
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலை அடிகள்
2. பழைய உபநிடதங்கள் இதிகாசங்களில் சாதி இல்லை
இனி, ஈசகேன கடம் முதலான பழைய பன்னீருப நிடதங்களிற் பல தோன்றிய காலத்தும் நால்வகைச் சாதி வகுப்பு மிகுதியாய்க் காணப்படாமல், பிராமணர் ராஜந்யர் என்னம் இரண்டு பிரிவு மட்டுமே அடுத்தடுத்துக் காணப் படுகின்றது. இவ்விரண்டு பிரிவும் அவ்வவர் தொழில் பற்றி வந்தனவே யல்லாமல், அவர் தமக்குள் எவ்வகையான வேறுபாடேனும் இருந்தமைபற்றி வந்தன அல்ல. வேள்வி வேட்டலும் நூல் ஓதுதலுமாகிய தொழில்களைச் செய்பவர் பிராமணர் என்றும், போர் புரிதலும் நாடு காத்தலுமாகிய தொழில்களைச் செய்பவர் ராஜ்ந்யர் அல்லது சத்திரியர் என்றும் தொழில்களையே செய்ய வேண்டு மென்னும் கட்டுப்பாடு சிறிதும் இருந்ததில்லை. துரோணரும் அவர் ஆசிரியர் அக்கினிவேசரும் அவர் புதல்வர் அசுவத்தாமரும் அவர் மைத்துனர் கிருபரும் போன்ற பிராமணர் போர்த்தொழில் பயின்றமையும், பிரியமேதர் சினி கார்க்கியர் திரையாருணி முதலான க்ஷத்திரியர் நூல்கள் ஓதிப் பிராமணரானமையும் (விஷ்ணு புராணம், 4, 19, 9, 10) மேற்கூறியதனை நாட்டுதற்குப் போது மான சான்றாம். இவை மட்டும் அல்ல. இவ் விருவகுப்பாரும் ஏதும் வேறுபாடின்றி ஒன்றுசேர்ந்து உணவருந்தியும், பெண் கொண்டு கொடுத்தும் ஒருமையாய் வாழ்ந்து வந்தார்கள். சர்யாத அரசன் புதல்வி சுகன்யையைச் சயவநர் மணந்தமை சதபதபிராமணத்திற் சொல்லப்பட்டது; ரதவீதி அரசன் புதல்வியைச் சியாவாசுவர் மணந்தமை இருக்குவேதத்தில் (5, 61) சொல்லப்பட்டது. விதர்ப்பன் என்னும் க்ஷத்திரியன் புதல்வியை அகத்தியர் மணந்துகொண்டார்; உலோமபாதன் புதல்வியை இருசிய சிருங்கர் மணந்துகொண்டார்; (மாபாரதம்); இங்ஙனமே ராஜந்யர் புதல்விகளைப் பிராமணர் மணந்துகொண்ட வரலாறுகள் இன்னும் எண்ணிறந்தன இருக்கின்றன. இனிப் பிராமணர் புதல்விகளை மற்றை வகுப்பாரான ராஜந்யர் மணந்துகொண்ட வரலாறுகளும் பல இருக்கின்றன. சுக்கிராச்சாரியார் என்னும் பிராமணர் தேவயாநீ என்னும் தம் புதல்வியை யயாதி என்னும் அரசனுக்குக் கொடுத்தார்; மற்றொரு பெண்ணை அனூகனுக்குக் கொடுத்தார் (மாபாரதம்). இழிகுடிப்பிறந்த அக்ஷமாலை என்னும் பெண்ணை வசிட்டரும் சாரங்கியை மந்தபாலருங் கூடினமை மனுமிருதி (9, 22) இற் சொல்லப்பட்டது.
இங்ஙனமே ஞானோபதேசங்களும் வேற்றுமையின்றிச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. விதேகமன்னனாகிய ஜனகன் சுவேதகேது அருணேயர், சோமசுஷ்மசாத்யயஞ்ஞி, யாஞ்ஞவல்கியர் முதலான பார்ப்பன முனிவர் பலர்க்கு ஞானோபதேசஞ் செய்தனன் என்று சதபதபிராமணம் (10, 6, 2, 1) புகல்கின்றது; காசிமன்னனாகிய அஜாதசத்துரு என்னும் அரசனால் பாலாகி என்னும் பிராமணரிஷி ஞானோபதேசஞ் செய்யப்பட்ட வரலாறு பழைய கௌஷீதகீ பிராமண உபநிடதத்திற் (4,1) காணப்படுகின்றது. பாஞ்சால மன்னனாகிய பிரவாகநஜைவலி என்பான் சுவேதகேது அருணேயர்க்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தினமை, சதபதபிராமணம் (14, 9, 1, 1), பிருகதாரணியக உபநிடதம் (6, 2,1), சாந்தோக்கிய உபநிடதம் (5, 3, 1) முதலிய வற்றில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது. இவ்வுண்மைகளால் இருக்குவேதத்திற்குப் பிற் பழைய உபநிடதங்கள் எழுந்த காலத்திலும் பிராமணர் க்ஷத்திரியர் என்னும் இரண்டு வகுப்பே இருந்தன வென்பதும், அவ்விரண்டு வகுப்புந் தொழில் பற்றி உண்டாயினவே யல்லாமற் பிற்காலத்திற்போலப் பிறப்பளவால் உண்டாயின வல்ல வென்பதும், அவ்விரு வகுப்பாரும் தமக்குள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களால் ஒருமித்து வாழ்ந்தனர் என்பதும் இனிது விளங்கும்.
இனிப் புராணங்கள் இதிகாசங்கள் பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இந் நால்வகைச் சாதியாரும் ஒரே தந்தைக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்து நால்வேறு தொழிலால் நால்வகைப்பட்டார்களே யல்லாமல் அவர்களுள்ளும் உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேற்றுமை ஏற்பட்டதில்லை. சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்பசூத்திரங்களிற் சொல்லப்பட் டிருக்கின்றது. வாயுபுராணத்தும் பின் வருமாறு சொல்லப்பட்டிருக் கின்றது. கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை; அதன்பின்னர் நான்முகன் அவ்வவர் தொழில்களுக்கு ஏற்ப மக்களுள் நான்கு வகுப்புகள் ஏற்படுத்தினான். பிறரை ஆளுதற்கேற்ற ஆண்மைச் செயலுடையவர்களைப் பிறரைக் காக்கும் பொருட்டு க்ஷத்திரியரென்று நியமித்தான். தந்நயம் பாராட்டாமற் பிறர் நலங் கருதி உண்மையே பேசி வேதத்தைச் செவ்வையாக ஓதினவரைப் பிராமணர் என வைத்தான். முன்னே வலியற்றவர்களாய் நிலத்தை உழுவதிலும் கைத்தொழில் புரிவதிலுந் தலையிட்டு உழவினால் உயிர் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றை எடுத்துத் தந்தவர்களை வைசியர் என வைத்தான். துப்புரவு செய்பவர்களாய் ஏவிய தொழில் மட்டுஞ் செய்யும் வலியற்றவர்களைச் சூத்திரர் என்று வைத்தான். இவ்வாயுபுராண உரையுள்ளும் சாதியானது தொழில்பற்றி வந்ததென்று சொல்லப்பட் டிருக்கின்றதே யல்லாமற், பிறப்பினால் வந்ததென்று சிறிதும் சொல்லப்படவில்லை. இனி, இந்நால்வகைச் சாதியாருள்ளும் எவர் உயர்ந்தோர் எவர் தாழ்ந்தோர் என்று வினாவுங்கால், ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியா ரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியா ரெனவும், மகாபாரதம் சாந்தி பருவத்தின் கண் (6925) உறுதிப்படுத் துரைக்கப் பட்டிருக்கின்றது. அப்பகுதி வருமாறு:
பாரத்துவாச முனிவர் பிருகு முனிவரை வினாவு கின்றார்:
நால்வகைச் சாதிவேற்றுமைக்கும் நிறந்தான் ஏதுவாகு மென்று சொன்னால் எல்லாச் சாதியுள்ளும் நிறங்கள் பல திறப்பட்டுத் தோன்றுகின்றன.
விருப்பும் வெகுளியும் அச்சமும் பேரவாவும் கலக்கமும் கவலையும் பசியும் களைப்பும் நம்மெல்லாரிடத்தும் மிகுந்து தோன்றுகின்றன; இங்ஙனமாயின் சாதிப்பகுப்பு எவ்வாறு பொருந்தும்?
வியர்வையும் சிறுநீரும் மலமும் சளியும் பித்தமும் இரத்தமும் எல்லார்க்கும் பொதுவாய் உள்ளன; எல்லாருடைய உடம்புகளும் அழிந்துபடுகின்றன; இங்ஙனமாயின் எதனைக் கொண்டு சாதி வகுக்கப்படும்?
அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய வகைகளும் எண்ணிறந்தனவா யிருக்கின்றன; இப் பகுப்புகள் பலவற்றுள்ளும் சாதிவகுப்புச் செய்தல் எங்ஙனம்?
இவற்றிற்குப் பிருகு மறுமொழி கூறுகின்றார்:
சாதிவேற்றுமை என்பது ஒன்றில்லை. உலகமுழுதும் நான்முகனாற் படைக்கப்பட்டமையால் தொடக்கத்தில் எங்கும் பிராமணர் மட்டுமே இருந்தனர். தொழில்களினாலேயே சாதிகள் உண்டாயின.
ஐம்பொறி யின்ப நுகர்ச்சியில் விழைவுள்ளவர்களும், கொடுமையும் எரிச்சலும் நிறைந்தவர்களும், தாம் வேண்டும் பொருள்களைப் பெறுவதில் ஊக்கம் வாய்ந்தவர்களும், தாம் செய்தற்குரிய உடமைகளை விட்டவர்களும், செந்நிறம் வாய்ந்தவர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் க்ஷத்திரியருடைய நிலைமையை அடைந்தார்கள்.
ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டவர் களும், மஞ்சள் நிறம் வாய்ந்தவர்களும், உழவுதொழிலாற் பிழைப்பவர்களும், தம்முடைய கடமைகளில் நில்லாதவர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் வைசியருடைய நிலையை அடைந்தார்கள்.
குறும்பு செய்வதிலும் பொய் கூறுவதிலும் விருப்பமுள்ளவர்ளும், பேரவாப் பிடியுண்டவர்களும், எல்லாவகை யானதொழில்களையும் செய்து அவற்றாற் பிழைப்பவர் களும், கரியநிறம் வாய்ந்தவர்களும், தூய்மை துப்புரவு இல்லாதவர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் சூத்திரருடைய நிலைமையை அடைந்தார்கள்.
இத்தகைய தொழில்களாற் பிரிக்கப்பட்டு இருபிறப் பாளரே சாதிகளாக வகுக்கப்பட்டனர். அறமும் வேள்விச் சடங்குகளும் இவர்களில் எவர்க்கும் எப்போதும் விலக்கப்பட்டனவல்ல.
ஐந்தாம் வேதமாகிய பாரதத்திலே பாரத்துவாசரும் பிருகுவும் உரையாடியதாகப் பெறப்பட்ட இந்தப் பகுதி யினாற் சாதிவகுப்பு ஒழுக்கத்தினால் வகுக்கப்பட்டதே யல்லாமற் பிறப்பினால் அன்றென்பது இனிது விளக்கப் பட்டிருக்கின்றது.
அக்காலங்களில், உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர். பிறப்பினால் இழிந்தவராயிருப்பினும், அவர் உண்மைபேசுதலிற் பிறழாதவராயின் அவரே பார்ப்பனராகப் பாராட்டப்படுவாராயினர். இது சாந்தோக்கிய உபநிடதத்திற் (4,4, 1-5) போந்த சத்தியகாமஜாபாலன் கதையினால் நன்குவிளங்கும்; அது வருமாறு:
ஜபாலா என்பவரின் மகனாகிய சத்தியகாமன் என்பான் தன் அன்னையை நோக்கி, ‘அம்மா, நான் பிரமசாரிய ஒழுக்கத்தை மேற்கொள்ள விரும்புகின்றேன். நான் எந்தக் குடும்பத்திற் குரியவன்?’ என்று வினவினான்.
அதற்கு அவள்: ‘குழந்தாய், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியை என்பதை யான் அறியேன். என் இளமைக்காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்குமிங்குமாய் இருக்கையில் நின்னைக் கருக்கொண்டேன். ஆதலால், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியையென்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா; உன் பெயரோ சத்தியகாமன். ஆகவே, நின்னைச் சத்தியகாம ஜாபாலன் என்று தெரிவித்துக்கொள் எனக் கூறினாள்.
அதன்பின் அவன் ஹாரிதுருமத கௌதமரிடம் போய், ‘ஐய நான், ஒரு பிரமசரியத்தவனாய்த் தங்களிடம் இருக்க விரும்புகின்றேன். அதனாலேதான் ஐய, யான் தங்கள்பால் வந்தேன்’ என்றான்:
“அவர் அவனைநோக்கி, ‘ஓ நண்பனே, நீ எந்தக் குடும்பத்திற்கு உரியை? என வினவினார். அதற்கு அவன், ஐயா, யான் எந்தக்குடிக்கு உரியேன் என்பதை அறியேன். யான் என் அன்னையைக் கேட்ட போது அவள், ‘எனது இளமைக் காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்கு மிங்குமாய் இருக்கையில் நின்னைக் கருக்கொண்டேன். அதனால் நீ எக்குடிக்கு உரியை என்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா, நின்பெயரோ சத்தியகாமன் என மறுமொழி தந்தாள். ஆகையால், ஐய, யான் சத்தியகாம ஜாபாலன் எனப்படுவேன்’ என்றான்.
அதன்பின் அவர் அவனை நோக்கிப், ‘பிராமணன் அல்லாதவன் இங்ஙனம் உண்மைபேசுந் தகுதியுடையவன் ஆகான். குழந்தாய், ஓமவிறகு கொண்டுவா, நீ உண்மை பேசுதலிற் பிறழாமையால், யான் நினக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்துவேன்’ என்றார்.
பழைய விழுமிய அறிவுநூலாகிய சாந்தோக்கிய உபநிடத்திற் போந்த இவ்வரிய கதையைக்கொண்டு, பிறப்பினால் எத்தகையவராயிருப்பினும் உண்மை கூறுதலில் வழுவாதவரோ பார்ப்பனராய் உயர்குடிப் பிறப்பினராய்ப் பாராட்டப்பட்டதனை அறிகின்றனம் அல்லமோ?
இன்னும், உயர்ந்த சாதியான் எவன் என்று ஆராய்ந்து முடிவு கட்டிய வஜ்ரசூசி உபநிடத உரை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதொன்றாய் இருத்தலின் அதனையும் இங்கே மொழிபெயர்த்துக் காட்டுவாம்:
அறியாமையைப் போழுவதும், அறிவிலாரை இழித்துத் தெய்வவுணர்ச்சி யுடையோனை உயர்த்துவதும் ஆகிய வஜ்ரசூசி என்னுங் கருவி ஈதெனத் தெரித்துரைக்க இப்போது புகுகின்றேன்.
பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் என நால்வகைச் சாதியினர் உளர். அவர்களுட் பிராமணரே மிகச் சிறந்தோராவரென்று வேதவுரைகளுக்குப் பொருத்தமாகவே மிருதிகளும் புகலுகின்றன.
ஆதலால் இஃது ஆராயற்பாலதா யிருக்கின்றது. பிராமணன் என்னுஞ் சொல்லால் நுவலப்படுவது யாது? அஃது ஓர் உயிரா? அல்லது அஃது ஓர் உடம்பா? அஃது ஒரு வகுப்பா? அல்லது அஃது ஒரு ஞானமா? (அறிவா?). அன்றி அஃது ஒரு கர்மமா? (வினையா?) அல்லது அஃது ஒரு தருமத்தை (அறத்தைப்) புரிவோனா?
முதலிற், பிராமணன் என்பது உயிரா? அன்று. கழிந்து போன பல உடம்புகளிலும், இனி வரக்கடவ பல உடம்புகளிலும் புகுந்தும் புகுவதாயும் வருவது ஓர் உயிரேயாக லானும், வினைக்கீடாகக் கிடைத்த பலதிற உடம்புகளிலிருந்து வரும் உயிர் ஒன்றேயாகலானும் உயிர் பிராமணன் ஆக மாட்டாது.
அற்றேற், பிராமணன் என்பது உடம்பா? அன்று. ஐவகைப் பொருள்களால் ஆக்கப்பட்ட உடம்பான சண்டாளன் ஈறாக எல்லா மாந்தர்க்கும் ஒரே தன்மைத்தாய் இருத்தலானும், முதுமையும் இறப்பும் அறமும் (தர்மமும்) மறமும் (பாவமும்) அவர்களெல்லார் மட்டும் பொதுமையில் நிகழ்தலானும், பார்ப்பன ரெல்லாரும் வெண்ணிறத் தினராயும் அரச ரெல்லாரும் செந்நிறத்தினராயும் வணிக ரெல்லாரும் மஞ்சள் நிறத்தினராயும் அடியோரெல்லாரும் கருநிறத் தினராயுமே இருப்பரென வரையறுத்த வேறுபாடு யாண்டும் இல்லாமை யானும், தன் றந்தை முதலாயினார் பிணத்தைச் சுடுகையில் ஒரு பார்ப்பனனைக் கொன்ற பழி புதல்வர் முதலாயினார்க்குச் சேருமாதலானும் உடம்பு பிராமணன் ஆகமாட்டாது.
இனிப், பிராமணன் என்பது ஒரு வகுப்பா? அன்று. மகருஷிகள் (பெரிய முனிவரர்) பலர் படைப்பின்கண் உள்ள மற்றை வகையினரிலிருந்துஞ் சாதியினரிலிருந்துந் தோன்றினர். ருஷியசிருங்கர் ஒரு மான்வயிற்றில் பிறந்தார்; கௌசிகர் குசைப்புல்லிற் பிறந்தார்; ஜாம்புகர் ஒரு நரிவயிற்றிற் பிறந்தார்; வால்மீகி ஒரு புற்றிலிருந்து உண்டானார்; வியாசர் ஒரு செம்படவன் மகள்வயிற்றிற் பிறந்தார்; கௌதமர் ஒருமுயலின் பிட்டத்திலிருந்து உண்டானார்; வசிட்டர் ஊர்வசி என்னுந் தாசிவயிற்றிற் பிறந்தார்; அகத்தியர் ஒரு கும்பத்தில் (குடத்தில்) உண்டானார்; இவ்வாறு யாங்கள் சொல்லக்கேட்டோம். இவர்களுட் சாதிக்குப் புறம்பானாருங்கூடப், பிரமஞானத்தைக் (கடவுளுணர்ச்சியை) அறிவுறுக்கும் ஆசிரியரில் முதற்கண் நின்றார்கள்; ஆதலால், ஒரு வகுப்பும் பிராமணனாக மாட்டாது.
அற்றேற், பிராமணனென்பது ஞானமா? (அறிவா?). அன்று. கடவுளுண்மையினை அறிவதில் நிரம்பத் தேர்ச்சி பெற்ற க்ஷத்திரியரும் மற்றையோரும் பலர் உளராகலின், ஞானம் பிராமணன் ஆகமாட்டாது.
அங்ஙனமாயிற், கர்மம் (வினை) பிராமணனா? அன்று. பிராரப்தம் (கழிந்தவினை), சஞ்சிதம் (எச்சவினை), ஆகாமியம் (ஏறும்வினை) என்னுங் கர்மங்கள் எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையவாய் இருத்தலானும், கர்மத்தினால் ஏவப் பட்டே எல்லாமாந்தர்களும், தத்தம் வினைகளைச் செய்தலானும் கர்மம் பிராமணனாக மாட்டாது.
அற்றேல், அறத்தைத் (தர்மத்தைச்) செய்பவன் பிராமணனா? அல்லன். பொன்னை வழங்கினோர் க்ஷத்திரி யோரிலும் மற்றையோரிலும் பலர் உளராகலின், அறத்தைச் செய்வோன் பிராமணன் ஆகான்.
அவ்வாறாயின் உண்மையிற் பிராமணன் என்போன் யாவன்? அவன் எவனாய் இருப்பினும், தன் உயிர்க்கு உயிராயிருக்கும் இறைவனை உணர்ந்தோனே, தன்னோடு ஒத்த இரண்டாவ தொரு பொருள் இல்லாததாய்ச் சாதியுஞ் செயல்களும் அற்றதாய் அறுவகை மாறுதல்களும் அறுவகைக் கறைகளாகிய குற்றங்களும் நீங்கியதாய் உண்மையும் அறிவும் இன்பமும் என்றுமுள்ள தன்மையும் உடையதாய்த் தன்னில் ஏதொரு மாறுதலும் இல்லதாய் எல்லாக் கற்பங்களுக்கும் அடிப்படையாய் எல்லாப் பொருள் களையும் ஊடுருவிக் கொண்டு இருப்பதாய் வான்வெளி போல் எல்லாப்பொருள் களின் உள்ளும்புறம்பும் நிறைந்து நிற்பதாய்ப் பகுக்கப்படாத இன்ப உருவினதாய் வழியளவையின் வைத்து அறியப்படாததாய் உயிரினால் நேரே உணரப் படுவதாய்த் தன்னுள் விளங்கும் பரமான்வை (முழுமுதற் பொருளை)த் தன் உள்ளங்கையின் நெல்லிக்கனி போல் நேராக உணர்ந்தோனே, தான் விழைந்ததைப் பெற்றமையால் உலகத்துப் பொருள்களையும் இன்பங்களையும் விழையும் குற்றங்கள் அற்றோனே, இருவினை யொப்பு முதலான உயர்ந்த தன்மைகள் வாய்ந்தோனே, மனஅசைவு பொறாமை உலகத்துப் பொருள்களில் அவா விருப்பு மயக்கங்களில் நீங்கினோனே, தற்பெருமையாலும் தற்செருக்காலும் தீண்டப்பெறாத உள்ளத்தோனே, மொத்த மாய் இவ்வெல்லா இயல்புகளும் அவற்றை யடைதற்குரிய வழிகளும் ஒருங்கு உடையோனே பிராமணன் ஆவன்.
வேதங்கள், மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களின் கருத்து இப்படித்தான் இருக்கின்றது. இவ்வாறன்றி ஒருவன் பிராமணனது நிலையை அடைதல் முடியாது. ஒருவன் தன்னுள்ளிருக்கும் பரமான்மாவைச் சச்சிதானந்த (உண்மை யறிவின்ப) உருவிற்றாக இரண்டற்ற பிரமமாக வைத்து நினைத்தல் வேண்டும். ஆம், தன்னுள்ளிருக்கும் பரமான்வைச் சச்சிதானந்த பிரமமாக வைத்தே நினைத்தல் வேண்டும். இத்தகையதுதான் இவ்வுபநிடதம்.
சாமவேதத்தின் பாலதாகிய இவ் வஜ்ரசூசி உபநிடதமானது பிறப்பளவினால் எவனும் உயர்ந்த சாதியான் ஆகமாட்டான் எனவும், புனிதத்தன்மையும் முழுமுதற்கடவுளை யுணர்ந்து அதனை வழிபடும் விழுமிய ஒழுக்கமுமாகிய செயற்கை வகையினாலேயே எக்குடிக் பிறந்தவனாயிருப்பினும் அவன் உயர்ந்த சாதியான் ஆகின்றான் எனவும் ஆராய்ந்து வரையறுத்து எல்லா நூல்களின் கருத்தும் அதுவேயென முடிந்த முடிபை வலியுறுத்திச் சொல்லுதலின் பிறப்பளவிற் சாதியுயர்வு கொள்ளுதல் வேதம் முதலாகிய எந்தநூலுக்கும் உடன்பாடு அன்றென்பது நன்குபெற்றாம்.



