
திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
5. துணைகொண்டு செய்
எல்லா மனிதராலும் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியாது என்ற உண்மையையும் வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். ஒருவனால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும் படி அவனைக் கட்டாயப்படுத்துவது தவறு என்றும் கருதுகிறார். ஒவ்வொருவர்க்கும் செயல்திறன் என்பது ஓரளவிலேயே இருக்கும் என்றும் எண்ணுகிறார்.
சிலரால் சில காரியங்களைச் செய்ய முடியாது. மனிதனால் ஒரு மதங்கொண்ட யானையைப் போய்ப் பிடிக்கமுடியுமா? முடியாது. ஆனால் அவன் அதைப் பிடித்தாக வேண்டும் என்றும் கூறுகிறார். எப்படி? மற்றொரு பழகிய யானையைக் கொண்டு அந்த யானையைப் பிடிக்கலாம். அதுபோலத் தன்னால் செய்யமுடியாத ஒரு செயல் மிகப் பெரியதாக இருந்தாலும், அதற்கு உற்றவர் துணையுடன் அக்காரியத்தைச் செய்தாகவேண்டும் என்று. செயல்திறனுக்கு இங்கும் யானையையே காட்டி ஒரு புதுவழி வகுத்துக் கூறியுள்ளார்.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (678)
இது ஐந்தாவது யானை.



