
தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்
மாற்றிய பாட்டு
மதுரையில் ஆட்சி புரிந்து வந்த பராக்கிரம பாண்டியன் என்னும் அரசன் தமிழ்ப் புலவர் களிடம் மிகவும் மதிப்பு வைத்து உபசாரம் செய் பவன். வேறு எத்தகைய அரசியல் வேலைகள் இருந்தாலும், தமிழ்ப் புலவர்கள் வரின் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்து, அவர்களுடன் உரையாடித் தமிழ்ச் சுவை தெரிந்து இன்புறுவதில் அளவற்ற ஆர்வம் பூண்டவன் அப் பாண்டியன் என்பது தமிழ் நாடு முழுவதும் பரவிய செய்தி. இதனால் அடுத்தடுத்து அப் பாண்டியனிடம் புலவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டுப் புலவர்களில் அவனிடம் சென்று பரிசு பெறாத புலவர்களே இல்லையென்று சொல்லலாம்.
ஒரு புலவர் பாண்டியனைப் பார்த்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தார். சார்வபௌமர் என்பது அவர் பெயர். பல பிரபுக்களைக் கண்டு சென்று பாடிப் பரிசு பெற்றவர் அவர். பராக்கிரம பாண்டியனிடம் செல்ல வேண்டும், செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் அவருக்கு இருந்து வந்தது.
வேறு புலவர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் பாண்டியனுடைய பெருமையையும் அவனிடம் தாங்கள் சென்று பெற்ற பரிசையும் எடுத்துச் சொல்வார்கள். அப்பொழுதெல்லாம், தாமும் பாண்டியனிடம் சென்று தம் புலமையைத் தெரிவித்துப் பரிசு பெற்றுவர வேண்டும் என்ற அவா சார்வபௌமருக்கு உண்டாயிற்று.
பலநாள் நினைத்த காரியம் ஒருநாள் கைகூடும் என்ற நிலை வந்தது. புலவர் மதுரையை நோக்கிப் புறப்பட்டார். பல காலமாகப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தே இருந்தமையால், அங்கே போனவுடன் இன்ன இன்ன நடக்கும் என்று கற்பனை செய்து கொண்டார். பாண்டியன் ஓடிவந்து உபசரிப்பா னென்றும், தம்முடைய கவிகளைக் கேட்டு இன்புற்றுப் பாராட்டு வானென்றும், பலவகைப் பரிசுகள் அங்கே கிடைக்கு மென்றும் அவர் கற்பனை விரிந்தது.
மதுரையை அடைந்தார் புலவர். அவர் வந்த வேளை நல்ல வேளை அன்று, பராக்கிரம பாண்டியன் பிறநாட்டுப் போர் விஷயமாகக் கவலையுற்று மந்திரிகளுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். இந்த ஆலோசனை பல நாட்களாக நடந்து கொண்டிருந்தது. புலவர் போன அன்றும் அவன் மந்திரா லோசனையில் ஈடுபட்டிருந்தான்.
புலவர் அரண்மனையை அடைந்ததும், அவரை இன்னாரென்று அறிந்து கொண்டு, அதிகாரி ஒருவர், அவரை ஓரிடத்தில் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். பாண்டிய மன்னனைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தோடு வந்த புலவர், “மன்னரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். “பார்க்கலாம். நீராடி உணவு கொண்டு இருங்கள். மன்னரைப் பார்க்கும் சமயம் தெரிந்து சொல்கிறேன். அப்பொழுது போய்க் காணலாம்” என்று அதிகாரி சொன்னார்.
புலவர் கட்டி யிருந்த மனக்கோட்டை தளர்ச்சி அடைந்தது. புலவர்களெல்லாம் பாண்டியனை வானளாவப் புகழ்ந்தார்களே! அப்படியே ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று சொன்னார்களே! இங்கே நடப்பது வேறாக அல்லவோ இருக்கிறது? என்று அவர் எண்ணினார். பார்க்கலாம்? என்று பொறுத்திருந்தார். அன்று முழுவதும் பாண்டிய மன்னனைப் பார்க்க முடியவில்லை. அதிகாரி, “இதோ பார்க்கலாம். மிகவும் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இரண்டாவது நாளும் புலவரால் பாண்டியனைக் காண முடியவில்லை.
புலவருடைய ஆர்வம் தளர்ந்தது; சிறிது கோபங் கூட வந்தது.
உண்மை என்னவென்றால், அதிகாரி பாண்டியனுக்குச் செய்தியையே தெரிவிக்கவில்லை. மிகவும் ரகசியமாக மந்திராலோசனை நடந்து வந்தமையால், அரசனைக் காண முடியாதென்று அவர் நினைத்தார். அன்றியும் அதிகாரிக்கு, மந்திராலோசனையை விடப் புலவரைப் பார்ப்பது பெரிதாகத் தோன்றவில்லை. புலவர் இங்கே சௌகரியமாக விருந்துண்டு கொண்டு இருக்கட்டுமே. அரசருக்கு எப்போது பார்க்க இயலுமோ, அப்போது போய்ப் பார்த்துப் பேசிக் கொள்ளலாம். இப்பொழுதே போய்ப் பார்க்க வேண்டும் என்ற அவசரம் எதற்கு? என்பது அவர் எண்ணம்.
புலவருக்கு உபசாரத்தில் குறைவில்லை; விருந்திலும் குறைவில்லை. ஆனால் அவர் வெறும் சோற்றுக்காகவா அங்கே வந்தார்? தமிழ்ச் சுவை தேரும் அரசனோடு அளவளாவ அல்லவா வந்தார்? இவ்வளவு காலம் இங்கே வராமல் இறைவனே தடுத்து விட்டான். புலவனைப் பார்க்க முடியாமல் அவ்வளவு தலைமையான வேலை என்ன இருக்கப் போகிறது? இனி, இங்கே நாம் காத்திருப்பது பேதைமைச் செயல், புறப்பட வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்தார்.
அதிகாரியிடம், “உம்முடைய பாண்டிய மன்னரைப் பார்க்கும் செவ்வி எனக்குக் கிடைக்கா தென்றே தோன்றுகிறது. அவர் தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாகப் போற்றுகிறவர் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இங்கே வந்த பிறகு எனக்கு உண்மை விளங்கி விட்டது. புலவனை மனிதனாக மதித்துப் பார்க்கக்கூட விரும்பாதவர் அவர் என்றே நான் நினைக்க வேண்டியிருக்கிறது. சரி, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்றார். அவருடைய பேச்சில் வெறுப்பும் கோபமும் தொனித்தன. அதிகாரி அப்போதுதான் தம் குற்றத்தை உணர்ந்தார். அரசனுக்குப் புலவர் வரவைத் தெரிவிக்காமல் நாள் கடத்தியதை எண்ணி நடுங்கினார்.
“புலவரேறே! மன்னர்பிரானை இன்று நீங்கள் அவசியம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த ஒருநாள் பொறுத்திருங்கள் ” என்று சொல்லி அதிகாரி, அரசனிடம் புலவர் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கச் சென்றார்.
“சார்வபௌமர் என்ற புலவர் வந்து மூன்று நாட்களாகக் காத்திருக்கிறார்” என்ற செய்தி பாண்டியன் காதில் விழுந்தது. தன் அவைக் களத்துக்கு அதுகாறும் வராத புலவர் அவர் என்பதை அவன் உணர்வான். ”அவரை வந்தவுடனே என்னிடம் அழைத்து வருவதற்கு என்ன?” என்று கேட்டான். “மன்னர்பிரான் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந் தமையால்………” என்று அதிகாரி சமாதானம் சொல்ல வந்தார். “ஆலோசனையைச் சிறிது நேரம் கழித்துச் செய்யலாம். புலவரைக் காத்திருக்க வைக்கலாமா?” என்று கோபத்துடன் கேட்டான் பாண்டியன்.
“சரி, இவ்வளவு நாள் காத்திருக்கும்படி செய்த குற்றத்திற்கு நான் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். புலவர் என்னை வந்து பார்ப்பது கிடக்கட்டும். நானே அவர் உள்ள இடத்துக்குப் போய்ப் பார்ப்பேன். தமிழுக்கு நான் செய்த அபசாரத்துக்கு இதுதான் பரிகாரம்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான் பாண்டியன்.
அங்கே, புலவர் இன்னும் அதிகாரி வந்து சேரவில்லையே என்று கோபத்துடன் காத்திருந்தார். இந்த மன்னனைத் தமிழ் நயம் தெரிந்தவன் என்று சொல்வதெல்லாம் புரட்டு என்று தம்முள்ளே கூறிக் கொண்டார். புலவருக்குக் கோபம் வந்தால் அது பாட்டாக உருக்கொள்ளும். சார்வபௌமரும் கோபத்தைப் பாட்டிலே காட்டத் தொடங்கினார். ‘இவன் தமிழ் நூலறிவில் அகத்தியன் என்று சொல்வதெல்லாம் அறியாமை; உண்மை அல்ல’ என்று சொல்ல ஆரம்பித்தார்.
எண்ணீர்மை நூலுக்கு அகத்தியன் ஆம்இவன்
என்பதெல்லாம்
வெண்ணீர்மை யன்றி விரகல்ல.
பாட்டு ஆரம்பமாகி விட்டது. அதற்கு முன்பே பாண்டியன் தன் இடத்திலிருந்து புறப்பட்டு விட்டான். பாட்டின் இரண்டடி முடிவதற்குள் அரசன் புலவரை நாடி வருகிறானென்பதை, அதிகாரி ஓடிவந்து சொன்னார். புலவருக்கு வியப்புண்டாயிற்று. “இவ்வளவு நாள் காக்க வைத்த அரசன் நேரே வருவதாவது! இதில் ஏதோ சூதிருக்கிறது’ என்று நினைத்தார். அதற்குள் அதிகாரி, அடியேன் பிழை செய்து விட்டேன். மன்னருக்குத் தங்கள் வரவை இதுவரையில் சொல்லவில்லை. இப்போதுதான் சொன்னேன். அரசர் மிகவும் கோபமாக இருக்கிறார். நீங்களே என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று புலவருடைய காலில் விழுந்தார்.
புலவருக்கு உண்மை விளங்கி விட்டது. தாம் காத்திருந்தது பாண்டியனுக்குத் துன்பத்தை விளைவித்திருக்கிற தென்பதை உணர்ந்தார். அவன் தம்மைப் பார்க்க வரும் இயல்பை எண்ணியபோது அவர் உடம்பு புளகம் போர்த்தது. அவர் மன்னனை எதிர்கொண்டழைக்கப் புறப்பட்டார்.
பாண்டியனும் புலவரும் சந்தித்தனர். “புலவர் பெருமானே, பிழை பொறுக்க வேண்டும் ” என்று அரசன் கூறினான். “நான் முதலில் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு மாற்றம் அடைந்தேன். என் கவியும் மாற்றம் அடைந்தது” என்றார் புலவர்.
“கவி மாற்றம் அடைந்ததா? அது என்ன?” என்று ஆவலோடு கேட்டான் அரசன்.
புலவர் தாம் தொடங்கிய பாட்டை முடித்து விட்டார், ஆரம்பித்தபோது இகழ்ச்சியாகப் பாட எண்ணியே ஆரம்பித்தார். பாட்டு முடிவதற்குள் புலவர் உண்மையை உணர்ந்து கொண்டார். இப்போது பாட்டைப் பாண்டியனுக்குரிய புகழைச் சொல்வதாக அமையும்படி பாடி முடித்து விட்டார்.
“அகத்தியன் என்று இவனைச் சொல்வது அறியாமை; உண்மை அன்று என்றல்லவா தொடங்கினார்? இப்போது, அந்த அகத்தியன் இவனுடைய கால் கழுவிய நீரைக் குடித்தல்லவா தமிழைக் கற்றான்? அப்படி இருக்க இவனை அகத்தியன் என்று சொல்லலாமா?” என்ற பொருள் தோன்றும்படி பாட்டை முடித்தார்.
எண்ணீர்மை நூலுக் ககத்திய னாம்இவன்
என்பதெல்லாம்
வெண்ணீர்மை அன்றி வீரகல்ல
விக்ரம மாறன் செஞ்சொற்
பண்ணீர்மை தேரும் பராக்ரம மாறன்
பதம்கழுவும்
தண்ணீர் குடித்தல்ல வோகும்பம் வந்தோன்
தமிழ்கற்றதே.
[எண்நீர்மை- மனத்தால் எண்ணிச் சுவைக்கும் இயல்பை யுடைய. வெண்ணீர்மை – பேதைமை. விரகு – உண்மை. விக்ரம் மாறன் – வெற்றியையுடைய பாண்டியன். கும்பம் வந்தோன்- குடத்திலே பிறந்த அகத்திய முனிவர்.]
பாண்டியன் பாட்டைக் கேட்டான்; பிரமித்துப் போனான். “நான் செய்த பிழைக்கு அகத்திய முனிவரல்லவா இகழ்ச்சி பெற்றார்?” என்றான்.
புலவர் உடனே, நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே! பழங்காலத்தில் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒருவனாகிய கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கதையை மன்னர்பிரான் அறிந்திருக்கலாமே. கடலானது அப் பாண்டிய மன்னனுடைய திருவடியை அலம்பியது. அப் பாண்டியனையே நெடியோன் என்று புலவர்கள் சிறப்பிப்பார்கள். அந்தக் கடல் நீரை அகத்தியர்
ஆசமனீயம் செய்தார் என்ற மன்னர் அறிந்திருக்கலாம். ஆகவே பாண்டிய மன்னன் பதங் கழுவும் தண்ணீரைக் கும்பமுனி குடித்தார் என்பது நான் புதிதாகச் சொல்லும் செய்தியல்லவே!” என்று விடை கூறினார்.
பாண்டியன் மேலே ஒன்றும் சொல்ல இயலாமல் அன்பும் வியப்பும் தோன்றப் புலவரைப் பார்த்தான்.



