பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

மயக்கத்துக்கு முறிவு


காமினி காஞ்சனம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் அடிக்கடி, ‘காமினி காஞ்சனத் னாலேயே இறைவனது திருவருள் நம்மைச் சார முடியாது இருக்கிறது’ என்று வற்புறுத்திச் சொல்வார். அவர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மக்கள் மாதர் மயலினாலும், பணத்தாசையினாலும் உயர்ந்த கொள்கைகளைப் பறி கொடுத்து விட்டுத் தீய ஒழுக்கத்தைச் சார்ந்து மயங்குகிறார்கள். எல்லா வகையான இன்பங்களும் பொருளினால் வரும் என்று, எந்தப் பருவத்தினரானாலும் அதற்காக ஏங்கி நிற்கிறார்கள். உடம்பில் பலமும், அறிவில் கிளர்ச்சியும், முயற்சி செய்யும் ஊக்கமும் உடையவர்கள் கூடப் பெண் மயலில் சிக்கி வாழ்நாளைச் சோர விடுகிறார்கள். ஆண்டவன் மனிதனைக் கரசரணாதி அவயவங்களைக் கொண்டு நல்ல கதி அடைய வேண்டுமென்பதற்காகப் படைத்திருக்கிறான். இறைவன் தந்த கருவிகளைப் பணத்தைச் சம்பாதிப்பதிலும், பெண் போகத்தை அடைவதிலுமே செலவழித்து விட்டு, வாழ்நாளை வீணாக்குகின்ற மக்களைப் பார்த்து இறைவன் திருவருளைப் பெற்ற பெருமக்கள் இரங்குவது இயல்பு.

அருணகிரியார் காலநிலை

அருணகிரி முனிவர் காமத்தினால் வருகின்ற துன்பங்களை நன்றாக உணர்ந்தவர். அவர் காலத்தில் பலர் சிற்றரசர்களாக வாழ்ந்தார்கள். ஜமீன்தார்கள் என்று பிற்காலத்தில் நாம் சொல்கின்றவர்களைப் போலவே அவர்கள் வாழ்ந்தார்கள்.

பணம் வந்துவிட்டால் பலபல போகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்று அறிவுத் தெளிவு இல்லாதவர்களுக்குத் தோன்றும். போகங்களுக்குள்ளேயே மிகவும் உயர்ந்தது பெண் போகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இன்றும் பணத்தைச் சம்பாதிக்கிறவர்கள் அதனால் பெண் மயலை வளர்த்து அந்தப் போகத்தை அடைவதற்கே முயன்று கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். வெவ்வேறு வகையில் கலை என்றும், தொழில் என்றும், நாடகர் என்றும் சொல்லிப் பலர் காமத்தைப் பெருக்கி வருகிறார்கள்.

இப்படிக் காமம் வளர்ச்சி அடைவதை அருணகிரிநாதர் தம்முடைய காலத்திலேயே கண்டார். அதனால் அதைப் பற்றி அடிக்கடி பலவகையாகச் சொல்கிறார்.

பொதுமகளிர் செயல்

மயலூட்டும் பொதுமகளிர் தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடவர்களைத் தம் மயலில் சிக்க வைக்கிறார்கள். இந்தப் பொது மகளிருடைய அழகையும், அவர்களது வஞ்சகச் செயல்களையும் திருப்புகழில் அருணகிரிநாதர் பற்பல விதமாக வருணித்திருக்கிறார். அவரது சொந்த அநுபவம் அது என்று சொல்லக் கூடாது- இதனை நான் பலமுறையும் சொல்லியிருக்கிறேன்.

டாக்டரும் நோயாளியும்

ஒரு டாக்டர் பல நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தும், அறுவை வைத்தியம் செய்தும் நோயைத் தீர்க்கிறார். அவர் தமக்கு என்று ஒரு மாளிகையை அமைத்துக் கொண்டிருக்கிறார். நோயாளிகளுக்கு என்று பெரிய ஆஸ்பத்திரி ஒன்றும் கட்டியிருக்கிறார். பலவகையான நோயாளிகள் அந்த ஆஸ்பத்திரியில் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர் தம்முடைய நேரத்தில் பெரும்பான்மையும் ஆஸ்பத்திரியில்தான் செலவிடுகிறார். ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் நோயாளிகள் என்று நமக்குத் தெரியும். ஆனால் நோயாளிகளுக்கு நலம் செய்வதற்காக டாக்டரும் அங்கே இருப்பார். மாளிகையில் அங்கே உள்ள வசதிகளை அனுபவித்துச் செல்வரைப் போல வாழ்பவரும் அவரே. மாளிகையில் இருக்கும் போது அவர் கையில் அழுக்கு இராது. மேலே ரப்பர் குழாய் இராது. உல்லாசமாக உணவு உண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது யாரோ பெரிய கனவான் என்று அவர் தோற்றுவார்.

ஆனால் அவர் நோயாளிகளுக்கிடையே இருந்து அவர்களுடைய புண்களைக் கழுவுவதிலும், நோய்க்கு மருந்து கொடுப்பதிலும் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தால் அவருடைய நிலையே வேறாக இருக்கும். மாளிகையில் அவரது வாழ்வைப் பாராத ஒருவன் நோயாளிகளுக்கு நடுவில் அவரைப் பார்த்தால் அவர் நிலைக்கு வருந்தி இரங்குவான்.

அருணகிரி முனிவர் ஆண்டவன் திருவருள் இன்பத்தைப் பெறுகிற வாழ்வில், ஆண்டவனது இன்ப மாளிகையில் வாழ்கின்ற நிலையிலேயே இராமல், உலகமாகிய ஆஸ்பத்திரியில் நடமாடுகின்ற நோயாளிகளுக்கு நலம் செய்ய வருகிறார். தம்முடைய சொல் மருந்தினால் சுகம் அடையும்படி செய்ய வேண்டு மென்ற கருணையினால் இரங்கி இந்த நிலையில் இருக்கிறார். அவர்களிடத்தில் வந்து அவர்களுடைய நோயைத் தம்முடைய நோயாக ஏற்றுக் கொண்டு பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

மனிதர்களுடைய குற்றங்கள் பலவகையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாகப் பலபல துன்பங்களுக்குக் காரணமாக இருப்பது காமம். அதனால் அதைப் பற்றி அடிக்கடி சொல்வது அருணகிரியாருடைய இயல்பு. இந்தப் பாடலில் காமத்தினால் உண்டாகும் தீமையைச் சொல்ல வருகிறார். தாமே காமத்தினால் துன்புறுவது போல வைத்து, அதை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தம் நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்வது போல இந்தப் பாட்டை அமைக்கிறார்.

மகளிர் அலங்காரம்

நம்முடைய நாட்டில் பெண்டிர் தம்மை அளவுக்கு மீறி அலங்காரம் செய்து கொள்வதில்லை. அப்படிச் செய்து கொண்டால் வீட்டுக்குள்ளே இருந்து தம் கணவன் மார்களின் கண்ணில் படுவதற்காக மாத்திரம் செய்து கொள்வார்கள். தாம் செய்து கொள்ளும் அலங்காரத்தைப் பிறர் காண வேண்டுமென்றும், தம் அழகைப் பிறர் புகழ வேண்டுமென்றும் நினைப்பது இந்த நாட்டுப் பண்புக்கு நேர் விரோதமானது. மேல் நாட்டிலோ பிறர் காண அலங்காரம் செய்து கொள்வது இயல்பு.ஒருவருடைய மனைவியை அவருடைய முன்னிலையில் பிறன் ஒருவன், ‘சிறந்த அழகி’ என்று புகழ்ந்தால் அவர்களுக்கு மிகவும் உவகை உண்டாகும். அப்படிப் புகழ்வது நாகரிகமுங் கூட. ஆனால் இந்த நாட்டிலோ கணவன் கூடத் தன் மனைவியை வெளிப்படையாகப் புகழ்வது இல்லை.

தம் அழகைப் பிறர் கண்களில் காட்டவேண்டுமென்ற எண்ணமே இந்த நாட்டு மகளிருக்குத் தோன்றாது. ஆனால் பிறரை மயக்கவேண்டுமென்ற எண்ணமுடைய, போகத்தை விலைக்கு விற்கின்ற மடத்தையர்கள் தம்முடைய இயற்கை அழகையும் செயற்கை அழகையும் விளம்பரப்படுத்தி ஆடவர் கண்களில் படும்படியாக நிற்பார்கள்.

கண்வலைப்பட்டு மயங்குதல்

உடம்பிலுள்ள உறுப்புகளுக்குள் மிகச் சிறந்தது கண். அந்தக் கண்ணால் வெட்டித் தம்முடைய பார்வையினாலே ஆடவர்களை மயக்குவது பொதுமகளிருடைய இயல்பு. தம் கண்ணினாலே மயக்கி, தம் பருவத்தைக் காட்டும் அங்கத்தின் அழகைக் காட்டிக் காளையர்களை இழுக்கின்ற கலையில் அவர்கள் வல்லவர்கள். அவர்களுடைய கண் வலையில் சிக்குகின்ற ஆடவர்கள் அவர்கள் மார்பகத்தைக் கண்டு மயங்கி, அவர்களோடு சேர வேண்டுமென்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் முறுக முறுக அவர்களுக்குக் காமம் வளருகிறது. காமம் வளர வளர அவர்களால் வருகின்ற இன்பத்தைப் பெற முயல்கிறார்கள். ஒருகால் பெற்றால் மீட்டும் மீட்டும் பெறவேண்டுமென்று ஏங்குகிறார்கள். ஒருகால் அடைந்த அளவில் அந்த இன்பம் நிறைவு தருவது இல்லை. பொறிகளால் அநுபவிக்கும் இன்பம் யாவுமே இத்தகையனவே.

நிறைவு தராப் பொறி இன்பம்

எத்தனை காலம் வாழ்த்தாலும் இப்பொறிகளினால் பெறுகின்ற இன்பத்தை நிறைவாகப் பெற்றோம் என்று சொல்வார் யாரும் இல்லை. இறக்கும் மனிதன் மனத்திலே குறையோடு மாய்கிறான். கருணை நிரம்பிய ஆண்டவன், ‘நம்முடைய குழந்தையாகிய இவன் இன்னும் பொறிபுலன்களின் இன்பத்தில் ஆசை வைத்திருக்கிறான். இவன் ஆசை நிறை வேறவில்லை. மறுபடியும் பிறந்து பொறிகளால் வரும் இன்பத்தை நுகரட்டும்’ என்று எண்ணி மீண்டும் பிறக்கச் செய்கிறான். நம்முடைய பிறப்புக்குக் காரணமாய் இருப்பது நம்முடைய ஆசைதான். நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பாகவே அடுத்தடுத்துப் பிறவி வருகிறது. ஒரு பிறவியில் ஆசைப்பட்ட இன்பத்தை மறுபிறவியில் பெற்றாலும் அதோடு நமக்கு நிறைவு வருகிறது இல்லை. பிறவி வரவர, ஆசைகளும் வளர்ந்து, ஆசை வளரவளர, பிறவியும் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒன்றுக் கொன்று தொடர்புடைய ஆசையும், பிறவியும் எந்தக் காலத்திலும் நிற்பதில்லை.

ஆகவே, கண்வலை வீசுகின்ற பெண்டிருடைய இன்பத்தைப் பெற்றவர்கள் அதனால் நிறைவு பெறாமல் மீட்டும் மீட்டும் அதனைப் பெறவேண்டுமென்று எண்ணுகிறார்கள். அந்த ஏக்கம் அதிகமாக அதிகமாக, மயங்குகிறார்கள். இந்த நிலையை முதலில் அருணகிரியார் சொல்ல வருகிறார். தம்முடைய கண்ணைச் சேல் மீனைப் போல உருட்டி மயக்குகிறார்கள் பொது மகளிர்.

சேல்வாங்கு கண்ணியர்.

வாங்கு என்பது உவம வாசகம். சேல் போன்ற கண்ணை உடையவர் என்று பொருள். எத்தனையோ சேல்களை விலைக்கு வாங்கும் பேரழகுடைய கண்களை உடையவர்கள் என்று சொல்லலாம். பொதுவாக மகளிருடைய கண்களுக்குச் சேல் மீனை உவமமாகச் சொல்வது வழக்கம். இங்கே, பொது மகளிருடைய கண்கள் ஆயிரம் சேல்களினுடைய அழகையும் மிஞ்சி அவற்றை எல்லாம் விலைக்கு வாங்கும் கிளர்ச்சியை உடையது என்கிறார். அந்தச் சேலுக்கும் இந்தச் சேலுக்கும் வேறுபாடு உண்டு. கடலில் உள்ள சேல்மீன்கள் வலையில் படும். ஆனால் இந்தப் பொது மகளிருடைய கண்ணாகிய சேல் மீனோ தானே வலை வீசும். அந்த வலையில் காளையர்கள் படுவார்கள்.

மால்வாங்குதல்

சேலைப் போன்ற கண்ணை உடைய பொது மகளிர், பாதையிலே நான்கு பேர் காணச் செல்லும்போது, அவருடைய கண் அழகை முதலில் கண்டு, பின்பு மேனியில் கண்ணை ஓச்சுகிறார். கள் காளையர்கள். பருவப் பூரிப்பை மார்பகத்தில் காணக் கண் செல்கிறது. அப்போது உள்ளம் சோர்ந்து அவர்களை அணைய வேண்டுமென்ற எண்ணம் முதிர்கிறது.

சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி.

வண்ணம் என்பது இங்கே அழகைக் குறிக்கும். அவர்கள் பருவ மடந்தையர்கள் என்பதை இந்த வருணனை காட்டுகிறது. அவர்களை அணைய எண்ணுகிறார்கள் காளையர்கள். அந்த எண்ணம் மயக்கமாக, மயலாக, காமமாக வளர்கிறது. அதை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

சேர எண்ணி மால் வாங்கி,

வாங்குதல் என்பது நம்மிடத்தில் உள்ள பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறுதல். இங்கும். அறிவுடைய ஆடவர் தம் அறிவைக் கொடுத்து மாலை வாங்கிக் கொள்கின் றனர். தாம் செய்ய வேண்டிய முயற்சியில் ஈடுபடாமல் அந்த முயற்சியையும் பறிபோக விட்டு, தம்முடைய தொழில் ஆற்றலை நழுவவிட்டு, இது தக்கது, இது தகாதது என்கிற ஆராய்ச்சியை யும் அர்ப்பணம் செய்துவிட்டு, மாலை வாங்கிக் கொள்கிறார்கள். உடல் பொருள் ஆவி என்ற மூன்றையுமே கொடுத்து மாலை வாங்கிக் கொள்கிறார்கள் என்றுகூடச் சொல்லி விடலாம். வீதியிலே தம் அழகையும், போகத்தையும் விற்க வருகின்ற மடந்தையர்களிடம் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து விட்டுக் காமத்தைக் காளையர்கள் வாங்கிக் கொள்கிறார்களாம்.

ஏங்கி மயங்குதல்

அப்படி வாங்கிக் கொள்வதனாலே அவர்களுக்கு ஏதேனும் நன்மை உண்டாகிறதா? கண்ணினாலே அவர்களைக் கண்டு, அவர்களைச் சேரவேண்டுமென்று மனத்தினாலே எண்ணி, பின்பு அந்த எண்ணம் முறுகி மாலாக நிற்க, அதன் பயனாக ஏக்கம் உண்டாகிறது. இப்படி ஏங்குகிறவர்கள், முயற்சி செய்து தம்மிடம் உள்ள பணத்தைக் கொடுத்து அவர்களை அணைந்து விட்டால், மீண்டும் அவர்களோடு சேர வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. எப்போதும் இடைவிடாமல் அவர்களோடு இருப்பதற்குப் பண நிலை இடம் கொடுப்பதில்லை. அதனால் ஒருகால் இன்புற்றாலும் அதனால் நிறைவு பெறாமல் மீட்டும் மீட்டும் பெறவேண்டுமென்று எண்ணுகிறார்கள். இதனால் அவர் களிடம் அவ்வப்போது இருக்கும் சிறிதளவு தெளிவுகூடப் போய்விடுகிறது.

மால்வாங்கி ஏங்கி மயங்காமல்.

அப்போது தாம் அடையவேண்டுமென்று ஆசைப்பட்ட இன்பத்தைப் பெறாமல் இருப்பது ஒன்று. இது நல்லது, இது தீயது என்று எண்ணுகிற அறிவு குழம்பிப் போவது ஒன்று. இந்த இரண்டும் அல்லலை மேலும் உண்டாக்குகின்றன. நிறைவற்ற தன்மையும், குழப்பமும் சேர்ந்து மயக்கத்தை உண்டாக்குகின்றன. நம்முடைய செயலைக் கண்டு உலகத்தார் இழிப்பார்களே என்பதை எண்ணாமல், நம்முடைய வாழ்நாளில் நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதையும் சீர் தூக்கிப் பாராமல் பித்துப் பிடித்தவர்களைப் போல மயங்கி நிற்கிறார்கள். ”என் நெஞ்சமே, நீ இப்படி மயங்காதே” என்று உபதேசம் செய்ய வருகிறார் அருணகிரியார்.

மயக்கம் போக்க வழி

இந்த மயக்கத்தைப் போக்குவதற்கு வழி என்ன? சேல் வாங்கு கண்ணை உடைய உருவத்தைக் கண்டு, அதிலிருந்து தொடங்கிய இந்தத் திருவிளையாடல் நிற்க வேண்டுமென்றால் அதற்கு முறிவாக வேறு ஒன்றைக் காணவேண்டும். கண்டு கருத வேண்டும். அந்தப் புரிகாரத்தைச் சொல்ல வருகிறார். ”முருகப் பெருமானுடைய திருவடியைப் பார்த்துத் தியானம் செய்” என்பது அவர் சொல்லும் பரிகாரம்.

பூங்கழல் நோக்கு நெஞ்சே.

‘தாமரை போன்ற, அழகுடைய கழலை அணிந்த முருகப் பெருமானுடைய பாதத்தைத் தியானம் பண்ணு நெஞ்சமே’ என்ற உபதேசிக்கிறார். நோக்கு என்பது இங்கே தியானம் பண்ணு என்று பொருளை உடையது.

முருகப் பெருமானைப் பற்றிப் பின் அடிகளில் சொல்கிறார். முருகப் பெருமான் இந்திரனுக்கு உபகாரம் செய்தவன்.

இந்திரன் நிலை

இந்திரபோகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ளவர்களுடைய பெரும் போகங்கள் எல்லாம் இந்திர போகத்திற்கு ஈடாகா. இந்திரன் தேவர்களுக்குத் தலைவன். புண்ணியத்தின் பயனாக இன்பத்தை அநுபவிக்கின்றவன். பொதுவாகத் தேவர்களே அந்த இயல்பு உடையவர்கள். அவர்களுக்குத் தலைவன் என்றால் அவனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவன் எப்போதும் ஐராவதத்தில் செல்கிறவன். இந்தக் காலத்தில் பெரிய பணக்காரர்கள் நான்கைந்து காராவது வைத்திருப்பார்கள். பழங் காலத்தில் சிறந்த அரசர்கள் தங்களுடைய செல்வத்திற்கு அறிகுறியாகத் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் வைத்திருப்பார்கள். யானை இருப்பது பெரிய செல்வத்திற்கு அடையாளம். ‘கஜாந்த ஐச்வர்யம்” என்று சொல்வார்கள்.

ஐராவதம்

இந்திரனோ வேறு யாருக்கும் இல்லாத பெரிய யானையை உடையவனாக இருக்கிறான். அந்த யானைக்கு நான்கு கொம்பு. மற்ற யானைகள் கரிய நிறம் உடையனவாக இருக்க, அவன் யானையோ வெள்ளை நிறம் உடையது. சாமான்ய வெள்ளை நிறம் அன்று; பளபளக்கும் வெள்ளி போன்ற வெள்ளை நிறம். அது நடந்து வருவதைப் பார்த்தால் வெள்ளி மலையே கால் படைத்து நடந்து வருகிறதோ என்று தோன்றும். அதன்மேலே இந்திரன் அமர்ந்திருப்பான். தேவ ராஜனுக்குத் தான் வாகனம் என்ற மிடுக்கினாலே அது தன் காலை வாங்கி நடக்கும்; இறுமாப்போடு நிற்கும். இந்திரனுடைய போகத்தையும், செல்வச் சிறப்பையும், பதவியையும், பெருமையையும் அளவிட்டுச் சொல்லவொண்ணாது. அவனுடைய மனைவிக்கு எவ்வளவு பெருமை இருக்கும்! அவள்தான் இந்திராணி.

வெள்ளி மலை எனவே
கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி.

இந்திரனும் சூரனும்

தன்னுடைய இந்திர லோகத்தில் தனக்கென்றே அமைந்த ஐராவதம், காமதேனு, கற்பகம், உச்சைசிரவம்,சிந்தாமணி முதலிய பலவகை அங்கங்களையும் குவித்துக் கொண்டு போகத்தில் மூழ்கி இருந்த இந்திரன் இறைவனையே மறந்துவிட்டான். அவனுக்கு அறிவு கொளுத்த வேண்டும் என்று ஆண்டவன் எண்ணிச் சூரபன்மன் என்ற அசுரனைத் தோற்றுவித்தான். அவன் சர்வ லோகங்களையும் தன் ஆளுகைக்குள் அடக்கி, சர்வப் பிரபஞ்சத்தையும் தானே தனி மன்னனாக ஆளவேண்டுமென்று ஆசைப்பட்டான். அவன் ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களுக்கும் அறுபத்தாறு கோடி அசுரர்களுக்கும் தலைவனாக இருந்தான். இந்திரனோ தேவலோகத்திற்கு மாத்திரம் தலைவன்; முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு மட்டும் அரசன். தேவர்களைப் போல இரட்டிப்பு மடங்கினர் அசுரர்கள்.

இந்திராணியின் நிலை

அந்த அசுரர்களுக்குத் தலைவனாகிய சூரன் அமராவதிப் பட்டணத்தின் மேல் படையெடுத்து இந்திரனை அந்த நகரத்திலிருந்தே ஓட்டி, அவனுடைய மகனைச் சிறையில் அடைத்தான். இந்திரன் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தான். அவன் மனைவி இந்திராணி யாரும் அறியாமல் மேரு மலையில் மறைந்திருந்தாள். எந்தச் சமயத்தில் இந்திரன் உயிர்விடுவானோ என்று அவள் கழுத்தில் கட்டியிருந்த கயிறு ஊசலாடிக் கொண் டிருந்தது. இந்திரன் வச்சிராயுதத்தைக் கையில் வைத்திருந்தாலும் சூரனுக்கு முன்னால் அந்தப் பெரும்படை பயன் அற்று ஒழிந்தது. இந்திரன் பிழைத்தால்தான் இந்திராணியினுடைய மங்கல வாழ்வு நிலைத்து நிற்கும்; அவள் கழுத்தில் நூல் நிற்கும். இந்திரன் எத்தனையோ படைக்கலத்தைக் கொண்டிருந்தாலும், பேராற்றல் உடையவனாக இருந்தாலும், அமுதத்தை விருந்தாக நுகர்ந்திருந்தாலும் தனக்கு வந்த நாசத்தைப் போக்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாதவன் ஆகிவிட்டான். இந்திராணியின் திருமாங்கல்ய நூல் என்றைக்கு அறுமோ என்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த மாங்கல்ய நூலைப் காப்பாற்றுவதற்கு இந்திரனுக்கு ஆற்றல் இல்லை; அவனது வச்சிரப் படைக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் அந்த மாங்கல்ய நூலை இரும்பு நூலாக ஆக்கி அது அவள் கழுத்தில் இருந்து கழியாத வண்ணம், சூரன் அந்த நூலை வாங்காத வண்ணம், பாதுகாத்தவன் முருகப் பெருமான். சூர பன்மனை அழித்து, இந்திரன் வாழ்வு பெறும்படி செய்து, இந்திராணிக்கும் மாங்கல்யக் கயிறு நிற்கும்படி செய்தான். அவன் தன் திருக்கையில் உள்ள வேலாயுதத்தை வாங்கிக் சூரன் மேலே விட்டான். அவன் வேலை வாங்கியிராவிட்டால் இந்திராணி அமங்கலியாகியிருப்பாள்; அவள் தன் கழுத்தில் கட்டியிருந்த நூலை வாங்கியிருப்பாள். அவள் நூலை வாங்காமல் இருந்ததற்குக் காரணம் முருகன் வேலை வாங்கியதுதான். இறைவன் கையில் இருந்த வேல் தன்னுடைய வீரத்தால் இந்திராணியின் கழுத்தில் இருந்த நூலைக் காப்பாற்றியது. எல்லாவிதமான போகங்களையும் அடைந்தும் இந்திராணியின் கழுத்தில் கட்டிய நூலைக் காப்பாற்றும் ஆற்றல் இல்லாதவனாக இந்திரன் இருந்தான். அத்தகைய இந்திரனின் சோர்வை அகற்றி, வலியின்மையை மாற்றி, பாதுகாத்தவன் முருகப் பெருமான். பெரும் போகத்தில் வாழ்ந்த இந்திரனே துன்புற்றான் என்றால், சேல்வாங்கு கண்ணியர் மயலில் ஆழ்ந்து, இருக்கிற அறிவையும் பறிபோகவிட்டு மயங்கிக் கிடக்கிற உனக்கு என்ன நன்மை உண்டாகப் போகிறது? அன்று வேலை வாங்கின பெருமானுடைய தாமரை போன்ற திருவடியை நினைத்து அன்பு செய்வாயாக” என்று நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்கிறார்.

மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டும் நூல்வாங்கி டாது அன்று வேல்வாங்கி
பூங்கழல் நோக்கு நெஞ்சே!

நோக்கும் காலம்

வேல்வாங்கி என்பதற்கு வேலை வாங்கினவன் என்று பொருள். அன்று என்பது, பழங்காலத்தில் நடந்த கதையைச் சுட்டியது. அதைப் பண்டறி சுட்டு என்பார்கள். முருகப் பெருமானுடைய கழலை நோக்க வேண்டும். சேல்வாங்கு கண்ணியரிடத்தில் சேருவதற்கு முன்னாலே நோக்கலாம். அப்படி நோக்கினால் தெளிவு பெறலாம். அவர்களைப் பார்த்த பிறகும் கழலைப் பார்க்கலாம். அப்போது பயோதரம் சேருகின்ற எண்ணம் இல்லாமல் இருக்கும். அப்படிச் சேர எண்ணிய பிற்பாடும் பார்க்கலாம். அப்போதும் அந்த நினைவு மால் வாங்காத நிலையை நமக்குத் தரும். மயல் உள்ளத்தில் தோன்றிய பிறகும் வேல்வாங்கி பூங்கழல் நோக்கலாம். அப்போது உள்ளத்தில் ஏக்கம் வராமல் இருக்கும். பயோதரம் சேர எண்ணி, மால் வாங்கி, ஏங்கிய பிறகும் பார்க்க வாய்ப்பு உண்டு. அந்தச் சமயத்தில் பார்த்தாலும் மயக்கம் இல்லாமல் இருக்கலாம். மயக்கம் அடைந்த பிற்பாடும் நோக்கலாம். அப்போது தெளிவு உண்டாகும். ஆகவே எந்த நிலையானாலும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே கையில் வேலையும், காலில் கழலையும் கொண்டிருக்கிறான் என்று சொல்வாரைப் போல,

வேல்வாங்கி பூங்கழல்

என்றார்

சேல்வாங்கு கண்ணியர் வண்ணப்
பயோதரம் சேரஎண்ணி
மால்வாங்கி ஏங்கி மயங்காமல்
வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்கும் களிற்றான்
கிழத்தி கழுத்தில்கட்டும்
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி
பூங்கழல் நோக்குநெஞ்சே.

(நெஞ்சமே! சேல்மீனை வெல்லும் கண்ணையுடைய மகளிருடைய அழகிய நகிலை அணைய எண்ணிக் காமத்தைப் பெற்று ஏக்கம் அடைந்து மயங்காமல், வெள்ளிமலை என்று சொல்லும் படியாகக் காலை எடுத்து வைத்து நிற்கும் யானையையுடைய இந்திரனுடைய மனைவியாகிய இந்திராணி தன் கழுத்தில் கட்டிய மங்கல நூலைக் கழுத்திலிருந்து கழற்றாமல் அந்தப் பழங்காலத்தில் வேலை விட்ட முருகனுடைய பூவைப்போன்ற திருவடியைத் தியானம் பண்ணுவாயாக.

வண்ணம் – அழகு. பயோதரம் – பாலைத் தாங்குவது: நகில், மால் – மயல்; காமம். கால் வாங்கி -காலை எடுத்து வைத்து. களிறு ஐராவதம். கிழத்தி -மனைவி. நூல் – மாங்கல்ய சூத்திரம். வாங்கிடாது – கழற்றாமல்.வேல் வாங்கி:பெயர். பூ – தாமரை மலர். கழல்: ஆகுபெயர். நோக்கு – தியானம் செய்; நெஞ்சத்தை விளித்துச் சொன்னமையால் இங்கே தியானம் செய் என்று பொருள் கொள்ள வேண்டும். நெஞ்சையும் உறுப்புடையது போல வைத்துப் பேசும் மரபு உண்டு; ஆதலின் நீ தரிசனம் பண்ணு என்றும் பொருள் கொள்ளலாம்.)

இது கந்தர் அலங்காரத்தில் 77-ஆவது பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !