
செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை
ஊஞ்சல் பாட்டு
ஓரைவர் ஈரைம் பதின்மர்உடன் றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம் பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்
வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி ஆண்ட செருவில் கயற்புலியான்
மன்பதை காக் கும்கோமான் மன்னன் திறம்பாடி
மின்செய் இடை நுடங்க வாடாமோ ஊசல்
விறல்விற் பொறிபாடி யாடாமோ ஊசல்.
பொன்னிப் பாட்டு
உழவர் ஓதை மதகோதை யுடைநீர் ஓதை
தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்ததெல்லாம்
வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி.
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ வாடை அது
போர்த்துக்
கருங்க யற்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.
பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்க ளிசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகு அசைய நடந்ததெல்லா நின்
கணவன் நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி
வாழியவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழிதல் உயிர்ஒம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி.
பூப் பாட்டு
நாக நாறும் நரந்தை நிரந்தன
ஆவு மாரமு மோங்கின வெங்கணும்
சேவு மாவும் செறிந்தன கண்ணுதல்
பாக மாளுடை யாள்பலி முன்றிலே
செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நல்இல வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்குஇளம்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே.
மரவம் பாதிரி புன்னை மணங் கமழ்
குரவம் கோங்க மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டின மார்த்துடன் யாழ்செயும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே.
மழைப் பாட்டு
ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி – மலை
ஆழமின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே-கேணி
நீர்ப்படு சொரித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றைக்கிள்ளி ஏற்றடைக்குதே-மழை
தேடி யொரு கோடிவானம் பாடியாடுதே
போற்று திரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்ளுமே.
மேகமெல்லாம் ஒன்றாய்க்கூடி தான்கறுக்குதே- மெத்
மின்னல் மின்னி வாசவன்கை விலவெடுக்குதே!
நாகரிகப் பொதியமலைக் காற்றடிக்குதே – கொண்டல்
நாலுதிக்கும் கோடைஇடி தானிடிக்குதே
ஏகபோக மாமரத்தில் குயில்கள் கூவுதே- மழைக்
கேற்றமாம் சொரித்தவளை கூப்பிடுகுதே
ஆகையினால் எங்கள் திருக் கூடல் நகரில்
அந்தி நேரமெல்லாம் மழை வந்து பெய்யுமே.
வேறு
காவுக்கிறைவ னாகும் இந்திரன் ஏவல்பணி கொண்
டெழுந்த கார்
கடலிற்படிந்து திருவில் கோட்டி அடல் முக்கூடல்
அரியுமாய்
பூவிற்பொலியும் கலைமின்னோடு மேவிக் கமலத்
தயனுமாய்ப்
புனலைத்தரித்து வரையிலேறிக் கனலைத் தரித்த
சிவனுமாய்த்
தா விப்பறந்து பணிகள்பதுங்கக் கோவித்தெழுந்த
கருடனும்
தானேயாகி உலகுக்குரிமை ஊனேயாகி உயிருமாய்
கோவிற்பெரிய வடமலேந்திரன் மாவிற் கறுத்துப்
பொழிந்த பின்
குளிருகின்றது கோன்கழுத்தினில் வெளிறுகின்றது
வானமே.
குற்றாலத்திரிகூடமால்வரை உற்றே மேகம் பொழிந்த
நீர் கூடிப்பொருனை நாடித்திருமுக் கூடற்பதியை வலங்கொண்டே
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளி மீன்
மயிந்தி உளுவை பயிந்தி கூனி மணலி ஆரால் ஒராமீன்
பற்றா அசரை மசரை தெளிறு பருவிராலும் அணையிலே
பாயக்காலில் பாயக் குளத்தில் பாயவயலில் பாயவே
சிற்றாறென்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மனப் பெருமை
போல் சித்ரா நன்னதி பெருகிவார சித்ரம் பாரும் பள்ளிரே.
மருதப் பாட்டு
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்டயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மருகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக்கண்டது உரைத்திடும் சந்தம்
சீவலா மங்கைத் தென்கரை நாடே.
கறை பட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறை பட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிப்பட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைப்பட் டுள்ளதுகம்மியர் அம்மி
குழைப்பட்டுள்ளது வல்லியங் கொம்பு
மறைப்பட் டுள்ளது அரும்பதச் செய்யுள்
வளமை யாசூர் வடகரை நாடே.
மீதுயர்ந் திடு தெங்கிள நீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயைச்
சூதமொன்று சுமக்கக் கொடுக்கும்
சூதின் தன்கனி தூங்கும் பலாவில்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்கவே சுமந் தொண்குலை சாய்க்கும்
மாதுளங் கொம்பு வாழையைத் தாங்கும்
வளமை யாசூர் வடகரை நாடே.
பங்கயம் தலைநீட்டிக் குரம்பினிற்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியின் மஞ்சள் கழுத்தைத்
தடவிமெள் ளத்தொடும அந்த மஞ்சள்
அங்கசைநதிடும் காய்கதிர்ச் செந்நெல்
அளா வி நிற்கும்அச் செந்நெலுக் கப்பால்
செங்கரும் புக்குக் கைதரும் போல் வளர்
சீவலா மங்கைத் தென்கரை நாடே.
கொண்டல் கோபுர மண்டையிற் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்டபே ரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட் டோடும்
வெயில் வெய் யோன் பொன் எயில்வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே.
சங்க மேடைகள் எங்கும் உலாவும்
தரங்க மீன் பொன் அரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களி ராவும்
தெருக்கள் தோறும் மருக்களைத் தூவும்
பொங்கர் ஊடிளம் பைங்கிளி மேவும்.
பூவை மாடப் புறாவினம் கூவும்
வங்க வாருதி வெங்கடு உண்ட
மருதர் வாழ் மரு தூர் எங்கள் ஊரே.
வேறு.
வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரமேத்த
மாறாமல் ஆடுகொண்டு வருவேன் காண் ஆண்டே
தொழுது விடைகொண்டு நீர், சொன்னபடி ஆடு கொண்டு
பொழுது புகு முந்திவந்து புறப்படுவேன் ஆண்டே
குட்டிகளும் கொண்டுசிறு குடில்களையும் கொண்டாட்டுப்
பட்டிகளும் கொண்டின்று பகல்வருவேன் ஆண்டே
அழகர் திருவுளம்போல ஆண்டவற்கு மனதுவர
உழவு வயல் உள்ள தெல்லாம் உரம் வைப்பேன் ஆண்டே
வேறு.
பள்ளன் எழுந்து நிலைதரித்தான் நின்ற
பள்ளியர்கள் முகம் பார்த்துச் சிரித்தான்
மெள்ளப் புருவம் கொட்டி நெரித்தான் மாட்டை
மீண்டும் பூட்டி உழத் தரித்தான்
உழுத உழவைக் கண்டு களித்தான் பள்ளர்
உள்ள பேரை எல்லாம் விளித்தான்
தொழுது தெய்வக் கடன் கழித்தான் அந்த
தொழியில் விதைகள் எல்லாம் தெளித்தான்
முளைத்த முளைக்குத் தண்ணீர் அடைத்தான் கொல்லை
முழுதும் மறுநாள் வெட்டி விடுத்தான்
வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று
வளர நாளும் எரு விட்டான்
வளர்ந்த நாற்று முகம் கண்டான் சேரி
மள்ளர் கூட மது உண்டான்
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான்-பண்ணை
ஆண்டவற்குச் செய்தி விண்டான்
நடுகைப் பாட்டு.
படைகொண்டே வரு கரனையும் – பொரு
விடையம் சேர்திரி சிரனையும்
பண்டு முடித்த கணையினார்- குகன்
கண்டு பிடித்த துணையினார்
குடை குன்றாய்ப் பசுக்கு இடை நின்றார் – முக்
கூடல் அழகர் வயலுள்ளே
கொண்டாடிக் கொண்டு நடச்செய்தே- இது
கண்டோ மென்ன புதுமையே
தொடை என்றால் வாழைத் தண்டைப்போல் -விழிக்
கடை என்றால் கணை ரெண்டைப்போல் – தலைச்
சொருக்கென்றால் மேகத் தடுக்குப்போல்- பல்
நெருக்கென்றால் முல்லை அடுக்குப்போல்
இடை என்றால் வஞ்சிக் கொடியைப் போல் – வரு
நடை என்றால் இளம் பிடியைப் போல்
இருந்த சாயலுக் கிப்பால் குருந்தி
திருந்தினாளடி பள்ளிரே
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர்
கஞ்சனார்க் கொரு நஞ்சனார்
கடையும் அமுதை உடையும் திரையில்
காட்டி அண்டருக் கூட்டினார்
அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர்
அழகர் முக் கூடல் வயலுள்ளே
ஆடிப்பாடி நாற்று முடியை
அலைத்துக் குலைத்து நடச் செய்தே
வடிக்கு மதுவைக் குடிக்கு மாசி
மயக்கமும் பெருந் தியக்கமும்
வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த
வாட்டமும் முகக் கோட்டமும்
துடிக்கும் இதழைக் கடிக்கும் எயிறும்
சோர்ந்து விரிந்த கூந்தலும்
தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த
கிடையும் பாரும் பள்ளிரே
புங்கவர் தமிழ்ச் சங்க மேறிய
புலமைத் தலைமை அழகனார்
பொருனை ஆற்றணை பெருகுங் காற்புனல்
பொருத மருதூர் வயலுளே
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர்
அங்க லாய்க்கும் சோற்றுக்கும்
தாமதப்பட வே மதத் தொன்றைச்
சாட்டி மேட்டில் கூட்டமாய்
எங்கும் கார்ப்பொலி பொங்கவே அதற்
கெதிரச் சங்கிலி அதிரவே இலங்கும்
அணிகள் குலுங்கவே காதில்
இசையும் பணிகள் அசையவே
அங்கும் இங்கும் செங்கை நீட்டி
அருதியும் சின்ன மருதியும்
அரியாளும் கட்டைப் பெரியாளும் கும்மி
அடிப்பதைப் பாரும் பள்ளியரே.
பாலைப் பாட்டு
பொரிந்த காரை கரிந்த சூரை
புகைந்த வீரை எரிந்த வேல்
உரிந்த பாரை எரிந்த பாலை
உலர்ந்த இமை கலந்தவே
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி
ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி
பிளந்த கள்ளி பரந்தவே
வற்றல் வாகை வறந்த கூகை
மடிந்த தேறு பொடிந்த வேல்
முற்றல் ஈகை முளிந்த விண்டு
முதிர்ந்த புன்கு நிரைந்த வே
வேறு
வெடித்த கழை விசைதெறிப்பத் தரைமேல் முத்தம்
வீழ்ந்தன அத் தரைபுழுங்கி அழன்று மேன்மேல்
பொடித்த வியர்ப் புள்ளிகளே போலும் போலும்
போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும்.
முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட
முன்னொரு நாள் வாளபயன் முனிந்த போரில்
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட
வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும்
வேறு
மதக்கரி மருப்பிற மதம் புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம் பொழியு மாலோ
கதிர்ச் சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ
வார்முர சிருந்துவறி தேஅதிரு மாலோ
வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ
ஓர் மனையில் ஊமன்எழ ஒரிஅழு மாலோ
ஓம் எரி ஈமஎரி போலெரியு மாலோ
பூவிரியு மாலைகள் புலால் கமழு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
ஓவிய மெலாமுடல் வியர்ப்ப வரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ
படைப் பாட்டு
அலகில் கட்டழல் கனல் விரித்தலால்
அரிய பொற்பணிக் கலன் எறித்தலால்
இலகுகைப் படைக் கனல் விரித்தலால்
இருள் கரக்கவே ஒளி பரக்கவே.
அகில வெற்பு மின்று ஆனையானவோ
அடைய மாருதம் புரவியான வோ
முகிலனைத்துமத் தேர்களானவோ
மூரி வேலை போர் வீர ரானவோ
பார் சிறுத்தலிற் படை பெருத்தவோ
படை பெருத்தலில் பார் சிறுத்ததோ
நேர் செறுத்தவர்க் கரிது நிற்பிடம்
நெடு விசும்பலால் இடமு மில்லையே.
போர்ப் பாட்டு
எடும் எடும் எடும்என எடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே.
விடு விடு விடுபரி கரிக்குழாம்
விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே.
எறிகடலொடு கடல் கிடைத்த போல்
இருபடை களும் எதிர் கிடைக்கவே
மறிதிரை திரையொடு மலைத்த போல்
வருபரி யொடு பரி மலைக்கவே.
கனவரை யொடுவரை முனைத்த போல்
கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகில்
முகிலொடும் எதிர்த்தபோல்
இரதமும் இரதமும் எதிர்க்கவே.
பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினோ டரியினம் அடர்ப்ப போல்
அரசரும் அரசரும் அடர்ப்பவே.
விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினலொளி கனலிடை எறிக்கவே
வளைசிலை உருமென இடிக்கவே
வடிகணை யொடு மழை படைக்கவே.
குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
கரையென இருபுடை கிடக்கவே.
போர்க்களப் பாட்டு
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யண்ண
மென்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே உண்ணப்
பதும முக மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.
சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சித்
தள்ளுநர் போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புகழ்ச்சி காண்மின்.
சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து
தடங் குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள்
காந்தனுடன் கனல் அமளி அதன்மேல் வைகும்
கற்புடைமா தரைஒத்தல் காண்மின், காண்மின்.
தம் கணவருடன் தாமும் பேசா ரன்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவன் கிடந்தவிட மெங்கே என்றென்று
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.
வாய்மடித்துக் கிடந்த தலை மகனைநோக்கி
மணி அதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ
நீ மடித்துக் கிடந்த தெனப் புலவி கூர்ந்து
நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின்.
பொருதடக்கை வாளெங்கே மார்பம் எங்கே
போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோள் எங்கே எங்கே என்று
பயிர வியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.
வேறு
காதலற் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும் என் செஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்னது எவன்வாழி யோதோழீ.
நன்பகற் போதே நடுக்கு நோய் கைம்மிடும்
அன்பனைக் காணாது அலறும் என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலறும் என் நெஞ்சாயின்
மன்பதை சொன்னது எவன்வாழி யோதோழீ.
தஞ்சமோ தோழீ தலைவன் வரக் காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சாயின்
நெஞ்சிலார் சொன்னது எவன்வாழி யோதோழீ.
தமிழ்மொழிப் பாட்டு
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமர ராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமம் அது தமிழர் எனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலக மெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங் கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை உண்மை
வெறும் புகழ்ச்சி யில்லை.
ஊமை யராய்ச் செவிடர்களாய், குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்
சேமமுற வேண்டு மெனில் தெரு வெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்
மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்
மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதில் ஓர் மகிமை யில்லை
திறமான புலமை யெனில் வெளி நாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்க மரர் சிறப்புக் கண்டார்.


