
திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
7. மயங்காமல் செய்
இங்கும் ஒரு யானை நிற்கிறது. பக்கத்தில் ஒரு அழகிய பெண்னும் நிற்கிறாள். ஏதோ ஒரு வேலையாகப் போகிற ஒருவன் இங்கு நின்று யானையின் முகத்தையும், அதன் தலையில் உள்ள இரு குமிழ்களையும் அதன்மேல் போர்த்தியிருக்கும் “முகபடாம்” என்ற சேலையையும், பக்கத்தில் நிற்கின்ற அழகிய பெண்ணையும், அவளது எடுப்பான நெஞ்சையும், அதன்மேல் அணிந்துள்ள சேலையையும் மாறிமாறிப் பார்க்கிறான். அவனுக்கு இந்த இரண்டும் ஒன்றுபோலவே தோன்றுகிறது.
இறுதியில் அவன் கூறியது என்ன தெரியுமா? “கொல்லும் குணமுடைய இந்த யானை என்னைக் கொல்லாது விட்டது; கொல்லாக் குணமுடைய இப்பெண், என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறாள்” என்று.
இந்த மயக்கம் அவன் மேற்கொண்ட செயலைச் செய்ய முடியாமல் இழக்கும்படி செய்துவிட்டது.
ஆகவே, எதைச் செய்தாலும் இடையில் மயக்கத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். (1087)
இது ஏழாவது யானை.
திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
8. கலங்காமல் செய்
எந்த நல்ல காரியத்தையும் எவர் தொடங்கினாலும் அதற்குப் பல இடையூறுகள் வரும். சிலர் புண்படுத்துவர். சிலர் பின்னுக்கு இழுப்பர். சிலர் துன்பப்படுத்துவர். சிலர் குறை கூறுவர். சிலர் பழியுங் கூறுவர். இன்னுஞ் சிலர் தடுக்கவும் செய்வர்.
இவைகளை யெல்லாம் கண்டு கலக்கமடைகிறவர்களால் எச்செயலையும் செய்ய முடியாது. அவர்கள் செயல்திறனையே இழந்துவிடுவர். ஒரு நல்ல செயலை மேற்கொண்டவர்கள் எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் கருமமே கண்ணாகக்கொண்டு அவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று வள்ளுவர் செயல்திறனுக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். இதைக் கேட்ட நாம்,”இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?” என்று வள்ளுவரையே கேட்கின்றோம். அவர் நம்மை அழைத்துக் கொண்டு யானைக் காட்டுக்கு சென்று ஒரு யானையைக் காட்டுகிறார். அதன் உடம்பை 20, 30 அம்புகள் துளைத்து இருக்கின்றன. சில அம்புகள் அதன் உடம்பிலேயே புதைந்தபடி காட்சியளிக்கின்றன. அம்புபட்ட இடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருக்கிறது. “அப்போதும் அந்த யானை அழாமல் வருந்தாமல் சுருண்டு விழாமல் பீடு நடை நடந்து, தன் பெருமிதத்தை நிலைநிறுத்துகிறது பார்” என்று வள்ளுவர் நம்மைத் தூண்டுகிறார். அப்போதுதான் நமக்கு, எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் நாம் மேற்கொண்ட காரியத்தைச் செய்யும் துணிவும் ஏற்படுகிறது. எப்படி இந்த அறிவுரை!
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு (597)
இது எட்டாவது யானை.
திருக்குறளில் உள்ளதே எட்டு யானைகள்தாம். அந்த எட்டு யானைகளையும் வள்ளுவர் செயல்திறனுக்கே பயன்படுத்தி நம்மை ஊக்குவிக்கிறார். எப்படி குறள் காட்டும் செயல்திறன்?
இவற்றைப் படித்ததும், எதையாவது செய்து தீர வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் நமக்கும் உண்டாகின்றன. செயலில் இறங்குகிறோம். உடனே வள்ளுவர்,
“தம்பி! செயல்திறனைக் காட்டுவதற்காக எதையாவது செய்துவிடாதே. செய்யத் தக்கதை மட்டுமே செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டாலும், செய்யத்தகாத எதையும் செய்துவிட்டாலும் நாடும் கெடும்; சமூகமும் கெடும்; குடும்பமும் கெடும்; நீயும் கெடுவாய்” என்று கூறுகிறார்.
செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
இப்படிப் பொதுவாக கூறிவிட்டால், நமக்கு என்ன விளங்குகிறது? செய்யத் தக்கது எது? செய்யத் தகாதது எது? என்பது புரிய வேண்டாமா? என எண்ணுகிறோம். திருக்குறள் அந்த அளவிற்கும் சென்று நமக்கு விளக்குகிறது.
செய்யத் தக்கவை
1. நாட்டிற்கும் மொழிக்கும் தனக்கும் பிறருக்கும் நன்மையளிக்கும் செயல்கள் அனைத்தும் இன்பம் பயக்கும் செயல்கள். அச் செயல்கள் அனைத்தையும் செய். மேலும் அவற்றைச் செய்யும்பொழுது பலரால் பலவிதமான துன்பங்கள் பலவேறு வழிகளில் வந்து உன்னைத் துன்புறுத்தும். அப்பொழுதும் அத்துன்பங்கள் அனைத்தையும் கடந்து நின்று நற்செயல்களைச் செய்து முடிக்கவேண்டும்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)
2. பழியையும் பாவத்தையும் உண்டாக்குகின்ற தீயசெயல்களில் எதையும் செய்துவிடாமல், இன்பத்தையும் புகழையும் தருகின்ற அறச்செயல்கள் அனைத்தையுமே செய்து மகிழ்.
செயற்பால தோரும் அறனேஒருவற்கு
உயற்பால தோரும் பழி. (40)
3. அந்த அறச்செயல்களையும் இன்றே செய்! இப்போதே செய்! பின்பு செய்யலாம் என ஒத்திப் போடாதே! ஒத்திப்போட்டால் அதை நீ நினைக்கின்ற காலத்தில் செய்ய முடியாமற் போனாலும் போய்விடும். அப்போது நீ அடையவேண்டிய பலனையும் இழந்து விடுவாய்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)
4. நல்ல வழியில் பொருளைத் தேடு. சிக்கனமாக வாழ்வை நடத்து. எஞ்சிய பொருளைச் சேமித்துவை. அதையும் பாதுகாத்து வை. அப்பொழுதுதான் நட்பும் சுற்றமும் பெருகும். வாழ்வும் ஒளிவீசும். அதுமட்டுமல்ல; பகைவரும் தானே அடங்குவர்.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனிற் கூரியது இல். (759)
5. நல்லவைகளைச் செய்வதிலும் அது வெற்றி பெறும் வழிகளை நன்றாக எண்ணிச் செய்யவேண்டும். ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிட்டுப் பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று எண்ணுவது நல்லதல்ல. அது வெற்றிபெறத் துணைசெய்யாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு, (467)
6. இன்சொல் கூறுதல், நட்புக் கொள்ளுதல், பொருள் வழங்குதல் ஆகிய நற்செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகிவிடும். ஆகவே அவைகளை அதற்கு உரியவரல்லாதவர்களுக்குச் செய்துவிடக் கூடாது. செய்தால், அவை நற்செயலாக இருப்பினும் தீமையாக முடிந்துவிடும்.
நன்றாற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை. (469)
7. எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அது வெற்றியாக முடிவதற்கு ஏற்ற வழியையும், முயற்சியையும், அதற்கு வரும் இடையூறுகளையும், அவற்றை விலக்கி முடிக்கும் முறையையும், அதனால் வரும் பயனையும் நன்றாக எண்ணிப் பார்த்தே செய்யவேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (576)
இந்த ஏழு குறள்களாலும் இதுபோன்ற பிற பல குறள்களாலும் மக்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்யும் வழிவகைகளை யெல்லாம் குறள் கூறுகிறது.
செய்ய வேண்டியவைகளைச் செய் என்பது மட்டுமல்ல, செய்யத்தகாதவைகளையும், செய்யக் கூடாதவைகளையும் கூடக் குறிப்பிட்டு, அவற்றைச் செய்யற்க என்றும் குறள் கட்டளையிடுகிறது. அவற்றுள் சில…..
செய்யத் தகாதவை
1. பெற்ற தாயின் வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்கு இழிவு. ஏனெனில், அவன் பத்து மாதம் குடியிருந்த கோயில் அது. ஆகவே அவன் பெரிதும் முயன்று அத் தாயாரின் பசியைப் போக்கவேண்டியது அவனது கடமை. ஆனால் அந்த நிலைமையிலும் சான்றோர்களால் பழிக்கத்தகுந்த தீயவழிகளில் பொருளைத் தேடி அப் பசியைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றும் குறள் கூறுகிறது.
ஈன்றாள் பசி காண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
2. உன் உயிரே போவதாய் இருப்பினும் சரி, பிற உயிர்களை கொன்று தின்று உன் உயிரைக் காப்பாற்றும் செயலைச் செய்யாதே. அது மட்டுமல்ல; உன்னை ஒன்று கொல்ல வந்தாலும் அதனைக் கொன்று உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினையாதே. அவ்வாறு கொன்று உயிர் வாழ்ந்தால் அது பழிபாவத்தோடு உயிர் வாழும் செயலாகப் போய்விடும்.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)
3. என்னிடத்தில் ஒன்றுமில்லையே, நான் வறியன் என்று எண்ணி, அது தீருதல் பொருட்டு, பிறர்க்குத் தீவினைசெய்து பொருள்திரட்டி உயிர் வாழக்கூடாது, அவ்வாறு செய்தால் நீ வெகு விரைவில் அதற்குமேலும் வறியவன் ஆகிவிடுவாய்.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து. (205)
4. ஒரு செயலைச் செய்துவிட்டு, “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்” என்று பின்னே இரங்கி வருந்தும் செயல்களை ஒருக்காலும் செய்யாதே. தவறிச் செய்துவிட்டால், அதற்காக வருந்து! அழு! மறுபடியும் அத்தகைய செயல்களைச் செய்யாதே. அது நல்லது.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
5. துன்பங்களில் அகப்பட்டுக்கொண்டோமே என்று அது தீருதல் பொருட்டு இழிவுதரும் செயல்களை நன் மக்கள் செய்வதில்லை. ஆகவே நீயும், அத்தகைய இழிசெயல்களைச் செய்து, துன்பத்திலிருந்து மீளும் செயல்களைச் செய்து விடாதே.
இடுக்கட் படினும் இழிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
6. அதிக வட்டியை எதிர்பார்த்து, உள்ள முதலையும் இழந்து விடுகின்ற தீயசெயல்களை அறிவுடைய மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே பின்னேவருகிற பொருளை எதிர்பார்த்து முன்னே உள்ள செல்வத்தையும் இழந்து வருந்துகிற கொடுஞ் செயலை நீயும் செய்யாதே.
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)
7. உனக்கு வரும் வருவாய் திடீரென்று குறைந்து விட்டாலும் வருந்தாதே. உடனே உன் செலவினத்தைக் குறைத்துக்கொள். அதனால் கேடு வராது. ஒரு குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த வாய்க்காலின் நீர் தடைப்பட்டால் உடனே வடிகாலை அடைத்துவிடு. அதனால் நன்மை உண்டு.
ஆகாறு அளவிட்டித் தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (478)
இந்த ஏழு குறள்களாலும், இதுபோன்ற பிற குறள்களாலும் செய்யத்தகாதவைகளை குறள் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது.
வெற்றிபெற வழி வகைகள்
மக்களாய் பிறந்தவர்கள் செயல்திறனைப் பெறுவதற்கு உரிய வழிவகைகளையும் குறள் கூறுகிறது. அது ஒரு நல்ல காரியத்தைச் செய்து வெற்றிபெறும் ஆற்றலைப் பெறவேண்டுமானால் பொருள், கருவி, காலம், வினை இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமற எண்ணிச் செய்தல்வேண்டும் என்பது. ஆகவே நீயும் அழியும் பொருளையும், ஆகும் பொருளையும், உன் கருவியையும், மாற்றான் கருவியையும், உனக்காகும் காலத்தையும், பிறர்க்கு ஆகும் காலத்தையும், உன் வலிமையையும், எதிரி வவிமையையும், நீ வெல்லும் இடத்தையும், எதிரி வெல்லும் இடத்தையும் எண்ணிப் பார்த்துச் செய். அவ்வாறு செய்தால் நீ வெற்றி பெறும் ஆற்றலை எளிதில் பெற்றுவிடுவாய்.
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல். (675)
வேண்டியது என்ன?
செயல் திறனுக்கு வேண்டியது என்ன என்பதையும் குறள் கூறுகிறது. ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணை புரிவது அரசாங்கத்தின் உதவி அல்ல. நண்பர்களின் துணை அல்ல. உறவினர்களின் ஒத்துழைப்பு அல்ல, பணமும் அல்ல. வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது மனஉறுதியே என்று குறள் கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
இதுகாறும் கூறியவற்றால் திருவள்ளுவர் தமது திருக்குறளில் செயல் திறனைப்பற்றி எவ்வளவு அழகாக, ஆழமாக, விரிவாக, அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பது நன்கு விளங்கும்.
தம்பி, படித்தாயா? இன்னும் ஒருமுறை படி, நன்கு சிந்தித்து உணர். அந்த அளவோடு விட்டுவிடாதே. செயல்திறனைப் பெற்றுச் செய்யவேண்டியவைகளைச் செய்து சிறப்பெய்தி வாழ்.
என்ன பண்ணுகிறது, என்ன செய்கிறது?
என்ற சொற்களை நீ ஒருபோதும் சொல்லாதே. அவை ஒன்றும் பண்ணத் தெரியாதவர்களும், ஒன்றும் செய்யத் தெரியாதவர்களும் கூறுகிற சோம்பேறித்தனமான சொற்கள். அவர்களை வெறுத்து ஒதுக்கு; வெற்றிபெறு! நல்லதையே எண்ணு! நல்லதையே சொல்லு! நல்லதையே செய்! நல் வாழ்வு வாழ்வாய்!
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் செயல்திறன்!!
★ ★ ★



