
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை
மூவர் தமிழும் முருகனும்
தமிழ்நாட்டில் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள இடங்கள் பலவாகும். அவற்றுள் சில பழம்பதிகள் தேவாரப் பாமாலை பெற்றுத் திகழ்கின்றன. திருமுருகாற்றுப்படையில் முருகவேளுக்குரிய படை வீடுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தேவாரப் பாடல்பெற்ற பதிகளுள் ஒன்று. இன்னும், முருகன் பெயரோடு தொடர்புற்று விளங்கும் பாடல் பெற்ற பதிகள் சிலவுண்டு. சோழநாட்டில் நாகபட்டினத்திற் கருகேயுள்ள வேளூர் என்னும் மூதூர் முருகன் பெயரைத் தாங்கிநிற்கின்றது. பழங்காலத்தில் சோழர் தலைநகராகத் திகழ்ந்த திருவாரூருக்குக் கீழ்த் திசையில் அமைந்த காரணத்தால் அவ்வூர் கீழ்வேளூர் என்னும் பெயர் பெற்றதுபோலும். அவ்வூரில் “மாதவம் வளர்த்த வேலவன்” பெருமையை ஆன்றோர் புகழ்ந்துள்ளார்கள். கீழ் வேளுருக்கு அண்மையிலுள்ள, சிக்கல் என்னும் பாடல் பெற்ற பதியில், கோயில் கொண்டருளும் ‘சிங்கார வேலவர்’ ஆண்டுதோறும் சிவபெருமானிடம் வேல் வாங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றது.
முருகனருள் பெற்ற மற்றொரு மூதூர், தலையாலங் கானத்துக் கருகேயுள்ள பெருவேளுர் ஆகும். இப் பெரும் பதியை அப்பர் பெருமானும் திருஞான சம்பந்தரும் பாடியுள்ளார்கள்.
“விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயம் செய்தே
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின்றேனே”
என்ற அருமைத் திருப்பாசுரம் அப்பரால் இப்பதியிலே அருளப்பெற்ற தாகும். இந்நாளில், இவ் வூர், காட்டூர் ஐயன்பேட்டையென வழங்குகின்றது.
திருஞானசம்பந்தப் பெருமான் பிறந்தருளும் பேறு பெற்ற சீகாழியின் அருகேயுள்ள வைத்தீச்சுரன் கோயிலின் பழம்பெயர் புள்ளிருக்குவேளூர் என்பது. புள்ளும் மறையும் முருகவேளொடு இறைவனை வழி பட்டமையால் இப் பெயர் அவ் வூருக்கு அமைந்த தென்பர். முருகவேளாகிய முத்துக் குமாரன் அப்பதியிலே அமர்ந்து அடியார்க்கு இன்றும் அருள் புரிகின்றார். ஆதலால், கந்தபுரி என்ற பெயரும் அவ் வூருக்கு வழங்குகின்றது. அப்பதியில் அமைந்த முத்துக் குமாரனை ஆதரித்தழைத்து,
” மழலை ததும்பப் பழமறையை
வடித்துத் தெளித்த வார்த்தை யொன்று
மொழியும் பவளச் செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்சேர் கந்தபுரி
முருகா முத்தந் தருகவே'”
என்று குமரகுருபர அடிகள் வேண்டுகின்றார்.
இன்னும்,சேயோன் என்றும், சேய் என்றும் குறிக்கப்படுகின்ற முருகன் திருவருளைப்பெற்ற ஊர் களில் ஒன்று முன்னாளில் சோழநாட்டிலே சிறந்திருந்தது.திருச்சேய்ஞலூர் என்பது அதன்பெயர். தேவாரப் பாடல்பெற்ற சேய்ஞலூர் என்னும் நல்லூர் சண்டேசுர நாயனாரைத் தோற்றுவித்த பெருமையும் உடையதாகும்.
“பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையின்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்த னளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்”
என்று சேக்கிழார் பெருமான் இப் பதியின் பெருமையை அருளிப் போந்தார். சூரனோடு போர்புரிய எழுந்தருளிய சேயோன், சிவனை வழிபட்டுச் ‘சங்காரப்படை’ பெற்ற இடமே சேய்ஞலூர் ஆயிற்றென்று கந்தபுராணம் கூறும். ‘தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு’ அருள் செய்த தலைவனார் அமர்ந்த திருஆப்பாடியும் இதனருகே யுள்ளது.
இன்னும், கொங்கு நாட்டில் அமைந்துள்ள முருகப்பதி திருமுருகன் பூண்டி எனப்படும். ‘செருமலைத் திருவேற் செங்கைத் தேசிகன் வழிபாடாற்றும் பெருமை’ வாய்ந்தது திருமுருகன் பூண்டியென்று புராணம் கூறும். சேரமான் பெருமாள் உவந்தளித்த பொருளனைத்தையும் பறிகொடுத்த சுந்தரர் ‘கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் கூறை கொண்டு ஆறலைக்கு மிடம்’ என்று பாடி இறைவனருளை நாடிய பழம்பதி இப் பூண்டியே.
இக் காலத்தில் முருகன் அருள் பெற்ற ஊர்களின் பெயர் மாறியும் உருக்குலைந்தும் வழங்குகின்றன. பெரும்பாலும் வேளூர்-வெள்ளூர் என்றும், சேயூர்- செய்யூர் என்றும் சிதைந்துள்ளன. கீழ்வேளூர்,கீவளு ராயிற்று. சேய்ஞலூர், செங்கனூர் எனச் சிதைந்தது. இங்ஙனம் உருக்குலைந்திருக்கும் ஊர்ப் பெயர்களைத் திருத்தியமைத்தல் முருகவேளுக்குச் செய்யும் திருத்தொண்டுகளுள் ஒன்றாகும்.
★ ★ ★



