செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை

பந்தடிப் பாட்டு

பொன் இலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை
வில்லிட மின்னி லங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப
எங்கணும் தென்னவன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந்த
டித்துமே தேவர்ஆர மார்பன்வாழ்க என்று பந்த டித்துமே.

பின்னு முன்னும் எங்கணும்பெ யர்ந்துவந்தெ
ழுந்துலாய் மின்னு மின் இளங்கொடி வியன்நிலத்தி ழிந்தெனத்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்றுபந்த டித்துமே
தேவர் ஆர மார்பன்வாழ்க என்றுபந்த டித்துமே.

துன்னிவந்து கைத்தலத்தி ருந்ததில்லை நீணிலம்
தன்னி னின்றும் அந்தரத்தெ ழுந்ததில்லை தானெனத்
தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்று பந்த டித்துமே
தேவர் ஆர மார்பன்வாழ்க என்றுபந்த டித்துமே.

வேறு

செங்கையில் வண்டு கலின் கலின்என்று
செயம் செயம் என்றாட – இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை

நின்றாடப் – புனை
பாடக முஞ்சிறு முஞ்சிறு பாதமும் அங்கொரு
பாவனை கொண்டாட – நய
நாடகம் ஆடிய தோகை மயிலென நன்நகர்
வீதியிலே -அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே.
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாட – குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட – இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை
திண்டாட – மலர்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து – பயின்றாளே.

இந்திரையோ இவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ – மன
முந்தியதோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி
வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்
பந்துகொண் – டாடினளே.

வேறு.

மாறாமல் இருநிலத்தில் அறம்வளர்க்கும் கையே
மனை அறத்தால் அறம்பெருக்கித் திறம்வளர்க்கும்
வீறாக நவநிதியும் விளையும் இந்தக் கையே [கையே
மேன்மேலும் பால்அமுதம் அளையும் இந்தக் கையே
ஆறாத சனங்கள் பசி ஆற்றும் இந்தக் கையே
அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றும் இந்தக்
பேறாக நன்நகரம் காக்கும் இந்தக் கையே [கையே
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்தக் கையே.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *