தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை

2. தெருக்கூத்து தந்த தெய்வப் பிரசாதம்

”நீங்கள் முதல் முதல் எந்தப் பாட்டுப் பாடினீர்கள்? நீங்கள் கவிபாடத் தொடங்கியது எப்போது? எப்படி? கவிபாடுவதற்கு எப்படி ஆரம்பிக்கவேணும் ?”, “எந்த இலக்கண நூலைப் படித்தால் கவிபாடக் கற்றுக் கொள்ளலாம்?” என்பன போன்ற கேள்விகளைப் பல பேர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். இவற்றிற்கு இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்றபடி நானும் பலவிதமான பதில்களைச் சொல்லியிருக்கிறேன்.

சென்னை அரசாங்கம் ‘அரசவைக் கவிஞர் ‘ பதவியை உண்டாக்கி அந்தப் பதவிக்குத் தகுதியுடைய தமிழ்க் கவிஞன் யாரென்று ஆராய்ந்துகொண்டிருந்த சமயத்தில் எனக்குச் சில தமிழ்ப்புலவர்கள் வெவ்வேறு நோக்கத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒருவர், “அரசவைக் கவிஞனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அதற்குப் போட்டியிட எதைப்பற்றி கவிகள் எழுத வேண்டும்? அதை யாருக்கு அனுப்பி விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்?” என்று கேட்டிருந்தார். இந்தக் கேள்வியின் அடிப்படையும் முன்சொன்ன கேள்விகளின் காரணத்தைச் சேர்ந்தது தான்.

கவி பாடும் திறமை ஒருவனுக்கு எப்படி வருகிறது என்பதைப்பற்றி யாரும் எளிதாய்ச் சொல்லிவிட முடியாது. அதனால்தான் கவிபாடும் திறமை ஒரு தெய்வீக வரப் பிரசாதம் என்றும், அது கவிஞனுடைய உள்ளத்தில் இயற்கையாகவே அமைந்திருக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அது எப்படியானாலும் இந்த சக்தி ‘கவிஞன்’ என்று பேரெடுக்காதவர்களுக்குள்ளும் பல பேரிடத்தில் இருக்கிறதாக நம்புவதற்கு இடமிருக்கிறது. கவிகளை உண்டாக்குவதற்கு எந்த உணர்ச்சியும் சக்தியும் வேண்டுமோ அந்த உணர்ச்சியும் சக்தியும் ஓரளவாவது உள்ளவர்கள் தான் கவிதையை அனுபவிக்கவும் முடிகிறது. கவிதைகளை நன்றாக ரஸிக்கக் கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கவிஞன் எவ்வளவு உணர்ச்சியோடு கவிகளை இயற்றினானோ, எந்தெந்த கருத்தை, எந்தெந்த சொல்லால், எதற்காக அமைத்தானோ, அதைவிட அதிகமான உணர்ச்சியோடும், அதிகமான பொருள்கள் சொல்லக்கூடிய அறிவோடும் அனுபவித்து விளக்கவல்லவர்கள், கவிஞரல்லாதாரில் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கவிஞனுக்கு அவசியமான நுண்ணிய உணர்ச்சியுள்ளவர்கள். சமயசந்தர்ப்ப சூழ்நிலைகளால் கவிஞன் என்ற பெயரெடுக்க அவர்களில் பெரும்பாலோருக்கு வாய்ப்பில்லாமற் போய் விடுகிறது. ஆதலால் கவி பாடும் திறமை என்கின்ற வரப்பிரசாதம் ‘கவிஞன்’ என்று பேரெடுத்தவர்களுக்கு மட்டும் ஏகபோக உரிமையான தல்ல. உணர்ச்சி வேகத்தின் ஏற்றத் தாழ்வினால் கவிதைகளின் தரம் வேறுபடலாம். கவிதைக்கு வேண்டிய நுண்ணிய உணர்ச்சி, கவிஞனுக்கும், ரஸிகனுக்கும் பொதுவானதுதான்.

கவிதைக்கு ஊற்றுக்கண் உணர்ச்சிதான். உணர்ச்சியோடு இயற்றப்பட்டதாகி, அதே உணர்ச்சியைப் பிறரிடத்திலும் உண்டாக்கக்கூடிய சொல்லடுக்குதான் கவிதை. அந்த உணர்ச்சியில்லாமல் எவ்வளவு நல்ல வார்த்தைகளை, எவ்வளவு இலக்கணச் சுத்தம் பார்த்து அடுக்கினாலும் அது கவிதையாகாது. உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய சொல்லடுக்கு இலக்கணக்குறை உள்ளதானாலும் அது கவிதையாகும். உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பமுடியாத சொல்லடுக்கு எவ்வளவு இலக்கண நிறையுள்ளதானாலும் அது கவிதையாகாது. உணர்ச்சியூட்டும் சொற்களால் ஓசையை அளவுப்படுத்தி சொல்லத் தெரிந்தால் அதுதான் கவிதை.

ஒரு குறிப்பும் இல்லாமல், வெறும் உணர்ச்சியும் ஓசையும் மட்டும் தூண்டினதால் நான் என்னுடைய சிறு பிராயத்தில் கவி பாடிய ஒரு நிகழ்ச்சியை இங்கே சொல்லுகிறேன். இந்த நிகழ்ச்சி மிகவும் சிறியதானாலும், நான் எப்போது கவி பாட ஆரம்பித்தேன், எப்படிப் பாடினேன் என்றெல்லாம் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லுவது போல அமைகிறது. இந்த நிகழ்ச்சியை நினைத்து எங்கள் வீட்டில் அடிக்கடி பேசிக் கொண்டே நான் வளர்ந்ததனால், இது இன்னும் என் மனதில் இன்று நிகழ்ந்தது போல நினைவில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிதான் எனக்குக் ‘கவி பாடும் திறமை’ என்ற தெய்வப் பிரசாதமாக வந்ததென்று அதை மறவாமல் வாழ்த்தி வருகிறேன்.

எனக்கு நான்கு தமக்கைகள். முதல் இரண்டு தமக்கைகளும் மிகவும் சொற்ப படிப்புள்ளவர்கள். இன்னும் உயிரோடிருக்கிற என் கடைசி தமக்கை விருத்தாம்பாள் கொஞ்சம் படித்தவர். என் மூன்றாவது தமக்கையான பழநியம்மாள் தான் எங்கள் வீட்டில் நல்ல படிப்புள்ள பெண்.

பாட்டுப் பாடுவது, கோலம் போடுவது, பின்னல் வேலை, தையல் வேலை முதலியவற்றில் திறமையுள்ளவர். அவருடைய புத்தகங்களில் ‘இதைத் தொடுவோர் உதை படுவார்’ என்று எழுதுவார். பேச்சுக்களிலும் அடுக்குப் பதங்களாகவே பேசுவார். வீட்டில் சிறுவர்களோடு வழக்காட நேர்ந்தால் ‘அண்டையில் வந்தால் மண்டையில் போடுவேன்’ என்பதுபோலப் பேசுவார். நானும் அந்த தமக்கையோடு சேர்ந்து அடுக்கிப் பேச ஆசைப்படுவேன். அவர் பாடும்போது சேர்ந்து பாடமுயல்வேன். அந்த தமக்கையோடு எனக்கு வழக்கு வந்துவிட்டால் ‘பழநியக் காள் ‘, ‘கழநியக்காள்’ என்று ஏளனம் செய்வேன்.

நாமக்கல்லில் நாங்கள் வசிக்கிற வீதியில் மேற்குக் கோடியில் ஓர் முச்சந்தி, அங்கே மாரியம்மன் கோயிலும் ஒரு பிள்ளையார் கோயிலும் உண்டு. அந்த முச்சந்தி ஒரு சிறு மணல்வெளி போல இருக்கும், கூத்துகளும் பொம்மலாட்டங்களும் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் நடக்கும். மக்கள் முச்சந்தி மணல் வெளியில் உட்கார்ந்து இரவில் கூத்தும், ஆட்டமும் பார்ப்பது வழக்கம். எங்கள் வீடு அதற்கு வெகு பக்கம். வினாத் தெரிந்த நாளாக எனக்கு நாடகத்திலும் கூத்திலும் வெகு பிரியம்.

அந்தக் காலத்தில் வெறும் பொழுது போக்குக்காகவோ வேடிக்கைக்காகவோ என்று நாடகமோ, கூத்தோ நடக்காது. சிற்றின்ப உணர்ச்சிகளைத் தூண்டி விடக்கூடிய கதைகளை நடிக்கமாட்டார்கள். ராமாயணம், மகாபாரதம் இவற்றில் நல்லொழுக்கத்தையும் அறநெறிகளையும் கற்பிக்கிற பாகங்களும், கோவலன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, பிரகலாதன் கதை, முதலானவைகளும்தான் நடக்கும். கிராமங்களில் தெருக்கூத்தாகவும் பொம்மலாட்டங்களாகவும் நடத்தப்படுகிற கதைகள் முக்கியமாக அரிச்சந்திர நாடகமும், கோவலன் நாடகமும்தான். இப்போது நாம் அரிஜனங்கள் என்று சொல்லுகிற தாழ்ந்த வகுப்பார்கள்தான், அரிச்சந்திரன் கதையும் கோவலன் கதையும், தெருக் கூத்துக்களாக நடத்துவதில் பரம்பரையாக வெகு நல்ல பயிற்சியுள்ளவர்களாக விளங்கினார்கள். மிக எளிய சொற்களால் ஆகிய பாடல்களுடன் அவர்கள் நடிக்கும் அரிச்சந்திரன் கூத்தும், கோவலன் கூத்தும் மிகவும் வியக்கத் தகுந்தவை. அந்தக் காலத்தில் அவர்கள் நடித்துக் காட்டிய உணர்ச்சியை இப்போதுள்ள மிகச் சிறந்த நாடக மேடையிலும் காண்பது அரிது. தமிழ் நாட்டில் கிராம மக்களின் நல்லெண்ணங்களை வாழைபடி வாழையாக வளர்த்துப் பாவ புண்ணிய உணர்ச்சிகளைப் பாதுகாத்து வந்ததில் இந்தக் கூத்துகளுக்குப் பெரும் பங்கு உண்டென்றால் அது உண்மை. இப்போது நம்மிடையே பாவ புண்ணிய எண்ணங்கள் மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணமும், அப்படிப்பட்ட கதைகளின் காட்சிகளை இப்போது நாம் காண்பதில்லை என்பதுதான்.

எனக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் கோவலன் கதை தெருக்கூத்தாக தொடர்ந்து நடிக்கப்பட்டது. நான் என் தமக்கைகளுடன் நாள் தவறாமல் போவேன். மற்றவர்கள் தூங்கி விழுந்து கொண்டிருந்தாலும் நான் கண் கொட்டாமல் கூத்துப் பார்ப்பேன். கோவலன் கதை சிலப்பதிகாரத்தின் கதைதான். ஆனாலும் சிலப்பதிகாரத்திலுள்ள கதைக்கும், தெருக்கூத்தாக நடத்தப்படும் கதைக்கும். சில வேறுபாடுகள் உண்டு. பாமர மக்களிடையே தெய்வ பயத்தையும், நல்லொழுக்கத்தையும் வளர்ப்பதற்கென்றே நடிக்கப்படுகிற கூத்துகளானதால் அந்த நோக்கத்துக்கான சில மாறுதல்களைச் சேர்த்துத்தான் கதை நடத்தப்படும். முக்கியமான வேறுபாடுகள் இரண்டு. ஒன்று பாண்டியன் மரணம். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் கோவலனை அநியாயமாகக் கொன்றுவிட்ட குற்றத்தைக் கண்ணகி எடுத்துக்காட்டின உடனே அநீதி செய்துவிட்ட துக்கத்தால் பாண்டியன் மாரடைப்பு வந்து, தானே இறந்துபோகிறான். தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் பாண்டியனைத் தெய்வம் தண்டிப்பதாகக் காட்டுவதற்கு, காளிதேவி வந்து அவனை வதைப்பதாக நடிக்கப்படும்.

இன்னொன்று, சிலப்பதிகாரக் கதையில் மாதவி ஒரு வேசியாக நடந்துகொள்வதில்லை. வேசையர் குலத்தில் பிறந்தவளானாலும் மாதவி வேசித்தொழில் செய்தவளல்ல. கோவலனையே காதலித்து வாழ்ந்தாள். வினைவசத்தால் மாதவியும், கோவலனும் மனம் மாறுபட்டுப் பிரிந்து விடுகிறார்கள், தெருக்கூத்துகளில் மாதவியை வெறும் பணத்திற்காக நேசம் காட்டுகிற ஒரு விலைமகளாகவே காட்டப்படும். வேசையரின் உறவால் வரக்கூடிய கேடுகளைப் பாமரமக்களுக்குக் காட்டி எச்சரிக்க வேண்டு மென்ற நோக்கத்தினால் அப்படிக் காட்டப்படும்.

இப்படி மாதவியை விட்டுக் கோவலன் பிரிந்து போகிற காட்சி, ஒருநாள் தெருக்கூத்தில் நடந்து கொண்டிருந்தது. அதில் மாதவியான தாசி, கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் கோவலனிடத்திலிருந்த செல்வப் பொருள்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொள்ளுகிறாள். கோவலன் இடுப்பிலிருந்த தங்க அரை நாணை வாங்கிக்கொண்டு அவனுக்கு ஒரு நார்க் கயிறு தருகிறாள். அதுவும் போதாதென்று மாதவி கோவலனிடம் ஒரு கோவணத் துணியைக் கொடுத்து அவன் இடுப்பிலிருந்த பட்டாடையைக் கேட்கிறாள். கோவலன் அதற்கும் சம்மதித்து கோவணத்தை உடுத்துக்கொண்டு இடுப்புத் துணியையும் தந்துவிட்டுத் தெருவிற் போகிறான்.

அந்த சமயத்தில் வெகு உணர்ச்சியோடு ஒரு பாட்டு பாடப்படுகிறது. கோவலனுடைய வெகு பரிதாபகரமான அந்த சமயத்தில் பாடப்பட்ட அந்தப் பாட்டு கல்மனதையும் கரைத்துவிடும். அந்தப் பாட்டைக் கேட்ட காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது. அந்தப் பாட்டு என்னவெனில்:

“ஆத்திநாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்

கூத்தியாரை நம்பினோரின் குடியழிந்து போவதைப்பார்”

இந்தப் பாட்டைப் பின்பாட்டு, பக்கமேளத்துடன் வெகு அழுத்தமாகத் திருப்பித் திருப்பிப் பாடினார்கள். இந்தப் பாட்டு அப்படியே எனக்குப் பாடமாகிவிட்டது. அதற்குப் பிறகு சில காட்சிகள் அவ்வளவு வேகமுள்ளவைகளாக இல்லை. அதனால் கூட்டத்தில் பல பேர் பேசிக்கொண்டும், சில பேர் தூங்கிக்கொண்டும். இருந்தார்கள். அந்தச் சமயத்தில் கோமாளி வேடதாரி வந்து சபையில் பேசுகின்ற ஆரவாரத்தை அடக்கவும், தூங்குகிறவர்களை எழுப்பவும் சில வேடிக்கையான பாட்டுகளைத் திருப்பித் திருப்பிப் பாடினான் :

“கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே

குசலம் பேச வந்தீர்களா?

போட்டுக்கேக்க வந்தீர்களா? இங்கே

பழமை பேச வந்தீர்களா?

ஆட்டங்காண வந்தீர்களா?

காலை நீட்டித் தூங்க வந்தீர்களா?

தூங்குகிறவர்களையும் எழுப்பவேண்டுமென்று பாடப் படுகிற பாட்டானதால் இதை வெகு வேகத்தோடு உரத்த குரலில் பலமுறை பாடினார்கள். இந்தப் பாட்டின் பெரும் பகுதியும் உடனே எனக்குப் பாடமாகிவிட்டது. ஆட்டம் முடிந்தபின் வீட்டுக்கு வந்து தூக்கம் வருகிற வரைக்கும்,

‘ஆத்தி நாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்

கூத்தியாரை நம்பினோரின் குடியழிந்து போவதைப்பார்’

என்பதையும்,

‘கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே

குசலம் பேச வந்தீர்களா ?’

என்பதையும் பாடிக்கொண்டே யிருந்து தூங்கிவிட்டேன். மறுநாள் விடிந்து வெகு நேரம்வரை தூங்கிவிட்டேன். வீட்டுக்கு நான் செல்லக் குழந்தையானதால் என் தூக்கத்தை யாரும் கலைக்கவில்லை. தூக்கம் கலைந்து நானாகக் கண்விழித்தபோது ‘ஆத்தி நாரும் கோவணமாய்’ என்ற பாட்டுதான் என் நினைவின் முன்னால் வந்து நின்றது. உடனே அந்தப் பாட்டையும் ‘கூத்துப்பார்க்க வந்தீர்களா’ என்ற பாட்டுக்களையும் பாட ஆரம்பித்தேன். ஆனால் முந்தின இரவில் படுக்கும் போது பாடின மாதிரி பாட்டுக்கள் சரளமாக வரவில்லை. மறதியினால் இரண்டொரு இடங்களில் தடைபட்டு வந்தது. நினைத்து நினைத்துப் பார்த்தேன். நினைவுக்கு வரவில்லை. உடனே படுத்திருந்தபடியே பழநியக்காளைக் கூப்பிட்டேன். அவர் வந்தார். ஐயத்தை வினவினேன். அவர் சரிப்படுத்திவிட்டார். எழுந்து படுக்கையில் உட்கார்ந்தபடியே அந்தப் பாட்டுகளைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தேன்.

அங்கே வந்த என் தந்தை, “போதும், போடா ! ரொம்ப நேரமாகிவிட்டது. பல்லை விளக்கிக்கொண்டு பழயது சாப்பிடு போ. பாட்டெல்லாம் அப்புறம் பாடிக் கொள்ளலாம்” என்று எனக்குச் சொல்லிவிட்டு என் தமக்கையைப் பார்த்து எனக்குச் சோறு போடச் சொன்னார். தமக்கை போனார். நானும் எழுந்து பல் துலக்கப் போனேன்.

எங்கள் வீட்டுக்கு அப்போது சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் என் தமக்கை பழநியம்மாளுக்கு நாத்தி முறையுள்ள ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் என் தமக்கையும் சம வயதுள்ளவர்கள். ஒருவரை யொருவர் மிகவும் உரிமையுடன் கேலி செய்துகொண்டு சல்லாபிப்பார்கள். பலமான வாக்கு வாதங்களும் செய்வார்கள். எனக்குப் பழயசாதம் பரிமாறப்போன பழநியக்காள் சாப்பிட உட்காரும் இடம் குப்பையும் கூளமுமாக, அசுத்தமாக இருந்ததைக்கண்டு இரைந்தார். அந்த இடத்தில் முந்தின இரவு சமையலுக்காக நறுக்கின கறிகாய்களின் தோலும், காம்பும், வெங்காயம் உரித்த சருகுகளும் அப்படியே கிடந்தன. முந்தின இரவு கறிகாய்களை நறுக்கினது விருந்துக்கு வந்திருந்த அந்த நாத்தி. அந்த நாத்திப்பெண்ணின் பேரைச் சொல்லி என் தமக்கை அந்தப் பெண்ணை அங்கே கிடந்த குப்பைகளுக்காக குற்றம் சாட்டி, “காய்கறி அறிந்த பெண் பிள்ளை கையோடு அந்தக் குப்பையை வாரி எறிய வேண்டாமா?” என்று சத்தம் போட்டார். அதைக் கேட்டுவந்த நாத்தி, “காய்கறி அரிஞ்சவளேதான் வாரவேணுமா? நீயுந் தானே பக்கத்திலிருந்தாய். நீ வாரி யிருக்கக்கூடாதா?” என்றார். இருவருக்கும் வாக்குவாதம் வலுத்து ஏக இரைச்சல் போட்டுக்கொண்டார்கள். சண்டையிடுவதைப் போன்ற சத்தத்தைக் கேட்டு பல் விளக்கிக் கொண்டிருந்த நான், அரையும் குறையுமாக முகத்தைக் கழுவிக்கொண்டு அங்கே ஓடினேன். இவர்கள் ஒருவரோடொருவர் அப்படி இரைந்து கொள்வதை கேட்டு வீட்டிலிருந்த பல பேர் கூடி விட்டார்கள். அங்கே வந்த எங்கள் தாயார், “என்னடி யம்மா, விடிந்ததும் விடியாததுமாக இப்படிப் பேசிக் கொள்ளுகிறீர்கள் நாத்தனாரும், நாத்தியும்” என்றார். அதைக் கேட்ட உடனே என் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி மின்னல்போல் பாய்ந்தது.

அக்காளும் நாத்தியும் சச்சரவு பேசிக்கொள்வதை என் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தாலும் என் வாய் “ஆத்தி நாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்” என்ற பாட்டை முணகிக்கொண்டே இருந்தது. ‘ஆத்தி நாரும்’ என்பதை திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண் டிருந்த எனக்கு என் தாயார் ‘நாத்தினாரும் நாத்தியும் ‘ என்று சொன்னதின் ஓசை ஒரு பாட்டிற்கு அடி எடுத்துக்கொடுப்பதுபோல அமைந்தது. ‘ஆத்திநார், நாத்தினார் ‘ உடனே ஒரு பாட்டு உதித்துவிட்டது. ‘ஆத்திநாரும் கோவணமாய்’ என்ற பாட்டின் ஓசையை மனதில் வைத்துக்கொண்டு,

“நாத்தினாரும் நாத்தியுமாய் நடுவீட்டில் சண்டையிட்டார்

சோத்துக்காக வந்தேனம்மா சோறுங்காணோம் நீருங்காணோம்”

என்று நொடிப்பொழுதில் மனதில் பதங்களை அடுக்கிக் கொண்டு தர்க்கம் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் மத்தியிற்போய் நின்று கொண்டு தெருக்கூத்தில் நடந்தது போல் ஆடிக்கொண்டே பாடினேன். எல்லோரும் ஏக காலத்தில் சிரித்துவிட்டார்கள். என் தாயார் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டார்கள். அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் நான் மறுபடியும் – கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே குசலம் பேச வந்தீர்களா?’ என்ற பாட்டை நினைத்துக்கொண்டு என் தமக்கையைப் பார்த்து

“அக்கா !

“சாதம் போட வந்தீர்களா? இங்கே சண்டை போட வந்தீர்களா?”

என்று பாடிக்கொண்டே ஆடினேன். இதைக்கேட்ட எல்லோருக்கும் ஒரே சிரிப்பும் களிப்பும் வந்துவிட்டது. நான் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டே ஆடினேன். என் தாயாருக்கு அடக்கமுடியாத ஆனந்தம். “ஐயோ, சாமி! கண்ணுப்படப் போவுதுடா, போதும்” என்று என் ஆட்டத்தையும் பாட்டையும் நிறுத்தினார். அத்தோடு சண்டை சல்லாபமாகிவிட்டது. என் தாயாரே அந்த இடத்தைப் பெருக்கிவிட்டு, எனக்குப் பழய சோற்றைப் பரிமாறினார்கள்.

அந்த சமயத்தில் என் தந்தை அங்கில்லை. போலீஸ் கச்சேரிக்குப் போயிருந்தார். அவர் மத்தியானம் வீட்டுக்கு வந்தவுடன் முதல் சேதியாக என் தாயார் நான் பாட்டுப் பாடின விவரத்தைச் சொல்லி மகிழ்ந்தார்கள். தகப்பனார் வீட்டிற்கு வந்தபோது நான் பள்ளிக்கூடம் போயிருந்தேன். என் தந்தை சாப்பாட்டை முடித்துக்கொண்டு எனக்காகக் காத்திருந்தார். நான் பள்ளியிலிருந்து வந்ததும் என்னை என் தந்தை வெகு இனிமையாக வரவேற்று முதலில் சாப்பிட்டுவரச் சொன்னார். நான் போய் சாப்பிட்டுவிட்டு என் தந்தை இருந்த இடத்திற்கு வந்தேன். அதற்குள் அங்கே என் தாயாரும் மற்றவர்களும் கூடியிருந்தார்கள். நான் வந்ததும் என் தந்தை “காலையில் என்னமோ நீ கவி கட்டிப் பாடினாயாமே, அதைச் சொல்லு” என்றார். நான் உடனே வெகு மகிழ்ச்சியுடன்,

“நாத்தினாரும் நாத்தியுமாய் நடுவீட்டில் சண்டையிட்டார்

சோத்துக்காக வந்தேனம்மா, சோறும் காணோம் நீரும் காணோம்”

என்பதையும்,

“சாதம் போட வந்தீர்களா? இங்கே சண்டைபோட வந்தீர்களா “

என்பதையும் ஆடிக்கொண்டே பாடினேன். அதைக் கேட்டு என் தந்தை அடைந்த மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?

அப்போது என் தந்தை நாமக்கல் போலிஸ் கச்சேரியின் தலைவர். அந்த முறையில் அவர் தினந்தினம் நாள் தவறாமல் ஸ்டேஷன் ’டைரி’ என்ற தினசரிக் குறிப்புகளை எழுதவேண்டிய கடமைகளில் பழக்கமுள்ளவர். அதைப்போலவே வீட்டிலும் முக்கியமான நிகழ்ச்சி களை குறிப்பெழுதி வைப்பார். இந்த நிகழ்ச்சியையும், இந்தப் பாட்டுகளையும் அவர் எழுதி வைத்திருந்தார். மேலும் தொடர்ச்சியாக அடிக்கடி இதைப்பற்றி நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் பிற்காலத்திலும் பேசிப் பெருமையடைவார். அதனால் தான் நானும் இதை மறக்காமல் மனதில் வைத்திருக்க முடிந்தது.

கவி பாடும் சக்தி தெய்வப்பிரசாதமானால் அந்த தெய்வப் பிரசாதம் எனக்குத் தெருக்கூத்துப் பாட்டின் மூலமாக வந்ததென்று எண்ணி அதனை வாழ்த்துகின்றேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *