பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

பெரியவரின் நல்லுரை

ஒரு பெரியவர் ஓர் இளைஞனுக்கு நல்லுரை கூற வந்தார். அவன் சரியானபடி நடக்காமையினால் இன்ன இன்ன செய்ய வேண்டுமென்று அவர் சொல்லலானார். “ஹைஸ்கூலுக்குப் போய்ப் படிக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். பின்பு காலேஜுக்குப் போக வேண்டும். அங்கே பாடமாக உள்ள நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றுத் தேர்ச்சி பெறவேண்டும். அப்போதுதான் உத்தியோகம் கிடைக்கும்” என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் அந்த இளைஞனுக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. “அப்படியெல்லாம் செய்வதற்கும் நமக்கும் நெடுந்தூரம்” என்று எண்ணி மயங்கி நின்றான்.

பேசியவருக்குக் கொஞ்சம் கருணை பிறந்தது. “சோம்பித் திரிந்து கொண்டிருக்கிறாயே. இவ்வளவு பெரிய காரியங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் மயங்குகிறாயே. புத்தகத்தை எடுத்துப் படிக்காமல் இருக்கிறாயே. கேட்டவுடன் சொல்ல வேண்டுமென்று நெட்டுருப் பண்ணாமல் இருக்கிறாயே. பள்ளிக் கூடத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சம்பளம் கட்டுவதற்கு என்ன வழி என்று ஆலோசிக்காமல், சும்மா வழியில் போகிறாயே” என்று பின்பு எளிய முறைகளைச் சொன்னார்.

அதுவும் இதுவும்

அவ்வண்ணமே அருணகிரியார் சென்ற பாட்டில்,

அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பு அறல் வேண்டும்

என்று சொன்னார். “இவையெல்லாம் நிறைவேறினால் அல்லவா இராப்பகல் அற்ற இடத்தில் இருக்க முடியும்? அது மிகவும் எளிய செயல் அன்றே!” என்று முடித்தார். பிறகு அவருக்கே இரக்கம் தோன்றியது. “இப்படிச் சொல்லி விட்டோமே! இந்த நெறிகள் மிகவும் துன்புற்று அடைய வேண்டியனவாயிற்றே! இதைக் கேட்டே அஞ்சுவார்களே யாவரும்!” என்ற கருணை அவர் உள்ளத்தில் முதிர்ந்தது. உடனே எளிய முறைகளை அடுத்த பாட்டில் சொல்லத் தொடங்கினார். இது செய்ய வேண்டும் என்று முன்பு சொன்னவர், எளியனவாய் இருக்கின்ற இவைகளைக் கூடச் செய்யவில்லையே என்ற வாய்பாட்டிலே இப்போது ஆரம்பிக்கிறார். “அப்படியெல்லாம் சொன்னேனே என்று அஞ்சாதே. இவ்வளவு எளிமையான வழிகள் இருக்க இவற்றைக் கூட நீ கவனிக்கவில்லையே! இவற்றை முதலில் செய். பின்பு முன்பு சொன்னவை எளிதில் நிறைவேறும்” என்று உற்சாக மூட்டும் முறையில் இந்தப் பாட்டை அடுத்தபடி வைக்கிறார்.

படிக்கின் நிலைபழ னித்திரு நாமம்; படிப்பவர்தாள் முடிக்கின் றிலை;முரு காஎன் கிலை;முசி யாமல் இட்டு மிடிக்கின் றிலை;பர மானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின் றிலை;நெஞ்ச மே,தஞ்சம் ஏது நமக்குஇனியே?

நெஞ்சை நோக்கிக் கூறல்

இன்று வந்து நாளைப் போகின்ற மக்களைப் பார்த்துச் சொல்லாமல் தம்மோடு உறவாகிய நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார். தம்முடைய நெஞ்சுக்குச் சொன்னாலும் மற்றவர்கள் இதனை உணர்ந்து பயன்பெற வேண்டுமென்றதுதான் அவர் கருத்து. பசுமாடு தன் கன்றுக்குப் பால் கொடுத்தாலும் அதன் பிறகு அதன் பாலை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வது வழக்கந்தானே? அதுபோல் நெஞ்சுக்குச் சொல்லும் வாயிலாக உலகிலுள்ள மக்களுக்கு அரிய கருத்தைத் தெரிவிக்கிறார். முருகப் பெருமானைத் துதி செய். அவனுடைய கோயிலுக்குச் சென்று சுற்று. அவனைத் தினமும் மலரெடுத்து அருச்சனை செய்து வழிபாடு செய் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் அப்படிக்கூடச் சொல்ல வில்லை. அவற்றைவிட மிக எளிய வழிகளைச் சொல்லுகிறார்.

தலப்பெயர்

தலந்தோறும் சென்று அங்கங்கே எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசனம் செய்து இன்புறுதல் சமய வாழ்க்கையில் அடிப்படையான வழக்கம். ஆண்டவனுடைய தரிசனத்தைச் செய்தவர்கள் மெல்ல மெல்ல அவனுடைய திருவுருவை உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்ய வேண்டும். அந்தத் தியானத்திற்குக் கருவியாகவே தல தரிசனத்தைப் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள். அப்படிப் போய்த் தரிசனம் பண்ணுவது கூடக் காலம், சக்தி, செல்வம் ஆகியவற்றைப் பொறுத்தது. பல ஊர்களுக்குப் போகவேண்டாம். சொந்த ஊரில் கோயில் இருக்கும். கோயில் இல்லாத ஊர் தமிழ்நாட்டில் இல்லை அல்லவா? அந்தக் கோயிலுக்குச் சென்று தினமும் தெய்வத்தைத் தரிசித்து வழிபடுவது நல்லது. அதுவும் முடியவில்லை; உத்தியோகத் தொந்தரவு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அப்போது வீட்டிலேயே ஒரு படத்தை வைத்து வழிபடலாம். அப்படியும் முடியவில்லை. இறைவனுடைய திருநாமத்தையாவது சொல்லிக் கொண்டிருக்கலாம். கடவுளுடைய திருவுருவத்தைத் தியானிப்பது ஒருவகை முயற்சியினால் நடப்பது. ஆனால் அவன் திருநாமத்தை எளிதில் சொல்லிவிடலாம். அவன் திருநாமத்தைச் சொல்வது கிடக்கட்டும். அவன் இருக்கிற ஊர்களின் பெயரையாவது சொல் லலாம். அது எல்லாவற்றையும்விட மிக எளிது. “இதைக்கூட நீ சொல்லாமலே இருக்கிறாயே!” என்று தொடங்குகிறார்.

“அப்பா! நீ ஆண்டவன் நாமத்தைக் கூடச் சொல்ல வேண்டாம். அவன் உறையும் எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டாம். அவன் எப்போதும் அருள் ஆட்சி செய்து எழுந்தருளியிருக்கும் பழனிக்குப் போ என்றுகூட நான் சொல்லவில்லை. அந்தச் சிறந்த தலத்தின் பெயரைக் கூடவா சொல்லக் கூடாது? பெயரைச் சொன்னாலும் புண்ணியம் உண்டாகுமே! இந்த எளிய காரியத்தைக்கூட நீ செய்யாமல் இருக்கிறாயே!” என்று இரங்கிப் பேசுகின்றார்.

திருநாளைப் போவாராகிய நந்தனார் நடராசப் பெருமானைக் கண்டு முதலில் சேவிக்கவில்லை. சிதம்பரத்திற்குப் போகவில்லை. தில்லை, தில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.

தில்லை தில்லை என்றாற் பிறவி
இல்லை இல்லை என்று மறை மொழியும்

என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுவார். நந்தனார் தல தரிசனத்திற்கு முன்னாலே தலத்தின் பெயரைச் சொல்லியே ஆனந்தப்பட்டார். அந்த நிலைகூட நமக்கு வரவில்லையே என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார்.

படிக்கின்றிலை பழனித் திருநாமம்!

தலங்களின் பெருமை

பழனி என்ற ஊரின் பெயரைச் சென்னால் பல வகையான எண்ணங்கள் வரலாம். அங்கே நகரசபை இருக்கிறது. கச்சேரி இருக்கிறது.வியாபாரிகள் இருக்கிறார்கள். ஆனால் பழனி என்று சொன்னவுடன் நமக்கு அவை நினைவுக்கு வருகிறது இல்லை. ”நான் பழனிக்குப் போகிறேன்” என்று யாரேனும் ஒருவர் சொன்னால், அவர் ஏதோ விவகாரத்திற்காகவோ, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகவோ போகிறார் என்று எண்ணுவது இல்லை. பழனி என்றவுடனே நமக்கு ஆண்டவன் நினைப்புத்தான் வருகிறது. திருநெல்வேலியில் இருக்கும் ஒருவன், “நான் திருச்செந்தூர் போகிறேன்” என்று சொன்னால், “அங்கே யாரேனும் உறவினர் வீட்டில் விசேஷமா?” என்று கேட்பது வழக்கம் அன்று. ‘அங்கே இப்பொழுது என்ன திருவிழா?” என்று கேட்போம். போகிறவனுக்குத் திருச்செந்தூரில் வேறு வேலை இருக்கலாம். ஆனாலும் திருச்செந்தூர் போகிறேன் என்று சொன்னால் முதலில் நமக்குச் செந்தில் ஆண்டவனுடைய நினைவுதான் வருகிறது.

இந்த நாட்டில் எந்த ஊரைப் பார்த்தாலும் அங்கே கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுடைய வரலாற்றை அந்த ஊர்க்காரர் சொல்வார்கள். சில ஊர்களுக்குப் புராணம் இருக்கும். ஊரின் பெயரைச் சொல்லும்போதே அந்த ஊரின் பெருமை எல்லாம் தெரியும்படியாக அப்பெயர் அமைந் திருக்கும்.

மதுரை என்றால் மீனாட்சி நினைவுக்கு வருவாள். சுவாமி மலை என்றால் முருகன் நினைவுக்கு வருவான். அந்த இடங்களில் வாழ்க்கைக்குரிய வசதிகளும், நாகரிக முயற்சிகளும், சினிமாக் கொட்டகையும் இல்லாமல் இல்லை. ஆனாலும் எல்லாவற்றுக்கும் மேலாக என்றும் மறையாமல் இருக்கின்ற பெருமை இறைவனுடைய சம்பந்தத்தினால் உண்டானதுதான். ஊருக்கே அதனால் மாறாத பெருமை உண்டு.

தலதரிசனப் பயன்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பைச் சொல்வார்கள். பல பெருமக்கள் வந்து வழிபட்ட இடம் என்று சொன்னால் அந்தத் தலத்திற்கு மதிப்பு உண்டாகிறது. இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டுமென்று முயற்சி செய்கிறவனுக்குக் குருநாதன் கிடைக்க வேண்டும். குருநாதன் எளிதில் கிடைக்க மாட்டான். பல இடங்களில் தேடி ஒரு மூலிகையைக் கண்டு பிடிப்பது போலக் குருவினுடைய திருவருள் கிடைக்க வேண்டும். மூலிகை கடையில் கிடைக்காது; சந்தையில் கிடைக்காது; வீட்டுக் கொல்லையிலும் கிடைக்காது. மலைப் பிராந்தியங்களில் தான் சிறந்த மூலிகை வளரும். ஆகவே அதைத் தேடுகிறவன் பெரிய சாலைகளில் நடந்து கொண்டிருந்தால் பயன் இல்லை; பங்களாக்களுக்குப்போய் வந்தாலும் பயன் இல்லை. எங்கே எங்கே மூலிகைகள் உண்டோ அங்கெல்லாம் போய்த் தேட வேண்டும்.

அதுபோல இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு வழி காட்டுகிற குருநாதன் இந்த உலகத்தில் இருந்தாலும் அவன் எங்கே இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்லவர்களிடையே சிறந்த ஞானிகள் பழகுவார்கள். தம்மைக் காட்டிக் கொள்ளாமல் அத்தகைய கூட்டத்தில்தான் அவர்கள் இருப்பார்கள்.எங்கே தீர்த்த விசேடம் இருக்கிறதோ, தல விசேடமும் மூர்த்தி விசேடமும் உள்ளனவோ அங்கேதான் பெரும்பாலும் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் தம்மைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வேறு இடங்களில் தங்குவதற்கு அவர்கள் மனம் இடம் கொடுக்காது. ஆகையால் தலங்களையும், தீர்த்தங்களையும், மூர்த்திகளையும் தேடிக் கொண்டு போனால் நடமாடும் மூர்த்தியாகிய குருநாதனை என்றைக்காவது ஒருநாள் கண்டுபிடித்துவிடலாம். தலயாத்திரை செல்வதில் இத்தகைய ஒரு பயன் உண்டு

முதலில் நம் நெஞ்சில் இறைவனுடைய பெருமையும் வரலாறுகளும் இடம் கொள்கின்றன. அப்பால் நாம் போகின்ற கோயில்களுக்கு நம்மைப் போலவே வருகின்ற பல பக்தர்களின் பழக்கம் உண்டாகிறது; சாது சங்கம் ஏற்படுகிறது. அது அதிகமாகச் சாதுக்களுடைய இயல்பு தோன்றுகின்றது. பக்தர்களும், சாமான்ய மனிதர்களும், சிறந்த நிலையில் உள்ளவர்களும் இன்னார் என்று இனம் கண்டுபிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. அதனால் சிலருடைய சிறப்பான குணங்களைக் காணுகின்ற பேறும் கிடைக்கிறது. அந்தப் பேற்றைக் காணும் போது நமக்கும் அத்தகைய நிலை வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது. இந்த ஏக்கமே ஆர்வமாக மாற, அந்த ஆர்வம் முயற்சிக்குத் தூண்டு கோல் ஆகும். முயற்சி செய்ய வேண்டு மென்ற துடிப்பு உண்டாகும் போது சாதுக்களிலே சிறந்தவர்களைக் கண்டதுபோலச் சிறந்தவர்களுக்குள்ளே சிறந்த குருநாதனைக் கண்டுபிடிக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும்.

இவற்றுக்கு எல்லாம் மூலம் சாது சங்கந்தான். சாதுக்கள் நல்ல இடங்களைச் சார்வார்கள். நல்ல இடம் என்பது கூடமும், ஹாலும், நகரமும் அன்று; ஆண்டவன் கோயில் கொண்டிருக்கிற ஆலயங்களும், திருத்தலங்களுமே ஆகும். ஆக, மூர்த்தி தலம் முதலிய திவ்ய தரிசனத்தால் சாது சங்கம் ஏற்பட்டு, அதனால் நாம் நற்கதி அடையவேண்டுமென்ற ஆசை உண்டாகி, அதனால் அதற்கு வழி காட்டுவார் யார் என்று ஆராய்ச்சி பிறந்து, கடைசி யில் குருநாதனைச் சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும். இவற்றை யெல்லாம் எண்ணித் தாயுமானவர் ஒரு கண்ணி பாடியிருக்கிறார்.

“மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு
வார்த்தைசொலச் சற்சருவும் வாய்க்கும் பராபரமே”

என்று சொன்னார்.

சிறந்த தலங்கள்

இந்த நாட்டில் ஓர் ஊருக்குப் பெருமை அந்த ஊரிலுள்ள வீடுகளாலே அல்ல; வீதிகளாலே அல்ல; கோயில்களால்தான். இன்றுகூட அந்த நிலை மாறவில்லை.

தலங்களுக்குள் சிறந்தவை என்று சிலவற்றைத் தனியாக எடுத்துச் சொல்கிறோம். இறைவன் எழுந்தருளி யிருப்பதனாலேயே அவற்றிற்குத் தனிச் சிறப்பு என்பது இல்லை. இறைவன் இருப்பது தான் சிறப்பு என்றால் உலகம் முழுவதும் அவனுக்குரிய தலமே. ஏதேனும் ஒரு கடையில் பல பண்டங்களை விற்பார்கள். அந்தக் கடையில் வியாபாரம் செய்கின்றவனும் உரமுள்ளவனாக இருக்கலாம். ஆனால் கடையில் இருக்கும் பண்டம் நல்லது என்பதை வியாபாரிகள் பேச்சினால் நாம் நம்புவது இல்லை. நமக்கு வேண்டியவர்கள், நம்முடைய மதிப்புக்கு உரியவர்கள் அந்தக் கடையில் பண்டங்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்லும் போதுதான், நாமும் அங்கே போய் வாங்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது. அப்படி, எல்லாத் தலங்களிலும் இறைவன் இருந்தாலும் எந்த எந்தத் தலங்களில் பல பெரியவர்கள் வந்து வழிபட்டு நல்ல அநுபவத்தைப் பெற்றார்களோ அந்தத் தலங் களுக்கு சென்றால் பக்தி முதிர்கிறது. அத்தகைய தலங்களில் மற்றப் பெரியவர்களும் வந்து சேருவார்கள். ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் தம்முடைய திருப்பாட்டினாலே புகழ்ந்த தலங்களுக்குப் பெருமை உண்டாகியிருக்கிறது. அங்கே இறைவன் தனிச் சிறப்போடு இருக்கிறான் என்பது அல்ல. அந்த இடத்தில் திருஞான சம்பந்தப்பெருமான் முதலிய பெருமக்கள் வந்து அருள் அநுபவம் பெற்று அதன் விளைவாகப் பாடல்கள் பாடியிருக் கிறார்கள் என்ற நினைவு அங்கே போனால் உண்டாகிறது. அப்போது நாமும் அதனைப் பெற வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகும்.

கல்யாணமாகாத பிரமசாரி ஒருவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை உடையவனாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை சில சமயங்களில் மிக அதிகமாக முறுகி நின்று வேதனைப்படுத்தும். தன்னைப் போல மற்றொரு பிரமசாரிக்குக் கல்யாணம் ஆகி, அந்தக் கல்யாணத்திற்கு அவன் சென்றிருந்தானானால், ‘நமக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடக்கவில்லையே’ என்ற ஏக்கம் எழும். கல்யாணம் நடப்பதற்குரிய பருவம் அவனுக்கு எப்போதும் இருந்தாலும், முதிர்ந்த எண்ணம் எழுவது அதனை நினைப்பதற்குரிய இடத்தில்தான். அவ்வாறே இறைவனுடைய திருத்தலங்கள் எங்கும் இருந்தாலும் அவன் திருவருள் பெற்ற பெரியவர்கள் நல்ல அநுபவத்தை அடைந்த இடமானால் நமக்கு அந்த நிகழ்ச்சியின் நினைவும் அதனால் ஆர்வமும் அது காரணமாக முயற்சியும் அந்த இடத்தில் எழும். ஆகையால்தான் நம்முடைய ஊரிலேயே கோயில் இருந்தாலும் காசி என்றும், இராமேசுவரம் என்றும், பழனி என்றும், செந்தூர் என்றும் நாம் போகிறோம்.

பெயரைச் சொல்லுதல்

ஏதேனும் ஒரு பொருளுக்கு மதிப்பு இருக்குமானால் அதை நாம் அடைவது மட்டும் நமக்குப் பெருமை என்பது இல்லை. அதைப் பற்றிச் சொல்வதையே ஒரு பெருமையாகக் கருதுகிறோம். தலத்திற்கு மதிப்பு இருப்பதைப் போலவே தலத்தினுடைய திருநாமங்களுக்கும் மதிப்பு உண்டு. அருணாசலம் என்று நினைத்தாலே போதும் என்று சொல்வார்கள். ஒருவரை நாம் அடைவதற்கு முன்னாலேயே அவரை அடைய வேண்டு மென்ற ஆசை மிக வேண்டுமென்றால் அவரைப் பற்றிய நினைப்பு அதிகமாக வேண்டும். தலங்களில் போய் இறைவனை வழிபடுவதற்கு முன்னால் தலங்களைப் பற்றிய எண்ணம் நம்முடைய உள்ளத்தில் முறுகவேண்டும். கோயிலுக்குப் போகா விட்டாலும் கோயில் கோயில் என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஏதேனும் ஒருநாள் போகின்ற முயற்சி நமக்கு உண்டாகும்.

தலங்களுடைய நினைப்பை நமக்கு அதிகமாக்குவதற்குப் பல முறைகளைப் பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். தலங்களின் பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது உண்டு. ஏழுமலை என்று ஒருவர் கூப்பிடுகிறார்; உடனே திருப்பதி நமக்கு நினைவு வருகிறது. அருணாசலம், வேதாசலம் என்று பெயர்கள் வைப்பதை நம் நாட்டில் பார்க்கிறோம். பழனி என்று பெயர் உடையவர்களும் பலர் இருக்கிறார்கள். அந்தப் பெயர்களைக் கேட்கும் போதெல்லாம் அந்த அந்தத் தலங்களைப் பற்றிய நினைப்பு நமக்கு வரவேண்டும். ஆகையால்தான் அத்தகைய பெயரை வைப்பது வழக்கமாக இருக்கிறது. இறைவனைத் தரிசிப்பதோடு அதற்கு முன்பே இறைவன் திருநாமத்தைச் சொல்வதனால் ஒருவகைப் பயன் இருப்பது போல, தல தரிசனத்திற்கு முன் தலத்தின் பெயரைச் சொல்வதிலும் பெருமை உண்டு. அதை முதல்படி என்றுகூடச் சொல்லலாம். அந்த முதற்படியைக்கூட நீ மிதிக்கவில்லையே!” என்று இரங்குகிறார் அருணகிரியார். “நீ ஆண்டவன் பெயரைச் சொல்லாவிட்டாலும் அவன் இருக்கிற ஊரையாவது சொல்லக்கூடாதா?” என்கிறார்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு, ”ஊரைச் சென்னாலும் பேரைச் சொல்லக் கூடாது” என்று. பழங்காலத்தில் பெரியவர்களின் பெயரைச் சொல்லும் வழக்கம் இல்லை. பெயர் இரகசியம் என்பது அல்ல. பெரியவர்களுடைய பெயரைச் சொல்வது மரியாதையாகாது. ஆனாலும் அவர்களை எப்படிக் குறிப்பது? அவருடைய ஊரையிட்டுக் குறிப்பது வழக்கம். அந்த வழக்கத்தை இப்போது சங்கீத வித்துவான்களிடம் பார்க்கலாம். முசிரி, அரியக்குடி, செம்மங்குடி என்று பேசுகின்றோம். பழங்காலத்தில் பெரியவர்களைக் கூறும்போது கூடலூர் கிழார், அரிசில் கிழார் என்று சொல்வார்கள். அவர்களுடைய சொந்தப் பெயர் நமக்குத் தெரியாது.ஊர்ப் பெயர்களுக்கே ஒரு பெருமை உண்டு.

இங்கே அருணகிரியார் சொல்கிறார், “நீ ஆண்டவன் பெயரைச் சொல்லாவிட்டாலும் அவன் இருக்கிற ஊரின் பெயரையாவது சொல்லக்கூடாதா, சொல்லவில்லையே!” என்கிறார். ஆண்டவன் திருவருளால் இன்ப அநுபவத்தை அடைய வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்கிறது. ஆனால் அதற்குரிய முயற்சிகளைச் செய்வதற்கு மனம் இல்லை. சோம்பேறியாக இருக்கிறோம். எந்த இன்பமும் திடீரென்று கிடைக்காது. ஒவ்வொரு காசாகச் சேர்த்தால் ரூபாயாவது போல, ஒவ்வொரு சிறு முயற்சியும் சேர்ந்து பெரிய முயற்சியாகிப் பெரிய பயன் கிடைக்கிறது. பெரிய காரியமாகிய அருளநுபவத்திற்குச் சின்ன முயற்சிகள் காரணமாகின்றன. அந்த முயற்சியை மெல்ல மெல்ல நமக்குச் சொல்லித் தருவாரைப் போல, எதிர்மறை வாயிலாக அருணகிரியார் சொல்கிறார். “ஆண்டவன் பெயரைச் சொல்வது கிடக்கட்டும். முதலில் அவன் உறைந்திருக்கிற ஊரையாவது சொல்லத் தெரிந்து கொள். நீ அதைத் தெரிந்து கொள்ளவில்லையே!” என்று நம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார்.

படிக்கின்றிலை பழனித் திருநாமம்.

பழனியின் பழஞ்சிறப்பு

பழனி ஆறுபடை வீடுகளில் ஒன்று.திருமுருகாற்றுப் படையில் ஆறுபடை வீடுகளை நக்கீரர் சொல்கிறார். ஆறுபடை வீடு என்று சொல்கிற வழக்கம் திருமுருகாற்றுப்படைக்கு பின்னர்த் தான் எழுந்தது. படைவீடு என்பது அரசன் சென்று படைகளோடு தங்கியிருக்கும் இடம். முருகப் பெருமான் தன்னுடைய அடியார்களுக்கு அருள் செய்வதற்காக இந்த ஆறு இடங்களிலும் தன் னுடைய கணங்களுடன் தங்கியிருக்கிறான். ஆதலால் அவை படைவீடு என்று பெயரைப் பெற்றன.

திருஆவினன்குடியை மூன்றாவது படைவீடாக நக்கீரர் சொல்கிறார். ஆவினன்குடியே பழனி என்றாலும், சிலர் அடி வாரத்தில் இருக்கிற கோயிலை ஆவினன்குடி என்றும், மலைக்கு மேல் இருக்கிற கோயிலைப் பழனி என்றும் சொல்கிறார்கள். ”ஆவினன்குடிதான் பழையது; பழனி என்ற தலம் பழையது அன்று” என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையின் மேலே கோயில் இருந்தால் கீழும் கோயில் இருப்பது வழக்கம். திருச்செங்கோட்டில் அப்படி இருப்பதைக் காணலாம். பழனி மலையின்மேல் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிறான். மலையின் கீழே முருகன் எழுந்தருளியிருக்கிறான். மலையின் மேல் ஏறி வழிபட இயலாதவர்களுக்கு கீழும் இறைவன் எழுந் தருளி காட்சி தருகிறான். பழனி என்ற மலையும் பழமையானது; அதிலுள்ள முருகனும் பழமையானவன்.

ஆவினன்குடி என்பது அந்த ஊருக்குப் பெயர். பழனி என்பது மலைக்குப் பெயர். பழங்காலத்தில் ஆவியர் குலம் என்ற குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இந்த இடத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். ஆவியினுடைய நல்ல குடி ஆதலின் ஆவிநன்குடி என்று ஆயிற்று. அவர்கள் வைகின இடத்திற்கு வைகாவிபுரி என்றும் பெயர் உண்டு. அதுவே நாளடைவில் வையாபுரி என்று ஆயிற்று. பழனிக்கே வையாபுரி என்று பெயர் உண்டு. இப்போது ஒரு குளத்திற்கு பெயராக வழங்குகிறது.

ஆவியர்கள் காலத்தில் தோன்றிய மன்னர்களில் சிறந்தவன் பேகன் என்பவன். அவனை வையாவிக் கோப்பெரும்பேகன் என்று சங்கநூல் கூறும். குளிரால் நடுங்கின மயிலுக்கு அவன் போர்வை தந்தான் என்று ஒருவரலாறு உண்டு. ஏழு வள்ளல்களில் ஒருவன் அவன். மலையின் மேல் இருக்கிற ஆண்டவனை வழிபடும் வழக்கம் அவனுக்கும் அவனது மரபினருக்கும் இருந்து வந்தது. ஒருநாள் எங்கேயோ சென்று கொண்டிருந்த போது கொஞ்சம் மழைக்காற்று அடித்தது. கார் வந்தால் மகிழ்வது மயிலுக்கு இயல்பு. ஒரு மயில் அந்தச் சமயத்தில் தன் தோகையை விரித்து ஆடியது. மயில் ஆடும்போது “சர் சர்” என்ற ஒலி உண்டாகும். பேகன் பார்த்தான். மயிலைக் கண்டவுடனேயே அவனுக்கு அது வெறும் பறவையாகத் தோன்றவில்லை. முருகப் பெருமானுக்கு அன்பனாகையால், ‘எம்பெருமானின் வாகனமாகிய இது குளிரில் நடுங்குகிறதே!’ என்ற எண்ணம் தோன்றியது. அடுத்த கணத்தில் தன் மேலே இருந்த போர்வையை எடுத்து அதன்மேல் போட்டுவிட்டான். அவனுக்குப் பறவைகளிடத்தில் இரக்கம் இருப்பது இயல்பு; ஆனால் எல்லாப் பறவைகளிடத் திலும் அவனுக்கு இத்தகைய இரக்கம் உண்டாகவில்லை. இயல் பாகவுள்ள இரக்கமும், முருகனிடம் உள்ள அன்பும் சேர்ந்து மயிலுக்குப் போர்வை போர்த்தும்படி செய்தன. ஆவியர் குலத்தில் வந்த பேகன் இங்கே வாழ்ந்திருந்தான் என்பதை இந்த வரலாற்றோடு சேர்த்துச் சங்ககாலத்து நூல்களில் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று சொன்னார்கள். முருகன் காக்கின்ற மலை என்று சங்க நூலில் வருகிறது. நகர் என்பது கோயிலுக்குப் பெயர். ‘நெடு நகர்ப் பொதினி’ என்றே வருகிறது. ஆகையால் பழங்காலத்திலேயே பழனி மலையும், மலையிலே முருகனுக்குத் திருக்கோயிலும் இருந்தன என்று தெரியவருகிறது.

புராண வரலாறு

பழனியின் பெருமையை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிற்காலத்தில் பெருமக்கள் வேறு ஒரு வரலாற்றையும் நமக்கு நினைப்பூட்டுகிறார்கள். பொதினி என்பது பழனி என்று மாறியது என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் பக்தர்கள் இதற்கு வேறு ஒரு காரணம் சொல்வது உண்டு. பழம் நீ என்பதே பழனி என்று குறுகியது என்பார்கள்.

ஒரு சமயம் நாரத முனிவருக்கு முருகப் பெருமானுடைய பெருமையை உலகத்திற்குக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவர் எதையாவது சாதிக்க வேண்டுமானால் சண்டை மூட்டிச் சாதிப்பார். இங்கும் ஒரு சிறிய கலகத்தை விளைவித்து உலகம் எல்லாம் கொண்டாடுகிற ஒரு தலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒரு மாம்பழத்தைக் கையில் கொண்டு சிவபெருமானை நோக்கிப் போனார். அப்போது சிவபெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமான், விநாயகர் ஆகியோருடன் ஒருங்கே வீற்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் நாரத முனிவர் அந்தப் பழத்தைச் சிவ பெருமானுடைய திருக்கரத்தில் ஈந்தார். மிக்க அன்புடைய தந்தையோ, தாயோ தமக்கு ஏதேனும் ஒரு தின்பண்டம் கிடைத்தால் அருகில் இருக்கிற குழந்தைக்கு அதைத் தந்துவிடுவது வழக்கம். அதுபோலப் பழத்தைப் பெற்ற சிவ பெருமான் தம்முடைய குழந்தைகளுக்கு அதைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணினார். ஒரு பழத்தை விண்டு இரண்டு பேருக்கும் பாதி பாதியாகக் கொடுக்க விரும்பவில்லை. உலகத்து மக்களாக இருந்தால் பழத்தை வெட்டிக் கொடுத்துவிடலாம். தெய்வக் குழந்தைகள். ஆகவே இந்தப் பழத்தை அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதன் மூலம் உலகத்திற்கு ஒரு நல்ல பயனை உண்டாக்க வேண்டுமென்று இறைவன் கருதினான். “இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கு இந்தப் பழம் உரியது” என்று ஒரு பந்தயம் வைத்தான்.

உடனே முருகன் தன் மயில் மேலேறி உலகை வலம் வரப் புறப்பட்டுவிட்டான். சிறிது நேரம் சும்மா அமர்ந்திருந்த கணபதி மெல்லத் தம்முடைய தொந்தி வயிற்றைத் தூக்கிக் கொண்டு மிகவும் நிதானமாகத் தம் தாய் தந்தையர்களை வலம் வந்தார். மூன்று முறை வலம் வந்து வணங்கிப் “பழத்தைத் தாருங்கள்” என்று கேட்டார். “நீ உலகத்தை வலம் வரவில்லையே; எப்படி உனக்குப் பழம் கொடுப்பது?” என்று சிவபெருமான் கேட்க, “எல்லா உலகங்களும் உங்களிடத்தில் அடங்கியிருக்கின்றன. ஆதலால் எல்லாப் பிரபஞ்சங்களையும் ஒரு முறைக்கு மூன்று முறையாக நான் சுற்றிவிட்டேனே’ என்று விநாயகர் சொன்னார். அந்த உண்மையை எப்படி மறுக்க முடியும்? ஆகவே மறுமொழி சொல்லாமல் சிவபெருமான் அந்தப் பழத்தைக் கணபதியிடம் கொடுத்துவிட்டான்.

வாங்கிக்கொண்ட பழத்தை தம் தம்பி வருவதற்கு முன்னாலேயே அவர் தின்றிருக்கலாம். ஆனால் பின்னாலே நிகழ்கின்ற காரியங்களுக்கு ஏற்றபடி நிகழ்ச்சி அமைய வேண்டாமா? முருகன் வரும் வரைக்கும் கணபதி காத்திருந்தார். முருகன் உலகத்தை விரைவில் வலம் வந்து வாயிலுக்குள் நுழையும் சமயம் பார்த்து வாயிலில் போய் நின்று அந்தப் பழத்தைத் தின்னத் தொடங்கினார். அவர் தின்னுவதைக் கண்ட முருகன் உண்மையை ஊகித்துக் கொண்டான். ‘நம்மை உலகத்தைச் சுற்றும்படி செய்து விட்டு நம் தந்தையார் நம் அண்ணாவுக்கு அல்லவா பழத்தைத் தந்துவிட்டார்?’ என்று எண்ணிச் சினம் வந்தவனைப் போலப் புறப்பட்டு விட்டான். ஆடை அணிகளை எல்லாம் கழற்றிவிட்டுத் துறவி போல நேரே பழனி மலையின் உச்சிக்குச் சென்று நின்று விட்டான்.

இதனை அறிந்த சிவபெருமான் உமாதேவியாரோடு சென்று “நீயே பழம் ஆயிற்றே; உனக்கு வேறு பழம் எதற்கு? பழம் நீ” என்று சொல்லிச் சமாதானப்படுத்தினார்களாம். அது முதல் இந்தத் தலத்திற்குப் பழம் நீ என்ற பெயர் வந்தது. அதுவே பழனி என்று ஆயிற்று.

இது எப்போது நடந்தது. யார் பார்த்தார்கள் என்ற கேள்விகளுக்கு இடம் இல்லை. முருகப்பெருமானே நமக்கு அநுபூதியைத் தரும் சுவை மிக்க கனி என்ற ஓர் உண்மையை இந்த வரலாறு காட்டுகிறது. இதனை நாம் மனத்தில் கொண்டால் நிகழ்ச்சியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இறைவனுடைய அருள் அநுபவத்தைப் பற்றிக் கவனிக்கலாம்.

அரோகரா!

இப்படிச் சங்க நூல்களிலும், புராணங்களிலும் பெருமை பெற்றது பழனி. இன்றும் பழனி மலையில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பழனி ஆண்டவனுக்கு அரோகரா என்று சொல்லி மலை ஏறுவதைப் பார்க்கலாம். பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் மனம் உருகும். அண்ணாமலைக்கு அரோகரா என்று அரோகரா சப்தம் தொடங்கியது. அரனுடைய திருநாமமே அது. ஆனால் நாளடைவில் அந்தச் சப்தத்தைப் பழனி ஆண்டவனே வாங்கிக் கொண்டான். அரோகரா என்றால் இப்போது நமக்குப் பழனிதான் நினைவுக்கு வரும். பல நோயாளிகளும், ஏழைகளும் அங்கே சென்று தம்முடைய நோயும், வறுமையும் தீர்ந்து இன்புறுகிறார்கள். முதிர்ந்தவர்கள் கூடப் பிரார்த்தனை செய்துகொண்டு அங்கே சென்று மலை ஏறித் தரிசனம் செய்யும் ஆற்றலைப் பெறுகிறார் கள். அருணகிரியார்,

அதிசயம் அநேகமுற்ற பழனிமலை

என்று திருப்புகழில் பாடியிருக்கிறார்.

:இத்தகைய சிறந்த தலத்தின் பெயரைக்கூட நீ சொல்ல வில்லையே!” என்று இப்போது தம்முடைய நெஞ்சுக்கு உரைப் பாரைப் போலச் சுட்டிக்காட்டுகிறார்.

படித்தல்

படிக்கின்றிலை பழனித் திருநாமம்

படிப்பாவது, பலமுறை சொல்வது. ”படித்துப் படித்துச் சொல்கிறேன்” என்று உலக வழக்கிலும், பலமுறை சொல்வதைக் குறிப்பிடுவது வழக்கம். திருநெல்வேலிக்காரர்கள் பாடுவதையே படிப்பது என்று சொல்வார்கள். பாடம் பண்ணி இங்கே பாடுவதையே படித்தல் என்று கொள்ளவேண்டும். மீட்டும் மீட்டும் அதைச் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் இனிக்குமானால் அதை நாவில் வைத்துப் பலதடவை சுவைப்போம். விழுங்குகிற பொருளைக் காட்டிலும் வாயில் வைத்துச் சுவைக்கின்ற பொருளுக்கு இனிமை அதிகம். வாயில் வைத்துச் சுவைக்கின்றவையெல்லாம் உண்ணும் பொருள்களே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரியவர்களுக்கு இறைவன் திருநாமம் தின்பண்டம் போல இனிக்குமாம். இனிக்கின்ற ஒரு பொருளைப் பலமுறை நாவினாலே சுவைக்க வேண்டும் அல்லவா? ஆகையால் இறைவனுடைய திருநாமத்தையும் பலகாலம் சொல்லிச் சொல்லி அதனால் உண்டாகிற இன்பத்தைப் பெறுவது பக்தர்கள் இயல்பு. இங்கே பழனி என்ற திருநாமத்தை நீ பலகாலமும் சொல்லவில்லையே என்ற பொருளில்,

படிக்கின்றிலை பழனித் திருநாமம்

என்று சொன்னார்.

அடியார்களைச் சார்தல்

அடுத்தபடியாக ஒன்று சொல்கிறார். “பழனியின் பேரைச் சொன்னால் அதைப்பற்றிய நினைவு உன்னிடம் இருக்கும். பல தடவை அங்கே சென்று வந்திருக்கிற அன்பர்கள் இருப்பார்கள். அவர்கள் பழனி பழனி என்று அநுபவ நினைவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடத்தில் போய் அவர்கள் காலைப் பிடித்துக் கொண்டு வணங்கத் தோன்றும்; அதை நீ செய்யவில்லையே!” என்கிறார். பழனி அநுபவத்தை வெறும் சொல்லால் தெரிந்து கொள்வது முடியாது. அங்கே போய் வந்தவர்கள் பெற்றிருக்கிற கிளர்ச்சியைக் கண்டால் நமக்கு அதன் பால் மதிப்பு உண்டாகும். “அத்தகையவர்களைப் பார்த்து நீ அவர்களுடைய தாளில் வீழ்ந்து வணக்கம் செய்யவில்லையே” என்கிறார்.

படிப்பவர் தாள் முடிக்கின்றிலை.

முதலில் ஆண்டவன் இருக்கிற தலத்தை நினைக்க வேண்டும்; பின்பு அந்தத் தலத்திற்குச் சென்று நலம்பெற்ற அடியார்களோடு சேரவேண்டும் என்ற இரண்டைச் சொன்னார். தலத்தை நினைந்து அந்த நினைவால் அங்கே சென்றவர்களைக் கண்டு பழக வேண்டும். அவர்களுடைய பழக்கத்தால் அந்தத் தலத்தின் வரலாறுகள் நமக்குப் புலனாகும். அங்கே அவர்கள் தாம் பெற்ற அநுபவங்களைச் சொல்லும்போது நாமும் அங்கே போக வேண்டும் என்ற ஆர்வம் மிகும்.

மூர்த்தியின் நாமம்

அடுத்தபடி அந்தத் தலத்திற்குப் பெருமை அளிக்கும் மூர்த்தியின் நினைவு வரும். நமக்கும் அந்தப் பெருமானைக் காண வேண்டுமென்ற ஆசை எழும். அங்கே போக வேண்டுமென்பதற்கு முன்பே அவனுடைய திருநாமத்தைச் சொல்லத் தொடங்குவோம். “இந்த மூன்றாவது படிக்கு நீ போகவில்லையே!” என்று சொல்வது போல,

முருகா என்கிலை

என்றார். முதலில் பழனி பழனி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பின்பு அந்தத் தலத்திற்குப் போனவரைக் கண்டு வழிபடவேண்டும். பின்பு அவர்கள் வழிபட்ட முறைகளைத் தெரிந்து, அந்த ஊரில் உள்ள மூர்த்தியைப் பற்றித் தெரிந்து, அவனுடைய திருநாமத்தைச் சொல்ல வேண்டும். ஆக மூன்று படிகளைச் சொன்னார்.

“முருகா என்கிலை” என்பது ஏதோ ஒரு விலாசத்தைச் சுட்டிச் சொன்னது போன்றது அல்ல. பழனியின் திருநாமத்தைப் படித்துப் பின்பு அங்கே போனவர்களைக் கண்டு அவர்கள் பெற்ற அநுபவத்தை நமக்குச் சொல்ல, அந்த அநுபவத்தை அருளிய பெருமான் என்று நினைவோடு அந்த நாமத்தைச் சொல்ல வேண்டும். அது வெறும் அடையாளம் அன்று; நம் உள்ளத்தில் ஆர்வத்தை விளைக்கின்ற சொல்.

பற்று அறுதலும் கொடையும்

மனிதர்களுடைய துன்பத்திற்குக் காரணமாக இருப்பது பற்று. தன்வீடு, தன் இனம், தன் மனையாட்டி என்கிற பற்றுக்களை மனிதன் வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள அவன் துன்பத்தை மிகுதியாக அனுபவிக்கின்றான். பற்று நீங்கும்போது இன்பம் உண்டாகும். பற்று முற்றும் நீங்கும்போது வீடு கிடைக்கும்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு.”

நம்முடைய ஊர், நம்முடைய வீடு, நம்முடைய சுற்றத்தார் என்று பற்று வளராமல் இருக்க வேண்டுமானால் இந்த மூன்றுக்கும் மாற்றாக மூன்று பொருள் வேண்டும். இறைவனுடைய ஊரி னிடத்தில் அன்பு வந்தால் நம் ஊரைக் காட்டிலும் அந்த ஊரில் பற்று அதிகமாகும்; நம் ஊர்ப் பற்றுக் குறையும். நம்முடைய வீட்டை மறந்து இறைவன் திருக்கோயிலிடத்தில் பற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே இறைவனுடைய அடியார்களைச் சுற்றமாக மதிப்பது, அவர்களுக்கு வழிபாடு செய்வது என்று வந்தால் நம்முடைய உடலுக்கு இன்பம் தருகிற சுற்றத்தார்களையே எண்ணியிருக்கும் நிலை மாறும். இறைவனுடைய அன்பு உள்ளத்தில் ஏற ஏற, நான், எனது என்ற எண்ணங்கள் மாறிப் பொருள் முதலியவற்றில் உள்ள ஆசை மெல்ல மெல்லக் கழலும். நான்காவது படியாகிய பற்றுக் கழன்ற நிலையைச் சொல்ல வருகிறார்.

பற்றுக் கழல்வது எப்படித் தெரியும்? தனக்குக் கிடைத்த ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறவன் பற்று உடையவன். பிறருக்கும் கொடுக்கவேண்டுமென்று நினைத்தால் அவனுடைய பற்றுக் கொஞ்சம் குறைந்தது என்று தெரிந்து கொள்ளலாம். தம்மிடம் உள்ளன எல்லாம் இறைவனுடைய அடியார்களுக்கே உரியன என்று எண்ணுகிறவர்களுக்கு இறைவனுடைய பக்தி முறுகி நிற்கும். நாயன்மார்கள் அப்படி வாழ்ந்தார்கள். தலத்தினுடைய பெயரைச் சொல்லி, தலவழிபாடு செய்த அன்பர்களை வழிபட்டு, தலத்தில் எழுந்தருளி இருக்கும் மூர்த்தியினுடைய நாமத்தை உள்ளக் கசிவோடு சொல்கிற பக்குவம் வந்தால் பற்றிக் கொண்டிருக்கும் பொருள்களிடத்தில் பிடிப்பு அற்றுவிடும். பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். இறைவனுடைய அன்பர்களையே உறவினர்களாகப் பெற்று அவர்களுக்கு வேண் டியவற்றைக் கொடுக்க வேண்டுமென்ற பக்குவம் உண்டாகும். ‘அப்படி நீ இடாமல் இருக்கிறாயே!” என்று அடுத்தபடி சொல்கிறார்.

முசியாமல் இட்டு மிடிக்கின் றிலை.

முசித்தல் – சலித்தல். எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் பிறனுக்குக் கொடுப்பதனாலே பெயர் வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் கணக்காகத்தான் தர்மம் செய்வான். பொருளில் பற்று உள்ளவன் புகழிலும் பற்றுப் பெற்றுச் செய்வது அது. அப்படியின்றி அடியார்களிடத்தில் மாத்திரம் பற்று உள்ளவர்கள் பொருளைப் பெரிதாகக் கருதாமல் தம்மிடத்தில் எது இருந்தாலும் கொடுத்து விடுவார்கள். மனைவியைக் கொடுத்தவருடைய உள்ளமும், மகனைக் கொடுத்தவருடைய உள்ளமும், கண்ணைக் கொடுத்தவருடைய உள்ளமும் அத்தகைய நிலையில் இருப்பவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்போது எதைக் கொடுப்பது, எதைக் கொடுக்கக் கூடாது என்று வேறுபடுத்திப் பார்க்கிற ஆராய்ச்சிக்கு இடம் இல்லை. ஆடையைக் கொடுக்கிறவன் ஆடை அளவில் பற்று நீத்தவன் ஆகிறான். கண்ணைக் கொடுத்தவன் உடல் அளவில் பற்று நீத்தவன்.மனைவியையே கொடுத்தவன் உணர்ச்சியையும் நீத்து விட்டவன்.

இட்டு மிடித்தல்

இறைவன்பால் அன்பு முதிர முதிர நம்முடைய பொருளை அடியார்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமும், கொடுக்கும் முயற்சியும் வளர்ந்துவரும். இந்த நாட்டில் தானம் செய்வதற்கு இவ்வளவுதான் என்ற வரையறையில்லை. மிக்க செல்வனாக இருக்கிறவன் பிறருக்குக் கொடுத்து வறியவனானால் அந்த நிலையை முன் இருந்த செல்வத்தைக் காட்டிலும் பெரிய செல்வம் என்று நினைக்கிற இயல்பு இந்த நாட்டு மக்களுக்கு உண்டு.

முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை

என்றால், ‘சிறிதேனும் சலிக்காமல் அடியார்களுக்கு அதனால் வறுமையை அடையவில்லையே!’ என்று பொருள்.

“அவன் லட்ச ரூபாய் உடையவன்” என்று பிறர் சொல்வதைக் காட்டிலும், லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தது. பிறருக்குக் கொடுத்தே அந்தத் தர்மப் பிரபு இன்றைக்கு ஆண்டியாக இருக்கிறான் என்று சொன்னால் அது மிகப் பெரிய பேறு. யாரிடத்திலும் செல்வம் நிலைத்திருக்கப் போவதில்லை. ஆனால் அத்தகைய பேறு நிலைத்திருக்கும். திருட்டிலே கொடுத்துவிட்டு ஆண்டியானவரும், தவறான வழிகளில் பணத்தைச் செலவிட்டு ஆண்டியானவரும் வறுமையையும் துன்பத்தையும் அடைவார்கள். ஆனால் பிறருக்குக் கொடுத்து வறுமையை ஏற்றவர்கள் பிறரால் புகழப்படுவதோடு தம்முடைய உள்ளத்திலும் ஒரு வகை நிறைவு பெறுவார்கள்.

அழகான பொருள்களை எல்லாம் தொகுத்துச் சொன்ன ஒரு புலவர், “கொடுத்து இளைத்த தாதா அழகன் ” என்று சொல்கிறார். பிறருக்குக் கொடுத்து அதனாலே வறுமையைப் பெற்ற வள்ளல் சிறந்த அழகுடையவனாம்.

யாருக்காவது உடம்பு மெலிந்தால் அது அழகன்று. ஆனால் தன் மணவாளனுடன் புது வாழ்வு தொடங்கினவள் சற்று மெலிந்தால் அது ஒரு தனி அழகாம். அப்படியே விரதம் இருந்து உடம்பு மெலிந்தால் அந்த உடம்பு அழகு. கண்ணுக்கு அழகு அன்று; கருத்துக்கு அழகு. புண்பட்ட வீரன் அழகன். விக்கிரகமாக வெட்டப்பட்ட கல் அழகிது. அவைபோல் பிறருக்குக் கொடுத்து வறுமையை மேற்கொண்டவன் அழகன்.

சுரதந் தனில்இளைத்த தோகை, சுகிர்த
விரதந் தனில்இளைத்த மேனி நிரதம்
கொடுத்திளைத்த தாதா, கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.”

பிறருக்கு இடுதல் என்பதை மிகச் சிறந்த தர்மமாக இந்த நாட்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஓர் அரசன், ‘நான் இந்தக் காரியத்தைச் செய்யாமற் போனால் இன்ன இன்ன பாவத்தைச் செய்தவனாவேன்’ என்று சபதம் செய்கிறான். ‘பலநாள் விருந்தினர் வாராமல் இருக்கிற அபாக்கியத்தை நான் பெறுவேனாக என்று அங்கே சொல்கிறான்.

இரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.”

அதனால், கொடாமல் இருக்கிற நிலை எவ்வளவு கொடியது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அழுதல்

இனி அடுத்தபடியாகச் சொல்கிறார்.

பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை.

இறைவனுடைய திருவருளினால் கிடைக்கும் ஆனந்தந்தான் மேலான ஆனந்தம். அதற்கு முன்னாலே வருகிற சிலசில மகிழ்ச்சிகள் மேலே உள்ள கோயிலுக்குப் படிகள் போன்றவை. ஆனந்தம் வந்துவிட்டால் நாணம் இல்லாமல் குதிப்பான்; அழுவான்; ஆடுவான்; பாடுவான். யாருக்கு ஆனந்தம் உண்டாகிறதோ அவன் அழுவான். அது துக்கத்தினால் அழுவது அல்ல; ஆனந்தத்திலே விம்முவது.

நாமும் அழுகிறோம். எல்லா அழுகையும் ஆனந்தத்தினால் வந்தன என்று சொல்ல முடியாது. ஓர் ஊரில் ஒரு தெருவில் இரண்டு பெரும் செல்வர்கள் வீட்டில் அழுகை கேட்கிறது. வீதியின் ஒவ்வொரு கோடியிலும் அவர்களுடைய வீடு இருக்கிறது.

ண்டு குடும்பத்தாரும் லட்சாதிபதிகள். ஒரு கோடியில் உள்ள வீட்டுப் பெண்மணி இடுப்புவலி என்று அழுகிறாள். மற்றொரு வீட்டுப் பெண்மணியும் அப்படியே அழுகிறாள். இரண்டு வீட்டிலும் பக்கத்தில் பலர் இருக்கிறார்கள். ஒரு வீட்டில், அருகில் இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். மற்றொரு வீட்டிலோ வேதனையோடு இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு வீட்டில் அழுத அம்மாள் அழுகையை நிறுத்துகிறாள். ஆனால் வேறு ஓர் அழுகை கேட்கிறது. அது சிறிய குழந்தையின் அழுகை; அப்போது பிறந்த குழந்தை.

ஆனால் மற்றொரு வீட்டில் அந்த அழுகை இருந்து கொண்டேருக்கிறது. இரண்டு இடத்திலும் இடுப்பு வலியினால் பெண் மணிகள் அழுதாலும் ஒரு வீட்டில் அழுத அம்மாளுக்கு வாயு வலி. மற்றொருத்திக்குப் பிரசவ வேதனை. இரண்டு பேரும் வேதனைப்பட்டு அழுதாலும் குழந்தை பெற்றவளுடைய வேதனை இன்பவேதனை ஆகிவிட்டது. இந்த இரண்டு பேருடைய அழுகையும் ஒன்றாகா.

அதுபோல் நம்முடைய அழுகை துயரம் காரணமாக வருவது. ஆனந்தம் பெற்றவர்களுடைய அழுகை வேறு. இராமகிருஷ்ண பரமஹம்சர் இரண்டுக்கும் வேறுபாடு சொல்கிறார். தாயுமானவர் ஆனந்தத்தின் விளைவாக வரும் அழுகையைப் பற்றிப் பாடுகிறார்.

“பெற்றவட்கே தெரியும்அந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை அறிவாளோ? பேரா
னந்தம் உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கன்னெஞ்ச முடைய ராவார்.”

கூத்தாடல்

குடத்தில் கள்ளை நிறைத்து வெயிலில் வைத்தால் அந்தக் குடம் ஆடும். பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் இச்செய்தி வருகிறது. ஓரிடத்தில் அந்தமாதிரி குடங்கள் ஆடிக் கொண்டிருன்றனவாம். அதனால் அந்த இடத்தை, “தசும்பு துளங்கிருக்கை” என்று புலவர் சொல்கிறார். அது போல் இறைவனுடைய பக்தியாகிய கள்ளை உண்ட மனிதனுடைய உடம்பு சும்மா இருக்காது ஆடும்; அசையும்; குதிக்கும்.

“உள்ளத்தே விளைந்த கள்ளே”

என்று அபிராமிபட்டர் சொல்கிறார். பக்தியில் முறுகி நின்றவர்களுக்கு, அருகில் இருப்பவர்கள் நம்மைக் கவனிப்பார்களே பரிகசிக்கப் போகிறார்களே என்ற எண்ணம் தோன்றாது; கூத்தாடுவார்கள்.

“ஆடு கின்றிலை கூத்துஉடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதும்இலை துணைஇலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே

என்று மணிவாசகப் பெருமான் சொல்கிறார். எடுத்தவுடன் ஆடு கின்றிலை என்கிறார். அதுதான் நடித்தல். நடித்தல் என்றால் பாவனை செய்தல் என்று இங்கே பொருள் கொள்ளக் கூடாது; நடனம் செய்தல் என்று கொள்ள வேண்டும்.

பஜனைக் கோஷ்டியில் தம்மை மறந்து கூத்தாடுகின்ற பக்தர்களை நாம் கண்டால் நாமும் ஆடவேண்டுமென்ற உணர்ச்சி எழுகிறது. வேண்டுமென்று கூத்தாடுவது வேறு; உள்ளே உள்ள பக்தியின் விளைவாகக் கூத்தாடுவது வேறு. கோபம் உள்ளவனுக்கு உடம்பு பதறுவது போல, பக்தி உணர்ச்சிமிக்கவனுக்குக் கூத்தாடும் நிகழ்ச்சி இயல்பாக உண்டாகும். அதுதான் மெய்ப் பாடு. மாசு மறுவற்ற உள்ளத்தில் பக்தி உண்டானால் அவர் களுக்கு ஏற்படும் கிளுகிளுப்பில் ஆடுவார்கள்; கதறுவார்கள்; பாடுவார்கள்.

குழந்தை மகிழ்ச்சி வந்தால் எப்படிக் குதித்துக் கூத்தாடுகிறதோ அப்படித்தான் அவர்கள் இருப்பார்கள். நாம் குழந்தைபோல ஆக வேண்டும். அப்படி ஆனால் நாணம் இல்லாமல் இறைவனை நினைந்து ஆனந்தம் உறுகின்ற நிலை வரும். குழந்தை அம்மாவைக் கண்டு விட்டால் ஓடி வந்து கட்டிக் கொள்கிறது. கொஞ்சம் வயசான பிற்பாடு அந்தக் குழந்தை கட்டிக் கொள்வானா? நாம் இப்போது அம்மாவை விட்டு விலகி நிற்கிறோம். நமக்கு வயசு ஆகிவிட்டது. உலக இயல் அநுபவம் மிக்கதுதான் காரணம். உலகத்திலுள்ள தாயினிடத்தில் இப்படி நடந்து கொள்வது இயற்கை; நேர்மையும்கூட. அதற்கு நேர்மாறாக, ஆண்டவனாகிய தாயினிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். வரவரக் குழந்தையாகி நாணத்தைவிட்டு அவனுடைய சந்நிதானத்தை அடைந்து கூத்தாட வேண்டும்; குதிக்க வேண்டும். உள்ளத்தில் உலக நினைவாகிய மாசு இருக்கிற வரைக்கும் கூத்தாடுவதற்கு நாணுவோம். கூத்தாடுகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இயற்கையாக அந்த நிலை வந்துவிட்டால் நாணமும் நழுவி விடும்.

பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை என்று சொல்லும்போது அருணகிரியார் படிப்படியாக விளைகின்ற மெய்ப்பாடுகளை நமக்கு நினைப்பூட்டுகிறார்.

இருவகை அழுகை

அழுகையில் இரண்டு வகை உண்டு. ஏங்கி அழுவது ஒன்று; தேங்கி அழுவது ஒன்று. இறைவன் திருவருள் நமக்குக் கிடைக்க வில்லையே என்று விம்முவது உண்டு. கிடைத்த பிறகு ஆனந்தத்தால் விம்முவதும் உண்டு. முதலில் உண்டாவது ஏக்கக் கண்ணீர்; பின்னால் உண்டாவது ஆனந்தக் கண்ணீர். பக்தர்களிடத்தில் இரண்டும் உண்டாகும். சாதன நிலையில் இருப்பவர்களுக்கு இறைவன் திருவருள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தினால் கண்ணீர் உண்டாகும். சாத்திய நிலையை அடைந்தவர்களுக்கு ஆனந்த நிறைவினாலே கண்ணீர் உண்டாகும். இங்கே பயனைச் சொல்கிறார்.

பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை.

ஐந்து நிலை

இதை ஐந்தாவது நிலையாகச் சொன்னார். முதலில் தலத்தினுடய திருநாமத்தைச் சொல்வது. பின்பு சாது சங்கத்தைச் சேர்தல். அதன் பின்பு இறைவன் திருநாமத்தைச் சொல்லுதல். நான்காவது நிலை இறைவனிடத்தில் பக்தி முறுக முறுகப் பொருள்களிடத்தில் பற்றற்றுத் தம்மிடம் இருப்பனவற்றை யெல்லாம் பிறருக்குக் கொடுத்தல். பின்பு உணர்ச்சி விஞ்சிச் சாதனம் செய்து பரமானந்த நிலை பெற்று உடம்பையே மறந்து நிற்றல். ஆக ஐந்து படிகளை இந்தப் பாட்டில் சொன்னார். இப்போது வரிசையாக அவற்றை மீட்டும் நினைத்துப் பார்க்கலாம்.

“நீ பழனி என்ற தலத்திற்குப் போகாவிட்டாலும் அந்தப் பெயரையாவது கேட்டுத் தெரிந்து கொண்டாயா? இல்லையே! தெரிந்து அதைப் பலதடவை சொன்னாயா? சொல்லி அந்த ஊருக்குப் போகவேண்டுமென்ற ஆசை உண்டாகி, போனவர்களையாவது போய்ப் பார்த்து அவர்கள் காலில் விழுந்தாயா? அதுவும் இல்லையே! அப்படி விழுந்திருந்தால் அவர்களிடம் பழனியைப் பற்றிக் கேட்கலாமே! கேட்டபிறகு அங்கேயுள்ள முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கலாமே. முருகனுடைய திருநாமத்தைத் தெரிந்துகொண்டு அதைச் சொன்னாயா? அப்படி அடிக்கடி சொல்லியிருந்தால் உன் உள்ளத்தில் பக்தி முறுகி இருக்கும். உன் ஊரிலுள்ள அபிமானம் தொலைந்திருக்குமே. உன்னிடத்தில் பொருள் இருந்தால் அதன் மேல் பற்றுக் குறைந்திருக்கும். சிறிதும் சலித்துக் கொள்ளாமல் பிறருக்கு இடுகின்ற நிலை வந்திருக்குமே. அப்படி இட்டாயா? இறைவனிடத்தில் பற்று மிகுதியும், பொருளினிடம் பற்றுக் குறைவும் வளர வளர இறுதியில் ஆனந்தநிலையை அடைந்திருப்பாயே. அதுவும் இல்லையே! இந்த வழியில் செல்லாமல் இருக்கும் உனக்குப் பெரிய துன்பம் காத்திருக்குமே. அந்தத் துன்பத்திற்குப் பற்றுக் கோடாக உலகத்தில் உள்ள எந்தப் பொருள் வரும்?”

தஞ்சம் ஏது?

தஞ்சம் ஏது நமக்கு இனியே?

யமன் வரும்போது நமக்குத் தஞ்சம் என்று சொல்கிறவன் ஒருவன் வேண்டும். இடையூறு வருகிறபோது அதைப் போக்கிக் கொள்வதற்குப் பலம் இல்லாவிட்டால் பலம் உடையவனைச் சார்ந்திருப்பது ஒரு பலம். வறுமையைப் போக்கிக் கொள்வ தற்குப் பணம் பலம். நோய்க்கு மருந்து பலம். ஆற்றல் இல்லாதவனுக்கு ஆள் பலம். பிரமசாரிக்கு இல்லறம் செய்ய வேண்டு மென்றால் மனையாட்டி பலம். இந்தப் பலங்கள் எல்லாம் உலக இயலில் வருகிற இடையூறுகளுக்கு மாற்றாக இருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் பெரிய இடையூறாகிய மரணம் வந்தால் அதற்கு யார் பலம்? இந்த உலகத்தில் நமக்கு வருகிற இடையூறுகளைப் போக்க வருகிற அத்தனை பொருள்களும் அந்தப் பயத்தை நீக்குவதற்குரிய ஆற்றல் பெற்றவை அல்ல. இறைவன் ஒருவன்தான் அப்போது பற்றுக் கோடாக இருக்கும் ஆற்றல் பெற்றவன். வேறு யாரை அழைத்தாலும் அவர்கள் நமக்குத் துணையாக வரமாட்டார்கள்; இறைவன் ஒருவன்தான் வர முடியும்.ஆதலின், “இந்த நெறியில் செல்லாமல் இருக்கிற உனக்கு அந்த இறுதித் துன்பம் வரும்போது தஞ்சமாக யார் வருவார்கள்?” என்று கேட்கிறார்.

செய்ய முடிந்தவை

இல்லாத ஒன்றைச் செய் என்றால் அது முடியாது. நமக்கு நாக்கு இருக்கிறது. விலங்குகளின் நாக்கைப் போன்றது அன்று.

நன்றாகப் பெயரை உச்சரிக்கிற நாக்கு அது. ஆகையால் அந்த நாக்கினாலே இறைவனுடைய திருத்தலமாகிய பழனியின் நாமத்தைச் சொல்லலாம். நமக்குக் கால் இருக்கிறது. வாய் இருக்கிறது. உடம்பு இருக்கிறது. பழனிக்குப் போக வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகாவிட்டாலும் போனவர்களின் காலில் வீழ்ந்து வணங்குவற்குரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சொன்னவற்றைக் கேட்கும் காதும், உணர்ந்து கொள்ளும் அறிவும் நமக்கு இருக்கின்றன. அவர்கள் உபதேசத்தைப் பெற்று இறைவனுடைய நாமத்தைச் செபித்துச் செபித்துப் பக்தியை வளர்த்துக் கொள்ள மனம் இருக்கிறது. மனிதப் பிறவியில் இறைவனோடு ஒன்றுபடுகிற ஆனந்த அநுபவம் கிடைக்கும். வேறு எந்தப் பிறவியிலும் கிடைக்காது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், கருவிகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்கிறார் அருணகிரியார்.

இவ்வளவையும் செய்வதனால் நமக்கு ஆனந்த அநுபவம் உண்டாகும். நாம் மரணத் துன்பத்தை நிச்சயம் அடையவேண்டி வருமென்ற உண்மையை நினைக்க வேண்டும். அந்த இடையூற்றுக்கு நாம் தப்ப முடியாது. அதனின்றும் தப்புவதற்கும் இந்த நெறி காரணமாகும். இவற்றையெல்லாம் நம் உள்ளம் கொள்ளும் படியாக அருணகிரிநாத பரமகுரு இந்தப் பாட்டைப் பாடுகிறார்.

படிக்கின் றிலைபழ னித்திரு
நாமம்; படிப்பவர்தாள்
முடிக்கின் றிலை; முரு காஎன்
கிலை;முசி யாமல் இட்டு
மிடிக்கின் றிலை; பர மானந்தம்
மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்
றிலை;நெஞ்ச மே!தஞ்சம்
ஏது நமக்கு இனியே?

(அறியாமையையுடைய என் நெஞ்சே! நீ பழனித் திருத்தலத்தின் திருப்பெயரைப் பலமுறை அடுத்தடுத்துச் சொல்லவில்லை; அவ்வாறு சொல்லுகிறவர்களை வணங்கி அவர்கள் அடிகளைத் தலைமேற் கொள்ள வில்லை; முருகா என்று பக்தியுடன் அவன் திருநாமத்தைக் கூறவில்லை; கிறிதும் சலிக்காமல் உன்னிடத்தில் உள்ளவற்றை அடியார்களுக்குக் கொடுத்து வறுமையை மேற்கொள்ளவில்லை; உயர்ந்த ஆனந்தம் உண்டாகி மீதூர, அதனால் விம்மி விம்மிக் கூத்தாடவில்லை; இனிமேல் நமக்கு ஆபத்து வந்தால் அப்போது தஞ்சமாக வரும் பொருள் ஏது இருக்கிறது?

படித்தல் – பலமுறை சொல்லுதல். முடித்தல் – தலைமேற் சூடுதல், முசியாமல் – தளர்ச்சி அடையாமல். இடுதல் – ஈதல்; உணவிடுதலுக்கே பெரும்பாலும் வரும். மிடிக்கின்றிலை; மிடி என்ற பெயரடியாகப் பிறந்த வினை; வறுமையை அடையவில்லை. நடிக்கின்றிலை கூத்தாட வில்லை. நெஞ்சை உறுப்புடையது போல வைத்துச் சொன்னது இது. தஞ்சம் பற்றுக்கோடு. இனி என்பது இப்போது என்றும், இனிமேல் என்றும் இருவகையாகவும் கொள்வதற்குரியது. ஏது என்ற வினா இல்லை யென்னும் குறிப்பையுடையது.

இப்படியெல்லாம் நடந்தால் முருகன் நமக்குத் தஞ்சமாக வந்து பாதுகாப்பான் என்பது கருத்து.)

இது கந்தர் அலங்காரத்தில் 75 -ஆவது பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !