தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்

செருக்கழிந்த புலவர்

சோழநாட்டிலே பிறந்து வளர்ந்த புலவர் அவர். தமிழ்ப் புலமையிற் சிறந்தவர். ஆயினும் இறுமாப்பு மிகுதியாக உள்ளவர். தம்முடைய புலமைத் திறத்துக்கு எதிரே யாரும் நிற்க முடியாமல் செய்யவேண்டும் என்ற கருத்துடையவர். சாமானியப் புலவர்களாக இருந்தால் கேள்வி கேட்டும், அவர்கள் பாட லிற் குற்றம் கண்டும் அவமானப்படுத்தும் இயல்புடையவர். நல்லவர்கள் அவரைக் கண்டால் பேசாமல் ஒதுங்கிவிடுவார்கள். சிறிய புலவர்கள் அஞ்சி விலகுவார்கள். சோழ நாடு முழுவதிலும் அவர் செருக்குள்ளவர் என்ற செய்தி தெரியாதவர் இல்லை.

அப்புலவர் பாண்டி நாட்டுக்குச் சென்று தம் புலமையை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத் தார். அங்குள்ள புலவர்களைத் தலைகுனியச் செய்து மகிழவேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டா யிற்று. மதுரையில் புலவர் பலர் இருப்பது அவருக்குத் தெரியும். இதுவரையில் அவர் அந்நகரத்துக்குச் சென்றதில்லை. பாண்டியனுடைய அவைக்களப் புலவர்களைக் கண்டு சோழன், சோழ நாடு, சோழ நாட்டுப் புலவர்கள் இவர்களின் பெருமையைச் சொல்லவும், தம் புலமையை வெளிப்படுத்தவும் விரும்பினார்.

மதுரைக்குப் போனார். பாண்டியனுடைய அவைக்களப் புலவர் இருக்குமிடம் சென்றார். அங்கே பல புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் சோழ நாட்டுப் புலவரை அன்புடன் வரவேற்று உபசரித் தனர். புலவர்கள் மனங்கலந்து வாழும் இடம் மதுரை. அங்குள்ள புலவர்களிடம் பொறாமை சிறிதும் இல்லை; பெருந்தன்மையே உருவாக இருப்பவர்கள் அவர்கள். ஆகவே சோழநாட்டிலிருந்து ஒரு புலவர் வந்திருக்கிறார் என்றால் அவர்களுக்கு உவகை உண்டாவது இயல்புதானே? சோழ நாட்டுச் செய்திகளை யெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார்கள்.

சோழ நாட்டுப் புலவர் பேசும்போதே அவர் பேச்சில் அகங்காரம் குமிழியிட்டது. பாண்டியன் அவைக்களப் புலவர்கள் அதைக் கவனித்தனர். சோழ நாட்டுப் புலவர், தாம் பல இடங்களுக்கும் சென்று கவிதை பாடிப் பிற புலவர்களை அடக்கி வென்று வந்த பிரதாபங்களை அடுக்கிக் கொண்டே போனார். சோழ நாட்டின் சிறப்புகளைச் சொல்ல மறந்தார்; சோழனைப் பற்றிப் பேச மறந்தார். தம்முடைய புகழையே கொட்டி அளந்தார்.

மதுரைப் புலவர்களில் தலைவராகிய ஒருவருக்கு இவரை எப்படியாவது தலைகுனியச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.’படித்தவனாம்! தமிழ்ப் புலவனாம்! சிறிதாவது பணிவு இருக்கிறதா? தமிழின் எல்லையைக் கண்டவர் யார்? இவன் அகத்தியரின் அவதாரமாகத் தன்னை நினைத்துக்கொண்டு பேசுகிறானே !’ என்று அவர்பால் அவமதிப்பே உண்டாயிற்று.

“அதெல்லாம் சரி, புலவரே! நாம் இப்போது ஏதாவது பாடல் சொல்லலாமே. உங்கள் சோழ மன்னனுடைய புகழை வைத்து ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்றார் புலவர் தலைவர்.

சோழநாட்டுப் புலவர் தக்க சமயம் வாய்த்த தென்று கருதிப் பாடலைச் சொல்ல ஆரம்பித்தார். சோழனுடைய வீரத்தைக் தெரிவிக்கும் பாடலாக ஒரு வெண்பாவைச் சொல்லலானார். “சோழன் மகா வீரன். போரில் புறங்கொடாது வெல்பவன் ஆகவே அவன் கவசம் அணியும் போது முதுகுக்குக் கவசம் அணிவதில்லை. யாருக்கும் முதுகு காட்டாத நிலையில் அதற்குப் பாதுகாப்பு எதற்கு?” பாட்டின் முதல் இரண்டடியைச் சொன்னார் புலவர்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக் கிடாண்கவசம்,

பின் இரண்டடியிலே இதற்குரிய காரணத் தைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தார். இரண் டடியைச் சொன்னவுடன் மதுரைப் புலவர் தலைவர் கைகாட்டினார். “புலவரே நிறுத்துங்கள்! இந்த வெண்பா யாருடைய புகழைச் சொல்வது?” என்று கேட்டார்.

“ஏன், இது கூடத் தெரியவில்லையா? எங்கள் சோழ மன்னனது புகழைத்தான் சொல்கிறது. அவன் புறமுதுகு காட்டாத பெரிய வீரன் என்பதை விளக்குகிறது” என்றார் சோழநாட்டார்.

“இந்த இரண்டடியில் அப்படி இல்லையே! உங்கள் சோழன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை என்பதுதானே இருக்கிறது?” என்று கேட்டார் புலவர் தலைவர்.

ஆம்; அதற்குக் காரணம் அவன் புறமுதுகு காட்டாத வீரம் அன்றோ? இந்த இரண்டடி யிலிருந்தேஅதை ஊகித்துக் கொள்ளலாமே, பாட்டு முழுவதும் சொல்வதற்கு முன்பே இந்தப் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறதே!”

“இல்லை, இல்லை; இந்த இரண்டடியாலே சோழன் புகழ் வெளிப்படவில்லை; சோழனுக்கு இகழ்ச்சியாகக் கூடப் பாட்டை முடிக்கலாம்.”

இப்படி மதுரைப் புலவர் சொன்னவுடன் சோழ நாட்டுப் புலவருக்குச் சினம் மூண்டது.

“பாட்டில் வெளிப்படையாகச் சோழனது பெருமை விளங்குகிறது. நீங்கள் காக்கை வெள்ளை என்பது போலப் பேசுகிறீர்களே!” என்றார்.

“இதே இரண்டடியை வைத்துக்கொண்டு, உங்கள் சோழ மன்னனை இகழ்ந்தும் எங்கள் பாண்டியனைப் புகழ்ந்தும் பின் இரண்டடிகள் சேர்த்துப் பாடலாம்.”

சோழ மண்டலப் புலவருக்கு ஆத்திரம் அதிகமாயிற்றே ஒழிய,விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. “எங்கே,பாடுங்கள் பார்க்கலாம்” என்று கோபத்தோடு சொன்னார்.

மதுரைப் புலவர் அமைதியாகப் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். ‘சோழன் முதுகுக்குக் கவசம் இடான்’ என்று சோழ தேசப் புலவர் சொன்ன செய்திக்கு உரிய காரணம் இன்னதென் பதைப் பின் இரண்டடியில் வைத்துப் பாடினார்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக்கு இடான் கவசம் துன்றும்
வெறியார் தொடைகமழும் துன் கைவேல்
எறியான் புறங்கொடுக்கின் என்று.

சோழன் ஏன் முதுகுக்குக்கவசம் இடுவதில்லை தெரியுமா? புறங் காட்டாத இயல்பு காரணம் அன்று.

சோழனோடு போர் செய்யும் ஆற்றல் பாண்டியனுக்குத் தான் உண்டு. அவனுடன் சோழன் போர் செய்தால் நிச்சயம் சோழன் புறமுதுகிட்டோடுவான். ஆனால் அவன் புறங்கொடுப்பதைக் கண்டவுடன் பாண்டியன் அவனை ஒன்றும் செய்யமாட்டான்; அவன் முதுகின் மேல் வேலை எறியமாட்டான். அவ்வளவு உதாரகுணமும் பெரு வீரமும் உடையவன் பாண்டியன். முதுகில் வேலைப் பாண்டியன் எறிய மாட்டான் என்ற உறுதி இருக்கும் போது சோழன் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தான் சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் அணிவதில்லை! இப்படியெல்லாம் பொருள் கூறும்படியாக அந்தப் பாட்டு அமைந்தது.

பாவம்! சோழ மண்டலப் புலவர் வாயடைத்துப் போனார். எது சோழனது வீரத்தை வெளிப் படுத்தும் என்று நினைத்தாரோ, அதையே வைத்து, அவனுடைய இழிவையும் பாண்டியனது உயர்வையும் காட்டும்படி மதுரைப் புலவர் பாடி விட்டார்.

புலவர் செருக்கழிந்து அறிவு பெற்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *