
செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை
செந்தமிழ் நாடு
தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.
மாத மூன்று மழையுள்ள நாடு
வருட மூன்று விளைவுள்ள நாடு
வேத மூன்றும் பலாவுள்ள நாடு
விசேஷ மூன்றும் குலாவுள்ள நாடு
போத மூன்றும் நலம்செயும் நாடு
புவனம் மூன்றும் வலம் செயும் நாடு
நாத மூன்றுரு வான குற் றால
நாதர் ஆரிய நாடெங்கள் நாடே.
சூழ மேதி இறங்கும் துறையில்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினில் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையில் சாய
வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடும்
சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே.
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
எங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே.
மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவோ மிஃதை எமக்கில்லை ஈடே.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே-எங்கள் (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதியென
மேவிய ஆறு பல ஓடத் – திரு
மேனி செழித்த தமிழ் நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம் புறக் காக்கும் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவி மீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கடல் ஓரத்திலே-நின்று
நித்தம் தவம்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ் நாடு- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)


