பழனித் திருநாமம்
கி. வா. ஜகந்நாதன்

விண்ணப்பம்

நாம் இந்த உலக வாழ்வில் எத்தனை பாதுகாப்பை செய்து கொண்டாலும் இந்த வாழ்வு முடியும் நாளில் யமனுக்கு முன்னால் இந்தப் பாதுகாப்புகள் பயன்படா என்பதை பலமுறை அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். மரணம் வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் மிகச் பெரிய மனிதர்களிடத்தில் கூட இருந்திருக்கிறது. அப்பர் சுவாமிகள்,

உள்ளுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்”

என்று பாடினார்.

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்

என்பது மணிவாசகர் வாக்கு.

பிரார்த்தனை

அதனால் இப்பொழுதே இறைவனை நோக்கி, “நான் மரணம் அடையும்போது என்னைப் பாதுகாக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள். எவ்வளவுதான் தைரியம் உடையவனாக ஒருவன் இருந்தாலும் கடைசிக் காலத்தில் அந்தத் தைரியம் உதவுவது இல்லை. இறைவன் திருவருள் முன்நின்று காப்பாற்றினாலொழிய நம் பதவியோ, பலமோ பயன்படுவது இல்லை. ஆகையால் யமனைப் போக்குவதற்குரிய ஆற்றலுடைய இறைவனிடத்தில் இப்பொழுதே விண்ணப்பித்துக் கொண்டு, அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் யம பயத்தை நீக்குவதற்கு வழி.

அருணகிரிநாதர் பல சமயங்களில் யமனுடைய பயத்தைப் போக்குவற்குரிய பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனைப் பார்த்து, யமன் வந்தால் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்று சொல்வது ஒருவகை. இறைவன் திருவருளால் எனக்கு யம பயமே இல்லையென்று சொல்வது ஒருவகை. யமனைப் பார்த்து, உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று அறை கூவுவது ஒருவகை. இப்போது இறைவனைப் பார்த்து, யமன் வரும்போது என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்கிறார்.

நெடுங்கூற்றன்

யமனை நாம் நேரில் பார்ப்பது இல்லை. ‘அவன் வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து இருப்பான்; கன்னங்கரேல் என்று கையில் பாசத்தைக் கொண்டு நிற்பான்’ என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் அளவிடுகின்ற உருவம் நம் முன்னர்த் தோற்றினால் வேறு எதையும் எண்ணவோ, பார்க்கவோ இயலாது. அவன் மாகத்தை முட்டி வருபவன்.

மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன்.

அவன் நிச்சயமாக நம்முடைய உயிரைக் கொள்வதற்கு வருவான். அதற்கு முன்னாலே பாதுகாப்புச் செய்யாவிட்டால் அவன் வந்தே தீருவான். அந்தப் பாதுகாப்பு இறைவனுடைய அருள் துணையைப் பெறுவதுதான். அந்தத் துணை வேண்டுமென்று அருணகிரிநாதர் விண்ணப்பம் செய்து கொள்கிறார். ‘கூற்றுவன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில், மயில் வாகனத்தில், நீ தோன்றி நிற்க வேண்டும்’ என்பது அவர் பிரார்த்தனை.

கூற்றன் வந்தால் என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்.

யமன் வரும்போது நம்முடைய வாழ்நாளில் நாம் ஈட்டிய அறிவெல்லாம் மறைந்துவிடும். கடவுள் நினைவு போய்விடும். எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு கூற்றுவன் வானத்தை முட்ட வந்து நிற்பான். அப்போது அவனை நாம் என்ன வைதாலும் போக மாட்டான்; அச்சுறுத்தினாலும் போகமாட்டான்; நம்மைக் கண்டு இரங்கியும் போகமாட்டான்.

இருவேறு உருவம்

வையத்தில் நாம் வாழும்போது காலத்தை வீணே கழித்தாலும், தீய செயல்களில் போக்கினாலும் நம்முடைய வாழ்வுக் காலம் முடியும்போது காலக்கணக்கனாகிய காலன் வந்து நிற்பான். உலகில் பிறந்து இறந்துபடும் உயிர்கள் அத்தனையையும் யமனோ அவனுடைய தூதுவர்களோ கொண்டு போவார்கள். தீயவை செய்கிறவர்களுக்கு யமனுடைய ஆணைக்கு உட்படும் நிலை வரும். இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிறவர்களுக்கு யம தூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போக மாட்டார்கள். ‘சிவ கணங்கள் வந்து பக்தர்களுடைய உயிரையும், ஞானிகளுடைய உயிரையும் கொண்டு போவார்கள்’ என்று புராணம் கூறுகிறது. கூற்றுவன் என்ற உருவமும் சிவகணம் என்ற உருவமும் கற்பனை என்று வைத்துக் கொள்ளலாம். உயிரை மேலான நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி, கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஆகிய இரண்டையும் சிவ கணம், கால தூதன் என்று உருவகப்படுத்தினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை.

நல்லதானாலும், பொல்லாததானாலும் நம் உள்ளத்தில் பதிந்திருக்க வேண்டுமானால் அதற்கு ஓர் உருவம் கொடுக்க வேண்டும். இல்லையானால் மறைந்துவிடும். குழந்தையை அச்சுறுத்துகின்ற தாய் பூச்சாண்டி என்று சொல்லி எதையோ காட்டுகிறாள். அது போல் நமக்கு அச்சம் ஊட்ட வந்த பெரியவர்கள் யமன் என்று காட்டிப் பயமுறுத்தினார்கள். நம்மைப் பயமுறுத்தியது, அந்தப் பயத்தினாலேயே சாவதற்காக அல்ல. கூற்றுவனைச் சொன்னவர்கள் கூற்றுவனுக்குக் கூற்றுவனாக இறைவன் இருக்கிறான் என்பதையும் நினைவூட்டினார்கள். “அங்கே வெளிச்சம் இல்லை; ஒரே இருட்டாக இருக்கும். ஆகையால் இந்த விளக்கைக் கொண்டு போ” என்று சொல்வாரைப் போல, “நம்முடைய இறுதிக் காலத்தில் யமன் வருவான். ஆனால் இறைவனை நம்பி அவன் திருவருளைப் பெற்றவர்களுக்குக் காலபயம் இல்லாது போகும்” என்று சொல்லி நாம் வாழும்போதே இறைவன் திருவருளைப் பெற முயல வேண்டும் என்பதையே வற்புறுத்தினார்கள். அந்த வகையில் யமன் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு நிற்கும்போது அவனை மாய்ப்பதற்கு அல்லது போக்குவதற்குரிய சக்தி இன்னது என்பதையும் பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.

வேண்டுகோள்

அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பார்த்து இங்கே, ‘ஆண்டவனே! கூற்றுவன் வந்தால் அவனை எதிர்த்து ஓட்டுவதற்கு எனக்குத் தைரியம் இல்லை; அந்தச் சமயம் பார்த்து நீ என்முன்னால் வந்து பிரசன்னம் ஆக வேண்டும்” என்று வேண்டி யிருக்கிறார்.

மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால்
என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்.

யமன் வருவது எருமைக் கடாவின்மேல். முருகன் வருவது அழகான பச்சை மயிலின் மேலே. கூற்றுவன் என்ற சொல் உடலினின்றும் உயிரைக் கூறு போடுவதனால் வந்த காரணப் பெயர். நாம் உலகத்தில் இது வேறு அது வேறு என்று வேறுபடுத்திப் பார்த்துப் பார்த்து அதன் பயனாகக் கூற்றுவனின் கையில் அகப்படுகிறோம். எல்லாம் இறைவன் படைப்பு, எல்லா உயிர்களும் இறைவனுடைய மக்கள் என்று ஒன்றுபடுத்திப் பார்த்தால், ஒன்று படுத்தும் பேரருளாளன் ஆகிய கந்தன் அருள் நமக்குக் கிடைக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியான கலாபத்தை உடைய மயிலில் முருகப் பெருமான் வந்து தோன்றினால் அச்சத்தைத் தருகின்ற கூற்றுவன் முன்னே நிற்கமாட்டான். இருளுக்கு மாற்று ஒளி. கூற்றுவனுக்கு மாற்று முருகப் பெருமான். “கூற்றுவன் வரும்போது, ஐயோ வந்துவிட்டானே! இப்போது வந்து காப்பாய்; என்று சொல்வதற்கு எனக்கு ஆற்றல் இருக்குமோ இராதோ! ஆகையால் இப்பொழுதே விண்ணப்பித்துக் கொள்கிறேன். அவன் நிச்சயமாக வருவான். அப்படி வரும் போது எனக்கு முன்னே வெகுவேகமாக மயிலின் மீதே எழுந்தருளிக் காட்சி அளிக்க வேண்டும்” என்று வேண்டுகிறார்.

முருகன் புகழ்

இனி முருகப் பெருமானுடைய புகழைச் சொல்ல வருகிறார். முருகப் பெருமான் சிவபெருமானுக்கு மகன்; பராசக்தியின் குழந்தை. அப்படிச் சொல்லாமல் அந்த இருவரையும் ஒன்றுபடுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதர். பரமேசுவரன் தன்னுடைய ஒரு பாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறான். அதனால் அர்த்த நாரீசுவரன் என்ற திருநாமத்தை அவன் பெற்றிருக்கிறான்.

அருணகிரிநாதர் பராசக்தியினிடம் ஈடுபாடு உடையவர். எப்போதும் அம்பிகையின் பக்கத்திலிருந்து உலகத்தைப் பார்க்கிறவர். ஆதலின் அம்பிகை இறைவன் பாகத்தில் இருப்பதாகக் காணாமல், இறைவன் அம்பிகையின் பாகத்தில் இருப்பதாகக் காணுகிறார்.

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்

என்று சொன்னதை முன்பே பார்த்தோம். அதுபோல், “சிவ பெருமானைத் தன்னுடைய பாகத்தில் வைத்திருக்கும் பராசக்தி யின் குழந்தையே!” என்று இங்கும் முருகப் பெருமானை விளிக்கிறார். முதலில் சிவபெருமானுடைய பெருமையைச் சொல்ல வருகிறார்.

தியாகராஜன்

சிவபெருமான் பெரிய வள்ளல். அவனைத் தியாகராஜன் என்று சொல்வார்கள். திருவாரூரில் தியாகராஜன் எழுந்தருளி இருக்கிறான். எல்லாவகைச் செல்வங்களையும் தருபவன் சிவ பெருமான். தனக்குள்ள பொருளையும் பிறருக்குக் கொடுக்கிறவன். தன்னை அண்டி எதைக் கேட்டாலும் வரமாகக் கொடுக்கும் பெரியவன் அவன். பஸ்மாசுரனுக்கு யார் தலையில் கை வைத் தாலும் அந்தத் தலை உடைந்து போய்விடும் என்ற வரத்தைக் கொடுத்தவன். மிக்க எளிதில் மகிழ்ச்சி பெற்றுப் பழைய குற்றங்களை எல்லாம் மறந்து கொடுக்கும் கொடையாளி அந்தப் பெருமான். இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் அவனைப் போற்றினால் சோறு கிடைக்கும்; கூறை கிடைக்கும்; மனைவி கிடைப்பாள்; மக்கள் கிடைப்பார்கள்; வீடு கிடைக்கும்.

இம்மை யேதரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர்
கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற
வில்லையே”

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுவார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

என்பது ஞானசம்பந்தப் பெருமானுடய திருவாக்கு.

இந்தப் பொருள்கள் எல்லாவற்றையும்விடச் சிறந்த பொருளாக இருப்பது பேரின்பமாகிய முத்தி. அந்த முத்தி அழியாதது; நித்தியமானது. பதமுத்தி என்றும், பரமுத்தி என்றும் இருவேறு முத்தியைச் சாத்திரங்கள் சொல்கின்றன. இந்திரன் முதலியோர் பதங்களில் இருந்து இன்புறுவது பர முத்தி. இறைவனோடு ஒன்றுபட்டுப் பரமானந்தப் பெருவாழ்வைப் பெறுவது பர முத்தி. இந்தப் பர முத்தியைச் சுத்த முத்தி என்று அருணகிரிநாதர் சொல்கிறார். அது நித்தியமான வாழ்வு ஆதலின்,

சுத்த நித்த முத்தி

என்ற சிறப்பித்துப் பேசுகின்றார். இந்த முத்தியாகிய பெரிய செல்வத்தைச் சிவபெருமான் கொடுக்கிறான்; தியாகம் பண்ணுகிறான். அவன் அசஞ்சலமானவன்: அசையாதவன். அதனால் ‘ஸ்தாணு’ என்ற பெயரை உடையவன். அசையாப் பொருளுக்கு மலையை உவமை சொல்வது ஒரு மாபு. இறைவன் மலையைப் போன்றவன். பர முத்தி ஆகிய பேரானந்தப் பெருவாழ்வைத் தியாகம் பண்ணுகிற சிவபெருமான் மலையைப் போன்றவன்.

சுத்த நித்தமுத்தி த்யாகப் பொருப்பை.

திரிபுராந்தகன்

தன்னை அண்டி அருள்பெற்றவர்களுக்கு நித்தியமான முத்திச் செல்வத்தை வழங்கும் வள்ளலாகிய அந்தப் பெருமான், தவறு செய்தவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதிலும் சிறந்தவனாக விளங்குகிறான். மூன்று புரங்களைத் தம்முடைய கோட்டைகளாகக் கொண்டு எங்கும் திரிந்து உலகத்திற்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தார்கள் மூன்று அசுரர்கள். அவர்களுடைய கோட்டைகளைத் திரிபுரம் என்று சொல்வார்கள். மூன்று மலங்களையே திரிபுரம் ஆக உருவகம் செய்தார்கள்.

முப்புரம் என்பது மும்மல காரியம்

என்பது திருமூலர் திருமந்திரம்.மூன்று மலத்தின் உருவமாகிய அம்மூன்று புரங்களையும் இறைவன் எரித்தான்; திரிபுரங்களுக்கு யமனாக நின்றான் அவன்.

த்ரிபுராந்தகனை.

முக்கண்ணன்

பொதுவாக மக்களுக்கு இரண்டு கண்களே உண்டு. தெய்வங்களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. நான்கு முகம் படைத்த பிரமனுக்கு எட்டுக் கண்ணானாலும் ஒவ்வொரு முகத்திலும் இரண்டு இரண்டு கண்களே இருக்கும். ஆனால் சிவ பெருமானுக்கோ மூன்று கண். மூன்று கண் படைத்தது ஒரு சிறப்பு. அவனுடைய கண்கள் மூன்றில் ஒன்று சூரியன்; மற்றொன்று சந்திரன்; ஒன்று அக்கினி. நெற்றியில் குறுக்காக இருக்கிற கண் தான் அக்கினிக் கண்; அல்லது ஞானக்கண். அதனை ஆண்டவன் எப்போதும் திறப்பது இல்லை. அஞ்ஞானத்தைச் சுட்டு எரிக்கும் போது திறப்பான். காமன் வேகத் திறப்பான். அவன் ஞானமூர்த்தி என்பதை அந்தக் கண் காட்டுகிறது. அது மற்ற இரண்டு கண்களைப் போல நேரே இல்லாமல் குறுக்கே இருப்பதனால் சிவபெருமானை விரூபாட்சன் என்று சொல்வார்கள்.

த்ரியம்பகனை.

பரம கல்யாணி

இத்தகைய சிவபெருமானைத் தன்னுடைய வலப் பாகத்தில் வைத்திருக்கின்றாள் அம்பிகை. சிவபெருமான் தன்னுடைய வாமபாகத்தில் இறைவியை வைத்திருக்கிறான் என்பதே பெரும்பாலான வாக்கு; அது சிவனடியார் கூறும் திறன். சின்னஞ்சிறு குழந்தையாகிய முருகன் அம்பிகையின் பக்கத்தில் இருக்கிறான். எப்போதும் சிறு குழந்தைகள் பெரும்பாலும் தாயை விட்டு அகலுவது இல்லை. கொஞ்சம் நடக்கக் கற்றுக் கொண்ட பிறகே தந்தையோடு வெளியிலே உலாவும். இல்லாவிட்டால் எப்போதும் தன் தாயின் இடையிலேயே இருக்கும். முருகப் பெருமான் இளம் குழந்தை. அவன் தன்னுடைய தாயின் பக்கத்தில் எப்போதும் இருப்பவன். முருகனை அண்டுகின்ற குழந்தையாகப் பக்தர்கள் இருக்கிறார்கள். ஒரு குழந்தை முதலில் பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தெரிந்து கொண்டு பழகும். அதற்கு அடுத்தபடி அந்தக் குழந்தையின் தாயைத் தெரிந்து கொள்ளும். அதற்குப் பின்னரே அந்தத் தாயின் கணவனாகிய ஆடவனை அறிந்து கொள் ளும். அந்த முறையில் முருகனை அறிந்து, முருகன் தாயாகிய அம்பிகையை அறிந்து, அதன் பின்னே சிவபெருமானை அறியும் முறை தோன்றுகிறது. இறைவனைத் தன்னுடைய வலப் பக்கத் தில் வைத்திருக்கிற மேலான மங்கல வாழ்வைத் தருகிற பெரு மாட்டி பராசக்தி. அவளை,

பரம கல்யாணி

என்று சொல்கிறார். கல்யாணம் – மங்கலம். என்றைக்கும் மங்கலம் உடையவன் அவள். உலகில் உள்ள எல்லா மங்கலங்களுக்கும் மேலான மங்கலத்தைப் பெற்றவள் அந்தப் பெருமாட்டி.

சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி.

அத்தகைய பெருமாட்டியின் குழந்தை முருகப் பெருமான்.

பரம கல்யாணி

பாலகனே.

பாலகன்

‘தன்னை வழிபட்டு அருள் பெற்றவர்களுக்கு நித்திய வாழ்வாகிய பர முத்தியைத் தரும் வள்ளலும், மூன்று மலங்களின் உருவாக இருந்த மூன்று புரங்களையும் எரித்த ஞான சொரூபியும், யாருக்கும் இல்லாத சிறப்பான மூன்று கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் மேலான மங்கலப் பெருமாட்டியான அம்பிகையின் குழந்தையே’ என்று முருகப் பெருமானைத் துதி செய்கிறார் அருணகிரிநாதர்.

இறந்துபட்டால் முத்தி பெறவேண்டும். அதனைத் தருகிறவன் சிவபெருமான். சிவபெருமான் முத்தி தந்தாலும் முருகன் தந்தாலும் இரண்டும் ஒன்றே. தந்தையினுடைய பொருளை உரிமை யோடு பிள்ளையும் எடுத்துத் தரலாம் அல்லவா? ‘முத்தியைத் தியாகம் செய்யும் சிவபெருமானுடைய குழந்தை ஆதலால், கூற்றுவன் வரும்போது நீ தோன்றி எனக்கு அந்தச் சுத்த முத்தியைத் தரவேண்டும்’ என்ற கருத்தும் இந்தப் பாட்டில் குறிப்பாக அடங்கிக் கிடக்கிறது.

மாகத்தை முட்டி வரும்நெடுங்
கூற்றன்வந் தால்என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றிநிற்
பாய்,சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்
தகனை த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல்
யாணிதன் பாலகனே

(வானத்தை முட்டி வருகிற உயர்ந்த தோற்றத்தையுடைய யமன் என் உயிரைக் கொள்ள வந்தால் அப்போது என் முன்னே நீ உன்னுடைய தோகையையுடைய வாகனமாகிய மயிலின் மேல் வந்து காட்சி அளித்து எனக்குத் துணையாக நிற்கவேண்டும்; நித்தியமான பரமுத்தியை அடியார் களுக்கு வழங்கும் மலைபோன்ற அசஞ்சலனும், முப்புரங்களை அழித்த வனும், மூன்று கண்களையுடையவனுமாகிய சிவபெருமானைத் தனது வலப் பாகத்தில் வைத்திருக்கும் மேலான மங்கல சொரூபியாகிய அம்பிகையின் குழந்தையே!

மாகம் – வானம். புரவி – குதிரை ; இங்கே ஊர்தியென்ற பொதுப் பொருளுக்காயிற்று. தோகைப் புரவி என்றதனால் மயிலாயிற்று; தோகையை யுடைய வாகனம் என்றும் தோகையாகிய வாகனம் என்றும் இருவகையில் பொருள் கொள்ளலாம். இரண்டாவது பொருளில், தோகை, ஆகுபெயர். ”ஆடும்பரி’ என்று குதிரைக்குரிய பெயரை மயிலுக்கும் வழங்குவது அருணகிரிநாதர் வழக்கம். தோன்றிப் பின்பு துணையாக நிற்பாய். சுத்த முத்தி, நித்தமுத்தி என்று கூட்ட வேண்டும். முத்தி த்யாகம் என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். பொருப்பு: உவம ஆகுபெயர். திரியம்பகளை முக்கண்ணனை, அம்பகம் – கண். பாகம் – இங்கே வலப்பாகம்)

இது கந்தர் அலங்காரத்தில் 80-ஆவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !