திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்

4. ஊக்கத்தோடு செய்

எக் காரியத்தைச் செய்தாலும் ஊக்கத்தோடு செய்தல் வேண்டும். அப்போது அச் செயல் விரைவில் வெற்றிபெறும் என்று வள்ளுவர் கூறுகிறார். அங்கும் ஒரு யானை, மிகவும் பெரியது. நீண்ட தந்தங்களையுடையது!

அப்போது ஒரு புலி யானையை நோக்கிப் பாய்ந்தது. மிகச் சிறிய உருவம், மிகச்சிறிய நகம் என்றாலும், அப் புலி ஊக்கத்தோடு இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்கும் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்குமாக யானைமீது பாய்ந்து தாக்குகிறது.

யானை ஒரு பக்கம் திரும்புவதற்குள்ளாகப் புலி பல பக்கங்களிலும் தாக்குகிறது. அத்தாக்குதலைத் தாங்க முடியாமல் யானை அஞ்சி ஓடுகிறது. கூர்மையான நீண்ட தந்தத்தை உடைய மிகப்பெரிய யானை மிகச் சிறிய நகத்தையும் மிகச்சிறிய உருவத்தையும் உடைய புலியின் தாக்குதலுக்கு அஞ்சுகிறது.

காரணம், புலிக்கு உள்ள ஊக்கமும் சுறுசுறுப்பும் யானைக்கு இல்லாமையேயாகும். இக்காட்சியை வள்ளுவர் ஒரு குறளால் காட்டிச் செயல்திறனுக்கே ஓர் ஊக்கத்தை ஊட்டுகிறார்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்⁠ (599)

இது நான்காவது யானை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *