
பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்
ஆர் கொண்டு போவர்?
அருணகிரியார் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிற வகையில் அமைந்த பாட்டு ஒன்றை முன்பு பார்த்தோம். குற்றம் செய்வாரைப் பார்த்து, ‘நீ குற்றம் செய்கிறாயே’ என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரும். அதனால் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்லும் பாடல்களை அருணகிரியார் வாக்கில் பார்க்கலாம். ஆனாலும் அவருக்குக் கருணை மிகுதி யாகிவிட்டால் நேரே மக்களைப் பார்த்துச் சொல்லும் வகை யிலும் பாடுவார். அப்படிப் பாடிய ஒரு பாடலையே இப்போது பார்க்கப் போகிறோம்.
தாயின் கேள்வி
தன் முரட்டுக் குழந்தை தான் சொல்வதைக் கேட்காமல் இருக்கிறான் என்று தாய் வருந்துகிறான். ‘என் தலையெழுத்து’ என்று குறிப்பாகச் சொல்கிறாள். அயலான் வந்தால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனாலும் அந்தக் குழந்தை வீணாகப் போகிறதே என்ற வருத்தம் அதிகமானால், “அடே. இப்படிச் சொன்ன பேச்சுக் கேட்காமல் ஓடுகிறாயே; நீ முன்னுக்கு வரவேண்டாமா?” என்று பதைப்புடன் கேட்பதும் உண்டு. அது போல அருணகிரியார் இப்போது நம்மைக் கேட்கிறார்.
செல்வரின் கதை
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் ஒருவர் பிறந்தார். மிகவும் முயற்சி செய்து முன்னுக்கு வந்தார். தாமே முன்னுக்கு வந்தவர் (Self – Made Man) என்று சிலபேரை உலகத்தார் சொல்வது வழக்கம். அந்த வகையைச் சேர்ந்தவர் அவர். செல்வம் நிரம்பிய குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை. ஆனால் அவருக்கு முயற்சி என்ற செல்வம் இருந்தது. அந்தச் சிற்றூரில் கல்வி கற்று முடித்துக் கொண்டு பேரூருக்கு வந்தார்.
பல பெரிய மனிதர்களின் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி அவர்களுக்குரிய சிறுசிறு காரியங்களைச் செய்து அவர்களால் பொருள் உதவி பெற்றார். கல்லூரியில் படித்தார். மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். அதன் விளைவாக அவருக்கு நல்ல உத்தியோகம் கிடைத்தது. திருமணப் பருவம் சற்றுத் தாண்டி விட்டாலும் அவருடைய குணநலங்களையும் பதவியையும் கண்டு ஒருவர் தம் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். நல்ல உத்தியோகமும், நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணும் சேர்ந்த பிறகு வளம் பெருகக் கேட்கவேண்டுமா? மேலும் அவர் பொருளை நிரம்பச் சம்பாதித்தார். இந்த உலகத்தில் நன்றாக வாழவேண்டுமென்ற குறிக்கோளுடன் உழைத்தார். எப்படி எப்படி வாழலாம் என்பதை ஆராய்ந்தார். பலர், வாழும் வகை பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்களைப் பெறுவது எப்படி, எப்படிப் பொருள் ஈட்டுவது, எப்படிப் புகழ் சம்பாதிப்பது என்றெல்லாம் இந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நன்றாகத் தெரிந்து ஆராய்ந்து வரவர முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். ஒரு கணப்பொழுதையும் வீணடிக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்தார். அவருடைய நிலை வரவர உயர்ந்தது. உறவினர்கள் பெருகினார்கள். நண்பர்கள் அதிகமானார்கள். சொத்தும் சேர்ந்து வந்தது. நல்ல வீட்டைக் கட்டிக் கொண்டார். பெரிய மாளிகையாக அந்த வீடு அமைந்தது.
பொருள்களின் வகை
மனிதர்களோடு தொடர்புடைய பொருள்களில் இரண்டு வகை உண்டு. உயிருள்ள பொருள் ஒரு வகை; உயிர் இல்லாத பொருள் ஒருவகை. உயிருள்ள பொருள்களாவன, உறவினர்களும், நண்பர்களும். உயிரில்லாத பொருள் சொத்து. சொத்து இரண்டு வகைப்படும்; அசையும் பொருள், அசையாப் பொருள் என்று சொல்வார்கள்; ஸ்தாவர ஜங்கமம் என்று வடமொழியில் சொல்வர். வீடு, நிலம் முதலியன அசையாப் பொருள். ஆடை, அணி, பணம் முதலியன அசையும் பொருள். இந்த இரண்டு வகையான பொருள்களும் முன்னே சொன்ன செல்வருக்கு நாளுக்கு நாள் பெருகி வந்தன. முதலில் அவருக்கு நல்ல மனையாட்டி வாய்த்தாள். அப்புறம் குழந்தை குட்டி, பேரன், பேத்தி என்று சுற்றம் பெருகிற்று. ஊர் முழுவதும் நண்பர்களானார்கள். பத்து ஏக்கரா நிலம், ஐந்து வீடுகள், பாங்கில் பணம் ஆகிய எல்லாம் சேர்ந்தன. மனையாட்டியின் கழுத்தில் நிறைய நகைகள் இருந்தன. அவரும் காதில் கடுக்கன், கையில் மோதிரம் முதலியன அணிந்து கொண்டிருந்தார்.
வாழ்க்கையில் குறை
இத்தகைய வாழ்க்கையைத்தான் உலகத்தார் சிறந்த வாழ்க்கை என்று சொல்கிறார்கள். இப்படி வாழ முடிந்தால் இதைக் காட்டிலும் சிறந்த பதவி வேறே இல்லை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே எல்லா வகையிலும் வளம் பெற்ற அந்த மனிதரை உலகம் போற்றியது. நிலமும், பொருளும், உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு இருந்தன எனினும் அவருக்குக் குறை இல்லையென்று சொல்லலாமா? அவருடைய உள்ளத்தில் அமைதி இருந்ததா? இல்லை. காரணம் என்ன?
ஈட்டிய பொருள் எப்போதும் நிற்பது இல்லை. அணிகளும், ஆடைகளும் எப்போதும் விளக்கமாக இருக்கும் என்பதும் இல்லை. உறவினர்கள் எப்போதும் நம்மோடு இருந்து வாழ்வார்கள் என்று சொல்வதற்கும் இல்லை. அதிகமான குழந்தைகள் பிறந்தால் அவை நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டுமே என்ற அச்சம் பெற்றவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறது. வியாபாரம் செய்தால், பொருள் நஷ்டம் அடையாமல் இருக்க வேண்டுமே’ என்ற அச்சம் வியாபாரிக்கு இருக்கிறது. வீட்டைக் கட்டிக்கொண்டால் அது அழுக்குப்படாமல் இடியாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வீட்டுக்காரனுக்கு இருக்கிறது. பணம் வைத்திருந்தால் திருடரும், கடன் வாங்குவாரும், வரி தண்டுவாரும் அந்தப் பொருளைக் கொண்டுபோய் விடுவார்களே என்ற அச்சம் இருக்கிறது. பொருளும், உறவினர்களும், நண்பர்களும் நம்மை விட்டுப் போய்விடும் காலம் வருமோ என்ற கவலையினால் அமைதியை இழந்துவிடும் இயல்பு மனிதர்களுக்கு இருக்கிறது. ஒருகால் அவை யாவும் தம்மை விட்டுச் செல்லாமல் இருந்தாலும் அந்தச் செல்வர் அவைகளை விட்டுப் போகின்ற காலம் ஒன்று உண்டு. யமன் வந்து உயிரைக் கொண்டுபோகும் போது ஒருவன் ஈட்டி வைத்திருக்கும் செல்வமோ, உடம்பில் அணிந்திருக்கும் அணிகளோ, அன்பு செய்து பாராட்டும் மனைவியோ, உறவினர்களோ, நண்பர்களோ அவனுடன் செல்ல இயலாது. அவன் தன்னுடையது என்று எண்ணி, பல சமயங்களில் தானே அது என்று ஏமாந்து வாழ்ந்திருந்த உடல் கூடச் செல்லாமல் பிணமாகப் போய்விடும். ஒரு மனிதன் இறந்தால் அவனுடைய உறவினர்கள் மயானத்தோடு நின்றுவிடுகிறார்கள். மனையாட்டி வீட்டோடு நின்றுவிடுகிறாள். அசையாப் பொருள் அசைவதே கிடையாது.
இறந்த பிறகு
செல்வன் ஒருவன் இறந்துவிட்டால் அவன் சம்பாதித்து வைத்திருந்த பொருள்களை எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுப் பெற்றுக் கொள்வதற்குப் பலர் காத்திருப்பார்கள். பல குடும்பங்களில் பொருளை ஈட்டி வைத்த செல்வன் இறந்த பிறகு அந்தச் சொத்துக்காகப் பலவகையான சச்சரவுகள் உணடாகிப் பலகாலம் வழக்குகள் நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். எத்தனைக்கு எத்தனை செல்வன் சிறப்பாக வாழ்ந்தானோ அத்தனைக்கு அத்தனை அவனுக்குப் பின் அவன் குடும்பம் உலகம் பழிக்கும் படியான நிலைமையை அடைகிறது. “அத்தனை சம்பாதித்தான் ஐயா! என்ன பிரயோசனம்? அத்தனையும் ஒரு தலைமுறைக்குக்கூட நிற்காமல் போய்விட்டதே” என்று ஊரார் பேசுவதை நாம் கேட்கிறோம். ஆகவே, மனிதன் ஈட்டுகின்ற பொருள் அத்தனையும் அவன் உயிருள்ள வரைக்கும் பயன்படும் என்று சொல்லலாம். உயிர் பிரிந்த பிறகு அவற்றால் அவனுக்கு எவ்விதப் பயனும் இராது.
இறைவன் ஆணை
மூன்று பேர்கள் இருந்தார்கள். அம்மூவரும் சிறிது சிறிது பணத்தை முதலாக வைத்துத் தொழில் நடத்தத் தொடங்கினார்கள். ஒருவன் தான் வைத்த முதலை இழந்து விட்டான். ஒருவனுக்கு முதலில் ஒரே நஷ்டமாக வந்தது; ஆனால் விடாமல் தொழிலை நடத்தினமையினால் கடைசியில் இழந்ததையும் சேர்த்துச் சம்பாதித்தான். மூன்றாமவனுக்கு முதல் பெருகிக் கொண்டே போயிற்று; ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் இழந்து விட்டான்.
இப்படிப் பல வகையில் தொழில் செய்பவர்களின் நிலை இருப்பதைப் பார்க்கிறோம். பணமும், முயற்சியும் இவர்களிடத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் முடிவும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. நம் சக்தியினாலே இந்த விளைவு நேருவதாக இருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரி பயன் உண்டாகும். அப்படியின்றி அவரவர்களுடைய வினைகளுக்கு ஏற்ப ஒரு சக்தி நம்மையெல்லாம் இயக்குகிறது. அந்தச் சக்தியினாலேயே இப்படியெல்லாம் ஏற்படுகிறது. அதனால் இந்த வேறுபாட்டை உலகத்தில் பார்க்கிறோம். ஆகவே ஒருவனுக்குச் செல்வம் சேருவதும், உறவினர்கள் சேருவதும், நண்பர்கள் சேரு வதும் தன்னுடைய சொந்த முயற்சியினால் அன்று என்று எண்ணி, எல்லாம் ஆண்டவனுடைய ஆணை என்கிற நினைப்பு இருந் தால், அவற்றைப் பெறுவதனாலே தனி இன்பமும் இழப்பதனாலே பெருந்துன்பமும் உண்டாகா. எப்படி என்பதைப் பார்க்கலாம்.
பற்று அற்ற நிலை
செய்கின்ற காரியத்தின் விளைவு இறைவனுடைய திருவருளின்படி அமையும் என்ற நினைப்பு இருந்தால் நிச்சயமாக லாபம் வருமென்று எதிர்பார்க்க மாட்டான். ஈட்டுகின்ற பொருளில் பற்று இராது. லாபம் வந்தாலும், நம்முடையது அல்ல; ‘இறைவன் திருவருள்’ என்று எண்ணி இருப்பான். இதனால் மிகுதியான லாபம் வந்தால் அது காரணமாக அகம்பாவமோ, செருக்கோ உண்டாகாது.நஷ்டம் வந்தாலும், ‘ஐயோ போய்விட்டதே’ என்ற துக்கம் உண்டாகாது. ஒரு பொருளில் பற்று வைத்தால் அந்தப் பொருள் போகும் போது துன்பம் உண்டாவது இயல்பு; அல்லது அந்தப் பொருளை வேறு ஒருவன் கைப்பற்றினால் அவனிடத்தில் பகை உண்டாகும். பொருளிடத்தில் பற்றுக் குறைவாக இருந்தால் பகையோ துன்பமோ குறைந்து விடும்.
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்“
என்பது திருக்குறள். பற்று இல்லாமல் இருக்க வேண்டுமானால் இறைவனுடைய நினைப்பு வரவேண்டும். முன்னாலே சொன்ன செல்வர் தம்முடைய முயற்சியினால் பலவகைப் பொருள்களை ஈட்டியும் அவர் இறந்துபட்டார். அவை அவருடன் போகா என்ற உண்மையைத் தெரிந்து கொண்டோம்.
இந்த உண்மையை அவரும் வாழும்போதே தெரிந்து கொண்டிருக்கலாம். இதைத் தெரிந்து கொண்டதனால் அவருக்கு உண்டாவது துக்கந்தான். அதற்கு மேலே மற்றோர் உண்மையைத் தெரிந்து கொண்டிருந்தால் அவருக்குத் துக்கம் வராமல் இருந்திருக்கும்.’பொருள்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகும்; நாமும் அவற்றைவிட்டுப் போவோம்’ என்ற உண்மையைத் தெரிந்து கொள்வதோ? ‘பொருள்கள் நம்மிடம் சேருவதும், நழுவுவதும் ஆண்டவன் திருவருளால் தான் நிகழ்வன. ஆகையால் அவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்’ என்ற உண்மையையும் சேர்த்து நினைக்கக் கற்றுக் கொண்டிருந்தார் என்றால் பொருள் அவரை விட்டுப் போனாலும், அவர் அவற்றை விட்டுப் போகும் நிலை வந்தாலும் துன்பம் உண்டாகாது.
மூன்று வகை
மனிதன் சேர்த்துக் கொள்கிற பொருள்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் ஒரு வகை. அசையாப் பொருள் ஒருவகை. அசையும் பொருள் ஒரு வகை. இந்த மூன்று வகைப் பொருள்களையும் நிரம்ப உடையவர்கள் மிகப் பெரியவர்கள். இந்த மூன்றும் ஒருவனிடத்தில் சேருவதும் மிக அருமை. மனிதன் இந்த மூவகையும் தனக்குச் சேரவேண்டுமென்று எண்ணி முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவை ஒருவனைச் சாருவதும், தீர்வதும் அவன் முயற்சியின் பாற்பட்டவை அல்ல. இந்த உடம்பு போனவுடன் நிச்சயமாக அவற்றினுடைய தொடர்பு அற்றேவிடும். இந்த உண்மையை அருணகிரியார் சொல்ல வருகிறார்.
உறவினர்களுக்கெல்லாம் முதல் ஆரம்பம் மனைவி. மனைவி வந்த பிறகுதான் நம்முடைய குடும்பம் உண்டாகிறது. தாய் தகப்பனோடு இருக்கும்போது அது நம்முடைய குடும்பம் அன்று; தகப்பனின் குடும்பத்தில் நாம் இருக்கிறோம். நாம் நம் முயற்சியினால் எதையும் செய்வதற்குரிய வகை மனையாட்டியோடு நாம் குடும்பம் நடத்துகிறபோது தான் அமைகிறது. மனைவி வந்த பிறகு மக்களும், பேரன் பேத்திகளும் தோன்றிக் குடும்பம் பெருகுகிறது. இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருக்கிற உறவு மனைவிதான். நம்முடைய வாழ்க்கை மனையாட்டியோடு சேர்ந்து வளரத் தொடங்குகிறது. அதனால் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வள்ளுவர் கூறுவர்.
அடுத்தப்படியாகச் சொத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். நிலம், தோட்டம் ஆகிய எல்லாவற்றையும் அசையாப் பொருள்கள் என்று சொல்வார்கள். அவற்றுள்ளே எல்லோருமே காண அமைவது வீடு. அசையாப் பொருளாகிய சொத்தின் பிரதிநிதி வீடு என்று சொல்லலாம்.
வீட்டை ஒருவன் கட்டிக் கொண்ட பிற்பாடு வாழ்க்கைக்குரிய பொருள்கள் பலவற்றைச் சேர்த்துக் கொள்கிறான். அணிகளைச் சேர்க்கிறான். கார் முதலியவற்றைச் சேர்க்கிறான். யாவுமே பணத்தினால் உண்டாவனவை.
ஆகவே உறவினர்களுக்கு எல்லாம் பிரதிநிதியாக மனைவி யையும், அசையாப் பொருள்களுக்குப் பிரதிநிதியாக வீட்டை யும், அசையும் பொருள்களுக்குப் பிரதிநிதியாகப் பணத்தையும் சொல்லலாம். மனையாட்டி, வீடு, பணம் ஆகிய மூன்றும் பலவகை உடைமைகளுக்கு அடையாளங்கள். மனிதன் இந்த மூன்று வகைப் பொருள்களிடத்திலும் ஆசை வைத்து அழிந்து விடுகிறானே என்று அருணகிரியார் இரங்குகிறார். இப்போது பார்க்கப் போகிற கந்தர் அலங்காரப் பாட்டில் இரங்குவது மட்டும் அன்று; கந்தர் அநுபூதியிலும் இந்த மூன்றையும் சொல்கிறார்.
அநுபூதிப் பாட்டு
இந்த மூன்றின் மூலமாக உள்ளத்தைப் பற்றுவது மாயை. மாயை மூன்று வகைப்படும். சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்பன அவை. பிரகிருதி மாயை பிரபஞ்சத்தில் நாம் வாழும்போது நமக்குத் தெளிவு உண்டாகாமல் கலக்கத்தை உண்டாக்குவது. பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் இந்த வாழ்க்கை யில் பற்றுக் கொண்டு இறைவன் அருளைப் பெற வேண்டுமென்ற தெளிவு இல்லாமல் மேலும் மேலும் ஆசையைப் பெருக்கிக் கொள்வது, இந்த மாயையினால் நிகழும் விளைவு. ஆசைதான் பிறப்புக்குக் காரணம். இந்த ஆசை மாயையினால் உண்டாகிறது. ஆசையை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று. இதையே,
“அகம்மாடை மடந்தையர்“
என்று கந்தர் அநுபூதியில் சொல்கிறார். அகம் – வீடு. இது மண்ணாசைக்குப் பிரதிநிதி. மாடை – பொன்.மடந்தையர் – பெண்.
“அகம்மாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே“
என்று கந்தர் அநுபூதியில் வருகிறது. ‘மகமாயையைக் களைகின்ற பேராற்றல் படைத்த முருகப் பெருமானது திருவருள் பெற்றும், பிரபஞ்ச மாயையினின்றும் நான் விடுபடவில்லையே’ என்று கந்தர் அநுபூதிப் பாடலில் அவர் சொல்கிறார்.
“மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம்மாடை மடந்தையர் என்றயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.”
இந்தப் பாட்டில், “அகம் மாடை மடந்தையர்” என்று சொல் வதையே இப்போது பார்க்கப் போகிற கந்தர் அலங்காரப் பாட்டில்,
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும்
என்று சொல்கிறார்.
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம் அன்று பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்ஐ யோ?கெடு வீர்! நும் அறிவின்மையே!
இறத்தல் உறுதி
உலகத்தில் பலபல பொருள்கள் அநுபவிப்பதற்கு இருந்தும் அவற்றை அநுபவிக்காமல், அநுபவிக்க முடியாமல், ஒருவன்
இறந்துவிடுகிறான். அந்தப் பொருள்கள் அவனோடு போகின்றனவா? இல்லை. நிலையாமை ஒன்றுதான் இந்த உலகத்தில் இருக்கிற உண்மை.
“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு.”
எத்தனையோ மக்கள் பிறந்து பொருள் ஈட்டி வாழ்ந்தாலும் முடிவாக இறந்து போகிறார்கள். பிறந்தவர்கள் எல்லோரும் பொருள் ஈட்டிக் கொள்வது நிச்சயம் அன்று. அவர்கள் எத்தனை காலம் வாழ்வார்கள் என்றும் உறுதி சொல்ல முடியாது. அவர்கள் மணம் செய்து கொள்வார்களா, இல்லையா என்பதை வரையறையாகச் சொல்ல முடியாது. அப்படிச் செய்துகொண்டாலும் குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியும் சொல்ல முடியாது. உறவினர்கள் அவர்களுக்குக் கிடைப்பார்கள் என்ற நிச்சயமும் இல்லை. படிப்பார்களா, உத்தியோகம் செய்வார்களா, பணம் ஈட்டுவார்களா, ஊர் சுற்றுவார்களா, நோய் இல்லாமல் வாழ்வார்களா என்று கேட்டால் இந்தக் கேள்விகளில் எதற்கும் உறுதியாக விடை சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மாத்திரம் உறுதி. பிறந்தவர்கள் செத்துப் போவார்கள். வாழ்ந்தாலும் வாழா விட்டாலும், பணம் ஈட்டினாலும் ஈட்டாவிட்டாலும், மணம் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாவிட்டாலும், குழந்தை குட்டிகளைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், நோய் உடையவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயமாக மனிதன் செத்துப் போகத்தான் வேண்டும்.
நிலையான பொருள்
சாகும்போது அவனுடன் தொடர்ந்து நெருங்கியிருக்கின்ற அனைத்தும், உடம்பையும் உள்ளிட்டு அவனுக்குப் பயன்படாமல் விலகிவிடும். இப்படி உயிர் உலக வாழ்க்கையை விட்டுப் போகும் போது, நழுவிவிடுகிற பொருள்களிலே மனிதன் பற்று வைப்பதனால் பயன் இல்லை. இந்த உடம்பு இறந்து படுவதைக் கண்முன்னால் பார்த்தும், இதனால் கிடைக்கும் இன்பத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இன்பம் என்பது மனத்தினால் அமைகிற ஒன்றே தவிர வெளிப்பொருள்களினால் உண்டாவதில்லை. நிரந்தரமாக நமக்கு இன்பம் வர வேண்டுமானால் எப்போதும் நிலையான பொருளிடத்தில் பற்று வைக்க வேண்டும். மயக்கத்தினால் மனைவியினாலும், மற்றப் பொருள்களினாலும் இன்பம் வரும் என்று நினைத்து அவற்றோடு தொடர்பு ஏற் படுத்திக் கொள்கிறோம். அந்தப் பொருள்கள் நிலைத்தன அல்ல. ஆதலின் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் நின்று விடும். அப்படியின்றி நாம் பெறுகின்ற இன்பம் நிலைத்திருக்க வேண்டுமானால் என்றைக்கும் நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். என்றைக்கும் நிலையான பொருள் இறைவன் தான்.
மனிதர்களாகப் பிறந்தவர்கள் இன்பமாக வாழ வேண்டுமானால் அன்பு செய்ய வேண்டும். அன்புடைய வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. “மனைவியிடத்தில் அன்பு வைக்கிறேன். குழந்தையிடத்தில் அன்பு வைக்கிறேன். ஐயோ, இவர்கள் கொடுக்கிற துன்பம் பொறுக்க முடியவில்லையே! இவர்களிடத்தில் நான் வைத்த அன்பு பெரும் தொல்லையாகப் போய் விட்டதே!” என்று வருந்துகிறான். குழந்தை இறந்துவிட்டாலோ, மனைவி இறந்துவிட்டாலோ, அவன் அடைகிற துன்பத்திற்கு எல்லை இல்லை. இப்படி நாம் அன்பு வைக்கிற பொருள்கள் நிலையாத பொருள்களாக இருந்தால் அந்த அன்பினால் பயன் இல்லை. அந்த அன்பைப் பற்று என்று சொல்வர். எல்லாக் காலத்தும் இருக்கிற நிலையான பொருளிடத்தில் வைக்கும் அன்பே உண்மையான அன்பு.
நம்முடைய உடம்பு பல காலம் இராது என்பதைப் புதிதாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நிலையான பொருள் எங்கே இருக்கிறது என்பதைத்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த ஆராய்ச்சியையும் நாம் புதிதாகச் செய்வது கூட அவசியம் இல்லை. பல பெரியவர்கள் இந்த வாழ்க்கையில் பல வகையான பரிசோதனைகளைச் செய்து உண்மை இன்னது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். நிலையான இன்பம் இத்தகையது, அது இன்ன இடத்திலிருந்து வருவது, இன்னவாறு பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்; பிறர் வாயிலாகக் கேட்கவும் கேட்கிறோம். ஆனாலும் அவற்றில் நமக்கு நம்பிக்கை இருப்பது இல்லை.
ஐயப்படுபவர்
உண்மையான பொருளிடத்தில் அன்பு வைத்தால் உண்மையான இன்பம் கிடைக்கும் என்பதை நாம் நம்பாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? நமக்குள்ள ஐயம். ஒருகால் அது பொய்யாக இருந்தால் என்ன செய்வது என்ற ஐயம்.இப்படி ஐயப்படுபவர்களுக்கு எந்தக் காலத்திலும் நன்மை கிடையாது. சம்சயாத்மா வினச்யதி என்பது பகவத் கீதை.
கடைக்குப் போய் ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொண்டு வருகிறோம். அது நல்ல அரிசியாகத்தான் இருக்கும் என்று நம்பியே வாங்கி வருகிறோம். அதில் நஞ்சு கலந்திருந்தால் என்ன செய்வது?’ என்று யாரும் நினைப்பதில்லை. நம் வீட்டுக் குழந்தை விளையாடப் போகிறது. அதன்மேல் கார் ஏறி இறந்து விட்டால் என் செய்வது? என்று யாரும் சந்தேகப்படுவதில்லை. ஒரு சிற்றுண்டிச் சாலைக்குப் போகிறோம். அங்கே இருக்கிற சிற்றுண்டி நல்லதா அல்லாததா என்று நாம் உண்டால்தான் தெரியும். அது நல்லது என்று தெரிந்தால்தான் உண்ண முடியும். அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு முன்னே அங்கு உண்டு வந்தவரைக் கேட்கிறோம். ‘அங்கே சாப்பாடு நன்றாக இருக்குமா?” என்று கேட்டு, “மிக நன்றாக இருக்கிறது” என்று அவர் சொல்ல, அதை நம்பி நாம் போய் உண்கிறோம்.
என்றும் நித்தியமாக இருக்கும் ஒன்றை அறியும் தகுதி நமக்கு இல்லை. அத்தகைய இன்பம் ஒன்று இருந்தால் அதை அடைய வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருக்கிறது. ஆனால் அப்படி ஓர் இன்பம் உண்டென்று அதனை நன்றாக உணர்ந்த ஒருவர் சொன்னால் அவரது வார்த்தைகளில் நமக்கு நம்பிக்கை பிறப்பது இல்லை. உணவை உண்ணப் போகிறவன் முன்பு உண்டவனிடத்தில் கேட்டு அதில் நம்பிக்கை வைத்து உண்ண வேண்டியது எப்படி அவசியமோ, அப்படியே உயிருக்கு இன்பம் அளிக்கின்ற உணவைப் பற்றிப் பெருமக்கள் கூறிய சொல்லில் நாம் நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும். ஒருவர் இருவர் சொன்னால் சந்தேகம் உண்டாகும். எத்தனையோ காலமாக எத்தனையோ பெருமக்கள் கடவுள் உண்மையென்றும், அவரால் தான் உய்வு பெறவேண்டும் என்றும், அவருடைய திருவருள் தான் நிரந்தரமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள்; வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையில் வெவ்வேறு துறையில் சொல்லியிருக்கிறார்கள். அத்தனை பேர்களும் நம்பக் கூடாதவர்களா? அவர்கள் சொல்வதை நம்பக் கூடாது என்று சொல்வது முறையாகுமா?
கூர்கொண்ட வேலன்
அருணகிரிநாதர் உலக இயலில் ஈடுபட்டுத் தாம் ஈட்டிய பொருளில் மிக்க பற்றுக் கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து உபதேசம் செய்யப் புகுகிறார்.
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்!
மக்கள் பொருளைப் போற்றுகிறார்கள்; மனைவியையும் மக்களையும் போற்றுகிறார்கள். ‘நான் நான்’ என்று தம்மையே போற்றி ஏற்றம் கொண்டாடுகிறார்கள். தம்முடைய அழகான மனைவியைப் பார்க்குந்தோறும், ‘நமக்கு இப்படிக் கிடைத்தாளே’ என்று தம்மைத் தாமே கொண்டாடிக் கொள்கிறார்கள். தம்முடைய மாளிகையின் அழகைப் பார்த்தும், பிறருக்குக் காட்டியும் பெருமிதம் அடைகிறார்கள். இப்படி எதை எதையோ போற்றி ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஒருநாளாவது ஆண்டவனைப் போற்றி இருக்கிறார்களா?
ஆண்டவன் வடிவேல் பெருமான். அவன் கையில் இருக்கிற வேல் கூர்மையானது. அதனை ஞானசக்தி என்று சொல்வார்கள். ஞானம் உயர்ந்த அறிவு. அறிவுக்கும் கூர்மை உண்டு; வேலுக்கும் கூர்மை உண்டு. வேல் ஞான சக்தி. ஆகையால் அது மிகக் கூர்மையாக இருக்கிறது. இறைவன் அதனைத் தன் படையாக வைத்திருக்கிறான். ஞான சொரூபியாகிய ஆண்டவன், ஞான சக்தியைத் தன் படையாகக் கொண்ட ஆண்டவன், தன்னையும் தன் கை வேலையும் போற்றுகிறவர்களுக்கு அருள் செய்கிறான். ஞானிகள் கூர்கொண்ட வேலனைப் போற்றி ஏற்றம் கொண்டாடுகிறார்கள். மற்றவர்களோ தம் மனையாட்டியிடத்தில் மயக்கம் கொண்டு, தாம் ஈட்டிய பொருளிடத்தில் மயக்கம் கொண்டு அவையே உண்மையென்று கருதி அவற்றைப் பெற்றதனாலே தமக்கு ஏற்றம் வந்துவிட்டதாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
‘கூர்கொண்ட வேலனைப் போற்றாமல், அப்படிப் போற்றுகின்ற பக்தி தம்மிடத்தில் இருக்கிறது என்று ஏற்றம் கொண்டாடாமல், உலகத்துப் பொருள்களைப் பெற்றதனாலே தமக்கு ஏற்றம் வந்துவிட்டதாக இவர்கள் கொண்டாடுகிறார்களே!’ என்று இரங்குகிறார் அருணகிரியார். “பூண்பனவும், தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும் பெற்றிருக் கிறோம் என்று ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே. இவை நிலை என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்கிறார். பூண்பன – அணிகின்ற அணிகலன்கள். தார் – மாலை. தார்கொண்ட மாதர் – தம் மாலையை ஏற்றுத் தமக்குத் துணையான மனைவி. பணச் சாளிகை – பணப்பை. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு தம் பெருமைக்கு இவை காரணம் என்று எண்ணி, மரணம் என்ற ஒன்று உண்டு என்பதை மறந்து செருக்கி நிற்கின்ற செல்வர்களைப் பார்த்துச் செய்கின்ற உபதேசம் இது.
காலன்
போர்கொண்ட காலன்
என்கிறார். யமன் யாரிடத்திலும் சிநேகமாக வருபவன் அல்ல. யமன் வந்தால், “நான் உன்னோடு வருகிறேன்” என்று சொல்கிற மனிதரும் இல்லை. யமன் வந்தான் என்றால் ஒரே கலக்கந்தான்; அழுகைதான். கொடுத்த கடனைத் திருப்பி ஒருவன் கேட்டாலே நமக்குச் சங்கடம் வருகிறது. உயிரைக் கொண்டு போகிற காலன் வந்தால், “நான் வருகிறேன்'” என்றா சொல்வோம்? அவன் சும்மா வருவது இல்லை. உயிர்க்கூட்டங்களில் எதுவும், “நான் உலக வாழ்க்கையை விட்டுப் போகவேண்டிய காலம் வந்து விட்டதா? சரி, வருகிறேன்” என்று அமைதியாக வராது என்பதை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான். அதனால் போர் செய்வதற் குரிய ஆயுதங்களுடனே வருகிறான். அவன் கையில் கதை இருக்கிறது. சூலம் இருக்கிறது. பாசம் இருக்கிறது. அவனுடைய உருவமே பயங்கரமாக இருக்கிறது. அவன் சமாதானமாக அலங் காரம் பண்ணிக் கொண்டு வருகிறவனே அல்ல. எப்போதும் போர்க் கோலத்தோடு வருகிறான். அதனால்,
போர்கொண்ட காலன்
என்று சொன்னார். அவன் பாசம் ஒருநாள் நிச்சயமாகக் கழுத்தைச் சுற்றி விழுந்து விடும். “நீங்கள் உம்முடைய உடம்பு, மாளிகை முதலியன எல்லாம் நிலையானவை என்று எண்ணிக் கொண்டு ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே. உமது மாளிகையில் இருந்து மட்டும் அல்ல, உம்முடைய உடம்பிலிருந்தே உம்முடைய உயிரை அவன் பிரித்துக் கொண்டு போவான். அப்படிக் கொண்டு போகும்போது உம்முடைய இத்தனை பொருள்களும் உம்மோடு வருமா?” என்று கேட்கிறார்.
ஆர் கொண்டு போவர்?
நிச்சயமாக வாரா. அவற்றை யார் கொண்டு போவார்கள்? அதுவும் நிச்சயம் இல்லை. பல பேர் தம்முடைய மக்களுக்குச் சொத்தை எழுதி வைப்பார்கள். சிரமப்படாமல் பெற்றது ஆகையால் அவர்கள் அந்தச் சொத்தைச் சூதாட்டத்திலும், வேறு தீய நெறிகளிலும் செலவிட்டுவிடுவார்கள். பலகாலம் உழைத்துச் சம்பாதித்த அந்தச் சொத்து மிகக் குறுகிய காலத்திலே கள்வர்கள், வழக்கு அறிஞர்கள், குதாடிகள் ஆகியோர்களுக்குரிய சொத்தாகப் போய்விடுகிறது. அதனால்,
ஆர்கொண்டு போவர் ஐயோ?
என்று கேட்கிறார். கட்டி வைத்திருக்கும் வீட்டில் ஒருவன் பல காலம் வாழ்கிறான். ஆனால் அவன் இறந்தவுடன் அவன் பிள்ளை அதை விற்றுவிடுகிறான். அந்த வீட்டின் அமைப்பு அவனுக்குப் பிடிக்கிறது இல்லை; அல்லது வீட்டை விற்க வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படுகிறது. அதைக் கட்டினவன் நல்ல சைவனாக இருப்பான். அவனுக்குப் பின்னால் அதுவே கசாப்புக் கடையாகக்கூட மாறிவிடுகிறது. இந்த மாதிரி சொத்தைச் சேர்த்தவனுடைய இயல்புக்கு விரோதமானவர்களிடம் கூட அவை போய்ச் சேருவதைப் பலவிடங்களில் பார்க்கிறோம். ”நான் இறந்த பிற்பாடு இவற்றையெல்லாம் நிச்சயமாக என்னுடைய பிள்ளை அநுபவிப்பான்” என்று யாரும் நம்புவதற்கில்லை. அதற்குக் காரணம் பிள்ளை பொல்லாதவன் என்பது மாத்திரம் அன்று. அந்தப் பிள்ளையே இவனுக்கு முன்னால் இறந்துவிடலாம். நிலையாமையே தன்னுடைய பெருமையாக உள்ள இவ்வுலகத்தில் இன்ன பொருள் இன்னாரிடம் இவ்வளவு காலம் இருக்கும் என்கிற வரையறை இல்லை. ஆதலினால், “நீர் சம்பாதித்த பொருளை யார் கொண்டு போவார்களோ?” என்று இரங்குகிறார் அருணகிரியார்.
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு
போம்அன்று பூண்பனவும்
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ?
வேலன் துணை
எப்போதும் போர்கொண்டு வருகிற காலனுக்கு எதிராகத் தைரியத்தோடு இருக்கவேண்டுமானால் நமக்கு ஒரு பலம் வேண்டும். காலனுக்கு எதிராகத் தைரியத்துடன் நிற்க வேலன்தான் நமக்குப் பலமாக இருப்பான். போர் கொண்ட காலனுக்கு எதிரே நிற்கக் கூர்கொண்ட வேலன் துணை வேண்டும். அவன் தானாக வந்து துணை நிற்கமாட்டான். இவ்வுலகில் வாழ்கின்ற காலத்திலேயே நமக்குப் போர் கொண்ட காலன் ஒருநாள் வருவானே என்கிற பயம் உண்டாகி, அப்போது பயத்தைப் போக்குவதற்குக் கூர்கொண்ட வேலன் நமக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று எண்ணி, அந்த வேலன் புகழைப் பாடி, அவனிடத்தில் அன்பு வைத்துப் பழக்கம் செய்தால் காலன் வருங்கால் கவலையில்லாமல் நாம் இருக்கலாம். அத்தகைய அறிவு உடையவர்களுக்கு வாழ்க்கையில் தாம் ஈட்டுகிற பொருள் எல்லாம் பொருளாகத் தோன்றாது. மணம் செய்துகொண்ட மனயாட்டியும், பெற்ற பிள்ளைகளும், உறவினர்களும் நிலையான துணையாகத் தோன்றமாட்டார்கள். ஆண்டவனே உறுதுணையாவான் என்கிற நினைவு இருக்கும். வாழும்போதே இந்த எண்ணமும் இறைவனிடத்தில் தொடர்பும் இருப்பதனால் மரணம் அடைந்த பிறகும் ஆண்டவன் திருவருள் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதலால் ஈட்டுகின்ற பொருளிலேயே உள்ளத்தை மயக்கிவிட்டு அவற்றைக் காப்பாற்றுவதையே வாழ்க்கைக் கடமை என்று எண்ணிப் பொழுதைப் போக்காமல், ஈட்டுகின்ற பொருள்கள் இருக்கும்போதே அவற்றோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து கூர்கொண்ட வேலனைப் போற்ற வேண்டுமென்பதைக்குறிப்பாக இந்தப் பாட்டில் காட்டினார்.
எளிய செயல்
மனைவியை மணப்பதும், பணத்தை ஈட்டுவதும், மாளிகையைக் கட்டுவதும் ஆகிய காரியங்கள் பெரும் முயற்சியினாலே உண்டாவன. ஆனால் கூர்கொண்ட வேலனைப் போற்றுவதற்குப் பெரிய முயற்சி வேண்டியதில்லை. நமக்கு மனம் இருக்கிறது. வாய் இருக்கிறது. உடம்பு இருக்கிறது. அவற்றைக் கொண்டு எல்லோருமே வேலனைப் போற்றலாம். பணம் இல்லாதவன் மனைவியைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. தொழில் செய்ய முடியாது. வீடுகட்ட முடியாது. ஆனால் முருகனை நினைக்கலாம். உலகத்திலுள்ள எல்லா மக்களும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. வீடு கட்ட முடியும் என்று சொல்ல முடியாது. உறவினர்களைப் பெறுவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் முயன்றால், எல்லோருமே ஆண்டவனுடைய அருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். அதற்கு வேண்டிய உறுப்புக்கள் உடம்பும், வாயும், மனமுமே. மனிதர்களுக்கு இவை இருக்கின்றன. எளிதில் இவை நமக்குக் கிடைத்தும் அந்த ஏற்றமான காரியத்தைச் செய்யாமல் மிகவும் முயன்று சம்பாதித்த பொருள்களிடத்தில் ஈடுபட்டு அவற்றையே பெரியனவாகப் போற்றி அவற்றை உடைய நிலை தான் ஏற்றமான நிலை என்று கொண்டாடிக் கொண்டிருப்பது மாயையின் விளைவு. இந்த விளைவினால் வருகின்றது துன்பம். இது மாற வேண்டுமானால் உலகில் வாழும் போதே கூர்கொண்ட வேலனைப் போற்ற வேண்டும். அப்படிப் போற்றுவதுதான் ஏற்றம் என்று கொண்டாட வேண்டும். அப்படிப் போற்றுகிறவர்களையே ஏற்றம் உள்ளவர்களாகக் கொண்டாடி வணங்க வேண்டும்.
இறைவனைப் போற்றுவதற்குரிய கரணங்களை எல்லாம் பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாகப் பொழுது போக்குகின்றவர்களைப் பார்த்து,
கெடுவீர்!
என்று கூறுகிறார். ‘வீணாகப் போகிறீர்களே! கேட்டை அடை வீர்கள்’ என்பது பொருள். அவர்கள் அறியாமையினால் அப்படிச் செய்கிறார்கள். ஆகையால், “உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே!” என்ற பொருளில்
கெடுவீர்! நும் அறிவின்மையே!
என்று சொல்கிறார். ஆண்டவன் நமக்கு அறிவு கொடுத்திருக்கிறான். அதனைக் கூர்மையாக்கிக் கொண்டு அதனாலே உலக இயல்பை நன்கு அறிந்து வாழ வேண்டும். எது நிற்கும், எது நிலையாதது என்கிற உண்மையைத் தெரிந்து, கூர்மையான ஞான வேலைத் திருக்கரத்திற் கொண்ட பெருமானே உண்மையான பொருள் என்று அறிந்து அவனைப் போற்ற வேண்டும். ஆனால் அறிவு படைத்த மனிதன் ஆசையை வளர்த்துக் கொண்டே போவதனால் தன்னிடம் இருக்கிற சிறிது அறிவையும் வரவர மங்க அடித்துவிடுகிறான். மாயை கப்பிக் கொள்கிறது. அறி வின்மையினால், அஞ்ஞானத்தினால் உண்மையை உணர முடியாத வனாகி விடுகிறான். ஆகவே, ‘பூண்பனவும் தார் கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும் நமக்கே உரியன’ என்று எண்ணி வாழ்கிறான். “இப்படி வாழ்கிறீர்களே, என்னே உங்கள் அறிவின்மை” என்று இடித்துக் காட்டி இரங்குகிறார் அருணகிரியார்.
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல்
ஏற்றங்கொண் டாடுவிர்காள்,
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு
போம் அன்று பூண்பனவும்
தார்கொண்ட மாதரும் மாளிகை
யும்பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர்ஐ
யோ!கெடு வீர்நும் அறிவின்மையே!
(கூர்மையையுடைய வேலாயுதனை வழிபடாமல், நமக்கு ஏற்றம் இருக்கிறதென்று தம்மைத் தாமே பாராட்டிக் கொள்ளும் மக்களே, போர்க்கோலத்தைக் கொண்ட யமன் உம்மை உடலினின்றும் பிரித்துக் கொண்டு போகும் அந்த நாளில், நீங்கள் அணியும் ஆடையாபரணங் களையும், மாலையை அணிந்த மனைவியரையும், மாளிகையையும், பணப்பையையும் ஆர்கொண்டு போவார்கள்? ஐயோ! கெட்டுப்போகிற வர்களே; உம் அறிவின்மை இருந்தவாறு என்னே!
கூர் -கூர்மை. போர்-போர்க்கோலம்; ஆகுபெயர். தார் -மாலை; தார் கொண்ட மாதர் – உம்முடைய மார்பின் மாலையை ஏற்று மணந்து கொண்ட மாதர். சாளிகை – பை. அறிவின்மையே என்பது அறிவின்மை இருந்தவாறு என்னே என்றவாறு.)
இது கந்தர் அலங்காரத்தின் எழுபத்தெட்டாவது பாட்டு.



