வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

நான்காம் பதிப்பின் முன்னுரை

“வேங்கடம் முதல் குமரி” வரை என்ற பொதுத் தலைப்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள நான்கு தொகுப்புகளின் நான்காவது பதிப்பு இது, எங்கள் தந்தையார் திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேற்கொண்ட திருப்பணி, தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிக் கட்டுரை எழுதத் தொடங்கியது தான். அந்தத் துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் தொண்டைமான் அவர்களை மேலும் ஊக்குவித்து அவர்கள் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொடராகக் கல்கியில் வெளியிட்டு உற்சாகம் ஊட்டினார்கள்.

மகாகவி பாரதி பாடியது போன்று: “காவிரி தென் பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி” தீரங்களிலே, என்றோ நமது முந்தையோர்களால் எழுப்பப்பட்ட திருக்கோயில்களுக்கெல்லாம் தொண்டைமானவர்கள் காமிராவும் கையுமாகச் சென்று. அந்தக் கோயில்களின் வரலாற்றுப் பின்னணி, இலக்கியப் பெருமை, சிற்பச் செல்வங்கள் ஆகிய சிறப்புக்களை யெல்லாம் கண்டு, தெளிந்து அவற்றை, படங்களுடன் கட்டுரைகள் வாயிலாகத் தமிழ் மக்கள் முன் வைக்கத் தலைப்பட்டார்கள். கல்கி இதழில் வாராவாரம் கட்டுரைகள் வெளி வரத் தொடங்கியபோது நல்ல வரவேற்பும் கிடைத்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் நம்பிக்கையும் நாட்டமும் உடையவர்கள் கட்டுரையைப் படித்த சூட்டோடு அந்தந்த ஊர்களுக்கு யாத்திரை கிளம்பியதும் உண்டு, பக்தர்கள், கலை அன்பர்கள் எல்லோருக்கும் இந்தத் தொகுப்பு வழிகாட்டியாகவும், கையேடாகவும் உதவியது என்றால் அது வெறும் புகழ்ச்சியில்லை.

வணக்கத்துக்குரிய காஞ்சி முனிவரவர்களும், தருமையாதீன குருமகா சந்நிதானம் அவர்களும் கூட, இந்தக் கட்டுரைகளைப் படித்து அனுபவித்ததோடு அமையாமல், தொண்டைமானவர்களைத் தங்கள் தங்கள் மடங்களுக்கே வரவழைத்துப் பாராட்டி, பட்டமும் நல்கி இந்தத் திருப்பணிக்குத் தங்கள் நல்லாசிகளை வழங்கியிருக்கிறார்கள். எத்தகைய பேறு அது திரைப்படத் தொழில் அதிபர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள், முதல் பதிப்பு வெளி வந்ததும் அதனை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகக் கொண்டு ஆயிரம் ரூபாய் பரிசளித்து கோலாகலமாகப் பாராட்டு விழாவும் நடத்தியிருக்கிறார். கோவை நன்னெறிக் கழகத்தாரும் தங்கள் பங்குக்கு இந்தத் தொகுதிகளில் ஒன்றின் வெளியீட்டு விழாவைக் கோவையில் கொண்டாடிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

“வேங்கடம் முதல் குமரி வரை” முதல் பதிப்பு 1960 ஆம் ஆண்டு, திருநெல்வேலி எஸ்.ஆர்.எஸ், புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் 3000 படிகள் வெளியிட்டார்கள். அவர்கள் ஆர்வம் வீண் போகவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளகவே அத்தனை படிகளும் விற்பனையாகி விட்டன. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1964 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொணர்ந்தார்கள், அவையும் நாளாவட்டத்தில் விற்பனையாகி விட்டன. கைவசம் படிகள் இல்லாத காரணத்தால், டெல்லியிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், பூனாவிலிருந்தும், தமிழ் நாட்டு ஊர்களிலிருந்தும் அன்பர்கள் புத்தகம் கேட்டு எழுதிய போது அனுப்பமுடியாத நிலையில் மிகுந்த மனச்சங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சூழ்நிலைகள் சரிவர அமையாததால் உடனடியாக மறு பதிப்பைக் கொண்டு வர இயலாது போய் விட்டது. அருமைத் தந்தையார் அவர்களின் மறைவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது. இதனை வெளியிட சென்னை அபிராமி நிலையம் முன் வந்தது.

மூன்றாவது பதிப்பும் விற்பனை ஆகிவிட்டதால், அன்பர்கள் விரும்பிக் கேட்கும் போது தரமுடியாத சூழ்நிலை. அப்போது தான் மறுபதிப்புக்கான அவசியத்தை உணர்ந்தேன். நான்காம் பதிப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது. முதல் பதிப்பின் போதே, இந்த நான்கு தொகுப்புக்களுக்கும் என் தந்தையாரின் உற்ற நண்பர்களாக விளங்கிய நால்வர் அற்புதமான முகவுரைகளைத் தந்து உதவியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி உணர்ந்து சொல்லும் சத்தியப் பிரமாணமாக அவை இந்தத் தொகுப்பினை அரண் செய்கின்றன. இதைவிட அருமையாக வேறு யார் சொல்லக் கூடும்? ஆகவே, இந்தப் புதிய பதிப்பிற்கும் அந்தப் பழைய முகவுரைகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நால்வரின் அன்புக்கும் தலைதாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

தொண்டைமானவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த சமயம், முதலில் நூற்றெட்டுக் கோயில்களைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் எழுதி முடித்தபோது 121 கோயில்கள் இடம் பெற்றன. தொகுப்பு வெளியிடப்பட்ட பின்னர் விடுபட்டுப்போன மற்ற கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாயின. அவற்றை எல்லாம் தொகுத்து, இந்தத் தலைப்பின் கீழ் ஐந்தாம் பாகமாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை அண்மையில் கலைஞன் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. “வேங்கடம் முதல் குமரி வரை” தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்புதான், தொண்டைமானவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள திருக்கோயில்களின் மூர்த்தங்களையும், கலைச் செல்வங்களையும் கண்டு சொல்லப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளும் அபிராமி நிலையத்தின் வெளியீடாகவே “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட ஆர்வம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமன்று, இந்தியத்திருநாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்களும், ஏன் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழன்பர்களும் இந்த  நூல்கள் வெளிவரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள், தமிழ் இனத்தின் கலையுணர்வு, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் வளர்ப்புப் பண்ணையாகவே தமிழகத்துத் திருக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன- என்றென்றும் அவை அங்கே பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையுடன் இந்த நான்காவது பதிப்பினையும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம். இந்த நான்காம் பதிப்பினை நல்ல முறையில் கொணர்ந்திருக்கும் கலைஞன் பதிப்பகத்தாருக்கு நன்றி சொல்லப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

ராஜேஸ்வரி நடராஜன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !