
தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை
5. ஊதுவத்தி கிண்ணம் செய்த உதவி
ஆம்! ஊதுவத்தி சொருகிவைக்கிற ஒரு சாதாரண ‘நிக்கல் கிண்ணம்’ சமய சஞ்சீவிபோல் எனக்கு உதவியது. நாம் மிகவும் அலட்சியம் செய்துவிடத் தகுந்த அனேக சிறு நிகழ்ச்சிகள் சிற்சில சமயங்களில் ஆச்சர்யப் படும்படியான காரியங்களைச் சாதித்து விடுகின்றன. அந்த வெகு சிறிய நிகழ்ச்சி திடீரென்று உண்டாக்குகின்ற உணர்ச்சியினால் தீராத சிக்கல்கள் தீர்ந்துவிடுகின்றன. நடக்காத காரியம் நடந்துவிடுகிறது. மனிதனுக்குள் மறைந்து இருந்து கொண்டு சாதார, சமயங்களில் செயலற்றுக்கிடக்கிற ஒரு நம்பிக்கையை அந்த சிறு நிகழ்ச்சி கிண்டிவிடுகிறது. அதனால் குருட்டு நம்பிக்கை என்று மறுக்கின்றவர்கள்கூட மறந்தாற் போல் அந்த திடீர் உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். தான் என்ற அகந்தை கூட தனக்குப் புலப்படாத ஒரு சக்திக்குத் தலைவணங்கிவிடுகிறது. என்னைப் பார்த்து ஒரு அம்மாள், “என்னையா! ஒங்களை ரொம்ப நவ்ல மனுசருன்னு நினைச்சேன். மட்டு மரியாதையில்லாமெ நீங்க பேசரதைப் பார்த்தால் ரொம்ப அல்ப்ப சாவுகாசமாக வல்ல இருக்குது? இப்படிண்ணு தெரிஞ்சிருந்தா இந்த ஊட்டுக் குள்ளேயே விட்டிருக்க மாட்டமே. நீங்க மூளியும் மூக்கரையுமாய் படமெழுதியிருக்கிற நேர்த்திக்கு பேசின பேச்சுக்கு மேலே இனாம் வேறே தரணுமா? ஏன்? நாதியத்த பணந்தானே, போகட்டு முண்ணு அந்த செட்டியார் எழுதித் தந்துபுட்டாரோ? அந்த செட்டியாரே வரட்டும், அவரோடு பேசிக் கொள்ளுங்கள். போங்க வெளியிலே. ”டேய்! வெள்ளையா ! இவுகளை வெளியே போகச்சொல்லி கதவைச் சாத்து” என்று சொன்ன சமயத்தில்தான் அந்த ஊதுவத்தி கிண்ணம் வந்து உதவி செய்தது. அந்தக் கதையைக் கேளுங்கள். இந்தக் கதை உண்மையாக நடந்தது. ஆனாலும் இதில் சம்பந்தப்பட்ட ஊர்களையும் பேர்களையும் மாற்றி எழுதியிருக்கிறேன். ஏனென்றால் படிப்பவர்களுக்கு இது இன்பமளித்தாலும் இதில் சம்பந்தப் பட்டவர்களுடைய உறவினர்களுக்கு வேறுவித உணர்ச்சிகளை உண்டாக்கி அவர்களை நான் ஏளனம் செய்வதாக எண்ணி விடலாம்.
1912-ம் வருஷத்தில் அப்போது நம்மை ஆண்டு கொண்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு மகுடாபிஷேகம் செய்ய டில்லியில் ஒரு தர்பார் நடந்தது. அதைப் போன்ற வைபவம் இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. அதில் ஒரு கண்காட்சியும் நடந்தது. அந்தக் கண்காட்சியில் நான் வரைந்த ஒரு பெரிய ஓவியமும் இடம் பெற்றது. அந்தப் படத்தைப் பாராட்டி எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கப்பட்டது. அந்தப் பதக்கத்தை டில்லி செங்கோட்டையில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு மேரி மகாராணி என் உடையில் அலங்கரித்து விட்டார்கள். அதனால் அதுவரையிலும் விளம்பர மில்லாமலிருந்த என் ஓவியத் தொழிலுக்கு கிடைப்பதற்கரிய கிராக்கி ஏற்பட்டது.
அதுவரையிலும் சித்திர வேலையைத் தொழிலாக நடத்தத் தயங்கிக்கொண்டிருந்த நான் மிக்க தைரிய மடைந்தேன், பலருடைய இருப்பிடத்திற்கும் நானாகப் போய் படம் எழுதிக்கொள்ளும்படி ‘ஆர்டர் ‘ வாங்க அலைந்தது போய் ‘ஆர்டர்கள் ‘ என்னைத் தேடிவர ஆரம்பித்தன. அதனால் பத்து, இருபது கிடைத்தாலும் போதுமென்று படமெழுதிக் கொண்டிருந்த நான் நூறு, இருநூறு அதற்கு மேலும் கேட்க ஆரம்பித்து நூறு ரூபாய்க்குக் குறைவான வேலைகளை வாங்குவதில்லை என்ற வழக்க முண்டாகி விட்டது. என்னுடைய வேலை சிறந்ததோ அல்லவோ, டில்லியில் சக்கரவர்த்தியே மெச்சிப் பரிசளித்த சித்திரக்காரனல்லவா? அதற்காக நான் கேட்ட கூலி கிடைக்கலாயிற்று.
அந்த சமயத்தில் செட்டிமார் நாட்டில் திரு. அண்ணாமலை செட்டியார் என்ற ஒரு தனவணிகர் இறந்துபோனார். அந்த அண்ணாமலை செட்டியாருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவரான ஒருவர் நாமக்கல்லில் இருந்தார். அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர். நான் டில்லியில் பரிசு பெற்று நாமக்கல்லுக்கு வந்தபோது என்னைப் பாராட்டினவர்களில் ஒருவர். அந்த நண்பர் செட்டிமார் நாட்டிற்குப் போனபோது அந்த அண்ணாமலை செட்டியாருடைய குடும்பத்தாரிடம் என்னைப்பற்றிப் பேசி, என்னைக்கொண்டு அந்த அண்ணாமலை செட்டியாரவர்களுடைய உருவப்படம் ஒன்றை வரைந்து வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். அதே நண்பர் என்னிடம் வந்து அதைச் சொல்லி அந்த வேலையை எனக்கு வாங்கிக் கொடுக்க செட்டிமார் நாட்டுக்கு என்னை அழைத் துச் சென்றார்.
அண்ணாமலை செட்டியாருடைய மக்கள் என்னை அன்புடன் வரவேற்று செட்டியாருடைய சிறு ‘போட்டோ ‘ ஒன்றை என்னிடம் தந்து அதிலுள்ள உருவத்தில் போட்டோ பிடிப்பதற்கென்று அவர் அணிந்திருந்த தலைப் பாகையை எடுத்துவிட்டு நிற்கிற மாதிரியாக அவருடைய முழு உருவத்தில் எண்ணை சாயத்தில் (Oil Paint) படம் எழுதித் தரவேண்டும் என்று சொன்னார்கள். நான் சம்மதித்தேன். அதற்கு என்ன விலை கொடுக்க வேணும் என்று கேட்டார்கள். அதுவரைக்கும் நான் அவ்வளவு பெரிய படம் வரைந்ததில்லை. அதற்கு என்ன கேட்பது என்று எனக்கே தோன்றவில்லை. அந்த அளவு படத்திற்கு மற்ற தொழிலாளர் என்ன கேட்பார்கள் என்பதும் தெரியாது. எனக்குள் ஏற்பட்ட குழப்பத்தை சமாளித்துக் கொண்டு நான் அந்த வேலைக்கு ஆயிரம் ரூபாயும் மற்றும் பிரயாணச் செலவுகளும் தரவேணும் என்று கேட்டேன். எந்தப் பொருளுக்கு என்ன விலை சொன்னாலும் அதை வாங்குகிறவர்கள் கொஞ்சமாவது விலையைக் குறைத்துக் கேட்காமல் வாங்கிவிடுவது வழக்கமில்லையல்லவா? அந்தப் பழக்கத்தில் கொஞ்சம் பேரம் நடந்தது. கடைசியாக என்னைக் கூட்டிக்கொண்டு போன நண்பருடைய விருப்பத்தின்படி நான் அந்தப் படத்தை எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு எழுதித்தர ஒத்துக்கொண்டேன்.
மூன்று மாதகாலம் அதே வேலையாக நாமக்கல்லில் அந்த படத்தை எழுதிப் பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டு அண்ணாமலை செட்டியார் வீட்டிற்குப் போனேன். படம் அவர்களுக்கு முற்றிலும் திருப்தியளித்தது. படத்தை வீட்டின் முன்புறத்தில் ஒரு நல்ல இடத்தில் வைத்து அதற்கு ’வெல்வெட்’ துணியில் சித்திர வேலை செய்த படுதா ஒன்றை உடனே தயார் செய்து அது வேண்டும் போது சுலபமாக விலகக்கூடிய முறையில் அமைத்தார்கள்.
எனக்கு ஒரு விருந்து நடத்தினார்கள். அந்த விருந்துக்கு அண்ணாமலை செட்டியாருக்கு நெருங்கியவர்களாக இருந்த உறவினர்களையும் அழைத்திருந்தார்கள். விருந்திற்குப்பின் எல்லாரும் அந்தப் படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தாம் பூலம் நடந்தது. அந்த சமயத்தில் ஒரு வெள்ளித் தட்டத்தில், வேஷ்டி, புடவை, தேங்காய், பழம், புஷ்பம் முதலிய மங்கலப் பொருள்களோடு எழுநூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு உண்டியலும் ரொக்கம் நூறு ரூபாயும் வைத்து எனக்கு வழங்கப்பட்டது. நான் வந்தனம் சொல்லி வாங்கிக் கொண்டேன். அதுவரையிலும் படத்தின் படுதா விலக்கப் பட்டிருந்தது. அதன்பிறகு வீட்டுக்காரர் படத்தைப் படுதாவால் மூடினார். விருந்தினர்கள் விடை பெற்றுக்கொள்ள வேண்டிய சமயம். அந்த சமயத்தில் கறுத்துப் பருத்த ஒரு மனிதன் வெகு வேகமாக உள்ளே வந்து மேல் வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு வீட்டுக்காரருக்கு கும்பிடு போட்டார். “அட! கருப்பையா! எப்படா வந்தாய்?” என்றார் வீட்டுக்காரர்.
“இப்பத்தான் வர்ரேனுங்கோ” என்றான் கருப்பையா. இந்தக் கருப்பையா என்பவன் படத்தில் இருக்கிற அண்ணாமலை செட்டியாருக்கு மிகவும் பிரியமான அந்தரங்க வேலைக்காரன். அளவற்ற எஜமான விசுவாசமுள்ளவன். சிறு பிராயத்திலிருந்து அண்ணாமலை செட்டியார் குடும்பத்திலேயே வளர்ந்தவன். அண்ணாமலை செட்டியார் இவனை மிகவும் அன்புடன் வைத்திருந்தார். அவர் இறந்ததனால் இவன் மிகவும் ஏக்கமடைந்து சொல் லாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டான். பரம ஏழை. படிப்பே அறியாதவன். ஆனால் வெகு யோக்யன்.
திடீரென்று வந்து நின்ற கருப்பையாவைப் பார்த்து அண்ணாமலை செட்டியாரின் மூத்த மகனான வீட்டுக்காரர் “கருப்பையா!” நம்ம பெரிய செட்டியார் வந்திருக்கிறாங்க பார்த்தியா?” என்றார்.
“பெரிய செட்டியாரா! எஜமானா! எங்கிங்கோ ?” என்றான் கருப்பையா. “இங்கே வா” என்று கருப்பையாவைப் படத்தின் அருகில் கூட்டிக்கொண்டு போய்ப் படுதாவை விலக்கினார். பார்த்தான் கருப்பையா படத்தை. கொஞ்ச நேரம் திகைத்து நின்று வாய் வராமல் திக்குமுக் காடி “தத்ரூபமா நிக்கிறாருங்களே!………சாமீ………….” என்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு எஜமானை நேரில் கண்டது போல மிரள மிரளப் படத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் கும்பிட்டான். கருப்பையாவின் தடுமாற்றம் கொஞ்சம் தணிந்தபின் அந்த செட்டியார் கருப்பையாவுக்கு என்னைக் காட்டி “கருப்பையா, இந்த ஐயாதாண்டா இந்தப் படத்தை எழுதினது” என்றார். உடனே கருப்பையா “இவுகளா, இவுக எழுதினதா இது! இவுகளை அந்த பிரமா இன்னுதான் சொல்ல ணும்” என்று என்னைக் கும்பிட்டான். ‘இந்தப் படம் எழுதினதற்கு இந்த ஐயாவுக்கு என்ன கொடுக்கலாம்?” என்றார் செட்டியார். அதற்குக் கருப்பையா மிக்க முகமலர்ச்சியுடன் “இதுக்கு என்ன கொடுத்தாலும் கொடுக்கலாமுங்க. அஞ்சு கொடுத்தாலும் கொடுக்கலாம், பத்து கொடுத்தாலும் கொடுக்கலாம். அம்பதுகூட கொடுக்கலாமுங்க” என்றான். உடனே அங்கிருந்தவர்கள் எல்லாருக்கும் வயிறு வெடித்து விடும் போலச் சிரிப்பு வந்து விட்டது.
அப்படி நாங்கள் சிரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையாவைத் தேடிக்கொண்டு ராமசாமி செட்டியார் என்ற ஒருவர் வெகு அவசரமாக அங்கே வந்தார். ராமசாமி செட்டியார் ஒரு பெரும் பணக்கார கனவான். அவர் படத்திலிருந்த அண்ணாமலை செட்டியாருக்கு நெருங்கிய நண்பர். அண்ணாமலை செட்டியார் உயிரோடிருந்தபோது அவருக்கு முன்னால் நடந்த ஒரு விவகாரப் பேச்சைப் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவன் கருப்பையா. அந்த விவகாரம் கட்சிச் சண்டையாக முற்றி கச்சேரிக்குப் போய்விட்டது. அந்த வழக்கில் ராமசாமி செட்டியாருடைய கட்சிக்காக சாட்சியம் சொல்ல வேண்டியவன் கருப்பையா. அண்ணாமலை செட்டி யார் இறந்துபோன துக்கத்தால் சொல்லாமல் எங்கேயோ போய்விட்ட கருப்பையாவை ராமசாமி செட்டி யார் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பையா வந்திருப்பதை யாரோ சொல்லி ராமசாமி செட்டியார் அவ்வளவு அவசரமாக அங்கே வந்தார். வீட்டுக்காரர் வரவேற்றதைக்கூட சரியாகக் கவனிக்காமல் ராமசாமி செட்டியாருடைய கண்கள் கருப்பையாவைத் தேடின. கருப்பையா படத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண் டிருந்தான், கருப்பையாவைப் பார்த்த ராமசாமி செட்டி யார் படத்தையும் பார்த்தார். படத்தைக் கண்டவுடன் கருப்பையாவைக்கூட மறந்துவிட்டு ராமசாமி செட்டியார் படத்தின் அருகிற் சென்று வெகுநேரம் பார்த்து விட்டு “எங்கே எழுதினது இந்தப் படம்? அடையாளம் ரொம்ப சுத்தமாக அமைந்திருக்கிறது” என்றார். வீட்டுக்காரச் செட்டியார் என்னைச் சுட்டிக்காட்டி “இந்த ஐயா எழுதினது” என்றார். “இதற்கு என்ன கொடுத்தீர்கள்?” என்றார் ராமசாமி செட்டியார்.
“இதற்காக? இதற்கு என்ன கொடுக்கலாம் என்பதைப் பற்றித்தான் கருப்பையா சொல்லிக்கொண்டிருந்தான் ” என்று கருப்பையா சொன்னதைச் சொல்லி மறுபடியும் சிரித்துவிட்டு “இதற்கு படத்துக்காக எழுநூற்றைம்பதும், வழிச் செலவுக்காக நூறும் ஆக எண்ணூற்றைம்பது தந்திருக்கிறது” என்றார் வீட்டுக்காரர். “அப்படியானால் நம்ப சொக்கலிங்கம் செட்டியார் படத்தையும் இதேமாதிரி எழுதச் செய்யுங்கள். சிவகாமி ஆச்சி அடிக்கடி சொல்லுது. வேறு எங்கேயோ எழுதச் சொன்னது, அடையாளம் கொஞ்சம்கூட சரியாயில்லை” என்றார் ராமசாமி செட்டியார்.
இப்படியாக சொக்கலிங்கம் செட்டியார் என்ற ஒருவருடைய படத்தை எழுத எனக்கு ‘ஆர்டர்’ தருவதாக ஏற்பாடாயிற்று. சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பக்கத்து ஊரிலிருந்த ஒரு பணக்காரர். சுமார் இருபது லக்ஷம் ரூபாய் சொத்து உள்ளவர். ஒரு ஆண்டுக்கு முன்னால் இறந்து போனார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சிக்கு குழந்தையில்லை. உறவின் முறை யில் சிவகாமி ஆச்சிக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்லிக் காரியங்களைக் கவனித்துக் கொள்ளுகிறவர் ராமசாமி செட்டியார்.
கருப்பையாவைத் தேடி வந்த காரியத்தைப்பற்றிப் பேசி முடித்துக்கொண்டு சொக்கலிங்கம் செட்டியாருடைய ‘ போட்டோ’ படத்துடன் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு ராமசாமி செட்டியார் போய் விட்டார். சொன்னபடி மறுநாள் படத்துடன் வந்தார். படத்தை வாங்கிப் பார்த்தேன். அது சுமார் இருபத்தைந்து பேர்களடங்கிய ஒரு ‘குரூப்’ போட்டோ (Group Photo). அதில் சட்டை யணிந்துகொண்டு தலைப்பாகையுடன் உட்கார்ந்திருந்தார் சொக்கலிங்கம் செட்டியார். சட்டையும் தலைப்பாகையும் நீக்கிவிட்டு, உட்கார்ந்திருக்கிறதை நிற்கிற மாதிரியாக்கி அண்ணாமலைச் செட்டியார் படத்தைப்போலவே முழு அளவில் எழுதித் தரவேணும் என்று சொன்னார்கள்.
அண்ணாமலை செட்டியாருடைய ‘போட்டோ’ நிற்கிற மாதிரியே இருந்தது. சட்டை அணியவில்லை. தலைப்பாகை மட்டும்தான் தள்ளவேண்டியிருந்தது. அவர் மட்டும் தனியாக இருக்கிற ‘போட்டோ’ ஆனால் சொக்கலிங்கம் செட்டி யார் இருந்த ‘குரூப்’ போட்டோ அப்படிப்பட்டது அல்ல. அதனால் அவர்கள் விரும்பினபடி மாற்றியமைத்து எழுதுவது மிகவும் கடினமான காரியம். அதற்காக நான் ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் வழிச்செலவுக்கு நூற்றைம்பது ரூபாயும் தர வேணும் என்று கேட்டேன். ராமசாமி செட்டியார் நான் சொன்ன நியாயத்தை ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் சிவகாமி ஆச்சியிடம் படத்துக்கு 750-ம், வழிச் செலவுக்கு 100-ம் ஆக 850 என்று சொல்லிவிட்டு வந்திருப்பதாகவும் இருந்தாலும் மறுபடியும் பேசி ரூ. 1000/- படத்துக்கும் செலவுக்கு ரூபாய் 100-ம் தரச்செய்வதாகச் சொன்னார். நான் சம்மதிக்கவில்லை. வெகு நேரம் பேசியபின் ராமசாமி செட்டியார் சொன்னார், “முன் ஓர் படம் சின்ன அளவில் ரூ. 250க்கு எழுதப்பட்டது. அதில் கொஞ்சம்கூட சொக்கலிங்கம் செட்டியாரின் அடையாளமே அமைய வில்லை. அதனால் இதுவும் அப்படியிருந்துவிட்டால் என்ன செய்வது என்று ஆச்சி பயப்படுது. நீங்கள் ரூ. 1000-க்கு ஒத்துக்கொண்டு எழுதுங்கள். படம் சரியாக இருந்தால் இன்னும் ரூ. 250-ம் கூட்டித்தரச் செய்கிறேன்” என்றார். அதற்கு நான் “படம் திருப்திகரமாக இருந்தால் ரூ. 250-க்கு சிபார்சு செய்கிற தாங்கள் 500-க்கு சிபார்சு செய்யக்கூடாதா ?” என்றேன். எனக்கு சிபாரிசாக அண்ணாமலை செட்டியாருடைய மகன் “ஆமாம் அவ்வளவு பணக்கார ஆச்சி, புள்ளையா குட்டியா? இன்னும் 500 தந்தால்தான் என்ன? தரச் சொல்லுங்கள்” என்றார். அதன்படியே படம் நன்றாக இருந்தால் ரூ. 1500 தருவதென்றும் இல்லாவிட்டால் ரூ.750 மட் டும் தான் வாங்கிக்கொள்ள வேணும் என்றும் வழிச் செல வுக்கு அண்ணாமலை செட்டியார் படத்துக்கு வாங்கின ரூ. 100-க்கு மேல் கேட்பது சரியல்ல என்றும் ராமசாமி செட்டி யார் சொன்னார். ‘அட்வான்ஸ் ‘ ரூ. 250 தரவேண்டும் என்றேன். அவர் அதற்கு சம்மதித்தார்.
சுமார் ஐந்து மாதகாலம் இடைவிடாது வேலை செய்து எனக்குத் திருப்தி உண்டாகிற வரையிலும் வெகு பாடு பட்டு படத்தை முடித்து எடுத்துக்கொண்டு ராமசாமி செட்டியார் வீட்டுக்குப் போனேன். அவர் வசிக்கும் இடமும், சிவகாமி ஆச்சி வசிக்கும் இடமும், இரண்டு மைல் தூரத்திலுள்ள வெவ்வேறு ஊர்கள். சட்டத்தோடு சுமார் 71 அடி உயரமும் 4 அடி அகலமும் உள்ள அந்தப் படத்தை ராமசாமி செட்டியார் வீட்டிற்கு முன்னால் வண்டியைவிட்டு இறக்கும்போதே அக்கம்பக்கத்திலுள்ள பலபேர் அது என்னவென்று பார்க்கக் கூடிவிட்டார்கள். கட்டுகளை அவிழ்த்து ராமசாமி செட்டியார் வீட்டிற்குள் சுவரில் சாய்த்து நிறுத்தப்பட்டது. உடனே அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் “ஓ! சொக்கலிங்கம் செட்டியார்! பேஷ்! ரொம்பத் தெளிவாக இருக்கிறது” என்று படத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என் மனம் களிப்படைந்தது. பட்டபாடு வீணாகவில்லை என்ற மகிழ்ச்சி என்னை நிலை கொள்ளவிடவில்லை.
ஆனால் அந்த சமயத்தில் ராமசாமி செட்டியார் அங்கில்லை. அவர் முன் சொல்லப்பட்ட வழக்கிற்காகத் தன் கட்சியின் – சாட்சிகளை யெல்லாம் கூட்டிக்கொண்டு தேவக்கோட்டை கச்சேரிக்குப்போக வேண்டிய அலுவலுக்காக வெளியே போயிருந்தார். சற்று நேரம் கழிந்தபின் ராமசாமி செட்டியாரும் இன் னும் ஐந்தாறு பேர்களும் வந்தார்கள். கருப்பையாவும் வந்தான். வீட்டுக்குள் வேகமாக நுழைந்த ராமசாமி செட்டி யார் என்னைக் கவனிக்காமல் அங்கிருந்த கும்பலையும் அவர்கள் ஒரு படத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்ததையும் கண்டார். கும்பலுக்குள் புகுந்து பக்கத்திற் சென்று வெகு நேரம் மௌனமாகப் படத்தைப் பார்த்துவிட்டு “படம் கொண்டுவந்தது யார்?” என்று திரும்பினார். “நான் தான்” என்று நான் அவருக்கு அருகிற் போனேன். “ஓ! வாங்கையா ! படம் ரொம்பத் தெளிவாக அமைந்து போச்சு. சாவகாசமாக ‘உங்களோடு பேச எனக்கு நேரமில்லையே’ என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு வழக்கு விஷயமாக என் சாட்சிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு தேவக் கோட்டை வக்கீல் வீட்டிற்கு உடனே போகவேண்டி யிருக்கிறது. நாளைக்கு விசாரணை” என்றார்.
”தேவக் கோட்டைக்குப் போய்விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்” என்றேன். “வழக்கு தொடர்ந்து நடந்தால் நான் நாலைந்து நாட்கள் அங்கேயே தங்கவேண்டி நேரிட்டாலும் நேரும். நான் சிவகாமி ஆச்சியிடம் எல்லாம் விவரமாகச் சொல்லி யிருக்கிறேன். உங்களிடம் ஆச்சிக்கு ஒரு கடிதம் தருகிறேன். அங்கே கொண்டு போய்க் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். சௌகரியப்பட்டால் சந்திப்போம் ” என்றார். நான் ஒத்துக்கொண்டேன். உடனே அவர் உள்ளே போய் ஒரு கடிதம் எழுதி அதை உறையில் போட்டு ஒட்டுமுன் என்னிடம் கொண்டுவந்து காட்டினார். அதில் படம் வெகு நன்றாக இருப்பதாகவும் பேசினபடி படத்துக்கு ரூ. 1500-ம் செலவுக்கு ரூ. 100-ம் தந்துவிடவேணும் என்றும் அதில் ‘அட்வான்ஸ் ‘ தந்த ரூ. 250-ம் நீக்கி மீதி 1350-ம், வேஷ்டி, புடவை, தாம்பூலத்துடன் தரவேண்டும் என்றும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை என்னிடம் தந்தது மட்டுமல்லாமல், ராமசாமி செட்டியார் அவருடைய வேலைக் காரர்களில் ஒருவனைக் கூப்பிட்டு முன்னாலேயே போய் சிவகாமி ஆச்சியிடம் படம் வந்திருக்கிற தகவல் சொல் லும்படி அனுப்பினார்.
மறுநாள் காலையில் படத்துடன் சிவகாமி ஆச்சியின் வீட்டுக்குப் போனோம். அந்த வீடு சொக்கலிங்கம் செட்டியார் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் இரண்டு லக்ஷம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அழகான கட்டிடம். அந்த வீட்டிலுள்ள ஒரு அலங்காரமான கூடத்தில் படத்தை சுவர் ஓரமாக நிறுத்தினோம். படத்தைப் பார்த்த உடன் சிவகாமி ஆச்சி கணவனை நேரில் கண்டு விட்டதுபோல் விழுந்து விழுந்து பலமுறைக் கும்பிட்டு விட்டு, முன்னாலேயே தயார் செய்துவைத்திருந்த ஒரு பெரிய பூமாலையைப் படத்துக்கு சூட்டச்செய்து தூபதீபம் காட்டி, கற்பூரம் கொளுத்தி வணங்கினார். அதன்பிறகு என் னைப்பார்த்து “நேற்றே ராமசாமி செட்டியார் சொல்லி யனுப்பினாங்க. உங்களுக்கு விருந்து செய்யச் சமையல் ஆவுது. சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகப் போகலாம் இருங்கள் ” என்று அந்த ஆச்சி வெகு உபசாரத்தோடு சொன்னார்கள். அருகிலிருந்த ஒரு அறையைக் காட்டி அங்கே எங்களைத் தங்கச் சொன்னார்கள். அப்படியே ஒத்துக்கொண்டு அறைக்குப் போகுமுன்னால் ராமசாமி செட்டி யார் கொடுத்த கடிதத்தை ஆச்சியிடம் கொடுத்தேன்.
நவீன அமைப்புகள் உள்ள அறை, அதில் நானும் என்னுடைய வேலையாள் ஒருவனும் எனக்குத் துணைவந்த வேறொரு நண்பரும் ஓய்வு கொண்டு உட்கார்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் சிவகாமி ஆச்சி வந்து “இதே அளவில் எங்கள் அக்கச்சி வீட்டுச் செட்டியார் படம் ஒன்றும், எங்க அப்பச்சி படம் ஒன்றும் நீங்கள் எழுதித் தரவேண்டும்” என்றார். “ஆகா! அதற்கென்ன! எழுதித் தருகிறேன். அது தானே என் தொழில். உங்கள் ஆதரவைத் தேடித் தானே இவ்வளவுதூரம் வந்திருக்கிறேன் ” என்றேன்.
“அதற்கப்புறம் இன்னும் இரண்டு மூன்று வேலைகூட நான் உங்களுக்கு வாங்கித் தரலாமென்றிருக்கிறேன்” என்றார் சிவகாமி ஆச்சி. ”ரொம்ப சந்தோஷம். உங்கள் தயவிருந்தால் எனக்கு வேலைக்கு என்ன குறைச்சல் ?” என்றேன், “ஆனால் நீங்கள் எங்களுக்கெல்லாம் கொஞ்சம் சல்லீசாகச் செய்து கொடுக்கவேணும்” என்றார் அந்த ஆச்சி. “அதற்கென்ன? கூடியமட்டும் சல்லீசாகவே செய்து கொடுக்கிறேன்.”
அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி தெரிவித்துவிட்டு எனக்கு அனேக ‘ஆர்டர்கள் ‘ வாங்கித்தரப் போவதாகப் பேசிவிட்டுப் போய்விட்டார்கள். சிறிது நேரம் சென்றபின் தின்பண்டங்கள், பழங்கள், பாயசத்துடன் நல்ல விருந்து நடந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு சொக்கலிங்கம் செட்டியாருடைய படத்துக்கு முன்னால் ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டு அதன்மேல் சந்தணம், தாம் பூலம் முதலியவை வழங்கப்பட்டன. பிறகு ஒரு தட்டத்தில் தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு முதலியவற்றுடன் சரிகை வேட்டியும், பட்டுப்புடவையும் வைத்து ஆச்சியவர்கள் கொண்டுவந்து என் அருகில் வைத்தார்கள். மறுபடியும் உள்ளே சென்று வெற்றிலை பாக்குமேல் வெள்ளி நாணயங்கள் பரப்பிய ஒரு தாம்பாளத்தை ஏந்திவந்து படத்துக் துத் தரவேண்டிய பணமென்று என்னிடம் தந்தார்கள். தரும்போதே ‘ நீங்கள் ரொம்ப நல்லமாதிரி என்று ராமசாமி செட்டியார் சொன்னாங்க. இந்த இடத்தை உங்கள் சொந்த வீடு மாதிரி எண்ணி அடிக்கடி வரப்போக இருக்க வேணும். நான் சொன்ன வேலைகளையெல்லாம் உங்களுக்கு வாங்கித் தருகிறேன்” என்று மிகவும் முகமலர்ச்சி யோடு சொன்னார்கள். நானும் வெகு மகிழ்ச்சியோடு அந் தத் தாம்பாளத்தை வாங்கி எனக்கு முன்னால் வைத்துக் கொண்டு அதிலிருந்த ரூபாய்களை எண்ண ஆரம்பித்தேன். நான் எண்ணுவதைப் பார்த்துக்கொண்டே ஆச்சி பக்கத்தில் நின்றார்கள், ரூபாயை எண்ணிக்கொண்டு போகப் போக என்னுடைய பூரிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போய், கடைசியில் மனதில் பெரிய புகைச்சல் உண்டாகிவிட்டது. அந்தத் தட்டில் ரூ 600 தான் இருந்தது. நான் மிகவும் ஏமாற்றத்துடன் “அறுநூறு ரூபாய் தானே இருக்கிறது” என்றேன்.
“ஆமாம், சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கெல்லாம் நீங்கள் சல்லீசாகத்தான் எழுதித் தரவேணும்” என்றார் ஆச்சி. எனக்கு வருத்தமும் கோபமும் மாறி மாறி வந்து இன்னது சொல்வதென்று தெரியாமல் சிறிதுநேரம் திணறிப் போனேன். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு “என்ன அம்மா! உங்களைப் போன்ற சீமான் வீட்டு ஆச்சிகள் இப்படிச் செய்யலாமா? ஐந்து மாதம் அதே வேலையாக வெகு பாடுபட்டு வேலை செய்ததற்கு இதுதானா வெகுமதி? இப்படி நடந்து கொள்வது உங்கள் கௌரவத்திற்குக் கொஞ்சம் கூட சரியல்ல. பேசினபடி வரவேண்டிய பாக்கி இன்னும் 1350 இருக்க, நீங்கள் 600 கொடுத்து ஏய்த்துவிடப் பார்க்கிறீர்களே” என்றேன். “அண்ணாமலை செட்டியார் படத்துக்கு எவ்வளவு வாங்கினிங்க?” என்றார் ஆச்சி. “அண்ணாமலை செட்டியார் படத்துக்கு ரூ. 850 தந்தார்கள். ஆனால்,” என்று நான் பேச்சை முடிப்ப தற்குள் “பின்னென்ன? நானும் ரூ. 850 தந்திருக்கிறே னல்லவா? என்னைய்யா அவங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நீங்களே சொல்லுங்கள் ” என்றார். “அண்ணாமலை செட்டியார் படம் வேறு. இந்தப் படம் வேறு. இதை வெகு சின்னப் படத்திலி ருந்து ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப மாற்றி எழுதவேண்டியிருந்தது. ‘ஆர்டர்’ வாங்கும்போதே இந்த கஷ்டங்களை யெல்லாம் சொல்லித்தான் ஒப்பந்தம் பேசப்பட்டது. நீங்களெல்லாம் இப்படிச் செய்தால் என் தொழில் எப்படி வளரும்?” என்றேன். ” என்னாய்யா இவ்வளவு அழுத்தம் பார்க்கிறீங்க. இதுக்கே கொஞ்சம் குறைச்சி வாங்கமாட்டமிங்கிறீங்களே. இன்னும் மற்ற வேலைகளெல்லாம் எப்படி உங்களுக்கு வாங்கித்தாரது?” என்றார்.
சாப்பாட்டுக்கு முன்னால் அந்த ஆச்சி என்னிடம் வந்து பல ‘ஆர்டர்கள் ‘ வாங்கித் தருவதாகச் சொன்ன தெல்லாம் இதற்காகத்தான் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. “மற்ற படங்களுக்கு வேண்டுமானால் குறைத்துப் பேசிக் கொள்ளலாம். இதற்குப் பேசினபடி கொடுத்துவிடுங்கள்” என்றேன். “விடமாட்டிங்க போலிருக்குதே. சரி பேசினபடியே வாங்கிக் கொள்ளுங்கையா” என்று சரேலென்று உள்ளே போய் மறுபடியும் ரூ. 150 கொண்டுவந்து தட்டில் வைத்து ‘ஐயா பேசின படி ஆயிரம் ரூபாயும் தந்தாச்சு. இனிமேல் ஒன்றும் தகராறு பேசக்கூடாது, சந்தோஷமாக எடுத்துக்கிட்டு போயிட்டுவாங்க,” என்றார். “அம்மா என்ன இப்படி யெல்லாம் பிசுக்குகிறீர்களே? பேசின பேச்சு படத்துக்கு ஆயிரம் ரூபாயும் வழிச்செலவுக்கு நூறு ரூபாயும் தருவது என்று, படம் திருப்தியாக இருந்தால் இன்னும் ஐந்நூறு சேர்த்துத் தந்துவிடுவதென்றும் ராமசாமி செட்டி யார்தான் பேசினார். அதேமாதிரி தானே கடிதத்திலும் எழுதித் தந்திருக்கிறார். கடிதத்தைப் பார்க்கவில்லையா?” என்றேன். “ராமசாமி செட்டியாருக்கு என்ன போச்சு ? அவர் எதை வேணுமானாலும் எழுதலாம். பணம் கொடுக்கிறது நானா? ராமசாமி செட்டியாரா?” என்றார் ஆச்சி. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. ராமசாமி செட்டியார் தான் பேசினவர், ‘அட்வான்ஸ்’ தந்தவரும் அவர்தான். அவர் படம் சரியாக இருக்கிற தென்று ஒத்துக்கொண்டு உங்களுக்குக் கடிதம் தந்திருக்கிறார். கடிதத்திலுள்ளபடி தந்துவிடவேணும். ஒரு செப்புச்சல்லி குறைந்தாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இப்படி நீங்கள் கண்ணியக் குறைவாக நடந்துகொள்ளக் கூடியவரென்று தெரிந்திருந்தால் நான் இங்கே வந்கிருக்கமாட்டேன் ” என்றேன்.
ஆச்சிக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னாய்யா கண்ணியக் கொறவு கண்டுபிட்டிங்க? படம் சரியா இருந்தாத்தானே இன்னும் ஐந்நூறு தரவேணும் என்று பேச்சு. படம் சரியாயிருக்குதூண்ணு மத்தவங்க சொல்லிப்பிட்டால் நான் ஒத்துக்குவேனா? படம் எனக்கு சரியாயில்லை. எங்க செட்டியார் வெள்ளைக்கார பொம்மை யாட்டம் செக்கச் செவேலுண்ணு இருப்பாங்க. இந்தப் படத்திலே ஒரு பக்கக் கன்னத்திலும் கழுத்திலும் கரி அப்பினாப்பிலே கன்னங்கரேலுண்ணிருக்குது. அவுங்க நெத்தியிலே சந்தனப் பொட்டுக்கு மேலே வைக்கிற குங்குமப்பொட்டு இவ்வளவு பெரிசா இருக்கவே இருக்காது! அவுக தூய வெள்ளையான வெளுத்த வேட்டி தான் கட்டுவாங்க. நீங்க எழுதியிருக்கிற வேட்டி அழுக்குத் துணியாட்டம் கருப்புக் கருப்பா இருக்குது. அவுங்க போடுகிறது ஒன்பது கல் மோதிரம், நீங்கள் எழுதியிருக்கிற மோதிரத்திலே ஒன்பது கல்லும் சரியாத் தெரியவேயில்லை! மேஜையிலே ரெண்டு கால் தான் தெரியுது! நாற்காலி யிலே ஒரு கால்தான் தெரியுது! அவுக போட்டிருந்த கெவுடு ஆறு முகமுள்ள உத்திராட்சம். அதிலே ரெண்டு முகம்தான் தெரியுது. படம் சரியாயிருக்கு தூண்ணு ராமசாமி செட்டியார் சொல்லிவிட்டால் நான் ஒத்துக்குவேனா” என்று ஆச்சி படத்தில் பல குற்றங்கள் சொன்னார்கள். அதைக்கேட்ட எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது.
சிரிப்பையும் கொதிப்பையும் அடக்கிக்கொண்டு நான் “அம்மா! பணதுக்காக இப்படியெல்லாம் மட்டமான பேச்சுகள் பேசவேண்டாம் ” என்றேன். ‘மட்டமான பேச்சு’ என்று நான் சொன்னதில் அந்த அம்மாளுக்கு அதிகக் கோபம் வந்துவிட்டது. “என்னங்கையா மட்டம் கிட்டமுண்ணு பேசறீங்க. ஒங்களை ரொம்ப நல்ல மனுசருண்ணல்ல நான் நெனைச்சேன். மட்டு மரியாதை யில்லாமல் நீங்க பேசறதைப் பார்த்தால் ரொம்ப அல்ப சாகவாசமாகவல்லவா இருக்குது. இப்படீண்ணு தெரிஞ்சிருந்தால் , இந்த ஊட்டுக்குள்ளேயே விட்டிருக்கமாட் டோமே. மூளியும் மூக்கரையுமாக நீங்கள் படம் எழுதியிருக்கிற நேர்த்திக்கு பேசினதுக்கு மேலே இனாம் வேறே தரணுமா? ஏன்? புள்ளையில்லாதவள் பணந்தானே போகட்டுமுண்ணு அந்தச் செட்டியார் எழுதிக்கொடுத்துப் புட்டாரோ! அந்த ராமசாமி செட்டியாரே வரட்டும். அவரோடு பேசிக்கொள்ளுங்கள். போங்க வெளியிலே. டேய் வெள்ளையா! இவுகளை வெளியே போகச் சொல்லி கதவைச் சாத்து” என்று ஆச்சி இரைந்தார்கள். “சரி – நான் அந்த செட்டியாரோடேயே பேசிக்கொள்கிறேன். டேய், தூக்கு படத்தை. இந்தப் படத்தை கடைத்தெருவில் காட்டி நாலு பேருக்கு இந்த நியாயத்தைச் சொல்லு வோம். படத்தைக் கட்டித் தூக்குங்கள்” என்றேன். “படத்தைத் தொடப்படாது” என்றார் ஆச்சி. “ஏன்? பணமா கொட்டிக் கொடுத்து விட்டீர்கள் படத்துக்கு? உங்கள் பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். என் படத்தை நான் எடுத்துக்கொண்டு போகிறேன். அதை தடுக்க உங்களுக்கு என்ன நியாயம் இருக்கிற தம்மா?” என்று சொல்லிவிட்டு அந்தப் படத்தைக் கட்டிக்கொண்டுவந்த பாய்கள் கயிறுகள் முதலியவற்றை நானே எடுத்துவந்து படத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டு, என்னுடன் வந்திருந்த நண்பர்களைப் பார்த்து படத்தைத் தூக்கிக்கொண்டு போகக் கூலியாட்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னேன்.
படத்தை நிச்சயமாக எடுத்துக்கொண்டு போய்விடுவேன் என்பதைக் கண்டபின் ஆச்சிக்குக் கொஞ்சம் அச்சம் வந்துவிட்டது. கோபம் தணிந்த குரலில் “என்னாய்யா இவ்வளவு பிடிவாதம் பேசு றீங்க. கொண்டாந்த படத்தை திருப்பித் தூக்கிக்கொண்டு போறது அவலக்ஷணம்” என்றார். “ஆமாம். நீங்கள் செய்கிறது. வெகு லக்ஷணம். நான் செய்வதுதான் அவலக்ஷணம்” என்றேன். ‘போனாப் போகுது. இன்னும் நூறு ரூபாய் தந்துவிடுகிறேன். படத்தை எடுக்காதிங்க” என்றார். “படந்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லையே. அதற்கென்னத்துக்கு இன்னும் நூறு ரூபாய் தருகிறீர்கள்? வேண்டாம். வேண்டாம். போதும் உங்கள் செட்டியாரை நான் இவ்வளவு பாடுபட்டுப் படம் எழுதி நான் அடைந்த பலன். உங்கள் செட்டியாருக்கு நீங்கள் செய்கிற மரியாதை வெகு லக்ஷணமாக இருக்கிறது. இந்த அநியாயத்தைப் பார்த்து உங்கள் செட்டியாருடைய ஆத்மா இந் நேரம் துடித்துக் கொண்டிருக்கும்” என்று வெகு ஆத்திரத் தோடு சொன்னேன். இந்த சமயத்தில் செட்டியாருடைய படத்துக்கு முன்னால் தரையில் கணீர் என்ற ஒரு கனத்த ஓசை உண்டாகி ‘ஙண ஙண’ என்று சத்தம் கேட்டது. அங்கிருந்த எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தோம். உடனே நான் வெகு சமயோசிதமாக “அம்மா பார்த்தீர்களா! செட்டியார் சொல்லுகிறார் கேளுங்கள். இவ்வளவு பெரிய ஆஸ்தியை உங்களுக்கு ஏகபோகமாக விட்டுப் போன அந்த செட்டியாருக்கு நீங்கள் செய்கிற அநியாயத்தைப் பொறுக்காமல் அவருடைய ஆத்மா ரொம்ப கோபித்துக்கொள்கிறது. அந்தக் கோபத்தின் அடையாளம் தான் அந்த ஓசை. உங்கள் செட்டியாருடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் நீங்கள் ஆளாகக்கூடாது” என்றேன்.
ஆச்சியினுடைய முகம் அச்சத்தால் வெளுத்து விகார மடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் – விழித்து விழித்துப் பார்த்துவிட்டு திடீரென்று படத்துக்கு முன்னால் விழுந்து கும்பிட்டுவிட்டு “ஐயா, கோவிச்சுக்காதீங்க, கொஞ்சம் பொறுங்க, எல்லாரும் இருங்கள்” என்று எங்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்ச் சிறிது நேரத்துக் கெல்லாம் வெளியில் வந்து “இந்தாங்கையா ராமசாமி செட்டியார் கடிதத்தில் எழுதியிருக்கிறபடி பூரா பணமும் இருக்குது, சந்தோஷமாக எடுத்துக் கொள்ளுங்கள் ” என்று பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். எண்ணிப் பார்த்தேன். எல்லாம் சேர்ந்து வரவேண்டிய பாக்கி ரூ. 1350-ம் வந்துவிட்டது. நான் வந்தனத்தைத் தெரிவித்து விட்டு “அம்மா! இந்தப் பணம் உங்களுக்கு ஒரு துரும்பு. ஆனால் எனக்கு இது மிகவும் பெரியது. நீங்கள் மனது வைத்தால் எவ்வளவு வேணுமானாலும் செய்யலாம். ராமசாமி செட்டியார் பேசினபடி வியாபார முறையில் வரவேண்டியது வந்துவிட்டது. அதற்குமேல் கேட்க நியாய மில்லை. இருந்தாலும் படம் உங்கள் செட்டியார் படம். பணம் உங்கள் பணம். உங்களை நாடி நான் உங்கள் வாசலுக்கு வந்த சந்தோஷத்துக்காக நீங்கள் ஒன்றும் எனக்கு வெகுமதி தரவில்லையே” என்றேன். உடனே அந்த ஆச்சி “நல்லாத் தருகிறேன்” என்று மீண்டு உள்ளே போய் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்காகத் தனி வந்தனம் சொல்லி ஆச்சியைப் புகழ்ந்துவிட்டு, புடவை, வேட்டி, பழம் தேங்காய், பாக்கு வெற்றிலை, பணம் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெகு குதூகலமாக விடை பெற்றுக்கொண்டோம்.
படத்துக்கு முன்னால் தரையில் உண்டான ஓசை வேறொன்றுமில்லை. படத்துக்கு மாலையிட்டு அலங்காரங்கள் செய்து தூபதீபம் காட்டிய போது, படத்துக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு பெரிய ‘நிக்கல்’ ஊதுவத்தி ஸ்டாண்டுகள் புகையும் ஊதுவத்திகளோடு வைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று ஜன்னலுக்குப் பக்கமாக இருந்தது. ஜன்னலுக்கு நேராக ஒரு அலங்காரப் படுதா தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் படுதா வேகமாக அடித்த காற்றில் ஊதுவத்திக் கிண்ணத்தின்மேல் மோதி அதைத் தள்ளிவிட்டது. கிண்ணம் பெரிய கிண்ணம். உயரத்திலிருந்து வேகமாகத் தள்ளப்பட்டு விழுந்ததால் ’கணீர்’ என்று விழுந்தது. ‘ ஙண ஙண’ என்று உருண்டது. இப்படி ஊதுவத்திக் கிண்ணம் ஒன்று எனக்கு சமய சஞ்சீவிபோல் உதவி செய்தது.



