பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

செய்த குற்றம் என்ன?

சென்ற பாடலில் பழனி ஆண்டவனுடைய நினைவை அருணகிரிநாத சுவாமிகள் ஊட்டினார். இன்று பார்க்கப் போகிற இந்தப் பாடலில் திருத்தணிகை ஆண்டவனுடைய நினைவு! வரும்படியாகச் செய்கிறார். அதோடு தாம் முழுப் பொய்யர் என்பதையும் புலப்படுத்துகிறார்.

பொய்யர்

இறைவன் திருவருளில் ஈடுபட்டு, கரசரணாதி அவயங்களினால் வழிபட்டு, மனத்தினாலே சிந்தித்து, வாக்கினாலே பாடிப் பேரின்ப அநுபவத்தைப் பெற்றவர் அருணகிரிநாதர். இத்தகையவர், “ஆண்டவனே! உன் தாளைத் தொழாத சென்னியும், உன் திருமேனியை நாடாத கண்ணும், உன் திருமுன் தாழாத கையும், உன் புகழ் பாடாத நாவும் எனக்கே தெரிந்து பிரமன் படைத்தனனே!” என்று புலம்புவது முழுப் பொய் அல்லவா? மலடி மகன் என்று சொல்வது போலல்லவா அது இருக்கிறது? மகன் என்ற வார்த்தையே அவனைப் பெற்றவள் மலடி அல்ல என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தப் பாட்டில் சூடாத சென்னி, நாடாத கண், தொழாத கை ஆகியவற்றைப் பிரமன் படைத்திருக்கிறானே என்று மட்டும் சொல்லி யிருந்தால் ஒருகால் அது மெய்யோ என்று நம்பலாம்.

பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே

என்று சொல்கிறார். இந்தப் பாட்டைப் பாடியது அவர் தானே? ஆகவே அவர் பொய் சொல்கிறார் என்று நிச்சயமாகச் சொல்லி விடலாம்.

பொய்யும் மெய்யும்

இவை பொய் போலத் தோன்றினும் பொய்யாகா. சத்தியம் செய்கிறேன் என்று சிலர் சொல்வது உண்டு. அப்படிச் சொன்னாலும் அது சத்தியம் ஆவதில்லை. சத்தியம் சொல்வதனால் தீமை உண்டாகுமானால் அதைச் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் இருக்கலாம். நல்லது நடப்பதற்காக ஒரு பொய் சொன்னால் அது பொய் ஆகாது என்று பெரியவர்கள் சொல்வர். பொல்லாதவன் ஒருவன் வேறு ஒருவனைக் கொல்ல வேண்டு மென்று துரத்திக்கொண்டு வருகிறான். ஓடி வருகிறவன் நம் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். துரத்தி வந்தவன் நம்மிடம் வந்து, “இங்கே எவனாவது வந்து ஒளிந்திருக்கிறானா?” என்றால் உடனே, “ஆம், இதோ இருக்கிறான்” என்று காட்டினால் நாம் அரிச்சந்திரன் ஆகிவிடமாட்டோம். ‘அவனை நாம் அறியேனேம்’ என்று சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் அது பொய் அல்லவா என்று கேட்கலாம். வாய்மை என்றால் என்ன?

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”

என்பர் வள்ளுவர். யாருக்கும் தீங்கு உண்டாகாமல் உண்மையைச் சொல்ல வேண்டும். தீங்கு உண்டாகும் படியாகச் சொன்னால் அது உண்மையாகாது. அதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதற்கு மாறாகப் பொய்யாக இருந்தாலும் குற்றமற்ற நன்மை உண்டாகுமாயின் அது உண்மைக்கு ஒப்பாகும்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என்பது குறள்.

அலங்காரம்

பொய்யில் இரண்டுவகை உண்டு. ஒருவகைப் பொய், சொல்கிறவனுக்குப் பொய் என்று தோன்றும்; கேட்கிறவனுக்குத் தெரியாது. இது வஞ்சனையாகும். மற்றொரு வகை, சொல்கிறவனுக்கும் கேட்கிறவனுக்கும் பொய் என்று தெரியும். இதற்குக் கற்பனை என்று பெயர். கம்பன் முதலிய புலவர்கள் இந்த வகையில் எத்தனையோ பொய் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய கற்பனைகள் உண்மை அல்ல; பொய். ஆனால் இவற்றைக் கண்ட யாரும் ஏமாறுவதில்லை. படிக்கிறவர்களுக்கு இவை கற்பனை என்று தெரியும். இவற்றைப் ‘புலவர் கற்பனை’ (Poetic Illusion) என்பர்.

‘துரும்பாக இளைத்து விட்டாயே” என்று ஒருவரைப் பார்த்துச் சொல்கிறோம். உண்மையில் துரும்பு போல எப்படி இளைக்க முடியும்? அப்படிச் சொல்லும்போது பொய் சொல் கிறோம் என்ற நினைவு இல்லை; கேட்கிறவனுக்கும் இல்லை. மிகையாகச் சொல்வதாக, அலங்காரமாகச் சொல்வதாக நினைத்துக் கொள்கிறோம். இப்படியே குழந்தையைப் பார்த்து, “யானைக் குட்டி” என்கிறோம். யானைக்குட்டி போலக் கொழு கொழு என்று இருக்கிறதென்று பொருள். இவையெல்லாம் மேலாகப் பார்த்தால் பொய்யாகத் தோன்றும். ஆனால் பொய் அன்று; அலங்காரப் பேச்சு. அதுபோல அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்வது ஒரு வகையான அலங்காரந்தான்; நூலே அலங்காரந் தானே?

அருணகிரிநாத சுவாமிகள், “நான் அதைச் செய்யவில்லையே! இதைச் செய்யவில்லையே! இந்தக் குற்றத்தைச் செய்தேனே! அந்தக் குற்றத்தை செய்தேனே!” என்று புலம்புவன எல்லாம் தம்மை நினைந்து சொல்வன அல்ல என்பதைப் பலமுறை பார்த்து வருகிறோம். இந்தப் பாட்டை, தம்முடைய உறுப்புகளை ஆண்டவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்தாமல் இருக்கிறவர்களை நினைந்து சொல்வதாகக் கொள்ள வேண்டும். “நீங்கள் இப்படி இருக்கிறீர்களே” என்று நம்மைப் பார்த்துச் சொன்னால் நமக்குக் கோபம் உண்டாகும். பெரியவர்களைப் புகழ்ந்தால் அவர்கள் நாணுவார்கள்; அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் சொன்னவரைப் போற்றித் தாம் வாடுவார்கள். பொல்லாதவர்களிடத்தில் அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் கோபம் கொள்வார்கள்; சொன்னவருக்குத் தீங்கு செய்தாலும் செய்வார்கள். குரங்குக்கு உபதேசம் செய்த குருவி பட்ட பாடு நமக்குத் தெரியுமே! பொல்லாதவர்களுக்கு உபதேசம் செய்யப் புகுந்தால், “நீ யார் உபதேசம் பண்ண?” என்று கேட்பார்கள். இது அருணகிரிநாதப் பெருமானுக்குத் தெரியாதா? தாய் போன்ற கருணையையுடைய அவர், நாம் இருக்கும் நிலைமையை உணர்ந்து தாமே அப்படி இருப்பதாக இரங்குகிறார்.

உறுப்புக்களால் பயன்

நம் உடலில் உள்ள உறுப்புக்களில் சிலவற்றை நாம் இயக்கலாம். சில தாமே இயங்குவன. இதயம் இருக்கிறது. அது நம்மால் இயக்க முடியாதது. அது நின்று விட்டால் மீண்டும் நம்மால் அதை இயக்க முடியாது. கை கால் தலை இவைகளை நாம் இயக்கலாம். நம்மால் இயக்குவதற்குச் சாத்தியமான, புறத்தில் இருக்கிற உறுப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை.

உயர்ந்த பொருளைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டால் மனிதர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள். சிறிய பொருளால் பெரிய பொருளை வாங்கவேண்டுமென்ற ஆசை மனிதனுக்கு இருக்கிறது. கிடைத்தற்கரிய பொருள் கிடைத்தால் அதைக் கொண்டு மிகப் பெரும் பயனை அடைவதுதான் முறை. பணம் கொடுத்து மற்றப் பாண்டங்களை வாங்கிவிடலாம். இறைவன் தந்திருக்கிற பாண்டமாகிய உடம்பு எத்தனை பொருள் கொடுத்தாலும் வாங்க முடியாதது. நமது சுண்டுவிரல் போய் விட்டது. லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது; புதிதாக ஒன்று பண்ண முடியாது. அத்தகைய அரிய உறுப்புகளைக் கொண்டு மிக அதிகமான பயனைப் பெற வேண்டும் என்று மனிதன் நினைக்க வேண்டும். எம்பெருமான் அருளாகிய பயனைப் பெறுவது ஒன்றுதான், நாம் அடைகிற பயன் எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என்பதை உணர்ந்து பெரியோர்கள் கரசரணாதி அவயவங்களை எல்லாம் ஈசுவரார்ப்பணம் செய்தார்கள். கையும் காலும் உடையவர்களாக நாம் இருப்பதனால் அவற்றைக் கொண்டு தன்னை வணங்கவேண்டும் என்றே ஆண்டவன் கையும் காலும் உடையவனாக எழுந்தருளியிருக்கிறான்.

இறை வழிபாடு

உடம்பில் உள்ள அங்கங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கொடுக்காவிட்டால் கெட்ட வேலையைத்தான் செய்யும். அவற்றுக்குச் சரியான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பெரியோர்கள் ஆலயங்களுக்குச் செல்வது, ஆண்டவன் சந்நிதானத்திலே சென்னி தாழ்த்தி வணங்குவது, கை கூப்புவது, தோத்திரங்களை நாவினாலே சொல்வது ஆகிய பல செயல்களை வைத்திருக்கிறார்கள். உடலில் உள்ள உறுப்புகளுக்கு இறைவனோடு தொடர்புடைய வேலையைக் கொடுத்தார்கள். இப்படி இந்த உடம்பு முழுவதையும் ஆண்டவனின் திருத்தொண்டில் ஈடுபடுத்தினால் இது புனிதமாகும். இப்போது புலாலின் குவையாக இருக்கிறது. இதைக் கங்கை நீரில் கழுவினாலும் தூய்மை பெறாது. இதைப் புனிதப்படுத்தும் வழி இறை வழிபாடு ஒன்றுதான்.

திருநாவுக்கரசர் திரு அங்கமாலை என்ற திருப்பதிகம் பாடியிருக்கிறார். “தலையே நீ வணங்காய்” என்று தொடங்குவது அது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பணியைச் சொல்கிறார். உறுப்புகளைப் பெற்றதனாற் பயன் அவற்றைச் செய்வதுதான்.

“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை

என்று வேறோரிடத்தில் பாடுகிறார்.

மனத்தில் இறைவனுடைய நினைவு உறைக்க வேண்டுமானால் அவன் நினைவு உண்டாவதற்குரிய செயல்களைப் புறத்தில் செய்து பயில வேண்டும். செயல்கள் என்பன உடம்பிலுள்ள அங்கங்களின் இயக்கம். ஒவ்வோர் அங்கத்துக்கும் ஒவ்வொரு வகை இயக்கம் இருக்கிறது. கால் நடக்கிறது; கை வேலை செய்கிறது; கண் பார்க்கிறது; வாய் பேசுகிறது. இவ்வாறு உள்ள உறுப்புகளை இறைவனுடைய வணக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

இராமலிங்கர் வாக்கு

இராமலிங்க சுவாமிகள் முருகப் பெருமானை வழிபடாத அங்கங்கள் இன்ன இன்ன விளைவைப் பெறும் என்று ஒரு பாடலில் சொல்கிறார்.

“எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற் றிருக்கும் வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விறகு எடுக்கும் தலை;
கந்தம்மிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலம்நீர் சொரிந்த அழுகண்;
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்துஇழவு கேட்கும் செவி;
பந்தம் அற நினையெணாப் பாவிகள்தம் நெஞ்சம்
பகீர்என நடுங்கும் நெஞ்சம்;
பரமநின் திருமுன்னர்க் குவியாத வஞ்சர்கை
பலியேற்க நீள்கொ டுங்கை
சந்தம்மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.”

ஒருவன் மிக நன்றாகத் தலைக்கு வேண்டிய அலங்காரங்களைச் செய்து கொண்டிருக்கிறான். அரசன் முடி புனைந்திருக்கிறான். என்ன அலங்காரம் செய்து கொண்டாலும் இறைவனுடைய திருவடியில் வணங்காத தலை எதற்கும் பயன் இல்லை. வள்ளுவர் சொல்கிறார்:

கோள்இல் பொறியின் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”

இறைவனுடைய திருவடியை வணங்குவதற்கு நமக்குத் தலை இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் கேளாத காது போலவும், காணாத கண் போலவும், மணத்தைத் தெரிந்து கொள்ளாத மூக்குப் போலவும் பயனற்றதாகிவிடும் என்று சொல்கிறார்.

இறைவனுடைய திருவடியை வணங்காத தலையைப் பற்றி இராமலிங்க சுவாமிகள் வேறு ஓரிடத்தில் சொல்வது மிகவும் சுவையாக இருக்கிறது.

வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும் மாட்டுத் தலை; பட்டி மாட்டுத் தலை; புன் வராகத்தலை; ஆட்டுத் தலை; வெறி நாய்த்தலை; பாம்பின் அடுந்தலை;கற் பூட்டுத் தலை; வெம் புலைத்தலை; நாற்றப் புழுத்தலையே”

என்று அவர் நாகரிகமாக வைகிறார். இந்தத் தலையை உடையவனை, “மாடே, பன்றியே,ஆடே, நாயே” என்று வையாமல் தலையை வைவது போலச் சொல்கிறார்.

அருணகிரியார் கூறுவது

இங்கே அருணகிரியார் முருகப் பெருமானைப் பார்த்து, “உன்னுடைய திருவடியை வணங்காத தலையும், உன்னுடைய திருவடியின் பேரெழிலைக் காணாத கண்ணும், அதனைத் தொழாத கையும், அதனைப் பாடாத நாவும் பிரமன் எனக்கென்றே அறிந்து படைத்திருக்கிறானே!” என்று குறைப்பட்டுக் கொள்கிறார்.

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம்என்? குன்றுஎறிந்த தாடாள னே;தென் தணிகைக் குமர, நின் தண்டைஅம்தாள்சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனககே தெரிந்து படைத்தனனே!

”ஆண்டவனே! உன்னுடைய ஆணையைத் தாங்கி இந்த உலகத்தை யெல்லாம் நெறி தவறாமல் படைக்கும் வேலையை உடைய பிரமன் சிறிதும் பட்சபாதம் இல்லாதவன் என்று எனக்குத் தெரியும். எல்லா உயிர்களையும் அவரவர்களுடைய வினைக்கு ஏற்றபடி படைத்திருக்கிறான். அப்படி இருந்தும் என் அளவில் அவன் ஏதோ தவறு செய்துவிட்டான் என்று தோன்றுகிறது. நான் அவனுக்கு எந்தவிதமான குற்றமும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் எனக்கு வேண்டாத உறுப்புக்களை அளித்திருக்கிறானே! ஒரு கால் என்னையும் அறியாமல் அவனுக்கு ஏதாவது தவறு செய்துவிட்டேனோ? நானே அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாது. ஆகையால் உன்னைக் கேட்கிறேன்” என்று சொல்வது போல இந்தப் பாட்டை அமைத்திருக்கிறார். பிரமனைப் பற்றிக் குறை கூறும் போதே அவனை உயர்வாகவே சொல்கிறார்.

கோடாத வேதன்

மனிதர்கள் முற்பிறவியில் செய்திருக்கும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி அநுபவங்களை அடுத்த பிறவியில் தரவேண்டு மென்பது பிரமன் பெற்ற ஆணை, அவன் அந்த ஆணையைச் சரிவர நிறைவேற்றிக் கொண்டு வருகிறான். அதில் சிறிதும் கோடுவது இல்லை. அதனால்,

கோடாத வேதன்

என்று அருணை முனிவர் சொன்னார். “அப்படி இருந்தும், என் அளவிலே ஏதோ தவறு செய்கிறான் போல இருக்கிறது” என்றும் சொல்கிறார்.

“பிரமன் தன்னுடைய வேலையைச் செய்வதற்கு ஏற்ற அறிவு படைத்தவன். எப்போதும் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன். வேதம் நித்தியமானது. அதைச் சொல்லித் தன்னுடைய தொழிலில் சிறிதும் பிசகு ஏற்படாமல் செய்கிறவனாக அவன் இருந்தும், எனக்குச் சரியான வகையில் உறுப்புக்களை அமைக்கவில்லையே!” என்று குறை கூறுகிறார்.

வேலைக்காரன் குறை

வேலைக்காரன் ஒருவனுக்குக் கணக்குப் பிள்ளை அபராதம் போட்டுவிட்டான். எதற்குப் போட்டான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் தன் மனம் அறிந்து ஒரு தவறும் செய்தான் இல்லை. “நான் ஒரு நாளைக்குக் கூட நேரம் கழித்துப் போனதில்லையே! எந்த நாளிலும் நான் அங்கே தூங்கினதில்லேயே! நேரம் தவறாமல் சென்று செய்ய வேண்டியவற்றை எல்லாம் சரியாகச் செய்கிறேனே! அப்படி இருக்க, இந்தக் கணக்குப் பிள்ளை என் சம்பளத்தைக் குறைத்து விட்டானே!’ என்று முதலாளியிடம் அவன் விண்ணப்பம் செய்து கொள்கிறான். அதுபோல இருக்கிறது இந்தப் பாட்டு.

முருகப் பெருமானுடைய திருவருளால் வேலை செய்கிறவன் பிரமன், ஆதலால் அவனை மிகவும் கெட்டவன் என்று சொல்வதற்கு மனம் வரவில்லை. ‘ஒருகால் என் மீதுதான் குற்றமோ?’ என்று குறிப்பும் இந்தக் கேள்வியில் அடங்கியிருக்கிறது.

தாடாளன்

பிரமன் செய்த தீங்கை அருணகிரிநாதப் பெருமான் முருகனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்ளும்போது அப்பெருமானை எப்படிச் சொல்லுகிறார் என்று சற்றே கவனிக்க வேண்டும், முருகன் குன்றெறிந்த தாடாளன். தாடாளன் என்பதற்குச் சிறப்பான முயற்சியை உடையவன் என்பது பொருள். கிரௌஞ்ச மலையை வேலாயுதத்தால் எறிந்த பெரு முயற்சி உடையவனே! தென்னாட்டில் உள்ள தணிகாசலத்தில் எழுந்தருளி இருக்கும் முருகனே! என்று விளிக்கிறார்.

குன்றெறிந்த தாடாளனே! தென்தணிகைக் குமர!

“வீரம் நிறைந்த நின்னுடைய அடியான் நான். இந்த உலகத்தில் என்னைப் போன்றவர்கள் அருள் பெறுவதற்காகத் திருவுருவம் கொண்டு, தணிகையில் எழுந்தருளியிருக்கிறவன் நீ. ஆகையால் உன்னிடம் இந்த விண்ணப்பத்தைச் செய்து கொள்கிறேன்” என்பது போலப் பாடுகிறார்.

வணங்காத் தலை

முருகன் அருணகிரிநாதரைப் பார்த்து, “பிரமன் மேலே நீ குறைபட்டுக் கொள்வதற்கு என்ன காரணம்? அவன் என்ன செய்துவிட்டான்?” என்று கேட்கிறான். அருணகிரியார் சொல்கிறார். “எம்பெருமானே! அவன் எனக்குத் தலை அமைத்திருக் கிறானே. இதைக் கண்டு நான் மிக்க அறிவாளி என்று பலரும் நினைக்கிறார்கள். நான் இந்தத் தலையைச் சுமந்து கொண்டிருக் கிறேன். இருந்தும் என்ன பயன்? உன்னுடைய தண்டை அணிந்த திருவடியில் இந்தத் தலை விழுவது இல்லையே! இது தலையாகுமா? இத்தகைய தலையை எனக்கு அந்தப் பிரமன் தந்திருக்கிறான்” என்கிறார்.

நின் தண்டைஅம் தாள் சூடாத சென்னியும்.

தண்டையந் தாள் என்கிறார். “நான் மறந்தாலும் இந்தத் திருவடியை நீ தொழவேண்டுமென்று அந்த அடியில் ஒலிக்கின்ற தண்டை எனக்கு அறிவுறுத்துமே! அப்படி இருந்தும் என்னுடைய தலை வளைவது இல்லை. தாளைப் பணிவது இல்லை.”

நாடாத கண்

“உன்னுடைய திருவுருவத்தை எத்தனை விதமாக அலங்காரம் பண்ணுகிறார்கள் பெரியவர்கள்! உன் திருக்கோயிலுக்கு வந்து, அந்தத் திருக்கோயிலில் நீ எழுந்தருளியிருக்கும் இடம் கண்டு, சிறந்த அலங்காரங்களைப் பெற்று மிளிரும் உன்னுடைய திருவுருவ லாவண்யத்தைக் கண்ணால் கண்டு தரிசிக்க வேண்டாமா? திருவுருவத்தைக் கண்ட பிறகு உன் திருவடி எங்கே என்று தேடித் தண்டையை அணிந்த அந்தத் தாமரையைக் கண்டு ஆனந்தம் அடைய வேண்டாமா? என்னுடைய கண் அப்படி இருக்க வில்லையே! நான் கோயிலுக்குச் செல்கிறேன். ஆனால் அங்கே என்னுடைய கண் எதை நாடுகிறது? உன்னுடைய திருவடியை அல்ல; ஆகாசத்தைப் பார்க்கிறது; விளக்கு வெளிச்சத்தைப் பார்க்கிறது; அங்கே வந்திருக்கிறவர்களைப் பார்க்கிறது. உன்னுடைய திருவடியைப் பார்த்து அதனால் வருகின்ற இன்பத்தை அடைவதற்குத் தெரியவில்லையே! அத்தகைய கண்ணை அல்லவா அந்தப் பிரமன் எனக்குக் கொடுத்திருக்கிறான்?”

நின் தண்டை அம் தாள் நாடாத கண்ணும்

தொழாத கை

“அதுமட்டுமா? எனக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக்கிறான். விரிக்கவும், குவிக்கவும் ஏற்ற வகையில் அவை இருக்கின்றன. பற்பல இடங்களில் சென்று ஆடியும் அசைந்தும் வேலை செய்கின்ற கைகள் உன்னுடைய சந்நிதானத்தில் வந்து குவிய வேண்டாமா? இந்தக் கைகள் வெவ்வேறு காரியங்களைச் செய்து செய்து ஏற்றுக் கொண்ட அழுக்கை எல்லாம் போக்குவதற்கு உன் திருமுன்னர் நின்று தொழுவதுதான் சரியான வழி. அப்படி இருந்தும் என்னுடைய கைகள் உன்னைத் தொழுவது இல்லை. அத்தகைய கொடிய கைகளாக அல்லவா பிரமன் எனக்குப் படைத்திருக்கிறான்?”

நின் தண்டைஅம்தாள் தொழாத கையும்.

கைகளைக் குவித்தல்

நம்முடைய நாட்டில் கைகளைக் குவித்துக் கும்பிடுவது ஒரு வழக்கம். கோபுரத்தைக் கண்டாலும் கை குவியும். இறைவனுடைய நினைப்பை ஊட்டுகின்ற எந்தப் பொருளைக் கண்டாலும் கும்பிடுவது நமக்கு இயல்பு.

நம்முடைய கைகள் தனித்தனியே இரண்டு வேறு பக்கங்களில் இருக்கின்றன. நடக்கும்போது வீசி நடக்கின்றன. கொடுக்கும் போது நீண்டு கொடுக்கின்றன. வாங்கும்போது நீண்டு வாங்குகின்றன. அடிப்பது, அணைப்பது ஆகிய சமயங்களில் எல்லாம் கைகள் வேலை செய்கின்றன. இத்தனை இருந்தும் நல்ல பயன் உண்டாவது இல்லை. ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கைகளும் குவித்துத் தொழுவதுதான் சிறந்த காரியம். சில கிழவர்களைப் பார்த்து அவர்களுடைய பிள்ளைகள், “நீங்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருங்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்வார்கள். அது போல் நம்முடைய கைகள் ஒரு வேலையையும் செய்யாமல் இறைவனுடைய சந்நிதானத்திற்கு முன் குவிந்து நின்றால் பெரிய நன்மை உண்டாகும். கையைச் சேர்த்துக் குவிப்பது, நான் செயல் அற்றவன். எனக்குச் செய்வதற்குரிய உரிமை இல்லை. செயல் மாண்ட நிலை எனக்கு வர வேண்டும் என்பதற்கு அறிகுறியாகும்.

நின் தண்டைஅம்தாள்
தொழாத கையும்

என்று குறை கூறினவர் அடுத்தபடி நாவைப் பற்றிச் சொல்கிறார்.

பாடாத நா

“எம்பெருமானே! பலவற்றைப் பேசுகின்ற நாக்கு எனக்கு இருந்தும் என்ன பயன்? உன்னைப் புகழ்வதற்குத்தானே நாவையும் மொழியையும் எனக்குத் தந்திருக்கிறாய்? உன்னைப் பரவிப் பாடி அந்தச் சுவையை நுகரவேண்டும். என்னுடைய நாவோ உன்னைப் பாடுவது இல்லை. எனக்கென்று ஆராய்ந்து இந்த நாக்கைத்தான் கொடுக்க வேண்டுமென்று பிரமன் படைத்திருக் கிறான்” என்கிறார்.

அருணகிரியார் பாடாமலேயே இருந்தவர் என்றால் நாம் நம்ப முடியுமா? ‘பாடாத நாவை எனக்குப் படைத்தான்’ என்று சொல்வதே ஒரு பாட்டாக இருக்கிறதே!

நின் தண்டைஅம்தாள்
பாடாத நாவும்

பாடுதல் இறைவனுடைய புகழைச் சொல்வது. நாமாகப் புதிய பாடல்கள் பாடவேண்டுமென்பதில்லை. முன்னே பல பெரியவர்கள் பாடி வைத்த பாடல்களை இறைவன் முன் நின்று பாடவேண்டும்; அல்லது அவனை நினைந்து பாடவேண்டும்; அதனால் உள்ளம் நெகிழும்.

அருணகிரியார் பிறர் பாடல்களைப் பாட வேண்டிய அவசியமின்றித் தாமே ஆயிரக்கணக்கில் முருகப் பெருமானைப் பாடியவர். ஆகவே அவர் நாக்குப் பாடாத நாக்கு அன்று. நம்முடைய நாவைச் சொல்வதற்காகத்தான் தமக்கே உரிய முறையில் அவ்வாறு சொல்கிறார்.

சிறப்பான உறுப்புக்கள்

தலை, கண், கை, நாக்கு ஆகிய நான்கையும் இங்கே சொன்னாலும் உப லட்சணத்தால் மற்ற உறுப்புக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடம்பில் உள்ள உறுப்புகளில் மிகவும் சிறந்ததாக இருப்பது தலை என்று சொல்வார்கள். தலை என்பதே சிறப்புடைய பொருளைக் குறிக்கும் சொல். வட மொழியில் இதை உத்தமாங்கம் என்று சொல்வார்கள். உடம்பினால் வழிபடும் மனிதனுக்கு எல்லாவற்றிலும் சிறந்த உறுப்பாகிய தலை முருகப் பெருமானுடைய தாளில் கிடந்து வணங்க வேண்டும். ஆகையால் அதை முதலில் சொன்னார்.

ஐம்பொறிகளில் மிகவும் சிறந்தது கண். “கண்ணில் சிறந்த உறுப்பில்லை” என்று சொன்னார்கள்.

சர்வேந்த்ரியாணாம் நயணம் பிரதானம்

என்பது வடமொழி வாக்கியம். கண் என்னும் பொறி நம் உள்ளத்தில் ஆசையை உண்டாக்குவதற்கு உறுதுணையாக இருக்கிறது. பார்க்கின்ற பொருள்களெல்லாம் நமக்கு வேண்டுமென்று ஆசைப்படும்படி கண் வேலை செய்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் பொருளின் திறத்தைத் தெரிந்து பார்க்கும் ஆற்றல் நம் கண்ணுக்கு இருக்கிறது.

மனிதனுடைய உடம்பு சிறந்தது. அதனில் அவனுடைய தலை மிகச் சிறந்தது. அதில் அவனுடைய கண் மிகமிகச் சிறந்தது.

அடுத்தபடியாக மனிதன் கரங்களால் பல வேலைகளைச் செய்கிறான். விலங்குகளுக்குக் கால்கள் உண்டேயொழியக் கைகள் இல்லை. உலகம் முழுவதும் மனிதன் செய்கிற செயல்கள் மிக்க அற்புதமாக இருக்கின்றன. அவனுடைய கைகள் அவனுக்கு உறுதுணையாக உள்ளன. ஆகையால் மனிதனுடைய கைகள் மிகச் சிறந்தவை.

அப்படியே அவனுடைய நாவும் மற்ற உயிர்களுக்கு இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. விலங்கு முதலியன சிவ ஒலிகளைத்தான் எழுப்பும். மனிதனே பேசும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். அவனுடைய நாக்கு மிகச் சிறந்தது.

ஆகவே இந்தப் பாட்டில் மனிதனுக்குச் சிறப்பைத் தந்த தலையையும், கண்களையும், கைகளையும், நாவையும் எடுத்துச் சொன்னார். மற்ற உயிர்க் கூட்டங்களைப் போல இல்லாமல் சிறப்பான உறுப்புக்களைப் பெற்ற மனிதன் அந்த உறுப்புக்களைக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெற வேண்டும்.

தலையினால் வணங்குவதற்கும், கண்ணால் காண்பதற்கும், கையால் தொழுவதற்கும், நாவினால் பாடுவதற்குமாக இறைவன் திருவுருவத்தோடு எழுந்தருளியிருக்கிறான். நம்முடைய கண் முன்னே திருத்தணி மலையுச்சியில் நின்று தன்னுடைய திருக் கோலக் காட்சியை வழங்குகிறான். அவனுடைய திருமேனி முழுவதையும் பார்த்துப் பயிலாவிட்டாலும் அவனுடைய திருவடி யிடத்தில் ஈடுபட்டுக் கீழே விழுந்து வணங்கலாம். அது மிகவும் முக்கியமானது. அவனுடைய திருமேனி உறுப்புக்கள் பலவற்றைக் கண்டு வணங்கினாலும் இறுதியில் அவனுடைய திருவடியை வணங்குவதுதான் தலையானது; பயனைத் தருவது. அதனால், அந்த அடியை வணங்காத தலையையும், அதனை நோக்காத கண்ணையும் அதனைத் தொழாத கையையும், அதனைப் பாடாத நாவையும் பிரமன் எனக்கென்றே படைத்தானே!” என்று அருண கிரியார் முருகனிடத்தில் முறையிட்டுக் கொள்கிறார்.

கருத்து

எதிர்மறை வாய்பாட்டில் இந்தப் பாட்டு இருந்தாலும் திருத்தணிகைக் குமரனுடைய தண்டையந்தாளைத் தலையினால் வணங்கி, கண்ணால் பார்த்து, கைகளினால் கும்பிட்டு, நாவினால் பாடவேண்டுமென்பதையே கருத்தாகக் கொள்ள வேண்டும்.

“நீ இப்படியெல்லாம் எனக்கு அமைத்தாயே” என்று முருகனையே குறை கூறியிருக்கலாம். நேரே சொல்லாமல் ஒரு வகையில் போக்குக் காட்டிப் பிரமன் மேலே அந்தக் குற்றத்தைச் சுமத்தினார். இது ஒருவகைச் சாமர்த்தியம். இருந்தாலும் முருகப் பெருமான் ஆணையின்றி எதுவும் நடப்பதில்லை; அதனால் குறை கூறுவது பிரமனையே ஆனாலும் அவனுக்குத் தலைவனாகிய முருகனிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் சொல்லுகிறார்.

கோடாத வேதனுக்கு யான்செய்த
குற்றம் என்? குன்றுஎறிந்த
தாடாளனே, தென் தணிகைக்
குமர, நின் தண்டைஅம்தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும் தொழாதகையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே.

(கிரவுஞ்ச மலையை வேலால் எறிந்து அழித்த பராக்கிரமத்தை உடையவனே! தென்னாட்டில் உள்ள தணிகாசலத்தில் எழுந்தருளி யிருக்கும் குமரக் கடவுளே! நின்னுடைய தண்டையை அணிந்த அழகிய பாதங்களை வணங்கி அணியாத தலையையும், அவற்றைத் தேடித் தரிசியாத கண்களையும், அவற்றைக் குவிந்து தொழாத கைகளையும், அவற்றின் புகழைப் பாடாத நாவையும் எனக்காகவே ஆராய்ந்து பொறுக்கி எடுத்து வேதன் அமைத்தானே; சிறிதும் பட்சபாதம் இல்லாத அந்தப் பிரமனுக்கு நான் செய்த பிழை என்ன?

கோடாத – ஒருபால் சாயாத பட்சபாதமில்லாத. “கோடாமை சான்றோர்க் கணி” என்பது திருக்குறள். வேதன் – பிரமன். தாடாளன் தாளாளன். நாடாளன் என்று சீர்காழியிலுள்ள திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு; பெருமுயற்சியுடையோன் என்பது பொருள்.)

இது கந்தர் அலங்காரத்தில் 76-ஆம் பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !