பழனித் திருநாமம் 
கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

முன்னுரை

“ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?”

”ஆமாம்,”

“எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?”

“அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்.”

“அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?”

“நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள சொற்களுக்குப் பொருளை விளக்குவதோடு மட்டும் நிற்பதில்லை. அந்தப் பொருளையே விளக்குகிறேன்.”

“பொருளை விளக்குவதென்றால் எனக்கு விளங்கவில்லை. அதை முதலில் எனக்கு விளக்குங்கள்.”

“முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை என்று ஒரு பாட்டில் வருகிறது. சலிக்காமல் பிறருக்கு ஈந்து அதனால் வறுமையைப் பெறாமல் இருக்கிறாயே என்று சொல்லி நிறுத்தினால் சொற்களுக்குப் பொருள் சொன்னதாக இருக்கும். ஏன் இடவேண்டும், இட்டு மிடிப்பதனால் பயன் என்ன, சலிப்பு வருவது இயல்புதானே என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டு, விடை சொல்ல முயல்கிறேன். ஈகை என்பது நமக்கும் பிறருக்கும் பயனை உண்டாக்குகிறதென்று விளக்குகிறேன். பற்றறுப்பதற்கு இது அடையாளமாவதையும் சொல்கிறேன். இவற்றிற்கு மேற்கோள், வரலாறு, அநுபவம் என்று இப்படியே அந்தப் பொருளை விளக்கும் உரை விரிகிறது.”

கந்தர் அலங்கார விரிவுரை எவ்வாறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வந்த நண்பர் ஒருவருக்கும் எனக்கு நடந்த உரையாடல் இது. கந்தர் அலங்காரப் பாட்டுக்குச் சொற்பொருள் மட்டும் சொல்லி முடிப்பதனால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. தமிழ் இலக்கியங்கள் பல உள்ளன; அவற்றைப் படித்துக் கொள்ளலாம். இந்த நூல் வாழ வழிகாட்டும் நூல். செத்துப் போகவும் வழி காட்டுகிறது.

இப்படிச் சொன்னால் வேடிக்கையாகத் தோன்றும். நன்றாக வாழ்வது எப்படி இன்பந் தருகிறதோ அப்படியே நன்றாகச் செத்துப் போவதும் இன்பத்தைத் தரும். ‘சாவு என்பதே துன்பத்தில் துன்பமாக இருப்பது; அதில் இன்பம் எது?’ என்று தோன்றும். வாழ்வு துன்பமாக இல்லையா? உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் இன்ப வாழ்வா வாழ்கிறார்கள்? இல்லை இல்லை, இன்பமாக வாழ்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிற பலருடைய மனத்துக்குள் புகுந்து பார்த்தால் அங்கே எத்தனை புயல்கள் கொந்தளிக்கின்றன என்பது தெரியவரும்.

உண்மையில் இந்த உலகில் முழு வாழ்வு வாழத் தெரிந்தவனுக்கு அந்த உலக வாழ்வு இதனுடைய தொடர்ச்சியாகவே இருக்கும். அப்படி வாழ்கிறவன் இது வேறு வாழ்வு, அது வேறு வாழ்வு என்று பிரித்து நினைக்க மாட்டான். இருபத்தைந்து வயசில் உத்தியோகம் பண்ண ஐந்து வயசில் கல்வியைத் தொடங்குவது போலவும், அறுபது வயசில் துணையாக இருக்கப் பிள்ளை வேண்டுமென்று இருபத்தைந்து வயசில் திருமணம் செய்து கொள்வது போலவும் மறுமையில் நன்கு வாழ வேண்டுமென்று இம்மையிலே அடிப்படை அமைக்க வேண்டும். இங்கே அமைதி பெற்றவன், அங்கே அமைதி பெறுவான். இங்கே அச்ச மில்லாதவன் அங்கே அஞ்சமாட்டான்.

இந்த வாழ்வும் அந்த வாழ்வும் ஒரு முழு வாழ்வின் இரு வேறு பகுதிகள். இம்மை வாழ்வு அடிப்படையானால் அம்மை வாழ்வு மேல் கட்டிடம். ஆகவே, நம்முடைய நாட்டில் இம்மை வாழ்வில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மறுமை வாழ்வுக்குரிய தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். இங்கும் அங்கும், இன்றும் அன்றும் நமக்கு உறவினனாக இருக்கும் இறைவனுடைய திருவருளை இம்மையிலேயே பெற வழிதுறை வகுத்திருக்கிறார்கள்.

இந்த வாழ்விலேயே அந்த வாழ்வின் மணத்தை நுகரலாம் என்று கூறுவது இந்த நாட்டுச் சமயம். ஜீவன் முக்தி என்பது அதுதான், செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் என்று சொல்லித் திரைபோடும் சமயம் அன்று நம் சமயம். இங்கேயே முத்தியின்பம் பெறலாம் என்பதை உறுதியாகச் கூறுகிறது.

அந்த நிலையைப் பெற்றவர்கள் இங்கே நன்றாக வாழ்வார்கள்; நன்றாகவும் சாவார்கள். அவர்கள் நலவாழ்வு வாழ்ந்து நல்ல மரணம் பெறுவார்கள். மரணம் அடைவதனால் துன்பம் அடையாமல், ஓரிடத்திலிருந்து வேறோரிடத்துக்குப் பயணம் செய்வது போல எண்ணி அதனை இயற்கையாக ஏற்றுக் கொள்வார்கள்.

இத்தகைய வாழ்க்கை வாழும் வகையைக் கந்தர் அலங்காரம் எடுத்துரைக்கிறது. இதனை அருளியவர் உலகை அறிந்தவர்; உலகின் நன்மை தீமைகளையும் மனிதனது வலிமையையும் வலியின்மையையும் உணர்ந்தவர். இந்தச் சுழற்சியினின்றும் நீங்கும் வழிகளை உணர்ந்தவர். இறைவனுடைய பெருமை யையும் நன்கு தெரிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடைய திருவருளைப் பெற்று அதனால் இவ்வாழ்வையே பேரின்ப வாழ்வாக மாற்றிக் கொண்டவர்.

இறைவனுடைய கருணையில் நனைந்த அவர் உள்ளத்தில் மக்கட் சாதியிடம் கருணை சுரக்கிறது. மக்களை வாழ வைக்க வேண்டும் என்று இரக்கம் உண்டாகிறது. வேண்டாத பொருள்களைக் குவித்துக் கொண்டு, தமக்குக் கிடைத்த கருவிகளைப் பயனற்ற துறைகளில் ஈடுபடுத்தி வீணாக்கி, அச்சமும் அவலமும் கொண்டு வாழும் வாழ்க்கையை மாற்ற வழி காட்டுகிறார். இறைவன் ஒருவன் உள்ளான் என்பதையும், அவன் எந்தத் தீங்கையும் போக்கும் பேராற்றல் உடையவன் என்பதையும், நம்முடைய நிலை எத்தனை இழிந்ததானாலும் அவனுடைய கருணை வெள்ளத்துக்குப் புறம்பன்று என்பதையும், எந்தச் சமயத்திலும் எந்த நிலையிலும் அவனுடைய அருளைப் பெறும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்பதையும் கூறுகிறார். உயிர்களிடத்து அன்பு வைத்து அறநினைவோடு வாழ வேண்டும் என்றும், அத்தகைய இயல்பு உண்டாகி வளர்வதற்கு இறை வனிடம் உண்டாகும் அன்பே மூலகாரணம் என்றும் தெளிய வைக்கிறார். யமனால் வரும் துன்பத்தையும் போக்கிக் கொள்ள லாம் என்று உறுதி கூறுகிறார். இப்போது நாம் கொண்டுள்ள பார்வை மாறி உலகமே இறைவன் மயமாகவும், இல்வாழ்வே பேரானந்தப் பெருவாழ்வாகவும் அநுபவத்தில் உணர வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

முருகனது துதியாக இருப்பதோடு கந்தர் அலங்காரம் வாழும் வகையையும் தெரிவிக்கிறது. நம்முடைய சமயக் கருத்துக்கள் பலவற்றை வாழும் வகைக்கு ஒத்தபடி கூறுகிறது. பல்வேறு வகையில் வாழ்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை எளிதாக இருக்கும்வண்ணம் பலபல முறைகளைப் புலப் படுத்துகிறது.

இத்தகைய கருவூலத்தைத் தமிழர் பெற்றது பெரும்பேறு. இதனை விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது எனது முன்னைப் பிறவியின் புண்ணியப் பயன்.

வாழ்க்கையில் நடைமுறையில் கடைப்பிடிக்கக் கூடிய வழிகளை அருணகிரிநாதர் நுட்பமாகக் கூறியுள்ளார். அவற்றை விரிவாக விளக்கியிருக்கிறேன். புராண வரலாறுகளின் உள்ளுறைகளை என்னால் இயன்ற வரையில் புலப்படுத்த முயன்றிருக்கிறேன். மனத்தை வயப்படுத்துவதே எல்லாச் சாதனங்களுக்கும் இலக்கு. அதனை வாழ்வியலில் எளிதிலே பயில அருணகிரியார் வழிகாட்டுகிறார். அத்தகைய இடங்களைக் கூடியவரையில் உலக நிகழ்ச்சிகளோடும் மனித மனப்பாங்கோடும் இயைத்துக் காட்டி விளக்கியிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் ஏழு பாடல்களின் விளக்கம் (75 – 81) இருக்கிறது.

முதற்பாட்டில் படிப்படியாக இறைவன் அருளைப் பெறும் எளிய வழிகளை எதிர்மறை முகத்தால் தெரிவிக்கிறார் அருணகிரியார். இரண்டாவது பாடலில் உடலுறுப்புக்களை இறைவனது வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை எதிர்மறை முகத்தால் கூறுகிறார். மூன்றாவது பாடலில் மாதர் மயலை மாற்றி முருகன் திருவடித் தியானம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறார். நான்காவது செய்யுளில் உறவினரும் உடைமையும் நில்லா என்பதை விளக்கி இறைவனைப் போற்றவேண்டும் என்று நல்லுரை கூறுகிறார். ஐந்தாம் செய்யுள் காம மயக்கத்தால் அல்லற்படுவதைச் சொல்கிறது. ஆறாவது செய்யுளும் ஏழாவதும் இறைவனுடைய அருள் வல்லபத்தால் மரணபயத்தையும் போக்கிக் கொள்ளலாம் என்ற அரிய கருத்தை இருவேறு வகையில் சொல்கின்றன.

நெஞ்சை நோக்கிக் கூறும் பாடல்கள் இரண்டும் (1,3), முருகனை முன்னிலைப்படுத்துவன மூன்றும் (2,5,6), உலகத்தாரை விளித்துரைப்பது ஒன்றும் (4), காலனை அறை கூவும் பாட்டொன்றும் (7) இப்புத்தகத்தில் வருகின்றன. பழனியை ஒரு பாட்டிலும் (1), திருத்தணியை இரண்டு பாடல்களிலும் (2,5) நினைப்பூட்டுகிறார்.

இறைவனுடைய வழிபாட்டு முறைகள் பலவற்றைச் சொல்லித் தருகிறார். அவன் உறையும் தலத்தின் திருநாமத்தைப் பலகால் சொல்லுதல், அப்படிச் சொல்வாரைப் பணிதல், அடியாருக்கு இட்டு மிடித்தல், முருகா என்று இறைவன் திரு நாமத்தைக் கூறுதல், அவன் திருக்கோலத்தைக் கண்ணால் நாடுதல், கையால் தொழுதல், நாவாற் பாடுதல், அவன் பூங்கழலை நோக்குதல், தலையிற் சூடுதல், அவனைப் போற்றுதல் பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மிக் கூத்தாடுதல் ஆகியவற்றைச் சொல்கிறார்.

மகளிரைச் சேல்வாங்கு கண்ணியர் என்றும் தார்கொண்ட மாதர் என்றும் பந்தாடு மங்கையர் என்றும் குறிக்கிறார். மாகத்தை முட்டிவரும் கூற்றன், அந்தகன் என்று யமனைக் குறிக்கிறார்.

வெள்ளிமலை போலக் கால் வாங்கி நிற்கும் ஐராவதத்தின் மேல் வரும் இந்திரனையும், கோடாத வேதனையும், தாராகணம் எனும் தாய்மார் அறுவரையும் காட்டுகிறார். சிவபெருமானை முத்திக் கொடை வழங்கும் வள்ளற் பெருமானாகவும் இறைவியைப் பாகத்தில் உடையவராகவும் வருணிக்கிறார். உமாதேவி சிவபெருமானைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணியாகவும் முருகனுக்குப் பால் அருத்தும் பெருமாட்டியாகவும் இருப்பதைப் புலப்படுத்துகிறார்.

செவ்வேளை அமராவதி காவலன், இளங்குமரன், உமை முலைப்பாலுண்ட பாலன், கந்தன், குமரன், கூர்கொண்ட வேலன், செய்யவேல் முருகன், பரம கல்யாணிதன் பாலகன், முருகன் என்று பாராட்டுகிறார். அவனுடைய பூங்கழலும் தண்டையும் அணிந்த திருத்தாளையும், அவன் திருக்கை வேலையும், சிறு வாளையும், அவன் உடை வாளையும், தோகைப் புரவியாகிய மயிலையும் இடையிடையே நினைக்கிறார்.

முருகன் கார்த்திகை மாதர் தந்த பாலை உண்டதும், உமா தேவி கறந்தருத்திய பாலை நுகர்ந்ததும், கிரவுஞ்ச மலையை எறிந்ததும், சூரனை அழித்து இந்திராணியின் தாலி காத்ததுமாகிய திருவிளையாடல்கள் இந்தப் பாடல்களில் வருகின்றன.

இதுவரையில் வெளியாகியுள்ள பதினைந்து புத்தகங்களிலும் பல செய்திகளும் உவமைகளும் மீட்டும் மீட்டும் வந்திருக்கலாம். முருகனுடைய திருநாமங்களையும், திருவிளையாடல்களையும், நம்முடைய குறைகளையும், உலகியலையும் மீட்டும் மீட்டும் அருணகிரியார் சொல்லுகிறார். அப்படி வரும் இடங்களில் முன் சொன்ன சில கருத்துக்கள் மீட்டும் வருவது இயல்பே. ஆயினும் முன்னே விரிவாகச் சொன்னதைப் பின்னே சுருக்கியும், முன்னே ஒரு வகையில் விளக்கியதைப் பின்னே வேறு வகையில் விளக்கியும், சுருக்கமாகச் சொன்னதைப் பெருக்கியும், மேற்கொள் இல்லாமற் சொன்னதை மேற்கோள் காட்டி வற்புறுத்தியும் சொல்ல முயன்றிருக்கிறேன். இருப்பினும் பல இடங்களில் ஒரே கருத்து வந்திருப்பதை மாற்ற முடியவில்லை. அவற்றை மீட்டும் படிக்கும் போது, “சொன்னதையே திருப்பிச் சொல்கிறாரே!” என்று அன்பர்கள் சலித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். தனித்தனிப் புத்தகமாக வரும் இந்த வரிசையில் ஏதேனும் ஒன்றை மட்டும் படிக்கும் அன்பருக்கு ஓரளவு தெரிய வேண்டும் அல்லவா? அந்தப் பயனை எண்ணி, இந்தக் ‘கூறிய கூறல்’ குற்றத்தை அன்பர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கம் போல் இந்த அலங்காரச் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத் தட்டெழுத்தில் வடித்துத் தந்தவர் திரு. அனந்தன் அவர்கள். சுருக்கெழுத்துக் கலையில் கைவந்த அவருடைய உதவி இன்றேல் இந்த வடிவில் இவ்வரிசை வந்திராது. அவருக்கு முருகன் இன்னருளால் எல்லா நலங்களும் மேன்மேலும் ஓங்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

கி.வா. ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !