வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

முகவுரை

வடவேங்கடம்; தென் குமரி,
ஆய் இடைதமிழ் கூறும் நல் உலகம்”

(வடக்கில் வேங்கட மலையையும், தெற்கில் குமரி முனையுைம், கொண்ட நிலப்பரப்பே தமிழ் மொழி பேசும், உயர்ந்தோர் பொழும் நன்னாடு) என்று தமிழ் நாட்டின் எல்லையே, பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் பெரியார் உணர்த்தி நிற்கிறார். தமிழ் நாட்டை ‘நல் உலகம்’ என்றது ஏன்? நன்மை பயப்பதும், மேலவர் வாழ்வதுமான நாட்டையே நல் உலகம் என்னலாம் இல்லையா?

ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அன்பும், அறனும், செறிந்து பண்பும் பயனும் மலர வாழ்ந்து காட்டியும், தேர்ந்துரைத்தும் வான்புகழ் பூத்த நல்லோர்களை உலகினுக்குத் தந்தது இந்நாடு, அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே மனிதப் பிறவியின் பயன் என்பதை உணர்த்தி, வாழ்வாங்கு வாழ, வழி வகுத்த மேலோர்கள் நிரம்பிய நாடு இது. இந்நாட்டு இலக்கியங்கள் முழுவதுமே மக்களை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி காட்டுவனவாகும். இகத்தில் உள்ள இன்பத்திற்கு ஓர் அளவு கோலாய் அமைவதுடன், பரத்தில் உள்ள இன்பத்தை உணர்த்தும் நல் ஓவியமாகவும் தமிழர் இலக்கியம் அமையும்.

இலக்கியங்களை எல்லாம் தொகுத்து, வகுத்து, பகுத்தறிவோமானால் பல்வேறுபட்ட வகைகள் இருப்பதை உணர்வோம். துறையாலும் முறையாலும் வேறுபட்டவை ஆனாலும், நெறியாலும் முடிவாலும் மாறுபடாமை தமிழ் கூறும் நல் உலகத்தின் அருமையாகும். அதனாலேதான் எந்த மொழியையும் விடத் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் மலிந்து பொலிகின்றன. சிருங்காரத் துறையில் பிரபந்தம் இயற்றினாலும் பெரும்பாலோர் கடவுளையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டனர். மன்னர் போன்ற மானிடர் மீது பாடியவர்களும் கூட இறைவன் தன்மையைப் புலப்படுத்த மறந்தாரில்லை. பல்வேறு காலங்களில், பல்வேறு துறைகளில், பல்வேறு புலவர்களால் முன்னர் பாடப் பெற்ற தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை நூல் (Anthology) ஆக்கினார்கள் பின் வந்தவர்கள். அவர்கள் கூட, அதற்கு, இறைவணக்கம் இன்றியமையாதது என்று கருதி எழுதிச் சேர்த்தனர் என்றால் நாட்டு மக்களில் மனத்தில் கடவுளுணர்ச்சி எவ்வளவு ஊறிக்கிடக்கிறது. என்பதை சொல்லவா வேண்டும்.

தமிழ் நாட்டுத் தொன்மையும், தட்ப வெப்பமும், சூழ்நிலையும், உண்டி முதலியனவும், சேர்ந்து மக்களை எளிய வாழ்வினராகவும் உயர்ந்த பண்பினராகவும் ஆக்கிவிட்டன. அந்த மனப்பண்பின் சிகரமே இன்று தமிழ் நாடு முழுவதும் வானளாவிய விமானங்களுடனும் கோபுரங்களுடனும் கோயில்களாக ஓங்கி உலகறிய விளங்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால் மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள கோயில்கள் அனைத்தையம் எண்ணிக் கூட்டிப் பார்த்தால் தமிழகம் ஒன்றில் மட்டும் உள்ள கோயில்களின் தொகைக்குக் குறைவேதான், இது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.

அதனாலே யன்றே!, மாணிக்கவாசகப் பெருமான் ‘எந்நாட்டவருக்கும் இறைவனாய் உள்ளவனை’ ‘தென்னாடு உடைய சிவன்!’ என்றுரைக்கிறார்! ‘சிவன்’ என்றால் ஏதோ பூச்சுக்காரர்களுக்கே உரியவன் என்று கொண்டு நாம் இடர்ப்பட, வேண்டாம். ‘சிவன்’ என்றால் நன்மை பயப்பவன் ‘நன்றுடையான்’ என்றே பொருள். கடவுளைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான பெயர்களுள் ‘சிவன்’ என்பதும் ஒன்று. அந்தக் கடவுள் தென்னாட்டையே தன்னாடாகக் கொண்டு விட்டானாம். அதையே சிவலோகமாகவும் ஆக்கிக் கொண்டு விட்டானாம் அந்த அப்பு ஆர் சடையப்பன். ‘நல் உலகம்’ ‘சிவலோகம்’ இரண்டும் ஒரு பொருளையே தருவன என்பதை யாரே அறியார்?

ஏன் இறைவன் தமிழ்நாட்டைத் தன்னாடாக ஆக்கிக் கொண்டான்? இங்குதான் பண்ணோடு தமிழ் பாடும் பக்த மணிகள் பல்லோர் இருக்கின்றனர். சொல்லிலும், பொருளிலும் எல்லையில்லாப் பரம்பொருளைக் காண்பவர்கள் இருக்கின்றனர். ‘பார்க்குமிடம் எங்கலும் நீக்கமற நிறைந்துள்ளான், போக்கும் வரவும் இல்லாப் புண்ணியன்’ என்றுணர்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் மேலாக, பாடலொடு ஆடல் பயின்றிடவும், வேதமொடு ஆகம விழுநூல் கற்றிடவும், சிற்ப முதலிய தெய்விகக் கலைகளைத் தேர்ந்திடவும், வாணிக, நீதி மன்றங்கள் கூடிடவும், எல்லாக் கலையும், எல்லாப் பணியும், எல்லாப் பொருளும் ஈசனதே என்னும் மெய்யுணர்வு மலர்ந்திடவும், தக்கதோர் இடமாய் தழைத்தலை கோயில்கள். கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும் வளர்ந்து அவை கலை மலர்ந்து இன்ப மனம் பரப்பி மக்களை மக்களாக வாழவைப்பதும் கோயில்கள்தாம். ஆலாதாலன்றோ ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பதை உலக நீதியாய்க் கொடனர் தமிழ்ப் பெரு மக்கள். அந்த நீதிப்படி ஊர்கள் தோறும் கோயில்கள் ஓங்குவதாயிற்று. கோயில் மிகுதியால் மக்களின் சீலமும் பண்பும் சிறந்து, வாழ்வும் உயரலாயிற்று.

அத்தகைய நல் உலகத்தில், சிவலோகத்தில், ஆம் இந்தத் தமிழ் நாட்டில் நிறைந்து சிறந்து பயன் கொழிக்கும் கோயில்கள் எத்தனை எத்தனையோ! சிற்பத் திறமை, கலை நுணுக்கம், மூர்த்தி அழகு. உருவ அமைதி, பாவப்பொலிவு, தத்துவச் செறிவு முதலிய வேறுபாடுகள்தாம் எத்தனை எத்தனைபோ! தல மகிமை, தீர்த்தச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை, புராணக் கோட்பாடு, இன்னும் என்னென்னவோ அருமைப்பாடுகள். இவற்றையெல்லாம் நானும் நீங்களும் எப்படி கண்டு, அறிந்து துய்த்து மகிழ முடியும்? இதற்கென்று எங்காவது பள்ளிகள் உண்டா? அல்லது, ஏதாவது பாடம் சொல்லும் வகுப்புகளாவது உண்டா ?

நாமுந்தான் கோயில்களுக்குப் போகிறோம். பக்தியில் நாம் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்பதும் உண்மையாக இருக்கலாம். பெரும் பொருள் செலவு செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறோம்; பலநாள் தங்கிக் கால பூஜைகள் ஒன்றுகூடத் தவறாமல் கண்டு தொழுகிறோம். பாடு கிடக்கிறோம்; நோன்பிருக்கிறோம். அத்துடன் நமது கடமை முடிந்ததென்று திரும்பி விடுகிறோம்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள். கோயில்களுக்கெல்லாம் செல்வார்கள், பக்தியுடன் மூர்த்திகளைப் பரிவார்கள். விபூதி தீர்த்தம், துளவம் முதலிய பெற்றுக் கொண்டதும் அர்ச்சகருடன் அளவளாவுவார்கள், ஓதுவார்கள் முதலிய வயதானவர்களைக் கண்டால் கேள்வி மழை மொழிவார்கள். மூர்த்தியைக் காண்பார்கள், கண்ணக் கவர்வனவற்றின் பால் கருத்தையும் பதித்துக் கூர்ந்து நோக்குவார்கள். ஏதாவது ஐயம் ஏற்பட்டாலோ அன்றி மேலும் தெளிவு தேவைப் பட்டாலோ, கண்ணை மூடக் கொண்டு பார்ப்பார்கள். பின்னர் ராபர்ட் சீவெல், கில்ஹார்ன், பர்னல்பூலர், ஹீரா, ஹூல்ட்ஸ், ஜோவா துப்ரே, பெர்சி பிரவுன் என்று ஏதேதோ வாய்க்கு வழங்காத பெயரை எல்லாம் உச்சரிப்பார்கள். அப்புறம் ஐயம் தீர்ந்து தெளிவு எற்பட்டு விட்டதற்கு அறிகுறியாக “ஓஹோ! சரிதான்; அதானே பார்த்தேன்” என்று தமக்குதாமே ஆறுதலடைந்து நடையைக் கட்டி கொண்டு விடுவார்கள்.

நம்மைப் போன்றவர்கள் கிட்டே வந்து “என்ன ஐயா, இதில் என்ன விசேடம்?” என்று கேட்டால் “இந்தக் ‘கர்பெல்’ இருக்கிறதே இது எந்த பீரியடா இருக்கலாம் என்று யோசித்தேன். ‘வேவ்லைன்’ இருப்பதாலே மகேந்திரனுக்குப் பின் காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது” என்ககூறுவார். ‘கார்பெல்’ என்றால் நமக்கு ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டுத் தூணின் மேலே, பழுவை ஏற்றி தூணின் மையத்திற்குக் கொணர்வதற்காக தமிழனால் வைக்கப்பெற்ற அதற்குத் தமிழில் ‘போதிகை’ என்று பெயர் என்பது, பாவம் அவருக்குத் தெரியாது. இவர்கட்கு கலையார்வம் நிரம்ப உண்டு. பிறமொழி அறிஞர்கள் எழுதிய விளக்க அல்லது ஆராய்ச்சி நூல்களைப் படித்துவிட்டு அதன் மூலமாக நம் நாட்டு கலைமுறைகளைத் தெரிந்து கொண்டு மதித்துப் போற்ற முன் வந்தவர்கள். அவர்களுள்ளும் மிகச் சிலர் இருக்கிறார்கள், முற்கூறப்பட்டவர்களில் இவர்கள் ஒரு அளவு வேறுபட்டவர்களும் ஆவார்கள். ஓவியம், சிற்பம், படிமம், முதலியவற்றை ஆங்கில நூல்களின் மூலமும், தமிழ் நூல்களின் மூலமும் தெரிந்து கொண்டு பின்னர் நூல்களைத் தூரத்தே வைத்துவிட்டு நேரே பொருளோடு உறவாடத் தொடங்கி விடுவார்கள். வேலைப் பட்டறைகளையெல்லாம் சென்று காண்பார்கள். வேலை முறைகளையும் வித்தியாசங்களையும் மனதில் வாங்கிக்கொண்டு விடுவார்கள். நிர்மாண வகைகள், வர்க்க பேதங்கள், மூர்த்தி பேதங்கள், ஆசன முறைகள், அஸ்த முத்திரைகள் முதலியவற்றில் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுச் செய்திகள், பக்திப் பாடல்கள், புராணத் தத்துவங்கள், தல புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் இவற்றிலெல்லாம் கருத்தைச் செலுத்தி கவினுடைபவற்றை மனத்திலும், கையேட்டிலும் பதித்துக் கொண்டு விடுவார்கள்.

இப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு சொல்லையும், சுவையையும், கல்லையும், செம்பையும் எல்லாம் சுவைத்துச் சுவைத்து இன்புறும் இயல்பினராகி விடுகிறார்கள். பின்னர் அவற்றை அணுகுவதில் அவர்கட்கு அச்சமோ, அன்றி சங்கோஜமோ கூட ஏற்படுவதில்லை. அகம் ஓட்டிய, ஒன்றிய, உறவே கொண்டு விடுவார்கள். அப்படித் தோய்ந்து துய்க்கும் கலையன்பர் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

அத்தகைய சிறு தொகையினருள் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் ஒருவர். அவருடன் கல் பேசும்; செம்பு இசை பாடும்; சுதைகள் எல்லாம் நடமாடும். அவற்றை எல்லாம் அவர் காண்பார்; நோக்குவார்; தேர்ந்து தெளிவார். அத்துடன் அமைவரா? நண்பர்களை எல்லாம் கையைப் பிடித்து இட்டுச் செல்வார். சில முரண்டுகளைக் காதைப் பிடித்து இழுத்தும் செல்வார். கலைச் செல்வங்களின் முன்னே கொண்டு நிறுத்தி எல்லோரையும் துய்க்கும்படியும் செய்து விடுவார்! தாயின்புறுவதைக் கண்டு உலகின்புறச் செய்யும் வித்தையிலும் கைதேர்ந்தவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், கலைப் பணியால் கடவுள் நம்பிக்கையையும் தெய்வ பக்தியையும் வித்திட்டு லிளையச்செய்த புண்ணியனாகவும் அல்லவா விளங்குகிறார். அவர்களை எல்லாம் தலயாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொள்ளவும் செய்துலிட்ட அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

இலக்கிய ரசலையும், கலைப் பித்தமும், பக்தி ஈடுபாடும் ஒருசேரப் பெற்ற தனி வழியை கடைப்பிடித்துச் செல்லுபவர் ஆனதால் ஒன்றில் ஒருசிக்கல் ஏற்பட்டால் மற்றொன்று வந்து கைகொடுத்துத் தீர்த்து வைத்து விடுகிறது. அவருக்கு. ‘சிக்கல் விடுபடாதோ’ என்று பிறர் மயங்கக் கூடிய இடங்களில் அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளாமல் லாகவமாக அதைத் தாண்டி அப்பாற் சென்று விடுகிறார் இவர். பல இடங்களில் பெருமையாகப் புகழ்பாடுவதைக் கண்டு யாவரும் மகிழ்கிறோம். சில இடங்களில் கிண்டல் செய்வதைச் சிலர் ரசிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். என்றாலும், உண்மையை உணர்பவர்கள் யாரும் அதைக் குறை கூற மாட்டார்கள். கிண்டல் செய்வதற்கு மனத்துணிச்சல் மட்டுப் போதாது. களங்கமற்ற உள்ளத்தில் அரும்பிய எல்லையற்ற ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் கிண்டல் பயன் தருவதாக இருக்கும். வெறும் மனத்துணிச்சலிலிருந்து வெளிப்படுவது கேவலம் வசையாகத்தான் அமையும்.

யதார்த்த வாழ்வில் அல்லது நாடகம், சினிமா போன்ற துறைகளில் அசம்பாவிதம் என்று கருதி ஒதுக்கப்படும் தோற்றம், கல்லிலும் செம்பிலும் உருவாகி ஆலயங்களுள் இருப்பதை நாம் அசம்பாவிதம் என்று எண்ணியதாவது உண்டா? அலது நம்மனையார் உள்ளத்தில் விகார எண்ணங்களை அவை உண்டாக்கியதாவதுண்டா ? தாயின் மடியில் கிடந்து பாலருந்தும் நிர்மமான குழந்தைகளைப் போன்றுதானே நாம் எல்லாம் கலையமுதை, அழகமுதைப் பருகி அமைதி பெற முயன்று கொண்டிருக்கிறோம். இல்லையா? அப்படித்தான் உள்ளத்தில், விசாரமோ, வெறுப்போ, பகமையோ சிறிதுமின்றிக் கிண்டல் செய்வது ஒரு அருமையான வேண்டத்தக்க பணி; கலையும் கூட அந்த கலையும் கைவரப் பெற்றவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள்.

“குலவித்தை கல்லாமற் பாகம் படும்” என்ற முதுமொழிக்கு பாஸ்கரன் அவர்கள் ஒரு சான்று. பாட்டனார் ஒரு நல்ல கவிஞர் தந்தையாரோ சிறந்த ஓவியப் புலவர். இலக்கிய உணர்வும், ஓவிய உணர்வும் இவர்க்குப் பரம்பரையாய் கிட்டிய செல்வம். நேர்மைக்கும் செம்மைக்கும் பெயர் பெற்ற வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களுடன் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. அவர்களுடன் பலகாலம் நெருங்கிப் பழகிய நற்பேறு இவருக்கு எதையும் ஆராய்வதற்குரிய நெறிமுறைக்கு ஆக்கம் தந்தது என்று சொல்லலாம். அதற்கெல்லாம் மேலாக ரசிகமணி டி.கே.சி. அவர்களுடன் இருந்த உறவும், ஈடுபாடும்தான் இவருக்கு எல்லா வல்லமையும் கொடுத்தவை என்று கூற வேண்டும். விஷயத்தை அணுகுவது. ஆய்வது, தேர்வது, துய்ப்பது, எடுத்து விளக்குவது போன்றவற்றில் ஒரு தனி ஆற்றல் ஏற்படச் செய்தது அந்த உறவே என்று சொல்வோமானால் தவறில்லை.

இப்படியாகப் பெற்ற நலன்களை எல்லாம் பேணிக் காத்து, வளர்த்துச் சீரிய முறையில் உலகிற்களிக்க உதவிய மற்றொன்றையும் நாம் மறத்தற்கில்லை. அதுதான் இளமையிலிருந்தே பல்வேறு இடங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த ஓய்வையும், ஏற்படுத்திக் கொண்ட ஓய்வையும் தல யாத்திரைக்கும், இலக்கிய வரலாற்று சிற்பப் பணிக்குமே பயன்படுத்திக் கொண்ட அந்த ஆர்வம் இருக்கிறதே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“வேங்கடம் முதல் குமரிவரை” என்று பொதுத் தலைப்பு அமைத்துக் கொண்டதே ஓர் அருமை. பண்டைத் தமிழன் மரபுப்படி, பெயர் அமைந்திருக்கிறது என்று உவகை ஏற்படும் அதே காலத்தில், வாசகர்களை எல்லாம் தென்றிலின் இன்பத்தை அனுபவிக்கச் செய்வதைப் போல், தெற்கு நோக்கி அழைத்துச் செல்லும் அருமை எண்ணி எண்ணி மகிழக் கூடியதாக இருக்கிறது.

“வேங்கடம் முதல் குமரி வரை” தொகுதியில் நான்காம் பகுதி இது. இதில் 30 கட்டுரைகள் உள்ளன. இலக்கியப் பூங்கா ஒருபுறம்; சிற்பக் கலைக்கூடம் மறுபுறம்; ஆராய்ச்சிட் பட்டறை இன்னொரு புறம்; பக்திப் பஜனைக் கூடம் வேறொருபுறம்; வரலாற்றுக் கதைக் கூடம் பிறிதொரு புறம் என்று இப்படியாகப் பல்வேறு துறைகளையும் இந்தக் கட்டுரை உலகிலே காணலாம்.

அன்புடன், ஆர்வத்துடன், உள்ளே செல்லுவோம். விருப்பு வெறுப்பின்றி அணுகுவோம். அருமை பெருமைகளை நன்றாக அனுபவிப்போம். நம்மை எல்லாம் இட்டுச் செல்லும் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் நம்முடன் இருந்து தக்கபடி உதவுவார். இனியும் முன் வாயிலில் காத்துக் கொண்டிருப்பானேன்? வாருங்கள், உள்ளே நுழைவோம், வாழ்க பாஸ்கரன்; வளர்க அவர் பணி” என்று! வாழ்த்திக் கொண்டே!

கம்பன் அடிட்பொடி சா. கணேசன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !