தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை

7. நிழல் சாயாத கோபுரம்

தமிழர்களின் நாகரிகத்தையும் கலைத்திறத்தையும் தெய்வ பக்தியையும் அறியச் செய்யும் அழியாச் சின்னங்களாக விளங்குவன தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களே! இக் காலத்திலுள்ளவைபோன்ற யந்திர பொறியியல் நுணுக்கங்கள் தெரியாத பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த ஆலய கோபுரங்களில் அமைந்துள்ள சிற்ப வேலையின் சிறப்புக்களும், சித்திர நுணுக்கங்களும் அயல்நாட்டு அறிஞர்களுக்கு விந்தையாகவே இருக்கின்றன,

அப்படித் தமிழ் நாட்டிலுள்ள பல கோபுரங்களுள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் கோபுரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. மற்ற எல்லாக் கோபுரங்களும் ஒன்றுக்கொன்று உயரத்திலும் பருமனிலும் வேறுபட்டாலும் வடிவத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை, அவற்றின் முன்புறமும் பின்புறமும் அள்ளைப்புறங்களை விட அகலமுள்ளனவாக இருக்கத் தஞ்சாவூர்க் கோபுரம்மட்டும் அடித்தளத்திலிருந்து நான்கு பக்கங்களும் ஒரே அளவுள்ள சதுரமாகவே உச்சியில் கூர்மையடைகின்றது. மற்றக் கோபுரங்களின் உச்சியிலுள்ள விமானங்களிலுள்ள கலசங்களும் மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது என்று ஒன்றுக்கு மேற்பட்டனவாகவே இருக்கத் தஞ்சாவூர்க் கோபுரம் ஒரே கலசமுள்ளதாக இருக்கிறது. அதன் உச்சியிலுள்ள விமானமும் கோபுரத்தின் உச்சிச் சதுரத்துக்கு உள்ளடங்கினதாக உள்ளது.

இந்தத் தஞ்சாவூர்க் கோபுரத்தை ‘நிழல் சாயாக் கோபுரம்’ என்று சொல்வதை எல்லாரும் கேட்டிருக்கிறோம். என் இளம்பருவத்தில் பலமுறைக் கேட்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த ‘நிழல் சாயாக் கோபுர’த்தை நேரிற் கண்டு மகிழும் வாய்ப்பு நெடுநாள் எனக்குக் கிடைக்கவில்லை. 1908-ஆம் ஆண்டில் நான் திருச்சிராப்பள்ளியில் எஸ். பி. ஜி. காலேஜில் எப். ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். (இப்போது அது செயின்ட் ஹீபர்ஸ் ஹைஸ்கூலாக இருக்கிறது.) அப்போது ஒரு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நானும் மூன்று பள்ளித்-தோழர்களும் நிழல் சாயாக் கோபுரத்தின் அதிசயத்தைப் பார்க்கத் தஞ்சாவூருக்குப் போனோம்.

வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குத் திருச்சி சந்திப்பிலிருந்து புறப்படுகிற ரெயில் வண்டியில் நாங்கள் நால்வரும் சென்று சுமார் எட்டு மணிக்கு எங்கள் உறவினர் ஒருவர் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டுக்கார உறவினர் பெரிய சிவபக்தர். ஒவ்வொரு நாளும் ஒரு வேளை யாவது பிரகதீசுவரர் ஆலயத்திற்குப் போவது அவருடைய வழக்கம். மற்ற நாட்களில் தவறிவிட்டாலும் வெள்ளிக் கிழமைகளில் கோவிலுக்குப் போய்வரத் தவறமாட்டார். நாங்கள் அவர் வீட்டுக்குப் போன சமயம் அவர் கோயிலுக்குப் புறப்படுகிற நேரம். இனிய முகம் இன்சொற்களுமாக எங்களை வெகு அன்போடு வரவேற்றார். குசல விசாரிப்புகள் முடிந்ததும் வீட்டுக்குள் சென்று எங்களுக்கு விருந்து சமைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு எங்களிடம் வந்து, “கோயிலுக்குப் போய் வரலாமா?” என்றார். நாங்கள் வெகு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டோம். எங்களுடைய சட்டைகளைக் களைந்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டோம். வீட்டுக்காரர் எங்களுக்காகத் திருநீறும், தண்ணீரும் கொண்டு வந்து வைத்தார். அவருடைய குறிப்பை உணர்ந்து நான் விபூதியைக் குழைத்துச் சைவமுறைப்படி பட்டை பட்டை யாக நெற்றியிலும் கைகளிலும் உடம்பிலும் அணிந்து கொண்டேன். என்னுடன் வந்த மூவருள் ஒருவன் கிறிஸ்துவன். அவன் விபூதியை அணியத் தயங்கினான். அவனும் அணிந்து கொள்ள வேண்டுமென்று சமிக்கை செய்தேன். என்னிடத் தில்மிகவும் பிரியமுள்ள அந்த அந்தோணியும் தயக்கம்விட்டுத் திருநீறு தரித்துக்கொண்டதைச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் அவன் விபூதி அணிவதை அறியாதவனாதலால் என்னுடைய விருப்பத்திற்கிணங்கித் திரு நீற்றை அளவுக்கு மீறி அள்ளிக்கொண்டு சேறு குழைப்பது போலக் குழப்பி நெற்றியிலும் உடம்பிலும் தாறுமாறாகப் பூசிக்கொண்டு ஒரு விகட வேடமாக விளங்கினான்.

என் உறவினரான ஸ்ரீ கிருஷ்ணசாமி பிள்ளை ஒரு மராமத்து இலாகா மேற்பார்வையாளர். அவருடைய சேவகன் இடதுகையில் தேங்காய், பழம் முதலியவைகள் அடங்கிய தாம்பாளமும், வலது கையில் ஒரு தூக்கு விளக்கும் எடுத்துக்கொண்டுப் போக, மற்றவர்கள் பின்னாற்சென்று ஆலயத்தை அடைந்தோம். அந்தக் காலத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கோயிலைப் பற்றிய பராமரிப்புகளும் மிகவும் குறைவு. அதனால் கோயில் முழுதும் ஒரே இருட்டு. அங்கும் இங்கும் ஆக இரண்டொரு மங்கலான விளக்குகள் மினுக்கிக் கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட அந்தகாரத்திலும் கோபுரத்தின் பெருமை கண்ணைக் கவர்ந்தது. ஆண்டவனை வழிபட வந்தோம் என்பதை முற்றிலும் மறந்து அங்கங்கே நின்று நின்று நின்று கோபுரத்தைப் பார்த்து, நிழல் சாயாமல் இருப்பதற்கு அதில் என்ன அதிசய அமைப்பு இருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு நடந்தேன்.

கிருஷ்ணசாமி பிள்ளையைப் பின்பற்றி மூன்று முறை வலம்வந்து, ஆலயத்துள் சென்று நைவேத்தியம் தந்து தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். திரும்பும் போது சிவ சந்நிதானத்துக்கு முன்னால் நந்தி அமர்ந்திருக்கும் மேடைமீது ஏறி அந்த இருட்டிலும் அந்த பெருவிடையை மும்முறை வலம் சுற்றினோம். ஆலயத்தின் பெருமையையும், அந்த அற்புதச் சிற்பமாகிய பெரிய விடையின் சிறப்பையும் கிருஷ்ணசாமி பிள்ளை எங்களுக்குச் சொல்லி அந்தப் பெரிய விடையினால் தான் அங்குள்ள சிவபெருமானுக்குப் ‘பெரு விடையார் ‘ என்ற பெயர் வந்தது என்றும் சொன்னார். அத்துடன் அந்த ஆலயத்தைக் கட்டிவைத்த சோழ மன்னரைப்பற்றிய கர்ண பரம்பரையான கதைகளையும், அக்கோயிலைப் பிற்காலத்தில் பரிபாலித்த மராட்டிய மன்னர்களின் பக்தியையும், அவர்களுக்குப் பிறகு அந்த ஆலயம் கவனிப்பதற்கு நாதனற்றுப் போய்விட்டதையும் அவர் சொல்லச் சொல்ல நாங்கள் கேட்டுக்கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்த பின்னும் உணவருந்த உட்காருகிற வரைக்கும் கோயிலைப்பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது நான், ”இந்தக் கோபுரத்தை ‘நிழல் சாயாக் கோபுரம்’ என்று சொல்லுகிறார்களே, அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆனால் ‘அது எப்படி’ என்பதைப்பற்றிய விவரம் எனக்குத் தெரியவில்லை” என்றார்.

சாப்பாடு முடிந்த பிறகு படுத்துக்கொண்டோம். எனக்கு வெகு நேரம் வரையில் தூக்கமே வரவில்லை. அவ்வளவு உயரமான கோபுரம் எப்படி நிழலில்லாமல் இருக்க முடியும் என்பதையே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் கிருஷ்ணசாமிபிள்ளை சொன்னதிலிருந்து அந்தக் கோபுரத்துக்கு நிழலே விழாது என்று நான் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ச்சி அடைந்தது. எதற்கும் விடிந்த பிறகு கோயிலுக்குப் போய்ப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று சமாதானம் செய்துகொண்டு தூங்கி விட்டேன்.

காலை ஆகாரம் உண்டபின் கிருஷ்ணசாமி பிள்ளை உத்தியோக அலுவலாகப் பொய்விட்டார். நானும் என் தோழர்களும் நேரே கோயிலுக்குச் சென்றோம். அப்போது மணி எட்டரை இருக்கும். சூரியன் பிரகாசித்துக்கொண் டிருந்தான். நாங்கள் கோபுரத்தின் மேற்குப் பக்கத்துக்கு விரைந்து சென்று அங்கே கோபுரத்தின் நிழல் இல்லாம லிருக்கிறதா என்று பார்த்தோம். ஆ! என்ன ஏமாற்றம்! அங்கே கோபுரத்தின் நிழல் இருக்கத்தான் இருந்தது. அந்த ஆலயத்தின் மூலை முடுக்குகளை யெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு பதினொரு மணிவரைக்கும் இருந்தோம். சூரியனுடைய ஒளி அதிகரிக்க அதிகரிக்க, கோபுரத்தின்நிழலும் நன்றாகத்தான் தெரிந்தது. காலை நிழல் மேற்குப் பக்கத்தில் விழுந்தால் மாலை நிழல் கிழக்குப் பக்கத்தில் விழப்போகிறது. இதை ‘நிழல் சாயாக் கோபுரம்’ என்று சொல்லுவானேன்? நம் நாட்டில் உலவுகின்ற எத்தனையோ மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்று நினைத்தேன். ’நிழல் சாயாக் கோபுரம்’ என்ற பேச்சில் எனக்கு இருந்த மதிப்பு அப்போதே நீங்கிவிட்டது. அன்று பிற்பகலும் மறு நாளும் தஞ்சாவூரில் பார்க்கத்தகுந்த இடங்களைப் பார்த்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சையைவிட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு வந்துவிட்டோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ‘நிழல் சாயாக் கோபுர’மும் அதைப் பார்க்கப் போனதும் என் மனதிலிருந்து மறைந்து விட்டன.

அடுத்த ஆண்டு நான் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் விடுதியில் இருந்துகொண்டு எப். ஏ. வகுப்பின் இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த விடுதிக்குச் சுப்பிரமணிய ஐயர் என்ற ஆசிரியர் காப்பாளராக (வார்டன்) இருந்தார். அவர் பூகோள சாத்திரத்தில் நிபுணர். வெகு நல்லவர். மாணவர்களுடன் தோழனைப்போல் கொஞ்சிக் குலாவிப் பழகுவார். ஒருநாள் அவரும், பதினைந்து மாணவர்களும் ஸ்ரீரங்கத்துக்கு உல்லாச மாகப் போனோம். அது நிலாக்காலம். மாலை மூன்று மணிக்கு ஸ்ரீரங்கம் போய் ஆறு மணிவரைக்கும் கொய்யா மரத் தோட்டங்களிலும், தென்னந் தோப்புகளிலும் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆசைதீரக் கொய்யாப் பழங்களைத் தின்று இளநீரைக் குடித்து அவரவர்கள் விரும்பியபடி யெல்லாம் ஆடிப்பாடிக் கொண்டிருந்துவிட்டுக் கோயிலுக்குப் போனோம்.

ஸ்ரீரங்கம் கோயில் வடை மிகவும் பிரசித்தி பெற்றது. அத்துடன் அங்கே அப்போதைக்கப்போது அகப்படக்கூடிய முறுக்கு புளியோதரை, பொங்கல் முதலிய வைகளும் மிகவும் விரும்பத்தக்க சுவையுள்ளனவாக இருக்கும். இந்தக் காலத்தில் எப்படியோ தெரியாது. அந்தக் காலத்தில் திருவரங்கக் கோயிலில் சமைக்கப்படும் எந்த உண்டியும் (புளியோதரைத் தவிர), துளிகூட எண்ணெய் கலக்காத நெய்யில்தான் சமைக்கப்படும். அந்த உண்டிகளுக்காகவே பல பேர் கோயிலுக்குப் போவார்கள். அன்றைக்கு அங்கே சென்ற பதினைந்து மாணவருள் மூன்று பேர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மூவருள் ஒருவன் ஐயர். மற்ற இருவரும் ஐயங்கார்கள். இந்த இருவரும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலின் அர்ச்சகர்களுடைய மக்கள், இவர்களுக்குள்ளும் கோபாலன் என்பவன் கோயிலில் மிக்க செல்வாக்குள்ள அருச்சகருடைய மகன். இவனுடைய சலுகையைக் கருதித்தான் அந்த உல்லாசப் பயணமே ஏற்பாடானது.

கோபாலன் தந்தையிடம் முன்னாலேயே சொல்லி வைத்திருந்தபடியால் ஸ்ரீரங்கம் கோயிலைத்தவிர வேறு எங்கும் கிடைக்காதவை என்று சொல்லப்படுகிற எல்லா வித உண்டிகளும் ஏராளமாகக் கிடைத்தன. அதற்காக நாங்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் விகிதம் சேர்த்துப் பதினைந்து ரூபாய் கொடுத்திருந்தோம். அது போதாமல் பின்னாலும் ஐந்து ரூபாய் கொடுத்தோம். அந்த உண்டிகளெல்லாம் தனித்தனிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன, அந்தப் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கொள்ளிடத்தின் மத்தியிலுள்ள மணல்வெளியை அடைந்து அங்கே அமர்ந்து வெகு உல்லாசத்துடன் உண்டிகளை அருந்தினோம்.

அப்போது மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். பூரண சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் விளங்கினான். அந்த நிலாவின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் அங்கிருந்த பூகோள ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரைப் பார்த்து, “ஏன் ஸார், இந்தச்சந்திரனுக்கு மத்தியில் இருக்கிற களங்கத்தை மரம் என்றும், மான் என்றும் சொல்லுகிறார்களே, அது என்ன?” என்றான். யார் எதைக் கேட்டாலும் எப்போதும் வெகு இனியமுறையில் செய்திகளை விளக்கிச் சொல்வதில் அலுப்புக்கொள்ளாத அந்த பூகோள ஆசிரியர் உடனே சந்திரமண்டலத்தைப்பற்றிய சாத்திர நுணுக்கங்களை விளக்கலானார்.

சந்திரனைப்பற்றி ஆரம்பமான அந்தப் பேச்சுக்கள் சூரிய மண்டலத்திற்கும் சென்றன. சூரியனுக்கும் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள சம்பந்தங்களைப்பற்றியும், நாள், மாதம், ஆண்டு என்பனவற்றைப்பற்றியும், பருவங்களைப் பற்றியும், உத்தராயணம், தக்ஷிணாயணம் என்பவைகளைப் பற்றியும் வெகு விரிவாகவும் விளக்கமாகவும் ஆசிரியர் எடுத்துரைத்தார். அப்போது நான் கேட்ட ‘உத்தராயணம், தக்ஷிணாயணம், நிரட்சரேகை, என்பனவற்றின் விளக்கங்களிலிருந்து, அன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் ‘நிழல் சாயாக் கோபுர ‘த்தைப்பற்றி நான் சொன்ன ஊகம் எனக்குப் பெரிய பரிசைத் தந்தது. அதைக் கேளுங்கள்.

1909-ஆம் ஆண்டில் எப். ஏ, பரீட்சைக்குப் பணம் கட்டினபின் எனக்குக் கடுமையான காதுவலி வந்து பரீட்சை எழுத முடியவில்லை. பின் ஒரு ஆண்டு வைத்தியம் நடந்து காதுவலி நீங்கிற்று. அதன்பிறகு படிப்பு நின்று விட்டது. சிறு சிறு கவிகளும், சித்திரங்களும் எழுதிக் கொண்டு சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்குத் தூரபந்துவான ஸ்ரீ பா. வெ. மாணிக்க நாயக்கர் என்ற ஓர் எஞ்சினியர் பழக்கமானார். அவர் நல்ல தமிழறிஞர். சித்திரத்திலும்வல்லவர். கவிகளும் செய்வார். அவர் என்னுடைய கவித்திறனையும் சித்திர வித்தையையும் மிகவும் பாராட்டி அடிக்கடி என்னைத் தம்மிடம் வரச்செய்து அளவளாவிக் கொண்டிருப்பார். சிறுகச்சிறுக எங்களுக்குள் அன்பு அதிகரித்தது. அதனால் அவருடைய உத்தியோகப் பிரயாணங்களிலும் என்னை அழைத்துக் கொண்டுபோவார். அவர் ஜில்லாவுக்குப் பெரிய எஞ்சினீயரானதாலும் அரசாங்கத்தில் சலுகையுடையவரானதாலும் அவர் மூலமாக எனக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்ற ஆசையால் என் தந்தை முதலானவர்கள் நான் மாதக் கணக்கில் அவருடன் தங்கி விடுவதிலும் மகிழ்ச்சியடை வார். அவர் போட்டோ படம் பிடிப்பதில் வல்லுநர். எனக்கும் போட்டோ பிடிக்கக் கற்றுக்கொடுத்தார்.

1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதியில் டில்லி நகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கு முடிசூட்டு விழா நடப்பதாக நாடெங்கும் பேச்சாக இருந்தது. அந்த விழாவிற்கு இரண்டு ஆண்டுகளாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த விழாவைக் காண திரு. மாணிக்க நாயக்கரும் போகத் தீர்மானித்தார். டில்லி விழாவுக்குச் சென்று அதைப் பார்த்துப் பின் அப்படியே வடநாட்டிலுள்ள முக்கிய தலங்களையும் பார்த்துவர மூன்று மாதப் பிரயாணத்திற்குத் திட்டமிட்டார். போகிற இடங்களிலுள்ள விசேஷமான கட்டிடங்களையும் காட்சிகளையும் படம் பிடிக்க வேண்டுமென்பதும் திட்டம். அதற்கும் வேறு வேலைகளுக் கும் உதவியாக இருக்க என்னையும் அழைத்துக்கொண்டு போக ஏற்பாடு செய்தார்.

அந்த டில்லி தர்பாருக்குள் இடம் பெற அநுமதிச் சீட்டுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு மாகாணத்திலும் அந்த அந்த மாகாணத்திலிருந்து தர்பாருக்கு வர விரும்புகிறவர்களுடைய தகுதிகளை ஆராய்ந்து அநுமதிச் சீட்டுக் கொடுப்பதற்குத் தனி அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அந்த அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள். சென்னை மாகாணத்துக்கு ஏற்பட்ட அதிகாரி ஹாமில்டன், ஐ. சி.எஸ்., என்ற ஆங்கிலேயர். அவர் திரு. மாணிக்க நாயக்கருக்கு மிகவும் பழக்கமானவர். அதனால் எனக்கு, ஒரு சித்திரக்காரன் என்ற முறையில், அநுமதிச் சீட்டு எளிதில் கிடைத்தது. பெரிய பெரிய ஜமீந்தார்களுக்கும் மிராசுதார்களுக்கும் கூட அனுமதி கிடைக்கவில்லை.

இந்த அநுமதிச் சீட்டுக்கு வேண்டிய சிபாரிசுகளைச் செய்து கொள்வதற்காகத் திரு. மாணிக்க நாயக்கரிடம் ஸ்ரீ ராஜப்பையர் என்ற நங்கவரம் பெரிய பண்ணை மிராசுதார் வந்தார். நங்கவரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் மிகச் செழிப்பான கிராமம். அதில் ஸ்ரீ ராஜப் பையர் மிகப் பெரிய மிராசுதார். தெய்வ பக்தியிலும் தான தர்மங்களிலும் சிறந்த சீமான். மாணிக்க நாயக்கருக்கு நெருங்கிய நண்பர். தர்பாரில் ஸ்ரீ ராஜப்பையருக்கு இடம் கிடைப்பதற்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்து அநுமதிச் சீட்டை வாங்கித் தருவதாக எஞ்சினீயர் ஒப்புக் கொண்டார். அது முதற்கொண்டு ஸ்ரீ ராஜப்பையர் திருச்சிக்கு வந்து மாணிக்க நாயக்கருடன் பிரயாணத்துக்கு வேண்டிய மற்ற ஏற்பாடுகளைப்பற்றிப் பேசுவார். அந்த சமயங்களில் நானும் அங்கு இருப்பேன். ஒருநாள் திரு. மாணிக்க நாயக்கர் ஸ்ரீ ராஜப்பையருக்கு என்னை அறிமுகப் படுத்தி என் தமிழறிவையும், கவித்திறத்தையும், சித்திர வித்தையையும் புகழ்ந்து பேசி என்னையும் டில்லிக்கு அழைத்துப் போவதைப்பற்றி சொன்னார். அன்று முதல் ஸ்ரீ ராஜப்பையர் என்னிடம் மிக்க அன்புடையவரானார். அடுத்த முறை வந்தபோது ஒரு ‘ கோடக்’ காமிராவைத் தம் வீட்டில் அது சும்மா கிடக்கிறதென்று எனக்கு வெகுமதியாகத் தந்தார்.

அடுத்த தடவை ஸ்ரீ ராஜப்பையர் வந்தபோது, வட நாட்டுப் பிரயாணத்துக்கு அவசியமான கம்பளி உடைகள், போர்வைகள், தர்பாருக்கு வேண்டிய ‘சூட்’கள், ‘பூட்ஸு’ கள் முதலியவற்றைப்பற்றிய ஆலோசனைகள் நடந்தன. ஸ்ரீ ராஜப்பையர் மிக்க வைதீக மனப்பான்மையுள்ளவர். வெள்ளைக்கார முறையில் உடைதரிக்கப் பழகாதவர். வழக்கமான பஞ்சகச்ச உடையிலேயே டில்லி தர்பாருக்கும் போய் வந்துவிடலாம் என்று எண்ணினவர். மாணிக்க நாயக்கர் வற்புறுத்திச் சொன்னதின் மேல் ‘சூட்’ அணிந்து கொண்டே தர்பாருக்குப் போகச் சம்மதித்தார். அப்படி எத்தனை ‘சூட்கள் ‘ வேண்டுமென்று பார்த்து ராஜப்பையருக்கும், மாணிக்க நாயக்கருக்கும் வேண்டிய புதிய ’சூட்’களின் விலையையும் கணக்கிட்டு அத்தனைக்கும் ராஜப்பையரே அப்போதே பணம் தந்துவிட்டார்.

இந்தப் பேச்சுகளெல்லாம் நடந்த இடம், திருச்சியில் ஆண்டார் தெருவில் மிகவும் பிரசித்திபெற்ற செல்வராக இருந்த ஸ்ரீ மாணிக்க முதலியார் வசித்த வீடு. அதை முதலியார் வீடு என்று சொல்லுவார்கள். அது மாணிக்க நாயக்கருக்கு மாமனார் வீடு. முதலியார் வீட்டுப் பெண் ணைத்தான் நாயக்கர் மணந்திருந்தார். (முதலியார், நாயக்கர், பிள்ளை, உடையார், கவுண்டர், செட்டியார் என்ற பல பட்டங்கள் எங்கள் இனத்துக்கு உண்டு). மாணிக்க நாயக்கர் அப்போது அந்த முதலியார் வீட்டின் மேல் மாடியில் குடியிருந்தார். மேற்சொன்ன பேச்சுகள் அங்கேதான் நடந்தன.

முதலியார் வீட்டு மேல் மாடியில் திறந்த இடத்தில் உட்கார்ந்தால் ஸ்ரீ தாயுமான சுவாமியின் கோயிலும் திருச்சி மலைக்கோட்டையும் கைக்கு எட்டுவனபோலக் காணப்படும். ஸ்ரீ ராஜப்பையரும், மாணிக்க நாயக்கரும் தர்பாருக்குப் போகவேண்டிய காரியங்களைப் பேசியபின் ராஜப்பையர் தாம் டில்லி தர்பாருக்குப் பிறகு காசிக்குப் போய்ச் சிலநாள் தங்கி அதன்பின் வடநாட்டிலுள்ள பல யாத்திரைத் தலங்களையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். அதிலிருந்து வடநாட்டுக் கோயில்களுக்கும், தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் உள்ள வேற்றுமைகளைப்பற்றிய பேச்சு உண்டாயிற்று. ஸ்ரீ ராஜப்பையருடன் வந்திருந்த மூன்று நண்பர்களில் ஒருவர் முன்னமே வடநாடு போய்வந்தவர். அவர், “வட நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களையும் சேர்த்தாலும் தமிழ் நாட்டுக் கோயில் ஒன்றுக்கு ஈடாகாது” என்றார். அதைக் கேட்டதும் ராஜப்பையர் தம்முடைய முகத்துக்கு நேராக இருந்த தாயுமானவர் கோயிலைப்பற்றியும் அதன் கட்டிடச் சிறப்பையும் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். இதற்கிடையில் இன்னொருவர்: தஞ்சாவூர் “நிழல் சாயாக் கோபுர” த்தைப் புகழ ஆரம்பித்தார்.

உடனே ராஜப்பையர் எஞ்சினீயர் மாணிக்க நாயக்கரைப் பார்த்து, “நீங்கள் எஞ்சினீயர் ஆனதால் உங்களுக்குத் தெரியுமே. தஞ்சாவூர்க் கோபுரம் நிழல் சாயாக் கோபுரம் என்று சொல்லப்படுகிறதே; அதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார், அதற்கு மாணிக்க நாயக்கர், “அது வெறும் கட்டுக்கதைதான். நிழல் சாயாத பொருள் உலகத்தில் உண்டா? நானும் அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். அதில் ஒன்றும் உண்மை இல்லை , பாமர மக்கள் பக்தியினால் சொல்லும் பேச்சு அது!” என்றார்.

இந்தச் சமயத்தில் கொள்ளிடத்து மணலில் ஒரு முழு நிலா நாளில் தட்சிணாயணம், உத்தராயணம், என்பன பற்றியும், ‘நிரட்சரேகை ‘ என்பதைப்பற்றியும் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் விளக்கியதைக் கேட்டு அதற்குப் பிறகு ஒருநாள் என் மனதில் உதித்த ஊகத்தையும் நினைத்துக்கொண்டு, “நான் சொல்லுகிறேன் ” என்றேன்.

“ என்ன? ” என்று அங்கு இருந்தவர்களெல்லாம் என் பக்கம் திரும்பினார்கள்.

“தஞ்சாவூர்க் கோபுரத்தை ஏன் ‘நிழல் சாயாக் கோபுரம் ‘ என்று சொல்லுகிறார்கள் என்பதற்குக் காரணம் நான் சொல்லுகிறேன் ” என்றேன்.

“அப்படியா! எங்கே சொல்லுங்கள் ” என்று ஏக காலத்தில் எல்லோரும் கேட்டார்கள்,

உடனே நான், “தஞ்சாவூர்க் கோபுரத்தின் நிழல் உச்சிக்காலங்களில் ஒருநாளும் பூமியில் சாய்வதில்லை” என்றேன். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கல கலவென்று கைதட்டி வெகு நேரம் வரையில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரிப்பு அடங்கினவுடன் திரு. மாணிக்க நாயக்கர் என்னைப் பார்த்து, “இந்த அதிசயத்தை எப்படித்தான் கண்டுபிடித்தீர்களோ! நானும் என்னடாப்பா, எவரும் அறியாத என்ன உண்மை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன் ” என்றார்.

“ஏன், நான் சொன்னது சரியான காரணம் அல்லவா? ” என்றேன்.

“உச்சிக் காலத்தில் எல்லாப் பொருள்களுக்குந் தான் நிழல் விழுவதில்லை. அது தஞ்சாவூர்க் கோபுரத்திற்குமட்டும் என்ன சிறப்பு ?” என்றார்.

“ அது சரி அல்ல. உச்சிவேளையில் எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் நிழல் பூமியில் விழும். தஞ்சாவூர்க் கோபுரம் ஒன்றுக்குத்தான் அந்த நிழல் பூமியில் சாய்வ தில்லை” என்றேன்.

“அது எப்படி? ” என்று சிரித்தார் நாயக்கர்.

“சொல்லுகிறேன். உச்சிவேளை என்பது நடுப்பகலான பன்னிரண்டு மணியை மட்டுந்தான் குறிக்கும். சூரியன் நம்முடைய உச்சிக்கு நேராக இருக்கிறான் என்பதை அல்ல. ஆண்டில் பெரும்பாலான நாட்களில் சூரியன் உச்சிக் காலத்தில் நம்முடைய உச்சிக்குச் சரியாக இருப்பதே யில்லை. உச்சிக் கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது தான் பெரும்பாலான நாட்களில் உச்சி நேரங்களில் சூரியன் இருக்கிறான். உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்துக்கும், தக்ஷிணா-யணத்திலிருந்து உத்தராயணத்திற்கும் மாறுகின்ற காலங்களில் மட்டுந்தான் சூரியன் சரியான உச்சிக்கு வருகிறான். அப்போதுங்கூட ஒரு கடிகையில் எத்தனையோ ஆயிரம் பங்கில் ஒரு பங்கு நேரந்தான் நேரான உச்சியில் இருக்கிறான். மற்றக் காலங்களிலெல்லாம் உச்சிக்கு வடக்கிலோ தெற்கிலோ ஒதுங்கித் தான் ஓடுகிறான். ஒரு ஆண்டில் இரண்டே இரண்டு நாட்களில் தான் சூரியன் ஓர் அணுப்பொழுது நேரம் உச்சியில் இருக்கிறான். இந்த இரண்டு நாட்களில் இரு துளி நேரங்களைத் தவிர மற்ற உச்சி நேரங்களில் எல்லாப் பொருள்களுக்கும் நிழல் சாயும். சூரியன் தக்ஷிணாயணத்தின் கோடியிலும், உத்தராயணத்தின் கோடியிலும் இருக்கிற காலங்களில் அந்த உச்சி நிழல் நீண்டதாக இருக்கும். அந்தக் கோடியிலிருந்து நிரட்ச ரேகைக்குச் சூரியன் நெருங்க நெருங்க நிழலின் நீளமும் குறையும். ஆகையால் குறுகலாகவோ நீளமாகவோ உச்சி வேளையில் எல்லாப் பொருள்களுக்கும் நிழல் சாயும்.”

“அந்த நிழல் தஞ்சாவூர்க் கோபுரத்திற்கும் உண்டல்லவா ? ” என்று ஒருவர் கேட்டார்.

”இல்லை, அதுதான் தஞ்சாவூர்க் கோபுரத்தில் அமைந்திருக்கிற சிற்பத்தின் அழகு” என்றேன்.

அதுவரையில் நான் சொல்லிவந்ததைக் கண்களைச் சுருக்கிக்கொண்டு கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மாணிக்க நாயக்கர் புன் சிரிப்போடு என்னைப் பார்த்து, “அந்தக் கோபுரத்தில் அமைந்திருக்கிற சிற்பத்தின் அழகு என்ன?” என்றார்.

“தஞ்சாவூர்க் கோபுரத்தின் அடித்தளம் மிகவும் அகன்ற சதுரம். கோபுரமும் சதுரமான அடுக்குகளாகவே உயர்ந்து உச்சியில் கூர்மை அடைகிறது. உச்சியிலுள்ள விமானமும் கோபுரத்தின் உச்சிச் சதுரத்துக்கு உள்ளடங் கினதாக இருக்கிறது. அதனால் அதன் உச்சிக்கால நிழல் அடித்தளத்துக்கு மேலேயே நின்றுவிடுகிறது, பூமியில் விழுவதில்லை. ‘நிழல் சாயாக் கோபுரம்’ என்பதற்கு, ‘ பூமியில் நிழல் விழாத கோபுரம்’ என்பதுதான் பொருளே யல்லாமல் ‘நிழலே இல்லாத கோபுரம்’ என்பது பொருளல்ல. மற்ற எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் உச்சிக்கால நிழல் பூமியில் சாயும். ஆனால் தஞ்சாவூர் கோபுரத்தின் உச்சிக்கால நிழல் பூமியில் சாயாது” என்றேன்.

இதைச் சொல்லி முடிக்குமுன் எட்ட உட்கார்ந்திருந்த எஞ்சீனீயர் எழுந்துவந்து என்னுடைய கையைப்பிடித்துக் குலுக்கி, “இந்தக் காரணம் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒருக்கால் இதுவே உண்மையான காரணமாக இருந்தாலும் இருக்கலாம். நான் இதற்காக உங்களை மெச்சுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, “இது உங்களுக்கு யார் சொன்னது?” என்றார் .

நான் பழைய கதையைச் சொல்லி ஆசிரியர் சுப்பிரமணிய அய்யர் சொன்னவற்றோடு பொருத்திப் பார்த்ததையும் சொல்லி, “இது வெறும் என்னுடைய யூகம்தான். யாரும் எனக்குச் சொன்னதல்ல” என்றேன். எல்லோரும் வியந்து என்னைப் பாராட்டினார்கள்.

நங்கவரம் ராஜப்ப ஐயருக்கு ஒரே பூரிப்பு. அப்போதே அவர் நாயக்கரைப் பார்த்து, “ராமலிங்கமும் நம்முடன் டில்லி தர்பாருக்கு வருவதாகச் சொன்னீர்களே?” என்றார். “ஆம் அவருந்தான் வருகிறார் ” என்றார் நாயக்கர்.

“அப்படியானால் நாம் அவருக்கும் உடுப்புகள் வாங்க வேண்டாமா?” என்று கெட்டுக்கொண்டே தமது பணப்பையை எடுத்து அதிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நாயக்கரிடம் தந்தார்.

அந்தப் பணத்தைக்கொண்டு எனக்கு வெவ்வேறு மாதிரியில் ‘ட்வீட்’ சூட்டுகளும், போர்வையும், பூட்சுகளும் மற்றவைகளும் வாங்கினார்கள். இறைவன் அருளால் எங்கள் திட்டங்கள் நிறைவேறி டில்லிக்குச் சென்று முடி சூட்டும் தர்பாரைக் கண்டு களித்தேன். தர்பார் கண்காட்சிக்கு நான் அனுப்பியிருந்த ஓர் ஓவியத்துக்காக மன்னர் வழங்கிய தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். டில்லியில் பதினைந்து நாட்கள் தங்கிப் பிறகு சுமார் நான்கு மாத காலம் யாத்திரை செய்துவிட்டு 1913-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் தேதி வீடுவந்து சேர்ந்தோம்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *