
தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை
4. கற்றது கைமண்ணளவு
1904-ல் நான் கோயமுத்தூரில் நான்காவது படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதன் முதல் கம்பராமாயணத்தில் ஒரு சிறு பகுதி எங்கள் பாடமாக வந்தது. ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் என்ற எங்கள் தமிழ்ப் பண்டிதர் அந்தக் கம்பராமாயணப் பாட்டுகளுக்கு வெகு ரசனையோடு ஆடிப்பாடிப் பொருள் சொல்லுவார். அப்போது என் மனதைக் கவர்ந்த பாட்டு
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடிபெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.”
என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு. இதை அந்த ஆசிரியர் அபிநயத்தோடு பாடிப் பொருள் சொன்னார். அன்றுமுதல் கம்பராமாயணப் பாட்டுகளில் எனக்கு ஒரு ஆசை உதித்தது, மேலும் நாங்கள் படிக்கிற காலத்தில் தமிழ்ப் பாடப் புத்தகத்திலுள்ள எல்லா செய்யுள்களையும் நாங்கள் மனப்பாடமாக ராகத்தோடு ஒப்பித்தாக வேண்டும். அப்படிப் பாடம் பண்ணி ராகத்தோடு ஒப்பிப் பதற்கும் கம்பராமாயணப் பாட்டு எனக்குக் கவர்ச்சி தந்தது. அதனால் நாளுக்கு நாள் கம்பராமாயணத்தில் எனக்கு அதிகக் கவனம் சென்றது. என் தமிழறிவு வளர்ந்த தற்கே கம்பராமாயணம்தான் முக்கிய காரணம்.
பள்ளிக்கூடத்தை விட்டபின் அடிக்கடி கம்பராமாயணச் செய்யுட்களை நானே படிப்பதிலும் அனேக புலவர்களுடைய கம்பராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் ஆர்வம் மிகுந்தது. 1911-ம் ஆண்டில் காலஞ்சென்ற மோ. வே. கோவிந்தராஜய்யங்கார் என்பவருடைய கம்பராமாயணப் பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. இவர் வட மொழியிலும் நல்ல புலமையுள்ளவர். வால்மீகி ராமாயணத்தையும் நன்றாக ஆராய்ந்தவர். வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு இவர் கம்பனுடைய கவிதாமேதையைப் புகழ்ந்து பேசிய சொற்பொழிவைக் கேட்டு நான் பூரிப்படைந்து நானே அவருடைய நட்பை நாடினேன். வெகு விரைவில் நாங்களிருவரும் வெகு நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.
அவரிடத்தில் முறைப்படி கம்ப ராமாயணப் பாடங் கேட்கத் தொடங்கினேன். அப்படிப் படித்துக்கொண்டு வரும்போது ‘மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்
வெயின் முறைக்குலத் திறையவன் முதலிய மேலோர்
உயிர்முதற் பொருள் திறம்பினும் உரைதிறம்பாதோர்
மயில்முறைக் குலத்துரிமையை மனுமுதன் மரபைச்
செயிருறப் புலைச் சிந்தையால் என்சொனாய் தீயோய்
என்ற பாட்டுக்கு பொருள் செய்யவேண்டிய சமயம் வந்தது. இந்தப் பாட்டு கைகேசியானவள் கூனியைக் கடிந்து பேசுகிற பேச்சு. கூனியானவள் “கைகேசி! நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்களாம். அதனால் உனக்கும் உன் மகன் பரதனுக்கும் கேடுகாலம் வந்துவிடும். நீ பரதனுக்குப் பட்டம் கட்ட உடனே முயற்சி செய்” என்று தூண்டுகிறாள். அதைக் கேட்ட கைகேசி கடுங்கோபங்கொண்டு சீறுகிற பேச்சு தான் இந்தப் பாட்டு. “அடி! கூனி! உன்னுடைய சிறு மதியால் என்ன சொல்லைச் சொல்லிவிட்டாய்! இந்தக் குலம் சூர்யகுலம். அதில் தோன்றிய மன்னர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் இழந்துவிட நேரிட்டாலும் முறைதவறிய காரியம் செய்ய மாட்டார்கள். அவர்கள் மயிலைப்போல முறை தவறாத குணமுடையவர்கள். மனுவின் சந்ததியைச் சேர்ந்த வர்கள். அப்படிப்பட்ட வம்சத்தின் பரம்பரையான பெருமையைக் கெடுக்க, மூத்தவனாகிய ராமனை விட்டு இளையவனாகிய பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்று கேட்கச் சொல்லுகிறாயே! அடி கொடியவளே!” என்கிறாள் கைகேசி. இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. அதற்காக நாங்கள் புரட்டிப் பார்த்த எந்த அகராதியிலும் இதற்குச் சரியான பொருள் கிடைக்கவில்லை. ஒரு நூலில் ’மயில் முதலில் பொரித்த குஞ்சுக்கு சிறகு முளைத்த பின்தான் இரண்டாவதற்குச் சிறகு முளைக்கின்றது. அது போல இராமனுக்குப் பட்டம் கட்டியபின் பரதனுக்குப் பட்டம் கட்டுதல் முறைமை என்பதாம்’ என்று அச்சடிக்கப் பட்டிருந்தது. இதைப்போல அறிவில்லாத பொருளை அச்சடித்திருத்கிறார்களே என்று வியப்புற்றோம். எல்லாப் பட்சிகளிலும் முதலில் பொரித்த குஞ்சுக்குத்தான் முதலிற் சிறகு முளைக்கிறது. இதை மயிலுக்குமட்டும் சொல்வது மடமை. ஆதலால் அந்தப் பொருள் பொருந்தாமை கண்டு நாங்கள் பலபேரிடம் இதைக் கேட்டும் பயனடைய வில்லை. இது என்னமோ ஏதோ விளங்கவில்லையே என்று விட்டுவிட்டோம்.
1915-ம் ஆண்டில் நான் ‘அமெரிக்க விஞ்ஞானி ‘ (Scientific American) என்ற ஒரு ஆங்கில சஞ்சிகையைப் படித்தேன். அது உலகத்தில் விஞ்ஞானம் அடைந்து வருகிற முன்னேற்றத்தை அப்போதைக்கப்போது வெளி யிடுகிற ஓர் உயர்ந்த சஞ்சிகை. அந்த சஞ்சிகை நல்ல நல்ல படங்களுடன் பளப்பளப்பான காகிதத்தில் வெகு அழகாக அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிலுள்ள படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு அழகான மயில் தன் தோகையை முழுவதும் விரித்து ஆடுவதுபோலவும் அதன் அருகில் வேறு சில மயில்கள் இருப்பதுபோலவும் வரைந்திருந்த ஒரு படம் என்னைக் கவர்ந்தது. வெகுநேரம் அந்தப் படத்தின் அழகைப் பார்த்துவிட்டு அதன்கீழ் அச்சடித்திருந்த விஷயத்தைக் கவனித்தேன். அதில் ‘பக்ஷசாஸ்திர ஆராய்ச்சி’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை இருந்தது. அதைப் படித்தேன்.
அதில் ஒரு பெரிய அமெரிக்கப் பிரபு ஏராளமான பணச்செலவில் ஒரு பக்ஷிசாஸ்திர ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தி பல சாதிப் பட்சிகளின் இயல்பைக் கண்டறிவதற்கான ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வெகு பரந்ததும் மரங்களடர்ந்ததுமான வனத்தில் ஒவ்வொரு சாதிப் பட்சிக்கும் ஒவ்வொரு இடம் ஏற்படுத்தி அந்தப் பறவை எப்படி எப்படி முட்டை வைத்து எப்படி எப்படிக் குஞ்சு பொரித்துக் குடும்பம் நடத்துகிறது என்பதையெல்லாம் வெகு நுணுக்கமாகப் பதிவு செய்துகொண்டு ஆராய்ந்து
வந்தார். அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதிதான் நான் பார்த்த மயில் படமும் அதைப்பற்றிய கட்டுரையும். அந்தக் கட்டுரையில் ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்துகொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்த உடனேயே எனக்கு ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு உண்டாகிவிட்டது. ‘மயில்முறைக்குலம்’ என்று கம்பன் பாடியிருப்பது இதுதான் என்று தீர்மானித்து அதை எனது நண்பர் கோவிந்தராஜய்யங்காரிடம் சொன்னேன். அவரும் அதை ஒப்புக் கொண்டார்.
அதுமுதல் இதைக் கண்டுபிடித்துவிட்ட இறுமாப்பு, என் மனதில் இடங்கொண்டது. பல இடங்களிற் சென்று கம்ப ராமாயணத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் இதை எப்படியாவது இழுத்துப் புகுத்தி இந்த ‘மயில் முறை’ என்பதற்கு மற்ற எவருக்கும் தெரியாத பொருளை நான் சொல்லுவதாகச் சொல்லிப் பெருமை யடித்துக்கொள்வதில் ஒரு பிரியம் வந்துவிட்டது. கம்ப ராமாயணம் படித்தவர் என்ற யாரைக் கண்டாலும் நான் இந்த ‘மயில் முறைக்குலம் ‘ என்ற பாட்டுக்கு அவர்களைப் பொருள் கேட்பேன். அவர்கள் விழிப்பார்கள். நான் ஆனந்தம் அடைவேன். வெகு நேரம் அவர்களைத் திண்டாடச்செய்து அதன்பிறகு என்னுடைய பொருளைச் சொல்லுவேன். அவர்கள் வியப்புற்று என்னைப் புகழ்வார்கள். சில பேர் இப்படி நான் பொருள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் என்று கேட் பார்கள். உடனே நான் “இந்த அர்த்தம் பக்ஷி சாத்திரத்தை அறிந்தவர்கள் தான் சொல்லமுடியும்” என்று மட்டும் பக்ஷிசாத்திரத்தைக் கரை கண்டுவிட்ட நிபுணன் போல் காட்டிக்கொள்வேன். ‘அமெரிக்க விஞ்ஞானி’ என்ற பத்திரிகையில் பார்த்ததாகச் சொல்ல மாட்டேன்.
இப்படியாகக் கொஞ்ச காலம் உண்மையற்ற பெருமையில் களிப்புற்றுக் கொண்டிருந்தேன்.
கரூர் எனக்கு மாமனார் வீடு. அடிக்கடி அங்கே போய் தங்குவது வழக்கம். அப்படி ஒருமுறை அங்கே தங்கியிருந்தபோது அவ்வூர் பசுபதீஸ்வரசுவாமி கோவிலில் யாரோ ஒரு பெரியவர் தொடர்ச்சியாகக் கம்பராமாயணச் சொற்பொழிவு செய்துவருவதாகக் கேள்விப்பட் டேன். சொற்பொழிவைக் கேட்கப் போனேன். சொற்பொழிவு வெகு நன்றாக இருந்தது. சுமார் எழுபது வயதுள்ள ஒரு கிழவர் இனிமையான குரலில் பாட்டுக்களைக் குதூகலத்தோடு பாடி வியக்கத்தகுந்த முறையில் பொருள் சொல்லுவதைக் கேட்டு களிப்படைந்தேன். தொடர்ச்சியாக அவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்கென்றே பல நாள் அங்கு தங்கினேன். அந்த சொற்பொழிவாளரின் பெயர் ஸ்ரீ வெங்கட்ரமண ஐயங்கார் என்பது நினைவு. நான் போயிருந்தபோது அவர் சொல்லிக் கொண்டிருந்த பகுதி விபீஷணன் அடைக் கலப் படலம்.
எவ்வளவு இனிமையாகப் பாடி எத்தனை அழகாகப் பொருள் சொன்னாலும் இந்தக் கிழவருக்கு ‘மயில் முறை’ என்பதற்கு நான் கண்டுபிடித்திருக்கிற பொருள் தெரிந்திருக்க நியாயமில்லை. இவர் ‘அமெரிக்க விஞ்ஞானி’ சஞ்சிகையைப் பார்த்திருக்க முடியாது. இவரை நெருங்கி அதைப்பற்றி இவரையும் கொஞ்சம் ‘கிண்டல்’ செய்து திண்டாடவிட்டு நம்முடைய பொருளைச் சொல்ல வேணும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
ஒருநாள் அவரைப் பார்க்க என்று அவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனேன். என்னைப்போலவே அவரைப் பார்க்க வேறு சில கம்பராமாயண ரஸிகர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் அங்கு வந்திருந்தார்கள். அந்தக் காலத்தில் எனக்குக் கவிஞன் என்ற பட்டமில்லை. வெறும் சித்திர வித்வான் என்றும், தமிழில் ஆர்வம் உள்ளவன் என்றும் அறிமுகப்படுத்தப் பட்டேன். வெகு வைதீக வழக்கங்களுடைய அந்த வெங்கட்ரமணர் என்னை இனிய முகத்துடன் பழைய தமிழறிஞர்களுக்குள்ள பணிவு, தணிவுகளுடன் வரவேற்று உபசரித்தார். கம்பராமாயணத்திலும், திருக்குறளிலும் வேறு பல தமிழ் இலக்கியங்களிலுமுள்ள பல செய்யுள்களையும் அங்கங்கே பாடிக்காட்டி எங்களுடன் அளவளாவினார்.
வெகு நேரம் கழித்து விடை பெற்றுக்கொள்ளப் போகிற சமயத்தில் நான் ஏதோ பொருள் தெரியாமல் கேட்கிறது போலப் பாசாங்கு பண்ணிக்கொண்டு “மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் ‘மயில்முறைக் குலத்துரி மையை ‘ என்று வருகிறதே, அதில் ‘மயில் முறை’ என்பது என்ன?” என்று கேட்டுவிட்டு, அதற்கு பொருள் தெரியாமல் விழிக்கப்போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் முகக்குறிகளில் வியப்போ, திகைப்போ, விழிப்போ காணப்படவில்லை. வெகு நிதானமாக “ஓ அதுவா! அது என்னவென்றால் காட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
உடனே என் தலை சுழல ஆரம்பித்துவிட்டது. என் மூக்கு அறுபட்டு முகத்தில் கரி தடவிவிட்டது போன்ற ஒரு கவலை வந்துவிட்டது. ‘அடடா ! இந்த பொருள் இந்தக் கிழவருக்கு எப்படித் தெரிந்தது! என்னைப் போல ‘அமெரிக்க விஞ்ஞானிபைப்’ பார்த்த யாரோ இவருக்குச் சொல்லியிருக்க வேணும். இல்லாவிட்டால் இது இவருக்கு எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் எண்ணி ஏங்கி “இது தங்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்கு என்ன ஆதாரம்” என்றேன். அதற்கு உடனே அவர் “இது நம்முடைய புராணங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. நம்முடைய புராணங்களில் எத்தனையோ அருமையான அனுபவ அறிவுகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் புராண நூல்களை இப்போது யாரும் படிப்பதில்லை. நாங்கள் பாடங் கேட்டுக்கொண்ட காலத்தில் பல புராணங்களைப் படித்தறிந்த பிறகுதான் பண்டிதனாக முடியும். தமிழாசிரியர்களிடத்தில் முறைப் படி பாடங் கேட்டுக்கொள்ளுகிற வழக்கம்தான் இப்போது இல்லையே. அதனால் தமிழ் நூல்களில் அனேக உண்மைகள் நாம் அறிய முடியாமலே போய்விட்டன” என்றார்.
“இது எந்தப் புராணத்தில் எப்படி சொல்லப்பட் டிருக்கிறது?” என்று கேட்டேன்.
அவர் ஒரு புராணத்தின் பெயரைச் சொல்லி அந்தப் புராணத்தில் அதற்கான ஒரு பாட்டையும் பாடினார். அந்தப் பாட்டில் அவசியமான இரண்டடிகள் பின்வருமாறு:
“பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!”
அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பது. இதை அவர் சொன்னபிறகு, இந்த விஷயத்தை அமெரிக்க விஞ்ஞானி என்ற பத்திரிகையிலிருந்து நான் கண்டுபிடித்து விட்டதாக எனக்கிருந்த கர்வம் அழிந்தது. இந்தப் பாட்டையும், இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறதோ அந்தப் புராணத்தின் பெயரையும் ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துக் கொண்டேன். ஆனால் பாட்டை மட்டும் உடனே மனப் பாடம் செய்துகொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை என்னுடைய பெட்டியில் எங்கேயோ வைத்துவிட்டேன்.
சொற்பொழிவு செய்ய அவசியமாக மனதிலிருக்க வேண்டியது இந்த இரண்டு அடிகள் தானே. அதனால் இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறதோ அந்தப் புராணத்தைப் படிக்க வேண்டுமென்ற சிரமத்தைக்கூட மேற்கொள்ளவில்லை
அதனால் அந்தத் துண்டுக்காகிதத்தை அடியோடு மறந்துபோய் அது காணாமற் போய்விட்டது.
அதற்குப்பிறகு நான் சொற்பொழிவு செய்யும்போதெல்லாம் ‘மயில் முறைக்குலம் ‘ என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டியபோது அந்தப் புராணப்பாட்டின் இரண்டடிகளைச் சொல்லி, நான் ‘அமெரிக்க விஞ்ஞானி’ யில் கண்டதையும் சொல்லுவேன். இப்போதுதான் அமெரிக்கர் ஒருவர் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த மயில் முறை இயல்பு நெடுங்காலத்துக்கு முன்னாலேயே தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்றும் பெருமை பேசி சொற்பொழிவாற்றி வந்தேன்.
சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் காலஞ் சென்ற உயர்திரு. வெள்ளக்கால் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் அப்போது நாமக்கல்லில் வக்கீலாக இருந்த அவருடைய உறவினர் ஸ்ரீ வெங்கடபதி முதலியார் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் மிகப்பெரிய மனிதர். கம்ப ராமாயணத் தில் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர். கம்பராமயணத்தை தம் உயிர் போல் கருதியவர்.
அவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் கம்ப ராமாயணத்தில் ஆர்வம் உள்ளவர்களைத் தாமே சென்று பார்த்துவிட்டு கம்பராமாயணத்தைப்பற்றி அளவளாவுவார். அந்த முறையில் என்னைப்பற்றிக் கேள்விப்பட்ட அவர் என்னைப் பார்க்க என் வீடு தேடிவந்தார். அவர் வரப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அவரைப் பற்றிக் கேள்விபட்டிருந்தேன் என்றாலும் அதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை.
அவருடன் வந்த அவருடைய உறவினர் அவர் இன்னார் என்று எனக்குச் சொன்னவுடன் வயதிலும், படிப்பிலும் என்னைக்காட்டிலும் எவ்வளவோ பெரியவர், அவர் என்னைப் பார்க்க என் இடத்தைத் தேடி வந்தாரே என்ற மகிழ்ச்சியுடன் அவர் வரவை பெரும் பாக்கியமாகக் கருதி நான் “என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்” என்று அவரை வரவேற்று வணங்கினேன்.
அவர் உடனே அதைத் திருப்பி “என்ன மாதவம் செய்தது இச்சிறு உடல் ” என்று சொன்னார். அப்போது நானடைந்த பெருமை அளவிடற்கரிது.
எல்லோருமாக உட்கார்ந்து சுமார் ஒரு மணி நேரம் கம்பன் கவித்திறத்தைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடத்திலும் இந்த ‘மயில் முறைக்குலம்’ என்பதைப்பற்றி கேட் டேன். அவரும் உடனே அந்த ‘பலாவம் பொழிலுறை’ என்ற புராணப் பாட்டைச் சொல்லி, ஏற்கனவே அதைப்பற்றி தம்முடைய கம்பராமாயண ஆராய்ச்சியில் விளக்கியிருக்கிறதாகச் சொன்னார். அதன் பின் திருக்குறளில் வெகு ரஸமாக அநேக விஷயங்களை நான் அதுவரை கேட்டிராத முறையில் சொன்னார். அந்த இனிமைமிக்க திருக்குறள் பேச்சில் என்னையே முற்றிலும் மறந்துவிட்ட நான் அந்த ‘பலாவம் பொழி லுறை ‘ என்ற பாட்டு எந்தப் புராணத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டுக்கொள்ளத் தவறி விட்டேன்.
அதன் பிறகு இதுவரையிலும் இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாது போய்விட்டது.
சமீபத்தில் நான் திருநெல்வேலி போயிருந்தேன். அங்கே மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரிக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரவர்களுடைய குமாரர்கள் பரிசாகக்கொடுத்த சுப்பிரமணிய முதலியாருடைய நூல்களை ஒரு ‘நூல் நிலையம்’ ஆக்கி அந்த நூல் நிலையத்தை என்னைத் திறப்புவிழா செய்யச் சொன்னார்கள். அப்போது நான் வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள் என் வீட்டிற்கு வந்ததையும், இந்த ’மயில் முறை’ விஷயமாகப் பேசினதையும் சொல்லி அந்த ‘பலாவம் பொழிலுறை ‘ என்ற பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை என்பதும் சொல்லி, அதை அறிந்தவர்கள் யாராவது இருந்தால் எனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் சொன்னேன். அப்போது எனக்கு யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. நான் நாமக்கல்லுக்கு வந்தபின் திருநெல்வேலி அரசியலார் போதனாமுறைப் பள்ளி மாணவர் ஒருவர் எனக்கு இதைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் என்னுடைய திருநெல்வேலி சொற்பொழிவைக் கேட்டவர். அவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரவர்களே இந்த ‘பலாவம் பொழிலுறை’ என்ற பாட்டைப் பற்றி ‘அவருடைய ‘ கம்பராமாயண ஆராய்ச்சி ‘ நூலில் இந்தப் பாட்டு தணிகைப் புராணத்தில் களவுப் படலத்தில் 244-வது செய்யுளாக இருக்கிறதாக விளக்கி யிருக்கிற தாகவும் எழுதியுள்ளார்.
அப்பாடா! இத்தனை நாளாயிற்று இந்தப் பாட்டு எதிலிருக்கிறது என்று அறிந்துகொள்ள. அதுவும் கடந்த சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் கேட்ட எந்தத் தமிழ்ப் பண்டிதரும் பெரிய பெரிய படிப்பாளிகளும் இதை எனக்குச் சொல்லக்கூடவில்லை. கடைசியில் ஒரு மாணவர் இது இருக்கிற இடத்தைக் காட்டினார். ஆதலால் நான் ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதை உணர்கின்றேன்.



