
திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
3. மகிழ்ச்சியோடு செய்
மிகக் கடினமானதாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும். வீரன் ஒருவன் போர்ச்செயலில் ஈடுபட்டிருந்தான், அவனை வாரியடிக்கவந்த யானையைக் கையிலிருந்த வேலால் தாக்கினான். உடலிற் பதிந்த வேலோடு வீரிட்டு ஓடியது யானை. யானையோடு வேலும் போயிற்றே என்று வீரன் வருந்தினான்.
அப்பொழுது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பில் பாய்ந்தது. வீரன் அதைப்பற்றித் திருகிக் கையில் எடுத்துக்கொண்டு, மேலும் போர்செய்யத் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந்து நகைக்கிறான். போரிட இன்னுமொரு யானை வந்தாலும் வரட்டுமென்று மகிழ்ச்சியோடும், வெறியோடும் வேலேந்தி நோக்குகிறான். அவன் நெஞ்சில் பகைவனுடைய வேல்தாக்கிய புண்ணையும், அதலிருந்து கொட்டும் குருதியையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் நெஞ்சில் மகிழ்ச்சியே கூத்தாடுகிறது என்று வள்ளுவர் பொர்த்திறத்திலும், ஒரு செயல் திறத்தைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (774)
இது மூன்றாவது யானை.



