
தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்
வசையும் இசையும்
தொண்டை நாட்டிலே உள்ள துறையூரிலே பிறந்த பொய்யாமொழிப் புலவர் தமிழை வளர்த்த மதுரையைப் பார்த்து வரப் புறப்பட்டார். பிற்காலத்துப் பாண்டிய அரசர்களில் ஒருவன் வாழ்ந்திருந்த காலம் அது, பாண்டியனைப் பார்த்து அளவளாவுவதோடு, அவனோடு இருந்த புலவர்களையும் கண்டு பழகி வரலாம் என்பது புலவருடைய எண்ணம். இடையிலே உள்ள பல ஊர்களைப் பார்த்துக் கொண்டு சோழ நாடு சென்று அங்குள்ள திருச்சிராப்பள்ளிக்குப் போய்ச் சிலநாள் தங்கி அப்பால் பாண்டி நாட்டுக்குச் சென்றார்.
புலவர் மதுரையை அடைந்தார். பழங்காலத்தில் தெய்வப் புலமை பெற்ற புலவர்கள் சங்கத்திலிருந்து தமிழ் ஆராய்ந்த அந்த நகரத்தில் அப்போது சிறந்த புலவர்கள் யாரும் இல்லை. பாண்டியனுடைய அவைக் களத்தில் புலவரென்று பெயர் வைத்துக் கொண்டு சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் போதிய புலமை இல்லை. பொறாமை, தம்நலம் ஆகிய இழிந்த பண்புகள் அவர்களிடம் இருந்தன. வெளியூர்களிலிருந்து யாரேனும் புலவர் வந்தால் அவர் பாண்டியனை அணுகுவதற்கு இடங்கொடுக்காமல் ஏதேனும் தடை செய்து வந்தனர். தக்க புலவர் யாரேனும் வந்தால் தம்முடைய மதிப்புக் குறைந்து விடுமே என்ற பயம் அவர்களிடம் இருந்தது.
பொய்யாமொழிப் புலவருக்கு அந்நகரத்தில் இருந்த புலவர்களின் இயல்பு தெரியாது. ஆகவே, ‘இந்த அவைக்களப் புலவர்களைக் கண்டு அவர்களைப் பழக்கம் செய்துகொண்டு பிறகு அரசனைக் காணலாம்’ என்று எண்ணி ஒரு புலவரை அணுகினார். அந்தப் புலவர் பொய்யாமொழியாரின் பேச்சி லிருந்தே அவர் சிறந்த புலவர் என்பதை அறிந்து. கொண்டார். அவரைப் பாண்டியனிடம் அணுக விட்டால் தம் நிலையும் தம்முடைய நண்பர்களின் நிலையும் என்ன ஆகுமோ என்று பயந்தார். ஆயினும் தம் கருத்தை வெளிப்படுத்தாமற் பேசினார். பாண்டிய மன்னனுடைய சமயமறிந்து பார்க்க வேண்டுமென்றும், அந்தச் சமயத்தைப் பிறகு தெரி விப்பதாகவும் சொன்னார்.
பொய்யாமொழிப் புலவர் திருக்கோயில் சென்று ஆலவாய்ப் பெருமானையும் மீனாட்சி யம்மையையும் தரிசித்துக் கொண்டு ஒரு செல்வர் வீட்டில் தங்கினார். தமிழ்ப் பெரும் புலவராகிய அவருக்கு எங்கே சென்றாலும் சிறப்பு உண்டா வதற்குத் தடை என்ன? அரசன் இருக்கவும் தம்மிடம் வந்ததைப் பெருமையாக எண்ணி அந்தச் செல்வர் புலவரைப் போற்றி உபசரித்தார். சில அமைச்சர்களோடு அவரைப் பழக்கம் செய்து வைத்தார்.
பாண்டிய அரசனைப் பார்க்க முடியவில்லை. இப்படிச் சில நாட்கள் கழிந்தன. அவைக்களப் புலவரே இதற்குக் காரணமென்பதைப் பொய்யா மொழியார் தெரிந்துகொண்டார். இனி இப்படியே இங்கிருந்து பயன் இல்லை. பாரரசனைவிடப் பாவரசன் சிறந்தவன் என்பதைக் காட்டிவிடவேண்டும். என்ற உறுதி பூண்டார்.
இன்று பார்க்கலாம், நாளைப் பார்க்கலாம் என்று அரண்மனையிலிருந்து செய்தி வந்துகொண்டிருந்ததே யொழிய, “வரலாம்” என்ற அழைப்பு வரவில்லை. அதனால் பொய்யாமொழியாருக்குச் சினம் மூண்டது. இந்தச் சம்பிரதாய மெல்லாம் எதற்கு? நானே அரசமை நேரிலே போய்ப் பார்க்கிறேன்” என்று புறப்பட்டுவிட்டார்.
“தகுதியில்லாதவர்களை அருகில் வைத்துக்கொண்டு நெடுந்தூரத்திலிருந்து பார்க்க வந்திருக்கும் நம்மைப் போன்றவர்களைப் புறக்கணிக்கிறான்” என்றகோபம் அவருக்கு. பாண்டியனிடம் சென்று அவன் இப்படிச் செய்வதைக் கண்டித்து ஒரு பாட்டின் மூலமாகச் சொல்லிவிடலாம் என்று துணிந்தார்.
அவர் புறப்பட்டபோது பாண்டியன் திருக் கோயிலுக்குப் போயிருக்கிறானென்ற செய்தி தெரிந் தது. “நல்ல வேளை! அரண்மனையில் காவல் கடந்து சென்று பார்க்க வேண்டும். ஆலயத்தில் எளிதில் பார்த்துவிடலாம்” என்று அவரும் சொக்கநாதப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்றார். அங்கே பாண்டியன் பரிவாரங்களுடன் சென்று கடவுளைத் தரிசனம் செய்தான். பொய்யாமொழியாருடன் சில அன்பர்கள் வந்திருந்தனர். வரும்போது அவர் களுடன் புலவர் பேசிக்கொண்டு வந்தார். இந்தப் பாண்டியன் தன்னுடைய குலம் சந்திரகுலம் என்று காட்டிவிட்டான். சிறந்த மலர்களாகிய தாமரைகள் முகம் குவிந்து மூடவும், அவற்றை விடத் தாழ்ந்த குமுதமலர்கள் மலரவும் செய்வது சந்திரனுடைய இயல்பு. இந்த அரசனும் சிறந்த புலவர்கள் தன்னைப் பார்க்கவும் இடம் கொடாமல் அவர்கள் மனத்தைப் புண்படுத்துகிறான். சாமானியமான புலவர்களை உடன் வைத்துக்கொண்டு பாராட்டுகிறான்” என்று சொன்னார்.
கோயிலுக்கு வந்தவுடன் தம் கருத்தைப் பாட்டாகச் சொல்லத் தொடங்கினார்.
குழற்கால் அரவிந்தம் கூம்பக்
குமுதம் பொதி அவிழ்ப்ப
நிழற்கால் மதியமன் றோநின்
திருக்குலம்
என்று பாதிப் பாட்டைப் பாடினார். ‘உள்ளே துளையை உடையதாய்க் குழல்போல இருக்கும் தண்டைப் பெற்ற தாமரை குவியவும், குமுத மலர் கட்ட விழ்ந்து மலரவும் தன் கதிரை வீசும் சந்திரன் அல்லவா உன்னுடைய திருக்குலம்? என்ற பொருளுடையது அந்தப் பகுதி. இதை உவமையாக வைத்து, பாண்டியன் தக்கவரை அவமதித்துத் தகுதியில்லாதவரைப் பாராட்டும் செயலை உபமேயமாகச் சொல்லிப் பாட்டை முடிப்பதாக எண்ணி யிருந்தார் புலவர்.
இந்தப் பாதிப் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கும்போதே பாண்டியன் தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்து விட்டான். அவன் பொய்யாமொழிப் புலவரையும் அவருடன் இருக்கும் சிலரையும் கண்டான். “மதியமன்றே நின் திருக்குலம்.” என்ற பகுதி அவன் காதில் விழுந்ததும், “நம் குலத்தைப் பற்றிய பாடலாக இருக்கிறதே!” என்று எண்ணிச் சற்றே நின்றான். ‘பாடலைச் சொல்பவரை அழைத்து வாருங்கள்’ என்றான்.
பொய்யாமொழிப் புலவர் பாண்டியன் முன் சென்றார்.
“தங்களைப் பார்த்தால் தமிழ்ப் புலவர் என்று தோன்றுகிறதே. தாங்கள் யார்?” என்று கேட் டான் மன்னன்.
“நான் பொய்யாமொழிப் புலவன். மன்னர் பிரானைப் பார்க்க இயலாமல் பல நாள் இவ்வூரில் இருக்கிறேன்” என்றார்.
பொய்யாமொழிப் புலவரைப் பற்றி முன்பே பாண்டியன் கேட்டிருக்கிறான். ஆகவே, “அடடா தாங்கள் பொய்யா மொழியா? எனக்குத் தாங்கள் வந்திருப்பது தெரியாதே!” என்றான்.
“எதற்கும் காலம் ஒன்று உண்டல்லவா?” என்றார் புலவர்.
“தாங்கள் இப்போது ஏதோ ஒரு பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே; அது என்ன பாட்டு?” என்று பாண்டியன் கேட்டான்.
பொய்யாமொழியுடன் வந்தவர்கள், ‘இவர் வசையாகப் பாடின பாட்டல்லவா? அதைப் பாண்டி யன் கேட்டால் என்ன நினைப்பானோ?’ என்று அஞ்சினார்கள்.
பாண்டியனுக்குத் தாம் வந்து காத்துக் கொண்டிருக்கும் செய்தியே தெரியாதென்பதைப் பொய்யா மொழியார் உணர்ந்து கொண்டார். பாண்டியன் தம் பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டதைக் கண்டார்.
பாண்டியன் மேலே பிழை இல்லை என்று தெளிந்தார். ஆதலால் அவன்மேல் வசையாகப் பாடுவது தவறு என்ற முடிவுக்கு வந்தார். என்றாலும் பாதிப் பாட்டைப் பாடியாகி விட்டதே. அந்தப் பாதியை மாத்திரம் பாண்டியனிடம் கூறினால் நன்றாக இருக்குமா?
புலவருடைய அறிவையும் புலமைத் திறத்தையும் என்ன என்று சொல்வது! அவர் அந்தப் பாதிப் பாட்டையே மேலும் பாடி முழுப் பாட்டாக்கி விட்டார். வசையாகப் பாட எண்ணி ஆரம்பித்தாலும், அதையே வைத்துக் கொண்டு பாண்டிய னுக்கு இசை உண்டாகும்படி பாடிவிட்டார். பாண்டியன், “என்ன பாட்டு?’ என்று கேட்கும்போதே மிக விரைவில் பாட்டை முடித்துச் சொல்லத் தொடங்கினார்.
“அரசர் பெருமான் இங்கே ஆலவாய்ப் பெருமானை வணங்கியதாகக் கேட்டு ஒரு பாடல் பாட எடுத்தேன். தம்மைக் காட்டிலும் உயர்ந்தவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது உலக இயல்பு. பாண்டிய குல முதல்வன் சந்திரன். அவனைத் தலை மேல் வைத்துக் கொண்டிருக்கிறார் சொக்கநாதர். அரசர்பிரானுடைய குல முதல்வனைத் தம் தலையாலே தாங்கும் ஒருவரைப் போய் அக் குலத்தில் உதித்தவர் வணங்கலாமா? வணங்காமுடிப் பாண்டியர் என்று சொல்வார்கள். குல முதல்வனும் குலத்தில் உதித்தோரும் சரிசமானமானவர்கள். ஆதலால் சொக்கநாதர் தலையின்மேல் பாண்டிய குல முதல்வன் இருப்பது அக்குலத்தோர் இருப்பதற்கு ஒப்பானதே. யார்க்கும் வணங்காத முடியையுடைய அரசர்பிரான் தம்மைத் தலையிலே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை வணங்கலாமா?- இப்படி ஒரு கற்பனை செய்தேன்.”
பொய்யாமொழிப் புலவர் முன்னே வசை பாட எடுத்தபோது கேட்ட அன்பர்கள் பிரமித்துப் போனார்கள். பாட்டு எப்படி வரப்போகிறதென்று ஆவலோடு நோக்கினார்கள்.
“பாட்டைச் சொல்லுங்கள்” என்று பாண்டியன் சொன்னான்.
புலவர் அந்தக் கணத்தில் முடித்த முழுப் பாட்டையும் சொன்னார்.
குழற்கால் அரவிந்தம் கூம்பக்
குமுதம் பொதி அவிழ்ப்ப
நிழற்கால் மதியம் அன் றோநின்
திருக்குலம்?-நீ அவன்றன்
அழற்கால் அவிர்சடை மீதே
இருந்தும், அவ் வந்திவண்ணன்
கழற்கால் வணங்குதி யோவணங்
காமுடிக் கைதவனே.
[நீ அந்தச் சிவபிரானுடைய நெருப்பின் நிறத்தை வெளிப்படுத்தி விளங்கும் சடையின் மீதே இருந்தும் அந்த அந்தியின் செவ்வண்ணத்தைப் பெற்றவனுடைய கழலையணிந்த பாதத்தை வணங்குவாயோ? வணங்கா முடியையுடைய பாண்டியனே!]
முன் பாதிப் பாட்டைக் கேட்டவர்கள் தம்மை யும் மறந்து, “ஆ ஆ !” என்று வாய் விட்டுக் கூவினர். வசைப் பாட்டு இசைப் பாட்டாக மாறிய அற்புதம் அவர்களை அப்படி ஆக்கியது.
மற்றவர்கள், “அழகான கற்பனை” என்றார்கள்.
பாண்டியன் “பாட்டு அழகாக இருக்கிறது. குழந்தையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறோம். அது அன்பினாலே. அந்தக் குழந்தை நம்மை வணங்குகிறது. அது மரபு” என்று சொல்லித் தன் அறிவையும் காட்டினான்
புலவரும் புரவலரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.



