பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

சிந்தாகுலம் தீர

பொருள், மடந்தையர், வீடு ஆகியவற்றில் பற்று வைத்து வேலாயுதனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவதால் பயன் இல்லை என்றும், எல்லாம் காலனுக்கு முன் விட்டு ஒழியும் என்றும் கூறிய உபதேசத்தைச் சென்ற பாட்டில் பார்த்தோம். இந்த மூன்று வகையான ஆசைகளுள்ளும் மக்களின் உள்ளத்தை மிகுதியாகப் பிணித்துப் பல வகையான சிக்கல்களுக்கு ஆளாக்குவது மாதர் மயல், அதனைப் பலபல வகையில் நமக்கு நினைப்பூட்டுவார் அருணகிரிநாதர். இப்போது பார்க்கப் போகும் பாடலில் அதனையே எடுத்துச் சொல்கிறார். மங்கையருடைய பார்வை வலையில் சிக்கித் திண்டாடுகின்ற நிலையை இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார்.

பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலம்

என்று தொடங்குகிறார். மங்கையரைச் சொல்லும் போது, பந்தாடும் மங்கையர் என்று சிறப்பிக்கிறார்.

பந்தாடும் மங்கையர்

பழைய காலத்தில் சின்னஞ் சிறு வயதில் ஆண்களும், பெண்களும் விளையாடுவார்கள். பெண் குழந்தைகள் தனியாகவும், ஆண் பிள்ளைகள் தனியாகவும் விளையாடுவதுண்டு; சேர்ந்தும் விளையாடுவார்கள். மங்கைப் பருவம் அடைந்த பிறகு பெண்கள் தனியாக விளையாடுவார்கள். அவர்களுக்கென்றே தனி விளையாட்டுகள் இருந்தன. வீட்டில் இருந்தபடியே விளையாடுவார்கள்; வீட்டுக்குப் புறம்பும் சென்று விளையாடுவதுண்டு. மங்கையர் விளையாடுகின்ற ஆடல் வகைகள் அம்மானை ஆடுதல், கழங்கு ஆடுதல், பந்து ஆடுதல் முதலிய பல. முக்கிய மாகப் பந்தாடும் விளையாட்டு மங்கையர்களுக்கே உரியது. பந்து விசிறி எறிந்து ஆடுவதும், கீழே தட்டி ஆடுவதும் அவர்களது விளையாட்டு வகைகளில் சிறந்தவை.

பந்தாடி அங்கம் நொந்தார் பரிந்து

என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுவார். பெருங்கதை என்னும் சிறந்த காவியத்தில் ஓர் அத்தியாயம் முழுவதும் இரண்டு பெண்கள் பந்தடித்து ஆடியதைச் சொல்கிறது.

கம்பராமாயணத்தில் மங்கையர்கள் பந்தாடும் எழிலைப் பலவிடங்களில் கம்பர் சொல்கிறார். ஓரிடத்தை மாத்திரம் இங்கே நினைப்பூட்ட விரும்புகிறேன். கோசல நாட்டில் மங்கையரும் ஆடவர்களும் விளையாடுகிறார்கள். பூம்பொழில்களில் தங்கள் தங்களுக்கேற்றபடி அவர்கள் பொழுதைப் போக்குகிறார்கள். மங்கையர்கள் சந்தன மரம் அடர்ந்த சோலையில் பந்து விளையாடுகிறார்கள். ஆடவர்களோ நந்தன வனங்களில் கலைகளைப் பயில்கிறார்கள். இயற்கையாகச் சந்தனவனமாகவும், நந்தன வனமாகவும் இருந்த அந்தப் பூம்பொழில்கள் தங்களிடம் வந்து பயிலும் மகளிராலும், ஆடவராலும் மணம் மாறி வேறு பொழில்களைப் போலத் தோன்றுகின்றனவாம். நல்ல மகளிருடைய மேனி சண்பக மணமுடையதாக இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. மங்கையர்கள் பந்தை அடித்து ஆடுகின்ற இடத்தில் அவர்கள் மேனி மணம் எங்கும் பரவிச் சந்தன மணத்தையே மாற்றி விடுகிறது. அது சண்பக வனமோ என்று ஐயப்படும்படியாக அமைகிறதாம். அதுபோல் ஆடவர்கள் கலை பயில்கின்ற நந்தனவனங்களும் தம்முடைய இயற்கை மாறிக் காண்கின்றன. சிறந்த ஆடவர்களுடைய திருமேனியில் முல்லை மணம் வீசும் என்பது ஒரு மரபு. கலை பயில் கழகங்கள் இருந்த நந்தன வனத்தில் ஆடவர்களுடைய திருமேனியிலுள்ள முல்லை மணம் படர்ந்து நந்தன வனங்களை எல்லாம் முல்லைக் காடு போலத் தோற்றச் செய்கிறது. இந்தக் கருத்தைக் கம்பர் வைத்துப் பாடுகிறார்.

பந்தினை இளையவர் பயில்இடம், மயில் ஊர்
கந்தனை அனையவர் கலைதெரி கழகம்,
சந்தன வனம் அல, சண்பக வனம்ஆம்;
நந்தன வனம் அல, நறைவிரி புறவம்.”

“பந்தினை இளையவர் பயில் இடம், சந்தன வனம் அல; சண்பக வனம் ஆம்” என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும் இந்தக் காட்சியில் சண்பக மணம் பெற்ற உடம்பையுடைய பெண்கள் சந்தன மரக்காட்டில் பந்து விளையாடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆடவர்களே பந்தாடுகிறார்கள். ஆண்களுக்குரிய செயல்களைப் பெண்களும், பெண்களுக்குரிய செயல்களை ஆண்களும் செய்கிற காலம் இது. முறை மாறிச் செய்கின்ற பல செயல்களை இந்தக் காலத்தில் பார்க்கிறோம். இந்த முறை மாற்றத்தால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு.

பந்தும் கண்ணும்

மங்கையர்கள் பந்தை ஆடும்போது அவர்களுடைய கண்கள் அந்தப் பந்தோடு செல்லும். இயற்கையாகவே பிறழுகின்ற அவர்களுடைய கண்கள் பந்தை விளையாடும் போது பின்னும் அதிகமாகப் பிறழும். தண்ணீரில் மேலும் கீழும் உலாவுகின்ற மீனைப் போலப் புரண்டுகொண்டிருக்கும்.

காளையின் பார்வை

ஒரு பெண் பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கயல் மீன் போன்ற கண்கள் புரண்டு கொண்டிருக்கின்றன. அப்போது அங்கே ஒரு கட்டிளங் காளை வருகிறான். அவன் அந்தப் பெண் பந்து ஆடும் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்கு வாய்ப்பு உண்டு. அந்தப் பந்து மேலும் கீழும் எழும்பி விழுவதையும், அவள் தன்னுடைய கையினால் வீசி அடித்தலையும் கண்டு வியக்கலாம். ஆனால் அவன் பந்தையும் காணவில்லை; அதனை ஆடும் திறத்தையும் காணவில்லை. பந்தை ஆடுகின்ற மங்கையைத்தான் கண்டான். விளையாட்டின் திறத்தைக் கண்டு அநுபவிக்கின்ற இயல்பும், மனமும் அவனுக்கு வந்திருக்கலாம். ஆனால் அவன் உள்ளம் மங்கையின் அழகைக் கண்டு சுவைப்பதில் ஈடுபடுகிறது.

முள்ளும் ரோஜாவும்

நல்ல பொருள் எங்கேனும் இருந்தால் அதன்பாலுள்ள நன்மையைக் கண்டு நுகர்வது ஒருவகை. அதனிடம் உள்ள தீமையை நுணுக்கமாக ஆராய்ந்து அதைத் தெரிந்து கொள்வது ஒரு வகை. ரோஜாப்பூ ஒரு செடியில் பூத்திருக்கிறது. அந்தச் செடியைப் போய்ப் பார்க்கும் போது மேலேயே மலர்ந்திருக்கும் ரோஜாப் பூவைக் கண்டு இன்புறலாம். அப்படி இல்லாமல் அதில் உள்ள முள்ளைக் கண்டும், அதைத் தொட்டுப் பார்த்தும் துன்பத்தை அடைகிறவர்களும் இருக்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தையை ரோஜாப் பூவின் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தினால் அது பூவைத்தான் தொட்டுப் பார்க்கும் என்று சொல்வதற்கில்லை. முள்ளைத் தொட்டுக் கையில் ரத்தக் காயம் உண்டாக்கிக் கொள்ளலாம்.

பார்வையில் வேறுபாடு

அந்தக் குழந்தையின் நிலையில்தான் இந்த ஆடவன் இருக்கிறான். பந்தாடும் திறமையையும், அவளுடைய உடம்பு அசைவினில் அவளுக்கு இருக்கும் சுறுசுறுப்பையும் உணர்ந்து வியக்க வேண்டிய அவன் அந்த மங்கையின் அழகைக் கண்டு வருந்துகிறான். அழகைத் தனித்து நின்று பார்ப்பதும் இல்லை. அந்த அழகைத் தான் அநுபவிக்க வேண்டுமென்று பார்க்கிறான். அவனுடைய கண்ணில் உள்ள கோளாறு அது.

மங்கைப் பருவம் வந்த ஒரு பெண்ணை அவனுடைய தந்தையும் பார்க்கிறான்; தமையனும் பார்க்கிறான்; வேறு ஓர் ஆடவனும் பார்க்கிறான். தந்தை அவள் மிக்க அழகி என்று கண்டு அவளுக்கு ஏற்ற கணவனைத் தேட வேண்டுமென்று நினைக்கிறான். தமையனும் அப்படியே நினைக்கிறான். அந்த அழகைத் தனித்து நின்று சுவைக்கிற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அப்படியின்றி அயலானாகிய காளையோ அந்த அழகைக் கண்டு அதனைத் தான் நுகர எண்ணுகிறான். இது அவன் உள்ளத் தில் உள்ள உணர்ச்சி காரணமாக நிகழ்வது. இதைத்தான் பெண் மயல் என்று சொல்கிறோம். தந்தை, மகள் என்ற பாவத்திலே பார்க்கிறான். தமையன் சகோதர பாவத்துடன் பார்க்கிறான்.

அயலானாகிய ஆடவனோ காமத்துடன் பார்க்கிறான். இந்த மூவரும் அழகை நன்கு சுவைப்பவர்களே. ஆனால் முதலில் சொன்ன இருவருடைய உள்ளமும் தூய்மையாக இருப்பதனால் அவர்கள் அழகைக் காண்பதில் தீங்கு ஒன்றும் நேருவது இல்லை. மூன்றாமவன் பார்ப்பதில் அவனுக்கும் தீங்கு உண்டாகிறது; அவன் ஆற்றல் உடையவனாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கும் தீங்கு உண்டாகும்.

சுழற்சி

பந்தாடும் மங்கையைப் பார்க்கிற ஆடவன் தன்னை அந்த மங்கையோடு தொடர்புபடுத்தி அவள் அழகைத் தான் நுகர வேண்டுமென்று நினைக்கிறான். மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து அவளை அடைவதற்கு என்ன வழி என்று யோசனை பண்ணுகிறான். அவளுடைய கண்ணாகிய கயல் அவனைச் சிறைப்படுத்துகிறது. பொதுவாகக் கயல் வலையில் படும் என்று சொல்வார்கள். இங்கே கயலே வலை வீச, அந்த வலைக்குள் இந்த ஆடவனுடைய உள்ளம் பட்டுவிடுகிறது. அதனால் அவன் மனத்திலே உழல்கிறான். பலபல வகையான எண்ணங்கள் எண்ணுகிறான். அவன் மனம் சுழலுகிறது. அதன் பயனாக அவளை அடைவதற்கு என்ன வழி என்று யோசித்துப் பற்பல காரியங்களைச் செய்கிறான். சுழன்று வருகிறான். மனத்திலே சுழற்சியும், உடம்பிலே சுழற்சியும் அவள் பார்வையில் பட்டு உருகுவதனாலே ஏற்படுகின்றன.

சிந்தாகுலம்

பந்தாடும் மங்கையைப் பார்த்து நிற்பது ஒருவகை. அவளுடைய கயல் பார்வையைக் காணுவது ஒருவகை. இந்த இரண்டிலும் தவறு இல்லை. ஆனால் அந்தப் பார்வையில் பட்டு உருகுவதே தவறு. உருகுவது உள்ளத்துடன் முதலில் நிற்கும். பின்பு இது காரணமாக நெஞ்சிலே உழன்று, உடம்பினாலும் உழலுகின்ற நிலை வந்து விடுகிறது. அப்போது அந்த ஆடவன் மற்றக் காரியங்களை எல்லாம் மறந்து பெண் மயலில் ஆழ்ந்து உலகத்தில் பலவகையான துன்பங்களை அநுபவிக்கிறான். அப்போதும் தான் அடையவேண்டிய ஒரு பொருளை அடையவில்லையே என்ற கவலையோடு இருக்கிறான். அவன் சிந்தா குலம் உடையவனாக, பித்துப் பிடித்தவனாகத் திரிகிறான்.

இத்தகைய சிந்தாகுலத்தைத் தீர்ப்பதற்கு வழி என்ன? ஆண்டவனுடைய திருவருள் இருந்தாலன்றி இந்தக் கலக்கத் தினின்றும் தெளிவு பிறக்காது. ஆதலின் அருணகிரியார் இத்தகைய சிந்தா குலத்தை நீ தீர்த்து அருள வேண்டுமென்று முருகப் பெருமானிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்.

பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலந்தனைத் தீர்த்து அருள்வாய்.

விளையாட்டும் வினையும்

மகளிர் பந்து ஆடும்போது அதை விளையாட்டாகக் கருதி ஆடுகிறார்கள். அதனைப் பார்க்கிறவர்களும் விளையாட்டாகக் கருதிப் பார்க்க வகை உண்டு, ஆனால் உள்ளத்தில் மயல் உணர்ச்சி உள்ளவனோ அதை விளையாட்டாகப் பாராமல் விளையாட்டாகப் பார்க்கிறான். அந்த விளையாட்டு அவனிடத்தில் தீமையை உண்டாக்குகிறது. “விளையாட்டே வினையாகும்” என்ற பழமொழி உண்டல்லவா? அது அவன் திறத்தில் பலித்து விடுகிறது.

உலகத்தில் நமக்கு உண்டாகின்ற அனுபவங்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த வினைகளால் நிகழ்வன. அந்த வினைகள் அடியாகத்தான் நமக்கு இன்ப துன்பங்கள் உண்டாகின்றன. இந்த விளையாட்டில் ஈடுபட்டு மனம் உருகிப் பலவகையான அல்லல்களில் நுன்புற்று வருகிறோம். ஆனால் இறைவனுடைய திருவருளை எண்ணி வாழுகின்ற மக்களுக்கு இந்த வினையாட்டும் ஒரு விளையாட்டாகத் தோற்றும். இறைவனுடைய அருள் ஆணை என்னும் கயிற்றில் ஊசலைப் போல நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம். ‘நாம் நினைக்கிறோம். நாம் துன்புறுகிறோம். நாம் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று நம்மோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், ஐயோ விதியே!” என்று இரங்கத் தோன்றும்.

யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டுவானாகி
நின்றாயை

என்பார் மணிவாசகர். கூத்தாட்டுவான் இறைவன். அவன் திருவருள் ஆணையால் இந்த ஆட்டங்கள் எல்லாம் நிகழ்கின்றன என்று பிரபஞ்சத்தில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் மூலப் பொருளாகிய இறைவனது விளையாட்டாகக் காணுகின்றவனுக்கு, விளையாட்டை நினைக்கின்ற போது உண்டாகும் இன்பம் உண்டாகும். ஞானிகள் எல்லாவற்றையும் அப்படிப் பார்க்கிறார்கள். இந்த வகையில் தம்முடைய அநுபவங்களை வேறே நிறுத்திப் பார்த்தலைச் சாட்சி மாத்திரமாக நின்று பார்ப்பது என்று சொல்வார்கள்.

தாயுமானவர் இந்தத் திருவிளையாடலைப் பற்றிப் பேசுகின்றார். அறுவகையான சமயங்களில் உள்ளவர்கள், “என் கடவுள் பெரியவன், என் கடவுள் பெரியவன்” என்று கூத்தாடுகிறார்கள். இறைவனைப் பற்றிப் பேசும்போதே இந்த வேடிக்கை நிகழ்கிறது என்றால் மற்றத் திறங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எங்கே பார்த்தாலும் கலகந்தான்; போட்டிதான். இவற்றுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது எது? இறைவனுடைய அருள் ஆணை. அது செய்கிற விளையாட்டுத்தான் இத்தனையும். அவன் எல்லாவற்றுக்கும் பின்னாலே பொம்மலாட்டக்காரன் திரைக்குப் பின்னால் மறைந்து நின்று எல்லாவற்றையும் ஆட்டுவது போல நின்று ஆட்டுகிறான். இடையில் உள்ள திரைதான் மாயை என்பது. மாயை மறைப்பதனால் நாம் எல்லாவற்றையும் வினையாட்டாகக் காண்கிறோம். விளையாடலிலே கூட வினையாட்டைப் பார்க்கிறோம். இதனைத் தாயுமானவர் சொல்கிறார்.

குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக்
கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
நின்றாயே; மாயையெனுந் திரையை நீக்கி
நின்னையார் அறியவல்லார்? நினைப்போர் நெஞ்சம்
மன்றாக இன்பக்கூத் தாட வல்ல
மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க்
கன்றாலின் கீழிருந்து மோன ஞானம்
அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே.”

திருடன் பார்வை

ஒரு குழந்தை விளையாடுகின்றது. காலில் தண்டையும், வெண்டையமும் அணிந்திருக்கிறது. கையில் காப்புப் புனைந்து இருக்கிறது-அதன் கழுத்தில் சங்கிலி மின்னுகிறது. தலையில் சுட்டி அசைகிறது. இளம் குழந்தை அது; ஆடையின்றி விளை யாடுகின்றது.

அதைப் பெற்ற தாய் அதைப் பார்க்கிறாள். அதன் ஒவ்வோர் அசைவிலும் அவள் இன்பம் காண்கிறாள். இறைவன் திருவருளினால் இந்தக் குழந்தைச் செல்வம் தனக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி ஆனந்தம் அடைகிறாள். பெற்ற தாய் மாத்திரம் அன்று. நல்லவர் யாராக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது அதன் அழகிலும் அது விளையாடுகிற விளையாட்டிலும் உள்ளம் ஈடுபட்டு ஆனந்தத்தை அடைவார்கள்.

ஆனால் அங்கே ஒரு திருடன் வருகிறான். அவனும் அந்தக் குழந்தையின் அழகைப் பார்க்கலாம். மற்றவர்களுடைய கண் போலத்தான் அவனுக்கும் கண் இருக்கிறது. ஆனால் அவன் அந்தக் குழந்தையின் அழகைப் பார்ப்பது இல்லை. அது அணிந் திருக்கிற நகைகளைப் பார்க்கிறான். அதனிடத்தில் உள்ள நகைகளைத் தன்னுடையவை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறான். விளையாட்டைக் காணுகின்ற கண் அவனுக்கு இருப்பதில்லை. அவன் அங்கே ஒரு வினையாட்டை நிகழ்த்துவதில் ஈடுபடுகிறான். அவன் உள்ளத்தில் உள்ள பொன்னாசை குழந்தையின் அழகை, விளையாட்டைத் திரை போட்டு மறைத்துத் தீமையான எண்ணத்தை எழுப்புகிறது.

அப்படியேதான் பந்தாடும் மங்கையரைக் கண்ட ஆடவன் தன்னுடைய உள்ளத்தில் அவளுடைய இன்பத்தை நுகர வேண்டுமென்ற எண்ணத்தை வளர்க்கிறான். திருடன் உள்ளத்தில் பொன்னாசை இருக்கிறது. ஆடவன் உள்ளத்தில் பெண்ணாசை இருக்கிறது. இரண்டுபேரும் குழந்தையின் விளையாட்டையோ, குமரியின் விளையாட்டையோ காணாமல் அவர்கள் மூலமாகத் தாங்கள் பெறுகின்ற லாபத்தை எண்ணுகிறார்கள். அழகிய ஆட்டுக் குட்டியைப் புலி பார்க்கும்போது தன்னுடைய இரையாகப் பார்க்கிறது. அத்தகைய புலிப் பார்வைதான் பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வை பட்டு உருக்கும் ஆடவர்களுக்கு இருக்கிறது.

மாற வழி

இந்தப் பார்வை மாறவேண்டுமானால், “உலகம் முழுவதும் இறைவனது விளையாட்டுக் கூடம்; உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் இறைவன் உருவம்” என்று பக்தியினால் எண்ணுகின்ற எண்ணம் வரவேண்டும். அந்தப் பக்தி இறைவன் திருவருளால் நம் உள்ளத்தில் நிலை கொள்ள வேண்டும். இதனை எண்ணி அருணகிரியார் பந்தாடுகின்ற மங்கையருடைய கயல் பார்வையில் பட்டு நான் ஆழாமல் நீ அருள் செய்ய வேண்டுமென்று வேண்டு கிறார்.

பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில்
பட்டு உழலும் சிந்தாகுலந்தனைத் தீர்த்து அருள்வாய்.

செங்கயல் பார்வை என்று சொன்னது, கயல் சிவந்தது என்பதனால் அல்ல. மங்கையர் கண் சிவந்திருக்கிறது.

கண்ணை மறைக்கும் படலம்

மாதர் மயல் மாயையினால் உண்டாவது. உலகத்து நிகழ்ச்சிகளை விளையாட்டாகக் காணாமல் வினையாட்டாகக் காணுவதற்குக் காரணம் அந்த மாயையென்னும் திரைதான். அது கிழிபடவேண்டும். அப்போது உண்மை புலனாகும். மாயைத் திரை கிழிந்தால் அழகை நன்றாக நுகரலாம்; தனி நின்று பார்த்து இறைவன் படைப்பு என்று கண்டு இன்புறலாம். கவிஞனும் பக்தனும் ஞானியும் இயற்கையின் எழிலைக் கண்டு பற்றற்ற நிலையில் நின்று அனுபவிப்பார்கள். மலரைச் செடியிற் கண்டு அதன் அழகை நுகர்வார்கள்; அதனைப் பறித்து மோந்து பார்க்க மாட்டார்கள். அதனதன் போக்கிலே தாம் நின்று அதன் அழகை யும் அதன்மூலம் இறைவன் அருளையும் காணும் கண் படைத் தவர்கள் அவர்கள்.

அப்படிக் காணும் பார்வை நமக்கு இல்லை. நம் கண்ணை ஒரு படலம் மறைக்கிறது. அதற்குத்தான் மாயை என்று பெயர். மாயை என்னும் திரையைக் கிழித்தால் பின்னே கூத்தாடும் பொம்மலாட்டக்காரனைக் காணலாம். மாயை யென்னும் படலத்தை நம் கண்ணிலிருந்து கிழித்தால் உண்மையைக் காணலாம்.

படலம் கிழிக்கும் வேல்

அதைக் கிழிப்பதற்குரிய கருவி முருகன் திருக்கரத்தில் இருக்கிறது. அவன் செய்ய வேல் முருகன். அவனை நோக்கி முறையிடுகிறார்.

செய்ய வேல் முருகா!

மாயைப் படலம் கண்ணில் இல்லை. கண்ணில் பார்வையை மறைக்கும் படலம் படர்வது உண்டு. அதை மருத்துவர்கள் உரித்துவிடுவார்கள். அத்தகைய படலம் அன்று இது. கண்ணிலே பார்வை வேறுபடுவதற்குக் கருத்திலே உள்ள மயல்தான் காரணம். ஆதலின் கண்ணில் உள்ள படலத்துக்குக் கருத்துப் படலமே காரணம். கருத்திலே மயல் இல்லாமல் வாற்சல்யம் உள்ள தந்தை பார்க்கும் பார்வை வேறாக இருக்கிறதல்லவா?

ஆதலின் கருத்திலே உள்ள மயல் திரையைத்தான் கிழிக்க வேண்டும். மங்கையர் பார்வையில் படுவதற்குக் காரணமாக இருப்பது கருத்திலே உள்ள மயல். பட்டு உருகி ஆகுலம் கொள்வதும் அந்தக் கருத்துத்தான். மயலாகிய விதையும் கவலையாகிய மரமும் சிந்தையில்தான் உள்ளன. அங்கே புகுந்து மயலையும் கவலையையும் களையும் கருவி ஒன்று இருந்தால்தான் இந்த வினையாட்டுப் போகும்.

முருகனுடைய திருக்கரத்தில் உள்ள வேல் அத்தகையது. அது புறக் கண்ணாற் கண்டாருக்குக் கதிரும் செம்மையும் உடைய வேலாகத் தோன்றும். அகக் கண்ணாற் காண்பாருக்குச் செய்ய ஞானமாகத் தோன்றும். சூரனோடு செய்த போரில் அசுரர் கூட்டத்தைக் குலைத்த வேல் அது. உள்ளமாகிய போர்க்களத்தில் நற்குணங்களாகிய தேவர்களுக்கும் தீய குணங்களாகிய அசுரர் களுக்குமிடையே நாள்தோறும் நிகழும் நுட்பமான போரில் தன்னை நாடுவானுக்குத் துணையாகப் புக்குத் தீய குணங்களைச் சாடும் வேல் அது. அஞ்ஞான இருட்டைப் போக்கி ஞான ஒளியை ஏற்றி வைக்கும் செஞ்சுடர் வேல் அது.

சிந்தாகுலத்தைப் போக்குவதற்குத் தக்க படையாக இருப்பது வேல். இருள் அடர்ந்த கரிய அஞ்ஞானச் செறிவைச் செய்ய சுடர்வேல் போக்கி விடும். அதனைக் கரத்தில் ஏந்திய அழகனாகிய முருகன் அருள் இருந்தால் இந்த நிகழ்ச்சி உண்டாகும். அதனால்,

சிந்தாகுலந்தனைத் தீர்த்தருள்வாய்,
செய்ய வேல் முருகா!

என்றார் அருணை முனிவர்.

“நீ அஞ்ஞானத்தைப் போக்கி அதன் விளைவாகிய மய லிருட்டை மாய்த்து அதனால் வரும் சிந்தாகுலத்தை அழிக்கும் ஆற்றல் உள்ளவன் என்பதை உன்னைக் கண்டவுடனே உணர்ந்து கொள்ளலாம். எக்காலத்தும் செய்ய வேலை ஏந்தி நிற்கும் நின்னுடைய கோலம் இந்தத் தைரியத்தை எனக்கு ஊட்டுகிறது. மடந்தையர் பார்வை வலையிலே பட்ட என்னை நீ காப்பாற்ற வேண்டும். உன் திருக்கைவேலால் அந்த வலையை எளிதில் அறுத்து எறிந்து விடலாமே!” என்று எண்ணும்படியாக இந்தத் தொடர்கள் அமைந்திருக்கின்றன.

பந்தாடும் மங்கையர் செங்கயல்
பார்வையில் பட்டு உருகும்
சிந்தாகுலந்தனைத் தீர்த்தருளாய்,
செய்ய வேல் முருகா!

விண்ணப்பம் போடும் இடம்

முருகனை விளித்துச் சொல்லத் தொடங்கியவுடனே அவனுடைய பெருமைகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. “வேலைக் கொண்டு சூரனை மாய்த்த அப்பெருமான் எங்கே இருக்கிறானோ? இந்த விண்ணப்பத்தை அவனுக்கு அனுப்புவது எப்படி?” என்று அருணகிரிநாதர் மயங்கவில்லை.

நாம் எழுதும் கடிதங்களைப் போடுவதற்கு அங்கங்கே தபால் பெட்டிகளை வைத்திருக்கிறார்கள். தபால் நிலையங்கள் சிறியனவும் பெரியனவுமாக அங்கங்கே இருக்கின்றன. சிறிய ஊராக இருந்தாலும் நம்முடைய வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்தால் அடையும் இடத்தில் தபால் நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். கடிதம் எழுதுபவர்களுக்கு அவை பயன்படும். எழுதாதவர்களுக்கு அவர்கள் வீட்டு வாயிலிலே தபால் பெட்டி தொங்கினாலும் பயன் இல்லை.

முருகன் கந்தலோகத்தில் தன் இராசதானியை அமைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அனுப்பும் விண்ணப்பத்தை அங்கே போய்த்தான் போட வேண்டும் என்பது இல்லை. அவன் எந்த லோகத்திலும் இருக்கிறான். எந்த இடத்திலும் இருக்கிறான். வெளிப்படையாக, யாவரும் தெரிந்து கொள்ளும்படியாக நம் விண்ணப்பத்தைப் போடும் இடங்கள் பல இந்த நாட்டில் இருக்கின்றன. அவற்றிலும் சிறியது, பெரியது என்ற வேறுபாடு உண்டு. பல காலமாக மிகப் பெரியவர்கள் விண்ணப்பம் போட்ட இடங்கள் பெரிய நிலையங்கள். அத்தகைய சிறந்த நிலையங் களில் ஒன்று திருத்தணிகை.

திருத்தணிகை

செய்ய வேல் முருகனை நோக்கி விண்ணப்பம் செய்யும் அருணகிரிநாதர் தம்முடைய முறையீட்டைத் திருத்தணிகை என்னும் அருள் நிலையத்தில் போடுகிறார். அந்த நிலையம் எப்படி இருக்கிறது? அது ஒரு குன்று. பல மரங்கள் அடர்ந்த பொழில்களை உடையது. அங்கே முருகன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான்.

கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக்
குன்றில் நிற்கும்
கந்தா!

முருகன் நிற்கும் குன்றத்தைச் சூழக் கடம்ப மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்றன. அவற்றில் கொத்துக் கொத்தாக மலர்கள் மலர்ந்து மணக்கின்றன.

கடம்ப மலர்

முருகனுக்குரிய மலர்கள் பல. அவன் போருக்குச் செல்லும் போது காந்தளை அணிந்து கொள்வான். போர்க்களத்தில் அவனை அடையாளங் காட்டும் கண்ணி அது. வெட்சிப் பூவும் அவனுக்கு விருப்பமானதுதான்; ஆனால் அவன் எப்போதும் விரும்புவது கடம்ப மலர். கடம்ப மலர்மாலையை அவன் தன் திருமார்பில் அணிந்திருக்கிறான். அதனால் சங்க நூல்களில், “காரலர் கடம்பன்,” “கார்க்கடம்பந் தாரெங்கடவுள்” என்று முருகனைப் பழம் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கடம்பன் என்று சொன்னாலே போதும்; முருகன் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடம்ப மாலையைப் போகத்துக்குரிய தார் என்று, திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கிறார். முருகன் தன் தேவியரோடு இருந்து உலகமெல்லாம் இன்புறும் படி அருளுகிறான். தான் போகியைப் போல மனைவியுடன் இருந்து உலகத்து மக்கள் கணவன் மனைவியராக இல்லற இன்பம் நடத்தும்படி செய்கிறான். அந்த நிலையில் அவன் அணிவது கடம்ப மலர்மாலை.

வள்ளியை மணந்த இடம்

திருத்தணிகையில் முருகன் வள்ளி யெம்பெருமாட்டியை மணந்து கொண்டான். தன்னை எதிர்த்து வந்த வேடர்களைச் சினத்தினால் பொருது, வள்ளி நாயகியின் வேண்டுகோளால் கோபம் தணிந்து, திருத்தணிகைக் குகையில் வந்து தங்கி வள்ளியோடு இன்புற்றான். அவன் கோபம் தணிந்த இடம் ஆதலால் தணிகை என்ற பெயர் வந்தது. அதுவே தணி என்றும் வழங்கும். கோபம் தணிந்து, போக மூர்த்தியாக முருகன் எழுந்தருளியிருக்கும் இடம் இது.

ஆதலின் அவன் அணிவதற்குரிய மாலைக்கு வேண்டிய கடம்ப மலர்கள் இங்கே நிறையக் கிடைக்கின்றன. அருண கிரியார் சென்று தரிசித்த காலத்தில் இங்கே நிறையக் கடம்ப மரங்களை வளர்த்து வந்தார்கள் போலும். நாள்தோறும் முருகனுக்குப் பெரிய பெரிய கடம்ப மாலைகளை அணிய ஏற்ற வகையில் எங்கே பார்த்தாலும் கடம்ப மரங்கள் நிற்கின்றன. மரம் இருந்தால் போதுமா? அவ்வளவும் கொத்துக் கொத்தாக மலர்களைத் தாங்கி அழகுடன் விளங்குகின்றன. வள்ளி மணவாளனது கல்யாண மண்டபம் திருத்தணிகைக் குன்று; அதனைச் சூழ அலங்காரம் செய்த பசுந்தூண்கள் அந்தக் கடம்ப மரங்கள் என்று சொல்லும்படியாக அவை நிற்கின்றன.

கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிகைக்
குன்றில் நிற்கும், கந்தா!

கொந்து – பூங்கொத்து.

கந்தன் என்பதன் பொருளைப் பலமுறை நாம் சிந்தித்து வந்திருக்கிறோம். இணைக்கப்பட்டவன், மூலமாக இருப்பவன் என்று பல பொருள் அத்திருநாமத்துக்கு உண்டு.

இளங்குமரன்

முருகன் இளங்குமரனாக இங்கே இருக்கிறானாம். அவன் என்றும் இளைய குமரன்தான். ஆயினும் வள்ளி நாயகியை வசப்படுத்துவதற்காக முதிய கிழவன் வேடம் தாங்கி அவளுக்குப் பல போக்குக் காட்டினான். வேடனாகவும், வேங்கை மரமாகவும், முதியவனாகவும் கோலம் காட்டினான். அவை அனைத்தும் அவன் வேண்டுமென்று புனைந்தவை. ஒரு நாடகக் கலைஞன் பலவகையான கோலங்களைக் கதைக்கு ஏற்பப் புனைந்து கொள் கிறான். ஆனால் இயல்பாக வாழும் வீட்டில் அந்த வேடத்தைக் களைந்து விட்டுத் தனக்கு இயற்கையான உருவத்துடன் விளங்குவான். முருகன் வள்ளி நாயகியைச் சந்தித்து வள்ளி மலையில் இருக்கும் அளவும் வெவ்வேறு கோலம் காட்டினான். அவன் அங்கே செய்த செயல்கள் யாவும் நாடகமே. வள்ளி நாயகியை மணந்த பிறகு தன் இயல்பான கோலத்தோடு இங்கே எழுந்தருளியிருக்கிறான்; இளங்குமரனாக இளங்குமரி வள்ளியை மணந்து விளங்குகிறான்.

கந்தா! இளங்குமரா!

குமாரன் என்ற பெயரே தமிழில் குமரன் என்று வந்தது. மாரனும் குலையும் வண்ணம் செய்யும் பேரழகன் முருகன்; ஆதலின் அத்திருநாமம் அவனுக்கு அமைந்தது. முருகன் என்ற திருநாமத்துக்கு அமைந்த பல பொருள்களில் இளமையுடையவன், அழகுடையவன் என்பன சிறந்தவை. இளமையும் அழகும் ஒரு சேர இருந்தால் காண்பார் உள்ளம் கவர்ச்சி பெறும். முருகன்,

என்றும் இளையாய், அழகியாய்

என்று பாராட்டப் பெறுபவன். இந்த இரண்டு இலக்கணங்களும் ஒருங்கே உடையவன் என்பதை எண்ணியே,

இளங்குமரா!

என்று விளித்தார்.

முருகன் காதல் விளையாட்டிலே சிறந்து போகமூர்த்தியாகிப் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பை அணிந்து கொண்டு திருத்தணிகையில் நிற்பதை மாத்திரம்கண்டு, “இவன் காதல் வாழ்க்கையை மட்டும் உடையவன்” என்று கருதக் கூடாது. அவன் உலகில் வாழும் உயிர்கள் உய்ய வேண்டும் என்ற கருணை யால் இங்கே உள்ள பல தலங்களில் அருள் விளையாடலைச் செய்தான். நிலவுலகத்திலே பிறந்த வள்ளியம் பெருமாட்டியைத் திருமணம் செய்து கொண்டான்.

முருகன் ஆற்றல்

அவன் ஆற்றலிற் பெரியவன்; வீரத்திற் சிறந்தவன். அவனுடைய வீரச் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால் அமராவதிப் பட்டணத்துக்குப் போய்க் கேட்க வேண்டும். தேவர்கள் வாழும் உலகத்தில் இந்திரன் எல்லா வகைப் போகங்களும் பெற்று வாழும் இராசதானி அமராவதி. அங்கே சென்று, ”இந்த ஊருக்குச் சொந்தக்காரன் யார்?” என்று கேட்டால், “இந்திரன்” என்று சொல்வார்கள். “அவன்தான் இந்த நகரத்தைப் பாதுகாக்கிறானோ?” என்று கேட்டுப் பாருங்கள். உண்மை வெளிவரும். ”அமராவதியில் கிடைக்கும் இன்பங்களை நுகர்ந்து வாழ்பவர் கள் தேவர்களாகிய நாங்கள். எங்களுக்குத் தலைவன், மன்னன் இந்திரன். எந்தவிதமான இடுக்கணும் இல்லாதவரையில் இது இந்திரனுக்குரிய பட்டணந்தான். ஆனால் இதைப் பாதுகாக்கும் திறமை எங்களுக்கு இல்லை. முருகன்தான் அமராவதியைக் காக்கிறான்; தேவலோகத்துக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கிறான்; எங்கள் வாழ்வு குலையாமல் காவல் புரிகிறான். இந்திரன் அமராவதிக்கு அரசன்; அரசனே காவலனாக இருப்பது உலகத்து வழக்கு. இங்கே அப்படியில்லை. அமராவதியில் இன்பம் பெற்று வாழும் மன்னன் இந்திரன்; இதற்கு இடையூறு வராமல் காப்பாற்றும் காவலன் முருகன்” என்று தேவர்கள் சொல்வார்கள்.

ஒரு சமயம் இந்த உண்மையை அவர்கள் மறந்திருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அவர்களுடைய ஆற்றலின் எல்லையைப் புலப்படுத்தி அகந்தையைப் போக்க எண்ணிச் சூரனைப் படைத்து விட்டான். அவன் அமரலோகத்தையே சூறையிட்டான். அவனை எதிர்த்துப் போரிட மாட்டாமல் தேவர்கள் சிவபிரானிடம் முறை யிட்டுக் கொண்டார்கள். முருகன் திருவவதாரம் செய்து சூரனை அழித்தான்.

சூரனோடு போர் செய்யும்போது ஒரு பக்கம் தேவர்களும் மற்றொரு பக்கம் அசுரர்களும் நின்று பொருதனர். அசுரர்களுக்குத் தலைவனாகச் சூரபன்மன் நின்றான். தேவர்களுக்குத் தலைவனாக இந்திரன் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லை. முருகனே தேவர் படைக்குத் தலைவனாக, தேவ சேனாதிபதியாக நின்று பொருதான்.

அரசனும் சேனாபதியும்

மற்ற இடங்களில் அரசன், சேனாபதி என்னும் இருவருள்ளும் அரசன் பதவியாற் பெரியவன்; சேனாபதி அவனிடம் ஊழியம் புரிபவனாக இருப்பவன். இங்கே அதற்கு மாறான நிலை. பெயருக்கு அரசனாக இருந்தான் இந்திரன்.

தேவசேனாபதியாகிய முருகனே உண்மையில் தனிப்பெருந் தலைவனாக நின்று போரை நடத்தினான். போர் நிகழ்ந்த போது ஒரு சமயம் இந்திரனே மயிலாகச் சென்று முருகனுக்கு வாகனமாகி அவனைத் தாங்கி னான். அரசன் உயர்ந்தவனாக இருந்தால் இப்படிச் செய்வானா?

போர் முடிந்து தேவர்களுக்கு வெற்றி கிடைத்தது. பிறகு, “என் வேலை தீர்ந்துவிட்டது; இந்த உத்தியோகம் இனிப் போதும்” என்று முருகன் சொல்லவில்லை. அவன் அப்படிச் சொன்னாலும் தேவர்கள் அவனை விடுவார்களா? “சுவாமி! போர் முடிந்தாலும் எங்கள் அச்சம் நீங்கவில்லை. போகம் உள்ள இடத்திற்கு எப்போதும் ஆபத்துக் காத்துக் கொண்டு நிற்கும். ஆதலால் இந்தப் போரோடு எங்கள் சங்கடம் போயிற்றென்று நாங்கள் நினைக்க மாட்டோம். நீ இனி எக்காலத்தும் எங்களுக்குக் காவலனாக இருந்து காப்பாற்ற வேண்டும். உன்னையல்லாமல் எங்களுக்கு வேறு துணை இல்லை. போர் ஒழிந்தாலும் நீ எங்களுக்கு அரணாக இருக்கும் உத்தியோகம் உன்னை விட்டு நீங்காது” என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள்.

ஆகவே, முருகன் எப்போதும் தேவர்களுக்கு வரும் இடையூறுகளைக் காப்பாற்றும் தேவசேனாபதியாகவே இருக்கிறான்.

வானோர் வணங்குவில் தானைத் தலைவ

என்பது திருமுருகாற்றுப்படை.

அவன்தான் உண்மையில் தேவ லோகத்துக்கே அதிபதி. அமராவதியைப் பாதுகாக்கும் ஆற்றலுள்ளவன் அவன்தான்.

அமராவதி காவலன்

நமக்கு அணிமையில் திருத்தணிகையில் மாப்பிள்ளைக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறதைக் கண்டு அவன் ஆற்றலைச் சிறியதாக எண்ணக் கூடாது. பேராற்றல் படைத்த தேவர்களுக்கு வரும் இன்னல்களைப் பாதுகாக்கும் பெருவீரன் அவன்; அமராவதி காவலன்.

அமராவதி காவலனே!

செய்யவேல் முருகன், கந்தன், இளங்குமரன், அமராவதி காவலன் என்று சொன்ன திருநாமங்களால் அவன் அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானத்தையே படையாக உடையவன் என்பதும்,பிரிந்தவற்றை ஒன்று படுத்தும் அருளாளன் என்பதும், இளமையும் எழிலும் இணைந்த திருவுருவமுடையவன் என்பதும், தேவர்களைப் பாதுகாக்கும் அமராவதி காவலன் என்பதும் புலனாகின்றன.

அழகு அழகு என்று மங்கையர் பார்வையிற் பட்டுருகும் நெஞ்சத்தில் இளங்குமரனுடைய திருவுருவத்தியானம் அமைந் தால் உண்மையான அழகு இன்னதென்ற உண்மை புலனாகும். மடந்தையர் பார்வையிற் பட்டு உருகும் நெஞ்சில் செய்யவேல் முருகன், அமராவதி காவலன் நினைவு உண்டானால் மயல்வலை அறுந்து நலம் உண்டாகும்.

பந்தாடும் மங்கையர் செங்கயற்
பார்வையிற் பட்டுருகும்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்
வாய்;செய்ய வேல்முருகா!

கொந்தார் கடம்பு புடைசூழ்
திருத்தணிக் குன்றில் நிற்கும்
கந்தா! இளங்கும ரா! அம
ராவதி காவலனே!

(பந்தை எடுத்து வீசி விளையாடும் மங்கைப் பருவ மாதரின் கயல் போன்ற சிவந்த கண்ணாகிய வலையிலே பட்டு மனத்திண்மையின்றி உருகி மயல் கொள்ளும் மனக் கவலையைத் தீர்த்து அருள் புரிவாயாக; சிவந்த வேலை எடுத்த முருகா! பூங்கொத்துகள் நிரம்பிய கடம்பமரங்கள் சுற்றிலும் சூழ்ந்துள்ள திருத்தணிகைக் குன்றில் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் கந்தா! இளங்குமரா! தேவர்கள் வாழும் அமராவதிப் பட்டணத்துக்குரிய காவலனே!

மங்கையர் – மங்கைப் பருவம் எய்திய மாதர். செங்கயல் பார்வை: செம்மை, பார்வைக்கு அடை. பார்வை – கண்: ஆகு பெயர். பட்டு என்பதனால் வலையாகச் கொள்ள வேண்டும். உருகுதலாவது திண்மை கலைந்து வருந்துதல். சிந்தா ஆகுலம் மனக்கவலை. செய்யவேல்: செம்மை, போர் செய்து குருதி பூசியமையால் வந்தது. கொந்து – பூங்கொத்துகள். அமராவதி – அமரர் வாழும் நகரம்; இந்திரனுடைய இராசதானி நகர்.)

இது கந்தர் அலங்காரத்தில் 79-ஆவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !