தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை

3. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனக்கு வினாத் தெரிந்தபின் என் தாயாரும் நான்கு தமக்கைகளும் பிறரும் ஒரு கல்யாணத்துக்காக நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூர் என்னும் ஊருக்கு பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூர் பதினெட்டு மைல். “குஷன் டயர்’ என்ற கெட்டி ரப்பர் போட்டு ‘ப்ரீ வீல்’ (Free wheel) இல்லாமல் ஒரே ஒரு சைக்கிள் வண்டி வெகு புதுமையான பொருளாக எங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்திருந்த காலம். ’மோட்டார் கார்’ என்ற பேர் கூட அப்போது காதில் விழுந்ததில்லை. குதிரை வண்டியே அபூர்வம். மாட்டு வண்டிகள்தான் அக்காலத்துப் பிரயாணங்களுக்கு வழக்கமாயிருந்த வாகனம். நாங்கள் போனது ஒரு இரட்டைமாட்டு வண்டியில். வேகமாக விரட்டினால் மணிக்கு மூன்று மைல் வீதம் கொஞ்ச தூரம் போகும். முடுக்காவிட்டால் இரண்டு மைல் வீதம் கூட போகாது. பாதையும் நன்றாக இருக்காது. அதனால் காட்டுப்புத்தூருக்குப் போய்ச்சேர குறைந்தது ஏழு மணி நேரம் பிடிக்கும்.

விடியற்காலம் சுமார் ஐந்து மணிக்குப் புறப்பட்டோம். அந்நேரத்தில் உணவு அருந்திவிட்டுப் புறப்பட முடியாது. காப்பிக்கடைகள் தோன்றாத காலம். வழியில் உணவுக்கு வழியில்லை. அதற்காக இரவிலேயே கட்டி வைத்திருந்த புளி சாத மூட்டையுடன் புறப்பட்டோம். சுமார் ஒன்பது மைலுக்கப்பால் பாதை ஓரத்திலிருந்து ஒரு தோட்டக் கிணற்றின் கரையிலிருந்த மாமரத்தின் அடியில் தங்கி உணவு அருந்த இறங்கினோம். சாப்பிடத் தொடங்குமுன் தண்ணீர் மொண்டு வர எங்களுடன் வந்த ஒருவர் பாத்திரத்தோடு கிணற்றில் இறங்கினார். நான் கிணற்றை எட்டிப்பார்த்தேன். கிணற்றில் தண்ணீர் இருக்கிற இடமே தெரியவில்லை. பசும் புல் தரைபோல் ஒரே பச்சை தென்பட்டது. அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லையோ என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிற போதே கிணற்றில் இறங்கினவர் படிகளில் நின்று கொண்டு புல் தரைபோல் காணப்பட்ட அந்த மட்டத்துக்குள் கையை விட்டு நாற்புறமும் வேகமாகச் சுழற்றினார். உடனே பசுமை விலகி அங்கே கருமை காணப்பட்டது. அந்த இடத்தில் பாத்திரத்தை அமுக்கித் தண்ணீர் மொண்டார்.

அப்போதுதான் மேலே தெரிந்த பசுமை முழுதும் பாசி என்பதை அறிந்தேன். தண்ணீர் வந்தபின் எல்லோரும் உட்கார்ந்து கட்டமுது உண்டோம். உண்ணும் போது நான் குடிக்கத் தண்ணீர் கேட்டேன். ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தார்கள். புளி சாதத்தைத் தின்று அது தொண்டையை அடைக்கிறது போலிருந்த அவசரத்தில் தண்ணீரை வாங்கின உடனே வாயில் ஊற்றினேன். ஒரு பெரிய பாசிக்கொத்து என் வாயில் விழுந்தது. உடனே சாதத்தோடு அதையும் துப்பிவிட்டுத் தண்ணீரை உற்றுப்பார்த்தேன். அதில் ஆயிரக் கணக்கான பாசித் துணுக்குகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. அதைக்கண்டு அருவருப்புண்டாகி அந்தத் தண்ணீரைக் குடிக்க மனம் வராமல் என் தாயாரைப் பார்த்து, “என்னம்மா இப்படி அசுத்தமாயிருக்குது இந்த தண்ணீர், தூ! இதையா குடிக்கிறது?” என்று அந்த பாத்திரத்தை என் தாயாரிடம் நீட்டினேன். அப்போது என் பக்கத்திலிருந்த எங்கள் வயதான அத்தை, ”அது வெறும் பாசியப்பா. அது என்ன பண்ணும்? சும்மா குடி. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது’ பாவம்” என்றார்.

அது எனக்குப் புரியவில்லை. என் தாயாரைக் கேட் டேன். என் தாயார், “ஆமாம் சாமி! பெரியவங்க அப்படித் தான் சொல்லுகிறாங்க. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கப்படாது” என்று சொல்லிக் கொண்டே அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த சிறு பாத்திரத்தின் வாயில் கட்டுசாதம் கட்டிவந்த துணியின் மூலையைப் போட்டு குடத்திலிருந்த வேறு தண்ணீரை அதில் ஊற்றி வடிகட்டி எனக்குக் குடிக்கத் தந்தார்கள்.

நான் அதைக் குடித்துவிட்டு சும்மா இருந்துவிட்டேன். இந்தத் “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது” என்ற பழமொழியை முதல் முதலில் நான் அப்போதுதான் அறிந்தேன். அதன் பிறகு அதைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் அதன் கருத்து என்ன வென்று ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஆசையோ, அவசியமோ உண்டாகவில்லை. மொத்தத்தில் தண்ணீரைப் பழித்துக்கொண்டு குடிக்காமல் இருந்துவிட்டுத் தொண்டை வறண்டு அபாயத்துக்கு ஆளாகிவிடக் கூடாதென்று அப்படிச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது, என்று மட்டும் சிற்சில சமயங்களில் எண்ணிவிட்டுப் பிறகு அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை.

1822-ல் நாமக்கல்லில் சுகாதார இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீ குன்னிராமன் நாயர் என்பவர் எங்களுக்கு மிக வும் நெருங்கிய நண்பராகிவிட நேர்ந்தது. எப்படி என்றால் இப்போது நாமக்கல்லில் இருக்கிற மாபெரும் தேச பக்தரான ஸ்ரீ நாகராஜ-ஐயங்காரவர்களுடன் நானும் சில பொதுநல ஊழியர்களும் நெடுநாளாக சமூகசேவை செய்து வந்தோம், அந்த சேவைகளில் முக்கியமானது வெக்கை, காலரா, பிளேக், விஷஜுரம் முதலிய தொத்துவியாதிகள் பரவுகிற இடங்களுக்கெல்லாம் சென்று, நோய்கண்ட இடங்களுக்கு மருந்து கொடுத்தும், நோய் காணாத இடங் களில் நோய் வராமல் தடுப்பதற்கான எச்சரிக்கைச் சொற் பொழிவுகள் செய்தும் வந்தோம். அதற்காக சுகாதார இலாக்கா அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது மிகவும் அவசிய மாக இருந்தது. எங்களுடைய சேவைகளைப் பாராட்டின அதிகாரிகள் நண்பர்களாகிவிட்டார்கள்.

அந்த சமயத்தில் சர்க்கார் முயற்சியாக ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஆண்டு சுகாதார வாரம் கொண்டாடப்பட்டு வந்தது. பொதுமக்களுடைய ஆதரவைத் தேடி அந்தக் கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்தவேண் டிய கடமை சுகாதார இலக்கா அதிகாரிகளைச் சேர்ந்தது. அதனால் ஸ்ரீ நாகராஜ ஐயங்காருக்கும், எனக்கும் பொது மக்களிடத்திலிருந்த செல்வாக்கும் அந்த அதிகாரிகளுக்கு மிகவும் அனுகூலமாக இருந்தது.

அத்துடன் என்னுடைய சொற்பொழிவுத் திறமையும், கல்வியறிவும், கவி பாடும் திறனும் அவர்களுடைய சுகாதாரப் பிரசாரத்துக்கு மிகவும் பயன்பட்டது.

அதனால் என்னுடைய உதவிகளை மிகவும் புகழ்ந்து சுகாதார இன்ஸ்பெக்டர் குன்னிராமன் நாயர் ஜில்லா சுகாதார அதிகாரியாக இருந்த பி. என். கே. தம்பி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். என்னை நேரிலும் நன்றாகத் தெரிந்திருந்த தம்பி அவர்கள் மாகாண சுகாதார அதிகாரியான ஸ்ரீ மாத்யூஸ் என்பவருக்கு எழுதினார். அந்த மாகாண அதிகாரி ஸ்ரீ மாத்யூஸ் என்பவர் எனக்கு நேராகப் பாராட்டுகள் எழுதி, சொந்த முறையிலும், அதிகாரி என்ற முறையிலும் தமிழ்நாட்டில் சுகாதாரப் பிரசாரத்திற்கு உதவும்படியாகப் பாட்டுகளும், நாடகங்களும் நான் எழுதி ஒத்தாசை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்காகப் பல சுகாதாரப் பாட்டுகளையும் “அரவணை சுந்தரம்” என்ற ஒரு வேடிக்கையான நாடகமும் எழுதிக்கொடுத்தேன். அந்த நாடகமும், பாட்டுக்களும் நூல் வடிவாக அச்சடிக்கப் பட்டு சுகாதார இலாக்காவின் மூலமாகவே பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சுகாதார வாரத்தில் பாடவும், நடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

‘அரவணை சுந்தரம்’ என்ற அந்த நாடகம் திருச்செங்கோட்டிலும் நடிக்கப்பட்டது. அந்த நாடகத்தில் மிகவும் முக்கிய அம்சங்கள் குடிப்பதை ஒழிக்கவேண்டும் என்பதை பாமர மக்களுடைய மனதில் நன்றாகப் பதியவைக்கும்படி யான சில காட்சிகள். நகைச்சுவையோடு மதுவிலக்கைப் பற்றிய நல்லறிவைப் புகட்டக்கூடிய இந்தக் காட்சிகள் ரொம்பவும் கவர்ச்சி தரக்கூடியனவாக அமைந்தன. திருச்செங்கோட்டில் இந்த நாடகம் முதல் தடவையாக நடிக்கப் பட்ட சமயத்தில் ஸ்ரீ ராஜாஜி அவர்கள் அந்த ஊருக்குப் பக்கத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்துகொண்டு மது விலக்கு பிரசாரமே முக்கிய வேலையாக மேற்கொண்டு கள்ளுக்கடைகளை மூடி விட வேண்டும் என்று சர்க்காருக்குப் பாமரமக்களுடைய கையெழுத்துள்ள விண்ணப்பங்களை தயார் செய்து கொண்டிருந்தார். அதனால் திருச்செங்கோடு வாசிகள் ராஜாஜி தலைமையில் அந்த நாடகம் நடக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்கள். நாடகம் ராஜாஜி தலைமையில் நடந்தது.

நாடகம் முடிந்தபின் “இந்த நாடகம் யார் எழுதினது?” என்று ராஜாஜி அங்கிருந்தவர்களைக் கேட்டார். “நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதினது” என்று ஒருவர் பதில் சொன்னார். “அப்படிச் சொல்லுங்கள். நானும் அப்படித்தான் யூகித்தேன்” என்று கூறி மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்த சுகாதார இன்ஸ்பெக்டரிடம், “இந்த நாடகத்தை ஒவ்வொரு கிராமத்திலும் நடிக்கும்படியாக சுகாதார இலாக்கா மூலமாக ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். ராஜாஜி சொன்ன அபிப்பிராயத்தை அங்கிருந்த சுகாதார இன்ஸ்பெக்டர் மறுநாளே சென்னை மாகாண சுகாதார அதிகாரிக்குத் தெரியப்படுத்தினார்.

சொந்த முறையில் ராஜாஜி எனக்கும் ஒரு கடிதம் எழுதி அந்த ‘அரவணை சுந்தரம்’ என்ற நாடகத்தைப் பாராட்டி என்னை ஆசீர்வதித்தார்.

அப்போது ராஜாஜி கவர்னர் ஜெனரலாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ இருக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சிக்கும், அந்த ஆட்சியின் பிரதிநிதியான வெள்ளைக்கார ’வைஸ்ராய ‘க்கும் எதிரியாகத் தீவிர ஒத்துழையாமைத் தலைவராக இருந்தார். ஆனாலும் ராஜாஜியிடத்தில் அப்போதும் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் ராஜாஜி அவர்கள் என்னுடைய ‘அரவணை சுந்தரம்’ என்ற நாடகத்தை எல்லா ஊர்களிலும் நடிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்ததற் கிணங்கி சுகாதார இலாக்கா மூலமாக அந்த நாடகம் தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் நடத்தப்பட்டது. பல ஊர்களிலும் அதைப் பார்த்தவர்கள் என்னை மிகவும் பாராட்டி எழுதினார்கள். அதில் மிக்க மகிழ்ச்சியடைந்த ‘நாமக்கல் சுகாதாரவாரக் கொண்டாட்டக் கமிட்டியார் ‘ எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்க விரும்பினார்கள். அதற்காக ஒரு விருந்து நடத்தி, அந்த விருந்தின் முடிவில் சென்னை மாகாண சுகாதார அதிகாரியான மாத்யூஸ் அவர்களே எனக்கு அந்தப் பதக்கத்தைப் பரிசளிக்க வேண்டுமென்று ஏற்பாடாயிற்று.

விருந்து நடந்தது. பல பேருடைய பாராட்டுரைகளுக்குப் பின் ‘பப்ளிக் ஹெல்த் டைரக்டரும்’ பல புகழுரைகளோடு பதக்கத்தை எனக்குப் பரிசளித்தார். கூட்டம் முடிந்து நான் அவரிடம் விடை பெற்றுக்கொள்ளும் போது, அவர் “தங்களோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். தங்கள் வீட்டுக்கு நாளை வரலாம் என்றிருக்கிறேன்” என்றார்.

நான் சற்றே திடுக்கிட்டு, “தாங்கள் வரவேண்டும் என்ற சிரமம் வேண்டாம். நானே வேண்டுமானால் தாங்கள் தங்கியிருக்கிற பங்களாவுக்கு வருகிறேன்” என்றேன். அதற்கு அவர், “இல்லையில்லை, நானே உங்கள் இருப்பிடத்திற்கு வந்து மரியாதை செய்ய விரும்புகிறேன்,” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

அதற்குமேல் நான் தட்டிக்கழிக்க முடியவில்லை. “நாளை காலையில் காப்பி அருந்த என் வீட்டிற்குத் தாங்கள் வரமுடியுமானால் நான் மிக்கப் பெருமையடைவேன் ” என்றேன். உடனே அவர் ஒத்துக்கொண்டார். அவருடன் இருந்த ஜில்லா சுகாதார அதிகாரி என். கே. தம்பி அவர்களையும், தாலூக்கா அதிகாரி குன்னிராமன் நாயர் அவர்களையும், மாத்யூஸ் அவர்களுடன் காப்பி சாப்பிட என் மனைக்கு வரும்படி கேட்டுக்கொண்டேன்.

அந்தப்படியே அவர்கள் மூவரும் மறுநாள் காலையில் என் வீட்டிற்கு வந்தார்கள். ஆகாரம் அருந்திய பின் அந்த மூன்று சுகாதார உத்தியோகஸ்தர்களும் நானும் மட்டும் பேச உட்கார்ந்தோம். அவர்கள் மூன்று பேரும் மலையாளிகள். மாத்யூஸ் என்பவர் ‘சிரியன்’ கிறிஸ்துவர். அவர் என்னோடு பேச விரும்பிய விஷயம் தமிழ்மொழி சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி. அதை ஆங்கிலத்தில் சொல்லிப் பயனில்லை. அதனால் வெகு கஷ்டப்பட்டுக் கொண்டு பெரும்பாலும் மலையாளம் கலந்த தமிழில் இடையிடையே ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்துக் கொண்டுப் பேசினார். சுகாதார டைரக்டருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையின் சாராம்சம் பின்வருமாறு :

டைரக்டர், “எனக்குத் தமிழ் நன்றாகப் பேச வராவிட்டாலும் நன்றாகப் புரியும். உங்களுடைய பாட்டுகளும் நாடகமும் எனக்கு மிகவும் இன்பமளிக்கின்றன. அவற்றில் எங்களுடைய பிரசாரத்திற்குத் தேவையான ஆழ்ந்த சுகாதார அறிவும், அனுபவமும் நிரம்பியிருக்கின்றன. கிராம மக்களுக்கு புரியும்படியான எளிய நடையிலும் இருக்கின்றன. ஆதலின் உங்களிடத்தில் கேட்டால்தான் என் மனதில் நெடுநாளாக இருந்து வருகிற ஒரு ஐயம் தெளியும். என்ற நம்பிக்கை உண்டாயிற்று. நானும் எத்தனையோ தமிழ் அறிஞர்களிடத்தில் இதைப்பற்றிக் கேட்டு விட்டேன். ஒருவராவது என் மனக்குறையை மாற்றுக் கூடியவர்களாக இல்லை. உங்களைக் கொண்டு ஐயத்தை நீக்கிக்கொள்ளலாம் என்ற ஆசையினால் உங்களிடம் அதைப்பற்றிப் பேச ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததை விட்டுவிடக் கூடாதென்று தான் என்னுடைய உத்தியோகப் பிரயாண திட்டங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு இங்கே வந்தேன். அந்த ஐயத்தைச் சொல்லுகிறேன். அதை உடனே நீங்கள் நீக்க முடியுமானால் ரொம்ப மகிழ்ச்சி யடைவேன். அப்படி உடனே நீக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் சிரமம் மேற்கொண்டாவது அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அது எனக்கு மட்டு மல்ல, பொதுவாகத் தமிழ்நாட்டிலுள்ள சுகாதார முன்னேற் றத்துக்கே நன்மை தரக்கூடியது ” என்றார்.

நான், “அது என்ன? சொல்லுங்கள். தங்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய என்னால் முடிந்தவரை செய்கிறேன்” என்றேன். அவர், “சொல்லுகிறேன், கேளுங்கள். அனேகமாக எல்லா தொத்து நோய்களும், மக்கள் உட் கொள்ளுகிற தண்ணீர் மூலமாகவும் சுவாசிக்கிற காற்றின் மூலமாகவும்தான் பரவுகின்றன. காற்றைக் காட்டிலும் கூட தண்ணீரைத்தான் அதிகமாகக் கவனிக்கவேண்டியது. எங்களுடைய சுகாதார இலாக்காவின் முக்கியமான அலுவல்களில் ஒன்று. எல்லா மக்களும் தண்ணீரைக் கூடுமானவரை சுத்தப்படுத்தி உட்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிப்பது. அது தங்களுக்குத் தெரியும்” என்றார். “ஆமாம்” என்றேன்.

“அப்படியிருக்க நாங்கள் கிராமங்களுக்குப் போய் எல்லோரும் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சித்தான் குடிக்க வேண்டும், அப்படிச் செய்தால் ‘காலரா’ முதலான வியாதிகள் வரவே வராது, என்று சொன்னால் அங்கே இருக்கிற கிழங்கள் ‘போமையா, தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது பாவம்’ என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல இடங் களில் இந்தப் பழமொழி வழங்குகிறது. உங்களுக்குத் தெரியுமா?” என்றார். “ஆமாம், இந்தப் பழமொழியை நான் என் சிறு பிராயத்திலிருந்தே கேட்டு வருகிறேன் ” என்றேன். “இந்த ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக் கூடாது’ என்ற பழமொழிக்கு என்ன பொருள்?” என்றார். “தண்ணீரை நோட்டம் பார்க்கக் கூடாது. அதிக தாகமுள்ள சமயத்திலும் ரொம்ப சுத்தம் பார்த்துக் கொண்டிருக்காமல் கிடைத்த தண்ணீரில் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டியது என்ற பொருளில் தான் இது வழங்கப்பட்டு வருகிறதாகக் கருதுகிறேன்” என்று சொல்லி என் சிறு பிராயத்தில் காட்டுப்புத்தூர் பிரயாணத்தில் நாங்கள் கட்டுச்சோறு தின்ற சமயத்தில் பாசிகள் நிறைந்த தண்ணீரை நான் பழித்ததையும், அப்போது ஒருவர் இந்தப் பழமொழியைச் சொல்லி என்னைப் பரிகசித்ததையும் சொன்னேன். “அப்படியானால் தூய்மையான தண்ணீரைத்தான் உட்கொள்ள வேண்டும் என்ற சர்வ சாதாரணமான சுகாதார அறிவு இல்லாதவர்களா தமிழர்கள் ? கல்வியிலும், கலைகளிலும், சுசிகரமான பழக்க வழக்கங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற நாகரிக-முடையவர்கள் தமிழர்கள் என்பது எப்படிப் பொருந்தும்? இந்தப் பழமொழியையும் இது வழங்கப்பட்டு வருகிற பொருளையும் மேல் நாட்டார் அறிந்தால் நம்மை வெகு அநாகரிகமான மக்கள் என்றல்லவா எண்ணுவார்கள்?” என்றார் அந்த சுகாதார அதிகாரி. “ஆமாம், எனக்கும் அந்தக் கவலை உண்டு ” என்றேன்.

” இந்தப் பழமொழிக்கு உண்மையான பொருள் வேறு ஏதாவது இருக்கவேணும் என்று எண்ணுகிறேன், ஏன் என்றால் நம் நாட்டுப் பழமொழிகள் எல்லாம் மிக்க அறிவும் அனுபவமும் நிறைந்தவைகளாக இருப்பதாக மேல்நாட்டார்களே பாராட்டினதை நான் பார்த்திருக்கிறேன். அப்படியிருக்க இந்தப் பழமொழிமட்டும் இவ்வளவு அநாகரிகமாக இருப்பது பொருந்தாது” என்றார். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றேன். “அப்படியானால் தாங்கள் கொஞ்சம் ஆராய்ச்சிசெய்து இதன் உண்மையான பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

“எனக்கும் அதுதான் ஆசை. முடிந்தமட்டிலும் முயற்சி செய்து பார்க்கிறேன் ” என்றேன்.

அதன் பிறகு மாத்யூஸ் அவர்கள் வேறு பல விஷயங்களைப் பேசிவிட்டு ஒரு சிறு ஆங்கில நூலை என்னிடம் கொடுத்து அதை எளிய தமிழில் மொழிபெயர்த்துத் தர வேணும் என்றும், அதில் உள்ள சில கருத்துக்களை கும்மி, கோலாட்டம் முதலானவற்றிற்கு உதவும்படியான பாட்டுகளாகச் செய்து கொடுக்கவேணும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த சிறு புத்தகம் அசுத்தமான தண்ணீரை அருந்தினால் நமக்கு வரக்கூடிய பல நோய்களையும் அவற்றிற்கான பரிகாரங்களையும் விளக்கக் கூடிய ஒரு வெகு நல்ல ஆங்கிலக் கட்டுரை. நான் அதை மொழிபெயர்த்துப் பாட்டுகளையும் இயற்றித் தருவதாக ஏற்றுக் கொண்டேன். விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு மாகாண சுகாதார டைரக்டர் சென்னையிலிருந்து எனக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் இந்த ’தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற பழமொழியின் பொருளை நான் ஆராய்ச்சி செய்ய வேணும் என்பதை நினைப்பூட்டிக் கொண்டே வந்தார். நானும் எனக்குத் தெரிந்த தமிழறிஞர்கள் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். பழமொழித் திரட்டு, நிகண்டு, அகராதி முதலான நூல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் எதிலாவது இதைப்பற்றி என்னவாவது கொஞ்சம் அறிந்து கொள்ளக் கூடுமா என்று ஆனமட்டும் தேடிப் பார்த்தேன். ஒன்றும் பலிக்கவில்லை. பல மாதங்கள் இதே நினைவாகப் பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டு அது கண்டுபிடிக்க முடியாத விஷயம் என்று அதைக் கைவிட்டேன். இந்த ஆராய்ச்சிக்காக அலைந்ததினால் நான் வரைந்து கொடுப்ப தாக முன்பணம் வாங்கியிருந்த சில ஓவிய வேலைகள் பாக்கியாக நின்று கிடந்தன. அவற்றைப் பூர்த்திசெய்துவிட ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் சென்னை சர்க்கார் ஆர்க்கலாஜிகல் (Archaeology) இலாக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய அதிகாரி நாமக்கல்லுக்கு வந்தார். ‘ஆர்க்கலாஜிகல் இலாக்கா’ என்பது பழமையான பொருள்களிலிருந்து பழங்கால உண்மைகளைக் கண்டறிய ஆராய்ச்சி செய்யும் இலாக்கா. அதாவது புராதனமான கோயில்கள், கோபு ரங்கள், கட்டிடங்கள், கல் வெட்டுகள், சிற்பங்கள், சிலை கள் முதலியவற்றிலிருந்து பண்டைக்கால வரலாற்று உண்மைகளை அறிவதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் வேலைக்கென்றே அரசாங்கத்தில் நடத்தப்பட்டுவரும் இலாக்கா. நாமக்கல் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள ஒரு சிறு நகரம். சிறப்பான விஷ்ணு ஸ்தலம்.

ஊருக்கு நடுவில் ஒரே கல்லாக இருக்கிற அழகான ஒரு குன்று உண்டு. அதன் உச்சியில் பழையகாலத்து ராணுவப் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட மதிற்சுவர்களும். மருந்து கிடங்கும் உள்ளன. ஓர் கோயிலும் உண்டு. குன்றின் கிழக்குப் பாகத்தில் பள்ளிகொண்டப் பெரு மாளுடைய ஆலயமும், மேற்கு பாகத்தில் ஸ்ரீ நாமகிரி, நரசிம்ம சுவாமியின் ஆலயமும் இருக்கின்றன. இந்த இரண்டு ஆலயங்களும் ஓரளவு அந்தக் குன்றின் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ள சிற்பக் கோயில்கள். அக்கோயில்களின் தூண்களும், சுவர்களும், மூலவிக்ரக சிலைகளும், பாறையோடு சேர்ந்த பகுதிகளே. சுவர்களில் புராணக்கதைகள் வெகு வேலைப்பாடுள்ள சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. அத்துடன் நாமகிரியம்மன் கோயிலுக்கு நேராக சற்று தூரத்தில் சுமார் பதினெட்டு அடி உயரமுள்ள ஒரு அனுமார் கற்சிலையும் இருக்கிறது. இந்த அபூர்வமான சிற்ப வேலைகளையெல்லாம் ‘போட்டோ’ படங்கள் பிடித்துக்கொண்டு அவற்றைப்பற்றி சொல்லப்படும் கர்ண பரம்பரையான கதைகளையும் எழுதிக்கொண்டு போவதற்காக அந்த புதைபொருள் ஆராய்ச்சி இலாக்கா அதிகாரி வந்திருந்தார். அவர் அந்தக் கோயிலில் உள்ள சிற்பங்களை ‘போட்டோ’ எடுக்க முயன்றபோது அங்கிருந்த அர்ச்சகர்கள் போட்டோ எடுத்தால் சாமியின் சக்தி குறைந்து விடுமென்று தடுத்துவிட்டார்கள். அர்ச்சகர்களை மீறி அதிகாரிகள் ஒன்றும் – செய்யமுடியவில்லை. ஆனால் பாறையைக் குடைந்து வெட்டப்பட்டிருக்கிற கோயிலின் சுவர்களில் வியக்கத்தக்க வேலைப்பாடுடன் செதுக்கப்பட் டிருக்கிற சிற்பங்களைப் போட்டோ பிடிக்காவிட்டாலும், ஓவியத்திலாவது வரைந்து கொண்டு போக வேண்டுமென்று அந்த அதிகாரி ஆசைப்பட்டார். அர்ச்சகர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். போட்டோ எடுப்பதில் திறமை மிக்க அந்த அதிகாரி ஓவியத்தில் அவ்வளவு கைத்திறம் உள்ளவரல்ல. அதனால் ஒரு ஓவியக்காரனைத் தேடவேண் டியதாயிற்று. அதற்காக விசாரித்தபோது என்னைப்பற்றிக் கேள்விப்பட்டு எனக்கு மிகவும் வேண்டியவரான ஒரு நண்பரைக் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.

அவர் வந்த சமயத்தில் நான் ஒரு தனவானின் உருவப் படத்தை எண்ணைச்சாயத்தில் (Oil Paint) எழுதிக் கொண்டிருந்தேன்.

வந்தவர்களை வரவேற்றேன். எனது நண்பர் புதைபொருள் ஆராய்ச்சி அதிகாரியை எனக்கு அறிமுகப் படுத்தி அவர் நாமக்கல்லுக்கு வந்த காரியத்தை விளக்கிச் சொன்னார். அந்த அதிகாரியின் உயர்நிலைக்குத் தகுந்த மரியாதை காட்டி அவரை உபசரித்தேன். நான் அப்போது வரைந்து கொண்டிருந்த படத்தைப்பார்த்து, அவர் மிகவும் புகழ்ந்து பாராட்டிவிட்டு, என்னால் அவருக்கு ஆக வேண்டிய காரியத்தைச் சொல்லிக் கோயிலின் உட்புறத்தில் உள்ள சிற்பங்களைச் சித்திரமாக வரைந்து கொடுக்கக் கேட்டுக்கொண்டார். நான் ஒப்புக் கொண்டேன். அவர் களிப்படைந்து பல இடங்களில் தாமே எடுத்துவந்த அனேக போட்டோ படங்கள் அடங்கிய தொகுதியை (Album) என்னிடம் தந்து, பார்க்கச் சொன்னார். அதில் அநேக கோயில்கள், குளங்கள், கோபுரங்கள், சிற்பங்கள், சிலைகள், ஓவியங்கள், கல் வெட்டுகள் முதலியவற்றின் போட்டோ படங்களும், ஒவ்வொரு படத்தின் அடியிலும் அதைப்பற்றிய குறிப்பு களும் காணப்பட்டன. ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து பார்த்து இதற்கான குறிப்புகளையும் படித்துக் கொண்டே வந்தேன். அதில் பாண்டிய நாட்டுக் கல்வெட்டுகள் என்ற ஒரு பகுதி வந்தது. ஒரு குளக்கரையின் மேல் படித் துறைக்குப் பக்கமாக இருந்த ஒரு கல்வெட்டின் படம் காணப்பட்டது. அது இப்போது நாம் பாதைகளில் பார்க்கிற ஒரு மைல்கல்லைக் காட்டிலும் அகலமாகவும் உயரமாகவும் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பழக்கத்திலிருந்த முறையில் அதில் எழுத்துக்கள் வெட்டப் பட்டிருந்தன. போட்டோ படத்தில் அந்த எழுத்துக்கள் நன்றாகத் தெரியவில்லை. ஆனால் படத்தின் கீழே இருந்த குறிப்புகளில் அந்தக் கல்லில் இருப்பது என்னவென்று எழுதப்பட்டிருந்தது. அது ஒரு சிறு செய்யுள் வடிவமாக இருந்தது. செய்யுளின் எதுகை, மோனை பார்க்கிற என்னுடைய இயல்பினாலோ என்னவோ செய்யுள் போன்ற அந்த சொற்றொடரை திருப்பித் திருப்பி மனதிற்குள்ளேயே படித்துப் பார்த்தேன். மின்சாரம் பாய்ந்தது போல் திடீரென்று ஒரு விஷயம் என் நினைவிற்கு வந்து உள்ளம் களித்து, உடல் சிலிர்த்து விட்டது.

அந்தக் கல்லிலுள்ள சொற்றொடர் அந்தக் குளத்துக்குள் நீரெடுக்க இறங்குகிறவர்-களுக்கு ஒரு எச்சரிக்கை. ”இந்தக் காலத்தில் குடி தண்ணீர் உள்ள குளங்களின் கரையின் மேல் நகரசபை, கிராமப்பஞ்சாயத்து முதலிய ’ஸ்தல ஸ்தாபனங்கள் ‘ இந்தக் குளத்தில் கை, கால் அலம்புகிறவர்களும், துணிகளைத் தோய்க்கிறவர்களும், ஆடு, மாடு முதலியவற்றை குளிப்பாட்டுகிறவர்களும், பாத்திரங்களைத் துலக்குகிறவர்களும், மற்ற வேறுவிதமான அசுத்தம் செய்கிறவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள்” என்று விளம்பரப் பலகைகள் போட்டிருக்கிறது போன்றது அந்தக் கல்வெட்டு. பலகைகளில் எழுதப்படுகிற இந்தக் காலத்து எச்சரிக்கை விளம்பரங்கள் வெகு சீக்கிரத்தில் மங்கி மறைந்துவிடுகின்றன. ஆனால் பாண்டியர் காலத்தில் நடப்பட்ட அந்தக் கல்வெட்டு எச்சரிக்கை இன்றைக்கும் உதவக்கூடியதாக இருக்கிறது.

அந்தக் கல்வெட்டிலிருந்த செய்யுள் போன்ற சொற்றொடரைப் பாருங்கள் :

“நீர்பிழை புரிவது ஊர்ப்பிழைத்தற்றால்

நெடுமுடி மன்னவன் கடுஞ்சினம் கொள்ளும்”

என்பது அந்த எச்சரிக்கை. பயன்தரக்கூடிய எதையும் பாடலாக எழுதிவைப்பது பழந்தமிழர்களுடைய மரபு என்ற பெருமையும் இந்தச் சிறு எச்சரிக்கையில் விளங்குகிறது. இனி இந்த சொல்லடுக்கின் பொருள்களையும் அதன் சுவையையும் கவனிக்க வேண்டும். ‘ நீர்பிழை புரிவது : தண்ணீரை அசுத்தப்படுத்துவது, ஊர்ப்பிழைத் தற்றால் : ஊருக்கே தீங்கு செய்வதைப்போன்ற குற்றமானதால், நெடுமுடி மன்னவன் கடுஞ்சினம் கொள்ளும் : அப்படி நீரை அசுத்தப் படுத்துகிறவர்களை அரசன் கடுமையாக தண்டிப்பான்’ என்பது இதன் கருத்து.

இதில் இப்போது நாம் கவனிக்கவேண்டிய குறிப்பான விஷயம் என்னவென்றால் ’நீர்பிழை’, ‘ஊர்ப் பிழை’ என்ற இரண்டு பதங்கள். ‘நீர்பிழை’ என்பது தண்ணீரை அசுத்தப்படுத்துவது, ‘ஊர்ப்பிழை’ என்பது ஊருக்கே தீங்கு செய்வது. தண்ணீரை அசுத்தப்படுத்துவது ஊரிலுள்ள எல்லா மக்களுக்கும் கெடுதி செய்வது போல என்று இந்தக் கல்வெட்டு சொல்லுகிறது.

நெடுங்காலத்திற்கு முன்னாலேயே குடி தண்ணீரைப்பற்றி இவ்வளவு சுகாதார அறிவோடு எச்சரிக்கை செய்துள்ள தமிழர்களா ‘தண்ணீர் எப்படி யிருந்தாலும் அதைப் பழித்துக்கொண்டிருக்காதே, குடித்துவிடு’ என்று பொருள் சொல்லும்படியான ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற பழமொழியைத் தந்திருப்பார்கள்? அல்ல. அல்ல.

இந்தக் கல்வெட்டிலுள்ள ‘ நீர்பிழை’ என்ற பதத்தைக் கண்டபின் அந்தப் பழமொழியின் உண்மையான உருவம் நமக்குத் தெரிகிறது. அது என்னவென்றால், ‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே’ என்பதுதான். இதன் பொருள் வெகு எளிது. அதாவது “பெற்று வளர்த்த உன் தாயாருக்கு ஒரு அபசாரம் செய்துவிட்டாலும் தண்ணீருக்கு அபசாரம் செய்யாதே’ என்பதுதான். புதை பொருளாராய்ச்சி அதிகாரி என்னை நாடி வந்ததினால் தற்செயலாகக் கிடைத்த இந்த விளக்கம் பெரிய அதிர்ஷ்டம் தான். கோயிலில் உள்ள சிலைகளை ஓவியமாக எழுதி அவருக்குத் தருவதற்குமுன் அவருடைய போட்டோ ஆல்பத்திலிருந்த இந்த கல்வெட்டுப் போட்டோவை சித்திரத்தில் வரைந்து நான் வைத்துக்கொண்டேன். அதிகாரிக்கு வேண்டிய ஓவியங்களை வரைந்து கொடுத்து அவரை அனுப்பினவுடன், சென்னை மாகாண சுகாதார டைரக்டருக்கு எழுதி அவர் கோரிய ஆராய்ச்சி கைகூடிவிட்டதாகவும் அடுத்த சுகாதார வாரக் கொண்டாட்டத்தில் அதை விளக்கி ஒரு சொற்பொழிவு செய்யப் போவதாகவும் எழுதினேன். அவர் சுகாதாரவாரக் கொண்டாட்டம் நடத்துகிற-வரைக்கும் பொறுத்திருக்க விரும்பாமல், அடுத்த பத்து நாளைக்குள் சேலம் ஜில்லாவில் சிற்சில இடங்களில் காலரா இருந்ததை உத்தேசித்து, அதற்காக உத்தியோக முறையில் சுற்றுப்பிரயாணத் திட்டம் போட்டுக்கொண்டு சேலம் வந்து முகாம் செய்துவிட்டு, எச்சரிக்கை யில்லாமல் நாமக்கல்லுக்கு வந்துவிட்டார்.

‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக் காதே’ என்ற பழமொழிதான் காலகதியால் ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்று மாறி விட்டது என்பதை விளக்கி, அதற்கு ஆதாரமாக நான் வரைந்து வைத்திருந்த கல்வெட்டுப் படத்தைக் காட்டி அதை நான் எப்படி அறிய முடிந்தது என்பதையும் சொன்னேன். ஸ்ரீ மாத்யூஸ் அவர்களுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி மேலிட்டு என்னைக் கைகுலுக்கிக் கட்டித் தழுவிக்கொண்டார். வரையரை யில்லாமல் எனக்கு வந்தனம் கூறி நான் வரைந்து வைத்திருந்த கல்வெட்டுப் படத்தையும் அதன் விளக்கத்தையும் வாங்கிக்கொண்டு போனார். ஆதலால் ‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே’ என்றுதான் அந்தப் பழமொழி இருக்கவேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *