பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

யமனுக்கு எச்சரிக்கை

முன் பாட்டில் அருணகிரிநாதருடைய பிரார்த்தனையைக் கேட்டோம். எம்பெருமானிடத்தில் எப்படி விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டுமென்பதை அவர் சொல்லிக் கொடுத்தார். “யமன் வானத்தை முட்டிக் கொண்டு வருவான், அப்போது என்னை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்” என்ற விண்ணப்பம் அது. மரணம் நிச்சயமாக வரும் என்பதை உணர்ந்து முன்னாலேயே விடுத்த வேண்டுகோள் அது.

வருமுன் காப்பவன்

வருமுன் காப்பான், வந்த பின் காப்பான், வரும் போது காப்பான் என்று மூன்று வகை உண்டு. உலகில் வருகிற நோய்களுக்கும் வறுமைக்கும் மரணத்திற்கும் இது பொருந்தும். ‘நாளைக்கு உண்ண வேண்டும்’ என்று இன்றே உணவைச் சேமிக்கிறவன் ஒருவன். உண்ணும் நேரம் வந்த பிறகு உணவைத் தேடுகிறவன் ஒருவன். உண்ணும் நேரம் தாண்டிய பிறகு பசி மிகுதியாகித் துன்புற்று உணவு தேடிப் போவான் ஒருவன். இந்த மூன்று பேர்களிலும் நிச்சயமாகத் துன்பம் வருமேயென்று முன் கூட்டியே உணர்ந்து அந்தத் துன்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளத் தக்க முயற்சி செய்கிறவனையே அறிவாளி என்று கருதுகிறோம். அந்தப் பாதுகாப்புத் தனக்குக் கிடைக்காமல் இருந்தால் எங்கே கிடைக்கும் என்று அவன் நாடித் தேடி ஓடுவான். தான் இருக்கும் இடத்தில் கிடைக்காவிட்டால் அது கிடைக்கிற இடத்திற்கு ஓடுவான். அந்தக் காலத்தில் கிடைக்காவிட்டால் எந்தக் காலத்தில் கிடைக்கும் என்று அதற்குரிய காலத்தை நோக்கிக் காத்திருப்பான். துன்பம் வரும் என்று தெரிந்த பிறகு துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியைத் தேடிப் பெறாதவன் அறிவாளி ஆகமாட்டான்.

முன் பாதுகாப்பு

நாளைக்கு உணவு வேண்டுமே என்று தேடி வைத்துக் கொள்ளும் அறிவு விலங்குகளுக்கு இல்லை. நமக்கு இன்பத்தை அளிப்பது எது, துன்பத்தை அளிப்பது எது என்று நமக்குத் தெரிகிறது. இனிமேல் நமக்கு வரும் இன்பம் எத்தகையது, துன்பம் எத்தகையது என்று எண்ணிப் பார்க்கின்ற அறிவு நமக்கு இருக் கிறது. பசித் துன்பம் வருமே என்று உணவு ஆக்கிக் கொள்ள நமக்குத் தெரிகிறது. அரிசி குத்தி வைத்துக் கொள்கிறோம். நெல்லைக் குதிரில் போட்டு வைத்துக் கொள்கிறோம். நிலம் வாங்கி வைக்கிறோம். தலைவலி வருமே என்று அம்ருதாஞ்சனம் வாங்கி வைத்துக் கொள்கிற அறிவு நமக்கு இருக்கிறது. இத்தகைய அறிவுடைய நாம் நமக்கு வருகிற துன்பங்களுக்கு எல்லாம் தலையாய துன்பம் எது என்று ஆராய்ந்து அந்தத் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ள வேண்டாமா?

காலத்தில் வேலை

மனிதன் ஒவ்வொரு நிமிஷமும் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு ஓடுகிறான். அலுவலக வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக அல்ல; அங்கே போய் வேலை செய்தால்தான் வெள்ளையப்பர் வருவார்; நாம் குடும்பத்தோடு வாழமுடியும். இப்படி வயிற்றுக்காகப் பாடு பாட்டுப் பல வேலைகளைச் செய்கிறான். பலருடைய உதவியை எதிர்பார்க்கிறான். காலத்தை எதிர் பார்க்கிறான். சரியாகப் பத்து மணிக்குக் காரியாலயத்தை நோக்கி அவன் ஓடுவது, முதல் தேதி தப்பாமல் சரியான காலத்தில் பணம் வருவதற்காக. முதல் தேதி தப்பாமல் பணம் வந்தால்தான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சரியான காலத்தில் அவனுக்குச் சோறு கிடைக்கும். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு இணைந்து இருக்கிறது. இந்த உடம்புக்கு வருகிற துன்பத்தை நீக்கக் கருதி முன்பே பாதுகாப் பான காரியம் செய்கிறோம். இதை அறிவுடையவன் செயல் என்கிறோம்.

ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் ஐந்து ஐந்து ரூபாய் சேமிப்பு நிதியில் கட்டுகிறான். அந்தக் குழந்தையின் கல்யாணத்திற்கு என்று காரணம் சொல்கிறான். இருபதாம் வயதில் கல்யாணம் பண்ண வேண்டுமென்று அறிந் திருக்கிறான். அதன் பொருட்டுக் குழந்தை பிறந்ததிலிருந்தே பணம் கட்டுகிறான். உலகம் இத்தகையவர்களைச் சாமர்த்திய சாலிகள், அறிவுள்ளவர்கள் என்று சொல்கிறது.

இப்படிச் செய்கிறவர்கள் வருமுன் காப்பவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள், வாழத் தெரிந்தவர்கள் என்று நாம் சொல்கிறோம். “கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசித்து வரலாம்” என்று ஒருவன் சொன்னால் அவனைப் பகுத்தறிவுவாதி குருட்டு நம்பிக்கைக்காரன் என்கிறான். சேம நிதியில் பிறந்த பெண் குழந்தையின் கல்யாணத்திற்காக முன் கூட்டியே பணம் கட்டுவது அறிவானால், நமக்கு ஏதாவது விபத்து வந்துவிடப் போகிறதே என்று இன்ஷுரன்ஸ் பண்ணி வைப்பது அறிவானால், உயிருக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதும் அறிவு அல்லவா?

பழியும் புகழும்

எல்லோரும் இன்ஷுரன்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டுமென்று சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம். நாமே செத்துப் போய் போகிறோம். எதற்காக இன்ஷுரன்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்? செத்துப் போகிறவன் பழியோடு செத்துக் போகக் கூடாது. ”ஐயோ! இந்தப் பாவி குடும்பத்தை நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விட்டானே!” என்று சொல்லும் பழி வராமல் இருப்பதற்கே இன்ஷுரன்ஸ் பண்ணிக் கொள்கிறான்.

செத்துப் போன பிறகு இங்கே நிற்கும் உடம்பு ஒன்று உண்டு. பஞ்சபூதங்களினாலான உடம்பு அழிந்து விடலாம். ஆனால் அந்த உடம்பு அழியாது. அதனைப் புகழ் உடம்பு என்று சொல்வார்கள்.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயா
தேந்திய கைகொ டிரந்தவர் எந்தாய்
வீந்தவ ரென்பவர்;வீந்தவ ரேனும்
ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே

என்ற கம்பர் பாடுகிறார். இந்த உடம்பு செத்துப் போகலாம். புகழ் உடம்பு இறவாது. புகழின்றி வெறும் உடம்பைச் சுமந்து கொண்டு ஒருவன் வாழலாம். அவன் நடைப்பிணம். ஆனால் பெரியவர்கள் உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பை நிலை நாட்டிக் கொள்வார்கள். அவர்கள் இந்த உலகில் புகழ் உடம்பை வைத்துவிட்டு மறுமையில் இன்பத்தை அடைகிறார்கள். பாவி யாக இந்த உலகில் பலகாலம் வாழ்ந்தால் உலகம் அவனைப் பழிக்கும்; மறுமையில் அவன் நரகத்தை அடைவான். இங்கே பழியைக் கொண்டவனுக்கு அங்கே இன்பம் இல்லை.

பாட்டியின் தீர்ப்பு

ஒருவர் இறந்து போனார். “அவர் சொர்க்கத்திற்குப் போவாரா, நரகத்திற்குப் போவாரா என்று நான் பார்த்து வருகிறேன்” என்று ஒரு பாட்டி வீதிக்கு வந்தாள். செத்தவனுடைய சரித்திரம் என்ன வென்று கேட்கவில்லை. அவன் என்ன என்ன காரியங்கள் செய்தான் என்றும் அறியவில்லை. வெளியில் போய்ப் பார்த்துவிட்டு உள்ளே வந்தவள். “இவன் நிச்சயமாகச் சொர்க்கத்திற்குத்தான் போவான்” என்றாள். “எப்படிப் பாட்டி தெரிந்து கொண்டாய்?” என்று கேட்டார்கள். ‘வீதி முழுவதும் மக்கள் கூடியிருக்கிறார்கள். இவ்வளவு பேர்களுடைய மனமும் துயரமடைகின்றன இன்றைக்கு. இத்தனை பேரும் அவனுக்குப் பிள்ளைகளும் அல்ல; உறவினர்களும் அல்ல. சிலரே உறவினர்களாக இருப்பார்கள். இருந்தாலும் பலர் வருத்தம் அடைகிறார்கள். இவனால் பெற்ற நலம் இனிக் கிடைக்காதே என்ற துக்கம் அவர்களுக்கு. அதனால்தான் இத்தனை பேர்களும் துயரக் கடலில் மூழ்கி இருக்கின்றனர். இத்தனை பேர்களுக்கும் நல்லவனாக இருந்தவன் அவன் என்று தெரிகிறது. அவன் புண்ணியசாலி என்பதில் தடை என்ன? அதனால்தான் சொர்க்கத்திற்குப் போவான் என்று சொன்னேன்” என்றாளாம் பாட்டி.

எய்ப்பில் வைப்பு

இறந்த பிறகும் உலகம் பழி சொல்லாமல் இருக்க வேண்டு மென்பதற்காகப் பணம் சேர்த்து வைத்து நலம் பண்ணுகிறவனையே அறிவாளி என்கிறோம். இது நன்றாக வாழத் தெரிந் தவர்களுடைய பேச்சேயன்றி வேதாந்தம் படித்தவர்களுடைய பேச்சன்று. நம்முடைய பையன் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் போடுகிறான். ஒரு கம்பெனிக்குப் போட்டிருக்கிறான்; சர்க்கார் உத்தியோகத்திற்கும் போட்டிருக்கிறான். இந்த இரண்டு இடங் களிலிருந்தும் உத்தியோகம் கிடைக்கிறது என்றால் அரசாங்க வேலையைத்தான் விரும்புவான். பென்ஷன் கிடைக்கும் அல்லவா? பென்ஷன் என்பதற்குக் சரியான தமிழ் ‘எய்ப்பில் வைப்பு’ என்பது. எய்ப்பு என்பது இளைப்பு. இளைப்பு அடைகிற காலத்தில் உதவி செய்கின்ற நிதி அது. மற்ற இடங்களில் உடம்பில் வலிமை இருக்குமட்டும் வேலை செய்து பணம் வாங்கலாம். வேலையை விட்டுவிட்டால் சம்பளம் கிடைக்காது. ஆனால் அரசாங்க வேலையில் உடம்பு இளைத்து வேலையை விட்டு நீங்கிய பிறகு பென்ஷன் வாங்கலாம்.

பென்ஷன் பணத்தை முன்கூட்டியே தொகையாக வாங்கிக் கொள்வது சரியல்ல என்பதற்குரிய காரணங்களை ராஜாஜி அவர்கள் முதல் மந்திரியாக இருந்தபோது சொன்னார். அவர் பேசியபோது கேட்டிருக்கிறேன். “பென்ஷன் கொடுப்பதன் நோக்கம் நமக்கு ஊழியம் செய்தவர்கள் உடம்பு தளர்ச்சி அடைந்து விட்டாலும் இன்னல் இல்லாமல் இருக்கவேண்டு மென்பதுதான். அதற்காக மாதந்தோறும் பென்ஷன் கொடுக்கிறோம். இதைக் ‘கம்யூட்’ பண்ணி மொத்தமாக வாங்கிவிட்டால் மனைவி மக்கள் நயமாகப் பேசி அந்தப் பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு துன்பப்படுத்த ஆரம்பிக்கலாம். மாதந்தோறும் கையெழுத்துப் போட்டால்தான் பணம் கிடைக்கும் என்று இருந்தால் சாகிற வரைக்கும் அவரைப் பத்திரமாக அந்தப் பணத்திற்காகவாவது காப்பாற்றுவார்கள்” என்று சொன்னார்.

இளைத்த பின்பும் உதவியாகப் ‘பென்ஷன்’ பெறும் அரசாங்க வேலை இருந்தால் நல்லது என்று நாடுகிறோம். இது போல் உயிருக்குத் தளர்ச்சி ஏற்படுகிற காலத்தில் அதற்கு உதவி செய்ய ஒரு பொருளைச் சேமிக்க வேண்டாமா? உண்மையான எய்ப்பில் பெரிய இன்பத்தைத் தருவதற்குரிய வைப்பு அருளாகிய செல்வந்தான். அதைத்தான் முன் பாட்டில் அருணகிரியார் வேண்டினார். ‘நாளைக்கு யமன் வருவானே! நான் என்ன செய்வேன்? அப்போது நீ மயிலின் மேல் வந்து பாதுகாக்க வேண்டும்” என்ற பொருளோடு,

மாகத்தை முட்டிவரும் நெடுங்கூற்றன் வந்தால் என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்

என்று பிரார்த்தனை பண்ணினார்.

அருணகிரியார் பெற்ற உறுதி

ஆண்டவனைப் பிரார்த்தனை பண்ணினவுடன் அவருக்குத் தைரியம் வந்துவிட்டது. நிச்சயமாக ஆண்டவன் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்ற உறுதி அவர் உள்ளத்தில் எழுந்தது. இனி அவர் யாருக்குப் பயப்பட வேண்டும்?

ஒரு குழந்தை ஒரு பெரிய பையனிடம் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுகிறான். அப்பா துணைக்கு வரும்போது அந்தக் குழந்தை அந்தப் பெரியவனிடம், “என்னடா இப்போது சொல் கிறாய்? என்னிடம் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா?” என்று அறைகூவுவதைப் பார்க்கிறோம்.

அதுபோல், முன்பாட்டில் சொல்கிறபோது அருணகிரியாருக்கு யமனைக் கண்டு பயப்படுகிற நிலை இருந்தது. “ஆண்டவனே, உனக்கும் எனக்கும் நடுவில் நிழல் போன்ற நெடிய உருவத் துடன் நிற்பானே காலன். அப்போது உன்னை நினைக்கலாம் என்றால் அவன் நிழல் மறைக்குமே! அந்தச் சமயத்தில் நீ என் முன்னே தோன்ற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அவர் பிரார்த்தனை உடனே பலித்துவிட்டது. ஆண்டவன் திருவருள் அவருக்குக் கிடைத்துவிட்டது. “அந்தகா உன் ஜம்பம் என்னிடம் பலிக்காது. எனக்குத் துணையாக இருக்கும் ஆண்டவன் யார் தெரியுமா? என் பக்கத்தில் வேண்டுமானால் வந்து பார். உன் உயிரையே வாங்கி விடுகிறேன்” என்று இங்கே பேசுகின்றார்.

வேலனும் காலனும்

பயத்திற்குக் காரணமான இருள் மயமாகிய அஞ்ஞான மலையை வெல்வதற்கு ஞான சொரூபமான கருவிகளை உடைய ஆண்டவனை நினைக்கிறார். “என்னுடைய திருவருளைப் பெற்றவர்களுக்கு யாரேனும் துன்பம் செய்தால் நான் காப்பாற்றுவேன்” என்பதைக் காட்டுவதற்காக இறைவன் எப்போதும்தான் திருக்கரத்தில் வேல் படையை வைத்திருக்கிறான். ‘வேலே விளங்கு கையான்’ அவன். அவனைக் கண்டால் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டாகி விடுகிறது. நோயாளிக்குக் கழுத்தில் ரப்பர் குழாயைப் பூண்டு வரும் டாக்டரைக் கண்டவுடன் நம்பிக்கை உண்டாவதைப் போன்றது அது.

உலகத்திலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருகிறவன் யமன். அவன் இருள் நிற மேனி உடையவன். அவனை ஒளியுடைய திருமேனி படைத்த முருகன் அழித்து ஒழிப்பான் என்ற எண்ணத்தால் யமன் நேரே வந்ததாகப் பாவனை பண்ணிக் கொண்டு இந்தப் பாட்டைச் சொல்கிறார்.

நம்மை அச்சுறுத்துவற்குக் காரணமாக இருப்பவன் யமன். நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் இருப்பதனால் அவன் நம்மைப் பற்ற வருகிறான். அவனிடம் அகப்படாமல் நாம் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டும்.

உயிரும் உடம்பும் ஒட்டி இருப்பதனால் ஒரு மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய காரியங்களைக் கை செய்யாவிட்டால் கை வாழ்கிறது என்று சொல்ல முடியாது. அது இருந்தும் பிணத்தின் கை போன்றதே. நம் உள்ளத்திற்குள் ஒரு நோய் உண்டு. ‘ஒரு காரியத்தைச் செய்’ என்று உள்ளே இருந்து ஒன்று சொல்கிறது. ‘அதைச் செய்யாதே’ என்று மற்றொன்றும் உள்ளே இருந்தே தடுக்கிறது. செய்கிற காரியத்தைச் செய்வதற்குத் தெம்பு இல்லாமல் செய்கிற இந்த நோய்தான் மனிதனை உருக்குலைக்கிறது. இந்த நோய் நீங்க வேண்டுமானால் தைரியம் வரவேண்டும். நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. அதை அடக்கவேண்டுமானால் இறை வனுடைய திருவுருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். நமக்காகவே அவதரித்தவன் அந்தப் பெருமான். இவைகளை எல்லாம் சொல்ல வருகிறார் அருணகிரியார்.

பால் உண்ட பாலன்

ஆண்டவன் குழந்தையாக உலகத்தில் அவதாரம் செய்தான். ஊருக்குப் பால் குடித்தான். சரவணப்பூம் பொய்கையில் கிருத்திகை மாதர் அறுவர் கொடுத்த பால் போதாமல் உமாதேவி கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவன் அவன்.

தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும்முலைப்பால் ஆராது உமைமுலைப்பால் உண்ட பாலன்,

“முருகனாகிய குழந்தையின் துணை எனக்கு இருக்கிறது. அவன் யார் தெரியுமா? பூவுலகையும், தேவருலகையும் காப்பாற்றுவதற்காகச் சிவபெருமானிடமிருந்து தோன்றிய குழந்தை. ஆறு பேரோடு ஏழாவது அன்னையிடம் பால் குடித்தவன்” என்கிறார்.

சிவபெருமானுடைய ஆறு முகங்களிலிருந்து ஆறு பொறிகளாக எழுந்து சரவணப்பூம் பொய்கையிலே ஆறு குழந்தைகளாக வளர்ந்தான். உமாதேவியின் குழந்தையாக இருந்தாலும் தனக்குப் பால் கொடுக்கும் புண்ணியம் வேறு சிலருக்கும் கிடைக்க வேண்டுமென்று அவன் திருவுள்ளம் கொண்டான்.

தாராகணம் எனும் தாய்மார் அறுவர்.

தாராகணம் – நட்சத்திரங்களின் கூட்டம். ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டத்தைக் கிருத்திகா நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஆறு நட்சத்திரங்களும் ஆறு மாதர்கள். ஏழு முனிவர்களுக்குள் வசிஷ்டர் அல்லாத மற்ற முனிவர்களுடைய கற்புடைய மனைவி களாகிய ஆறு பேர் இப்போது கிருத்திகா நட்சத்திரங்களாக இருக் கிறார்கள் என்று சொல்வார்கள். குழந்தையாகிய ஆறுமுகநாத னுக்குப் பாலூட்டி வளர்க்க வேண்டுமென்று தவம் செய்தவர்கள் அவர்கள். அவர்கள் முனிவர்களுடைய பத்தினிகளாக இருந்து பல நல்ல காரியங்களைச் செய்து அதன் பயனாக இப்போது வானில் நட்சத்திரமான ஒளிர்கிறார்கள். அந்த ஆறு பேரும் சரவணப்பூம் பொய்கையில் ஆறு குழந்தைகளின் உருவத்தில் இருந்த முருகப் பெருமானுக்குப் பால் ஊட்டினார்கள்.

பின்பு எம்பெருமாட்டியிடம் ஞானப் பாலை உண்ண வேண்டும் என்று திருவுள்ளத்தில் நினைத்தான் முருகன். ஞானமே திரு வுருவமாகிய எம்பெருமானுக்கு இறைவியினுடைய பாலை உண்ட பிறகே அருள் விளக்கம் உண்டாகும். அதுவரைக்கும் சரவணப்பூம் பொய்கையில் குழந்தையாக இருக்கும் நிலை மாத்திரம் இருந்தது. ஞானக் கனலாக விளங்கும் சிவபெரு மானிடத்தில் இருந்து ஞானப் பொறிகளாக வந்த பெருமானுக்கு அருள் ஊட்டம் இருந்தால்தான் உலகம் எல்லாம் அந்தக் குழந்தையினால் பயன் பெறும். ஆதலின் உமா தேவியினுடைய அருளும் அந்தக் குழந்தைக்கு ஏற்பட வேண்டியிருந்தது. சிவ பெருமான், ‘உன் குழந்தை சரவணப்பூம் பொய்கையில் வளர்கிறான்’ என்று சொல்ல, உமாதேவி மிக்க அன்புடன் குழந்தையைப் பார்க்க வந்தாள். ஆறு குழந்தைகளாக இருந்த கார்த்திகேயனை அவள் மிக்க ஆர்வத்துடன் தன் இரண்டு கையினாலும் எடுத்து அணைத்தாள். அணைக்கவே, ஆறு குழந்தைகளும் ஒன்றாக, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஆறுகக் கடவுள் ஆனான்.

உடனே பொற்கிண்ணத்தில் பாலைக் கறந்து அந்தப் பெருமானுக்கு அம்பிகை ஊட்டினாள். ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய அந்தப் பெருமான் கந்தன் என்றும் திரு நாமத்தோடு விளங்கலானான். தனித்தனியாகப் பிரிந்து நிற்பதனால் உலகுக்கு யாதும் பயன் இல்லை. சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தான் உலகத்துக்குப் பயன் உண்டாகும். இந்தக் சக்தியின் ஒருமைப்பாட்டைப் பராசக்தி தன்னுடைய கையினால் செய்தாள்.

வெறும் ஞானத்தினால் உலகத்திற்குப் பயன் இல்லை. அறிவு மாத்திரம் தனித்திருந்தால் இன்பம் உண்டாகாது. அருளும், அறிவும் கலந்திருந்தால்தான் உண்மையான இன்பம் உண்டாகும். அறிவினால் மாத்திரம் பார்த்தால் உலகத்தில் பேதம் தெரியும். அறிவை மறந்து அருளினால் பார்த்தால் அபேதம் தோன்றும்.

“அருளாலே எவையும்பார் என்றான் அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் கண்ட
என்னையும் கண்டினலன்; என்னேடி தோழி

என்று தாயுமானவர் பாடுவார். ஞான மயமாக நிலவிய முருகன் உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணை யினால் அறப்பெருஞ் செல்வி தன் அருளைக் கலந்து குழைத்த பாலை முருகனுக்கு ஊட்டினாள்.

இறைவனும் அம்பிகையும் சேர்ந்தால்தான் உலகம் இயங்கும். பரமசிவன் தனக்குள்ளே அம்பிகையை அடக்கிக் கொண்டிருந் தால் அவனுக்கும் இயக்கம் இல்லை; அது காரணமாக உலகமே இயங்காது.

சிவம்எனும்பொருள் ஆதி சக்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்:
அவள்பி ரிந்திடின் இயங்கு தற்குமரிதாம்

என்று சௌந்தர்ய லஹரி சொல்கிறது. முருகப் பெருமான் இறைவனுடைய அம்சமாகத் தோற்றினான். அந்தப் பெருமானுக்குப் பராசக்தியினுடைய அம்சம் கலந்தால்தான் அருள் வெள்ளம் பெருக்கெடுக்கும். எம்பெருமாட்டி அதன் பொருட்டே அந்தக் குழந்தையை நாடி வந்து பாலை ஊட்டினாள்.

தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமைமுலைப்பால் உண்ட பாலன்

என்று அருணகிரியார் பாடுகிறார். ஆராது என்றால் உண்ணாது என்று இங்கே பொருள் கொள்ளக் கூடாது. நிரம்பாது என்று பொருள்.தாராகணம் நட்சத்திரக் கூட்டமாகிய கிருத்திகை மாதர். அந்த ஆறு பேரும் தரும் முலைப்பால் குடித்து அதனால் வயிறு நிரம்பாத பெருமான் அழுதான். அவனுடைய பசி மேலோங்கியது. உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பசியோடு அழுதான். ஆறு பேரும் கொடுத்த பால் போதாமல் ஏழாமவளாக உமா தேவியாகிய பராசக்தி வந்தாள். அந்தப் பெருமாட்டி கறந்து அருத்திய பாலைக் குழந்தையாக இருந்த முருகன் உண்டான். “அந்தக் குழந்தையின் துணை எனக்கு இருக் கிறது” என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். முருகன் துணை எனக்கு இருக்கிறதென்று சும்மா சொன்னால் போதாது என்று அவனைப் பற்றித் தாம் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பதைக் காட்டுவதற்காக இப்படிச் சொன்னார். யமனைப் பார்த்து,

வாராது அகல் அந்தகா!

என்று மிடுக்காகப் பேசுகிறார். அந்தகன் என்றால் யமன் என்றும், குருடன் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. “நான் முருகனுடைய அருளைப் பெற்றிருக்கிறேன் என்பதை நீ கண்டு கொள் ளாமல் குருடனாக இருக்கிறாயே” என்ற குறிப்பும் இதில் இருக்கிறது. “நீ எப்போதும் பலபல இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறாய். போகிற போக்கில் என்னை நினைந்து என்னிடத்தில் வந்து விடாதே. சற்றே அகன்று செல்வாயாக. ‘இவன் என்ன செய்வான்? போய்த்தான் பார்க்கலாமே!’ என்று அசட்டுத் தைரியத்தில் என்னிடம் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நீ எல்லா உடம்பிலிருந்தும் உயிர்களை வாங்குகிறவன் என்று புகழ் பெற்றிருக்கிறாய். அதனால் செருக்கும் அடைந்திருக்கிறாய். ஆனால் இங்கே வந்தாயானால் உன் உயிரை நான் வாங்கி விடுவேன். இது நினைவு இருக்கட்டும்” என்று அறை கூவுகிறார். வாராது அகல் அந்தகா,வந்தபோது உயிர் வாங்குவனே.

பாவனை

இவ்வாறு வீறு பேசுவதற்கு அருணகிரியாரிடம் என்ன பலம் இருக்கிறது? ஏதாவது ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கிறாரா? அவர் கையில் எந்தப் படையும் இல்லை. எதிரே மாடு வருகிற தென்றால் கையில் உள்ள குச்சியால் அடித்து விடலாம். சித்திரத்தில் உள்ள மாட்டை அடிக்க வேண்டுமானால் கைக் குச்சி பயன்படாது. அந்தச் சித்திரத்திலேயே மாட்டை அடிப்பது போல ஒரு குச்சியையும், ஆளையும் எழுத வேண்டும். அதற்காகக் கையில் குச்சியை எடுக்க வேண்டியதில்லை; வண்ணம் தீட்டுகிற தூரிகைதான் வேண்டும்.

யமன் எப்படி இருக்கிறான்? நம் கண் முன்னால் உருவத்தோடு வந்து நிற்கவில்லை. யமன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவன் இருப்பதாக ஒரு பாவனை நிலவுகிறது. உயிரைப் போக்குகின்ற ஒரு சக்திக்கு உருக் கொடுத்துப் பருப்பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள். குதிரையின் மேல் வரும் மனிதனைப் போலக் கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி எருமைக் கடாவின் மேல் அவன் வருவது இல்லை. யமன் என்ற கற்பனை, அவன் நம்மைப் பாசம் போட்டு இழுத்துச் செல்வான் என்ற பாவனை எல்லாம் மனத் தளவில் நிற்கின்றன. அந்தப் பாவனைக்கு மாற்று மற்றொரு பாவனைதான்.

யம பயத்தைப் போக்குவதற்குரிய படைக்கலங்களை அருணகிரியார் கையிலே எடுத்துக் கொள்ளவில்லை; மனத்திலே நினைக்கிறார். இந்த நினைப்பு இடைவிடாது இருப்பதனால் அவருக்குத் தைரியம் உண்டாகிறது. முருகப் பெருமானுடைய திருவுருவத் தியானந்தான் அது. அந்தப் பலத்தினால் அறை கூவுகிறார்.

படைக்கலங்கள்

பாசம், கதை முதலியனவற்றை எடுத்துக் கொண்டு வருவதாக யமனைப் பற்றிய நினைப்பு வரும்போது அதனை மாற்றுவதற்குரிய சிறந்த வீரப்பெருமானாகிய ஆண்டவனை நினைக்கிறார். ஆண்டவன் திருக்கரங்களிலுள்ள படைக்கலங்களை நினைக்கிறார்.

பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே.

‘என்னுடைய மனமாகிய பெட்டகத்தில் இருக்கும் ஆயுதந் கள் எவை தெரியுமா? நான் எப்போதும் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அவனுடைய ஒவ்வோர் அங்கமும் என் உள்ளத்தில் நிற்கிறது அவன் கையில் உள்ள ஆயுதங்களும் என் அகக்கண்ணில் நிற்கின்றன. அவன் தன் இடையில் உடை வாளைச் செருகி இருக்கிறான். அது எனக்குப் பலமாக இருக்கிறது. அவன் கையில் சிறிய வாளை வைத்திருக்கிறான். அதுவும் எனக்குத் துணையாக வரும். இந்த இரண்டுமே போதும். இந்த இரண்டிலும் தீராத பெரும் பகை வந்ததானாலும் அது எவ்வளவு பெரிய தடையாக இருந்தாலும் அழித்து ஒழிக்கின்ற பெரிய படையாகிய வேல் அவனிடம் இருக்கிறது. பெரிய பெரிய அசுரர்களை அடியோடு அழித்து வென்ற வீரவேல் அது. சீராவும், சிறுவாளும், வேலும் எனக்குத் துணையாக என் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண் டிருக்கும்போது, நீ எந்தப் படையோடு என்னிடத்தில் வந்தாலும் உய்யமாட்டாய். நீ பிழைத்திருக்க வேண்டுமானால் என் பக்கத் தில் வராமல் அகன்று செல்” என்கிறார். அருணகிரியார்.

காலனுக்குக் காலனாகிய ஆண்டவன் தன்னுடைய திருவடி யினால் காலனை உதைத்து அழித்துக் கொன்றான் என்று கதை இருக்கிறது.மார்க்கண்டேயர் திருக்கடவூரில் சிவபெருமானைச் சரணடைந்தார். அப்போது அந்தப் பெருமான் காலனுக்குக் காலனாக எழுந்து நின்று தன் காலால் உதைத்துக் கொன்றான் யமனை. அருணகிரியாரோ மார்க்கண்டேயர் பட்ட பாட்டைப் படவில்லை. அவருக்கு மிக எளிதில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. முருகப் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள படைகளை உறுதியாக எண்ணிக் கொண்டால் போதும், அதுவே யம பயத்தைப் போக்குவதற்குரிய பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பேசுகின்றார்.

முருகப் பெருமானைத் தியானம் பண்ணும்போது அவனுடைய திருவுருவத்திலுள்ள பகுதிகளை எல்லாம் ஆர அமர உள்ளத்திலே எழுதிக் கொள்ள வேண்டும். அப்படி எழுதினால் ஒவ்வோர் அங்கமும் ஒவ்வொரு வகையில் நம்முடைய வாழ்நாளில் நலனைத் தரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இறைவனுடைய படைக்கலங்களை அவனுடைய திருக்கரங்களோடு யானம் பண்ணினால் நமக்கு வருகின்ற எல்லாவிதமான பயங்களும் அடியோடு மாறி விடும். ஆதலின் இந்தப் பாட்டில் வடிவேல் பெருமானுடைய ஆயுதங்கள் மூன்றை நினைப்பூட்டுகிறார் அருணகிரியார்.

படைக்கலங்களின் உண்மை

முருகப்பெருமான் கரத்திலுள்ள படைக் கலங்கள் உலகத்தில் உள்ள அழிப்புக் கருவிகளாகிய படைக்கலங்களைப் போன்றவை அல்ல. அவை ஞானத்தின் சொரூபம். ஞானசக்தியே வடிவேலாக இருக்கிறது. அதன் அம்சங்களாகவே மற்ற ஆயுதங்களும் இருக் கின்றன. அஞ்ஞானம், மறதி, மரணம், இருள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் கொடுத்து யமன் என்று சொல்கிறோம். இவற்றையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு முருகப் பெருமானுடைய படைக்கலங்கள் இருக்கின்றன. அவை இருளை ஒட்டிப் பளபளக்கும். அசுரர்களை அழித்துத் தேவர்களை வாழ வைக்கும். அவித்தையை நீக்கி ஞான ஒளி தரும். ஆசையைப் போக்கித் தைரியத்தை ஊட்டும்.

மிகவும் வலிமை உள்ளவன் யமன். அவனை ஓட்டுவதற்கு நம்மிடத்தில் படை இல்லாவிட்டாலும் இறைவனைத் தியானம் செய்து, அவன் திருக்கரத்தில் உள்ள படைகளைச் சிந்தனையில் கொண்டால் அந்த அச்சம் ஓடி விடும். காலனால் துன்பம் வருமே என்ற அச்சமே நமது துன்பத்துக்கு அடிப்படை. எங்கே அச்சம் இல்லையோ அங்கே காலனுக்கு வேலை இல்லை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு, அச்சம் தோன்றும் இடமாகிய உள்ளத்தில் தைரியம் தோன்றச் செய்கின்ற தியானத்தை உறுதிப் படுத்தவேண்டும். அதற்குரிய பாடல் இது.

தாரா கணம்எனும் தாய்மார்
அறுவர் தரும்முலைப்பால்
ஆராதுமைமுலைப் பால்உண்ட
பாலன் அரையில் கட்டும்
சீராவும் கையில் சிறுவாளும்
வேலும்என் சிந்தையவே;
வாரா தகல் அந்த கா!வந்த
போதுயிர் வாங்குவனே.

(யமனே! நட்சத்திரக் கூட்டம் என்று சொல்லும் கிருத்திகை மாதர்களாகிய அன்னைமார் அறுவர் தரும் முலைப்பால் போதாமல், உமாதேவியின் திருமுலைப்பாலையும் உண்ட குழந்தையாகிய முருகப் பெருமான் தன் இடையிலே கட்டும் உடையவாளும் கையில் வைத் திருக்கும் சிறிய வாளும் அவனுடைய வேலாயுதமும் என் சிந்தையிலே உள்ளன; நீ என்னிடம் வாராமல் சேய்மையிலே அகன்று செல்வாயாக! அவ்வாறு இன்றி என்பால் வந்தால் அப்போது அந்தப் படைக் கலங்களின் வலிமையால் உன் உயிரை வாங்குவேன்.

தாரா – நட்சத்திரம். கணம் – இனம்; இங்கே கூட்டம். அறுவர் – கிருத்திகைப் பெண்கள். ஆராது – நிரம்பாமல். அரையில் – இடையில். சீரா – உடைவாள். என் சிந்ததையில் இருக்கின்றன; ஆதலின் அவற்றால் உன் உயிரை வாங்குவேன் என்றபடி.

மனத்தினால் ஒருமைப்பாட்டுடன் செய்யும் தியானம் மரண பயத்தைப் போக்கி உறுதியைப் பயக்கும் என்பது கருத்து.)

இந்த கந்தர் அலங்காரத்தில் 81 -ஆம் பாடல்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !