடனிருந்து உணவுகொள்ளாதார் வீட்டில் தாமும் உணவெடுத்தல் ஆகாது, இம்முறையை விடாப்பிடியாய்க் கொண்டு ஒழுகினாற்றான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக்கூடும் இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனருஞ் சைவரும் உயர்ந்தனர். இம் முறையைக் கைப்பற்றித் தூயராவார் எல்லாருந் தாமும் ஒருமையுற்றுப், பிறர் எல்லாரையுந் தூயராக்கி ஒருமைப்படுத்திச், சாதிவேற்றுமைகளை அறவே யொழித்து எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய தந்தைக்கு இனிய புதல்வராய் இனிது வாழ்வாராக!

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்
– முற்றும் –

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!